இந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்

0

Close-up Door Padlock Hdr Key Hole Lock Macro

நாகேஸ்வரி அண்ணாமலை

சாதாரணமாக நான் விமானத்தில் பயணிக்கும்போது படங்கள் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சின்னத் திரையில் பார்ப்பதை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. இந்த முறை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இரண்டு பயணங்களிலும் படம் பார்த்தேன். ஒன்று LKG. அரசியல் கட்சிகள் செய்யும் அட்டகாசங்களையும் அரசியல்வாதிகள் புரியும் ஊழல்களையும் எடுத்துச் சொல்வதுதான் படத்தின் முக்கியக் குறிக்கோள். இரண்டாவது ‘சம்பல்’ என்னும் கன்னடப் படம். இதில் ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி அரசியல்வாதிகளோடு மோதும்போதெல்லாம் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார் என்று காட்டுகிறார்கள்.

இரண்டு படங்களும் நன்றாக ஓடியதாக விமர்சனங்களிலிருந்து தெரிந்துகொண்டேன். அப்படியென்றால் மக்களில் பலருக்கு லஞ்சம், ஊழல் என்பதில் வெறுப்பு இருக்கிறது என்று சொல்லலாம் என்றால், அவர்கள் வாழ்க்கையில் ஊழலையும் லஞ்சத்தையும் தவிர்க்க என்ன செய்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது.

மைசூரில் பல வருஷங்களுக்கு முன்பு எங்கள் பக்கத்து வீட்டு நண்பராக இருந்த அஸ்வத் என்னும் கன்னட எழுத்தாளர் – அவர் 1994-இல் தனது 82ஆவது வயதில் காலமானார் – ஒரு காந்தியவாதி. வாரணாசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலைபார்த்து அங்குள்ள ஊழல்களைத் தாங்க முடியாமல், 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, மைசூர் திரும்பி, அங்கு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்து வந்தார்.

தன்னுடைய நன்மைக்காக யாருக்கும் அவர் லஞ்சம் கொடுத்ததில்லை. யாருக்கும் லஞ்சம் கொடுக்காமலேயே மைசூர் மாநகராட்சி அவருக்காக ஒதுக்கிய வீட்டைப் பெற்றுக்கொண்டு நாணயமாக வாழ்ந்து வந்தார். அவர் மனைவியைக் கதர் மட்டும் உடுத்த வற்புறுத்தினார். தானும் கதர்தான் உடுத்துவார். அவரும் அவர் மனைவியும் மிக எளிய உணவையே உண்டு வந்தனர். நான்கு செட் கதர் உடைகள்தான் இருவருக்கும்.

ஒரு முறை வாரணாசியிலிருந்து மைசூர் திரும்பியபோது அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ரயிலில் இரவு தூங்கும் வசதி கிடைக்கவில்லை. உடன் இருந்த நண்பர் லஞ்சம் கொடுத்து வாங்கித் தருவதாகச் சொன்னதை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு இரவுகள் இருவரும் உட்கார்ந்தே பயணம் செய்தனர். அவருடைய பக்கத்து வீட்டுக்காரராக நாங்கள் பத்து வருடங்கள் வாழ்ந்தபோதிலும் அவரிடமிருந்த எல்லாக்
காந்தியக் கொள்கைகளையும் நான் கற்றுக்கொள்ளவில்லை. அவரைப்போல் யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடுக்காமல் எங்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லை. ஆனாலும் பெரிய அளவில் அம்மாதிரியான தவறுகள் செய்யாமல் காலம் கடத்தி வந்தோம்.

நாட்டில் நடக்கும் ஊழல்களைக் கண்டு மனம் புழுங்கி வேதனைப்படுவதோடு எங்களால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி வாழ்க்கை நடத்த முடியவில்லையே என்ற ஏக்கம் என்னிடம் எப்போதும் உண்டு. சமீபத்தில் இந்தியாவில் பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதனுடைய பின்னணியைச் சொல்ல வேண்டும்.

சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளில் தாயும் இறந்துவிட்டார். அதன் பிறகு நாங்கள் சகோதரிகள் மூவரும் எங்கள் தாய் தந்தையர் சொத்துகளைப் பிரித்துக்கொண்டோம். எங்கள் தந்தை, தாய் வாழ்ந்த வீடு – அது எங்கள் தந்தையே கட்டியது – மூன்றில் ஒரு பங்குக்கு, அதாவது என்னுடைய பங்குக்கு மேல் பெறுமாதலால் எங்கள் பெற்றோரின் ஞாபகார்த்தமாக
நானே வைத்துகொள்ள எண்ணி எங்கள் சகோதரிகள் இருவருக்கும் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு நானே பெற்றுக்கொண்டேன்.

எங்கள் சகோதரிகள் இருவரைப் பொறுத்தவரை எல்லாச் சொத்துகளையும் – எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீடு உட்பட – விற்றுப் பணத்தை மூவரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். எங்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டை அவ்வளவு சீக்கிரம் விற்றுவிடுவதை நான் விரும்பவில்லை. எப்படியோ என் சகோதரிகளை சம்மதிக்க வைத்து அதை மட்டும் விற்காமல் பார்த்துக்கொண்டேன்.

வீட்டைப் பெற்றுக்கொண்டாகிவிட்டது. இனி அதை எங்கள் பெற்றோர் பெயரில் ஒரு நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்துவது என்று முடிவு செய்தோம். எனக்கு ரொம்ப நாட்களாக நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் ஒரு கிளினிக் நடத்த வேண்டும் என்று ஆசை. வீட்டைக் கொஞ்சம் புதுப்பித்து ஒரு டாக்டரைத் தேடினோம். யாரும் கிடைக்கவில்லை. என் தங்கையோடு படித்த ஒரு டாக்டரிடம் போய் யோசனை கேட்டேன். ஒரு டாக்டரைப் பார்த்துக் கொடுப்பதற்குப் பதில், அந்த ஊரிலேயே வடலூர் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தினரின் உதவியோடு ஆசிரமம் ஒன்றை நடத்தும் ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டினார். இதுவும் நல்ல சேவைதான் என்று அவரைப் போய்ப் பார்த்தேன்.

மிகவும் எளிய தோற்றத்தில் இருந்த, ஓய்வு பெற்ற ஒரு அரசாங்க அலுவலரைச் சந்தித்தேன். பல வருடங்களாக எங்கள் ஊரின் ஒரு கோடியில் ஆதரவற்ற குழந்தைகள் இருபது பேரையும் முதிய பெண்மணிகள் ஏழெட்டுப் பேரையும் கொண்ட ஒரு ஆசிரமம் நடத்திவந்தார். எங்கள் வீட்டைப் பற்றிக் கூறியதும் சில குழந்தைகளையும் சில முதியோர்களையும் எங்கள் வீட்டிற்கு மாற்றி அங்கு இன்னொரு ஆசிரமம் நடத்த ஒப்புக்கொண்டார்.

ஊரின் நடுவில் வீடு இருந்ததால் அவருடைய மற்ற பல சேவைகளுக்கும் அது பயன்படும் என்பதால் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. 500 ரூபாய்தான் வாடகையாகக் கொடுக்க முடியும் என்றார். அப்போது எங்கள் வீட்டிற்குத் தாராளமாக 5000 ரூபாய் வாடகை கிடைத்திருக்கும். ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படப் போவதால் சரி என்றேன். மூன்று வருஷத்திற்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம்.

எங்கள் துரதிருஷ்டம், ஒப்பந்தம் போட்ட ஒன்றரை வருஷங்களில் அவர் இறந்துவிட்டார். வீட்டை ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்த மறுபடி ஒருவரைத் தேடினோம். மதுரையில் இயங்கிவரும் ஒரு பிரபல, லாப நோக்கமற்ற சேவை நிறுவனத்தைப் பற்றித் தெரிய வந்தது. அவர்களிடம் நாங்களே நேரில் சென்று எங்கள் வீட்டைக் குறைந்த வாடகைக்கு அவர்களுக்கு – அவர்கள் நல்ல காரியங்கள் செய்வதாக நினைத்து – கொடுப்பதாகக் கூறினோம். அவர்களும் ஒப்புக்கொள்ள, வாடகை ஒப்பந்தம் தயார் செய்தோம்.

இரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டோம். ஏழு வருஷங்கள் கழிந்தன. எட்டாவது வருஷம் அவர்களுக்கும் அவர்களின் கீழே பணியாற்றும் ஒரு அமைப்பிற்கும் நிர்வாகத்தில் மன வேறுபாடு ஏற்பட்டு, அது பெரிய சண்டையாக விஸ்வரூபம் எடுக்க, சேவை நிறுவனத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சாவியை போலீஸிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நாங்கள் அப்போது அமெரிக்காவில் இருந்தோம். இரு தரப்பாரும் இது பற்றி முதலில் எங்களிடம் எதுவும் கூறவில்லை. ‘வீடு எங்கள் வீடுதானே, இந்தியாவுக்கு வந்ததும் போலீஸிடமிருந்து சாவியைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று நினைத்தோம். வாடகை ஒப்பந்தமும் நாங்கள் திரும்பும் சமயம் முடிவதாக இருந்தது. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று இந்தியாவுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது.

இரு தரப்பாரும் தங்களுக்கே வீட்டைக் கொடுக்கும்படி எங்களிடம் கேட்டனர். முதலில் வீட்டுச் சாவியைப் பெற்றுக்கொண்டு அது பற்றி யோசிக்கலாம் என்று நினைத்து வட்டாட்சி வருமான அதிகாரியிடம் (Revenue Divisional Officer – RDO) (அதற்குள் சாவி, போலீஸிடமிருந்து அவரிடம் போயிருந்தது) சாவியைக் கொடுக்கும்படி கேட்டோம். இருவரின் சாமான்களும் உள்ளே இருப்பதால் அவர்களுக்குள் சாமான்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகே சாவியை எங்களிடம் கொடுக்க முடியும் என்றார் அந்த அதிகாரி.

சேவை நிறுவனத்தையும் அதன்கீழ் இருந்த அமைப்பையும் வீட்டுச் சொந்தக்காரரான என்னையும் தனக்கு முன்னால் வந்து தங்கள் தங்கள் கட்சியை எடுத்துச் சொல்லும்படி வட்டாட்சி வருமான அதிகாரி கேட்டுக்கொண்டதால் நானும் அந்த அமைப்பும் அவருக்கு முன்னால் ஆஜரானோம். ஆனால் சேவை நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. அதன் பிறகும் பல முறை இந்த அதிகாரி அழைத்தும் அதன் சார்பில் யாரும் வரவேயில்லை. வேண்டுமென்றே காலம் கடத்திக்கொண்டிருந்தார்கள். RDO முன்னால் ஆஜராகாததோடு RDO தங்களிடம் சாவியைக் கொடுக்க வேண்டுமென்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு வேறு போட்டார்கள். ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி RDO எங்களிடம் சாவியைக் கொடுக்காதவாறு பார்த்துக்கொண்டார்கள். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. வாடகை ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. வீடு சட்டப்படி எங்களிடம் வந்திருக்க வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு மேல் வீடு பூட்டியிருந்ததால் வீட்டைப் பற்றிய கவலை என்னைப் பிடித்துக்கொண்டது. பத்துத் தடவைக்கு மேல் அழைத்தும் வராத சேவை நிறுவனத்துக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு எங்களிடம் வீட்டுச் சாவியைக் கொடுக்கக் கூடாதா என்று நாங்கள் கேட்டதற்கு, எந்தவிதப் பதிலும் சொல்லாமல் வட்டாட்சி வருமான அதிகாரி காலம் கடத்திக்கொண்டே இருந்தார். நாங்கள் அமெரிக்கா திரும்பும் நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. கடைசியாக தமிழ்நாடு அரசில் வேலைபார்க்கும் ஒரு நெருங்கிய உறவினர் எங்களுக்கு உதவுவதாகக் கூறியதும் அவரை எங்கள் பிரதிநிதியாக நியமித்துவிட்டு அமெரிக்கா திரும்பினோம். அவர் எங்கள் சம்மதம் இல்லாமலேயே ஒரு பெரிய தொகையை அந்த அதிகாரிக்கு லஞ்சமாகக் கொடுத்துச் சாவியைப் பெற்றுக்கொண்டார்.

அதுவரை சாவியை எங்களிடம் கொடுக்காததற்கு அந்த அதிகாரி சொன்ன சால்ஜாப்புகளெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. நல்ல காரியங்களுக்குப் பயன்படட்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் குறைந்த வாடகைக்கு எங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததற்கு இந்தத் தண்டனையா என்று எங்களை நாங்களே நொந்துகொண்டோம்.

அந்த சேவை நிறுவனம் அதற்குக் கீழ் வேலைபார்த்த அமைப்பிற்கு நாங்கள் வீட்டைக் கொடுத்துவிடுவோமோ என்று நினைத்து வீட்டை எங்களிடம் ஒப்படைப்பதற்குத் தடை ஏற்படுத்தப் பல்வேறு வழிகளைக் கையாண்டது. அவர்களோடு தொடர்பு கொண்ட இன்னும் சில சேவை நிறுவனங்களின் தலைவர்களையும் அந்தச் சேவை நிறுவனத்தின் தலைவரோடு பேசிச் சாவியை எங்களிடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய எவ்வளவோ முயன்றும் ஒன்றும் முடியவில்லை. எங்களையும் அவர்களின் கீழ் வேலைபார்த்த அமைப்பையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வருமான வட்டாட்சியர் முன்னால் ஆஜராகாமல் காலம் தாழ்த்திக்கொண்டே போனார்கள். இரண்டு வழக்குகள் – எங்களையும் சேர்த்து – போட்டார்கள். அவர்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் சாவியை எங்களிடம் ஒப்படைக்க முடியாது என்று வட்டாட்சி வருமான அதிகாரியும் பிடிவாதமாக இருந்தார். இந்த முறை இந்தியாவில் நாங்கள் இருந்த இரண்டரை மாதங்களில் இரண்டு மாதங்கள் இந்த உளைச்சலிலேயே கழிந்தது.

எந்தச் சேவை நிறுவனத்திற்கும் எந்தவித உதவியும் செய்யக் கூடாது என்ற பாடத்தைப் படித்துக்கொண்டோம். சேவை நிறுவனங்கள் செயல்படும் லட்சணத்தைப் பாருங்கள். ஊழலை ஒழிப்பதற்காகவே பதவிக்கு வந்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி. அரசு ஆட்சி நடத்தும் காலத்தில் இப்படி நடந்திருக்கிறது. ஊழல் என்னும் அரக்கனை இந்தியாவிலிருந்து ஒழிக்க இறைவனே மனித அவதாரம் எடுத்து வந்தாலும் முடியாதா?

Pic courtesy: https://www.maxpixel.net

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *