படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
அன்னையின் தோளில் முகம்சாய்த்துப் ’போஸ்’ கொடுக்கும் குழந்தையை அழகாகத் தன் புகைப்படக் கருவியில் பதிந்து வந்திருக்கின்றார் Yesmk. இந்த அழகிய படத்தைப் படக்கவிதைப் போட்டி 226க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!
வண்டுவிழிப் பார்வையால் நம் உள்ளத்தைக் கொண்டுசெல்லும் இந்த அழகிய குழந்தையின் வதனம் சந்திர பிம்பம்; பிஞ்சுக் கரங்கள் பஞ்சுப் பொதிகள் என்று என் மனமும் கவிபாட விழைகின்றது. எனினும் படக்கவிதைப் போட்டிக்குக் கவியெழுதக் கவிகள் பலர் ஆவலோடு காத்திருப்பதால் அவர்களுக்கு வழிவிட்டு அமைகின்றேன்.
வருக புலவீர்! தருக நிலாமுகக் குழவிக்குப் பலாச்சுளைக் கவிதைகளை!
*****
”தோளில் தூங்கும் பிள்ளையெனும் கிள்ளையின் துயில்கலையாவண்ணம் அலுங்காது நடக்கும் கலை தாய்மார்களுக்குக் கைவந்த ஒன்று!” என்று விளக்குகிறார் தாய்மார்களின் உளவியல் அறிந்த திருமிகு தமிழ்முகில்.
அன்னையின் தோளில் சாய்ந்து
உலகத்தின் அழகில் இலயித்திருக்க
முன்னின்று பின்னோக்கியும்
பின்னின்று முன்னோக்கியும்
ஓடும் காட்சிகள்
நிகழ்வுகளின் சாட்சிகளாய்!
காட்சிகள் அயர்ச்சியூட்டினாலும்
அன்னையின் தோள்
தலையணையாயும் – அவர்தம்
கரங்கள் மெத்தையாயும் மாறிப்போக
சுகமான துயிலும் கண்களை
வருடியபடித் தழுவிக் கொள்ள
அன்னையின் முத்தங்கள்
தாலாட்டுப் பாட – உறங்கிப் போன
கிள்ளையின் துயில் கலையாது
அலுங்காது நடக்கும் கலை
அன்னைகட்கெலாம் – தானாக
கைவந்து சேரும் உத்தியன்றோ!
அன்னையின் தோள் சாய்ந்து கொண்டு
பின்னிருக்கும் உதடுகளில்
புன்னகையும் – உள்ளத்தில்
ஆனந்தமும் துளிர்க்கச் செய்யும்
வித்தை கைவரப் பெற்றவர்கள்
கிள்ளைகள்!
*****
பிள்ளைக் கனியமுதே! பேசும்பொற் சித்திரமே! கள்ளமில்லாக் கற்கண்டுப் பொற்குவையே! உன்னைச் சீராட்டி வளர்க்கும் அன்னையின் அன்பை உணர்ந்து நீயும் அவளிடம் அன்பு பாராட்டு! என்று இனியவை கூறுகின்றார் திரு. யாழ். நிலா. பாஸ்கரன்.
தாயவள் தோளில் தவழ்கின்ற
தூயவளே கண்மணியே!
துள்ளிக் களித்தே பின் நோக்குகிறாய்
தூக்கம் வரவில்லையோ? – தூளியது ஏங்குதம்மா
அன்னையவள் அள்ளியணைத்து
ஆரத் தழுவி அமுதே தேனே அஞ்சுகமே என
ஆசையாய்க் கொஞ்சுகையில் நெஞ்சில்
அன்பு தவழுதம்மா ஆருயிரும் சிலிர்க்குதம்மா!
பிள்ளைக் கனியமுதே பேசும் பொற்சித்திரமே
கள்ளமில்லாக் கற்கண்டுப் பொற்குவையே
வெள்ளை உள்ளத்து வளர்கவின் நிலவே
எல்லையில்லா இன்ப அமுதூற்றே ஆவி துடிக்குதம்மா!
உன்னை வளர்த்து ஆளாக்க
உன் அன்னையவள் அல்லும் பகலும்
உழைத்திருப்பாள் ஊணுறக்கம் இல்லை அவளுக்கு
உலகே நீ தான் என்று உள்ளம் மகிழ்ந்திருப்பாளம்மா!
காலத்தால் அழியாத களவாட முடியாத
கல்விச் செல்வம் அதைக் கண்ணும்
கருத்தாக நீ கற்றிடவே கலாசாலைக்கு அன்போடு
கருமைப் பொட்டு வைத்து அனுப்பிடுவாளம்மா!
அன்னை போல் அன்புகாட்ட ஆர் உளார்
அவனிதனில்? அன்னையே யாவரும் அறிந்த
அன்பு தெய்வம்மம்மா அவளுக்கும்
அன்பு செய்வோமம்மா அகிலம் வாழுமம்மா!
*****
கொடிக்குக் கொழுகொம்பெனச் சேய்க்குப் பக்கபலமாய்த் திகழ்பவள் தாய் என்று அவளின் மேன்மையைப் பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
சேயே அறிவாய்…
தாயின் தோளில் சாய்ந்திருந்தால்
தானே வந்திடும் தைரியமே,
சேயின் எண்ணம் எதுவாயினும்
சேதி சொலாமல் தாயறிவாள்,
சாயும் கொடிக்குக் கொழுகொம்பாய்ச்
சற்றும் பிரியாத் துணையவளே,
ஓயும் போதவள் துணையாயிரு
ஒன்றே போதுமுன் உயர்வுக்கே…!
*****
”அரவிந்த முகங்காட்டிச் சிரிக்கின்ற கண்ணே! உன் சூரியப் பிரபை விழிகள் என் துன்பங்கள் தீர்க்குமடி!” என்று புகலும் அன்னையைக் காண்கிறோம் திரு.சித்திரவேலு கருணானந்தராஜாவின் கவிதையில்.
அன்னையின் தோளிற் சாய்ந்துன்
அரவிந்த முகத்தைக் காட்டி
என்னடீ சிரிக்கின்றாய் நீ
என்முகக் கரியைக் கண்டா?
உன்னைப் போல் மதிமுகத்தை
உண்மையில் கொண்டேனில்லை
கன்னிப் போய்க் கறுத்து விட்ட
கன்னந்தான் எனக்குத் தொல்லை!
பார்க்கின்ற உன்னைப் போன்ற
பாலகரெல்லா மென்னை
ஆரிந்த மந்தியென்று
அருவருத்திட்ட போதும்
கூரிய விழியாலென்னைக்
குத்திடப் பார்க்கும்போதும்
நேரிய உங்கள் கண்ணில்
நின்றொளி பாய்ச்சுகின்ற
சூரியப் பிரபை என்றன்
துன்பங்களகற்றும் போடீ.
சேய்க்கும் தாய்க்கும் சேர்த்தே கவிபாடிச் சிறப்பித்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும்!
அடுத்துக் காண்போம் இவ்வாரத்தின் சிறந்த கவிதையை…
ஆடி ஓடி விளையாடி
அயர்வுற்று வரும்பொழுதெல்லாம்
அம்மாவின் தோள்களே
அடைக்கலம் தரும்!
அன்னையின்
தோள் சாய்ந்து
பார்க்கும் பொழுது
பரந்த உலகம் கூட
ஒரு பனித் துளியாய்த்
தெரியும்!
கனவுகள் மெய்ப்படவும்
காற்று வெளியிடை
அவள் சிறகு விரிக்கவும்
அந்தத் தோள்சாயலில்தான்
தொடங்குகிறது பாடம்!
எதிர்ப்படும் இன்னல்களை
எதிர்கொள்ளும் வழியினையும்
அன்னையின் தோள்களில் இன்றி
வேறு எங்குக்
கற்க இயலும்?
வெம்புலிக் குழாமென
விலங்கு மனிதர்கள்
திரிகின்ற உலகில்
அன்னையின் அரவணைப்பே
அவளுக்கு
எல்லாமுமாய் விளங்கும்!
சின்னஞ்சிறு ஆசைகள்கூட
வண்ணம் பெற்று
வானில் பறக்கத்
தோள் மீது
கண் மூடும்போதுதான்
வடிவம் கிடைக்கிறது!
அம்மாவின் தோள் சாயுமிவள்
நாளை
ஆதவனில் கால்பதிக்கும்
அதிசயமும் நடக்கலாம்!
எங்குச் சென்று
எதனை சாதித்தாலும்
அம்மாவின் தோள் சாய்ந்த
அந்த அற்புத உணர்வுக்கு
ஈடென்று சொல்ல
இங்கு
எதுவும் கிடையாது!
”கண்ணே! வெம்புலிக் குழாமென விலங்கு மனிதர்கள் திரிகின்ற இவ்வுலகில் அன்னைதரும் அடைக்கலமே உனக்கு இன்பம் நல்கும்! ஆதவனில்கூட நாளை நீ பாதம் பதிக்கலாம்; உனை இந்த உலகமே மதிக்கலாம். எனினும், அன்னையின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஈடு இணை ஏதுமில்லை என்றறிவாய்! என இனிய சொற்களால் பாமாலை தொடுத்திருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
படக் கவிதைப் போட்டி 226 இன் சிறந்தக் கவிதையாக என்னுடைய கவிதையினை தேர்வு செய்தமைக்கு குழுவினருக்கும் கலந்து கொண்ட கவிஞர்களுக்கும் நன்றி!