ஜி.டி.நாயுடு பெயர் சர்ச்சை – தீர்வு என்ன?
அண்ணாகண்ணன்
விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர், சமூக வலைத்தளங்களில் படாத பாடு படுகிறது. இதைச் சற்று ஆழ்ந்து பார்ப்போம்.
முதலில் இவர் விஞ்ஞானி இல்லை என்பவர்களுக்காக. எதையேனும் கண்டுபிடித்தவரைத் தான் விஞ்ஞானி என அழைக்க வேண்டும் என்பது இல்லை. விஞ்ஞானச் சிந்தனையும் அணுகுமுறையும் கொண்டு, பல்வேறு படிநிலைகள் கொண்ட இந்த மிகப் பரந்த துறையில் எந்த நிலையில் பணிபுரிந்தாலும் அவரை விஞ்ஞானி என அழைக்கலாம். மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ. உள்ளிட்ட துறைகளில் சயின்டிஸ்ட் என்பது ஒரு பதவியின் பெயர். அந்தப் பதவியில் இருந்தாலே அவரை விஞ்ஞானி என்று அழைக்கலாம். இளநிலை விஞ்ஞானி, முதுநிலை விஞ்ஞானி என்றெல்லாம் பதவிகள் உண்டு. ஜி.டி.நாயுடு, மிகக் குறைந்த வளங்களையும் வாய்ப்புகளையும் வைத்துக்கொண்டு, எத்தனையோ கருவிகளை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் உருவாக்கியுள்ளார். அவரைத் தாராளமாக விஞ்ஞானி என அழைக்கலாம்.
ஜி.டி. என ஆங்கிலத்தில் ஏன் வைக்க வேண்டும்? கோபால்சாமி துரைசாமி எனத் தமிழில் வைக்கலாமே எனச் சிலர் சொல்கிறார்கள். வைக்கலாம் தான். ஆனால், இதே போன்ற கொள்கையை எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு நாம் ஆயத்தமாய் இருக்கிறோமா என்பதே கேள்வி. இன்றும் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., டி.எம்.எஸ்., எம்.எஸ்.வி…. எனப் பலரும் ஆங்கிலச் சுருக்கப் பெயர்களுடன் அழைக்கப்படுகிறார்கள். அந்தக் காலத்தில் ஆங்கில முதலெழுத்துகளைக் கொண்டு எழுதுவதும் அழைப்பதும் பெருவழக்காக இருந்தது. பின்னர் அதுவே அவர்களின் அடையாளமாய் ஆனது. ஜி.டி.யையும் அந்த வரிசையில் தான் நாம் வைக்க வேண்டும். காலத்தின் அடையாளமாக, ஒரு காலக்கட்டத்தின் போக்காக இதைக் கருத வேண்டும். அதை அப்படியே வைப்பதே எல்லோருக்கும் புரியும்.
நாயுடு என்ற சாதிப் பெயரை ஏன் வைக்க வேண்டும் எனப் பலரும் கேட்டிருக்கிறார்கள். உ.வே.சாமிநாதர், வ.உ.சிதம்பரம் என இதர பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியது போல் இதையும் நீக்க வேண்டியது தானே எனக் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், அதை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். சரோஜினி நாயுடு என்ற பெயரை இன்று கவிக்குயில் சரோஜினி தேவி என எழுதுவதைப் பார்க்கிறேன். ராமசாமி நாயக்கர், காமராஜ் நாடார், வ.வே.சு.ஐயர் என அழைத்தவர்களை இன்று பெரியார், காமராஜர், வ.வே.சு. என அழைப்பது போல், முன்னோடி ஜி.டி. என அழைக்கலாம். நாம் எப்படிச் சொல்கிறோமோ அப்படித்தான் நமக்குப் பின்வரும் தலைமுறையினர் அழைக்கத் தலைப்படுவார்கள். எனவே இதில் தெளிவான ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜி.டி.நாயுடு பெயரையே வைத்திருக்கக் கூடாது, வேறு பலர் பெயர்களை வைக்கலாமே என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள். இத்தகைய கருத்துகளை ஆளும் தரப்பினர் ஆக்கப்பூர்வமாகக் கருத வேண்டும். புயலுக்குப் பெயர் வைக்க ஒரு குழு அமைத்து, எல்லா நாடுகளுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். அதுபோல், பொதுத் திட்டங்களுக்கு யார் யார் பெயரை வைக்கலாம் என அரசு கேட்கலாம். எல்லோரும் பரிந்துரைகளை வழங்கலாம். அனைத்துப் பரிந்துரைகளும் பரிந்துரைத்தவர் பெயர்களும் அதற்குரிய காரணங்களும் இணையத்தில் ஏற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட பகுதிக்கு, திட்டத்துக்குப் பங்களித்தவர் பெயர்களையும் வைக்கப் பரிசீலிக்கலாம். ஒரே பெயரை மீண்டும் மீண்டும் வைப்பது, தங்கள் தலைவர் பெயர்களை மட்டும் வைப்பது என்பது மக்களாட்சிக்கு அழகு இல்லை. நடுநிலையுடன் பெயர்களைப் பரிசீலித்து, தேவைப்பட்டால் இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி இதற்குரிய முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த நடைமுறை முழுவதும் ஒளிவு மறைவின்றி, திறந்த புத்தகமாக எவரும் காணும் வகையில் இருக்க வேண்டும்.
ஜி.டி. என்ற ஆளுமையை வெறும் சாதியக் குறிப்புக்குள் அடைக்கக் கூடாது. சாதியை விட அவரது சாதனைகளே முன்னிறுத்தப்பட வேண்டும். அவரது பணிகளிலிருந்து ஊக்கமும் உத்வேகமும் பெறுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஆளும் தரப்பினர் எந்தப் பெயரை வைத்தாலும் மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது நிலைபெறும். இப்படிப் பெயர் மாறிய பாலங்கள், ஊர்கள், ஆள்கள் பெயர்கள், நம்மிடையே அதிகம் உள்ளன. எனவே, மக்கள் அனைவரும் ஜி.டி.பாலம் என அழைக்கத் தொடங்கினால், நாயுடு என்ற பெயர் நாளடைவில் மறைந்துவிடும். ஜி.டி.பாலம் ஒன்னு கொடுங்க, ஜி.டி.பாலத்துல ஏறிக்கிட்டு இருக்கேன், ஜி.டி. பாலத்துக்குக் கீழ இடது பக்கம் திரும்புங்க என ஒவ்வொரு வாய்ப்பிலும் கூறினால், அதுவே நிலைபெறும். எனவே, இதில் முடிவு எடுக்க வேண்டியவர்கள் மக்களே.
