எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

0
image0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

பிள்ளைகள் பிறந்தார்கள் பேரின்பம் கொண்டோம்
அள்ளவள்ளக் குறையா ஆனந்தம் அடைந்தோம்
எல்லாமே எங்களுக்கு வந்ததாய் நினைத்தோம்
இன்பத்தில் மூழ்கி  கனவுகளில் மிதந்தோம்

ஒவ்வொரு பருவத்தையும் உளமிருத்தி ரசித்தோம்
ஓடுவதை பாடுவதை உவப்போடு பார்த்தோம்
கள்ளமிலாச் சிரிப்பினிலே கட்டுண்டு போனோம்
கனியமுதே கற்கண்டே எனக்கொஞ்சி மகிழ்ந்தோம்

மார்பினிலும் தோளினிலும் மடிமீதும் தாங்கி
மலரான முகத்தை வாஞ்சையுடன் பார்த்து
காதலித்துக் காதலித்துக் கரைந்துருகி நின்று
கண்ணுக்குள் மணியாக எண்ணியே வளர்த்தோம்

விழுந்திட்டால் துடிப்போம் எழுந்திட்டால் தெளிவோம்
அழுதிட்டால் அணைப்போம் அயர்ந்திட்டால் சோர்வோம்
சிரித்தபடி இருக்க சேவிப்போம் இறையை
சிறந்த செல்வமாக பிள்ளைகளை நினைப்போம்

படிக்கவும் வைத்தோம் பட்டங்களும் பெற்றார்
பக்குவமாய் திருமணமும் செய்துமே வைத்தோம்
படிப்புக்கு ஏற்ற பதவிகளும் பெற்றார்
பார்த்துமே நாங்களும் பரவசம் அடைந்தோம்

வசதிகள் நிறைய வளமாக வாழ்ந்தார்
வளமான நாங்கள் கிழடாகப் போனோம்
பெற்றெடுத்த செல்வங்கள் பேணிடுவார் என்று
எதிர்பார்த்த நாங்கள் ஏமாந்து போனோம்

ஏணியாய் இருந்தோம் தோணியாய் இருந்தோம்
ஏறினார் பயணித்தார் இயன்றவரை உதவினோம்
ஏணியை மறந்தார் தோணியை மறந்தார்
ஏக்கத்தில் இப்போது இருக்கிறோம் நாங்கள்

கொஞ்சிய நினைவுகள் நெஞ்சிலே இருக்கிறது
அஞ்சியே வாழுகிறோம் அழுதுமே நிற்கிறோம்
எதிர்பார்ப்பு எங்களை ஏமாற்றி விட்டது
எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.