பல்லழகன் – பகுதி 3
திவாகர்

அவள் புன்னகைக்கிறாள்.
‘உங்க பொட்டி பத்திரமா இருக்கு சார்! நான் மட்டும் இல்லே.. இதோ (எதிர் சீட்டில் அம்ர்ந்திருப்பவரைக் காண்பித்து) இவரும், யாரோ இருந்தாலும் கூட என்னை விட ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துண்டே இருந்தார்.’
‘ஆமாங்க.. யாரா இருந்தாலும் யாரோ ஒத்தர்னு சும்மா யார்தான் விடுவாங்க? அதனாலதான் நீங்க யாரோன்னாலும் கூட அப்பப்ப உங்க பொட்டி மேல கண்ணப் போட்டுண்டுதான் இருந்தேங்க. அவள் காதருகே வந்து கிசுகிசுத்தான் ‘ரொம்ப தேங்க்ஸ்ங்க..பணம் நிறைய வெச்சுருக்கேங்க. எல்லாம் இந்த பல்லால சம்பாதிச்சது.. போய் எங்க பெரியப்பாகிட்டே காமிக்கணும். அவரு முன்னாடி கவுரமா தலை நிமிர்ந்து நிற்கணும். அவரு ரொம்ப சந்தோஷப்படுவாருங்க’. ‘ஓ. பெரியப்பான்னா அவ்வளோ பாசமா?’ ‘இருக்காதா பின்னே.. அன்பா அக்கறையா வளர்த்தவர்.. அத்தோட அவரோட சொத்துக்கெல்லாம் நான் வாரிசு. ஆனா இப்போ வரைக்கும் ஒரு பைசா கூட வேணாம்னு சொல்லிண்டுருக்கேன். பணம் என்னங்க பெரிசு? மரியாதையா மானத்தோடு வாழணும்.. இல்லீங்க?..’ அவள் புன்னகைக்கிறாள்.‘உங்க பல்லுதான் உங்களுக்கு இடைஞ்சலே தவிர உங்க கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. ஆமாம்.. என்ன சாப்பிட்டீங்க?’ ‘இல்லீங்க.. திருவேங்கடகிருஷ்ணமூர்த்திதான் ‘பிரியாணிக்கு ஆர்டர் பண்ணேன்.. சித்த இருடா’ ன்னான்.. ஆனா அதுக்குள்ள இந்தப்பொட்டி விசயம் தெரிஞ்சு ஓடி வந்துட்டேன். பயங்கர பசி.. வண்டியும் கிளம்பிடுச்சு.. அவனைப் பாக்கறதுக்குன்னா திருப்பியும் அத்தனை பெட்டியையும் க்ராஸ் பண்ணிண்டு போகணும்..”’ ‘சரி.. நான் தயிர்சாதம் கொண்டு வந்துருக்கேன்.. மேல பெர்த்ல வெச்சுருக்கேன்.. அதை முதல்ல எடுங்க.. சாப்பிடலாம்..’
கல்யாண் எழுந்து அவள் வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்தான். பிலாஸ்டிக் பை முடிச்சு பலமாக இருந்தது. சட்டென அப்படியே வாயில் வைத்து தன் தன் தெத்துப்பல்லால் கிழித்து அவசர அவசரமாக அந்த முடிச்சை கழற்றிவிட்டு அதே அவசரத்தில் சாப்பிட ஆரம்பித்தான். அவள் காணச்சகியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அவ்வளோ பசியா? காணாததை கண்டமாதிரி சாப்பிடறீங்க.. எனக்கும் சேர்த்துதான் இந்த தயிர்சாதங்க..’ ‘ஓ ஸாரி.. எச்சில் பண்ணிட்டேன்.. வேற ஏதாவது கொண்டு வந்தீங்களா?’
அவள் எரிச்சலுடன் பதில் சொன்னாள்.
“நான் ஒருத்தி சாப்பிட நாலஞ்சு பாக்கெட் சாப்பாடு கொண்டு வருவாங்களா? பரவாயில்லே.. சாப்பிட்டு முடிங்க.. நான் வாழைப் பழம் வெச்சுருக்கேன். சாப்பிட்டுக்கறேன்.” ‘அடடா.. விஜயவாடா தாண்டினப்புறம் வர்ற ஸ்டேஷன்ல இனிமே சாப்பாடு கிடைக்காதுங்க.. இதோ பாருங்க.. உடம்பு ஃபிட்னெஸ்க்கு வாழைப்பழம் நல்ல வேலை செய்யணும். நல்லதுதான்!’ ‘போனா போகறதுன்னு பசியோட இருக்கீங்களே.. ன்னு உங்களுக்கு சாப்பாடு கொடுத்தேன் பாருங்க.. என்னைச் சொல்லணும்.” ‘என்ன அப்படி சொல்லிட்டீங்க? தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம்’னு எங்க பெரியப்பா அடிக்கடி சொல்லுவார். நாளைக்குக் காலைல போனவுடனே நீங்க கொடுத்த இந்த அருமையான தயிர்சாத தானம் பத்தி எங்க பெரியப்பாகிட்டே கண்டிப்பா சொல்லுவேன்’
சாப்பிட்டு முடித்துவிட்டு, அவள் வெறுப்போடு பார்க்க ஒரு ஏப்பமும் விட்டு, இருவரும் எழுந்து உறங்க மேல் பெர்த்துக்கு சென்றனர். படுத்துக்கொண்டே கல்யாண் பேச ஆரம்பித்தான்.
‘என்னங்க.. நீங்க பல் டாக்டர்தானே.. எதாவது கிலினிக் பிலினிக் வெச்சிருக்கீங்களா?’ ‘பிலினிக் இல்லே கிலினிக் வெச்சுருக்கேன்’ ‘ஆமாம் நீங்க சென்னைல எங்க தங்கறீங்க?’ ‘சென்னைல.. அது சரி! நீங்க எங்க தங்கறீங்க..?’ ‘எங்க பெரியப்பா வீட்டுலதான். ஆக்சுவலா அந்த வீட்டை என் பேருலதான் வாங்கினார்.’
அவளுக்கு எரிச்சல் வந்தது.
‘அதைத்தான் நூறு தடவ சொல்லிட்டீங்களே.. சென்னைல எந்த இடத்துல உங்க பெரியப்பா வீடு இருக்கு?’
அப்போது லோயர் பெர்த்திலிருந்து.. ‘ஏன்பா.. எங்களைத் தூங்க வுடுங்க..’ என்ற எரிச்சல் குரல் கேட்டது..
தாழ்ந்த குரலில் கல்யாண் அவளிடம் ‘இந்தப் பெரிசுங்களுக்கே கொஞ்சம் பொறாமை அதிகங்க.. கொஞ்சம் சுமாரான அழகிய பொண்ணு நல்ல அழகான வாலிபன்கிட்டே பேசினா போதும்,
நொய் நொய்யுன்னு வந்துடுவாங்க..’ என்றான்.
‘நீங்க எப்பவுமே உங்களை கண்ணாடியிலே பாத்துக்க மாட்டீங்களா?’ என்று தாழ்ந்த குரலில் கேட்டாள்.
‘ஏனுங்க?’ ‘உங்களை ரொம்ப அழகானவர் ன்னு சொல்லிக்கிறீங்களே.. அதுதான் கேட்டேன்.. அது சரி, அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்திகிட்டே அவ்வளோ நேரம் என்னதான் பேசினீங்க?’.. ‘அதுவாங்க.. அது வேற ஒண்ணும் இல்லீங்க.. அவன் சின்னப்போ பண்ண சேஷ்டையெல்லாம் ஞாபகம் வெச்சு சொன்னான். நானும் ரசிச்சு கேட்டேன்.. அப்புறம்…’
அவள் கையைக் குவித்து வாயில் வைத்து ஒரு கொட்டாவி விட்டு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தவள் அப்படி திரும்பும்போது.. ‘நீங்க பாட்டுக்கு அப்படியே நிதானமா சொல்லுங்க. நான் ஃபுல்லா கேட்டுட்டு படுத்துடுவேன்’.
‘ஓ.. சின்னப்போ விஷயம்லாம் உங்களுக்கும் பிடிக்குமா? இப்படித்தான்…” என்று சொல்லிக்கொண்டே போக, சடாரென அவளைப் பார்த்தான்.
அவளிடமிருந்து மெதுவாகவும் சீராகவும் சுவாசம் வந்தது என்று புரிந்தது.. அவள் ஏற்கனவே தூங்கிவிட்டாள். அவன் பேச்சு வீண் என்று புரிந்து கொண்ட கல்யாண் நிறுத்தினான்.
‘அடிப்பாவி.. கதை சொல்லி கேட்டு தூங்கற பழக்கம் போல.. அதை எங்கிட்டயே காமிச்சுட்டியா..’
அவனும் வேறு பக்கம் திரும்பினான். அதி வேகத்தில் அந்த ராத்திரியில் அசைந்துகொண்டே அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருவரும் இறங்கத் தயாரானார்கள்.
அவள் அவனிடம் கேட்டாள்,
“தூங்கினீங்களா.. நான் நல்லா தூங்கினேன். உங்க திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி கதை ஃபுல்லா கேட்டேன்.. ரொம்ப சிரிப்பா இருந்தது.. செம்ம காமெடி மனுஷன் இல்ல அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி?
அவன் முறைத்தான்.
‘காலங்காத்தாலே ஒரு புத்தம்புது நாளை எதுக்குங்க இப்படி பொய்யோட ஆரம்பிக்கிறீங்க? நான் பேச ஆரம்பிச்சதுமே நீங்க தூங்கிட்டதை நான் பார்த்தேன்!’
அவள் பேய்முழி முழிக்க ரயில் நிலையம் வர ஆரம்பிக்கும் நிலையில் தன் பெட்டியை எடுத்துக் கொள்கிறான். இறங்கத் தயாராகிறான்..
‘ஹெல்லோ நில்லுங்க.. இவ்வளோ தூரம் சிநேகிதமா பழகினோமே.. ஒரு பெண்ணோட சூட்கேஸ் எடுத்துட்டு வெளிய வெக்கலாமுன்னு உங்களுக்குத் தோணலியா?’
‘ஆஹா.. எவ்வளோ பெரிய சிநேகிதம்!.. அப்படியே உங்க பெட்டியை தூக்கறேங்க.. ஆமாம் ரயிலில் வரும் சிநேகம் எல்லாம் ரயிலை விட்டு இறங்கினாலே போயிடும்னு சொல்லுவாங்களே… நீங்க யாரோ.. நான் யாரோ.. இதோ இவர் யாரோ’ என தன்னுடை சக பயணியைச் சுட்டிக் காண்பித்தான்.’
‘அட என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க.. நம்மளது சாதாரண ரயில் சினேகமாங்க? எங்க ரவியோட பெஸ்ட் ஃப்ரெண்ட். பெர்சனலா பார்த்தா நம்ம ரெண்டு பேரோட சினேகம் மூணு வருஷத்து சிநேகம். எங்க காலேஜ் கிளாஸ்ல டிஷ்யூ பேப்பர்ல ஆரம்பிச்சுது இல்லயா..?’ ‘ஓ.. அப்படி வரீங்களா? இருங்க! இந்தப் பொட்டியை கீழ வெச்சுட்டு உங்க பொட்டியை வாங்கறேன்.. வேண்டாம்.. இந்த பொட்டியிலே பணம் இருக்கு.. நீங்க உங்க பெட்டியையும் கொடுங்க.. ரெண்டுத்தையும் சேர்த்து எடுத்து வரேன். ‘ ‘நான் கோம்டி..’ ‘என்ன டீஈஈ?’ ‘டீஈஈ இல்லங்க.. டி.. கோம்டி.. ஜிஓஎம்டிஐ.. சரியா சொல்லணும்னா கோமதி’ன்னு எங்க அப்பா பேரு வெச்சாரு.. நான் கொஞ்சம் சிம்பிளா மாடர்னா கோம்டி’ன்னு வெச்சுகிட்டேன், நல்லா இருக்கா..’
அவன் அவளை பார்த்து சிரிக்கிறான்.. ‘ஆஹா,, பேஷா ரொம்ப நல்லா இருக்கு..’ என்றவன் அவள் பெட்டியைத் தூக்குகிறான்.
‘சரி வாங்க கோமதி.. சாரி.. கோம்டி. ‘
இருவரும் சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலில் இருந்து வெளியே வந்தனர். திடீரென சிலர் அவனைத் தேடிப் பதற்றத்துடன் வந்தனர். கல்யாணின் கையைப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள்.
‘அடேய், நம்ம பெரியப்பா போயிட்டாருடா… உனக்குச் சொல்லலாம்னு மொபைல்ல ட்ரை பண்ணினோம்.. ஹவுரா மெயில்லதான் வரான்னு உன் வைசாக் ஃப்ரெண்ட் ரவி’ன்னு ஒத்தன் சொன்னான்.. உன் மொபைல் நம்பர் ராத்திரி பூரா ட்ரை பண்ணினா கூட கம்ப்ளீட்டா எடுக்கலை டா..’
இன்னொருவன் அவனிடம் அழுதுகொண்டே சொல்லிக் கொண்டிருந்தான்.. ‘அடேய்.. நேத்து காலைலதான் பெரியப்பா சொல்லிண்டு இருந்தாருடா.. இந்த வாட்டி கல்யாண் வரச்சே இந்த சொத்து விஷயம்லாம் பேசி உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணப்போறேன்னு.. ஆனா இப்படி சடார்னு அவரோட வாழ்க்கை முடிஞ்சுடுச்சேடா…”
அதிர்ச்சியுடன் பிளாட்பாரத்திலேயே முட்டிப் போட்டு அமர்ந்தான் கல்யாண். பின் அதே முட்டியில் தன் தலையைக் குனிந்து வைத்துக் கொண்டான். . அந்த பெண் தன் பெட்டியை எடுத்துக்கொண்டு தன் இன்னொரு கையால் அவனது முதுகில் தட்டினாள், அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள், ஆனால் இறுதியில் இருவரும் தங்கள் வழியில் சென்றனர்தாம்.
கோமதியின் வீடு, அதே நாள்
கோமதி குளித்து முடித்து ஒரு டவலால் தலைமுடியை உலர்த்திக்கொண்டு கிச்சனில் அம்மாவிடம் வந்தாள்
‘யாராவது என்னை தேடி வந்தாங்களாம்மா?’ ‘ஆமாண்டி, உன் க்லையண்ட் அந்த உஷாவாமே.. அவ வழக்குக்காகத்தானே நீ வைசாக் போனே? அவ நேத்து உன்னைத் தேடி இங்க வீட்டுக்கே வந்துட்டா.. நீ போன காரியம் என்னாச்சு?’ ‘சக்ஸஸ்மா.. உஷாவுக்கு ஈஸியா விவாகரத்து கிடைச்சுடும். அவ புருஷன் அங்க வைசாக்ல ஒரு சின்ன வீடு, ஓ இல்லே இல்லே பெரிய வீட்டையே வெச்சுருக்கான். நம்ம சாந்தியோட அண்ணன் ரவி கூட அவங்க வீட்டுலதான் கீழே குடி இருக்கான். உஷாவோட இந்த ஊர் புருஷன் வைசாக்ல ஒரு பெரிய பணக்கார பொண்ணைக் கல்யாணம் கூட பண்ணிண்டு வீட்டு மாப்பிள்ளையா சந்தோஷமா வாழறான். போட்டோஸ் வீடியோலாம் எடுத்துண்டு வந்திருக்கேன்.. நிச்சயமா உஷாவுக்கு இது ஹேப்பி நியூஸ்தானே.. உடனடியா விவாகரத்து கிடைச்சுடும். போகட்டும் நம்ம மூலமா நாலு பேருக்கு நல்லது நடந்தா போதும்.’ அம்மா அலுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘கோமதி, உன்னை வைசாக் அனுப்பிச்சு பல் டாக்டருக்குப் படிக்கவெச்சு, வீட்டுக்கு முன்வாசல்லயே ஒரு கிளினிக் வெச்சு கொடுத்தா, உனக்கு எதுக்குடி இந்த அனாவசிய வேலை எல்லாம்! அதுவும் உனக்கு வரும் வேலையெல்லாம் விவாகரத்து பண்ற கேஸாவே வருதா.. அப்புறம் பிராண்ட் விழப் போகுது.. இவகிட்டே விவாகரத்து கேஸ்க்கு போனா அந்தக் கேஸ் சக்சஸ் ஆகிடும்னு’ ‘அம்மா, நான் என்ன விவாகரத்து வக்கீலா.. இதுதான்மா ஒரு இன்வெஸ்டிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்டோட வேலை. இதோ பார்.. கிலினிக்ல சாயங்காலம் மூணு மணி நேரம்தான் வேலை பாக்கறேன்.. மீதி நேரத்தை இப்படி உருப்படியா செலவழிக்கறேன். பணத்துக்கு பணமும் வருது.. மனசுக்குத் திருப்தியும் கிடைக்குது..’
இப்படிச் சொல்லிக்கொண்டே பால்கனியில் வருகிறாள். எதிர்வீட்டில் இருந்த கூட்டம் பார்த்து அம்மாவை ஆச்சரியமாக கேட்கிறாள்.
‘என்னம்மா.. எதிர்வீட்ல ஒரே போலீஸ் கூட்டமா இருக்கு? அந்த கந்தசாமி போயிட்டானா?‘ ‘சாதாரணமா அவன் போகலடி.. யாரோ ஒருத்தன் கொலை பண்ணிட்டானாம்’.. ‘கொலையா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. ‘கடவுளே.. எப்படிம்மா?’ ‘ஆமாண்டி.. கொலைதான்.. இப்போ காலம் ரொம்பவே மாறிப்போச்சு. மனுஷனுக்கு சாவு கூட நிம்மதியா வராது இல்லே..’ ‘காலையிலேர்ந்து இது ரெண்டாவது சாவு கேஸ் கேட்கறேன்.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல வந்து கால் வெக்கறேன்.. என் கூட வந்தவனோட பெரியப்பா நேத்து சாயங்காலம் போயிட்டாருன்னு இந்த ஆள் வண்டியை வுட்டு இறங்கறச்சேயே வந்து சொன்னாங்க.. பாவம் ரொம்ப. நல்ல மனுஷன்..’ ‘அப்படியாடி.. யாருடி அவன்?’ ‘அம்மா.. அந்த ஆள் நம்ம ரவியோட பார்ட்னர்தான்மா.. அத்தோட எங்க காலேஜ்’ல ஒரு ஆளு பல் மாடலிங் பண்ண வருவாரும்மா.. என் கூடத்தான் வண்டி ஏறினாரு..’ ‘பல் மாடலிங்ன்னா என்னம்மா? ‘அப்நார்மல் பல் உள்ளவங்களை பிடிச்சி எங்க கிளாஸ்ல பிராக்டிகல்ஸ் பண்ணுவோம். இந்த ஆளுக்கு தெத்துப்பல்லு ரெண்டு.. அதை வெச்சு எங்ககிட்ட காமிச்சு மாடலிங் நிப்பான். ஒரு மாடலிங்க்கு பத்தாயிரம் சார்ஜ் பண்றாம்மா.. பல்லைக் காட்டி பொழைக்கிறான்னு பொதுவாச் சொல்லுவாங்க.. ஆனா. இவன் கில்லாடி.. தனக்கு வந்த தெத்துப்பல்லை வெச்சே ஆயிரம் ஆயிரம் சம்பாதிக்கிறான்மா’ ‘இருடி.. அப்போ அவன் பேரு கல்யாண் தானே?’ ‘ஆமாம்மா..’ கோம்டி ஆச்சரியப்பட்டாள்.
தொடரும்
