பல்லழகன் – பகுதி 21
திவாகர்
கோம்டி சமாதானப்படுத்தினாள்.
“போலீஸ் எதையுமே சந்தேகக் கண்ணோடதான் பார்ப்பாங்க முரளி.
உங்களுக்கு நிறைய விஷயங்க தெரியாதுங்கறது எனக்கும் போலீஸுக்கும் கூடத் தெரியும். சுமதி முதல்ல யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா.. நான் சொல்லறேன். உங்க மாமா கந்தசாமியோட சொந்த மகள்தான் சுமதி.”
“என்ன நிஜமாகவா.. அப்போ இதை எங்களுக்கு மறைச்சு வெச்சார் மாமா? என்னாலே நம்பமுடியலியே..”
கல்யாண் குறுக்கிட்டான். “பெரியப்பா நிறைய விஷயங்களை மறைச்சு வெச்சிருக்கார் முரளி.. உன் விஷயமே நீ சொன்னப்பறம்தான் எனக்குத் தெரியும்.. இன்னும் சுந்தர் சொல்லப் போகற விஷயமும் நீ கேட்கணும்.. அதுக்கு முன்னாடி இந்த சுமதிதான் பெரியப்பாவோட ஒரே மகள்.. பெரியம்மாவையும் அழைச்சுண்டுதான் வந்திருக்கேன்.. ஆனா இதையெல்லாம் அவர் ஏன் மறைச்சார்னு தெரிஞ்சுக்கணும்னா அப்பறமா நிதானமா பேசலாம்.. பெரியப்பாவுக்கு நான் நேரடி உறவு.. நானே சொல்லறேன்.. இந்த சுமதி பெரியப்பாவின் உண்மையான வாரிசு. அதுக்கான ஆதாரம்னு நீங்கள்லாம் கேட்பீங்கன்னுதான் கோம்டி எப்படியும் ஒரு ஆதாரம் வேணுங்கறச்சே பெரியப்பாவே சமீபத்துல எழுதிக்கொடுத்த வாரிசு பத்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்காங்க. அதையும் கொண்டு வந்திருக்கேன். அதாவது தன் பேங்க்ல தன் பணத்தைத் தனக்குப் பிறகு தன் பெண் சுமதிக்குப் போய்ச் சேரணும்னு அவரே சுயமா கையெழுத்துப் போட்டு பேங்க்குக்கு ஒரு காபியும் சுமதியோட அம்மாகிட்டே ஒரு காபியும் கொடுத்திட்டுதான் போயிருக்கார் பெரியப்பா.”
முரளி திகைத்துப் போயிருந்தது அவன் குரலில் தெரிந்தது கல்யாண் கோம்டியைப் பார்க்க அவள் தன் கையிலிருந்த பேங்க் பத்திரத்தை இன்ஸ்பெக்டர் மோகனிடம் கொடுத்தாள்.
“பெரியப்பா சமீபத்துல எப்ப கொடுத்தார்?.. நான் இல்லாம பேங்க் கூட போகமாட்டாரே கல்யாண்? எப்ப சுமதி வீட்டுக்கு மறுபடி போனார்.. நான் மட்டுமே அவரை அழைச்சுண்டு போவேன்,, அப்ப சமீபத்துல எப்போ போனார்.?”
“முரளி! மறுபடியும் உன் அப்பாவித்தனத்தைக் காமிக்கறே.. உன் அப்பாவித்தனம்தான் பெரியப்பாவை நல்லா அவர் சுய நலத்துக்காக யூஸ் பண்ண வெச்சது. பெரியப்பாவை நீ நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருதரம்தான் கார்ல அழைச்சுட்டுப் போனே.. ஆனா அதுக்கப்பறம் பத்துப் பன்னெண்டு தரம் சுமதி வீட்டுக்கு ஆட்டோவுல போயிட்டு வந்திருக்கார் பெரியப்பா. இதெல்லாம் உனக்குத் தெரியாது. இன்னொரு விஷயம்.. பிரியா விஷயத்துனாலே உனக்கும் பெரியப்பாவுக்கும் மனஸ்தாபம் வந்துதனாலே உன்னை அவர் தள்ளியே வெச்சிருக்கார் அவரு.”
இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்.
“நீ எங்கிட்டே உண்மையைச் சொல்லியிருக்கலாமே சுமதி.. நான் வந்து உன்னைக் கேள்வி கேட்டப்போ அப்ப ஒருமுறைதான் கார்ல உன் தங்கை மெடிகல் விஷயமா வந்தார்ன்னு சொன்னே.. அதுக்கப்பறம் பாக்கலேன்னு எதுக்குப் பொய் சொன்னே?”
சுமதி நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தாள்.
“நான் பொய் சொல்லலே சார். அவரு ஒவ்வொருமுறை வந்ததுமே அந்தப் பொண்ணு விஷயமாதானே.. அத்தோட என்னோட நிலைமை வேற சார். நான் இப்போ வரைக்கும் அந்த ஆள் என்னோட அப்பான்னு சொல்லிக்கறதுக்கே வெட்கமா இல்லே அசிங்கமா ஃபீல் பண்றேன்.. அதுவும் விஜயா விஷயத்துல அவர் நடந்துகிட்ட விதம் வெறி பிடிச்ச வீதி நாயைப் பாக்கற மாதிரித்தான் அவரைப் பார்த்தோம். அந்த பயங்கரமான அருவறுப்பைச் சொன்னா புரியாது சார். அந்த ஆளை யாரோ அன்னிக்கு கொலை பண்ணிட்டாங்கன்னு சொன்னப்ப வீட்ல ஸ்வீட் வெச்சு நானும் எங்கம்மாவும் சாப்பிட்டோம். அப்படிப்பட்ட ஆளைப் பத்தி எதுக்கு சார் பேசணும்னுதான் பேசலை. இப்போ கூட இந்த வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமில்ல சார்.. கல்யாண் அண்ணாவும் டாக்டர் கோம்டியும் கம்பெல் பண்ணினதாலே நாங்க வந்தோம்.’
முரளியைப் பார்த்தாள். ‘முரளி அண்ணா.. உங்களை உறவு முறையில அண்ணான்னு நான் கூப்பிடலே.. வயசுல என்னை விடப் பெரியவருங்கற முறையில கூப்பிடறேன்.. இப்பவும் சொல்லறேன். அந்தாளோட வீடோ பணமோ எதுவும் எங்களுக்குத் தேவையில்ல.. எங்களைப் பொறுத்தவரைக்கும் நான் பொறந்தவுடனேயே அந்தாளு செத்துட்டதா இப்பவும் மனசார நினைக்கிறோம்..”
முரளி வருத்தப்பட்டுச் சொன்னான்.. “இல்லைம்மா சுமதி.. என் பெண்டாட்டிக்கு ஏற்பட்ட கதி உனக்கும் ஏற்பட்டதோன்னு கொஞ்சம் பயந்துதான் சொன்னேன்மா. தப்பா நினைக்காதே”
“கல்யாண்.. உங்களுக்கு சுமதிதான் பெரியப்பாவோட பொண்ணுன்னு தெரியுமா?”
“தெரியும் சார்.. நான் எதுக்காக வெளியில சொல்லலேன்னா சுமதி எங்கிட்டே வாங்கின சத்தியம்தான். பெரியப்பாவோட பொண்ணுன்னு அவ வீட்டுக்கு வர்ற வேலையை வெச்சுக்க வேணாம்னு என்னை அன்னிக்கே சொல்லிட்டா.. ஆனா எனக்கு அப்பாவும் இல்லே அம்மாவும் இல்லே.. ஒரு தங்கச்சி இருக்குங்கிற முறைல வரலாமான்னு கேட்டப்ப அவ அழுதுட்டா சார். பாவம் சார்.. பாசம்ன்னா என்னன்னு தெரியாம வளர்ந்திருக்கற பொண்ணு சார். அதனாலதான் நீங்க கோம்டிகிட்ட சுமதியைப் பத்திக் குறையா பேசறச்சே பெரியப்பா முறைல உறவு பாக்காம ஒரு அண்ணங்கிற முறையில அவளுக்கு ஆதரவாப் பேசினேன். சுமதியைப் பத்திய விஷயம் கோம்டிக்கு கூடச் சொல்லலே. சுமதியை விட என் பெரியம்மாவைச் சொல்லணும். பொறந்த குழந்தைக்குத் தகப்பன் பேரு தெரியாதுன்னு தைரியமா ஊருல சொல்லி நாலு வீட்டுல வெட்கப்படாம பத்துப் பாத்திரம் தேய்ச்சி அந்தப் பொண்ணை வளர்த்தாங்களாம். சுமதி அவ பெரியப்பா பொண்ணுங்கறது ஒரு பக்கம் உண்மைதான்னாலும் பிறந்ததிலேர்ந்தே கஷ்டத்தைப் பார்த்தவ. இனிமேயும் எங்களுக்கு பெரியப்பா உறவு தேவையில்லே.. அதுக்குப் பதிலா விஷத்தைச் சாப்பிட்டுச் செத்துப் போறோம்னு எங்கிட்ட சொல்லறச்சே அதையும் மீறி என்னாலே எதுவும் செய்ய முடியல.. அவர் விஜயாவுக்கு செஞ்ச பாவத்துக்கு அந்த விஜயா நல்ல முறைல குணமாகணும்னு நானும் என்னால் ஆன உதவியைப் பண்ண வந்தேன் அவ்வளவுதான்..”
“விஜயா சுமதிகிட்டே இருக்காளா?.. அவளுக்காக நானும் பணம் சேர்த்துவர்றேன் கோம்டி மேடம்!” சுந்தர் மிகக் கவலையுடன் குறுக்கிட்டான்.. கோம்டி அழுத்தமாகக் கேட்டாள்.
“எல்லாம் உங்க மாமாகிட்டேயிருந்து வாங்கின பணம்தானே? எனக்குத் தெரியுமே.. ஆசிரமத்து பேங்க் அக்கௌண்டும் ரசீது புக்கும் எல்லா உண்மையையும் சொல்லிடுச்சே சுந்தர். இவ்வளோ பேசறவரு உங்க மேல தப்பு இல்லேன்னா ஏன் இன்னிக்குக் காலைலேர்ந்து வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சிக்கணும்?”
“நான் தப்பிக்க முயற்சிக்கலே.. இன்னிக்கு இங்க வர்றதை அவாய்ட் பண்ண விரும்பினேன்.. போலிஸ் ஸ்டேட்மென்ட் கூட தயார் பண்ணி ரெடியா வெச்சிருந்து அதை இன்னிக்கு போலீஸ் கேட்டப்ப கொடுத்திருக்கேன்.. ஏன் இன்னிக்கு வரவேண்டாம்னு நினைச்சேன்னா எனக்கு கோம்டி இந்த கேஸ்ல எப்படியாவது என்னை ஃப்ரேம் பண்றா மாதிரி மனசுக்குத் தோணிச்சு.. அதனாலதான் அவங்க விசாரணைக்கு இனிமே ஒத்துழைப்பு கொடுக்கவேணாம்னு வரல்லே.. இதையும் போலீஸ்கிட்ட சொல்லியிருக்கேன்..”
கோம்டி முறைத்தாள்.
“ஆனா மிஸ்டர் சுந்தர் இதுவரைக்கும் எல்லாமே மாத்தி மாத்தி சொன்னீங்க.. அதையும் நீங்க ஞாபகம் வெச்சுக்குங்க. இப்போ அதை எல்லாம் கூட விடுங்க.. சம்பவம் நடந்த அன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நீங்க கந்தசாமிகிட்டே ஃபோன்ல பேசினதையும் மாத்திதான் கொடுத்தீங்க.. அது ஏன்.. அன்னிக்கு நீங்க கரெக்டா என்ன பேசினீங்கங்கறத நல்ல ஞாபகப்படுத்தி நிதானமா எல்லோருக்கும் சொல்லலாமே. இதோ பாருங்க இப்பவாவது உண்மையைச் சொல்லணும். ஏன்னா உங்க ஃபோன் பேச்சு எல்லாம் என்கிரிப்ட் ஆக கந்தசாமி மொபைல்ல இருக்கு.”
இன்ஸ்பெக்டர் சுந்தரைப் பற்றி விவரித்தார். சுந்தருக்கும் கந்தசாமிக்கும் அன்று முதன்முதலாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் எடுக்கும்போது நடந்த சண்டையை கோம்டியை வைத்துப் பேசச் சொன்னார். கோம்டி விவரித்தாள். தன்னிடம் ஒப்புக்கொண்டதையும் கந்தசாமியின் மன்மத லீலையையும் விவரித்தாள். ஆசிரமத்து விஜயாவுக்கு நேர்ந்த கோரமான நிகழ்வையும் விவரித்தாள்.
விஜயாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வந்தபோதுதான் கந்தசாமியைப் பற்றி முதன்முதலாக சுமதி தெரிந்துகொண்டதையும் அதன்பின் சிரமம் எடுத்துக்கொண்டு விஜயாவை ஆதரித்த விதம் பற்றியும் நெகிழ்ச்சியுடன் சொன்னாள் கோம்டி.
சுமதி இப்போது வரை அந்த விஜயா மேல் பாசத்தோடு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி வருவதைப் பாராட்டிச் சொன்னாள்.
“ஆனால் சுந்தர் உங்களுக்கும் அந்த விஜயா மேல் பாசம் இருந்திச்சு.. அந்தப் பாசத்தை வெச்சு கந்தசாமிகிட்டே பணம் பறிச்சீங்க இல்லையா.. என்னதான் இந்தப் பணமெல்லாம் விஜயாவோட ஆஸ்பத்திரி செலவுக்குன்னு நீங்க இப்போ சொன்னாலும் நீங்க அதைக் கொடுக்காதவரை எங்களாலே நம்பமுடியாது. இப்போதாவது சொல்லுங்க அன்னிக்கு சாயந்திரம் என்ன நடந்ததுன்னு.. விஜயா மேல உங்க பாசம் உண்மையான பாசம்னா அன்னிக்கு ஃபோன்ல என்ன பேசினீங்கன்னு அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு அப்படியே சொல்லணும். உங்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ் கூட”
கோம்டி இதைச் சொன்னதும் தலை கவிழ்ந்தான் சுந்தர்.
“அன்னிக்கு நாலரை மணிக்கு நான் ஃபோன் செஞ்சது வாஸ்தவம்தான்.” கந்தசாமியுடன் தான் பேசின விவரத்தையும் அதற்குப் பிறகு நடந்ததையும் விவரித்தான்.
மாலை 4.30 மணியளவில் கந்தசாமிக்கு சுந்தர் ஃபோன் செய்கிறான், ஃபோனில் கந்தசாமியின் குரல் கேட்கிறது..
“என்னடா சுந்தர் இந்த நேரத்துல நீ பேசறே? நீ நேரே இங்கே வரலாம் இல்லே.. உங்கிட்டே ஒரு விஷயம் கேட்கணுமே..”
“நீங்க என்ன கேட்கப் போறிங்கன்னு தெரியும் மாமா.. குறிப்பிட்ட வஸ்துவைப் பத்திக் கேக்கப் போறீங்க.. வேண்டாம் இனிமே இந்த வேலை.. அதனாலதான் நான் எடுத்து ஒளிச்சு வெச்சுட்டேன். நான் உங்க நல்லதுக்குதான் பேசறேன் மாமா.. இன்னொரு விஷயம்.. அந்த விஜயாவோட நியூஸ் கிடைச்சுதான்னு சொல்லவே இல்லே.”
“டேய் சுந்தர்.. நீ இப்படியெல்லாம் சொல்லலாமா? எனக்கு விஜயா விஷயமே தெரியாதுடா.. அன்னிக்கு பீச்சுல காணாம போனது காணாமப் போனதுதான்.. அந்தப் பொண்ணை விடு.. எனக்கு நீ எடுத்துண்டு போனது கட்டாயம் திருப்பித் தரணும்.. உன்னை வளர்த்து ஆளாக்கியது நான்.. எனக்கே இப்படி நீ துரோகம் செய்யலாமா.. சொல்லுடா?”
“இதுல துரோகமெல்லாம் எங்கே வந்தது? நீங்க செய்துகிட்டுருக்கற விஷயம் வெளியிலே தெரிஞ்சா உங்களோட எப்பவுமே உதவியா இருக்கற நானும் முரளியும்தான் முதல்ல தூக்குல தொங்கணும்.. ஒருவேளை போலீஸ் உங்களைப் பிடிச்சுதுன்னாக் கூட எங்க ரெண்டு பேரையும் கூட விசாரிக்காம ஜெயில்லே போடலாம். நீங்க வளர்த்தீங்கன்ற ஒரு விஷயத்துக்காக நாங்க ரெண்டு பேரு ஜெயிலுக்குப் போகணுமா.. யோசிச்சுப் பாருங்க மாமா.”.
“டேய் மடப்பயலே.. அதுக்குதான் பிராயச்சித்தம் பண்றேன்னு சொல்லி பத்து லட்சம் கொடுத்தேண்டா. அதைக் கூட நீ இன்னும் நான் கொடுத்த அட்ரஸுக்கு கொடுக்கலே.. சரி, விடு.. அந்த பத்து லட்சத்தை நீயே எடுத்துக்கோ, அடேய்.. என் வஸ்துவைக் கொடுத்துடுடா.. என்னை பிளாக்மெயில் பண்ணாதே..”.
“முடியாது மாமா.. நான் கொடுக்க மாட்டேன். நான் இதைப் பத்தி கல்யாண்கிட்ட பேசணும்..”
“டேய் டேய் கல்யாண்கிட்ட எதுக்குடா. எங்கிட்டே பேசுடா. உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லுடா..?”
“பணம் என்ன மாமா.. அம்பது லட்சம் ஒரு கோடியானாலும் நீங்க கொடுப்பீங்கன்னு தெரியும்.. ஆனா உங்க மன்மத லீலையை கண்டிப்பா கைவிட மாட்டிங்க. விஜயா மாதிரி இன்னும் எத்தனை பெண்களை முன்னமே சீரழிச்சீங்களோ இனிமேயும் எத்தனை சின்னப் பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிக்கப் போறீங்களோ.. யாருக்குத் தெரியும்? அந்த ஆசிரமத்துல இருக்கற சின்னப் பொண்ணுங்களை நினைச்சாலே கதி கலங்குது.. பாவம் அந்த மேனேஜர் பெரியவர். அவருக்குத் தெரியாம நீங்க செஞ்ச அயோக்கியத்தனம் ரொம்ப குரூரமானது. நான் முதல்ல போலீஸ்கிட்டதான் போகலாம்னு இருந்தேன். ஆனா கல்யாணுக்கும் தெரியணும்.. நாங்க ரெண்டு பேரும் சேர்த்து இந்த விஷயத்தைப் போலீஸ்கிட்ட எடுத்துப் போவோம். . கல்யாண் வந்ததும்தான் இது முடிவுக்கு வரும். நான் அவன்கிட்டே சாட்சிக்காக இந்த வஸ்துவை ஒப்படைச்சுட்டு எல்லா விஷயமும் நானே சொல்லப் போறேன்.”.
கத்தினார் கந்தசாமி “உனக்கு என்னடா தெரியும் என்னைப் பத்தி.. நான் இப்போ எந்த லீலையிலும் ஈடுபடலேன்னு சொன்னா நம்புவியா.. என் வஸ்துவைக் கொடுத்துடு.. சரி, அம்பது லட்சம் கொடுக்கறேன்.. இங்கே வா.. அந்த வஸ்துவையும் கொண்டு வா.. பேசலாம்..”
“நான் அங்கே வரமாட்டேன். என்னை நேரப் பார்த்தீங்கன்னா என் மேல் இருக்கற ஆத்திரத்துல நீங்க என்னைக் கொன்னுப் போட்டாலும் போடுவீங்க.. அதான் ஒரு சைலன்ஸர் துப்பாக்கி உங்க பீரோவுக்குள்ள மறைச்சு வெச்சுண்டிருந்ததைப் பார்த்தேனே.. நாளைக்கு காலைல கல்யாணை நான் ஸ்டேஷன்லியே பார்த்து எல்லாவிஷயத்தையும் சொல்லிட்டுதான் அழைச்சுண்டு வரப் போறேன்.. அதுக்கப்பறம் அவனாச்சு.. நீங்களாச்சு..”
“டேய்.. டேய்.. அப்படில்லாம் சொல்லாதேடா.. நான் செத்துடுவேண்டா.. என் பொணத்தைத்தான் நீ பாக்கப் போறே.. இதோ பார்.. நேருல வாடா.. பேசலாம்..”
“நான் வரல்லே மாமா.. என் முடிவு இதான். நீங்க எடுத்த படத்தையெல்லாம் பார்க்கறப்போ எனக்கு ரத்தக் கண்ணீர் வந்துச்சு, அதுவும் விஜயாவைப் போயி.. .. அப்படின்னு நினைக்கறச்சயே உங்க மேல ஆத்திரம் ஆத்திரமா வருது.. உங்க அழுகை ஒரு நாடகம், அதுவும் ஆசிரமத்துலேயே பொய் சொல்லி எதுவுமே தெரியாதுமாதிரி அழுதீங்களே.. போதும் மாமா.. உங்க சகவாசம்.. உறவு எல்லாமே போதும்.. இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா.. அதுதான் நான் கல்யாண் வர்றதுக்காக காத்திருக்கேன்.. உங்களை என் உறவுக்காரர்ன்னு சொல்லறதுக்கே வெட்கமா இருக்கு.. அதுதான் உங்க கையில பணம் வாங்கி உங்க கூட சாப்பிட்டு நான் வளர்ந்தேனே.. ச்சே.. தற்கொலை பண்ணிக்கலாமான்னு இருக்கு.. அது சரி, நான் என்ன தப்பு பண்ணினேன் தற்கொலை பண்ணிக்கறதுக்கு.. நீங்க சொல்லறா மாதிரியே நீங்களே பண்ணிக்குஙக மாமா.. நீங்க தப்பறதுக்கு நீங்க தற்கொலை பண்ணிக்குங்க.. அதுதான் ஒரே வழி.”
ஃபோன் வைக்கப்பட்டுவிட்டது..
தொடரும்
