திவாகர்

“சார்.. சார்.. அப்படியெல்லாம் சொல்லலாம்மா.. நீங்க உங்க லெவலே வேற.. கொஞ்சம் டிக் பண்ணிக் குடுங்க சார்.. நான் என் ஃப்ரெண்டைப் பார்க்க போய்டுவேன்.”

 

TTE பரிதாபமான உணர்வுடன் அவனைப் பார்த்தார். அவனிடம் இருந்து டிக்கெட்டை பறித்து.. சரி பார்த்தார்.

 

“சரி! அடையாள அட்டை ஆதார்.. ஆதார் அட்டை காமி?”

 

“அந்தப் பொண்ணுகிட்டே கேக்கலியே” என்று சொல்லிக்கொண்டே தன் பர்ஸைக் கழற்றி கார்டைக் காட்டினான்.  அதைக்கூட அவர் பார்க்காமல் அலட்சியம் காட்டினார்.

 

“இருக்கு இல்லே?.. நான் என் கடமை ஐ செய்யணும்.. சரி சரி, நீ போய் உன் சீட்டுல உட்கார்ந்துக்கோ..”

 

“தேங்க்ஸ் சார்!”

 

கல்யாண் கம்பார்ட்மெண்ட் உள்ளே சென்று அந்தப் பெண் எதிரில் அமர்ந்தான். அவள் அவனை ஒரு மாதிரியாக லேசாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் சிரித்தான். சட்டென்று அந்தப் பெண் அவனது தெத்துப் பற்களைக் கண்டு பயந்து, கைகளைக் கூப்பிக் கேட்டாள்.

“சார்.. நீங்களும் சென்னைதான் வரீங்க இல்லயா?”

“ஆமா”

“சார்.. நாம ரொம்ப தூரம்  சேர்ந்து டிராவல் பண்ணியாகணும். கொஞ்சம் சிரிக்காம..“

“கொஞ்சம் கஷ்டம்தாங்க.. ஆனா கவலையே படாதீங்க.. வண்டி கிளம்பினதும் நான் என் நண்பன்….”

 

அவள் உடனே பதிலளித்தாள்.

திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி. S1 கோச்..

“ஹய்யோ! நீங்க கவனீச்சங்களா..”

 

“நான் எதுக்கு கவனிக்கணும்? அதான் ஊரே கேக்கறமாதிரி ரெண்டு பேரும் கத்தி பேசினீங்களே..”

“ஆமாமாம்.. அவன் குரல் கொஞ்சம் பெரிசு..”

 

“அது சரி, ரவியை எவ்வளவு நாளா தெரியும்.. என் ஃப்ரெண்டோட அண்ணன் அவன்.. சென்னைக்கு வாடான்னு சொன்னா வரவே மாட்டேங்குறான்..”

 

“ஓ.. ரவி என் ஃப்ரெண்ட். என் தொழில்ல கூட பார்ட்னர்.  அவனும் நானும் ஒரே வீட்லதான் இருக்கோம்..”

 

“காலைல அவன் வீட்டுக்கு வரச்சே நீங்க இல்லே.. ஒருவேளை நீங்க இருந்தீங்கன்னா எங்களோட வேலை முடிஞ்சிருக்குமான்னு சொல்லமுடியாது. நல்லகாலம் நீங்க இல்லே..” அவள் புன்னகைத்தாள்.

 

“இந்த திருவேங்கடகிருஷ்ண மூர்த்தி கூட..” அவன் சொல்லும்போதே இடைமறித்தாள்.

 

“அவர் இருக்கட்டும்ங்க.. ஆனா உங்களை ஏன் தெத்துப்பல்லன்’னு கிண்டல் பண்ணி கூப்பிடறாரு? ஒருத்தர் குறையை சொல்லி அப்படி கூப்பிடறது தப்பு..”

 

“அய்யய்ய.. சின்ன வயசுலேர்ந்து இது இருக்கு.. அப்பவே எல்லா ஃப்ரெண்ட்ஸும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. ஒருவாட்டி நான்  திருவேங்கட கிருஷ்ணமூர்த்தியை ‘நொண்டி’ன்னு கூப்பிட்டுட்டேன். அதை எங்க பெரியப்பா ஒருதடவை பார்த்துட்டாரு., அவருதான் எங்க பள்ளிக்கு தினசரி வந்து அழைச்சுண்டு போவாரு, அவரு அப்போ எனக்கு புத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. நீங்க இப்போ சொன்ன மாதிரியே ‘உடம்புல குறை உள்ளவங்களை அப்படியெல்லாம் கிண்டலா சொல்லிக் கூப்பிடக்கூடாதுடா”ன்னு சொன்னாரு. ஆனா இந்தத் தெத்துப் பல்லுங்க எனக்குக் குறை இல்லையே..”

 

“பெரியப்பா நல்ல பெரியப்பா..”

 

‘ஆமாங்க எனக்கு அவர்தான் எல்லாமே. எங்க அப்பாவும் அம்மாவும் என் சின்ன வயசுலேயே மேல போனதுக்கப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பாதான்.’ “ஓ! ஸாரி, ஆனா சுவாரஸ்யமா பேசறீங்க.. அது சரி, நான் உங்களை எங்கேயோ பார்த்துருக்கேனே.. எங்க எப்படி பார்த்தேன்னு ஞாபகம் இல்லே.. நீங்க வைசாக்ல இருக்கீங்களா?” “இப்போ இல்லே.. சென்னைதான். ஆனா வைசாக்’லதான் பிஜி படிச்சேன்..?” “எங்கே? கீதம் காலேஜ்லயா?  நான் கீதம்தான் படிச்சேன்” “கீதம் காலேஜ்?… ம்.. எனக்கும் பிடிக்கும்.. ஆனா அங்கே இல்லே”. “நான் அப்போ உங்களை எங்கே பார்த்திருக்கேன்?” “கீதம் காலேஜ்லேயே பார்த்திருக்கலாம். எனக்கு அங்கே ஒரு விருது கிடைச்சுது. அதுக்கு வந்திருக்கேன்.. அங்க நிறைய கேர்ள்ஸ் என் கையைப் பிடிச்சுக் குலுக்கிப் பாராட்டினாங்க.. நீங்க கூட அப்படி கையைக் குலுக்கியிருக்கலாம்… அப்போ பார்த்திருக்கலாம்” “ஊம்ஹும்.. ஆஹா.. ஞாபகம் வந்துடுச்சு. நீங்க நான் என் ஃபைனல்ஸ் முடிக்கறபோது என் கிளாஸ்க்கு வந்து இருக்கீங்க. உங்களை நிக்க வெச்சு எங்க ப்ரொஃபசர் பிராக்டிகல்ஸ் சொல்லிக் கொடுத்தாரு”

//அவள் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது. கீதம் காலேஜ் மெடிகோஸ் வகுப்பறையில், கல்யாண் மாணவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். பேராசிரியர் கையில் தடியுடன் கல்யாணிடம் கேட்டார்.

“தம்பி வாயை நல்லா திறந்து வெச்சுக்கோ..”பின்னர் மாணவர்களிடம் பேசினார். “இங்கே நல்லா பாருங்க.. இவரோட ரெண்டு பல்லுங்க அசாதாரணமா முன்னாடி வந்துருக்கு. இதுக்கு இங்க்லீஷ்ல மிஸ்-அலைன்னுட் டூத்.. அல்லது க்ரூகெட் டூத்ன்னுமாங்க ஆனா அது ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் ஆகியிருக்கு பார்த்தீங்களா. குழந்தையா இருக்கறச்சயே இந்த மாதிரி பல்லுங்களை  வெளியே எடுத்தா அவருக்கு ஒரிஜினல் பல்லுங்க மறுபடியும் ஈஸியா வளர்ந்துடும். ஆனா குழந்தையா இருக்கறச்சே இந்தப் பல் வளர்ச்சி ரொம்ப ஸ்லொ இல்லையா.. அத்தோட தினம் குழந்தைகளை நாம பார்த்துண்டே வளர்க்கறதுனாலே அந்தத் தெத்துப்பல்லு குறையெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனா வயசு வந்தவுடனே இந்த தெத்துப் பல்லுங்களை எடுக்கணும்னா அது ரொம்ப ரொம்ப கஷ்டமான ஆபரேஷனா மாறி சில சமயம் கண்ணுக்கே அது அபாயமாயிடும்.. அத்தோட வலுவான அடிப்பாகம் இருக்கறதினாலே இந்த ரெண்டு பல்லை எடுக்கும்போது மீதி உள்ள பல்லெல்லாம் ஆட்டம் காண்பிக்கும். இந்த மாதிரி பல்லு அதுவும் தெத்துப் பல்லு  ஆபரேஷன் பண்றது அதாவது க்ரூக்கட் டூத் ஆபரேஷன் எப்படின்னு அடுத்த கிளாஸ்ல பாக்கலாம்  மாணவர்களே!.. வாங்க எல்லாரும் வரிசைல நில்லுங்க. ஒரு வலுவான தெத்துப் பல் எவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்கும்னு நேர்லயே பார்த்து நீங்கள்லாம் தெரிஞ்சுக்கணும்னுதான் இவரே வந்துருக்கார்.   இதோ டிஷ்யூ பேப்பர் நிறைய வெச்சுருக்கேன். இந்த பல்லுங்களை கொஞ்சம் ஆட்டிப் பாருங்க. எவ்வளோ ஸ்ட்ராங்குன்னு தெரியும்”

அனைத்து மாணவர்களும் முன்னால் வந்தனர்.  ஒரு மாணவன் கேட்டான்.

‘சார், அந்த ஆளு இன்னிக்கு பல்ல தேச்சாரா’ன்னு கேளுங்க சார்!’

எல்லோரும் சிரிக்க, பேராசிரியர் அவங்களை ‘சைலண்ட்’ன்னு சொல்லிவிட்டு பேசுகிறார்.

“ஸ்டூடன்ட்ஸ்,  நம்ம ப்ரொஃபெஷனல்ல மாஸ்க் போடணும்கிறது ரொம்ப கட்டாயம். எல்லாரும் அவங்கங்க மாஸ்க் போட்டுண்டு இவரோட பல்ல ஆட்டிப் பாக்கலாம்.”

எல்லோரும் வருகிறார்கள். இந்த பெண் கோம்டியும் கூடவே அவள் தோழியும் சேர்ந்தே வந்து ஒருத்தி டிஷ்யூ பேப்பரை எடுத்து அவன் பல்லைக் கையால் ஆட்டும்போது இன்னொருத்தியும் சேர்ந்து அதைத் தொடும்போதுதான் டிஷ்யூ பேப்பரின் ஒரு பகுதி அவன் வாய்க்குள் போய்விடுகிறது. அவன் சற்று இருமுகிறான்.

“ஓ.. மன்னிக்கவும்!”  கோம்டி பரிதாபமாகப் பார்த்து சொல்லிவிட்டுப் போக, மற்ற மாணவர்கள் சிரிக்க கல்யாண் வருத்தப்பட்டுகொண்டே பேராசிரியரிடம் வருகிறான்.

“பிச்சைக்காசு பாத்தாயிரம் ரூபாய்க்கு எப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.. டிஷ்யூ சாப்பிட வைக்கிறாங்க சார்!”

பேராசிரியர் அவனை உரிமையுடன் பார்க்கிறார்.

“இதோ பார் கல்யாண்.. அஞ்சு நிமிஷ வேலை. உனக்குப் பத்தாயிரம் வருது.. இன்னும் நிறைய வகுப்பு எடுக்கணும்.. உனக்கு நிறைய பத்தாயிரம் வரும் இல்லே.?. டேக் இட் ஈஸி மை டியர் பாய்!!”

காட்சி இப்போது ரயில் பெட்டிக்கு மாறுகிறது.

“ஆஹாங்.. ஞாபகம் வந்துடுத்து. மூணு வருஷம் முன்னாடி நான் ஃபைனல்ஸ் பண்றச்சே எங்க கிளாஸ்ல நீங்க உங்க அழகான பல்லைக் காட்டி மாடலிங் பண்ணீங்க இல்லே.. டிஷ்யூ பேப்பரை உங்க வாயில போட்டவ நான்தான் சார்..” “எனக்கு கூட இப்ப நினைவு வர்றதுங்க.. என் பொழப்பை பாத்தீங்களா.. எங்க பெரியப்பா பெரிய பணக்காரருங்க.. அப்படியும் நானே சுயமா சம்பாதிச்சு என் செலவுக்குப் பாத்துக்கணும்’னு ஒரு ஒரு..கொள்கைங்க.” “ஏன் சார்.. இப்போதான் மாடர்ன் எக்யூப்மென்ட்ஸ்லாம் வந்தாச்சே.. நீங்க சென்னைல என் கிளினிக் வாங்க.. நானே சுத்தமா இந்த ரெண்டு பல்லையும் எடுத்துடறேன்.. அதே சைஸ்ல புதுப்பல்லு ரெண்டும் பெர்மனென்ட்டா கட்டித் தர்றேன்..” “ஐய்யய்யோ.. அது மட்டும் முடியாதுங்க.. இன்னும் ரெண்டு வருஷம் இந்த பல்ல இப்படியே வெச்சேன்ன என்னை மகாலட்சுமி தேடி வருவாள்ன்னு வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியத்துல சொல்லியிருக்கு.. அப்படி வந்த மகாலஷ்மி ஒரு அதிர்ஷ்ட தேவதையை என்னோடயே இருக்கவெப்பான்னு சொல்லியிருக்கான் மேடம். அப்படி அதிர்ஷ்டம் கொடுக்கப்போற பல்லை எவனாவது எடுப்பானா? நீங்களே பாத்தீங்களே.. இந்த பல்லை நான் பல் காலேஜ்ல போயி மாடலிங் ஒரு தடவை காமிச்சா சுளையா பத்தாயிரம் வருது.”

ரயில் பின்பெட்டியில் யாரோ ஒருவர் ‘அனகாபள்ளி ஒஸ்துந்தி’ எனப் பேசும் குரல் மட்டும் கேட்கிறது. உடனே அவள் சிரிக்கிறாள்.

“இந்த அனகாபள்ளிங்கிற வார்த்தை மாத்திரம் ரவியும் நீங்களும் ஆயிரம் தடவை இன்னிக்கு சொல்லிட்டீங்க. ரவி கூட அனகாபள்ளி வந்திருப்பான்னு நினைக்கிறேன்.”

“ஓ!அனகாபள்ளி வந்துடுத்தா?” கல்யாண் ஜன்னல் வழியாகப் பார்க்கிறான்.

ரயில் அனகப்பள்ளி நிலையத்தை நெருங்குகிறது. சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து அவளிடம் சொன்னான்.

“ஏங்க,, கொஞ்சம் இந்த பெட்டியை பாத்துக்குங்க.. நான் இந்த எஸ்1 கோச்ல” “திருவேங்கடகிருஷ்ணமூர்த்தியை பாக்க போறீங்க.. போங்க சார்.. உங்க பொட்டியை நான் பாத்துக்கறேன்..”“தேங்க்ஸ்ங்க!”

அனகபள்ளி வந்ததும்  அவன் அவன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும், வண்டி அதிக நேரம் நிற்காமல் கிளம்பியது. அவள் கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டுப் படிக்க ஆரம்பித்தாள்.. கல்யாண் உடனே வரவில்லை.

ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நேரம் போகிறது. பக்கத்தில் இருந்த ஆசாமி இந்தப் பெண்ணிடம் பேசுகிறான்.

“ஏம்மா நம்ம ஆள் இன்னும் வரல்லே.. பொட்டியை மட்டும் பார்த்துக்கச் சொல்லிட்டு இத்தனை நேரமா?” “நம்ம ஆளா?.. அது சரி, உங்களுக்கு ஏன் சார் அந்தக் கவலை.. பெட்டியைப் பாத்துக்கச் சொல்லியிருக்காரு.. பொட்டி பத்ரமா இருக்கான்னு பாக்கறது மட்டும்தான் நம்மோட பொறுப்பு.. எப்போ வேணாம்னாலும் வரட்டுமே.”. “அதுவும் சரிதான்மா.. மெட்ராஸ் வந்தா நாம பாட்டுக்கு இறங்கிடுவோம்.. உங்க சினேகிதரோட அந்தப்  பொட்டிதான்..”  “யார் சார் சினேகிதர்? இந்த தெத்துப் பல்லு ஆளா? ரயில் சினேகிதம்லாம் ரயில்ல இறங்கற வரைக்கும்தான்..” “ஓ.. அதுவும் சரிதான்” “ஸார் நியாயமா மெட்ராஸ் வரைக்கும்தான் நம்மாலே பாத்துக்கமுடியும்.. அப்பறம் இந்த பொட்டியைப் பத்தி நமக்கென்ன அக்கறை? அது யார்கிட்டே போனா நமக்கென்ன?” ‘ஆமாம்மா! நீங்க யாரோ.. நான் யாரோ.. அவர் யாரோ.. இந்த டிரெயின்ல வர்ர பாஸெஞ்சர்லாம் யார் யாரோ…. ஏதோ ரயில்ல இப்படி கொஞ்சநேரம் உட்கார்ந்து ஒத்தரை ஒத்தர் பாத்துக்கறோம்.. ஸ்டேஷன் வந்ததா.. நாம யாரோ.. அப்படியே இறங்கிப் போய்க்கொண்டே இருப்போம்..’

ரயில் வேகம் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கோம்டி தன் புத்தகத்தைப் பிரித்து அதில் மூழ்கி  விடுகிறாள். விஜயவாடா வந்ததும், அதுவும் ரயில் நகர ஆரம்பித்ததும்தான் கல்யாண் பதற்றத்துடன் அங்கே வருகிறான்.

“எங்க,  என் பெட்டி இருக்கா?.. நான் அப்படியே அங்கயே பேசிண்டு இருந்துட்டேன். விஜயவாடா ஸ்டேஷன்ல எனக்காக திருவேங்கிடகிருஷ்ணமூர்த்தி பிரியாணிக்கு ஆர்டர் போட்டான். அப்போதான் பெரிய சப்தம்.. அங்கே யாரோ திருடன் ஒத்தன் யாரோட பெட்டியையோ தூக்கிட்டாங்களாம்.. அப்போதான் இன்னோர்த்தன் சொன்னான்.. இப்போதான் ஏசி கம்பார்ட்மென்ட்ல கூட ஒரு பெட்டியை யாரோ பறி கொடுத்தாங்க’ன்னு சொன்னான். அவ்வளவுதான்.. ஓடி இங்கே வந்துட்டேன்” அவன் மூச்சு வாங்குகிறது.

தொடரும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.