சேக்கிழார் பா நயம் -50
![Sekkizhar](https://www.vallamai.com/wp-content/uploads/2019/06/Sekkizhar.jpg)
-திருச்சி புலவர் இராமமூர்த்தி
தம் முன்னே தோன்றிய இவர் யார்? என்று சுந்தரர் அருகில் இருந்தாரை வினவினார். ‘’அவர் பரவை என்னும் நங்கை! வானுலகில் காணப்படும் தேவர்களுக்கும் சேர்வதற்கு அரியார்!’ என விடைகூறினர் . அதாவது, பெரிய தேவர் சபையும் விரும்புகின்ற இடையை உடைய திலோத்தமை, உருப்பசி, ரம்பை, மேனகை ஆகிய பேரழகியரும் விரும்பி வணங்கும் தெய்வம் போன்றவள்!’’ இதனை,
“பேர்பரவை! பெரும்பரவை விரும்பல்கு லார்பரவை!”என்ற அடி விளக்குகிறது அதாவது- ‘’பெரு உம்பர் அவை விரும்பும் அல்குலார் பரவு ஐ’’ என்பதாம். மேலே தொங்கிய மூக்கின் அணியாகிய முத்துப் புல்லாக்கின் கீழே இதழ்களின் இடையில் திகழும் அழகிய பல் வரிசையோ, முல்லை அரும்புகளே!
என்பதை ‘‘அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை’’ என்ற தொடர் குறிக்கிறது. மற்றும் இலக்குமியும் விரும்பும் பேரழகுடையார் – அதாவது சீர் = திருமகளும் , பரவு = விரும்பும் ஐ = அழகு ஆயினாள் என்ற விளக்கத்தை உடைய ‘’சீர் பரவு ஐ ஆயினாள்‘’ அதாவது சீர்பரவை ஆயினாள்! என்ற தொடர் குறிக்கிறது. இவர் உருவம் இனிய , மென்மையான சாயலைப் பெற்றுள்ளது. கண்டாரால் விரும்பப்படும் காட்சியழகின் இடையில் அகப்பட்ட என் விருப்பமானது எழுகடல்களைப் போன்று பெருகுகின்றது. இதனை, திருவுருவு இன் மென் சாயல் ஏர்பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை என்ற தொடர் குறிக்கின்றது. இனி முழுப்பாடலையும் பயில்வோம் .
“பேர்பரவை பெண்மையினிற் பெரும்ரவை விரும்பல்குல்
ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை ஆயினாள் திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை என்னாசை இடைப்பட்ட எழுபரவை”
இதற்கு மேலும் சில விளக்கங்கள் உள்ளன. அவை:
– பெண்மையிற் சிறந்தாரை நங்கை என்பது மரபு.. நங்கை பரவை என்பதே இவரை அழைத்த மரபு போலும். தஞ்சை இராசராசச் சக்கரவர்த்தியார் தமது இராசராசேச்சுரத்திலே தாபித்துள்ள இவரது செப்புப் படிமத்தில் “நங்கை பரவை“ என்று பெயர் தீட்டப்பெற்றிருத்தலும் அறிக.
-யார்? என்று கேட்டார்க்குப் பேரோடு, தன்மையும் உரைத்தல் மரபாதலின் அரியார் என்று அறிவித்தனர் என்க. உம்பர் தரத்தும் யார்க்கும் சேர்வரியார் என்க. மக்கள் தேவர் நரகர் என்ற மூவகை உயர்திணையிலும் தேவர் உயர்ந்தோர்; அவர் தரத்திலே உள்ளார்க்கும் என உம்மை உயர்வு சிறப்பு. உயர்திணை எல்லாம் அடங்கும்பொருட்டுத் தேவரே – அன்றி அவர் தரத்தாரே -யாவரே யாயினும் என்பார், தரத்தும் ஆர்க்கும் என்றார். உம்மை தொக்கது.உம்பரின் மேலாயினவர் விட்டுணுமூர்த்தி; அவருக்குக் கிருட்டிணாவதாரத்திற் சிவதீக்கை செய்து அவர்முடிமேல் அடிவைத்தவர் உபமன்னிய முனிவர்; அவரால் துதிக்கப் பெறுபவர் நம்பிகள். இவர்
அவர்க்கே உரியவர் அல்லது உம்பர் தரத்தார்க்கும் சேர்வரியார் என்றபடி
தலைவனுக்குத் தலைவியினது பெயர் கேட்டலும் அதில் ஓர் விருப்பம் நிகழ்வதும் ஓர் அகப்பொருள் உண்மை. பெயர் வினாதல் என்ற துறையில் வரும் பாட்டுக்களைக் காண்க. அவ்வாறே பரவையார் என்ற பெயர் கேட்டலும் நம்பிகள் நாவலர் காவலராதலின் அப்பெயரிற் சென்ற விருப்பத்தை இவ்வாறு அறிவிக்கின்றார். ஒரு பாட்டில் எழுபரவை அடக்கிய நாவலர் என்று சேக்கிழார் பெருமானை மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
“முறையினொரு சிறுதூக்கின் எழுபரவை யும்புக
முடித்துற நிறுத்தா னிவன்
மொழியெங்கள் தம்பிரான் வல்லபம் உணர்ந்திலைகொல்“
என்பது அவரியற்றிய சேக்கிழார் பெருமான் பிள்ளைத் தமிழ். இதில் உள்ள பரவை எழு என்பதை ஆசிரியர் “என் ஆசை எழுபரவை“ என்று முடித்து இரட்டுற மொழிந்து காட்டியதும் ஒரு அழகாம்!. கடல்கள் ஏழென்பர்.
இவள் பேர் பரவை. இவளது பெண்மைக் குணங்களைப் பற்றிப் பேசின் இவர் திலோத்தமை முதலிய தேவப் பெண்களும் தொழக்கூடிய தெய்வம்போன்றார். முல்லையரும்புபோன்ற முறுவலுடையார். இலக்குமி விரும்பும் அழகும் பெற்றார். இவரது சாயலாகிய பரப்பிலே பட்ட எனது ஆசை எழுகடலினும் பெரிதாய் வளர்கின்றது என்பது திரண்ட பொருள்.
விரும்பும் நிதம்பம் பொருந்திய வளர்ச்சியிலே பரம்பின் அரசு போலும் என்று கூறுதலும் ஒன்று. ‘அல்குல் அரவுலகை வென்ற துணிவு கொண்டார்ப்ப’ என்று முன்னர்க் கூறியதும் (284) காண்க. அரவுலகு என்பது வடிவத்திற்கும், உடன்பட்டார் படும் விடத்தன்மைக்கும் ஆம். இது வெளிக் காணப்படா உறுப்பாயினும் பெண்மைக்குரிய அவயமாய் நோய்செய்தல் பொருந்திய சிறப்பு இயல்பு பற்றியே எடுத்துக் கூறப்படுவது தமிழ்க் கவியியல்களில் ஒன்று.
அணிதிகழும் – அணியிற்றிகழ் என ஐந்தனுருபு விரித்துரைக்கப்பட்டது. முத்து மூக்கணியிற் றொங்குவதன் அழகைச் சிவப்பிரகாசர்,
“தன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழி சார மன்னி யங்கது நிகரற வாழ்மனை வாய்தன் முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை யென்ன வெண்மணி மூக்கணி யொருத்திநின் றிட்டாள்“ |
என்று பிரபுலிங்கலீலையில், ‘’பல்லின் வெண்மைக்கும் வடிவிற்கும் நிகராக வில்லையே என்ற ஏக்கத்தால் மூக்கின் கீழே தூக்கில் தொங்கியது மூக்கணி என்ற அழகிய கற்பனையின் மூலம் அறிவித்திருத்தல் காண்க. அணி திகழும் – அழகு விளங்கும் என்றலுமாம்.
பரவையார் உருத்திர கணிகையராய் வீதி விடங்கப் பெருமானது திருவோலக்கத்தில் பாடல் ஆடல்களுக்கே உரியவர் என்பது பின்னர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 271-வது பாட்டில் காண்க. வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகராசர் தேவருலகில் அரசு வீற்றிருந்தார். இவர்பால் அங்கு ஆடற்குரிய பெண்கள் தேவமாதர்கள். அம்மையாரது சேடியராய் அருளின்வழி இங்கு அவதரித்து இவர்முன் ஆடல் புரியும் பரவையாரை அவர்கள் பரவுதல் இயல்பு என்பார் உம்பர் அவை பரவு ஐ (ஐ – தெய்வம்) என்றார். இங்குத் தேவர்கள் வந்து தொழக் காத்திருப்பதும் காண்க.
இவ்வாறு சீர்தோறும் புதிய புதிய பொருள்களைக் காட்டும் சேக்கிழாரின் கவிதைத் திறம் பயின்று போற்றுதற்கு உரியதாகும்.