Author: தேமொழி

  • பறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்?

    — தேமொழி

    என் வாசல் தேடியே வந்தது வசந்தம்
    வண்ண நறுமலர்கள் அழகாய்ப் பூத்தன
    எண்ணம் போல் எங்கும் வண்ணமயம்
    இளங்கதிர் கண்டு மனதிலோ இன்பமயம்
    தோட்டத்துக் கற்பாதையின் ஓரம்
    வரிசையாக நீலவண்ண மலர்ச்சரம்
    கொல்லைப்புறத்து மதில் சுவரோரம்
    மஞ்சள் வண்ணப் பூக்களின் கூட்டம்

    துணையாகவே வந்திறங்கின
    இணையான வெண்புறாக்கள்
    குதிகால் உயர்த்தி குதிநடைபோடும்
    நடைமேடை உடையலங்கார
    நங்கைகளின் நடைபோலவே
    முன்னும் பின்னும் நடந்தன
    கல்பாவிய பாதையில் ஒயிலுடன்
    கண்ணைக் கவர்ந்திடும் எழிலுடன்

    மலர்ந்திருந்த மலர்களை நோக்கின
    திரும்பி என்னை ஒருமுறை நோக்கின
    மலர்களை மறுமுறையும் நோக்கின
    தங்களுக்குள் பார்வை பரிமாறிக்கொண்டன
    புரியவில்லை அப்பறவைகளின் பார்வைமொழி
    பிடிக்கவில்லையோ இப்பூக்களின் நிறம்
    மதிக்கவில்லை அவை என் மனக்கவலையை
    தங்கவுமில்லை என் தோட்டத்தில் புறாக்கள்

    சிங்காரமாக மதில்மேல் வந்திறங்கியது
    சிட்டுக்குருவிகளின் கூட்டமொன்று
    சிட்டுகள் உற்சாகமாக மேலும் கீழும் பறந்தன
    மதிலோர மஞ்சள் பூக்களை ஆராய்ந்தன
    மதிலில் அமர்ந்து கலந்துரையாடின
    பிடிக்கவில்லையோ இப்பூக்களின் நிறம்
    மதிக்கவில்லை அவையும் என் மனக்கவலையை
    தங்கவுமில்லை என் தோட்டத்தில் சிட்டுகள்

    என்ன செய்யவேண்டும் நான் அடுத்து,
    பறவைகளுக்கு எந்த வண்ணப் பூக்கள் பிடிக்கும்
    பறவைகள் என் தோட்டம் தேடிவர
    அடுத்து நான் என்னதான் செய்யவேண்டும்
    குழப்பத்துடன் உலவினேன் நடைபாதையில்
    என் செல்லப் பூனைகள் நான்கும்
    என்காலை உராய்ந்தவாறே கவலையைப்
    பகிர்ந்துகொண்டு என்னுடன் நடைபோட்டன

    kittens-yellow-wood-violet-flowers

    Share
  • வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி (தொடர்ச்சி …)

    — தேமொழி.

    இந்தியாவிலிருந்து புரட்சி மனப்பான்மையுடன் இங்கிலாந்து திரும்பிய இளவரசி சோஃபியா துலிப் சிங்கிற்கு அவரது சகோதரிகளின் வாழ்க்கையே பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கத் தேவை இருப்பதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டியது. சோஃபியாவின் சகோதரி பம்பா மருத்துவம் படிக்க விரும்பி அமெரிக்க சிக்காகோ நகரின் மருத்துவக் கல்லூரியில் கல்வியைத் துவக்கினார். அவர் கல்வி முற்றுப்பெறுவதற்குள், பல்கலைக்கழகம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்யத் திறன் கொண்டவர்கள் அல்ல என்ற காரணத்தைக் கற்பித்து அவரை வெளியேற்றியது. மற்றொரு சகோதரி கேத்தரின் ஒரு பெண்ணை தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றார். அவருக்கும் சமுதாயத்தின் புறக்கணிப்பே பரிசாகக் கிடைத்தது. பெண்களின் வாழ்வும் எதிர்காலமும் பெண்களின் விருப்பப்படி இல்லாமல், மற்றவர்கள் முடிவால் நிர்ணயிக்கப் படுவதைக் கண்டு குமைந்தார் இளவரசி. இதற்கு அடிப்படைக் காரணம் பெண்களுக்கு அரசியலில், சட்ட வரைமுறைகளை உருவாக்குவதில் உரிமை மறுக்கப்படுவதன் காரணம் என்று தெளிவாகப் புரிந்து கொண்டார்.

    பெண்கள் ஒடுக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று இளவரசி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது சில பெண்ணியவாதிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவரது தோழிகளில் ஒருவரான ‘உனா டக்டேல்’ (Una Dugdale), என்பவர் ‘பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம்‘ (WSPU- The Women’s Social and Political Union) என்ற அமைப்பின் உறுப்பினர். அவர் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய ‘எம்மிலின் பான்க்ரஸ்ட்’ (Emmeline Pankhurst) என்பவரின் தோழியும் ஆவார். அவர் தான் சார்ந்துள்ள பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம் பற்றியும், பெண்களின் வாக்குரிமைக்காகப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருப்பதையும் கூறவே, இளவரசி தனது கொள்கைகளுடன் ஒத்திருந்த பெண்கள் சமூக அரசியல் ஒன்றியத்துடன் இணைந்து போராட முடிவெடுத்து உடனே தன்னை உறுப்பினராக்கிக் கொண்டார்.

    மறுஆண்டு வரவிருக்கும் தேர்தலில் வாக்குரிமை பெற்றுவிடவேண்டும் என்ற முடிவோடு ஒரு சட்டவரைவை (மசோதா/bill) பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தது. இதில் சற்றும் ஒப்புதல் இல்லாதிருந்த தலைமை அமைச்சர் ‘ஹெர்பர்ட் ஆஸ்கவித்’ (Prime Minister Herbert Henry Asquith)அதில் அக்கறை காட்டாது புறக்கணித்தார். மகளிர் போராட முடிவெடுத்தனர். ‘எம்மிலின் பான்க்ரஸ்ட்’ உட்பட 12 பெண்கள் தலைமையில், சற்றொப்ப 300 பெண்கள் ஒருங்கிணைந்து தலைமை அமைச்சரைச் சந்திக்க விரும்பி, மக்களாட்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற சதுக்கத்தை (Parliament Square, Westminster, London) நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். பாராளுமன்றத்திற்குப் போகும் அவர்களைத் தடை செய்ய அரசும் ஒரு பெரிய படையாகக் காவல்துறை வீரர்களை நிறுத்தி அரண் எழுப்பியது. அவர்களைப் பொருட்படுத்தாத பெண்கள் காவலர்களைத் தள்ளிக்கொண்டு முன்னேற முயல, காவலர்கள் பெண்களை பின்னோக்கித் தள்ள, பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது. பல பெண்கள் தடிகொண்டு தாக்கப் பட்டனர். சாலைகளில் தூக்கி வீசப்பட்டனர்.

    பல பெண்களுக்கு கை கால் முறிவு ஏற்பட்டது. காவலர்களில் சிலர், அடிபட்டு கைகளால் தவழ்ந்து ஊர்ந்து முன்னேறிய பெண் ஒருவரைக் கொத்தாக அள்ளி சாலையில் ஓங்கி ஓங்கி மோதித் தாக்கி மிதித்த வன்செயலைக் கண்ணுற்றுக் கொதித்துப் போனார் சோஃபியா. தனது பாதுகாப்பைக் கருதாது அந்தப் பெண்ணிற்கும் காவலர்களுக்கும் இடையில் குறுக்கேப் பாய்ந்தார். அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்ட புகழ்பெற்ற சோஃபியாவை அடையாளம் தெரிந்து கொண்ட காவலர்கள் அதிர்ச்சியில் பின்வாங்கி ஓடிவிட்டனர். அதற்குள் வன்முறையில் ஈடுபட்ட காவல் துறை ஊழியரின் அடையாள வில்லையில் அவரது எண் V700எனக் கவனித்துக் கொண்டார் சோஃபியா. மொத்தத்தில் அந்த இடம் ஒரு போர்க்களம் போல மாறியது, ஆயுதம் தாங்கிய காவல்துறையினர், ஆயுதமற்ற மங்கையரைத் தாக்கி வீழ்த்தினர். நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் போராட்டத்தின் முடிவில் கைது செய்யப்பட்டார்கள். இந்தப் போராட்டம் நடந்த நவம்பர் 18, 1910 – ஆவது நாள் இங்கிலாந்தின் வரலாற்றில் “கருப்பு வெள்ளிக்கிழமை” (November 18th, 1910 – ‘Black Friday’)என்ற பெயரைப் பெற்றது. நாளிதழ்கள் வெளியிட்ட காவல்துறையின் வன்முறைக் காட்சிகளின் படங்கள் மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

    வன்முறையில் ஈடுபட்ட காவல் துறை ஊழியரின் அடையாளக் குறிப்புடன் காவல்துறையைக் குற்றம் சாட்டும் கடிதமொன்றை காவல்துறை உயர் அதிகாரிக்கு சோஃபியா அனுப்பினார். இந்த நிகழ்வு ஏற்படுத்திய பரபரப்பில், அதனைக் கையாண்ட முறைகேட்டிற்காக இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் ‘வின்ஸ்டன் சர்ச்சில்’ (Winston Churchill, Home Secretary)கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பெண்களின் மீது குற்றம் சுமத்தாமல் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார். அவர்கள் மீது வழக்குத் தொடுத்தால் அனுதாப அலை அவர்கள் பக்கம் திரும்பி அரசுக்கு அதிக இழப்பு ஏற்படுமென்பது அரசுத் தரப்புக் கணிப்பு. சோஃபியாவின் குற்றச்சாட்டுக் கடிதமும் சர்ச்சிலின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர் தனது கைப்பட இதற்கு மறுமொழி எதுவும் அப்பெண்ணிற்கு அனுப்பவேண்டாம் என்ற குறிப்பினை எழுதிக் கையெழுத்திட்டார்.

    அரசகுடும்பத் தொடர்புடைய பெண்ணே அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்வது என்பது துரோகமாகக் கருதப்பட்டதுடன், சர்ச்சிலுக்கு சோஃபியாவின் நடவடிக்கைகள் ஏற்புடையதாகவும் இல்லை. தட்டிக் கழித்தால் அனைத்தும் அடங்கிவிடும் என்ற எண்ணம் கொண்டார் சர்ச்சில். ஆனால் அது அவர் செய்த தப்புக் கணக்கு என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. போராளியாக இந்தியாவில் இருந்து திரும்பியிருந்த சோஃபியாவும் இந்த புறக்கணிப்பையும், அவமதிப்பையும் ஏற்கத் தயாராகவும் இல்லை. வாக்குரிமைக்காகப் போராடிய பெண்கள் அனைவரும் இது போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டனர்.

    பல போராட்டங்களில் பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாலும், அரசு சோஃபியாவை புறக்கணித்து அடக்கி வாசித்தது. அவரைவிடத் தீவிரம் குறைந்த போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் பலர் கைது செய்யப்பட்டனர், சிறைக்குச் சென்றனர். உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு திணிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். ஆனால் புகழ் பெற்ற சோஃபியாவை சிறைக்கு அனுப்பினால் அது போராட்டம் செய்யும் மகளிருக்குத்தான் விளம்பரமாக அமைந்து மக்களின் ஆதரவு பெருகும் என்று அரசு அவரைப் பொருட்படுத்தவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சோஃபியாவும், அரசுக்கு முடிந்தவரைத் தொல்லை கொடுத்து கவன ஈர்ப்பு செய்யத் திட்டமிட்டார். வாக்குரிமைப் போராட்ட செய்தித்தாள்களை அவர் தான் குடியிருந்த அரசு மாளிகையின் வெளிப்புறமே விநியோகிக்கத் துவங்கினார். போராட்டம் தொடர்ந்தது. சோஃபியாவும் தனது தருணத்திற்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது, அது பிப்ரவரி 6, 1911. சோஃபியா குறிவைத்தது பெண்கள் வாக்குரிமைப் போராட்டத்தின் முதன்மை எதிரியான தலைமை அமைச்சர் ஹெர்பர்ட் ஆஸ்கவித் அவர்களை. போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்த நாள், இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் பேரன் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவிருந்த நாள்.

    எண் 10 டௌனிங் ஸ்ட்ரீட் (10 Downing Street) தலைமை அமைச்சர் அலுவலகம் முன்பு வழக்கம் போல சுற்றுலாப்பயணிகள், நாட்டுமக்கள் எனக் கூட்டம் நிரம்பியிருந்தது. அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் அமைச்சருக்குக் கையசைத்து வணக்கம் சொல்லக் கூட்டத்தினர் வழக்கம் போலக் காத்திருந்தனர். காவல்துறையினரின் கவனத்தைக் கவராத வண்ணம் நீண்ட ஆடை அணிந்திருந்த சோஃபியாவும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து நின்றார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உரைநிகழ்த்துவதில் பங்கேற்கத் தலைமை அமைச்சரும் அலுவலகத்தில் இருந்து வெளிவந்து காரில் பயணமானார். தனது உடையில் மறைத்து வைத்திருந்த “பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும்” (‘Votes for Women’) என்று எழுதப் பட்டிருந்த பதாகையை உருவி எடுத்துக் கொண்டு, அமைச்சரின் ஊர்தி முன் பாய்ந்து கூச்சலிட்டார் சோஃபியா. வழக்கம் போல காவல் துறையினர் வந்தனர், வழக்கம் போல அவரைக் கைது செய்து குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றனர், வழக்கம் போலவே அவரைக் குற்றம் சாட்டாது விடுவித்து விட்டனர். பேரரசியின் பேரன் பாராளுமன்ற உரை நிகழ்த்தும்நாளில், பேரரசியின் காட் டாட்டர் அரசுக்கு எதிராகப் போராடியதில் சிறை சென்றார் என்பது போன்ற செய்திவரவிடாமல், வதந்தி பரவாமல், நடந்த நிகழ்ச்சி மக்கள் கவனத்தைக் கவரவிடாமல் சோஃபியாவின் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தது அரசு. இந்தப் பெண்ணை அடக்கி வைக்க வழியே இல்லையா என்று அரச குடும்பத்திலும், அவர் வாழ்ந்த அரசு குடியிருப்புப் பகுதியிலும் முணுமுணுப்புகள் எழத் துவங்கின.

    இதை அத்தோடு விடுவதாக இல்லை சோஃபியாவும். தொடர்ந்து ‘பெண்களின் வரிகொடா இயக்கத்தில்’ (the Women’s Tax Resistance League)பங்கேற்றார். அவரிடம் இருக்கும் குதிரைகள், வண்டி, நாய்க்குட்டிகள், வேலைக்காரர்கள் வைத்திருப்பது போன்ற உரிமம் பெற வேண்டிய தகுதிகளுக்கு வரி கட்ட மறுத்தார். இருமுறை (மே 1911 மற்றும் டிசம்பர் 1913 ஆம் ஆண்டுகள்) நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டார். இரண்டாம் முறையாக, 1913 ஆம் ஆண்டு வரவழைக்கப்பட்ட பொழுது ஏன் வரி கட்டவில்லை என்ற நீதிபதியின் கேள்விக்கு….

    “நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கும் செல்வாக்கு எனக்கு இல்லாததால் முழுமனதுடன் வரி செலுத்த என்னால் இயலவில்லை. நான் அளிக்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. இது சற்றும் முறையன்று. இங்கிலாந்து என்று மகளிருக்கு வாக்குரிமை அளித்து, என்று எனது குடியுரிமைக்கு மதிப்பு கொடுக்கிறதோ அன்று நிச்சயமாக முழு விருப்பத்துடன் நான் நாட்டின் பராமரிப்பிற்காக வரி அளிப்பேன். நாட்டின் நலத்தில் எனக்கு சார்பாண்மை தகுதி இல்லாதபொழுது, நாட்டிற்கு வரி செலுத்தும் தகுதியை மட்டும் நான் பெற்றுள்ளதாக ஏன் கருதப்படவேண்டும்?”

    என்று பதிலளித்தார். பொதுவாக வரி கொடாமல் இருப்பது சட்டப்படி சிறைக்குச் செல்ல வேண்டிய ஒரு குற்றம். அதை எதிர்பார்த்துத்தான் சோஃபியா இந்த நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் நீதிபதி ஒரு குறைந்த அளவு அபராதம் விதித்து அதைக் கட்டினால் போதும் எனத் தீர்ப்பளித்து அனுப்பினார். அபராதமும் கட்ட மறுத்தார் சோஃபியா. அமீனாக்கள் அவரது மாளிகையில் நுழைந்து அபராதத்தைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்த பொழுது சோஃபியா அமைதி காத்தார். வேறுவழியின்றி அவர்கள் அபராதத் தொகைக்கு ஈடாக அவரது வைரம், முத்து பதித்த அணிகலன்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். சோஃபியாவும் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை, மதிப்பு மிக்க தனது பரம்பரைச் சொத்துகளே போனாலும் அவற்றையும் இழக்கத் தயாராகவே அவர் இருந்தார். அவரது அணிகலன்கள் ஏலத்தில் விடப்பட்டு அபராதத்திற்கானத் தொகையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சோஃபியாவின் அணிகலன்களை அவரது தோழி ‘ஜோப்லிங் ரோவ்’ (Jopling Rowe) என்பவரே ஏலத்தில் எடுத்து சோஃபியாவிடம் திருப்பிக் கொடுத்தார். சோஃபியாவின் செயல்கள் பெண்கள் போராட்டத்திற்கு நல்ல கவன ஈர்ப்பாக அமைந்ததில் சோஃபியாவிற்கும், போராட்டக் குழுவினருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

    தொடர்ந்து மறு ஆண்டே 1914 – இல் முதல் உலகப் போர் துவங்கியது. மகளிர் அணியினர் நாட்டுத் தொண்டிற்கு முன்னுரிமை அளித்து செயல்படத் தொடங்கினர். சோஃபியா தாதியர் பயிற்சி பெற்று படையில் இருந்த காயமடைந்த இந்திய வீரர்களுக்குப் பணிபுரிந்தார். பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங்கின் பேத்தியே தங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்த பொழுது இந்திய வீரர்கள் மிகவும் நெகிழ்ந்து போயினர். இந்தியப்படையில் இருந்த பஞ்சாபி வீரர்களுக்கு கொடிநாள் வணக்கம் செய்வதற்கும் ஒத்துழைப்புக் கொடுத்தார் சோஃபியா. போர்க்காலத்தில் மகளிர் அனைத்துத் துறையிலும் ஈடுபட்டு சிறப்பாகப் பங்காற்றியது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநிலையிலும் பெரிய மாறுதலைக் கொண்டுவந்தது. நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் அளித்த பங்கும் உணரப்பட்டது. அதன் விளைவாக, வாக்குரிமை கேட்டுப் போராடிய பெண்களின் போராட்டம் இரு கட்டமாக வெற்றி பெற்றது.

    முதலில் 1918 ஆம் ஆண்டு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, சொத்துரிமை உள்ள பெண்களுக்கு, படித்த பட்டதாரிப் பெண்களுக்கு, என்றெல்லாம் கட்டுப்பாட்டுடன் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது; மகளிர் வாக்குரிமை சட்டத்தின் சட்டவரையறைக்கு 385 வாக்குகள் ஆதரவாகவும், வெறும் 55 வாக்குகள் எதிர்ப்பு என்ற நிலையில் அது மாபெரும் வெற்றி அடைந்தது.

    பின்னர் பத்தாண்டுகள் கழித்து 1928 ஆம் ஆண்டு மகளிர் வாக்குரிமைப் போராட்டத்தைத் துவக்கிய எம்மிலின் பான்க்ரஸ்ட் மரணமடைந்துவிட, அவருக்கு அடுத்தபடியாக சோஃபியா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த ஆண்டே, எம்மிலின் பான்க்ரஸ்ட் மறைந்த இரண்டே வாரங்களில், சோஃபியா தலைமைப் பொறுப்பை ஏற்ற சில நாட்களில், மகளிர் வாக்குரிமையின் அடுத்த கட்டமாக பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டு, 21 வயது உள்ள அனைத்து மகளிருக்குமே வாக்குரிமை உண்டு என்று சட்டம் வரையறுக்கப் பட்டது.

    மகளிர் வாக்குரிமை முன்னோடிகள் தங்கள் போராட்ட நினைவுகளைப் பதிவு செய்யும் முயற்சியை முன்னெடுத்த பொழுது சோஃபியாவும் அதில் பங்கேற்றார். “பெண்களில் யார் எவர்?” (‘Women’s Who’s Who’) என்ற தொகுப்பின் 1934 ஆண்டு வெளியான பதிப்பில், இடம் பெற்ற சோஃபியா, தங்கள் ஆர்வம் பற்றியக் குறிப்பைத் தரவேண்டிய இடத்தில், ‘பெண்கள் முன்னேற்றத்தின் நலவிரும்பி’ (interest – “The advancement of women”) என்று மட்டுமே சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

    sophia (2)நூறாண்டுகளுக்குப் பின்னர், இன்றைய நிலையில் இந்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டங்களை வரையறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில், அதிகாரம் பெற்ற நிலையில் 200 மகளிர் பங்கேற்றாலும், ஆரம்ப நாட்களில் இருந்த பெண்களுக்கான அடக்குரிமையை எதிர்த்துப் போராடி வாக்குரிமை பெற்றுத் தந்த மகளிர்களில் இந்திய வம்சாவளியின் வீரப்பெண் ஒருவரும் இன்றியமையாதப் பங்கேற்றார் என்பது இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு பெருமை தரும் ஒரு செய்தி.

    மன்னர் துலிப் சிங்கின் வாரிசுகள் அனைவருமே சட்டப்பூர்வ வாரிசுகள் இன்றியே இறந்தனர். சோஃபியாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது பணியாளர் ஒருவரின் மகளின் காட்மதராக கௌரவிக்கப்பட்டார். அந்தப் பெண் வளர்ந்த பொழுது, அவரிடம் எப்பொழுதும் தேர்தலில் வாக்களிப்பேன் என்று உறுதிமொழி கொடு என்று சத்தியம் செய்யச் சொல்லி பெண்களுக்கான வாக்குரிமை சுதந்திரத்திற்குத் தான் கொடுக்கும் முக்கியத்தை அவருக்கு உணர்த்தினார். தனது 72 ஆவது வயதில் ஆகஸ்ட் 22, 1948 – இல் அவர் இறந்த பிறகு, அவர் விருப்பப்படி, சீக்கியகுல வழக்கப்படி அவருடலுக்கு எரியூட்டப்பட்டு, சாம்பல் அவரது மூதாதையரின் மண்ணான பஞ்சாபில் தூவப்பட்டது. தனது பாட்டனார் பஞ்சாப் சிங்கம் மன்னர் ரஞ்சித் சிங் போலவே சமயச்சார்பற்ற கொள்கையுடன் இறுதிவரை வாழ்ந்த சோஃபியா, தனது சொத்துக்களை இந்து, முஸ்லிம், சீக்கியம் எனப் பல மதங்களைச் சார்ந்து இயங்கிய பெண்கள் பள்ளிகளுக்காக, பெண்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படவேண்டும் என்று எழுதி வைத்தார்.

    பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்த போராட்டமான வரலாற்றுப் பின்னணியும், அதற்காக அல்லலுற்ற பெண்கள் பலரின் கதைகளும் காலப்போக்கில் மறக்கப்பட்டு இக்காலப் பெண்களுக்கு தங்களுக்குரிய வாக்குரிமையின் அருமை தெரியாமல் இருக்கிறது. பெண்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால், சரியான வழியில் பெண்கள் தங்கள் வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்தி, தங்கள் குரலை சட்டவறையைகளை உருவாக்கும் மன்றங்களில் முன்வைக்கும் தகுதியுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    படம் உதவி: விக்கிப்பீடியாவும், பி பி சியும் , பிற இணைய தளங்களும்
    ____________________________________________________

    Read more @:
    Sophia: Princess, Suffragette, Revolutionary, January 13, 2015, by Anita Anand
    http://www.amazon.com/Sophia-Suffragette-Revolutionary-Anita-Anand/dp/1632860813

    Princess Sophia Duleep Singh: A champion in the cause of women’s rights
    http://historysheroes.e2bn.org/hero/3521

    Sophia Duleep Singh
    https://en.wikipedia.org/wiki/Sophia_Duleep_Singh

    Sophia: Suffragette Princess- Princess Sophia Duleep Singh
    BBC video at – https://youtu.be/dAH0MLNfK1U
    ____________________________________________________

    “I am unable conscientiously to pay money to the state, as I am not allowed to exercise any control over its expenditure; neither am I allowed any voice in the choosing of Members of Parliament, whose salaries I have to help to pay. This is very unjust. When the women of England are enfranchised and the state acknowledges me as a citizen I shall, of course, pay my share willingly towards its upkeep. If I am not a fit person for the purpose of representation, why should I be a fit person for taxation?”

    Ref:
    Asian Suffragettes, British Protest at Home and Abroad
    http://britishprotest.com/tag/feminist-history/
    ____________________________________________________

    Share
  • வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி

    — தேமொழி.

    “நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கும் செல்வாக்கு எனக்கு இல்லாததால் முழுமனதுடன் வரி செலுத்த என்னால் இயலவில்லை. நான் அளிக்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. இது சற்றும் முறையன்று. இங்கிலாந்து என்று மகளிருக்கு வாக்குரிமை அளித்து, என்று எனது குடியுரிமைக்கு மதிப்பு கொடுக்கிறதோ அன்று நிச்சயமாக முழு விருப்பத்துடன் நான் நாட்டின் பராமரிப்பிற்காக வரி அளிப்பேன். நாட்டின் நலத்தில் எனக்கு சார்பாண்மை தகுதி இல்லாதபொழுது, நாட்டிற்கு வரி செலுத்தும் தகுதியை மட்டும் நான் பெற்றுள்ளதாக ஏன் கருதப்படவேண்டும்?”

    நூறாண்டுகளுக்கு முன்னர் …  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இங்கிலாந்தில் பெண்கள் வாக்குரிமை கேட்டு உரிமைக்குரல் எழுப்பிப் போராடிய காலகட்டத்தில், அரசுக்கு வரி கொடுக்க மறுத்ததற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியவர் இளவரசி சோஃபியா துலிப் சிங் (Princess Sophia Duleep Singh).

    சர்பாண்மையற்ற வரிவிதித்தல் கொடுங்கோன்மை (taxation without representation is tyranny) என்று உரிமைக்குக் குரல் கொடுத்த இந்தப் பெண்ணியவாதி இளவரசி சோஃபியா துலிப் சிங்கின் பின்னணி இந்தியாவுடன் தொடர்புகொண்டது என்பது மேலும் வியப்பு தருவது. ஆம், இவர் சீக்கியப் பேரரசை உருவாக்கியவரும், பஞ்சாப் சிங்கம் என்ற சிறப்பு பெற்றவருமான மன்னர் ரஞ்சித் சிங்கின் (Maharaja Ranjit Singh, the Lion of Punjab)வம்சாவளி. சோஃபியா மன்னரின் மகன்வழிப் பேத்தி.

    ஆகஸ்ட் 8, 1876 இல் இளவரசி சோஃபியா துலிப் சிங் (Princess Sophia Alexdrowna Duleep Singh), அரசர் துலிப் சிங் மற்றும் அரசி பம்பா (Maharaja Duleep Singh and Maharani Bamba Muller) ஆகியோரின் ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். தாய்வழிப் பாட்டியின் நினைவாக சோஃபியா என்று பெயர் சூட்டப்பட்டார். அப்பொழுது இங்கிலாந்து பேரரசி விக்டோரியா இவரது காட் மதர் (godmother) ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சோஃபியாவும், அவரது சகோதரர்களான இளவரசர்கள் விக்டர், ஃபிரெடெரிக், ஆல்பெர்ட் எட்வர்ட் ஆகியோரும், சகோதரிகளான இளவரசிகள் பம்பா, கேதரின் ஆகியோரும், இங்கிலாந்தின் நார்ஃபோல்க் பகுதியில் எல்வெடன் (Elveden in Norfolk) மாளிகையில் அரசகுடும்பம் பெறும் அனைத்து மரியாதைகளுடனும், வசதிகளுடனும் இங்கிலாந்தின் பிரபுக்கள் போன்ற தகுதியில் கவலையற்ற வாழ்க்கையையே வாழ்ந்தனர். இளவரசி சோஃபியா துலிப் சிங்கும், அவரது தந்தை துலிப் சிங்கும் பேரரசி விக்டோரியாவின் அன்பிற்குரியவர்கள், அத்துடன் இளவரசி சோஃபியா துலிப் சிங் இங்கிலாந்துப் பேரரசியின் ‘காட் டாட்டர்’ (goddaughter)என்ற சிறப்பும் பெற்றவர் என்பது அவர்களது மேல்குடித்தகுதிகளை விளக்கும் அடையாளங்கள்.

    அரசர் துலிப் சிங் இந்திய சீக்கியப் பேரரசின் இறுதி மன்னர்

    சோஃபியாவின் தந்தை அரசர் துலிப் சிங் இந்தியாவின் சீக்கியப் பேரரசின் இறுதி மன்னர். சீக்கியப் பேரரசை உருவாக்கிய, “பஞ்சாப் சிங்கம்” என்று புகழப்பட்ட பேரரசர் ரஞ்சித் சிங்கின் எஞ்சிய கடைசி மரபு வழித் தோன்றல் அரசர் துலிப் சிங். பஞ்சாபின் சீக்கிய சிற்றரசுகளை ஒருங்கிணைத்து, ஆப்கானில் இருந்து படையெடுத்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஆப்கானியர்களை விரட்டியடிக்கும் வகையில் அதனை ஒரு பேரரசாக விரிவுபடுத்திச் சிறப்புற ஆட்சி செய்தவர் பேரரசர் ரஞ்சித் சிங். பேரரசர் ரஞ்சித் சிங் சீக்கிய குல மரபுகள் எனப் போற்றப்படும் நீதிக்கும் நேர்மைக்காகவும் போராடுவது, வலுவற்றவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது போன்ற பண்புகளின் இருப்பிடமாக இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.

    மன்னர் இறந்த பிறகு இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனம் முன்னெடுத்த இரண்டு ஆங்கிலோ- சீக்கியப் போர்களின் முடிவில் சீக்கியப் பேரரசு ஆங்கில அரசின் பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட மன்னர் துலிப் சிங்கிற்கு அப்பொழுது வயது பதினொன்று. துலிப் சிங்கிற்கு ஆதரவாகப் புரட்சிகள் தோன்றி, சீக்கியப் பேரரசு மீண்டும் துலிப் சிங்கினால் தழைத்து விடாது இருக்கத் திட்டமிட்ட ஆங்கில அரசு அவரை இங்கிலாந்திற்கு நாடுகடத்தியது. அவரது தோற்றத்தால் கவரப்பட்ட இங்கிலாந்து பேரரசியின் அன்பைப் பெற்ற துலிப் சிங்கிற்கு அரசு மானியமும் அரச விருந்தினர் தகுதியில் தக்க மரியாதைகளும் கிடைத்தன.

    காலப்போக்கில் இங்கிலாந்து அரசினால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த துலிப் சிங், தனது உரிமையை நிலைநாட்ட மற்ற ஐரோப்பிய அரசுகளிடம் உதவியை எதிர்பார்த்தார். அவரது முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்தியாவிற்குத் திரும்ப அவர் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் இங்கிலாந்து அரசால் வழியில் தடை செய்யப்பட்டு, அவர் இங்கிலாந்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப் பட்டார். இத்தோல்வியை ஏற்றுக் கொள்ள இயலாத அவர் தனது மாளிகை, குடும்பம், இங்கிலாந்து வாழ்க்கை என அனைத்தையுமே புறக்கணித்துவிட்டு ஃபிரான்ஸ் நாட்டில் தங்கிவிட்டார்.

    அவரால் கைவிடப்பட்ட மனைவி இங்கிலாந்திற்குத் திரும்பிய பிறகு துயரம் தாளாமல் மதுவுக்கு அடிமையாகி தனது உடல் நலத்தை அழித்துக் கொள்ளத் துவங்கினார். சோஃபியாவிற்கு அவரது 11 ஆவது வயதில் டைஃபாய்ட் (typhoid) காய்ச்சல் வந்த பொழுது இளவரசியின் படுக்கை அருகே இரவும் முழுவதும் பணிவிடை செய்த அரசியாருக்கும் நோய் தொற்றி கோமாவில் விழுந்து இறந்தார். அரசகுல வாரிசுகளை துலிப் சிங்கின் ஊழியரும் அவரது மனைவியாரும் வளர்ப்புப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டனர்.

    sophia (1)
    இளவரசி சோஃபியா துலிப் சிங்

    மனைவி இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மற்றொரு பெண்ணை மணம் முடித்து அவர் மூலம் மேலும் இரு பெண்களுக்குத் தந்தையான துலிப் சிங் பாரீசிலேயே வசித்தார். ஆனால், சோஃபியாவின் தாய் இறந்த சில ஆண்டுகளில், சோஃபியாவிற்கு 17 வயதாகும்பொழுது அரசர் துலிப் சிங் தனது 55 ஆவது வயதில், பாரிஸ் விடுதி ஒன்றில் உடல்நலக் குறைவால், துயரத்துடன், தனியே துணையின்றி இறந்தார். பெற்றோரை இழந்த பிறகு அவர்கள் வாழ்ந்த மாளிகையை விற்று கடனில் இருந்து மீண்ட சகோதர சகோதரிகள் மிச்சமிருந்த சொத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். பெற்றோரை இழந்த மூன்று சகோதரிகளையும் பேரரசி விக்டோரியா தனது பொறுப்பில் ஏற்று அவர்கள் வாழ லண்டனில் அரசகுடும்பத்தின் மாளிகைகளில் ஒன்றை வாடகையின்றி வழங்கி, தனது காட் டாட்டர் சோஃபியா வசதியுடன் வாழ அரச உதவித் தொகையும் அளித்தார்.

    சகோதரிகளுடன் லண்டன் வாழ்க்கையில் இளவரசி சோஃபியா (கையில் விசிறியுடன் அமர்ந்திருப்பவர்)

    பரபரப்பான லண்டன் நகர வாழ்வை மேற்கொண்டு, செல்வச் சிறப்புடன், அரசகுடும்ப மரியாதையுடன், இளமையும் அழகும் நிரம்பி, நாகரிக மங்கையாக இருந்த சோஃபியா புகழ் பெற்றவராகவும் இருந்தார். விதம் விதமாக உடையணிந்து, கேளிக்கை விழாக்களில் பொழுதைக் கழித்து, பத்திரிக்கைகளில் புகைப்படங்களுடன் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். மிதி வண்டி ஓட்டுவது, செல்ல வளர்ப்பு நாய்கள் வளர்த்து போட்டிகளில் பங்குபெறச் செய்து வெற்றி பெறுவது என்று வாழ்ந்த அவரது நடவடிக்கைகளில் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர், பத்திரிக்கைகளும் அவர்களது ஆர்வத்திற்குத் தீனி போடும் வண்ணம் சோஃபியா பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. இவ்வாறு உல்லாசமாக வாழ்ந்த இளவரசியின் வாழ்வும் அவ்வாறே தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால், அவர் தனது வாழ்வின் நோக்கம் வேறு என்று முடிவு செய்து, தனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளக் காரணம் அவர் இந்தியாவிற்குத் தனது சகோதரி பம்பாவுடன் மேற்கொண்ட பயணம். இப்பயணம் தந்த மாறுதல்களைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார் சோஃபியா, அது இங்கிலாந்து நூலகத்தில் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.

    சோஃபியா
    இளவரசி சோஃபியா துலிப் சிங்கின் நாட்குறிப்பு

    தனது சகோதரி பம்பாவின் விருப்பத்திற்காக 1907 ஆண்டு முதன்முறையாகத் தனது முப்பதாவது வயதில் இந்தியாவிற்குப் பயணமானார் சோஃபியா. லாகூர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கும், பஞ்சாபின் பல பகுதிகளிலும் பயணம் செய்த சகோதரிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்கொண்டனர். தங்களது முன்னாள் பேரரசர் ரஞ்சித் சிங்கின் பேத்திகள் என்று அன்பு செலுத்தினர். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலேவையும், மற்றொரு புரட்சி வீரர் லாலா லஜபதி ராயையும் சந்தித்தனர். தனது பாட்டனாரின் அருமையையும், தனது பாரம்பரியத்தின் பெருமையையும் உணரத் துவங்கினார் இளவரசி சோஃபியா. நன்முறையில் ஆண்ட ஒரு மன்னரின் மறைவிற்குப் பின்னர் ஆங்கில அரசின் தன்னலப்போக்கினால், பஞ்சாப் பகுதியில் விவசாயம் நலிவடைந்து மக்கள் ஏழ்மையில் இருப்பதையும், இங்கிலாந்து நகர வாழ்க்கையுடன் ஒப்பிட்ட பொழுது இங்கிலாந்தில் வசதியுடன் வாழ்வோருக்கும், இந்தியாவின் சுதந்திர வாழ்விற்காகப் போராடி இன்னலுறுவோருக்கும் உள்ள வேறுபாடு இளவரசியின் வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது.

    லாலா லஜபதிராய்
    லாலா லஜபதிராய்

    சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த லாலா லஜபதிராயின் கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரியரை கூட்டத்தினருக்கு ‘பஞ்சாப் சிங்கத்தின் பேத்திகளைப் பாருங்கள்’ என்று இளவரசிகளை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கவேண்டியத் தேவையை வலியுறுத்திய பொழுது கூட்டத்தினர் அவரது உரையால் ஈர்க்கப்பட்டது போல இளவரசியும் அவரது உரையால் ஈர்க்கப்பட்டார். மக்களின் நல்வாழ்விற்காகப் போராடிய தனது பரம்பரையின் சிறப்பை உணர்ந்தார். மக்களிடம் இளவரசிகள் பெற்ற வரவேற்பு ஆங்கில அரசை கலங்கச் செய்தது. எதற்காக துலிப் சிங்கை இளவயதிலேயே இந்தியத் தொடர்புகளைத் துண்டித்து, தாயையும் சந்திக்க அனுமதிக்காது, இங்கிலாந்திற்கு நாடுகடத்தி புரட்சி ஏற்படுவதைத் தவிர்த்தார்களோ, அது இப்பொழுது மன்னர் ரஞ்சித் சிங்கின் வாரிசுகளால் உருவாகிவிடும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து அவர்கள் இளவரசிகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதை விரும்பினார்கள்.

    இங்கிலாந்திற்குத் திரும்பினார் இளவரசி சோஃபியா. ஆனால், முன்னர் இருந்த உல்லாச வாழ்க்கையை வாழவிரும்பிய லண்டன் நகர நாகரிக மங்கையாக அல்ல, மாறாக, தனது வாழ்க்கைக்குப் பொருள் தேடிய ஒருவராக, ஒரு போராளியாக. தனது முப்பதாவது அகவையில், மூதாதையரின் போர்க்குணப் பெருமை உணர்ந்து, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வலிமையற்றவர்களுக்கும் குரல் கொடுத்த பண்பினை உணர்ந்த இளவரசி சோஃபியா, இங்கிலாந்து திரும்பிய பொழுது அநீதியைத் தட்டிக் கேட்கும் ஒரு புரட்சிச் செல்வியாக உருமாறியிருந்தார்.

    [ … தொடரும்]

    படம் உதவி: விக்கிப்பீடியாவும், பி பி சியும்
    ____________________________________________________

    “I am unable conscientiously to pay money to the state, as I am not allowed to exercise any control over its expenditure; neither am I allowed any voice in the choosing of Members of Parliament, whose salaries I have to help to pay. This is very unjust. When the women of England are enfranchised and the state acknowledges me as a citizen I shall, of course, pay my share willingly towards its upkeep. If I am not a fit person for the purpose of representation, why should I be a fit person for taxation?”

    Ref:
    Asian Suffragettes, British Protest at Home and Abroad
    http://britishprotest.com/tag/feminist-history/
    ____________________________________________________

    Share
  • பெண்ணின் பணி – கவிதை

    –தேமொழி

     

    பெண்ணின் பணி

    Maya-Angelou-241x300

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    என் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும்
    துணியின் கிழிசல்களைத் தைக்க வேண்டும்
    தரையை மெழுகி சுத்தமாக்க வேண்டும்
    சமைப்பதற்காகக் கடையில் வாங்க வேண்டும்
    பிறகு கோழியை வறுக்க வேண்டும்
    குழந்தைக்குத் துவட்டிவிட வேண்டும்
    விருந்தினருக்கு உணவளிக்க வேண்டும்
    தோட்டத்தில் களையெடுக்க வேண்டும்
    சட்டைகளுக்கு பெட்டிபோட்டு மடிக்க வேண்டும்
    சிறுவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்
    தகர உணவுப்பெட்டி மூடியைத் திறக்க வேண்டும்
    வீட்டை கூட்டிப் பெருக்க வேண்டும்
    நோயாளியைக் கவனிக்க வேண்டும்
    காட்டில் பருத்தி எடுக்க வேண்டும்

    சூரியனே, என் மீது உன் ஒளியை வீசிவிடு
    மழையே, என்மீது பொழிந்துவிடு
    மென்மையாக பனித்துளியாகத் தூறிவிடு
    மீண்டும் என்தலையைக் குளிர்வித்துவிடு

    புயலே, உனது கடுங் காற்றினால்
    என்னை இங்கிருந்து பறக்கவிடு
    எனக்கு ஓய்வு கிடைக்கும் வரை
    வானில் மெல்ல என்னை மிதக்கவிடு

    பனியே மென்மையாகப் பொழிந்துவிடு
    வெள்ளைப்பனியால் என்னை மூடிவிடு
    பனித்துகள் தரும் குளிர் முத்தங்களால்
    இன்றிரவு அமைதியாக என்னை உறங்கவிடு

    சூரியனே, மழையே, பரந்த வானமே
    மலையே, கடலே, இலையே, பாறையே
    தாரகைகள் ஒளிரட்டும், நிலவொளி வீசட்டும்
    நீங்கள் யாவரும்தான் எனக்குரியவர்கள்
    என்று நான் சொல்லிக் கொள்ள முடியும்

    _________________________________

    Woman Work – Poem by Maya Angelou
    _________________________________

    I’ve got the children to tend
    The clothes to mend
    The floor to mop
    The food to shop
    Then the chicken to fry
    The baby to dry
    I got company to feed
    The garden to weed
    I’ve got shirts to press
    The tots to dress
    The can to be cut
    I gotta clean up this hut
    Then see about the sick
    And the cotton to pick.

    Shine on me, sunshine
    Rain on me, rain
    Fall softly, dewdrops
    And cool my brow again.

    Storm, blow me from here
    With your fiercest wind
    Let me float across the sky
    ‘Til I can rest again.

    Fall gently, snowflakes
    Cover me with white
    Cold icy kisses and
    Let me rest tonight.

    Sun, rain, curving sky
    Mountain, oceans, leaf and stone
    Star shine, moon glow
    You’re all that I can call my own.

    _________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்

    மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
    பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் கென்கொலோ?
    மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர்
    கையுண்டும் கூறுவர் மெய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மொய்கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
    பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?-
    மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
    கை உண்டும், கூறுவர் மெய்.

    பொருள் விளக்கம்:
    ஒருவருக்கொருவர் கொண்ட பகையினால் தோன்றிய போரில், எதிரி வழங்கும் பொய்யான உறுதிமொழியில் மயங்கி, பொருளாசை கொண்டு எதிரியுடன் இணைந்து இரண்டகம் செய்பவரை என்னவென்பதோ? அழகிய மைதீட்டிய கண்களையும் அணிகலன்களையும் கொண்டவரே; சான்றோர் (எனப்படுபவர் தனது) வாழ்வாதாரமே அடுத்தவரை நம்பி இருந்தாலும்கூட அவருக்காகச் சார்புநிலையினை மேற்கொள்ளாது நடுநிலை வழுவாது உண்மை மட்டுமே உரைப்பர். ‘அறைபோய்த் திரிபவர்’ என்பது கையூட்டு பெற்று எதிரணியில் சேர்ந்து தீமைக்கு உடன் போவாரைக் குறிக்கிறது.

    பழமொழி சொல்லும் பாடம்: சான்றோர் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையிலும் அவர்களுக்காகச் சார்புநிலை கொள்ளாது, நடுநிலை தவறாது மெய்யுரைப்பர். நடுநிலை மாறாத சான்றோர் சிறப்பினைக் கூறுமிடத்து வள்ளுவர்,

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 115)

    ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையில் இயல்பாக இருப்பினும், எந்த நிலையிலும் மனதில் நடுநிலை மாறாது செயல்படுவது சான்றோருக்கு அழகு என்கிறார். மேலும்,

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

    எப்பக்கமும் சாராது, சமநிலை கொண்ட துலாக்கோல் போல நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகு என்றும் அறிவுறுத்துகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: ஈடில்லதற்குப் பாடில்லை

     

    மாட மழிந்தக்கான் மற்று மெடுப்பதோர்
    கூட மரத்திற்குத் துப்பாகு மஃதேபோற்
    பீடில்லாக் கண்ணும் பெரியார் பெருந்தகைய
    ரீடில்லதற் கில்லைப் பாடு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
    கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்; அஃதேபோல்,
    பீடு இல்லாக்கண்ணும், பெரியார் பெருந் தகையர்;
    ஈடு இல்லதற்கு இல்லை, பாடு.

    பொருள் விளக்கம்:
    உயர்ந்த மாடங்களைக் கொண்ட ஒரு மாளிகை சிதைந்துவிட்டால், (இடிபாடுகளைக் கொண்டு) மற்றொரு வீட்டின் கூடம் கட்டுவதற்கு அதன் மரங்கள் உதவும். அதுபோலவே, (பெருமையுடன் வாழ உதவும்) செல்வம் இல்லாது அழிந்து போனாலும், பண்பிற் சிறந்த பெரியோர் பெருந்தன்மை கொண்டவராகவே வாழ்வார்கள். (வறுமையிலும் நற்பண்புகளைக் கடைபிடிக்கும்) இணையற்ற அவர்களது பெருமையை அவர்கள் துன்பத்தில் படும்பாடு வெளிக்கொணரும்.

    பழமொழி சொல்லும் பாடம்: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, மேன்மை குணம் பொருந்தியவர்கள் துன்பம் வந்த போதும் தம் உயர் குணத்திலிருந்தும் மாறுபடாதவர்கள் என்பதனை விளக்குகிறது இப்பழமொழிப் பாடல். உளி தாங்கும் கற்கள் சிலையாக உருவாகும் சிறப்பைப் பெறுவது போல, துன்பத்திலும் செம்மையாக வாழும் அவர்களது நற்பண்பு அவர்களது பெருமையை வெளிக்கொணர உதவுகிறது. எந்த இடரிலும் தன்மை மாறாத சான்றோர்களின் சிறப்பைக் கூற விரும்பிய வள்ளுவர்,

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
    ஆழி எனப்படு வார். (குறள்: 989)

    சான்றாண்மையின் கடலாக விளங்குபவர்கள், அழிவு தரக்கூடிய ஊழிக்காலத்தின் பொழுது கூடத் தனது உயர் குணங்களில் இருந்து பிறழாது, பண்பு மாறாதவர்களாகவே இருப்பார்கள் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்

     

    தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
    வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல்
    நோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும்
    நாயைப் புலியா மெனல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
    வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
    நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
    நாயைப் புலியாம் எனல்.

    பொருள் விளக்கம்:
    (காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற மனநிலையைக் கொண்டவர்களான) பெற்ற தாயும் தந்தையும் கூட பெருமையுடன் கூறவழியற்ற பண்புகளின் இருப்பிடமானவர்,
    தானே தன்னைப் புகழ்ந்து பொய்யுரைத்துப் பேசிக் கொண்டிருப்பார் என்றால், பிறரும் அவர் மொழியினை நம்பி அவர்மேல் புகழுரைகளைக் கூறிக்கொண்டிருப்பது எந்தத் துன்பத்தையும் விளைவிக்காது. ஆயினும், அது அடுப்பின் அருகில் சோம்பலுடன் முடங்கிக்கிடக்கும் நாயொன்றினை வீரம் நிறைந்த புலி எனப் பாராட்டும் (நகைப்பிற்குரிய செயலாக அமைந்துவிடும்).

    பழமொழி சொல்லும் பாடம்: தற்புகழ்ச்சி கொண்டவரை அவர் மகிழும் வண்ணம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பது முறையற்ற புகழ்ச்சியின் வகைப்படும். சிறியோர்களது  பண்பு என்றும் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பது என்பதைச் சுட்டுகிறார் வள்ளுவர்,

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து. (குறள்: 978)

    செருக்கின்றி யாவருடனும் பணிவன்புடன் பழகுவது பண்பில் சிறந்த பெரியோர்களின் குணம், சிறுமைக்குணம் படைத்த பண்பற்றோரே ஆணவத்துடன் தற்புகழ்ச்சியாகத் தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.

    அத்தகையோரே விரும்பிக் கேட்டாலும் அவர்களுடன் பயனற்றவற்றைப் பேசத் தேவையில்லை எனக் குறிப்பிடும் வள்ளுவர்,

    வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல். (குறள்: 697)

    ஒருவரிடம் உரையாடும்பொழுது பயன்தருபவற்றை மட்டுமே பேசவேண்டும். அவரே விரும்பிக் கேட்டாலும் பயன்தராதா உரைகளைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்

     

    எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக்
    கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்
    நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
    மறைந்துதியானை பாய்ச்சி விடல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை,
    கல்லாத் துணையார் தாம் கைப்பித்தல் சொல்லின்,-
    நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
    மறைந்து, யானை பாய்ச்சிவிடல்.

    பொருள் விளக்கம்:
    எல்லா வகைத் திறனும் கொண்ட மேன்மை பொருந்திய அறிஞர்களை, கல்லாமையைத் துணையாகக் கொண்ட கற்றறியாதோர், தங்கள் அறிவின்மையில் மூழ்கி மறைந்து கொண்டு, வெறுப்பேற்றும் சொற்களை உமிழ்வது, அழகு நிறைந்த ஒலிக்கும் வளையல்களை அணிந்தவரே; அத்தகைய செயல், எருக்கம் புதரின் பின் மறைந்து கொண்டு யானையைச் சீண்டி சினமூட்டும் செயல் போன்றது (சிறிய எருக்கம் புதரை பாதுகாப்பு என்று நினைத்து, அதன் பின் மறைந்து கொள்ளும் அறிவிலி, யானையைச் சினம் கொள்ளச் செய்தால் யானை மிதித்தே அழித்துவிடும், ஆதலால் அது துன்பம் வரவழைத்துக் கொள்ளும் செயலென அறிக)

    பழமொழி சொல்லும் பாடம்: மேன்மை மிகு அறிஞர்களை, அறிவிலிகள் துன்புறுத்த எத்தனித்தால் அது தங்கள் அழிவைத் தேடிக் கொள்ளும் செயலாக அமைந்துவிடும். இக்கருத்தை வள்ளுவர்,

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல். (குறள்: 894)

    ஆற்றல் உள்ளோரிடம், அந்த ஆற்றல் இல்லாதவர் தீங்கு விளைவிக்க முயல்வது மரணத்தைக் கையசைத்து அழைத்து வலிந்து ஏற்றுக்கொள்வது போன்றதாகும் என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்

     

    உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ?
    கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
    நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
    தற்செய்யத் தானே கெடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
    கற்று அறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
    நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
    தன் செய்ய, தானே கெடும்.

    பொருள் விளக்கம்:
    எதிர்கொள்ளும் இடர் ஒவ்வொன்றுக்கும் தன்னை வலிமை படுத்திக் கொள்வது தேவையா? சான்றோர்களைச் சினம் கொள்ளச் செய்யாமல் நன்னெறி வழி நடப்பதே தற்காப்பாக அமைந்து பகையை அழித்துவிடும் (கற்றறிந்த சான்றோர் தமக்கு ஏற்படும் சினத்தைக் கட்டுக்குள் வைத்தாலே பகையை வென்றுவிடலாம் என்றும் பொருள் கொள்ளலாம்). உழவு செய்து நெல்பயிரிடும் வயலில் நெல் செறிந்து வளர்ந்தால் அங்குள்ள புல் தானே அழிந்துபடும் (களை நீக்கவென தனியான முயற்சி எதுவும் தேவையில்லை). அவ்வாறே தீராத பகையும், ஒருவர் தன்னை வலிமைப்படுத்திக் கொள்வாரானால் தானே அழிந்துவிடும் (பகை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்காமலே, எதிராளியின் வலிமையை அறிந்து கொண்ட பகைவர் தாமே ஒடுங்கிவிடுவர்).

    பழமொழி சொல்லும் பாடம்: கற்றோருக்கு சினமூட்டி பகைத்துக் கொள்ளாமல் நன்னெறி வழி நடப்பவர்க்குச் சான்றோர் பலர் ஆதரவாளராக இருப்பதன் காரணமாக வலிமை மிகுந்தவராகவும் இருப்பார். வலிமை மிகுந்த அவரை எதிரிகள் தாக்கத் துணிய மாட்டார்கள். கற்றோர்கள் தங்கள் சினத்தைக் கட்டுப்படுத்தி சீராகச் சிந்திக்கும் திறன்மூலம், பதற்ற மற்றவர்களாய் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் வழி அறிவர். அந்த வலிமை பகையை அழித்துவிட உதவும் எனவும் பொருள் கொள்ளலாம். தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகை அறிந்தவரிடம் பகைமை பாராட்டுபவர் இருக்கமாட்டார் என்பதை விளக்க விரும்பும் வள்ளுவரும்,

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு. (குறள்: 878)

    வழிமுறைகளை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பை ஏற்படுத்திக் கொண்டவரை எதிர்கொள்ள இயலாமல் பகைவரின் ஆணவம் தானே அழியும், பகையும் ஒழியும் என்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 22, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  ரூபாதேவி அவர்கள்

     

    ரூபாதேவி0

     

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சென்றவாரம் (பிப்ரவரி 5 முதல் 16 வரை) மேகாலயா மாநிலத்தில் கௌஹாத்தி/ஷில்லாங்கில் நடைபெற்ற “தெற்காசிய போட்டி”களில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA – Federation Internationale de Football Association) கால்பந்தாட்ட நடுவராகச் செயல்பட்ட, தமிழகத்தின் “முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவரான” திருமிகு ரூபாதேவி அவர்கள். அவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான அணுவியல் விஞ்ஞானி திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவின் நன்றிகள் உரித்தாகிறது.

    ரூபாதேவி1

    திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான ரூபாதேவி பள்ளி நாட்களிலேயே கால்பந்தாட்ட விளையாட்டினால் ஈர்க்கப்பட்டவர். இவரது ஆர்வத்தைக் கண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் இவருக்கு அளித்த ஊக்கத்தினாலும் பயிற்சியாலும் பள்ளிநாட்களில் திண்டுக்கல் அணியின் சார்பாக மாவட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பல்கலைக்கழக நாட்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காகவும், பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளில் பங்கேற்றும் விளையாடி வந்துள்ளார்.

    இளைஞர்களுக்கு நடுவர் பயிற்சி அளிக்கும் நோக்கில், 25 வயதுக்குட்பட்டோருக்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் உருவாக்கிய ‘புராஜெக்ட் ஃப்யூச்சர்’ திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேறிய இரு பெண்களில் ரூபாதேவியும் ஒருவர். இலங்கை, கத்தார், பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றி இருப்பதுடன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளுக்கும், ஆசிய அளவிலான போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

    ரூபாதேவி

    ரூபாதேவியின் ஈடுபாட்டைக் கவனித்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் நடுவராகப் பணியாற்ற இவரைப் பரிந்துரைத்தது. அதற்கான எழுத்து, உடல் திறன் தேர்வுகளில் வெற்றிபெற்ற இரு பெண்களில் ஒருவரான ரூபாதேவிக்கு சர்வதேச நடுவராகப் பணியாற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பளித்துள்ளது. இவரது முயற்சிகளுக்குக் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரத்தினால், தென் இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை ரூபாதேவிக்குக் கிடைத்துள்ளது.

    ரூபாதேவி2

    இந்திய “தேசிய அளவில்” இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே கால்பந்தாட்ட நடுவராகத் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் ரூபாதேவியும், இவருக்குப் பிறகு எஸ். வசந்தியும் தேசிய அளவு நடுவராகத் தகுதி பெற்றார்கள். சர்வதேச அளவில் பெண்கள் கால்பந்தாட்ட நடுவராகப் பங்கேற்கும் நிலை இதுவரை மகளிருக்கு இருந்ததில்லை.

    ஆண்களின் களமாக இருந்துவரும் கால்பந்தாட்ட நடுவர் பணியில் அதிரடியாக இறங்கி அனைவரையும் தனது முயற்சியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ரூபாதேவியின் எதிர்காலக் குறிக்கோள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலகக் கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதே. ரூபாதேவி அந்த உயரங்களை அடைய வல்லமை குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________
    படங்களும் தகவல்களும் பெற்ற இடங்கள்:
    இணையத்திலிருந்தும் கீழ்காணும் தளங்களில் இருந்தும் …
    South Asian Games – 2016
    http://southasiangames2016.com/
     
    தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா!
    http://www.vikatan.com/news/sports/57134-indian-woman-referee-selected-by-fifa.art
     
    ஃபிஃபா ரெஃப்ரி ரூபாதேவி!
    http://www.vikatan.com/article.php?aid=115146
     
    கால்பந்து தமிழச்சி!
    http://siragu.com/?p=19756

    _______________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும்

    ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும்
    தோற்றத்தா மெள்ளி நலியற்க – போற்றான்
    கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
    உடையானைக் கௌவி விடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும்,
    தோற்ற தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
    கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
    உடையானைக் கௌவி விடும்.

    பொருள் விளக்கம்:
    எதிர்ப்புக் குரல் எழுப்பும் ஆற்றலற்றவர் இவர் என்ற எண்ணத்தில், தன்னிடம் தஞ்சமடைந்த உறவினரை, பிறர் அறியும்வண்ணம் இகழ்ச்சியாகப் பேசி வருந்துமாறு செய்தல் வேண்டாம். தன்னைப் பேணிக் காக்காமல் வாசல் கதவை அடைத்துப் பூட்டிய அறையினுள் நையப் புடைத்தால், (வெறுப்படைந்த) நாயும் தன்னை வளர்ப்பவரையே கவ்விக் கடித்துக் குதறி விடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: நலிவடைந்த தனது உறவுகளைப் பேணிக்காக்காது பலரறிய அவரை இகழ்ந்து பேசுவது கேடு விளைவிக்கும், பொறுத்தது போதும் என அவர் பொங்கி எழுந்துவிடுவார். உடைமையாளரிடம் நன்றி பாராட்டும் நாயும் அவர் தன்னைத் துன்புறுத்தினால் எதிர்த்துத் தாக்கத் தயங்காது. தன்னிடம் உதவி நாடி வந்தவரை இகழாது இருந்தால் அவர் மகிழ்வார் என்பதை,

    இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து. (குறள்: 1057)

    இகழ்ந்து எள்ளி நகையாடாமல் தனக்கு உதவுபவரைக் கண்டு உதவிநாடி வந்தவர் மகிழ்வார் என்றும்,

    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு. (குறள்: 995)

    வேடிக்கை என நினைத்து ஒருவரை இகழ்ந்து பேசுவதும், விளையாட்டு வினையாக முடிவது போல கேட்டை விளைவிக்கும். பகைவரிடத்திலும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுள்ளோர் அறிந்திருப்பார் என்று குறள்கள் விளக்கம் தருகின்றன.

    Share
  • ஓர் அரசியின் கனவில் …

    — தேமொழி.        

       

    The_Dreams_of_Queen_Trishala

    கருவுற்றிருந்த அரசி திரிசலா தேவி (Queen Trishala), நள்ளிரவில் உறங்கும்பொழுது கீழ் காணும் 14 அழகிய மங்களகரமான பொருட்களைத் தனது கனவில் கண்டார், அவை:

    1. வெள்ளையானை
    2. வெண்ணிறக் காளை
    3. சிங்கம்
    4. லக்ஷ்மி தெய்வம்
    5. மலர்மாலைகள்
    6. முழுநிலவு
    7. சூரியன்
    8. பெரிய கொடி
    9. வெள்ளிக்கலசம்
    10. தாமரைத் தடாகம்
    11. பாற்கடல்
    12. வானுலகின் பறக்கும் தேர்
    13. மணிக்கற்களின் குவியல்
    14. புகையற்ற நெருப்பு

    1. வெள்ளையானை:
    பளிங்கையும் தோற்கடிக்கும் வெண்ணிறமான யானையொன்று மிகவும் பெரிய, உயரமான, கம்பீரமான தோற்றத்தையும், நான்கு தந்தங்களைக் கொண்டிருந்தது. சிறந்த பண்புகளைக் கொண்ட யானை பற்றிய இந்தக் கனவு கூறும் நன்னிமித்தச் செய்தி, அரசிக்குப் பிறக்கும் மகன் ஞானத்தேரில் பவனி வந்து, துன்பத்தில் வாடும் உலக மக்களை அவர்களது துயரத்தில் இருந்து நீங்கும் வழியை போதித்தருளுவார் என்பதையும், பேராசைகளை ஒழிக்க உபதேசித்து உலகவாழ்வில் அவர்கள் கொண்டிருக்கும் பற்றினை ஒழிய அருள் புரிவார் என்பதையும் உணர்த்துவதாகும்.

    2. வெண்ணிறக் காளை:
    அரசிக்கு இரண்டாவதாக வந்த கனவில் தோன்றிய வெண்ணிறக்காளை ஒன்று வெண்தாமரையையும் விடச் சிறந்த வெண்மையைக் கொண்டிருந்தது. அழகுடனும் பொலிவுடனும் ஒளி பொருந்தி இருந்த அக்காளை நிமிர்ந்த, பெரிய, கம்பீரமான திமிலையும், மென்மையான முடிகொண்ட தோலையும், கூறிய கொம்புகளையும் கொண்டிருந்தது. இக்கனவு குறிப்பது, அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் சிறந்த ஆன்மிகத் தலைவராக பெரும் துறவிகளுக்கும், அரசர்களுக்கும், பெரும் அறிவாளிகளும் ஆன்மிக வழிகாட்டுதலைச் செய்பவராக அமைவார் என்பதாகும்.

    3. சிங்கம்:
    அரசியின் மூன்றாவது கனவில் வலிமை மிக்க சிங்கம் ஒன்று தோன்றியது. அது பெரிய வட்டமான தலையையும், சிவந்த முகத்தையும், திருத்தமான உதடு கொண்ட வாய் அமைப்புடன், கூர்மையான பற்களையும், கூரிய பார்வை கொண்ட ஒளிரும் கண்களையும், உறுதியான கால்களில் கூர்மையான பளபளக்கும் நகங்களையும், அழகிய மிக நீண்ட வாலையும் கொண்டிருந்தது. அரசியை நோக்கி மிகக் கம்பீரமாக நடந்து வந்த அந்தச் சிங்கம் அரசியின் வாய்வழியே அரசியின் உடலுக்குள் புகுந்தது. அந்தக் கனவு காட்டும் குறிப்பு, அரசிக்குப் பிறக்கப் போகும் ஆற்றல் மிகுந்த மகன், அச்சமின்றி அனைத்து வல்லமையும் கொண்டவராக உலகையே ஆளும் திறமை கொண்டவராக இருப்பார் என்பதாகும்.

    4. லக்ஷ்மி தெய்வம்
    திருமகள் அரசியின் நான்காவது கனவில் தோன்றினார். செல்வம், செழிப்பு, ஆற்றல் ஆகியவற்றின் இருப்பிடமான லக்ஷ்மி இமயமலையில் அமர்ந்திருக்க, அவரது பொற்பாதங்கள் பொன்னாமை போல ஒளிவீசித் துலங்க, மென்மையான மெல்லிய விரல்களைக் கொண்ட திருக்கரங்களுடன், மென்மையும் நேர்த்தியும் கொண்ட கருங்கூந்தலுடன் அவர் விளங்கினார். சரம் சரமாக நல்முத்தும், மரகதமும் பின்னிப் பிணைந்திருக்கும் அணிகலன்களோடு பல தங்க மாலைகளையும் அணிந்திருந்தார். அவர் தனது காதில் அணிந்திருந்த அழகிய குழைகள் அவரது தோள் வரை தொங்கி ஒளிவீசியது. கரங்களில் ஒளிபொருந்திய இரு தாமரைகளை ஏந்தியிருந்தார். இக்கனவு, அரசியின் மகன் ஒரு தீர்த்தங்கரராக செல்வச் செழிப்புடனும் சிறந்த ஆற்றலையும் கொண்டு மிகச்சிறந்தவராக விளங்குவார் என உணர்த்துவது.

    5. மலர்மாலைகள்:
    அரசி தனது ஐந்தாவது கனவில் வானத்தில் இருந்து தரையிறங்கும் மலர்மாலைகளைக் கண்டார். மிக அருமையான நறுமணம் வீசும் பற்பல மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் அவை. வெண்ணிற மலர்களால் ஆன அந்த மாலையின் நறுமணம் உலகில் எங்கும் கமழ்ந்தது. வெவ்வேறு பருவ காலங்களில் மலரும் மலர்களைக் கொண்டிருந்த அந்த மாலையைச் சுற்றித் தேனீக்கள் குழுமின, அவை செய்யும் ரீங்கார ஒலி உலகை நிரப்பியது. இந்தக் கனவு அரசியின் மகனின் ஆன்மிக வழிகாட்டுதல் உலகில் எங்கும் பரவும் என உணர்த்துவது.

    6. முழுநிலவு:
    ஆறாவதாக அரசியின் கனவில் தோன்றியது முழு நிலவு. ஒரு மங்களகரமான நன்னிமித்தம் அறிகுறியாகக் காட்சியளித்த அந்த வெண்ணிலாவின் ஒளிமிகச் சிறப்புமிக்கதாக இருந்தது. அதன் ஒளி அல்லிகளை முழுமையாக மலரச் செய்தது. மெருகூட்டப்பட்ட கண்ணாடியைப் போல அந்நிலவு ஒளிர்ந்தது. அதன் ஒளி வெண்ணிற அன்னப்பறவை போன்று திகழ்ந்தது. அதன் ஒளிவெள்ளம் கடலலைகளை ஈர்த்து வான் நோக்கி எழும்பச் செய்தது. வானின் ஒளிவீசும் அழகிய சின்னமாக காட்சியளித்தது. இக்கனவு, அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் நல்ல உடல்நலம் கொண்டவராக விளங்குவதுடன், அனைவராலும் விரும்பப்படுபவராகவும், மக்களின் துயர் நீக்கி அவர்களுக்கு மனஅமைதி வழங்குவார் என்பதை உணர்த்துவது.

    7. சூரியன்:
    மிகப்பெரிய வட்டவடிவில் தகதகக்கும் சூரியனைத் தனது ஏழாவது கனவில் கண்டார் அரசியார். அது இருளைக் கிழித்து காட்டுத் தீயின் செந்நிறம் போல ஒளிர்ந்தது. அதன் கதிர்கள் பட்டவுடன் செந்தாமரைகள் மலர்ந்தன. வானில் காணும் கோள்களின் தலைவனாகத் தோன்றினான் அந்தக் கதிரவன். வானில் விளக்காகச் சுடர்விட்டு ஒளிதந்து இருளில் நடக்கும் கயமைகளுக்கு முடிவு கட்டியது அந்தச் சூரியனின் சுடர்மிகு ஒளி. இந்தக் கனவு, பிறக்கப்போகும் அரசியின் மகனின் அறிவும் அருளும் மக்களின் அறியாமை என்னும் இருளை அழித்து, வாழ்வில் ஒளியேற்றும் என உணர்த்துவது.

    8. பெரிய கொடி:
    அரசியின் எட்டாவது கனவில் தங்கக் கம்பத்தின் மீது பட்டொளிவீசிப் பறக்கும் பெரிய கொடி ஒன்று தோன்றியது. அதன் உச்சியில் மயிலிறகுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்ணைக் கவரும் தோற்றத்தில் மென்மையாகக் காற்றில் அசைந்த அந்தக் கொடியில் சிங்கத்தின் படம் வரையப்பட்டிருந்தது. அந்தக் கனவு, உலகை நல்வழியில் நடத்தும் தலைவர் ஒருவர் பிறக்கப்போகிறார் என்று உணர்த்துவது.

    9. வெள்ளிக்கலசம்:
    படிகம் போன்று தெளிந்த நீர் நிரம்பிய வெள்ளிக் கலசமொன்று அரசியின் ஒன்பதாவது கனவில் தோன்றியது. குற்றங்களற்ற புனிதத் தன்மை கொண்ட நீர் நிரம்பிய அந்த அழகியக் கலசம் தாமரைமலர் சரத்தினாலும், மாலைகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நற்குணங்களின் இருப்பிடமான புனிதர் அரசியின் மகனாகத் தோன்றுவார் என்பது இக்கனவு உணர்த்தும் பொருளாகும்.

    10. தாமரைத் தடாகம்:
    பத்தாவது கனவில் அரசியார் ஒரு தாமரைத் தடாகத்தைக் கண்டார். அதில் ஆயிரக்கணக்கில் மிதந்துகொண்டிருந்த தாமரை மலர்கள், சூரியக்கதிரொளி பட்டவுடன் மலர்ந்து நறுமணம் வீசின. ஒளிர்ந்த அந்தத் தடாகத்தில் கூட்டம் கூட்டமாக மீன்கள் நீந்தின, அல்லி இலைகள் மிதந்து கொண்டிருந்தன. இக்கனவு உணர்த்துவது, வாழ்க்கைச் சிக்கலில் உழலும் மக்களை, அவர்களது பிறவித் துயரத்தில் இருந்து விடுவிக்கும் ஆன்மிக அறிஞர் ஒருவர் அரசியின் மகனாகப் பிறப்பார் என்பதையே.

    11. பாற்கடல்:
    பொங்கிப் பாய்ந்து எங்கும் அலைபரப்பும் பாற்கடல் அரசியின் பதினோராவது கனவில் தோன்றியது. அக்கடலில் காற்று வீசிக் கொந்தளிக்கும் உயர்ந்த அலைகளும், பெரிய கடல்வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஆரவாரமான ஓசைகளும் நிறைந்திருந்தது. மிகப்பெரிய ஆறுகள் அக்கடலில் பாய்ந்து பெரும் சுழல்களை ஏற்படுத்தின. அக்கனவு குறிப்பது அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் அலைக்கழிக்கும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து, பிறப்புத்துயர் ஒழித்து முக்தி அடைவார் என்பதை.

    12. வானுலகின் பறக்கும் தேர்:
    அரசி கண்ட பன்னிரண்டாவது கனவில் தேவலோகத்தின் தேர் ஒன்றைக் கண்டார். நவமணிகள் பதிக்கப்பட்ட, பொன்னாலான சிறந்த 8,000 தூண்களைக்கொண்டிருந்த அந்தத்தேரின் கூரை பொற்தகடுகளால் வேயப்பட்டு, அழகிய நல்முத்துமாலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதில் வரிசை வரிசையாகக் காளைகள், குதிரைகள், மனிதர்கள், முதலைகள், பறவைகள், குழந்தைகள், மான்கள், யானைகள், வனவிலங்குகள், தாமரை மலர்கள் ஆகியவற்றின் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேரில் இனிமையான தேவகானம் ஒலித்துக் கொண்டிருந்தது. மனதை மயக்கும் அகிற்புகையினால் நறுமணமூட்டப்பட்டிருந்தது. ஒளிரும் வெள்ளியின் ஒளி போன்ற வெண்ணிற ஒளி அத்தேரில் ஏற்றப்பட்டிருந்தது. அக்கனவு உணர்த்தும் பொருள், தேவலோகத்தினரும், கடவுளரும் மதிக்கும் வகையில் சிறந்த ஆன்மிகவாதியாகப் பிறக்கும் மகன் அனைவருக்கும் நல்வழிகாட்டுவார், அவரை வானுலகத்தில் உள்ளோரும் மதிப்பர் என்பதாகும்.

    13. மணிக்கற்களின் குவியல்:
    மேருமலை போன்ற பெரிய குன்றாக பற்பலவிதமான விலைமதிப்பற்ற நவமணிக்கற்கள் குவிந்திருப்பதையும், பூமியில் குவிந்து கிடந்த அவற்றின் ஒளி வான்வெளியைப் பிரகாசமாக்குவதையும் தனது பதின்மூன்றாவது கனவில் அரசி கண்டார். இக்கனவு, அவரது மகன் எல்லையற்ற நல்லொழுக்கத்தையும், அறிவையும் பெற்றவராக விளங்கப்போவதைக் குறிக்கிறது.

    14. புகையற்ற நெருப்பு:
    அரசி தனது பதினான்காவது கனவில் தீயில் சுத்தமான நெய்யும், தேனும் குடம் குடமாக வார்க்கப்படுவதையும், அத்தீயானது புகையின்றி கொழுந்துவிட்டு எரிந்து எங்கும் ஒளிவெள்ளம் பாய்வதையும் கண்டார். இக்கனவின் குறி, அரசிக்குப் பிறக்கும் மகனின் ஞானம் உலக ஞானிகள் அனைவரது ஞானத்தையும் விஞ்சும் தன்மையில் அமைந்து சிறந்த அறிஞராக விளங்குவார் என்பதாகும்.

    இவற்றுடன், 15. இணைந்த இருமீன்களும் (அறிகுறி: அழகிய திருவுருவம் கொண்டவர்) , 16. பொன்னாலான அரியணையும் (அறிகுறி: மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைபவர்), என மேலும் இரு கனவுகள் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அரசியார் கருவுற்றிருக்கையில் அற்புதமான 14 சுப கனவுகளைக் கண்டதாகவும் (சுவேதாம்பர வழிமுறை சமணம்), 16 சுப கனவுகளைக் கண்டதாகவும் ( திகம்பர வழிமுறை சமணம்) தொன்மங்கள் கூறுகின்றன. சுருக்கமாக; இக்கனவுகள் கூறுவது, சிறந்த ஆன்மஞானம் கொண்ட ஒருவர் பிறந்து, அனைவராலும் போற்றப்படும் வகையில் நல்லொழுக்கம் நிரம்பியவராக, அனைத்து உயிர்களிடமும் அன்புசெலுத்தி, மக்களின் பிறவித்துயர் நீங்கும் வகையில் நல்வழி நடத்தும் அறிவுரைகளைக் கூறி, அவர்கள் முக்தி அடையும் வழியைக்காட்டும் ஆன்மிகத் தலைவராக விளங்குவார் என்பதாகும்.

       The_Dreams_of_Queen_Trishala1Mahavir-Bhagawan-15119

    தான் என்றும் கண்டிராத வியப்பைத் தரும் கனவுகளைக் கண்டதாக அரசி திரிசலா தேவி தனது கணவர் மன்னர் சித்தார்த்தரிடம் கூறினார். அரசி கண்ட கனவின் பலனை உரைக்கக்கூடிய குறி சொல்லும் அறிஞர்களைத் தனது அரசவைக்கு வரவழைத்து விளக்கம் கேட்டார் அரசர். சிறந்த ஞானத்தைக் கொண்டவராக, ஆன்மிக வழிகாட்டும் அறிஞராக ஒரு இளவரசன் பிறக்கப் போகிறார் என்று அவர்கள் யாவரும் ஒருமனதுடன் கூறினர். இந்த நன்னிமித்தம் காட்டிய கனவினைக் கண்டு ஒன்பது மாதங்கள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு அரசி சைத்திர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாளில் ஒரு ஆண்மகனை ஈன்றெடுத்தார். தனது மகனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த பெற்றோர், தங்களது அரசகுல வழித் தோன்றலான அந்த மகனுக்கு, ‘என்றும் வளரும் செல்வத்தைக் கொண்டவர்’ என்ற பொருளில் “வர்த்தமானர்” என்ற பெயர் சூட்டினர்.

    இந்த வர்த்தமானரே சமணத் தொன்மங்கள் குறிக்கும் சமண சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரும், உலகிற்கு நல்வழிகாட்டுவதற்காகப் பிறந்த சமண சமயத்தின் குருவான மகாவீரர் ஆவார். இஷ்வாகு பரம்பரைச் சேர்ந்த வர்த்தமானர், வைசாலிக்கு அருகே குன்டலகிராமா என்ற இடத்தில் (இந்நாளின் பீகார் மாநிலத்தில்) பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் வாழ்ந்தது பொ.ஆ.மு 599 – 527 காலம். தனது 30 வது வயதில் அரச வாழ்வைத் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டு மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டினார். மகாவீரர் பிறந்த நன்னாளை இந்தியர் மகாவீரர் ஜெயந்தியாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.

    Dreams_of_Trishala

    ________________________________________________________________________

    Sources:

    Picture:
    Jainism: Illuminated Manuscripts and Jain art
    Victoria and Albert Museum
    South Kensington, United Kingdom
    http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/

    Information:
    [1]
    The Dreams of Mother Trishala
    Jain Associations in North America
    Colorado State University
    http://www.cs.colostate.edu/~malaiya/j/dreams16/Dreams16.html

    [2]
    Trishala’s dreams
    History of Jainism, by Ramesh Chandra Dutt (1848-1909)
    http://www.herenow4u.net/index.php?id=85475

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 15, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

    elangovan

     

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள். பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி “உலகத் தொல்காப்பிய மன்றம்” கிளையின் இந்திய பொறுப்பாளராக, புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆய்வு மையத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் மு.இளங்கோவன் பணியினை முன்னெடுத்துச் செல்கிறார்.

    elangovan2

    துவக்கப்பட்டிருக்கும் “உலகத் தொல்காப்பிய மன்றம்” புதுச்சேரி கிளையின் சார்பாக, மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறப்போகும் சொற்பொழிவுகளின் வரிசையில் முதல் பொழிவு சென்ற வாரம் 08.02.2016 அன்று “தொல்காப்பியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சியில் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்றிவரும் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    elangovan3

    முனைவர் மு.இளங்கோவன் இணையத்தமிழ் வளர்ச்சி பற்றியும், கணினித்தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ் இணையப் பயிலரங்கங்கள் பலவற்றையும், ஊடகக் கட்டுரைகளையும் தொடர்ந்து வழங்கி வருபவர். உலக அளவில் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளையும், உரைகளையும் வழங்கி வருபவர். இருபது நூல்களை வெளியிட்டுள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்கள், இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழி இளம் அறிஞர்’ விருது பெற்றவராவார்.

    கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சார்ந்த பன்னாட்டு நிகழ்வுகளைப் பற்றியத் தகவல்களையும், உள்ளூர்த் தமிழறிஞர்கள் முதல் உலகத் தமிழறிஞர்கள் வரை பலரை நேர்காணல்கள் செய்தும், சென்ற காலங்களில் தமிழ்த்தொண்டாற்றிய மறைந்தவர்கள் பலரைப் பற்றியும் தனது வலைப்பதிவில் செய்திகளைத் தொகுத்து வழங்கி வருபவர். தமிழ் முன்னணி தினசரி நாளிதழ்களும் இவரது வலைப்பதிவுக் கட்டுரைகளில் காணும் தகவல்களையும் படங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஒரு இன்றியமையாத் தகவல் கருவூலம், ஒரு வரலாற்றுப் பெட்டகம் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவுகள் (http://muelangovan.blogspot.com/) என்பது குறிப்பிடத்தக்கது.

    elangovan4

    இசையார்வலர்கள் மகிழும் வண்ணம், கால்நூற்றாண்டு ஆய்வுகளைத் தேடித்தொகுத்த இசையாய்வுப்புதையலாக , பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் உருவாவதில் முயன்று தொகுத்து ஓராண்டிற்கு முன் வழங்கினார் முனைவர் மு.இளங்கோவன்.

    “உலகத் தொல்காப்பிய மன்றம்” பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்கள் மேற்பார்வையில் சிறப்புற வளர்ந்து, அதன் நோக்கமான தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற குறிக்கோளை அடைய வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    தொடர்புக்கு:
    முனைவர் மு.இளங்கோவன்
    மின்னஞ்சல்: muelangovan@gmail.com
    செல்பேசி: +91 9442029053
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/muelangovan
    வலைப்பூ: http://muelangovan.blogspot.com/

    _______________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு

     

    கள்ளியகிலுங் கருங் காக்கைச் சொல்லும்போ
    லெள்ளல் கயவர்வா யின்னுரையைத் – தெள்ளிதி
    னார்க்கு மருவி மலைநாட! நாய்கொண்டாற்
    பார்ப்பாருந் தின்பா ருடும்பு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
    எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின்
    ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால்,
    பார்ப்பாரும் தின்பர், உடும்பு.

    பொருள் விளக்கம்:
    கள்ளியில் கிடைக்கும் அகிலையும் (அதன் மணத்திற்காகவும்), கருங்காக்கை கரைவதையும் (நல்நிமித்தம் சொல்கிறது என்று கருதியும்) ஏற்றுக் கொள்வதைப் போன்று, இகழாது கயமைப் பண்புள்ளோர் கூறும் நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாக, ஒலிக்கும் அருவி வீழும் மலைநாட்டைச் சேர்ந்தவரே (வேட்டையின் பொழுது) நாய் கவ்விக் கொண்டுவந்ததாயிற்றே என்று புறக்கணிக்காமல், பார்ப்பனரும் உடும்பின் தசையின் சுவை கருதி அதனை உண்ணுவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: பிறப்பிடம் நோக்காது, உயர்ந்த பண்புகளைக் கண்டால் அதனை மதிக்க வேண்டும். கள்ளியில் தோன்றும் நறுமணம் கொண்ட அகிலையும், கருமையான காக்கையின் கத்தலை விருந்தினர் வருவதைக் கூறும் நல்ல நிமித்தம் என்றும் உயர்வாக மதிப்பது அல்லாமல், அவை தோன்றிய இடம் கண்டு இகழ்ச்சியாகக் கருதும் வழக்கமில்லை. வேட்டை நாய் தனது வாயால் கவ்விப் பிடித்த உடும்பினைக்கூட நாய் கவ்வியதாயிற்றே என்று பார்ப்பனரும் புறக்கணிக்காமல் அந்தப் புலாலின் சுவை கருதி உண்பர். அவ்வாறே, இழிந்தோர் நல்லுரை கூறினால் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் இப்பாடல் கருத்தினுக்கு இணையாக வள்ளுவர் கூறும் குறள்,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 423)

    எந்த ஒரு பொருள் குறித்து எவர் என்ன கூறினாலும், அக்கருத்தில் காணும் உண்மையைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்வது அறிவுடமையாகும் என்கிறது.

    குறிப்பு: இப்பாடலில் பாடபேதங்கள் காணப்படுகின்றன. நாராயண ஐயங்கார் அவர்களின் நூலில் காணும் பாடல் “எள்ளல் கயவர் வாய் இன்னுரை” என்று கூறுவதை “எள்ளற்க யார் வாயும் நல்லுரை” என்று மற்ற சில நூல்கள் காட்டுகின்றன. அவ்வாறே, “நாய் கொண்டால்” என்பது பாடபேதமாக, “நோய் கொண்டால்” எனவும் இருக்கலாம் என்கிறார் நாராயண ஐயங்கார். அதனை ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்ற உடல் நலம் கெட்ட நிலையில், உடல் நலம் கருதி உடும்பைக் கூட பார்ப்பனர் உண்பர் என்ற வகையிலும் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், பொதுவாகப் பாடலின் கருத்து “சேற்றில் மலர்ந்த செந்தாமரை”, சிப்பியில் பிறக்கும் முத்து” ஆகியவற்றை எத்தகைய தாழ்ந்த நிலையில் தோன்றினாலும் இகழ்வாகக் கருதாது, அவற்றின் உயர்ந்த பண்பினைக் கண்டு ஏற்றுக் கொள்வது போலவே; கள்ளியில் பிறந்த அகிலையும், காக்கையின் கரைதலையும், நாய் கவ்விய உடும்பையும் மக்கள் ஏற்றுக் கொள்வதே வழக்கம். அவ்வாறே இழிவானவராக இருந்தாலும் அவர் கூற்றில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே இப்பழமொழிப் பாடல் தரும் அறிவுரை.

    Share
  • பேராசிரியர் தெ. முருகசாமி வழங்கிய ‘தொல்காப்பியம் ஓர் அறிமுகம்’ உரை

    தொல்காப்பியம் ஓர் அறிமுகம்

    பேராசிரியர் தெ. முருகசாமி
    மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி

    (குறிப்பு: பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. 08.02.2016 அன்று புதுச்சேரியின் “உலகத் தொல்காப்பிய மன்றம்” கிளையின் சார்பாக, “தொல்காப்பியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் “தொல்காப்பியத் தொடர்பொழிவு” நிகழ்ச்சிக்காக ஆற்றிய உரையின் சுருக்கம். மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறப்போகும் சொற்பொழிவுகளின் வரிசையில் முதல் பொழிவு இது. கொடுக்கப்பட்டுள்ள உரையின் சாரம் காணொளி மூலம் பெறப்பட்டது)

    பேராசிரியர் தெ. முருகசாமி

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் என்று கூறுவது போல, தொல்காப்பியனை உலகினுக்கே தந்தது தமிழ். உலகினுக்கே தந்த என்று குறிப்பது தமிழின் சிறப்பு. ஞாலம் அளந்த மேன்மைத் தமிழில் ‘உலகினுக்கே தந்த’ என்ற அடைமொழியைக் கொடுப்பது, உலகம் சார்ந்த அடைமொழி ஒன்றைக் கொடுத்துப் பெருமைப்படுத்துவது தமிழ் மொழியில் காணப்படும் சிறப்பு.

    தொல்காப்பியம் எழுத்தின் முடிபு நூல். எழுத்தின் முடிபானது நூல் என்பதைக் காட்டும் நோக்கில் முதல் நூற்பாவை எழுத்தில் துவங்கி, நூலே என்று தனது இறுதி நூற்பாவை முடிக்கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியர் வெறும் இலக்கண நூலாசிரியர் மட்டுமன்று, அவர் இலக்கண ஆசிரியர் என்ற நோக்கில் கண்டதால் தொல்காப்பியம் தரும் இலக்கிய, தத்துவ, அறிவியல் பற்றிய கூற்றுகள் மதிக்கப்படாமல் போனது. தொல்காப்பியம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல், திருக்குறள் போல பரப்பப்பட வேண்டிய ஒரு நூல் செந்நூல் தொல்காப்பியம். தமிழரின் தொன்மையைக் காப்பது என்ற பொருள் கொண்டது தொல்காப்பியம். தமிழர் பண்பாட்டின் தொன்மையைக் காப்பது தொல்காப்பியம்.

    தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறுவது. உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது. எழுத்துக்களால் ஆனது சொல். அந்தச் சொற்களுக்கான பொருள் மட்டுமல்ல, வாழ்வியல் இலக்கணம் வகுத்துக் காட்டிய பொருள் இலக்கணத்தைக் கொண்டு, வாழ்வியல் மரபை, ஒழுக்கத்தைக் காக்கும் முறையில் தொல்காப்பியம் என்ற பெயர் அமைந்தது.

    ஒலி என்பது வரிவடிவ எழுத்தாகக் குறிக்கப்படுகிறது (phonological component of language), எழுத்துக்களின் கூட்டு சொல்லாக அமைந்தது (semantic component of language), சொற்களில் கூட்டு தொடர்கள் (syntactic component of language). தனித்தன்மையுடன் தொடரின் பொருளைக் காட்டுவதன் மூலம் மொழியை உயர்த்திக் காட்டுகிறது தொல்காப்பியம். தொல்காப்பியர் முதலிலேயே பெயர்ச்சொல், வினைச்சொல் என்று தொடங்கவில்லை. சொல்லதிகாரத்தின் ஐந்தாவது இயலைத்தான் பெயரியல் ஆக அமைத்துள்ளார். மொழியியல் அறிஞர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் தொல்காப்பியத்தில் கிளவியாக்கம்தான் முதலில் வரையறுக்கப்பட்டுள்ளது. மொழியின் வளர்ச்சி சொல்லாக இல்லாமல், சொற்கூட்டமாக, தொடராக அமைவது மொழிக்கு இன்றியமையாதது. இது தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரால் உணரப்பட்டுள்ளது என்ற உண்மை தொல்காப்பியத்தில் தெரிகிறது. வரையறைகள் மூலம் மொழியின் பழமையை பாதுகாக்கும் தன்மை கொண்டது தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் வளர்ச்சியில் பங்கேற்கும் நூல்களுக்கும் இலக்கணம் காட்டப்படுகிறது.

    மொழிபெயர்ப்பினால் மொழி வளரும் என்ற கருத்தை முன் வைத்தது தமிழே, மொழி இன்னொரு எல்லையைத் தொடும் பொழுது மொழியின் வளரும் தன்மை நிலைக்கும். தமிழை மொழிபெயர்த்தலும், தமிழுக்கு மொழிபெயர்த்தலும் மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. அதை மறந்து தமிழர் தளர்ச்சியுற்றதால் வங்கத்தின் தாகூர் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய நோபல் பரிசை வெல்லும் வாய்ப்பு கிட்டியது. தமிழர் அதில் தளர்ந்ததால் பாரதிக்கு அவ்வாய்ப்பு கிட்டவில்லை. தமிழை மொழி பெயர்க்க முனைந்த ஜி.யு. போப் நாலடிகளிலும், இரண்டடிகளிலும் வெண்பாக்களின் மூலம் பாடலில் உலகை அடக்கும் சிறப்பை, வாழ்வியலை அடக்கும் சிறப்பை வியந்து பாராட்டியுள்ளார். கடவுளை சிறப்பித்துக் கூறும் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் போது தமிழின் சிறப்பினை வியந்தார். தமிழின் சிறப்புகளை உலகிற்குக் கொண்டு செல்ல இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் தேவை. இதனை முன்னரே உணர்ந்து சொன்னது தொல்காப்பியம்.

    தொல்காப்பியம் காட்டும் கருத்துகளை தங்கள் நூல் முழுமையையும் பயன்படுத்தியவர்கள் வள்ளுவரும் கம்பரும். தொல்காப்பியர் எழுத்தின் வரிவடிவையும் காண்பிக்கிறார். உச்சரிப்புக்கும் இலக்கணம் உச்சரிக்கும் பாங்கை உணர்ந்து இலக்கணம் வகுக்கிறார். எழுத்துகள் சேரும் பாங்கினை எந்த எழுத்துடன் சேரும் சேராது என்றும் இலக்கணம் வகுக்கிறார்.

    கிளவியாக்கம் என்பது சொல் ஆக்கம் பெறுவதை. வளர்வதைக் காட்டுவது. சொற்கள் எவ்வாறு ஆக்கம் பெறும் என்பதை எப்படி வளரும் என்பதைக் காட்ட, சொற்கள் தகுதியால் வளர்வதைக் காட்டலாம். ‘நெருப்பால் சுடு’, ‘நீரால் நனை’ என்பன சொற்கள் தகுதியால் வளர்வதைக் குறிக்கும்.
    தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
    பகுதிக் கிளவி வரை நிலை இலவே.

    மற்றொரு சொல்லின் அன்மை நிலையாலும் அமைந்து பொருள் காட்டும் தன்மை
    தன்மை சுட்டலும் உரித்து என மொழிப
    அன்மைக் கிளவி வேறு இடத்தான.
    போன்ற இலக்கணங்கள் தொல்காப்பியரால் காட்டப்படுகிறது.

    சொல் தொடர்ச்சிதான் மொழிக்கு இன்றியமையாது என்று கண்டறிந்தவர் தொல்காப்பியர். விளி மரபு – அன்மை விளி சேய்மை விளி போன்ற விளிக்கும் நிலைகளில் சொற்கள் எவ்வாறு அமையும் எனச் சொல்லதிகாரத்தில் விளிமரபு காட்டப் படுகிறது.

    வாழ்க்கையே ஒரு இலக்கணம் என்பதைப் பொருளதிகாரத்தில் வகுத்தவர் தொல்காப்பியர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறும் பொழுது,
    வாழ்க்கைக்குப் பொருள் (wealth) தேவை
    வாழ்வும் பொருளுடையதாக(meaningful life) இருக்க வேண்டும் என்பார்.
    அந்தக் கோணத்தில் சிந்தித்தவர்கள் தமிழர்கள். அந்தச் சிந்தனைக்கு தலைப்பாகை கட்டியவர் தொல்காப்பியர். வாழ்வு பொருளுடன் அமைய வாழ்வியல் அமைத்தார். மனிதன் விலங்கினப் பண்புகளைத் தவிர்த்து, அவற்றில் இருந்து வேறுபட்டு, எவ்வாறு வாழவேண்டும் என்ற மரபைக் கட்டமைத்துக் காட்டுகிறது பொருளதிகாரம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதைப் பதிவு செய்கிறது, வரையறுக்கிறது, அதைக் காக்கிறது தொல்காப்பியம். இதனைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தொல்காப்பியத்தை ஆழ்ந்து கற்காதவர்கள்.

    முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
    நுவலும் காலை முறை சிறந்தனவே
    பாடலுள் பயின்றவை நாடும் காலை.
    காலம், இடம், செயல் சேர்ந்தது இயக்கம், அது ஓர் இலக்கியக் கொள்கை. முதற்பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என்கிறது தொல்காப்பியம்.

    இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்வியலை வரையறை செய்வது, வாழ்வியல் வகுப்பது பொருளதிகாரம். “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்ற தொல்காப்பியம் இன்பத்திற்கும் வரையறை காட்டியது. பழந்தமிழர் எல்லோரும் பரத்தையர் தொடர்பு கொண்டிருந்ததாகக் காட்ட வருவதல்ல தொல்காப்பியம். ஒன்பது இயலைக் கொண்ட தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் முதலில் வருவது அக வாழ்வை வரையறுக்கும் ‘அகத்திணையியல்’

    கற்பு வாழ்க்கை வாழும் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து மேற்கொள்ளும் பிரிவுகள் ஓதல், காவல், தூது, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என ஆறு வகையாகக் காட்டப்பட்டாலும், அகத்திணையியலில் ஐந்து பிரிவுகள் மட்டுமே குறிக்கப்படுகிறது. பரத்தையர் பிரிவோ, குறிப்போ அகத்திணையியலில் இல்லை. ஆனால் இந்த ஆறு பிரிவுகளும் பின்னர் பொருளியலில் காட்டப்படுகிறது. பரத்தையர் பிரிவைப் பற்றி பொருளியலில் குறிப்பிடும் தொல்காப்பியர் அகத்திணையில் அதனைக் குறிப்பிடவில்லை. அகத்திணையில் அவர் குறிப்பிடாததன் மூலம் அகத்திணை வாழ்க்கையின் அடிப்படை ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பது காட்டப்படுகிறது. தலைவன் கூற்று என்பதில், பரத்தையில் பிரிந்து மீண்டு பேசுதல் காணப்படுகிறது. ஆனால் ‘அகத்திணையியல்’ பரத்தையருடன் கொண்ட வாழ்வு பற்றி சொல்லவில்லை.

    பொருள் தேட செல்லும் பொழுது தலைவனின் எட்டு வகை மனத்தடுமாற்றம் காட்டப்படுகிறது. களவியலில் ஒத்த கிழவனும் கிழத்தியும் பத்து ஒத்த பண்புகள் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், பொருத்தமில்லாத குணங்களாக 12 குணங்கள் காட்டப்படுகிறது. அதில் பன்னிரண்டாவதாக வாழ்க்கைத்துணையை பிறிதொருவருடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்பதை ஒப்புமை கூடாது என்றும் தொல்காப்பியம் சொல்கிறது. எனவே எடுத்துக்காட்டாகக் கொடுக்கும்பொழுது தடம் மாறிய வாழ்க்கையை எடுத்துக்காட்டாகச் சொல்லக் கூடாது.

    வாழ்க்கை என்பதும் ஒரு இலக்கணம், அதன் சாரம் ஒழுக்கம். ஒரு மொழி என்பது தனது எல்லையையும் கடந்து தாண்டுகிற பொழுதுதான் வாழ்வியல் மொழியாக ஆக்கமும் ஊக்கமும் பெற்று வளர்ந்து வாழ்க்கைக்கு உரிய மொழியாகிறது. அது வாழ்க்கைக்கும் இலக்கணமாகிறது. வாழ்க்கையின் மொழி அதன் எல்லையைத் தாண்ட வேண்டும் அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. தொல்காப்பியத்தைப் புனித நூல் என்ற புதிய நோக்கினை கொள்ள வேண்டும். திருக்குறளுக்குச் சூட்டும் அத்தனை மகுடமும் தொல்காப்பியத்திலும் உள்ளது. அதன் சிறப்பினை உணர்ந்து இலக்கணநூல் என்ற நோக்கினைத் தவிர்த்து அது காட்டும் வாழ்வியல் கோணத்தை அறிந்து கொள்ளவும் தேவை.

    Share