பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: போற்றான் கடையடைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கௌவி விடும்
ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும்
தோற்றத்தா மெள்ளி நலியற்க – போற்றான்
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக் கௌவி விடும்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும்,
தோற்ற தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
உடையானைக் கௌவி விடும்.
பொருள் விளக்கம்:
எதிர்ப்புக் குரல் எழுப்பும் ஆற்றலற்றவர் இவர் என்ற எண்ணத்தில், தன்னிடம் தஞ்சமடைந்த உறவினரை, பிறர் அறியும்வண்ணம் இகழ்ச்சியாகப் பேசி வருந்துமாறு செய்தல் வேண்டாம். தன்னைப் பேணிக் காக்காமல் வாசல் கதவை அடைத்துப் பூட்டிய அறையினுள் நையப் புடைத்தால், (வெறுப்படைந்த) நாயும் தன்னை வளர்ப்பவரையே கவ்விக் கடித்துக் குதறி விடும்.
பழமொழி சொல்லும் பாடம்: நலிவடைந்த தனது உறவுகளைப் பேணிக்காக்காது பலரறிய அவரை இகழ்ந்து பேசுவது கேடு விளைவிக்கும், பொறுத்தது போதும் என அவர் பொங்கி எழுந்துவிடுவார். உடைமையாளரிடம் நன்றி பாராட்டும் நாயும் அவர் தன்னைத் துன்புறுத்தினால் எதிர்த்துத் தாக்கத் தயங்காது. தன்னிடம் உதவி நாடி வந்தவரை இகழாது இருந்தால் அவர் மகிழ்வார் என்பதை,
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. (குறள்: 1057)
இகழ்ந்து எள்ளி நகையாடாமல் தனக்கு உதவுபவரைக் கண்டு உதவிநாடி வந்தவர் மகிழ்வார் என்றும்,
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (குறள்: 995)
வேடிக்கை என நினைத்து ஒருவரை இகழ்ந்து பேசுவதும், விளையாட்டு வினையாக முடிவது போல கேட்டை விளைவிக்கும். பகைவரிடத்திலும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுள்ளோர் அறிந்திருப்பார் என்று குறள்கள் விளக்கம் தருகின்றன.