பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு

 

கள்ளியகிலுங் கருங் காக்கைச் சொல்லும்போ
லெள்ளல் கயவர்வா யின்னுரையைத் – தெள்ளிதி
னார்க்கு மருவி மலைநாட! நாய்கொண்டாற்
பார்ப்பாருந் தின்பா ருடும்பு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால்,
பார்ப்பாரும் தின்பர், உடும்பு.

பொருள் விளக்கம்:
கள்ளியில் கிடைக்கும் அகிலையும் (அதன் மணத்திற்காகவும்), கருங்காக்கை கரைவதையும் (நல்நிமித்தம் சொல்கிறது என்று கருதியும்) ஏற்றுக் கொள்வதைப் போன்று, இகழாது கயமைப் பண்புள்ளோர் கூறும் நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாக, ஒலிக்கும் அருவி வீழும் மலைநாட்டைச் சேர்ந்தவரே (வேட்டையின் பொழுது) நாய் கவ்விக் கொண்டுவந்ததாயிற்றே என்று புறக்கணிக்காமல், பார்ப்பனரும் உடும்பின் தசையின் சுவை கருதி அதனை உண்ணுவர்.

பழமொழி சொல்லும் பாடம்: பிறப்பிடம் நோக்காது, உயர்ந்த பண்புகளைக் கண்டால் அதனை மதிக்க வேண்டும். கள்ளியில் தோன்றும் நறுமணம் கொண்ட அகிலையும், கருமையான காக்கையின் கத்தலை விருந்தினர் வருவதைக் கூறும் நல்ல நிமித்தம் என்றும் உயர்வாக மதிப்பது அல்லாமல், அவை தோன்றிய இடம் கண்டு இகழ்ச்சியாகக் கருதும் வழக்கமில்லை. வேட்டை நாய் தனது வாயால் கவ்விப் பிடித்த உடும்பினைக்கூட நாய் கவ்வியதாயிற்றே என்று பார்ப்பனரும் புறக்கணிக்காமல் அந்தப் புலாலின் சுவை கருதி உண்பர். அவ்வாறே, இழிந்தோர் நல்லுரை கூறினால் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் இப்பாடல் கருத்தினுக்கு இணையாக வள்ளுவர் கூறும் குறள்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 423)

எந்த ஒரு பொருள் குறித்து எவர் என்ன கூறினாலும், அக்கருத்தில் காணும் உண்மையைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்வது அறிவுடமையாகும் என்கிறது.

குறிப்பு: இப்பாடலில் பாடபேதங்கள் காணப்படுகின்றன. நாராயண ஐயங்கார் அவர்களின் நூலில் காணும் பாடல் “எள்ளல் கயவர் வாய் இன்னுரை” என்று கூறுவதை “எள்ளற்க யார் வாயும் நல்லுரை” என்று மற்ற சில நூல்கள் காட்டுகின்றன. அவ்வாறே, “நாய் கொண்டால்” என்பது பாடபேதமாக, “நோய் கொண்டால்” எனவும் இருக்கலாம் என்கிறார் நாராயண ஐயங்கார். அதனை ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்ற உடல் நலம் கெட்ட நிலையில், உடல் நலம் கருதி உடும்பைக் கூட பார்ப்பனர் உண்பர் என்ற வகையிலும் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், பொதுவாகப் பாடலின் கருத்து “சேற்றில் மலர்ந்த செந்தாமரை”, சிப்பியில் பிறக்கும் முத்து” ஆகியவற்றை எத்தகைய தாழ்ந்த நிலையில் தோன்றினாலும் இகழ்வாகக் கருதாது, அவற்றின் உயர்ந்த பண்பினைக் கண்டு ஏற்றுக் கொள்வது போலவே; கள்ளியில் பிறந்த அகிலையும், காக்கையின் கரைதலையும், நாய் கவ்விய உடும்பையும் மக்கள் ஏற்றுக் கொள்வதே வழக்கம். அவ்வாறே இழிவானவராக இருந்தாலும் அவர் கூற்றில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே இப்பழமொழிப் பாடல் தரும் அறிவுரை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *