அவன், அது , ஆத்மா – (46)
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 46
“வசந்தா மேன்ஷன்”
அவனும், அவனுக்கு நண்பன் ரகுவும் திருவல்லிக்கேணியில் வாடகைக்கு அறையெடுத்துத் தங்க எண்ணி, அங்கிருக்கும் ஒவ்வொரு இடமாகப் பார்த்து வந்தனர். திருவல்லிக்கேணியை “பிரும்மச்சாரி”களின் கோட்டை என்று அழைப்பார்கள். அந்தக் கோட்டைக்குள் அவர்கள் நுழைந்து தேடித் பிடித்தனர் “ஐஸ் ஹவுஸ்” பெசன்ட் சாலையில் உள்ள “வசந்தா மேன்ஷன்” என்ற விடுதியை. அங்கிருந்த விடுதியின் மேனேஜர் இராமசாமிப் பிள்ளை, அவர்களிடம்,” இங்கு ஒரே ஒரு அறைதான் காலியாக இருக்கிறது. அது பதிமூணாம் நம்பர் அறை. அதற்கு யாரும் வருவதில்லை.” என்றார். “எங்களுக்கு அது பரவாயில்லை…அந்த அறைக்கு என்ன வாடகை?” என்று கேட்டனர். “ஒரு கட்டிலுக்கு ஒரு மாத வாடகை முப்பது ரூபாய். “கெஸ்ட்” வந்து தங்கினால் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்” என்றார். “சரி” என்றனர்.
இராமசாமிப் பிள்ளை, அவர்களுக்குப் பதிமூன்றாம் எண் அறையைத் திறந்து காட்டினார். ஒரே தூசிக் காடாக இருந்தது. “இத எல்லாம் நல்லா சுத்தப் படுத்தித் தந்துடுவோம் கவலைப் படவேண்டாம்” என்றார். 1977ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் அவன் முதலில் அந்த அறைக்குள் குடிபுகுந்தான். சில தினங்களில் “ரகுவும்” சேர்ந்து கொண்டான். மிகவும் சௌகர்யமான அறை. நிறைய நண்பர்களையும், எழுத்தாளர்களையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாகச் செய்த அறை. அந்த விடுதிக்கு மிக அருகிலேயேதான் மெரீனா கடற்கரையும், பார்த்தசாரதி கோவிலும், மகாகவி பாரதியார் இல்லமும் இருந்தது. அந்த பாரதியார் இல்லத்தை அரசாங்கம் பொதுவுடைமை ஆக்குவதற்கு முன்பாக அந்த வீட்டில் பக்திப் பாடகர் கே.வீரமணியும், கே. சோமு அண்ணா குடும்பத்தினரும் வாடகைக்குக் குடி இருந்தனர். அவர்களுடன் அவனுக்கு நல்ல தொடர்பு ஏற்படக் காரணமே ஒருவகையில் அவன் குடிருந்த சூழல்தான்.
“கலைமாமணி, கவிஞர் பொன்னடியான்”
ஒரு ஞாயிறு மாலையில் அவன் தனியாக மெரீனா கடற்க்கரைக்குச் சென்றான். அவனுக்கு கடல் மணலில் நடக்கவும், கடல் நீரில் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு கடலின் நீல வண்ணத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளவும் ரொம்பவும் பிடிக்கும். அப்படி அவன் கடலை ரசித்துவிட்டுத் திரும்பும் பொழுது அந்த மணற்பரப்பில் சுமார் ஒரு இருபது கவிஞர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு கவிதை படித்துக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களுடன் அமர்ந்து கொண்டான். அங்கு வாசிக்கப்படும் கவிதைகளை ஒருவர் நடுநாயகமாக அமர்ந்தபடி ரசித்தும், விமர்சித்தும், அந்தக் கவியரங்கத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். மெலிந்த உருவம். வெள்ளை வேட்டி, ஜிப்பா, முகத்தில் ஒரு கண்ணாடியுடன் கூர்மையான கவனிப்புடனும் , மெல்லிய சிரிப்புடனும் இருந்த அவரை அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கவிஞரிடம் அவரைக் காட்டி,” அவர் யாரு…இங்க எதற்குக் கவிதை வாசிக்கிறார்கள்” என்றான். “இதற்குக் “கடற்கரைக் கவியரங்கம்” என்று பெயர். ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமை இங்கே இப்படி இந்தக் கவியரங்கம் நடைபெறும். “தமிழ்க் கவிஞர் மன்றம்” சார்பாக நடத்துகிற இவர்தான் கவிஞர் பொன்னடியான்” என்றார். அப்படி அவனுக்குச் சொன்னவர் பெயர் கவிஞர் சமதர்மன். அந்தக் கவியரங்கம் முடிந்தவுடன் அவன் கவிஞர் பொன்னடியான் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவர் மிக்க மகிழ்ச்சியுடன்,” நீங்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த “கடற்கரைக் கவியரங்கத்திற்கு வாருங்கள். உங்களது கவிதையைப் படியுங்கள். தமிழ்க் கவிஞர் மன்றம் சார்பாக வெளிவரும் “முல்லைச்சரம்” கவிதை இதழுக்கும் உங்களது கவிதைகளை அனுப்பி வையுங்கள் என்று சொல்லி” அவனிடம் அந்த மாத முல்லைச்சரம் இதழைத் தந்து,” நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்” என்றும் அழைத்தார்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை மதியம் அவன் கவிஞர் பொன்னடியான் அவர்களின் இல்லத்திற்குச் சென்றான். அப்பொழுது அவரது வீடு கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு இடத்தில் இருந்தது. அவரது வீட்டு மாடியில் தென்னை ஓலையினால் கூரை போடப் பட்டிருக்கும். அங்குதான் அவனை அவர் அழைத்துச் சென்றார். அந்த அறையில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவனிடம் அவர் மிகுந்த அன்புடன் பேசிக் கொண்டிருந்தார். அவரது மனைவியையும், குழந்தைகளையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளைப் பற்றியும், அவரோடு தனக்கு இருந்த பழக்கத்தின் பெருமைகளைப் பற்றியும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அவன் “முல்லைச்சரம்” இதழுக்காக ஒரு கவிதையை அவரிடம் கொடுத்தான். அதைப் படித்துப் பாராட்டியதோடு மட்டுமின்றி அதை வெளியிடவும் செய்தார். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப் படுத்தினார். அந்த இருபத்திரண்டு வயதில் அவனுக்கு அது நல்ல ஊட்டச் சத்தாக இருந்தது. அடிக்கடி அவன் அவரை சந்தித்தும், கடற்கரைக் கவியரங்கத்தில் கவிதைகளை வாசித்தும் வந்தான். அங்குதான் அவனுக்கு கவிமாமணி இளந்தேவனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.
“உவமைக் கவிஞர் சுரதா”
உவமைக் கவிஞர் சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடனின் தொடர்பும் அவனுக்குக் கிடைத்தது. கவிஞர் கல்லாடன் அவனை அசோக்நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று தனக்குத் தந்தையார் “கவிஞர் சுரதா”விடம் அறிமுகம் செய்து வைத்தார். கவிஞர் சுரதா அவனைப் பார்த்து ,” நீ…பாப்பானா”…எங்கிருக்கிறாய் ” என்றார். “திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில்” என்றான். “நீ கவிதை எழுதுவியா என்றார்”. “எழுதுவேன்” என்று ஒரு கவிதையைச் சொன்னான். அவனைத் தட்டிக் கொடுத்து, அவர் எழுதிய கவிதைப் புத்தகங்களை அவனுக்குப் பரிசளித்தார். அவரது “தேன்மழை”க் கவிதைத் தொகுப்பைப் படித்து விட்டு அதில் அவரது உவமை அழகை அவன் ரசித்திருக்கிறான். ஒரு முறை “வானவில் பண்பாட்டு மையம்” மகாகவி பாரதியாரின் பிறந்ததின விழாவை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் நடத்தியது. ஜதிபல்லக்கு ஊர்வலம் முடிந்தபின்பு நடைபெற்ற கவிப்பொழிவை கவிஞர் சுரதா துவக்கி வைத்தார். அதில் அவன் பாரதியாரைப் பற்றி எட்டு வரியில் ஒரு கவிதையை வாசித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வரும் பொழுது கவிஞர் சுரதா அவனைத் தன்னருகே அழைத்து, ” நீ..பாப்பான் தானே…ஒன்னோடு கவிதைல நல்ல வீச்சிருக்கு…சிறப்பா வருவாய்” என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்திய கவிதை இதுதான்.
“காளியைக் கண்களில் வைத்தவன்
சாதனை செய்வதில் புதிறேது ?
தூளியில் தொங்கியே பழகினால்
துள்ளியே பறந்திட வழியேது ?
தேவியாம் சரஸ்வதி களிப்பிலே
தேடியே நாவிலே பதிந்திடவே
தாவியே குதிக்கிறாள் கலக்குறாள்
தங்கமாய் ஜொலிக்கிறான் பாரதியும் !
11.02.2016
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..
அருமை.. பெருமை.. அறிந்தேன் அவர்தம் திறமை!! வாழ்த்துக்கள்!!