ஓர் அரசியின் கனவில் …
— தேமொழி.
கருவுற்றிருந்த அரசி திரிசலா தேவி (Queen Trishala), நள்ளிரவில் உறங்கும்பொழுது கீழ் காணும் 14 அழகிய மங்களகரமான பொருட்களைத் தனது கனவில் கண்டார், அவை:
1. வெள்ளையானை
2. வெண்ணிறக் காளை
3. சிங்கம்
4. லக்ஷ்மி தெய்வம்
5. மலர்மாலைகள்
6. முழுநிலவு
7. சூரியன்
8. பெரிய கொடி
9. வெள்ளிக்கலசம்
10. தாமரைத் தடாகம்
11. பாற்கடல்
12. வானுலகின் பறக்கும் தேர்
13. மணிக்கற்களின் குவியல்
14. புகையற்ற நெருப்பு
1. வெள்ளையானை:
பளிங்கையும் தோற்கடிக்கும் வெண்ணிறமான யானையொன்று மிகவும் பெரிய, உயரமான, கம்பீரமான தோற்றத்தையும், நான்கு தந்தங்களைக் கொண்டிருந்தது. சிறந்த பண்புகளைக் கொண்ட யானை பற்றிய இந்தக் கனவு கூறும் நன்னிமித்தச் செய்தி, அரசிக்குப் பிறக்கும் மகன் ஞானத்தேரில் பவனி வந்து, துன்பத்தில் வாடும் உலக மக்களை அவர்களது துயரத்தில் இருந்து நீங்கும் வழியை போதித்தருளுவார் என்பதையும், பேராசைகளை ஒழிக்க உபதேசித்து உலகவாழ்வில் அவர்கள் கொண்டிருக்கும் பற்றினை ஒழிய அருள் புரிவார் என்பதையும் உணர்த்துவதாகும்.
2. வெண்ணிறக் காளை:
அரசிக்கு இரண்டாவதாக வந்த கனவில் தோன்றிய வெண்ணிறக்காளை ஒன்று வெண்தாமரையையும் விடச் சிறந்த வெண்மையைக் கொண்டிருந்தது. அழகுடனும் பொலிவுடனும் ஒளி பொருந்தி இருந்த அக்காளை நிமிர்ந்த, பெரிய, கம்பீரமான திமிலையும், மென்மையான முடிகொண்ட தோலையும், கூறிய கொம்புகளையும் கொண்டிருந்தது. இக்கனவு குறிப்பது, அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் சிறந்த ஆன்மிகத் தலைவராக பெரும் துறவிகளுக்கும், அரசர்களுக்கும், பெரும் அறிவாளிகளும் ஆன்மிக வழிகாட்டுதலைச் செய்பவராக அமைவார் என்பதாகும்.
3. சிங்கம்:
அரசியின் மூன்றாவது கனவில் வலிமை மிக்க சிங்கம் ஒன்று தோன்றியது. அது பெரிய வட்டமான தலையையும், சிவந்த முகத்தையும், திருத்தமான உதடு கொண்ட வாய் அமைப்புடன், கூர்மையான பற்களையும், கூரிய பார்வை கொண்ட ஒளிரும் கண்களையும், உறுதியான கால்களில் கூர்மையான பளபளக்கும் நகங்களையும், அழகிய மிக நீண்ட வாலையும் கொண்டிருந்தது. அரசியை நோக்கி மிகக் கம்பீரமாக நடந்து வந்த அந்தச் சிங்கம் அரசியின் வாய்வழியே அரசியின் உடலுக்குள் புகுந்தது. அந்தக் கனவு காட்டும் குறிப்பு, அரசிக்குப் பிறக்கப் போகும் ஆற்றல் மிகுந்த மகன், அச்சமின்றி அனைத்து வல்லமையும் கொண்டவராக உலகையே ஆளும் திறமை கொண்டவராக இருப்பார் என்பதாகும்.
4. லக்ஷ்மி தெய்வம்
திருமகள் அரசியின் நான்காவது கனவில் தோன்றினார். செல்வம், செழிப்பு, ஆற்றல் ஆகியவற்றின் இருப்பிடமான லக்ஷ்மி இமயமலையில் அமர்ந்திருக்க, அவரது பொற்பாதங்கள் பொன்னாமை போல ஒளிவீசித் துலங்க, மென்மையான மெல்லிய விரல்களைக் கொண்ட திருக்கரங்களுடன், மென்மையும் நேர்த்தியும் கொண்ட கருங்கூந்தலுடன் அவர் விளங்கினார். சரம் சரமாக நல்முத்தும், மரகதமும் பின்னிப் பிணைந்திருக்கும் அணிகலன்களோடு பல தங்க மாலைகளையும் அணிந்திருந்தார். அவர் தனது காதில் அணிந்திருந்த அழகிய குழைகள் அவரது தோள் வரை தொங்கி ஒளிவீசியது. கரங்களில் ஒளிபொருந்திய இரு தாமரைகளை ஏந்தியிருந்தார். இக்கனவு, அரசியின் மகன் ஒரு தீர்த்தங்கரராக செல்வச் செழிப்புடனும் சிறந்த ஆற்றலையும் கொண்டு மிகச்சிறந்தவராக விளங்குவார் என உணர்த்துவது.
5. மலர்மாலைகள்:
அரசி தனது ஐந்தாவது கனவில் வானத்தில் இருந்து தரையிறங்கும் மலர்மாலைகளைக் கண்டார். மிக அருமையான நறுமணம் வீசும் பற்பல மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் அவை. வெண்ணிற மலர்களால் ஆன அந்த மாலையின் நறுமணம் உலகில் எங்கும் கமழ்ந்தது. வெவ்வேறு பருவ காலங்களில் மலரும் மலர்களைக் கொண்டிருந்த அந்த மாலையைச் சுற்றித் தேனீக்கள் குழுமின, அவை செய்யும் ரீங்கார ஒலி உலகை நிரப்பியது. இந்தக் கனவு அரசியின் மகனின் ஆன்மிக வழிகாட்டுதல் உலகில் எங்கும் பரவும் என உணர்த்துவது.
6. முழுநிலவு:
ஆறாவதாக அரசியின் கனவில் தோன்றியது முழு நிலவு. ஒரு மங்களகரமான நன்னிமித்தம் அறிகுறியாகக் காட்சியளித்த அந்த வெண்ணிலாவின் ஒளிமிகச் சிறப்புமிக்கதாக இருந்தது. அதன் ஒளி அல்லிகளை முழுமையாக மலரச் செய்தது. மெருகூட்டப்பட்ட கண்ணாடியைப் போல அந்நிலவு ஒளிர்ந்தது. அதன் ஒளி வெண்ணிற அன்னப்பறவை போன்று திகழ்ந்தது. அதன் ஒளிவெள்ளம் கடலலைகளை ஈர்த்து வான் நோக்கி எழும்பச் செய்தது. வானின் ஒளிவீசும் அழகிய சின்னமாக காட்சியளித்தது. இக்கனவு, அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் நல்ல உடல்நலம் கொண்டவராக விளங்குவதுடன், அனைவராலும் விரும்பப்படுபவராகவும், மக்களின் துயர் நீக்கி அவர்களுக்கு மனஅமைதி வழங்குவார் என்பதை உணர்த்துவது.
7. சூரியன்:
மிகப்பெரிய வட்டவடிவில் தகதகக்கும் சூரியனைத் தனது ஏழாவது கனவில் கண்டார் அரசியார். அது இருளைக் கிழித்து காட்டுத் தீயின் செந்நிறம் போல ஒளிர்ந்தது. அதன் கதிர்கள் பட்டவுடன் செந்தாமரைகள் மலர்ந்தன. வானில் காணும் கோள்களின் தலைவனாகத் தோன்றினான் அந்தக் கதிரவன். வானில் விளக்காகச் சுடர்விட்டு ஒளிதந்து இருளில் நடக்கும் கயமைகளுக்கு முடிவு கட்டியது அந்தச் சூரியனின் சுடர்மிகு ஒளி. இந்தக் கனவு, பிறக்கப்போகும் அரசியின் மகனின் அறிவும் அருளும் மக்களின் அறியாமை என்னும் இருளை அழித்து, வாழ்வில் ஒளியேற்றும் என உணர்த்துவது.
8. பெரிய கொடி:
அரசியின் எட்டாவது கனவில் தங்கக் கம்பத்தின் மீது பட்டொளிவீசிப் பறக்கும் பெரிய கொடி ஒன்று தோன்றியது. அதன் உச்சியில் மயிலிறகுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்ணைக் கவரும் தோற்றத்தில் மென்மையாகக் காற்றில் அசைந்த அந்தக் கொடியில் சிங்கத்தின் படம் வரையப்பட்டிருந்தது. அந்தக் கனவு, உலகை நல்வழியில் நடத்தும் தலைவர் ஒருவர் பிறக்கப்போகிறார் என்று உணர்த்துவது.
9. வெள்ளிக்கலசம்:
படிகம் போன்று தெளிந்த நீர் நிரம்பிய வெள்ளிக் கலசமொன்று அரசியின் ஒன்பதாவது கனவில் தோன்றியது. குற்றங்களற்ற புனிதத் தன்மை கொண்ட நீர் நிரம்பிய அந்த அழகியக் கலசம் தாமரைமலர் சரத்தினாலும், மாலைகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. நற்குணங்களின் இருப்பிடமான புனிதர் அரசியின் மகனாகத் தோன்றுவார் என்பது இக்கனவு உணர்த்தும் பொருளாகும்.
10. தாமரைத் தடாகம்:
பத்தாவது கனவில் அரசியார் ஒரு தாமரைத் தடாகத்தைக் கண்டார். அதில் ஆயிரக்கணக்கில் மிதந்துகொண்டிருந்த தாமரை மலர்கள், சூரியக்கதிரொளி பட்டவுடன் மலர்ந்து நறுமணம் வீசின. ஒளிர்ந்த அந்தத் தடாகத்தில் கூட்டம் கூட்டமாக மீன்கள் நீந்தின, அல்லி இலைகள் மிதந்து கொண்டிருந்தன. இக்கனவு உணர்த்துவது, வாழ்க்கைச் சிக்கலில் உழலும் மக்களை, அவர்களது பிறவித் துயரத்தில் இருந்து விடுவிக்கும் ஆன்மிக அறிஞர் ஒருவர் அரசியின் மகனாகப் பிறப்பார் என்பதையே.
11. பாற்கடல்:
பொங்கிப் பாய்ந்து எங்கும் அலைபரப்பும் பாற்கடல் அரசியின் பதினோராவது கனவில் தோன்றியது. அக்கடலில் காற்று வீசிக் கொந்தளிக்கும் உயர்ந்த அலைகளும், பெரிய கடல்வாழ் உயிரினங்கள் எழுப்பும் ஆரவாரமான ஓசைகளும் நிறைந்திருந்தது. மிகப்பெரிய ஆறுகள் அக்கடலில் பாய்ந்து பெரும் சுழல்களை ஏற்படுத்தின. அக்கனவு குறிப்பது அரசிக்குப் பிறக்கப்போகும் மகன் அலைக்கழிக்கும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து, பிறப்புத்துயர் ஒழித்து முக்தி அடைவார் என்பதை.
12. வானுலகின் பறக்கும் தேர்:
அரசி கண்ட பன்னிரண்டாவது கனவில் தேவலோகத்தின் தேர் ஒன்றைக் கண்டார். நவமணிகள் பதிக்கப்பட்ட, பொன்னாலான சிறந்த 8,000 தூண்களைக்கொண்டிருந்த அந்தத்தேரின் கூரை பொற்தகடுகளால் வேயப்பட்டு, அழகிய நல்முத்துமாலைத் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதில் வரிசை வரிசையாகக் காளைகள், குதிரைகள், மனிதர்கள், முதலைகள், பறவைகள், குழந்தைகள், மான்கள், யானைகள், வனவிலங்குகள், தாமரை மலர்கள் ஆகியவற்றின் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேரில் இனிமையான தேவகானம் ஒலித்துக் கொண்டிருந்தது. மனதை மயக்கும் அகிற்புகையினால் நறுமணமூட்டப்பட்டிருந்தது. ஒளிரும் வெள்ளியின் ஒளி போன்ற வெண்ணிற ஒளி அத்தேரில் ஏற்றப்பட்டிருந்தது. அக்கனவு உணர்த்தும் பொருள், தேவலோகத்தினரும், கடவுளரும் மதிக்கும் வகையில் சிறந்த ஆன்மிகவாதியாகப் பிறக்கும் மகன் அனைவருக்கும் நல்வழிகாட்டுவார், அவரை வானுலகத்தில் உள்ளோரும் மதிப்பர் என்பதாகும்.
13. மணிக்கற்களின் குவியல்:
மேருமலை போன்ற பெரிய குன்றாக பற்பலவிதமான விலைமதிப்பற்ற நவமணிக்கற்கள் குவிந்திருப்பதையும், பூமியில் குவிந்து கிடந்த அவற்றின் ஒளி வான்வெளியைப் பிரகாசமாக்குவதையும் தனது பதின்மூன்றாவது கனவில் அரசி கண்டார். இக்கனவு, அவரது மகன் எல்லையற்ற நல்லொழுக்கத்தையும், அறிவையும் பெற்றவராக விளங்கப்போவதைக் குறிக்கிறது.
14. புகையற்ற நெருப்பு:
அரசி தனது பதினான்காவது கனவில் தீயில் சுத்தமான நெய்யும், தேனும் குடம் குடமாக வார்க்கப்படுவதையும், அத்தீயானது புகையின்றி கொழுந்துவிட்டு எரிந்து எங்கும் ஒளிவெள்ளம் பாய்வதையும் கண்டார். இக்கனவின் குறி, அரசிக்குப் பிறக்கும் மகனின் ஞானம் உலக ஞானிகள் அனைவரது ஞானத்தையும் விஞ்சும் தன்மையில் அமைந்து சிறந்த அறிஞராக விளங்குவார் என்பதாகும்.
இவற்றுடன், 15. இணைந்த இருமீன்களும் (அறிகுறி: அழகிய திருவுருவம் கொண்டவர்) , 16. பொன்னாலான அரியணையும் (அறிகுறி: மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைபவர்), என மேலும் இரு கனவுகள் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அரசியார் கருவுற்றிருக்கையில் அற்புதமான 14 சுப கனவுகளைக் கண்டதாகவும் (சுவேதாம்பர வழிமுறை சமணம்), 16 சுப கனவுகளைக் கண்டதாகவும் ( திகம்பர வழிமுறை சமணம்) தொன்மங்கள் கூறுகின்றன. சுருக்கமாக; இக்கனவுகள் கூறுவது, சிறந்த ஆன்மஞானம் கொண்ட ஒருவர் பிறந்து, அனைவராலும் போற்றப்படும் வகையில் நல்லொழுக்கம் நிரம்பியவராக, அனைத்து உயிர்களிடமும் அன்புசெலுத்தி, மக்களின் பிறவித்துயர் நீங்கும் வகையில் நல்வழி நடத்தும் அறிவுரைகளைக் கூறி, அவர்கள் முக்தி அடையும் வழியைக்காட்டும் ஆன்மிகத் தலைவராக விளங்குவார் என்பதாகும்.
தான் என்றும் கண்டிராத வியப்பைத் தரும் கனவுகளைக் கண்டதாக அரசி திரிசலா தேவி தனது கணவர் மன்னர் சித்தார்த்தரிடம் கூறினார். அரசி கண்ட கனவின் பலனை உரைக்கக்கூடிய குறி சொல்லும் அறிஞர்களைத் தனது அரசவைக்கு வரவழைத்து விளக்கம் கேட்டார் அரசர். சிறந்த ஞானத்தைக் கொண்டவராக, ஆன்மிக வழிகாட்டும் அறிஞராக ஒரு இளவரசன் பிறக்கப் போகிறார் என்று அவர்கள் யாவரும் ஒருமனதுடன் கூறினர். இந்த நன்னிமித்தம் காட்டிய கனவினைக் கண்டு ஒன்பது மாதங்கள், இரண்டு வாரங்களுக்குப் பிறகு அரசி சைத்திர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாளில் ஒரு ஆண்மகனை ஈன்றெடுத்தார். தனது மகனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த பெற்றோர், தங்களது அரசகுல வழித் தோன்றலான அந்த மகனுக்கு, ‘என்றும் வளரும் செல்வத்தைக் கொண்டவர்’ என்ற பொருளில் “வர்த்தமானர்” என்ற பெயர் சூட்டினர்.
இந்த வர்த்தமானரே சமணத் தொன்மங்கள் குறிக்கும் சமண சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரரும், உலகிற்கு நல்வழிகாட்டுவதற்காகப் பிறந்த சமண சமயத்தின் குருவான மகாவீரர் ஆவார். இஷ்வாகு பரம்பரைச் சேர்ந்த வர்த்தமானர், வைசாலிக்கு அருகே குன்டலகிராமா என்ற இடத்தில் (இந்நாளின் பீகார் மாநிலத்தில்) பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் வாழ்ந்தது பொ.ஆ.மு 599 – 527 காலம். தனது 30 வது வயதில் அரச வாழ்வைத் துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டு மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டினார். மகாவீரர் பிறந்த நன்னாளை இந்தியர் மகாவீரர் ஜெயந்தியாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.
________________________________________________________________________
Sources:
Picture:
Jainism: Illuminated Manuscripts and Jain art
Victoria and Albert Museum
South Kensington, United Kingdom
http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/
Information:
[1]
The Dreams of Mother Trishala
Jain Associations in North America
Colorado State University
http://www.cs.colostate.edu/~malaiya/j/dreams16/Dreams16.html
[2]
Trishala’s dreams
History of Jainism, by Ramesh Chandra Dutt (1848-1909)
http://www.herenow4u.net/index.php?id=85475
தேமொழி,
வர்த்தமானரைப் பற்றி இனியதோர் வரலாற்றுக் கதை.
History of Jainism, by Ramesh Chandra Dutt (1848-1909).
It was the same Ramesh Chandra Dutt who has written Ramayana & Mahabharata in English couplets, the book I have.
S. Jayabarathan
ஆம், நல்லதொரு கதையே. படித்து கருத்து வழங்கியமைக்கும், மேலதிகத் தகவல் கொடுத்தமைக்கும் நன்றி ஐயா. நானும் Ramesh Chandra Dutt பற்றி படிக்கும் பொழுது, உங்கள் சீதாயணம் பற்றிய தகவல் பகிர்வில் கேட்ட நினைவு வந்தது.
அன்புடன்
…… தேமொழி