இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302

சக்தி சக்திதாசன்
லண்டன்

அன்பினிய வல்லமை வாசக இதயங்களே !

உங்களனைவருடனும் மீண்டும் ஒரு மடல் மூலம் இணைவதில் மகிழ்கிறேன்.

இங்கிலாந்தின் நிகழ்வுகள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எமது பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பது ஒருபுறமிருக்க சர்வதேச நாடுகளின் அரசியல் நகர்வுகளின் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில் இங்கிலாந்து நாடு இருக்கிறது.

குறிப்பாக யூக்கிரேன் , ரஸ்ய நாட்டுப் போரும் அதன் முன்னெடுப்புகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் நிலைப்பாட்டின் பக்க விளைவுகள் இங்கிலாந்துப் பிரதமருக்கு சங்கடத்தை விளைவித்தது.

ஆனால் சங்கடங்களில் சில சாதுரியங்களும் கிடைக்கும் சாத்தியக்கூறும் உள்ளதல்லவா ?

அது என்ன என்கிறீர்களா ?

இங்கிலாந்தின் உள்நாட்டு பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்கும் பொருட்டு பல சிக்கலான பொருளாதார திட்டங்களை முன்வைத்ததால் செல்வக்கு சரியக் கண்டார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

அந்நேரம்தான் அதிபர் ட்ரம்ப்பின் யூக்கிறேன் ரஸ்யப் போரின் மீதான திருப்பங்களின் தாக்கம் ஐரோப்பாவின் மீது விழுந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், அமேரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலைச் சமாளிக்கும் பாலமாகச் செயற்படத் தலைப்பட்டார் கியர் ஸ்டாமர்.

யூக்கிறேன் நாட்டிற்குச் சார்பாக செயற்பட்டு வந்த அமெரிக்க அரசியல் போக்கை மாற்றிய ட்ரெம்ப்பின் தாக்கம் ஏற்படுத்திய இடைவெளியை சமப்படுத்த இணக்கமுற்ற நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் தலமைப் பொறுப்பை கியர் ஸ்டாமர் ஏற்றார்.

சரிந்து கொண்டிருந்த அவரது அரசியல் செல்வாக்குக்கு முட்டுக் கொடுப்பது போல் அவர் மீது மக்களுக்கு ஒரு மதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

அதேநேரம் அமெரிக்க அதிபர் ஏற்படுத்திய இறக்குமதி வரி அதிகரிப்பினால் ஏற்பட்ட உலகச் சந்தையின் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய ஒரு அரசியல் அவசியம் ஏற்பட்டது.

அந்த நிலையில் அமெரிக்க அதிபருடனான உறவினை மிகவும் மென்மையான ஒரு போக்கில் எமது பிரதமர் அணுகிய முறை அவரது கட்சியில் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகளிலும் அவருக்கு ஓரளவு ஆதரவை கொடுக்கும் ஒரு நிலையைத் தோற்றியுள்ளது.

அடுத்து பிரித்தானிய இரும்பு ஆலையின் நிலை பெரிய செய்தியாகியது.

பிரித்தானியாவின் தொழிற்சாலைகளில் பெயர் பெற்றிருந்த பிரித்தானிய இரும்பு ஆலை பிரித்தானிய தொழிலதிபர்களிடமிருந்து சீன முதலீட்டாளர்களின் கைவசத்திலிருந்தது.

அவ்வாலை இலாபகரமானதாக இல்லாமல் நட்டத்தில் ஓடுகிறது என்பதால் அதனை மூடப்போவதாக அதன் சீன முதலீட்டாளர்கள் அறிவித்தார்கள்.

பிரித்தானியாவின் அடையாளமாக கால காலமாக ஓடிக்கொண்டிருந்த தொழிற்சாலை மூடப்பட்டால் அதனால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் கணக்கிலடங்கா

அதனைக் கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் அவசரச் சட்டத்தை அமுல் படுத்தி அவ்வாலையை தேசிய உடமையாக்கி அத்தொழிற்சாலையை உடனடி மூடுதலிலிருந்து காப்பாற்றியுள்ளது.

பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையும் அனைவரினதும் ஆதரவைப் பெற்றுள்ளது.

அதிகாரத்திலிருக்கும் பிரித்தானிய அரசுகளுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கும் பிரச்சனையாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரெஞ்சுக் கரையிலிருந்து நுழையும் “படகு அகதிகள்” இருந்து வருகிறார்கள்.

இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்ப்பதற்கான பலவித நடவடிக்கைககை அரசு முடுக்கி விட்டாலும் அது குறைவதாகத் தெரியவில்லை.

அதற்கான லேபர் அரசின் முக்கிய நகர்வுகள் கொடுக்கப்போகும் விளைவுகளை எதிர்நோக்கியபடி அரசியல் அவதானிகள்.

அடுத்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை பாரிய மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது.

சிலகாலமாகவே இங்கிலாந்தின் சுகாதார அமைச்சு பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

மருத்துவர் பற்றாக்குறை , தாதிகள் பற்றாக்குறை, மனநோய் பிரிவுகளுக்கான சேவைகளின் பற்றாக்குறையென பல குறைபாடுககௌச் சந்தித்தது.

சுகாதார அமைச்சர் பல மாதங்களாக நடாத்திய ஆய்வுகளின் பின்னர் தேசிய சுகாதார சேவையின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய கட்டமைப்பின் கீழ் ஒரே நடவடிக்கைகள் பல பிரிவுகளினால் பல தடவைகள் மேற்கொள்ளப்படுவதால் தேவைக்கதிகமான உத்தியோகத்தர்களுடன் , அளவுக்கதிகமான நேரம் செலவிடப்படுவதாகக் கூறியுள்ளார்.

நோயாளிகள் சிகிச்சை பெறுவது இலவசமாகவே நடைபெறுவது என்பதை இன்றுவரை கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது.

ஆனால் இச்சேவையைபிதே கொள்கையில் தொடர்ந்தும் கடைப்பிடிக்க இத்தகைய மாற்றம் அவசியமானது என்கிறார் சுகாதார அமைச்சர்.

மருத்துவசேவை பிரித்தானியவாசிகளுக்கு இலவசம் என்றாலும் உல்லாசப் பிரயாணிகளாக வருவோரும், பிரித்தானியவாசிகளாக அல்லாதோரும் கட்டணம் அறவிடப்படுவார்கள் என்பது சிலகாலங்களின் முன்னாலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

கடந்த கன்சர்வேடிவ் கட்சி அரசிலிருந்த போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தம் லேபர் கட்சி தேர்தல் வெற்றி பெற்று அரசமைத்ததும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு மீண்டும் ஒரு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. மருத்துவ பதவிகளில் அதியுயர் பதவியான மருத்துவ விசேடத்துறை நிபுணர்கள் தமக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததினால் தாம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

அந்த முனைப்பில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சி அரசுக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

அவர்கள் பொருளாதாரத்தைச் சீராக்கவென்று எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கப் போகிறதா இல்லையா என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கத் தொடங்கப் போகிறது.

இந்த இடைவெளியை அரசியல் , பொருளாதார விமர்சகர்கள் , நிபுணர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லேபர் அரசாங்கமும் , அக்கட்சியின் தலைமைத்துவமும் தம் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பொதுமக்களாகிய நாம் இப்புதிய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று கூறி பதவிக்கு வந்தவ்ர்கள் கொண்டு வந்த மாற்றங்கள் நம் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்று அதை நோக்கிய கணிப்பிலிருக்கிறோம்.

அதேநேரம் சர்வதேச அரங்கில் அமெரிக்க நாட்டின் தலைமைத்துவம் கொண்டுவரும் அதீத மாற்றங்கள் ஏற்படுத்தும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தப்போகும் மாற்றங்களின் விளைவு என்ன ?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்களை தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என்று சூளுரைத்து பதவிக்கு வந்த அதிபர் ட்ரம்ப் நூறு நாட்களாகியும் எந்தப் போரையும் நிறுத்த முடியாமல் தவிக்கிறார்.

அமெரிக்கா , சீனாவுக்கெதிரான வர்த்தகப் போரில் சிக்கிக்கொண்டு பல நாடுகள் அல்லாடுகின்றன.

மியான்மார் நிலநடுக்கத்தை ஏற்படுத்திய இயற்கையின் சீற்றம் காவு கொண்ட உயிர்கள் ஆயிரமாயிரம்.

ஆக மொத்தம் விடையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் சில வினாக்களின் விடைகளையாவது அடுத்த மடலில் பகிர முடியுமா பார்ப்போம்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *