பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்
உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
கற்று அறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
தன் செய்ய, தானே கெடும்.
பொருள் விளக்கம்:
எதிர்கொள்ளும் இடர் ஒவ்வொன்றுக்கும் தன்னை வலிமை படுத்திக் கொள்வது தேவையா? சான்றோர்களைச் சினம் கொள்ளச் செய்யாமல் நன்னெறி வழி நடப்பதே தற்காப்பாக அமைந்து பகையை அழித்துவிடும் (கற்றறிந்த சான்றோர் தமக்கு ஏற்படும் சினத்தைக் கட்டுக்குள் வைத்தாலே பகையை வென்றுவிடலாம் என்றும் பொருள் கொள்ளலாம்). உழவு செய்து நெல்பயிரிடும் வயலில் நெல் செறிந்து வளர்ந்தால் அங்குள்ள புல் தானே அழிந்துபடும் (களை நீக்கவென தனியான முயற்சி எதுவும் தேவையில்லை). அவ்வாறே தீராத பகையும், ஒருவர் தன்னை வலிமைப்படுத்திக் கொள்வாரானால் தானே அழிந்துவிடும் (பகை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்காமலே, எதிராளியின் வலிமையை அறிந்து கொண்ட பகைவர் தாமே ஒடுங்கிவிடுவர்).
பழமொழி சொல்லும் பாடம்: கற்றோருக்கு சினமூட்டி பகைத்துக் கொள்ளாமல் நன்னெறி வழி நடப்பவர்க்குச் சான்றோர் பலர் ஆதரவாளராக இருப்பதன் காரணமாக வலிமை மிகுந்தவராகவும் இருப்பார். வலிமை மிகுந்த அவரை எதிரிகள் தாக்கத் துணிய மாட்டார்கள். கற்றோர்கள் தங்கள் சினத்தைக் கட்டுப்படுத்தி சீராகச் சிந்திக்கும் திறன்மூலம், பதற்ற மற்றவர்களாய் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் வழி அறிவர். அந்த வலிமை பகையை அழித்துவிட உதவும் எனவும் பொருள் கொள்ளலாம். தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகை அறிந்தவரிடம் பகைமை பாராட்டுபவர் இருக்கமாட்டார் என்பதை விளக்க விரும்பும் வள்ளுவரும்,
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. (குறள்: 878)
வழிமுறைகளை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பை ஏற்படுத்திக் கொண்டவரை எதிர்கொள்ள இயலாமல் பகைவரின் ஆணவம் தானே அழியும், பகையும் ஒழியும் என்கிறார்.