பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12767778_963779777009555_639098695_n
ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், கவிஞர் மதுமிதா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி … (52)

 1. தூசி படிந்த பொக்கிஷங்கள்

  புத்தகங்கள் , ஏடுகளில் புன்னகைக்கும் ரத்தினங்கள்!
  பொத்திவைத்த அறிவென்னும் பொக்கிஷத்தின் சுரங்கங்கள்!

  உள்ளூரின் இதழ்முதலாய் உலகஇலக் கியம்வரைக்கும்
  எல்லாமும் இங்குண்டு,எடுப்பதெல்லாம் குறைந்தவிலை!

  கடைகடையாய் அலைந்தபின்னும் காணாத புத்தகமும்
  நடைபாதைக் கடையிதிலே நாம்காணக் கிடைப்பதுண்டு!

  புதிதாக வந்தபோது பொலிவாக இருந்ததுதான்
  எதனாலோ இங்குவந்து இயல்புகெட்டுக் கிடக்கிறது!

  பயனுள்ள வரைக்கும்தான் பலர்நம்மைப் புகழ்ந்திடுவார்
  பயன்குறைந்து போய்விட்டால் பாதையோரப் புத்தகம்தான்!

  நிலைமையது தாழாமல் நீடித்தால் மதிப்புண்டு
  விலைகுறைந்து போகாமல் வேண்டிடுவோம் வரமொன்று!

  -மதிபாலன்

 2. நீர் அடித்துப் போன 
  புத்தக நினைவுகளின் 
  கூட்டுக்குள் 
  திறந்து விடப் பட்டுக் 
  கொண்டேயிருக்கிறது,
  சிறுவயது முதல் சேர்த்து 
  வைத்த அவரின் நூலகம்… 

  அது 
  வழி மாறிய பதிவுகளை 
  கரையெங்கும் 
  விட்டுப் போகிறது…

  மதி கூறிய 
  உண்மைகளை மனம் அறிய 
  தொட்டுப் போகிறது…

  அடையாளம் தெரியாமலே 
  அவைகளோடு 
  போய்விட்டவர் 
  அவராகவும் இருக்கலாம்… 

  ஒரு புத்தகம், அதில் 
  சில பக்கம்
  அல்லது ஒரு பக்கம் ஒரே 
  ஒரு பக்கம் 
  எவர் கையிலாவது அகப்படலாம்….

  மண்ணுக்குள் வேராக விதி செய்யலாம்…
  வினை செய்யலாம்…
  காலம் முழுக்க 
  அடையாளமின்றி
  படித்தவர்,
  கடல் தாண்டியும் ஏதாவதொரு 
  தீவுக்குள் விதையலாம்… 

  புத்தகங்கள் மரணிப்பதில்லை,
  படித்த அவரைப் போலவே……

  கவிஜி 

 3. புத்தகங்கள்

  வண்ண வண்ண சிந்தனைகளை
  வார்த்தெடுத்தப் புத்தகங்கள்
  எண்ணக் குவியல்களால்
  புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள்
  இன்று
  கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது
  காலத்தின் கோலம்!

  அன்று
  வாய் மொழிச் சொற்களில்
  வலம் வந்த சிந்தனைகள்
  கல்லுக்குள் இடம் மாறி
  ஓலைக்குள் உருமாறி
  தொழில் புரட்சி ஈன்றெடுத்த
  அச்சு இயந்திரத்தால்
  காகிதத்திற்குள் புகுந்து
  புத்தகமாய் பரிணமித்தது!

  புவியின் நிலை மாற்ற
  புத்தகங்கள் ஆற்றிய பணி
  போற்றற்குரியது!

  இன்று
  காகிதத்திலிருந்து
  டிஜிட்டலுக்குத் தாவும்
  அறிவியல் தருணம்!

  வடிவ மாற்றமென்பது
  இயற்கையின் இயல்பே

  போர்டு ஐகானில் பயணிப்பவர்கள்
  மாட்டு வண்டிகள்
  மரணித்துவிட்டதே என்று
  கவலை கொள்வதில்லை!
  என்றாலும்
  புத்தகங்களுக்கும் 
  நமக்குமான உறவை
  எந்த டிஜிட்டலினாலும்
  டெலிட் செய்ய முடியாது!
   

 4. புத்தகமே…

  அறிவு நீரூற்று
  அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது
  அட்டைகளுக்குள்..

  எடுத்துக் குடிப்பவரை
  ஏமாற்றியதில்லை என்றும்,
  ஏற்றித்தான் விடுகிறது
  குன்றாய் உயர..

  இதனிடம் தலைகுனிந்தால்,
  தலைநிமிரலாம் வாழ்வில்..

  ஆனால் இன்று அது
  அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
  நூலகத்தில்,
  எடுத்துப்பார்க்க ஆளின்றி..

  கொலுவிருக்கிறது புத்தகக்கடையில் 
  கூடுதல் விலை மதிப்பில்..

  அந்த அறிவு இங்கே
  பேரம் பேசப்படுகிறது-
  பழைய புத்தகக் கடையில்…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. நேரு பாராளுமன்றத்தில்

  புதிய புதிய கருத்துக்களையும்

  உதாரண உவமைகளையும் சொல்லுவாராம்

  கேட்கின்ற அத்துனைப் பேருக்கும்

  ஆச்சரியம் நேருக்கு மட்டும் எப்படி

  நேரம் கிடைகிறது ஒருவர் துணிந்து 

  கேட்டே விட்டாராம் எப்படி என்று

  திருடினேன் என்றாராம் நேரு

  அரங்கமே அதிர்ந்து போனது

  புரியவில்லை என்றாரம் அவர்

  என் உதவியாளர் உறங்குவதற்கு 

  நான்கு மணி நேரம் தருவார்

  அதில் ஒரு மணி நேரம் திருடி 

  புதிய புத்தகங்களை படிப்பேன்

  என்று சொல்லி மீண்டும் அரங்கத்தை 

  அதிர வைத்தாராம் நேரு

  புத்தகம் வெறும் காகிதமல்ல

  பொக்கிஷம் அதை புரிந்து படித்தவர்கள்

  சொத்தான காகிதம் புரியாதவர்கள்

  செத்துப்போன காகிதம்

  பழைய புத்தகங்கள் அல்ல

  பல மாற்றங்களை கொண்டு 

  வரும் நம் வாழ்க்கையில்

  படித்துப்பார் நீ கோபுரம்தான்

                         – க.கமலகண்ணன்

 6. படவரி 52.
  பழசானாலும் புத்தகங்கள் பதுமநிதி.

  வேண்டாமென்று வீசுவோர் பலர் அதை
  வேண்டுமென்று தேடுவோர் பலா,; அதை
  தோண்டி எடுக்கட்டுமென்ற தாராள மனதில்
  தோராயமாய் விற்கிறார் இங்கு இவர்.
  பாதையோரப் புத்தக அகமானாலும் தரம்
  போதையெனும் அறிவு பெற வரம்.
  கீதையும் பெரும் காதைகளும் மலிவாகி
  பாதையாகும் அறிவுச் சுடர் ஏற்ற.

  அழகோ அலங்கோலமோ அறிவிற்கேது தரம்!
  பழையதோ புதியதோ அறிவு மொழியுரம்.
  பழகிய அறிவுச் சாரற் குளிப்பாம்
  புத்தக வனத்துக் கருத்துணர்வுப் பொக்கிசம்.
  வாசிப்பு அருகிடும் காலத்தில் புதையலாய்
  நேசித்து அறிவூற்றில் நீந்திப் பயனடைவார்.
  புத்தகப் பக்கத்தில் ஒளிரும் முத்துக்கள்
  சத்தை உணராதவன் செத்தவன் ஆகிறான்.

  பாம்புப் புற்று போன்ற அடுக்கில்
  தோம்பு, தோட்டக்கலை, தொல்காப்பியம் ஈறாக
  கூம்பகம், கூட்டுறவு, கூத்துப் பாட்டென
  வேம்போ இனிப்போ அத்தனையும் தேடலாம்.
  பதுக்கிடு! என்றும் பழசென்று வீசாதே!
  பதுமநிதி போன்றது பன்முக நூல்கள்.
  மதுரவாக்கு  பழைய நூல்களும் வளர்க்கும்
  பொதுவான நல்லறிவு! தேடிப் படி!

  வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  27-2-2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *