வாக்குரிமைக்காகப் போராடிய இளவரசி (தொடர்ச்சி …)
— தேமொழி.
இந்தியாவிலிருந்து புரட்சி மனப்பான்மையுடன் இங்கிலாந்து திரும்பிய இளவரசி சோஃபியா துலிப் சிங்கிற்கு அவரது சகோதரிகளின் வாழ்க்கையே பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கத் தேவை இருப்பதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டியது. சோஃபியாவின் சகோதரி பம்பா மருத்துவம் படிக்க விரும்பி அமெரிக்க சிக்காகோ நகரின் மருத்துவக் கல்லூரியில் கல்வியைத் துவக்கினார். அவர் கல்வி முற்றுப்பெறுவதற்குள், பல்கலைக்கழகம் பெண்கள் அறுவை சிகிச்சை செய்யத் திறன் கொண்டவர்கள் அல்ல என்ற காரணத்தைக் கற்பித்து அவரை வெளியேற்றியது. மற்றொரு சகோதரி கேத்தரின் ஒரு பெண்ணை தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றார். அவருக்கும் சமுதாயத்தின் புறக்கணிப்பே பரிசாகக் கிடைத்தது. பெண்களின் வாழ்வும் எதிர்காலமும் பெண்களின் விருப்பப்படி இல்லாமல், மற்றவர்கள் முடிவால் நிர்ணயிக்கப் படுவதைக் கண்டு குமைந்தார் இளவரசி. இதற்கு அடிப்படைக் காரணம் பெண்களுக்கு அரசியலில், சட்ட வரைமுறைகளை உருவாக்குவதில் உரிமை மறுக்கப்படுவதன் காரணம் என்று தெளிவாகப் புரிந்து கொண்டார்.
பெண்கள் ஒடுக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று இளவரசி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது சில பெண்ணியவாதிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவரது தோழிகளில் ஒருவரான ‘உனா டக்டேல்’ (Una Dugdale), என்பவர் ‘பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம்‘ (WSPU- The Women’s Social and Political Union) என்ற அமைப்பின் உறுப்பினர். அவர் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய ‘எம்மிலின் பான்க்ரஸ்ட்’ (Emmeline Pankhurst) என்பவரின் தோழியும் ஆவார். அவர் தான் சார்ந்துள்ள பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம் பற்றியும், பெண்களின் வாக்குரிமைக்காகப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருப்பதையும் கூறவே, இளவரசி தனது கொள்கைகளுடன் ஒத்திருந்த பெண்கள் சமூக அரசியல் ஒன்றியத்துடன் இணைந்து போராட முடிவெடுத்து உடனே தன்னை உறுப்பினராக்கிக் கொண்டார்.
மறுஆண்டு வரவிருக்கும் தேர்தலில் வாக்குரிமை பெற்றுவிடவேண்டும் என்ற முடிவோடு ஒரு சட்டவரைவை (மசோதா/bill) பெண்கள் சமூக அரசியல் ஒன்றியம் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தது. இதில் சற்றும் ஒப்புதல் இல்லாதிருந்த தலைமை அமைச்சர் ‘ஹெர்பர்ட் ஆஸ்கவித்’ (Prime Minister Herbert Henry Asquith)அதில் அக்கறை காட்டாது புறக்கணித்தார். மகளிர் போராட முடிவெடுத்தனர். ‘எம்மிலின் பான்க்ரஸ்ட்’ உட்பட 12 பெண்கள் தலைமையில், சற்றொப்ப 300 பெண்கள் ஒருங்கிணைந்து தலைமை அமைச்சரைச் சந்திக்க விரும்பி, மக்களாட்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற சதுக்கத்தை (Parliament Square, Westminster, London) நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். பாராளுமன்றத்திற்குப் போகும் அவர்களைத் தடை செய்ய அரசும் ஒரு பெரிய படையாகக் காவல்துறை வீரர்களை நிறுத்தி அரண் எழுப்பியது. அவர்களைப் பொருட்படுத்தாத பெண்கள் காவலர்களைத் தள்ளிக்கொண்டு முன்னேற முயல, காவலர்கள் பெண்களை பின்னோக்கித் தள்ள, பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு போராட்டம் வன்முறையாக மாறியது. பல பெண்கள் தடிகொண்டு தாக்கப் பட்டனர். சாலைகளில் தூக்கி வீசப்பட்டனர்.
பல பெண்களுக்கு கை கால் முறிவு ஏற்பட்டது. காவலர்களில் சிலர், அடிபட்டு கைகளால் தவழ்ந்து ஊர்ந்து முன்னேறிய பெண் ஒருவரைக் கொத்தாக அள்ளி சாலையில் ஓங்கி ஓங்கி மோதித் தாக்கி மிதித்த வன்செயலைக் கண்ணுற்றுக் கொதித்துப் போனார் சோஃபியா. தனது பாதுகாப்பைக் கருதாது அந்தப் பெண்ணிற்கும் காவலர்களுக்கும் இடையில் குறுக்கேப் பாய்ந்தார். அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்ட புகழ்பெற்ற சோஃபியாவை அடையாளம் தெரிந்து கொண்ட காவலர்கள் அதிர்ச்சியில் பின்வாங்கி ஓடிவிட்டனர். அதற்குள் வன்முறையில் ஈடுபட்ட காவல் துறை ஊழியரின் அடையாள வில்லையில் அவரது எண் V700எனக் கவனித்துக் கொண்டார் சோஃபியா. மொத்தத்தில் அந்த இடம் ஒரு போர்க்களம் போல மாறியது, ஆயுதம் தாங்கிய காவல்துறையினர், ஆயுதமற்ற மங்கையரைத் தாக்கி வீழ்த்தினர். நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் போராட்டத்தின் முடிவில் கைது செய்யப்பட்டார்கள். இந்தப் போராட்டம் நடந்த நவம்பர் 18, 1910 – ஆவது நாள் இங்கிலாந்தின் வரலாற்றில் “கருப்பு வெள்ளிக்கிழமை” (November 18th, 1910 – ‘Black Friday’)என்ற பெயரைப் பெற்றது. நாளிதழ்கள் வெளியிட்ட காவல்துறையின் வன்முறைக் காட்சிகளின் படங்கள் மக்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
வன்முறையில் ஈடுபட்ட காவல் துறை ஊழியரின் அடையாளக் குறிப்புடன் காவல்துறையைக் குற்றம் சாட்டும் கடிதமொன்றை காவல்துறை உயர் அதிகாரிக்கு சோஃபியா அனுப்பினார். இந்த நிகழ்வு ஏற்படுத்திய பரபரப்பில், அதனைக் கையாண்ட முறைகேட்டிற்காக இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் ‘வின்ஸ்டன் சர்ச்சில்’ (Winston Churchill, Home Secretary)கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பெண்களின் மீது குற்றம் சுமத்தாமல் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார். அவர்கள் மீது வழக்குத் தொடுத்தால் அனுதாப அலை அவர்கள் பக்கம் திரும்பி அரசுக்கு அதிக இழப்பு ஏற்படுமென்பது அரசுத் தரப்புக் கணிப்பு. சோஃபியாவின் குற்றச்சாட்டுக் கடிதமும் சர்ச்சிலின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர் தனது கைப்பட இதற்கு மறுமொழி எதுவும் அப்பெண்ணிற்கு அனுப்பவேண்டாம் என்ற குறிப்பினை எழுதிக் கையெழுத்திட்டார்.
அரசகுடும்பத் தொடர்புடைய பெண்ணே அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்வது என்பது துரோகமாகக் கருதப்பட்டதுடன், சர்ச்சிலுக்கு சோஃபியாவின் நடவடிக்கைகள் ஏற்புடையதாகவும் இல்லை. தட்டிக் கழித்தால் அனைத்தும் அடங்கிவிடும் என்ற எண்ணம் கொண்டார் சர்ச்சில். ஆனால் அது அவர் செய்த தப்புக் கணக்கு என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. போராளியாக இந்தியாவில் இருந்து திரும்பியிருந்த சோஃபியாவும் இந்த புறக்கணிப்பையும், அவமதிப்பையும் ஏற்கத் தயாராகவும் இல்லை. வாக்குரிமைக்காகப் போராடிய பெண்கள் அனைவரும் இது போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டனர்.
பல போராட்டங்களில் பெண்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாலும், அரசு சோஃபியாவை புறக்கணித்து அடக்கி வாசித்தது. அவரைவிடத் தீவிரம் குறைந்த போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் பலர் கைது செய்யப்பட்டனர், சிறைக்குச் சென்றனர். உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு திணிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். ஆனால் புகழ் பெற்ற சோஃபியாவை சிறைக்கு அனுப்பினால் அது போராட்டம் செய்யும் மகளிருக்குத்தான் விளம்பரமாக அமைந்து மக்களின் ஆதரவு பெருகும் என்று அரசு அவரைப் பொருட்படுத்தவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சோஃபியாவும், அரசுக்கு முடிந்தவரைத் தொல்லை கொடுத்து கவன ஈர்ப்பு செய்யத் திட்டமிட்டார். வாக்குரிமைப் போராட்ட செய்தித்தாள்களை அவர் தான் குடியிருந்த அரசு மாளிகையின் வெளிப்புறமே விநியோகிக்கத் துவங்கினார். போராட்டம் தொடர்ந்தது. சோஃபியாவும் தனது தருணத்திற்காகக் காத்திருந்தார். அந்த நாளும் வந்தது, அது பிப்ரவரி 6, 1911. சோஃபியா குறிவைத்தது பெண்கள் வாக்குரிமைப் போராட்டத்தின் முதன்மை எதிரியான தலைமை அமைச்சர் ஹெர்பர்ட் ஆஸ்கவித் அவர்களை. போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்த நாள், இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் பேரன் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவிருந்த நாள்.
எண் 10 டௌனிங் ஸ்ட்ரீட் (10 Downing Street) தலைமை அமைச்சர் அலுவலகம் முன்பு வழக்கம் போல சுற்றுலாப்பயணிகள், நாட்டுமக்கள் எனக் கூட்டம் நிரம்பியிருந்தது. அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் அமைச்சருக்குக் கையசைத்து வணக்கம் சொல்லக் கூட்டத்தினர் வழக்கம் போலக் காத்திருந்தனர். காவல்துறையினரின் கவனத்தைக் கவராத வண்ணம் நீண்ட ஆடை அணிந்திருந்த சோஃபியாவும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து நின்றார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் உரைநிகழ்த்துவதில் பங்கேற்கத் தலைமை அமைச்சரும் அலுவலகத்தில் இருந்து வெளிவந்து காரில் பயணமானார். தனது உடையில் மறைத்து வைத்திருந்த “பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும்” (‘Votes for Women’) என்று எழுதப் பட்டிருந்த பதாகையை உருவி எடுத்துக் கொண்டு, அமைச்சரின் ஊர்தி முன் பாய்ந்து கூச்சலிட்டார் சோஃபியா. வழக்கம் போல காவல் துறையினர் வந்தனர், வழக்கம் போல அவரைக் கைது செய்து குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றனர், வழக்கம் போலவே அவரைக் குற்றம் சாட்டாது விடுவித்து விட்டனர். பேரரசியின் பேரன் பாராளுமன்ற உரை நிகழ்த்தும்நாளில், பேரரசியின் காட் டாட்டர் அரசுக்கு எதிராகப் போராடியதில் சிறை சென்றார் என்பது போன்ற செய்திவரவிடாமல், வதந்தி பரவாமல், நடந்த நிகழ்ச்சி மக்கள் கவனத்தைக் கவரவிடாமல் சோஃபியாவின் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தது அரசு. இந்தப் பெண்ணை அடக்கி வைக்க வழியே இல்லையா என்று அரச குடும்பத்திலும், அவர் வாழ்ந்த அரசு குடியிருப்புப் பகுதியிலும் முணுமுணுப்புகள் எழத் துவங்கின.
இதை அத்தோடு விடுவதாக இல்லை சோஃபியாவும். தொடர்ந்து ‘பெண்களின் வரிகொடா இயக்கத்தில்’ (the Women’s Tax Resistance League)பங்கேற்றார். அவரிடம் இருக்கும் குதிரைகள், வண்டி, நாய்க்குட்டிகள், வேலைக்காரர்கள் வைத்திருப்பது போன்ற உரிமம் பெற வேண்டிய தகுதிகளுக்கு வரி கட்ட மறுத்தார். இருமுறை (மே 1911 மற்றும் டிசம்பர் 1913 ஆம் ஆண்டுகள்) நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டார். இரண்டாம் முறையாக, 1913 ஆம் ஆண்டு வரவழைக்கப்பட்ட பொழுது ஏன் வரி கட்டவில்லை என்ற நீதிபதியின் கேள்விக்கு….
“நாட்டின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்கும் செல்வாக்கு எனக்கு இல்லாததால் முழுமனதுடன் வரி செலுத்த என்னால் இயலவில்லை. நான் அளிக்கும் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு வாய்ப்பில்லை. இது சற்றும் முறையன்று. இங்கிலாந்து என்று மகளிருக்கு வாக்குரிமை அளித்து, என்று எனது குடியுரிமைக்கு மதிப்பு கொடுக்கிறதோ அன்று நிச்சயமாக முழு விருப்பத்துடன் நான் நாட்டின் பராமரிப்பிற்காக வரி அளிப்பேன். நாட்டின் நலத்தில் எனக்கு சார்பாண்மை தகுதி இல்லாதபொழுது, நாட்டிற்கு வரி செலுத்தும் தகுதியை மட்டும் நான் பெற்றுள்ளதாக ஏன் கருதப்படவேண்டும்?”
என்று பதிலளித்தார். பொதுவாக வரி கொடாமல் இருப்பது சட்டப்படி சிறைக்குச் செல்ல வேண்டிய ஒரு குற்றம். அதை எதிர்பார்த்துத்தான் சோஃபியா இந்த நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் நீதிபதி ஒரு குறைந்த அளவு அபராதம் விதித்து அதைக் கட்டினால் போதும் எனத் தீர்ப்பளித்து அனுப்பினார். அபராதமும் கட்ட மறுத்தார் சோஃபியா. அமீனாக்கள் அவரது மாளிகையில் நுழைந்து அபராதத்தைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்த பொழுது சோஃபியா அமைதி காத்தார். வேறுவழியின்றி அவர்கள் அபராதத் தொகைக்கு ஈடாக அவரது வைரம், முத்து பதித்த அணிகலன்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். சோஃபியாவும் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை, மதிப்பு மிக்க தனது பரம்பரைச் சொத்துகளே போனாலும் அவற்றையும் இழக்கத் தயாராகவே அவர் இருந்தார். அவரது அணிகலன்கள் ஏலத்தில் விடப்பட்டு அபராதத்திற்கானத் தொகையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சோஃபியாவின் அணிகலன்களை அவரது தோழி ‘ஜோப்லிங் ரோவ்’ (Jopling Rowe) என்பவரே ஏலத்தில் எடுத்து சோஃபியாவிடம் திருப்பிக் கொடுத்தார். சோஃபியாவின் செயல்கள் பெண்கள் போராட்டத்திற்கு நல்ல கவன ஈர்ப்பாக அமைந்ததில் சோஃபியாவிற்கும், போராட்டக் குழுவினருக்கும் மிகவும் மகிழ்ச்சி.
தொடர்ந்து மறு ஆண்டே 1914 – இல் முதல் உலகப் போர் துவங்கியது. மகளிர் அணியினர் நாட்டுத் தொண்டிற்கு முன்னுரிமை அளித்து செயல்படத் தொடங்கினர். சோஃபியா தாதியர் பயிற்சி பெற்று படையில் இருந்த காயமடைந்த இந்திய வீரர்களுக்குப் பணிபுரிந்தார். பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங்கின் பேத்தியே தங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்த பொழுது இந்திய வீரர்கள் மிகவும் நெகிழ்ந்து போயினர். இந்தியப்படையில் இருந்த பஞ்சாபி வீரர்களுக்கு கொடிநாள் வணக்கம் செய்வதற்கும் ஒத்துழைப்புக் கொடுத்தார் சோஃபியா. போர்க்காலத்தில் மகளிர் அனைத்துத் துறையிலும் ஈடுபட்டு சிறப்பாகப் பங்காற்றியது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநிலையிலும் பெரிய மாறுதலைக் கொண்டுவந்தது. நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் அளித்த பங்கும் உணரப்பட்டது. அதன் விளைவாக, வாக்குரிமை கேட்டுப் போராடிய பெண்களின் போராட்டம் இரு கட்டமாக வெற்றி பெற்றது.
முதலில் 1918 ஆம் ஆண்டு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, சொத்துரிமை உள்ள பெண்களுக்கு, படித்த பட்டதாரிப் பெண்களுக்கு, என்றெல்லாம் கட்டுப்பாட்டுடன் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது; மகளிர் வாக்குரிமை சட்டத்தின் சட்டவரையறைக்கு 385 வாக்குகள் ஆதரவாகவும், வெறும் 55 வாக்குகள் எதிர்ப்பு என்ற நிலையில் அது மாபெரும் வெற்றி அடைந்தது.
பின்னர் பத்தாண்டுகள் கழித்து 1928 ஆம் ஆண்டு மகளிர் வாக்குரிமைப் போராட்டத்தைத் துவக்கிய எம்மிலின் பான்க்ரஸ்ட் மரணமடைந்துவிட, அவருக்கு அடுத்தபடியாக சோஃபியா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த ஆண்டே, எம்மிலின் பான்க்ரஸ்ட் மறைந்த இரண்டே வாரங்களில், சோஃபியா தலைமைப் பொறுப்பை ஏற்ற சில நாட்களில், மகளிர் வாக்குரிமையின் அடுத்த கட்டமாக பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டு, 21 வயது உள்ள அனைத்து மகளிருக்குமே வாக்குரிமை உண்டு என்று சட்டம் வரையறுக்கப் பட்டது.
மகளிர் வாக்குரிமை முன்னோடிகள் தங்கள் போராட்ட நினைவுகளைப் பதிவு செய்யும் முயற்சியை முன்னெடுத்த பொழுது சோஃபியாவும் அதில் பங்கேற்றார். “பெண்களில் யார் எவர்?” (‘Women’s Who’s Who’) என்ற தொகுப்பின் 1934 ஆண்டு வெளியான பதிப்பில், இடம் பெற்ற சோஃபியா, தங்கள் ஆர்வம் பற்றியக் குறிப்பைத் தரவேண்டிய இடத்தில், ‘பெண்கள் முன்னேற்றத்தின் நலவிரும்பி’ (interest – “The advancement of women”) என்று மட்டுமே சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
நூறாண்டுகளுக்குப் பின்னர், இன்றைய நிலையில் இந்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டங்களை வரையறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில், அதிகாரம் பெற்ற நிலையில் 200 மகளிர் பங்கேற்றாலும், ஆரம்ப நாட்களில் இருந்த பெண்களுக்கான அடக்குரிமையை எதிர்த்துப் போராடி வாக்குரிமை பெற்றுத் தந்த மகளிர்களில் இந்திய வம்சாவளியின் வீரப்பெண் ஒருவரும் இன்றியமையாதப் பங்கேற்றார் என்பது இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு பெருமை தரும் ஒரு செய்தி.
மன்னர் துலிப் சிங்கின் வாரிசுகள் அனைவருமே சட்டப்பூர்வ வாரிசுகள் இன்றியே இறந்தனர். சோஃபியாவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது பணியாளர் ஒருவரின் மகளின் காட்மதராக கௌரவிக்கப்பட்டார். அந்தப் பெண் வளர்ந்த பொழுது, அவரிடம் எப்பொழுதும் தேர்தலில் வாக்களிப்பேன் என்று உறுதிமொழி கொடு என்று சத்தியம் செய்யச் சொல்லி பெண்களுக்கான வாக்குரிமை சுதந்திரத்திற்குத் தான் கொடுக்கும் முக்கியத்தை அவருக்கு உணர்த்தினார். தனது 72 ஆவது வயதில் ஆகஸ்ட் 22, 1948 – இல் அவர் இறந்த பிறகு, அவர் விருப்பப்படி, சீக்கியகுல வழக்கப்படி அவருடலுக்கு எரியூட்டப்பட்டு, சாம்பல் அவரது மூதாதையரின் மண்ணான பஞ்சாபில் தூவப்பட்டது. தனது பாட்டனார் பஞ்சாப் சிங்கம் மன்னர் ரஞ்சித் சிங் போலவே சமயச்சார்பற்ற கொள்கையுடன் இறுதிவரை வாழ்ந்த சோஃபியா, தனது சொத்துக்களை இந்து, முஸ்லிம், சீக்கியம் எனப் பல மதங்களைச் சார்ந்து இயங்கிய பெண்கள் பள்ளிகளுக்காக, பெண்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படவேண்டும் என்று எழுதி வைத்தார்.
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்த போராட்டமான வரலாற்றுப் பின்னணியும், அதற்காக அல்லலுற்ற பெண்கள் பலரின் கதைகளும் காலப்போக்கில் மறக்கப்பட்டு இக்காலப் பெண்களுக்கு தங்களுக்குரிய வாக்குரிமையின் அருமை தெரியாமல் இருக்கிறது. பெண்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால், சரியான வழியில் பெண்கள் தங்கள் வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்தி, தங்கள் குரலை சட்டவறையைகளை உருவாக்கும் மன்றங்களில் முன்வைக்கும் தகுதியுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படம் உதவி: விக்கிப்பீடியாவும், பி பி சியும் , பிற இணைய தளங்களும்
____________________________________________________
Read more @:
Sophia: Princess, Suffragette, Revolutionary, January 13, 2015, by Anita Anand
http://www.amazon.com/Sophia-Suffragette-Revolutionary-Anita-Anand/dp/1632860813
Princess Sophia Duleep Singh: A champion in the cause of women’s rights
http://historysheroes.e2bn.org/hero/3521
Sophia Duleep Singh
https://en.wikipedia.org/wiki/Sophia_Duleep_Singh
Sophia: Suffragette Princess- Princess Sophia Duleep Singh
BBC video at – https://youtu.be/dAH0MLNfK1U
____________________________________________________
“I am unable conscientiously to pay money to the state, as I am not allowed to exercise any control over its expenditure; neither am I allowed any voice in the choosing of Members of Parliament, whose salaries I have to help to pay. This is very unjust. When the women of England are enfranchised and the state acknowledges me as a citizen I shall, of course, pay my share willingly towards its upkeep. If I am not a fit person for the purpose of representation, why should I be a fit person for taxation?”
Ref:
Asian Suffragettes, British Protest at Home and Abroad
http://britishprotest.com/tag/feminist-history/
____________________________________________________
அவ்வளவாக அறிந்திராத வரலாற்று சிறப்புமிக்க ஒரு தகவலை தொகுந்து தத்துள்ளீர்கள். சோபியாவின் போராட்டம் வலுவடைந்திருக்காவிட்டால் இங்கிலாந்து ஆண்ட 54 நாடுகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை இன்னும் தாமதமாகவே கிடைத்திருக்கலாம். அல்லது ஒருவேளை கிடைக்காமலும் போயிருக்கலாம். உங்களின் காமன் சென்ஸ் இல்லாத காமன்வெல்த் நாடுகள் எனும் கட்டுரையில் நீங்கள் சொன்னது போலவே இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் அனைத்திலும் இங்கிலாந்தின் அதே சட்டம், தேர்தல் என்றே முறை நீண்டு இருந்திருக்கும்.
நல்ல தொகுப்பு .
பாராட்டிற்கு மிக நன்றி தனுசு 🙂
உங்களுக்கு நல்ல நினைவுத் திறன் உள்ளது!!!
அன்புடன்
….. தேமொழி