கை கொடுக்கும் நம்பிக்கை!

-மேகலா இராமமூர்த்தி

இயல்பில் மனிதன் ஒரு சமுதாய விலங்கு (Man is by nature a social animal) என்பார் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில். மனித வாழ்வு தனிமையில் இனிமை காண இயலாதது. உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதிலும் சமுதாயத்தோடு இணைந்தும் இயைந்தும் வாழ்வதிலும் முழுமை காண்பது. அவ்வாறு ஒருவர் மற்றொருவரைச் சார்ந்துவாழ்வதற்கு அடித்தளமாக இருப்பது நம்பிக்கை எனும் நல்லுணர்வு. ஒரு குழந்தை தன்தாய் சுட்டிக்காட்டுகின்ற மனிதரைத் தந்தையென ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையாய்த் திகழ்வதுகூட (தன் தாய்மீது அச்சேய் கொள்ளும்) நம்பிக்கையே எனலாம்!

முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆடவனும், ஆரணங்கும் காதல்கொண்டு, செம்புலப்பெயல்நீர்போல் அன்புடை நெஞ்சுகலப்பதற்குக் களமமைப்பதும் அவர்கள் ஒருவர்மீது மற்றொருவர் கொள்ளுகின்ற அசைக்கவியலா நம்பிக்கையே!

தலைவன் ஒருவன்மீது மாறாக் காதல்கொண்ட தலைவியொருத்தி, அவனை ’நின்ற சொல்லர்’ (நாட்டு வழக்கில் சொல்வதென்றால் பேச்சு மாறாதவர்) என்று வாயாரப் புகழ்வதை நற்றிணைப் பாடலில் கபிலர் காட்டுவார்.

நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்
என்றும் என் தோள் பிரிபறியலரே
(நற்: 1)

இன்னொரு தலைவியோ தன் காதல்மீது இமய நம்பிக்கை கொண்டவளாய்த் தானும் தலைவனும் கொண்ட காதல், நிலத்தைவிடப் பெரிது, வானத்தைவிட உயர்ந்தது, நீரினும் ஆழமானது என்று அளந்துபார்த்தவள்போல் ஆணித்தரமாய்க் கூறுவது நமக்குப் பெருவியப்பை விளைக்கின்றது.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.  (குறுந்: 3)

காதலுக்கு மட்டுந்தானா கை கொடுக்கும் நம்பிக்கை? இல்லை… நட்புக்கும் அதுவே வீற்றிருக்கை! நேரில் காணாதபோதினும் ஒத்தஉணர்ச்சி கொண்ட இரு உயர்ந்த உள்ளங்கள் உயிர்நட்பு கொண்டதனைத் தமிழ்கூறு நல்லுலகு நன்கறியும். ஆம்! சோழ அரசனாகிய கோப்பெருஞ்சோழனுக்கும், பாண்டி நன்னாட்டுப் புலவர் ஆந்தையாருக்கும் இடையில் முகிழ்த்து மலர்ந்திருந்த நட்பெனும் நறுமலர் புறநானூற்றில் இன்றும் புதுமணம் பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றது!

தான் பெற்றமக்களால் தாங்கொணாத் துயருக்கு ஆளான கோப்பெருஞ்சோழன் அதற்குமேலும் தன் இன்னுயிரைத் தரித்திருக்க விரும்பவில்லை. வடக்கிருந்து உயிர்துறப்பது எனும் முடிவை எடுத்தான். அரசவாழ்வைத் துறந்து, தருப்பைப்புல் ஆசனம்பரப்பி வடக்கு நோக்கி அமர்ந்தான்; அவனைச் சுற்றிலும் அவன்மீது பெருமதிப்பும், அன்பும் கொண்டிருந்த அரசவையினரும் புலவர்பெருமக்களும் குழுமியிருந்தனர் வேதனையோடு. புலவர் பெருமக்களை நோக்கித் தன் பார்வையை வீசினான் காவலன். தன் குறிப்பறிந்து அருகில்வந்த புலவோரை நோக்கி, “அருமை நண்பர் ஆந்தையாருக்கென என்னருகே ஆசனம் ஒன்றை அமையுங்கள்!” என்று உத்தரவிட்டான்.

அரச கட்டளையாயிற்றே மறுக்க முடியுமா? அரசனுக்கருகே ஆசனம் அமைக்கப்பட்டது ஆந்தையாருக்கு. ஆயினும், அரசன் நீங்கலாக ஆங்கே குழுமியிருந்த ஏனையோருக்கு பாண்டி நாட்டிலுள்ள ’பிசிர்’ எனும் ஊரிலிருந்து, செய்தி கேள்விப்பட்டு, ஆந்தையார் இவ்வளவு தூரம் வருவார்; வந்து அரசனோடு உயிர்விடுவார் என்றெல்லாம் எள்ளளவும் நம்பிக்கை இருக்கவில்லை. நாட்கள் நகர்ந்தன. ஆந்தையாரோ வரக்காணோம். அரசனும் உயிர்துறந்துவிட்டான். சுற்றியிருந்தோர், இனியும் ஆந்தையார் வருவார் எனும் எண்ணத்தைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்த வேளையில், தொலைவில் ஒருமனிதர் அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி விரைந்து வந்துகொண்டிருப்பதைக் கண்டனர்; வியப்போடு அத்திசை நோக்கினர். அருகே வந்த அம்மனிதர் அவர்களிடம் தன்னை ”ஆந்தையார்” என்று அறிமுகப்படுத்திக்கொள்ள, அனைவரும் அதிசயித்தனர்; அவரை ஆரத்தழுவி உரையாடி மகிழ்ந்தனர்.

ஆந்தையாரை வரவேற்ற சான்றோரில் ஒருவரும், கோப்பெருஞ்சோழனின் அன்புக்குரிய அவைப்புலவருமான பொத்தியார், ”நண்பர் ஆந்தையார் எனைக்காண அவசியம் வருவார்” என்ற மன்னனின் (பெருமைமிகு) எண்ணத்தையும், அது பிழைபடாதவாறு வந்த புலவரின் சிறப்பையும் எண்ணியெண்ணி வியப்பும் மருட்கையும் ஒருங்கே எய்தியவராய் அவ்வுணர்வை அழகியதோர் பாட்டாய் வடித்தார்.

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை ஈங்கு வருதல்
வருவன் என்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்
தன்றே… (புறம் – 217: பொத்தியார்)

பின்னர், ஆந்தையாரும் மன்னன் மடிந்த இடத்தருகிலேயே வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பது புறம் நமக்கு அறியத்தரும் செய்தி.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
எனும் வள்ளுவத்துக்கு விளக்கமாய்த் திகழ்வது இக்காவிய நட்பு!

இவ்வாறு, பிறர்மீது கொள்ளும் நம்பிக்கை, காதலுக்கும் நட்புக்கும் பாதையமைப்பதுபோல், தன்மீதே ஒருவன் கொள்ளும் நம்பிக்கை அவன் தனிவாழ்வின் வெற்றிக்கும், பெற்றிக்கும் வழிவகுக்கின்றது. ஏழைமையோடு தோழமைகொண்ட போதிலும், தளராத தன்னம்பிக்கையோடு வாழ்வில் சாதனைபடைத்த எத்தனையோ அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் வரலாறு நமக்குக் காட்டவில்லையா?

மாந்தரிடம் காணக்கிடைக்கும் இந்நம்பிக்கை, தம்மைச் சார்ந்ததாகவும், சகமனிதர்களைச் சார்ந்ததாகவும் மட்டுமே உள்ளதா அல்லது அதனையும் தாண்டிப் பயணிக்கின்றதா என்று சற்றே சிந்தித்தால், அவர்தம் நம்பிக்கையின் எல்லை வானளவு விரிந்து, கண்ணால் காணவொண்ணாத கருத்துருவான கடவுள்வரை அது நிறைந்திருக்கக் காண்கின்றோம். தத்தம் சமயக் கோட்பாடுகளுக்கியைந்த வகையில் கடவுளின் உருவிலும், உடையிலும் மக்கள் மாறுபாடுகள் கொள்ளுகின்றனரேயன்றி, கடவுளே உலகையும், உயிர்களையும் படைத்தவர், அவரை நம்பினார்க் கெடுவதில்லை என்பன போன்ற நம்பிக்கை முழக்கங்களில்(!) மாற்றமில்லை. சிலநேரங்களில் இந்த இறைநம்பிக்கை கரைபுரண்டோடி, தேவையற்ற மூடநம்பிக்கைகளில் மானுடரை மூழ்கடித்துவிடுகின்ற ஆபத்தான வேலையையும் செய்யத் தவறுவதில்லை. அதுபோல் மனிதர்மீது மனிதர் கொள்ளும் நம்பிக்கையானது துரோகத்திலும், அவநம்பிக்கையிலும் முடிந்துபோவதையும் மறுப்பதற்கில்லை.

ஆயினும், ஒரோவழி (at times) நிகழும் இவைபோன்ற எதிர்மறை விளைவுகளை நீக்கிவிட்டு நோக்கினால், வாழ்வைச் செம்மையாய் நடாத்துதற்குத் தேவையான பலத்தையும், மனவுரத்தையும் நம்பிக்கை மாந்தர்க்குத் தந்து வையத்தை வாழ்விக்கின்றது என்றே கூறலாம்.

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க