மீனாட்சி பாலகணேஷ்

 

உமை சிறுவீடு கட்டியருளே!

 b9d3e4c3-abb5-4467-af72-ded1305dd2bd
பிள்ளைத்தமிழ் நூல்கள் தாம் எடுத்தியம்பும் அனைத்துப் பருவங்களையும், தத்துவம், சமயம், தொன்மம், சுவைமிகு புனைகதைகள் என இவற்றையெல்லாம் பாடல்களில் இணைத்து சந்தநயமும் பொருள்நயமும் விளங்க அழகுற எடுத்துரைக்கும் தன்மையனவாகும். முந்தைய அத்தியாயங்களில் கண்டதுபோன்ற சுவைமிகுந்த கதைகள்மட்டுமே இவ்விலக்கியத்திற்கு அழகு சேர்க்கவில்லை. குழந்தையின் ஒவ்வொரு செய்கையையும், குழந்தையாகப் போற்றப்படும் அந்தத் தெய்வம் செய்யும்செயலுடன் பொருத்திப்பாடுவதே இவற்றைப்பாடிவைத்த நல்லிசைப் புலவோரின் கவிதைநயத்திற்கும் அழகுணர்ச்சிக்கும் சான்றாக விளங்கி, அவர்களை ‘வித்தாரகவி’ எனும் போற்றுதலுக்கும் உரியவராக்கின. இதற்கான எடுத்துக்காட்டினை இப்போது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம். இவ்வாசிரியர் 19-ம் நூற்றாண்டில் நல்லதுக்குடி எனும் ஊரில் வாழ்ந்தவராவார் என அறிகிறோம். இப்பிள்ளைத்தமிழ் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்தும் வேறுபட்டு விளங்குகிறது. ஏனெனில் இதில் வழக்கிற்கு மாறாக பதினைந்து பருவங்கள் விரித்துரைக்கப்படுகின்றன.

பத்துப்பருவங்களுக்குப் பத்துப்பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டமைவன பிள்ளைத்தமிழ் நூல்கள். பிங்கல நிகண்டு பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களையும் திவாகர நிகண்டு பன்னிரண்டு பருவங்களையும் கூறும். தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் நூல் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், பந்தாடல், ஊசல், பாவையாடல், கழங்காடல், அம்மானை, நீராடல், குதலை மொழியாடல் எனப் பதினைந்து பருவங்களைக் கொண்டு இலங்குகிறது. ஈற்றயலான நான்கு பருவங்களில் இரண்டு அல்லது மூன்று பாடல்களே ஒரு பருவத்திற்குப் பாடப்பட்டுள்ளன. ஆண்பால் பிள்ளைத்தமிழில் சிற்றில் பருவத்தில் ஆண்குழந்தைகளைச் சிறுமிகள் தங்களது சிற்றிலை அழிக்காதே என வேண்டுவதாக அமையும். இங்கு பெண்பால் பிள்ளைத்தமிழில் அமைந்த சிற்றில் பருவத்தில் பெண்குழந்தை சிவகாமியைத் தாயாரும் மற்றோரும் சிற்றில் எனப்படும் சிறுவீடு கட்டியருளே! என வேண்டுகின்றனர். பாடலைக் காண்போமே!

******

சிறுமி சிவகாமி சிற்றிலிழைக்க முயன்றவண்ணம் இருக்கிறாள். அருகில் நின்று இதனைப் பார்க்கும் தாய் தன்மகளை ஊக்குவிக்கிறாள்; எவ்வாறு சிறுவீடு கட்டவேண்டும் எனத் தன் சின்னஞ்சிறு மகளுக்குக் கூறுகிறாள். அவளும் ஒருகாலத்தில் இவ்வாறு சிற்றிலிழைத்து விளையாடியது உண்டல்லவா?

“முதலில் தூண்களைக் கால்களாக வை குழந்தாய்! பின்பு மண்ணை வைத்து அடைசுவர்களாகச் செய். பின்பு குறுக்கும் நெடுக்குமாகக் கைம்மரத்தை வை; அதுதான் ஓடுகளைத் தாங்கும் வலுவான மரமாகும் தெரியுமா? நீ கட்டும் இந்த வீட்டிற்கு ஒன்பது வாயில்களை அமைக்கவேண்டுமம்மா!
“அடுத்து இந்தக்கூரை மரங்களை எவ்வாறு இணைப்பது தெரியுமா? கயிற்றால் இறுகக்கட்டிப்பின் சேற்றைப்பூசி சுவரை வலுப்படுத்த வேண்டும்,” என்னும் தனது அன்னையை நோக்கி ஆடலரசனின் காதல்நாயகி சிவகாமி, “சரி அம்மா, உன் விருப்பப்படியே, இன்னும் அழகாக அமைத்துவிடுகிறேன்,” என எல்லாம் அறிந்த ஒரு புன்னகை பூக்கிறாள். அன்னை வியந்துநோக்க, வீட்டினுள் விளக்கினை ஏற்றி, சிலவீடுகளை அழித்து, இன்னும் பல சிறுவீடுகளை உண்டுபண்ணி அருள்விளையாடல் புரிகிறாள். பார்த்தவண்ணம் நிற்கும் அன்னை மயங்குகிறாள். சிவகாமசுந்தரி தான் சமைத்த வீடுகளைக் கண்டு கைகொட்டி மகிழ்கிறாள்.
என்ன இது முன்பின் முரணாக உள்ளது எனத்தோன்றுகிறதா? பாடலாசிரியர் இதில் பிரபஞ்சப்படைப்பின் பெரும்தத்துவத்தை அல்லவோ உட்பொருளாக்கி இப்பாடலை அமைத்துள்ளார்.
அவர் நோக்கில் மற்றொருமுறை காணலாமா? எலும்பும் தசையும் கொண்ட ஓர் உடலை அன்னை பராசக்தி படைக்கும் அழகு இங்கு கவிதைநயம் பொங்கக் கூறப்படுகின்றது.
தசை எனப்படும் மண்ணைவைத்து அதன்மீது தூண்கள் எனப்படும் கால்களை வைத்து உடலெனப்படும் சுவரை வைக்கிறாள். பின் இருபுறமும் கைகளாகிய கைம்மரங்களை வைக்கிறாள். மனித உடலின் ஒன்பது துளைகளாகிய வாயில்களை விட்டும், எலும்புகளாலான கூரைமரங்களை நரம்புகளால் முறையாக அமைத்து இறுகக்கட்டுகிறாள். பிறகு மேலே ஒரு பெரிய தோலினைக் கொண்டு அதனைச் சரிவரப் போர்த்துகிறாள். இது முழுவீட்டினையும் சாந்தால் மெழுகுவதனை ஒக்கும். மயிர்களால் அழகான கூரை அமைத்துவிடுகிறாள். இனி, தான் இவ்வாறு கட்டியவீட்டினை அழகுபடுத்தும் பணிதுவங்குகிறது. ஒவ்வொரு உயிரும் செய்துள்ள பாவபுண்ணியங்கள் எனும் இருவினைகளை ஆராய்ந்து சீர்தூக்கி அதிலிருந்து அவ்வுயிர் ‘அனுபவிக்க வேண்டிய வினை’ எனும் சேற்றைப்பூசுகிறாள். இது வீட்டிற்கு வண்ணம் பூசுவதனைப் போன்றது. இவ்வினைகளால் வரும் இன்பதுன்பங்களைப் பகுத்துணர்ந்து அனுபவிக்கக் கண்களைக் கொடுத்தருளுகிறாள்- இது விளக்கினைப் பொருத்துவதற்குச் சமமாகும்.

e9912af1-9d47-4a34-bc7c-8857ebb53af9
இவ்வாறு இவ்வுலகில் உள்ள எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட உயிரினங்களும் குடியிருந்து வாழ்வதற்காக அவரவர்களுக்கேற்ற வகையில் சிறுவீடுகளைப்படைத்தருளி, அவற்றை தகுந்த தருணத்தில் அழித்தொடுக்கி, பின்னும் வலிமைமிக்க பலவீடுகளை (யானை, சிங்கம் போன்றவற்றின் உடல்களை) உண்டுபண்ணுகிறாள் பாராசக்தி அன்னை. “இப்படிப்பட்ட அருள்விளையாடல் செய்யும் உமையாகிய அன்னையே! சிவகாமசுந்தரி என உலகம் போற்றும் விமலையே! சிறுவீடு கட்டியருள்க!” என வேண்டுகிறார் புலவர்.
படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். (ஆ ப்ரஹ்ம-கீட ஜனனீ என்பது லலிதா சஹஸ்ரநாமம்- பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம்).
ஆக, பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு எத்தனை பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என உணர்ந்து அதிசயிக்கலாம். அவள் இழைக்கும் சிற்றில்கள் ஒன்றில் நாமும் உள்ளோம் எனும் எண்ணமே மெய்சிலிர்க்கவைக்குமே!


மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
சுவர்வைத்து வலிய கைம்மரமும் வைத்து
வாசல் ஒன்பது விட்டு மோட்டுவளை
பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
பண்புற்றிடக் கட்டி மேலெலாம் தோலுடன்
பலமயிர்க் கற்றை இட்டுப்
பழவினைச் சேறுகட்டி இன்பதுன்பங்கள்
கண் பாத்துண விளக்கும் ஏற்றி
எண்பத்து நான்கு நூறாயிரம் பேதமாய்
இனிய சிறுவீடு தோறும்
எவ்வுயிர்களும் குடியிருந்து விளையாடவே
இன்னமும் அழித்து அழித்துத்
திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
உமை சிறுவீடு கட்டியருளே!
சிவகாம சுந்தரி எனும் பெரிய
விமலையே! சிறுவீடு கட்டியருளே!
(தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-
சிற்றில் பருவம்- நல்லதுக்குடி கிருட்டிணையர்)
சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். இவள் உலகுக்கே பேரரசியல்லவா?இவளிடம் இல்லாத பாவைகளே இல்லை எனலாம். (பணக்கார வீட்டுக் குழந்தைகள் சமீபத்தில் வெளியான Barbie, starwar figures ஆகிய பாவைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது போலவே இதுவும்).
அவளுடைய விளையாட்டுகள் சிலவற்றை நாமும்தான் காணலாமே!
சண்டமுண்டர்கள் எனும் அரக்கர்கள், பின்பு மகிடன் எனும் அரக்கன் ஆகியோர் தேவர்களை அவர்களது பதவிகளிலிருந்து நீக்கிவிட்டுத் தாமே ஆட்சி செய்தார்கள். அன்னை பராசக்தி வீராங்கனையாகத் தானே தோன்றி (சாமுண்டி, மகிடாசுரமர்த்தினி), அவ்வரக்கர்களை அழிக்கிறாள். இதற்காக எண்ணற்ற வீரர்களையும், காளி, வாராஹி ஆகிய தெய்வங்களையும் படைக்கிறாள்.
மீனாட்சியாகித் தானே மதுரையைத் தன் துணைவன் சிவபிரானுடன் அரசாள்கிறாள்.
சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என அரசகுலங்களை உண்டுபண்ணி, அவர்களுக்குள் நட்புறவைச் சிலபொழுதுகளிலும், சண்டைசச்சரவைச் சில பொழுதுகளிலும் செய்வித்தாள். சிலபொழுது பூமியை நீர்வறட்சியால் வருந்தச் செய்கிறாள். சிலபொழுது பெரும்வெள்ளத்தால் சேதமும் அடையச் செய்கிறாள் அன்னை.
பலபொழுதுகளில் அனைத்தையுமே இன்பமயமாக இயங்கச் செய்கிறாள். நம்மை இசையையும் நடனத்தையும் நூல்களையும் பயிலச் செய்து கலைகளை வளர்க்கிறாள். அகிலத்தையே இவ்வாறு படைத்து ஆட்டுவிக்கிறாள்.
அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:
ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.
(எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன).
வல்ல தெய்வப் பாவை மானிடப்
பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
மருவு பறவைப் பாவையும்
ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
பாவையும் உறும் தாவரப் பாவையும்
ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
எல்லவே சாக்கிரம் கனவொடு
சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
எண்பத்து நாலுலக்கத்தான கொள்கையினில்
எண்ணிறந்திடும் கோலமும்
பல்லுயிர்ப் பாவை விளையாடு நற்
பூவையே பாவை விளையாடி அருளே!
பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
பொற்பாவை விளையாடி அருளே!
(பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)
(தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-
பாவை விளையாடல் பருவம்- நல்லதுக்குடி கிருட்டிணையர்)
இவ்வுலகில் நிகழும் அனைத்துச் செயல்களையும் பராசக்தியின் விளையாட்டாகக் கண்டு மகிழ்ந்து பாடிப்போற்றும் இந்நூலாசிரியர் சக்தி உபாசகர் என எண்ண இடமுள்ளது.
பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார்.
தொடர்ந்து படித்து ரசித்து மகிழ்வோம்.

(ஆய்வுக்கு உதவிய நூல்: நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்- உரையாசிரியர்: முனைவர் திரு. கா. நாகராசு- 2015)

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *