-மீ.விசுவநாதன்
நீண்ட தூரப் பயணமதில்
நின்று போகப் பொழுதிலை!
கூண்டில் சிக்கித் தவித்திடாத
குஷிக்கு ஈடு இணையிலை! 
குடும்ப மாக உறவுடனே
கொண்ட உணவில் குறையிலை!
கொடும்ப கைமை எதுவுமின்றிக்
குறித்த வாழ்வில் பழுதிலை!
விரிந்த வான வெளிப்பரப்பில்
விதவித வண்ணப் பறவைகள்
தெரிந்த திசையில் கவனமுடன்
தினந்தினம் செல்லும் அழகிலே
மறந்து நிற்பேன் எனையிழந்து
மனிதன் அதுபோல் பழகினால்
சிறந்து வாழ முடியுமென
சிந்தித் திருப்பேன் தனியிலே!

Leave a Reply