அமெரிக்க உச்சநீமன்றத்தில் நீதிபதிகளின் கொள்கைகளும் தீர்ப்புகளும்

— நாகேஸ்வரி அண்ணாமலை.

நான் சிறு வயதில் நீதிமன்றங்கள் (இந்திய நீதிமன்றங்கள் உட்பட) உண்மையின் உறைவிடங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதிலும் எல்லாம் சட்டப்படி நடக்கும் அமெரிக்காவில் அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் எப்போதும் நியாயத்தையே கடைப்பிடிக்கும் என்றும் அது உண்மையான நியாயமாக (absolute truth) இருக்கும் என்றும் நினைத்திருந்தேன். உண்மை என்பது பன்முகங்கள் கொண்டது என்பதும், அந்த உண்மையைப் பார்ப்பவர்களைப் பொறுத்து அதன் முகம் மாறும் என்பதும் இப்போது தெளிவாகியிருக்கிறது. அமெரிக்காவில் சில வருடங்கள் வாழ்ந்த பிறகுதான் புரிகிறது அங்குள்ள நீதிபதிகளின் கொள்கைகளைப் (ideology) பொறுத்து அவர்களுடைய தீர்ப்புக்களும் அமையும் என்பது.

supreme court judges

தற்சமயம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய போராட்டம் இரண்டு அரசியல் கட்சிக்குள்ளும் நடந்துவருகிறது. அன்டோனின் ஸ்காலியா என்னும் 79 வயது நீதிபதி திடீரென்று பிப்ரவரி மாதம் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் உயிர் துறந்தார். அவர் தனிமையில் இறந்து கிடந்ததால் அவர் இறந்து சில மணி நேரங்கள் கழித்துத்தான் அவர் இறந்த விஷயம் தெரியவந்தது. அவர் மரணம் பலருக்குத் தெரியவந்து அவருடைய இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் முடிவதற்குள் அவருடைய இடத்திற்கு யாரை நியமிப்பது என்ற சர்ச்சை இரண்டு கட்சிகளைச் சேர்ந்த செனட் அங்கத்தினர்களுக்கிடையே ஆரம்பித்துவிட்டது.

அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து சுயேச்சையாக விலகித் தனி நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்துக்கொண்ட பிறகு முதன் முதலாக தனக்கு ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை 1776-இல் எழுதிக்கொண்டது. புதிய அரசாங்கத்தின் சட்டங்கள் இயற்றும் அங்கத்தையும் அவற்றை அமல்படுத்தும் அங்கத்தையும் உண்டாக்கிய பிறகு, அதிகாரம் இந்த இரண்டு துறைகளின் கைகளில் மட்டும் இருக்க வேண்டாமென்று கருதி அமெரிக்க நாட்டை நிர்மாணித்தவர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தையும் 1789-இல் உருவாக்கினார்கள். அதில் ஆறு நீதிபதிகள் இருப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை பல சமயங்களில் வேறுபட்டாலும் பொதுவாக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் இருந்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களுடைய ஆயுள் வரை அந்தப் பதவியில் நீடிக்கலாம். அவர்கள் விரும்பினால் ஓய்வு பெறலாம். (வெஸ்லி பிரவுன் என்னும் யு. எஸ். மாவட்ட நீதிபதி தன்னுடைய 104– வது வயது வரை, தூக்கத்திலேயே தன் உயிர் பிரியும் வரை, நீதிபதியாக வேலை பார்த்தார். என் ‘ஆயுளையோ, நன்னடத்தையையோ எதை முதலில் இழக்கிறேனோ அதுவரை பதவியில் நீடிப்பேன்’ என்றும் ‘நாட்டிற்குச் சேவை செய்வதற்காக வந்தேன். அதைச் செய்ய முடியும் வரை செய்வேன்’ என்றும் கூறியிருக்கிறார்.)

இந்தியாவில் பிரிட்டனிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்களாக இந்தியாவைப் பிரித்துக்கொண்டோம். அமெரிக்காவில் புதிய கண்டத்தில் காலனிகளாக உருவானவை ஒன்று சேர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டன. பழைய காலனிகள் அந்த நாட்டின் மாநிலங்களாக உருவாகின (அதனால் மாநிலங்களுக்குள் எல்லைத் தகராறு எழுவதில்லை!.) இந்த நாட்டிற்கு அரசியல் சாசனம் எழுதி எல்லாக் காலனிகளுக்கும் அந்த காலனிகளின் சம்மதம் கேட்டு அனுப்பினார்களாம். அப்போது சில காலனிகள் தங்களுக்கு இன்னும் அதிக உரிமைகள் வேண்டுமென்று கேட்டதால் Bill of Rights என்றவற்றைப் புதிதாக உருவாக்கிச் சேர்த்தார்களாம். இப்போதும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அரசியல் சாசனம் உண்டு. அதைப் பாதுகாக்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உச்சநீதிமன்றம் உண்டு. அந்த மாநிலத்துக்கே உரியப் பிரச்சினைகளை இந்த உச்சநீதிமன்றங்கள் தீர்த்துவைக்கும். நாடு முழுவதையும் பற்றிய பிரச்சினை என்றால் அது அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு வரும்.

அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்த்துவைத்த முக்கியமான வழக்குகளில் முக்கிய இடம் வகிக்கும் சிலவற்றைப் பார்ப்போம். ஜனாதிபதி லிங்கன் கறுப்பர்களுக்கு சுதந்திரம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை. ஒரு வழியாக அவர்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டாலும் அவர்களும் வெள்ளையர்களும் பொது இடங்களில் ஒன்றாக இருக்க முடியாது. பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள் என்று எல்லா இடங்களிலும் கறுப்பர்களும் வெள்ளையர்களும் தனித்தனி இடங்களில்தான் உட்கார வேண்டும். வெள்ளை மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் கறுப்பர்களுக்கு இடமில்லை. கருப்பர்களும் வெள்ளையர்களும் இருவரும் அரசியல் சாசனப்படி சமமானவர்கள் என்றாலும் வேறு வேறு இனத்தவர்; ஆகவே தனித்தனியாக வைப்பது சரியே என்ற அடிப்படையில் மேலே சொன்ன ஒதுக்கல் கொள்கை அமலில் இருந்தது. இது பெரும்பான்மையினரான வெள்ளை இனத்தவர் செய்த சட்டம். தன் மகளை வெள்ளைக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் பள்ளியில் சேர்க்க மறுத்த கல்விக் குழுவின் (Board of Education) முடிவை எதிர்த்து பிரவுன் என்னும் கறுப்பர் 1953-இல் வழக்குத் தொடர்ந்தார். ‘வேறு இனத்தவர்கள் என்ற முறையில் ஒதுக்கல் கொள்கையில் அவர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்படவில்லை, அதனால் அது சட்டப்படி செல்லாது’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கியது. அன்றுவரை இரு இனத்தவர்களுக்கும் தனித்தனி இடம் என்ற நிலைமை போய், ஒன்றாக வாழும், படிக்கும், பணிபுரியும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் ஒன்பது நீதிபதிகளுக்கிடையே கொள்கை வேறுபாடு இல்லை. தீர்ப்பு ஒரு மனதாக இருந்தது.

அடுத்ததாக 1973-இல் பெண்களுக்கு கருச்சிதைவு செய்யும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து ஒரு பெண் வழக்குத் தொடர்ந்தார். கருச்சிதைவு செய்துகொள்வது பெண்களுக்குரிய உரிமை என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், குழந்தையின் உயிருக்கோ தாயின் உயிருக்கோ ஆபத்து என்றால் கருச்சிதைவை அனுமதிக்கும் உரிமையை அந்தந்த மாநிலங்கள் முடிவுசெய்யும் என்றும் அறிவித்தது. இந்த முடிவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சில மாநிலங்கள் பல நிபந்தனைகளை விதித்து பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளாமல் பார்த்துக்கொள்கிறது. மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் இருப்பதால் உச்சநீதிமன்றமும் இம்மாதிரி விஷயங்களில் இந்த மாதிரியான தீர்ப்பை வழங்குகிறது. இந்த வழக்கில் ஏழு நீதிபதிகள் சார்பாகவும் இரண்டு நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இந்த வேறுபாடு நீதிபதிகளின் கருச்சிதைப்புப் பற்றிய கொள்கைகளிலிருந்து பிறந்தது.

சமீப காலத்தில் உச்சநீதிமன்றத்திற்கு வந்த இன்னொரு முக்கியமான வழக்கு ஒபாமா 2010-இல் கொண்டுவந்த எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிச் சட்டம் பற்றியது. அந்தச் சட்டப்படி எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும், அப்படி எடுக்காதவர்கள் அபராதம் கட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் வழக்குத் தொடுத்ததால் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. இப்போது தலைமை நீதிபதியாக ஜான் ராபர்ட்ஸ் இருக்கிறார் (இவர் இரண்டாவது புஷ் காலத்தில் அப்போதிருந்த தலைமை நீதிபதி இறந்ததால் நியமிக்கப்பட்டவர். இவர் புஷ்ஷைப்போல் பழமைவாதி. மத்திய அரசின் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதி அவருக்கு வேண்டியவரை முன்மொழிந்தாலும் செனட் அங்கத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.) ராபர்ட்ஸ் பழமைவாதி என்பதால் கட்டாய இன்சூரன்ஸ் சட்டத்தை அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பு வழங்கலாம் என்று பலர் பயந்தனர். ஆனால் அம்மாதிரி நடக்கவில்லை. இன்சூரன்ஸ் எடுக்கும்படி குடிமக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று சிலர் கூறிய மறுப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நியாயப்படுத்த இப்படி வாதாடியது: திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கும் திருமணம் செய்துகொண்ட பிறகு துணையை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்பவர்களுக்கும் சட்டத்தில் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அது மாதிரி இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் அதிக வரி வசூலிக்கப்படுகிறது. சட்டத்தை எப்படியும் அர்த்தப்படுத்த முடியும் என்பதற்கு இரு ஒரு உதாரணம். இந்த வழக்கில் தீர்ப்பு 6:3 என்ற விகிதத்தில் இருந்தது. இந்தப் பிளவும் நீதிபதிகளின் அரசாங்கத்தின் அதிகாரம் பற்றிய கொள்கைகளைப் பிரதிபலித்தது.

உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும்போது ஜனாதிபதிகள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவர்களாக இருப்பவர்களை நியமிக்கிறார்கள். இப்போது உச்சநீதிமன்றத்தில் இருப்பவர்களில் நான்கு பேர் பழமைவாதிகள்; மூன்று பேர் தாராளவாதிகள் (liberals); ஒருவர் இரண்டிலும் சேராதவர். ஒபாமா ஒரு தாராளவாதியை நியமித்தால் எதிர் காலத்தில் வரும் வழக்குகளில் தாராளவாதிகளின் கை ஓங்கி தீர்ப்புகள் இவர்கள் வழங்கும் தீர்ப்புகளாக அமைந்துவிடலாம் என்பதற்காக குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இது ஒபாமாவின் கடைசி வருடம் என்பதால் அவர் நியமிக்கக் கூடாது என்கிறார்கள். தன் ஆட்சிக் காலம் முடிவதற்குள் ஒரு தாராளவாதியை நியமித்துவிட வேண்டும் என்பதில் ஒபாமா குறியாக இருக்கிறார். இதை நிறுத்துவதற்கு என்னென்னவோ முட்டுக் கட்டைகள் போடுகிறார்கள் எதிர்க் கட்சிக்காரர்கள். இப்போது செனட்டில் ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மைத் தலைவராக இருக்கும் ஹேரி ரீட் என்பவர் பல வகை உத்திகளைக் கையாண்டு ஒபாமா தேர்ந்தெடுக்கும் நபரை நியமிக்கவைத்துவிடுவார் என்கிறார்கள். அவருக்கு இது செனட்டில் கடைசி ஆண்டு. மறுபடியும் செனட் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துவிட்டார். அரசியலில் இது அவருக்குக் கடைசி ஆண்டாதலால் தன்னுடைய பங்கிற்கு இதைச் செய்துவிட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்.

அரசியல் காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியினர் மறுக்க முடியாத, அதே சமயம் தாராள மனப்பான்மை உடைய, ஒருவரை நியமித்து குடியரசுக் கட்சி அங்கத்தினர்களைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று ஒபாமா நம்பிக்கொண்டிருக்கிறார். இதில் இவர் வெற்றி பெற்றால் இனி வரும் வழக்குகளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் ஒரு வகையாக இருக்கும். இல்லையென்றால் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஜனாதிபதியாக வருபவரின் கொள்கையைப் பொறுத்து நீதிபதி நியமிக்கப்படுவார். தீர்ப்புகளும் வேறு வகையாக இருக்கும்.

1 thought on “அமெரிக்க உச்சநீமன்றத்தில் நீதிபதிகளின் கொள்கைகளும் தீர்ப்புகளும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க