— தமிழ்த்தேனீ.

கட்டுப்பெட்டி கிராமமாக இருந்த திருவிடை மருதூர் அக்கிரகாரத்தில் ஓட்டு வீடுகளும் திண்ணையுமாக இன்னும் சற்றேறக் குறைய தன் பழமை மாறாமல் இருந்தது. திண்ணையிலே சீட்டாடும் கும்பலைத் தாங்கிக் கொண்டு முதுகுச் சுமை தாளாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் எத்தனை பேர்களை சுமந்தாயிற்று, எத்தனை மனிதர்களைப் பார்த்தாயிற்று, அத்தனை பேரின் அந்தரங்கக் கதையும் தனக்கு மட்டுமே தெரியும் என்கிற கர்வத்தோடே இது வரை வாழ்ந்தாயிற்று, அந்தக் கர்வம்தான் இத்தனை பேருக்கும் சுமைதாங்கியாய் தன்னை ஆக்கி வைத்திருக்கிறது என்றே உணராமல் நம்மை அசைக்க ஆளில்லை எனும் கர்வத்தோடு, வெயிலையும் மழையையும் தாங்கிக் கொண்டு, பற்றாக்குறைக்குத் தேக்கு மரத் தூண்களையும் தாங்கிக் கொண்டு, கர்வத்தின் அலகை அகல விரித்து கால்பரப்பி கனத்தின் அழுத்தத்தால் கால் மடங்கி அப்படியே சமமாய் பரந்து படர்ந்து அந்தரங்க ரகசியங்களையும் கிசுகிசுக்களையும் கேட்பதே பேரானந்தம் என்று நினைத்துக் கொண்டு இன்னமும் எப்போது இடிபடுவோம் என்றே தெரியாமல் காத்திருக்கிறது.

இன்றும் வாயில் வெற்றிலைக் குதப்பலுடன் புளிச் புளிச்சென்று முதுகின் மேலேயே துப்பவும், கையிலே சீட்டுகளைப் பிடித்துக் கொண்டு ஜோக்கர் வரவில்லை என்று பொறுமிக் கொண்டு காத்திருக்கும் சீட்டாட கும்பல் வந்தாயிற்று. இனி சுமைதான். எவ்வளவு வேண்டுமானாலும் சுமக்கிறேன். ஆனாலும், எனக்குத் தினமும் கிசுகிசுக்களையும் அந்தரங்கங்களையும் காதால் கேட்டால்தான் தூக்கமே வரும்.

திண்ணைக்கேதடா காது என்று யோசிக்கிறீர்களா? சுவருக்கும் காது உண்டு என்று சொல்வார்களே!! எனக்கு இருக்கக் கூடாதா? எத்தனையோ ராமநாதன்கள்… எத்தனையோ விஸ்வநாதன்கள்… எத்தனையோ கிருஷ்ணமணிகள் என்று அத்தனை பேரையும் பார்த்த திண்னை நான் என்று நினைக்கும் போது இன்னமும் கர்வம் ஓங்கி வளர்ந்தது. பெரியவங்க சொல்வாங்க, வாயை மூடிக்கிட்டு காதைத் தொறந்து வையி, அப்போத்தான் ஞானம் வரும்னு, திண்ணையாய் இருக்கும் என்னை உதாரணமாக வைத்துத்தான் அதைச் சொன்னாங்க தெரியுமா? என்று மனம் படபடக்கிறது. இது யாருக்குமே புரிய மாட்டேங்குது.

ராமநாதன் தன் கையிலிருந்த சீட்டுகளை உற்றுப் பார்த்தான். மப்பும் மந்தாரமுமாக இருந்த மானமும் மனமும் கண்களை மறைக்கவே உற்றுப் பார்த்தான். சிவந்த விழிகள் மேலும் சிவந்தன. கை நடுங்கியது. ஆண்டவா!!! எனக்கு இந்தத் தடவை எல்லாம் நல்ல நல்ல சீட்டா வந்திருக்கு. ஒரே ஒரு ஜோக்கர் மட்டும் இருந்தா ஜெயிச்சிடுவேன். எப்பிடியாவது கருணை காட்டுப்பா, என்று வேண்டியபடி ஒரு சீட்டை எடுத்தான். அது தேவையே இல்லாத சீட்டு.

“இந்தத் தடவையும் என்னைக் கவுத்திட்டியா?” என்றார் உரக்க எதிரே இருந்த ஜெயராமன்.

“ஆமாம், கவுத்துட்டேன்,” என்றார் .

“உன்னை இல்லைப்பா,” என்றார் ராமநாதன்.

“நான் உன்னைக் கவுத்துட்டேன்னு சொன்னேன், நான் ஜெயிச்சிட்டேன்,” என்றான் ஜெயராமன்.

ஹூம் …

“எல்லாரும் காசைக் குடுங்க,” என்று கல்லாகட்ட ஆரம்பித்தார் ஜெயராமன்.

தெய்வமே எவ்ளோ வேண்டறேன், எவ்ளோ திறமையா ஆடினாலும் ஒரு சீட்டுலே என்னைக் கவுக்குறியே, என்னை ஜெயிக்கவே விடமாட்டியா? என்று நொந்து போனார் ராமநாதன். அவருக்குக் காலையில் அவருக்கும் அவர் மனைவிக்கும் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

“என்னோட ஏழு தலைமுறைக்கும் உக்காந்து சாப்டாலும் என் சொத்து தீராது. நீ எதுக்கு என்னை வேலைக்குப் போகப்படாதா? அதைவிட்டுட்டு எப்போ பாத்தாலும் சூதாடிண்டு இருக்கேன்னு திட்ற,” என்றார் ராமநாதன்.

“பழங்கதையே பேசாதீங்க. இப்போ என்ன நிலமைன்னு தெரியுமா? இன்னும் மூத்தவளுக்கே கல்யாணம் செய்யலை. இப்போ நாம வெறும் காலிப் பெருங்காய டப்பாதான். எல்லாத்தையும் சீட்டாடியே தோத்தாச்சு,” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.

சுருக்கென்றது அவருக்கு. அடேடே!!! இவ்ளோ நாள் என்ன நிலமைன்னே தெரியாமே சீட்டாடினோமே!! இதுலேயாவது ஜெயிச்சோமா? இதுலேயும் தோத்துண்டே இருக்கோம். வாழ்க்கையிலேயும் தோத்துட்டோமா? ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் எழுந்தார்.

“நான் இனிமே சீட்டாடப் போறதில்லே. நாம அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பி ஆடிண்டே இருக்கோம். ஆனா நாம தன்னம்பிக்கையா ஆடவேண்டிய ஆட்டத்தை ஆடறதில்லே. இனிமே என்னைத்தான் நம்பப் போறேன். இனிமே நான் ஆடற எல்லா ஆட்டமும் என்னை நம்பியே இருக்கும்,” என்று சொல்லிவிட்டு தள்ளாடினார்.

“இனிமே இவரு போயி தனியா ஆடப் போறாராம்! நிக்கவே முடியலே. உடம்பு தள்ளாடுது, இதுலே ஆட வேற போறாராம்,” என்று சிரித்தனர் அனைவரும்.

திண்ணை ஆடாமல் அசையாமல் கவனித்தபடி இருந்தது. மாநகராட்சியின் சாலைப் பணியாளர்கள் ராக்‌ஷச இயந்திரத்தோடு வந்து கொண்டிருக்கின்றனர். சாலையை அகலமாக்கப் போறாங்களாம். திண்ணையை எல்லாம் இடிச்சிருவாங்களாம் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *