பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்
எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
மறைந்துதியானை பாய்ச்சி விடல்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை,
கல்லாத் துணையார் தாம் கைப்பித்தல் சொல்லின்,-
நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
மறைந்து, யானை பாய்ச்சிவிடல்.
பொருள் விளக்கம்:
எல்லா வகைத் திறனும் கொண்ட மேன்மை பொருந்திய அறிஞர்களை, கல்லாமையைத் துணையாகக் கொண்ட கற்றறியாதோர், தங்கள் அறிவின்மையில் மூழ்கி மறைந்து கொண்டு, வெறுப்பேற்றும் சொற்களை உமிழ்வது, அழகு நிறைந்த ஒலிக்கும் வளையல்களை அணிந்தவரே; அத்தகைய செயல், எருக்கம் புதரின் பின் மறைந்து கொண்டு யானையைச் சீண்டி சினமூட்டும் செயல் போன்றது (சிறிய எருக்கம் புதரை பாதுகாப்பு என்று நினைத்து, அதன் பின் மறைந்து கொள்ளும் அறிவிலி, யானையைச் சினம் கொள்ளச் செய்தால் யானை மிதித்தே அழித்துவிடும், ஆதலால் அது துன்பம் வரவழைத்துக் கொள்ளும் செயலென அறிக)
பழமொழி சொல்லும் பாடம்: மேன்மை மிகு அறிஞர்களை, அறிவிலிகள் துன்புறுத்த எத்தனித்தால் அது தங்கள் அழிவைத் தேடிக் கொள்ளும் செயலாக அமைந்துவிடும். இக்கருத்தை வள்ளுவர்,
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள்: 894)
ஆற்றல் உள்ளோரிடம், அந்த ஆற்றல் இல்லாதவர் தீங்கு விளைவிக்க முயல்வது மரணத்தைக் கையசைத்து அழைத்து வலிந்து ஏற்றுக்கொள்வது போன்றதாகும் என்கிறார்.