தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு
நேற்று நானும் என் அம்மா செளந்திரவல்லியும் சென்னை, அம்பத்தூர், வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் எங்கள் வாக்குகளைச் செலுத்தினோம்.
எங்களுக்கு முன்னால் வாக்குச் செலுத்திய பெண் (வயது 60 இருக்கலாம்), எப்படி வாக்குச் செலுத்துவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். வாக்குச் சாவடியில் இருந்தவர்கள், நீங்கள் அவருக்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நான் அந்தப் பெண்ணிடம், யாருக்கு வாக்களிக்க எண்ணியிருக்கிறீர்களோ, அவர் பெயருக்கு எதிரில் இருக்கும் பொத்தானைச் சற்று நீண்ட நேரம் அழுத்துங்கள் என்றேன். அவர் ஒரு சின்னத்தைத் தேடினார். அது எங்கே இருக்கிறது என்று காட்டிவிட்டு வெளியே வந்தேன். அவர் அழுத்தினார். சத்தம் வந்ததும் வெளியே வந்தார்.
மின்னணு வாக்கு எந்திரங்கள் அறிமுகமாகி, இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் வாக்களியுங்கள் என்று தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு ஊட்டி வருகிறது. கூடவே, எப்படி வாக்களிக்க வேண்டும் என டம்மி பெயர்கள் / சின்னங்கள் ஆகியவற்றை வைத்து, கற்றுக் கொடுக்க வேண்டும். டம்மி எந்திரங்களை எல்லா ஊர்களிலும் வைத்து, சரியாக வாக்களிப்பவர்களுக்குப் பரிசும் வழங்கலாம்.
மேலும் சுயேச்சை என்ற சொல்லை எல்லா இடங்களிலும் சுயேட்சை என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். மேலும் பல பெயர்கள், பதவிகள் ஆகியவை, ஆங்கிலத்திலேயே இருந்தன. மொழியிலும் தரத்தைப் பேண வேண்டும்.
வாக்காளர் அட்டையில் என் பெயரின் தமிழ் எழுத்துக்கூட்டலில் பிழைகள் உள்ளன. இதைத் திருத்துவதற்கு வேறு ஒரு நாளில், குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்றார்கள். எல்லா வாக்குச் சாவடியிலும் இதற்கென ஒருவரை அமர்த்தி, கையோடு படிவத்தையும் சான்றுகளையும் பெற்றுத் திருத்தினால், இரு தரப்பிலும் நேரம் மிச்சமாகும்.