குறளின் கதிர்களாய்…(492)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(492)
களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்.
– திருக்குறள் -283 (கள்ளாமை)
புதுக்கவிதையில்…
பிறர் பொருளைக்
களவு செய்வதால்
கிடைக்கும் ஆக்கம்,
பெருகுவது போலத் தோன்றி
இறுதியில்
இயல்பாய் இருக்கவேண்டிய
அளவையும் கடந்து
இல்லாமல்
அழிந்துவிடும் விரைவில்…!
குறும்பாவில்…
களவினால் கிடைக்கும் ஆக்கம்
அளவின்றிப் பெருகுதல் போலத் தோன்றி
அழிந்தேபோகும் எதுவும் இல்லாமலே…!
மரபுக் கவிதையில்…
அடுத்த மனிதர் பொருளதற்கே
ஆசைப் பட்டே அதைத்திருடி
எடுத்துச் சேர்க்கும் ஆக்கமெல்லாம்
ஏற்றம் பெற்றே பெருகுதல்போல்
கொடுக்கும் தோற்றம் நிலையில்லை,
கூடுதல் போலத் தோன்றிடினும்
அடுத்தே எதுவு மில்லாமல்
அழிந்தே போகும் அறிவீரே…!
லிமரைக்கூ…
களவினால் வந்திடும் ஆக்கம்
பெருகுதல்போல் தோன்றி விரைவில் அழிந்தே
பெற்றிடும் முற்றிலும் நீக்கம்…!
கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
களவு செய்யாத,
அடுத்தவுங்க பொருளுக்கு
ஆசப்பட்டு களவு செய்யாத..
களவு செய்து
சேருற செல்வமெல்லாம்
மொதலுல
நல்லாப் பெருகுறாப்புல தெரிஞ்சாலும்
நாளடவுல
கையில இருந்ததும் போய்
எதுவுமே இல்லாம
அழிஞ்சி போவுமே..
அதால,
செய்யாத செய்யாத
களவு செய்யாத,
அடுத்தவுங்க பொருளுக்கு
ஆசப்பட்டு களவு செய்யாத…!