குறளின் கதிர்களாய்…(491)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(491)
கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா
உயிரும் கைகூப்பித் தொழும்.
–திருக்குறள் – 260 (புலால் மறுத்தல்)
புதுக் கவிதையில்…
எந்த உயிரையும்
கொல்லாதவனாய்,
எந்த உயிரின் ஊனையும்
தின்ன மறுப்பவனாய்த்
திடமுடன் வாழ்பவனைத்
தரணியிலுள்ள
எல்லா உயிர்களும்
கைகூப்பி வணங்கும்…!
குறும்பாவில்…
புவியுயிர் எதையும் கொல்லாதவனாய்
புலாலுணவைத் தின்ன மறுத்து வாழ்பவனை
உலகுயிரெலாம் கைகூப்பி வணங்கும்…!
மரபுக் கவிதையில்…
உலகில் உள்ள உயிரெதையும்
உண்ண வேண்டிக் கொல்லாமல்
நலமாய் வாழ விடுவோனாய்,
நாக்குச் சுவையின் காரணமாய்
விலங்கின் ஊனை உண்ணுவதை
விருப்ப மின்றி மறுத்தேதான்
உலகில் வாழும் உத்தமனை
உயிர்கள் எல்லாம் வணங்கிடுமே…!
லிமரைக்கூ…
உலகுயிர் எதையும் கொல்லானை
ஊனுணவு மறுத்தே வாழ்பவனை எல்லா
உயிரும் வணங்குமந்த நல்லானை…!
கிராமிய பாணியில்…
கொல்லாத கொல்லாத
உயிரக் கொல்லாத,
ஒணவா அதன்
ஒடம்பத் திங்காத..
ஒலகத்தில எந்த உயிரயும்
கொல்லாம யிருந்து
மாமிச ஒணவத் திங்காம
மறுத்து வாழுறவனப் பாத்து
மக்களெல்லாம்
கையெடுத்துக் கும்புடுவாங்களே..
அதால
கொல்லாத கொல்லாத
உயிரக் கொல்லாத,
ஒணவா அதன்
ஒடம்பத் திங்காத…!