பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை

0

முனைவர் த. ஆதித்தன்
இணைப் பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
கைபேசி: 6381629365
மின்னஞ்சல் : kumaritathithan@gmail.com

ஆவணங்கள் கடந்தகால வரலாறுகளை எடுத்தியம்புவன. அவ்வாவணம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதன்மையான பதிவுகள் தொடங்கி சிறு நிகழ்வுகள் வரை ஆதாரத்தோடு பதிவு செய்யப்படுமானால் அவை ஆவணம் எனப்படும். அவை படிவம், பத்திரம், இலக்கியம் என எந்த வடிவத்திலும் அமைந்திருக்கலாம். அதேபோல அவை செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களிலோ ஓலைகள், திரைச் சீலைகள், காகிதங்கள், கற்கள், போன்றவற்றிலோ, வரி வடிவமாகவோ, ஓவியங்களாகவோ, குறியீடுகளாகவோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம். இந்த ஆவணங்களைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் இடமே ஆவணக் காப்பகம் எனப்படும்.

நமது நாட்டில் தொன்மையான காலம் தொட்டு இவ்வகை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சோழர்கால கல்வெட்டுகள் மூலம் ஆவணங்களைப் பாதுகாக்கும் இடங்கள் ஆவணக்களரி என அழைக்கப்பட்டதனை அறியமுடிகிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணத்திலும் ஆவணம் குறித்தும், ஆவண மேலாண்மை குறித்தும் தரவுகள் இடம்பெற்றுள்ளன.

பெரியபுராணத்தில் நம்பியாரூராருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றபோது அங்கு அந்தணர் உருவில் சிவபெருமான் வந்தார். அவர் நம்பியாரூராரிடம், “எனக்கும் உனக்கும் முன்பே ஓர் ஒப்பந்தம் இருக்கிறது. அதனை மீறி திருமணம் செய்கிறாய். அவ்வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்” என்கிறார். நம்பியாரூராரும் வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அந்தணர் அவரிடம் அந்தக் காலத்தில் உன் தந்தையயின் தந்தை எனக்கு எழுதித்தந்துள்ள ஆவணம் – அடிமை ஓலை என்னிடம் உள்ளது என்கிறார். அந்தணரிடம் இருக்கின்ற அடிமை ஓலையைக் காட்ட சொல்கிறார் நம்பியாரூரார். அதைக் கேட்ட அந்தணர், “நீ ஓலையைப் பார்த்துப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள தக்கவனாக இல்லை. அவையில் உள்ளவர்களிடம் காட்டினால் அவர்கள் நீ எனது அடிமை என்று சொல்வார்கள்” என்கிறார்.

ஓலையைக் காட்ட மறுத்ததும் அதனைப் பறித்திட நம்பியாரூரார் செல்ல, அந்தணர் ஓட இறுதியாக அந்தணரை எட்டிப் பிடித்து அவரிடம் இருந்த ஓலையைப் பெற்று படித்தார். அதில் அடிமை என்று அவரது முன்னோர் எழுதி வழங்கியிருப்பதைக் கண்டார். உடனே அவ்வோலையைக் கிழித்து எறிந்துவிட்டார். அந்தணர் அங்கிருந்த அவையோர்களிடம் முறையிடலானார். அந்தணரிடம் அங்கிருந்த மக்கள் உலக நடைமுறையில்லாத ஒன்றை நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க, அருகில் உள்ள திருவெண்ணெய் நல்லூர்தான் எமது ஊர் என்கிறார். அதோடு அறநிலை உணராமல் கையிலிருந்த ஓலையைப் பறித்து கிழித்ததன் மூலம் நம்பியாரூரார் எனது அடிமை என்பது உறுதியாகிவிட்டது என்றார்.

வாதிடுவதில் வல்லவராக இவ்வந்தணர் இருக்கிறார். ஓர் ஆவணத்தைக் காட்டி இங்கே வழக்காட வந்திருக்கும் இவரை வெற்றிகொள்ள திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்திற்குச் செல்வதே உகந்ததாக இருக்கும் என்றெண்ணி  அந்தணரை அங்கு அழைக்கிறார் நம்பியாரூரார்.

திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்தை அனைவரும் அடைந்தனர். அந்தணர் தனிநபராக நின்று நம்பியாரூரார் தமது அடிமை என வாதிட்டார். வாதத்தின் போது நம்பியாரூராரின் தந்தையின் தந்தை எழுதிக்கொடுத்த ஓலை ஆவணத்தைச் சாட்சியாக வைத்தே தாம் முறையீடு செய்ய வந்ததாகவும் அந்தணர் கூறுகிறார். அதனைக் கேட்ட அம்மன்றத்தார் அவரின் ஓலையை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டால் வெற்றியாகிவிடுமா? என்ன சொல்கிறீர் என நம்பியாரூராரைக் கேட்டனர். அதற்கு உலகியலுக்கு மாறாக இந்த  அந்தணர் பேசுகிறார். இது எனக்கு தெளிவளிக்காத ஒன்றாக உள்ளது என்றார்.

அறமன்றத்தார் அந்தணரிடம் அனைவர் முன்னிலையில் நம்பியாரூராரை உங்கள் அடிமை என்று உரைத்ததனை மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு மூன்று வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

“ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற் றயலார் தங்கள்
சாட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோலை மூல ஓலை
மாட்சியிற் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்”

(பெரியபுராணம்-202)

இவ்வாறு நம்பியாரூரார் அடிமை என்பதற்கான நிகழ் சான்றான ஆட்சி, அடிமை என்பதற்கான ஆவணச் சான்று, அயலவர் சாட்சி என்ற மூன்றில் ஒன்றை காட்ட முடியுமா? என அற மன்றத்தார் கேட்க ஆவணச் சான்றை முன்வைக்கிறார். முன்னர் நம்பியாரூரான் கிழித்தது படிஓலை. மூல ஓலையை அறமன்றத்தில் காட்டுவதற்காக வைத்துள்ளேன் என்கிறார் அந்தணர்.

அறமன்றத்தார் மூல ஓலையைக் காட்டச் சொன்னதும் நம்பியாரூரான் இந்த மூல ஓலையையும் பறித்துக் கிழிக்காமல் பார்த்துக்கொள்வதானால் மூல ஓலையைக் காட்டுகிறேன் என்கிறார். அவையோர் ஒத்துக்கொள்ள எடுத்துக் கொடுக்கிறார். அங்கிருந்த கரணத்தான் என்னும் எழுத்தர் அவ்வோலையைப் பெற்று சோதிக்கிறார். ஓலையின் பழைமையைச் சோதித்த பின்பு ஓலையில் இருந்த செய்தியினைப் படித்தார். அதில் ஆதிசைவ மரபிலே ஆரூரன் என்ற நான் இதன் மூலம் எல்லாரும் அறிய எழுதிவைக்கும் செய்தியானது, பெருமுனிவரான வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு நானும் என் வழியில் வருபவரும் வழிவழியாய்த் தொண்டு செய்து வருவோம் என்பதற்காக உடன்பட்டு இந்த ஓலையை மனமும் செயலும் சம்மதித்து, எழுதித்தந்தேன். இதற்கு என் கையெழுத்து என்று இருந்தது.

ஓலையில் உள்ள செய்தியை அறிந்ததும் அதில் உள்ள ஒப்பம் நம்பியாரூராரின் பாட்டனாரின் ஒப்பம்  என்கிற உண்மையை ஆராய்கின்றனர்.

“அந்தணர் கூற இன்னும் ஆள்ஓலை இவனே காண்பான்
தந்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண் டாகில்
இந்த ஆவணத்தி னோடும் எழுத்துநீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழியின் என்றான் வலியஆட் கொள்ளும் வள்ளல்”

(பெரியபுராணம் – 207)

இவ்வாறு அந்தணர் கூறியதால் அங்குள்ள பழைய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஓலைகளில் காணப்படும் நம்பியாரூராரின் தந்தையின் ஒப்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அவை ஒன்றுபோல் அமைகின்றன. எனவே அந்தணருக்கு நம்பியாரூரார் அடிமை என்பதாகத் தீர்ப்பளிக்கப்படுகிறது. அந்நிலையில் நம்பியாரூரார் அந்தணரிடம் இங்கே நீங்கள் வழிவழியாக வாழ்ந்து வரும் வீட்டைக் காட்டுங்கள் என வினவுகிறார். அவர் காட்டுவதற்காக அழைத்துச் செல்கிறார். திருவருள் துறைக் கோயிலினுள் சென்றதும் அந்தணர் மறைந்துவிடுகிறார். இவ்வாறு நம்பியாரூராரைத் தடுத்து ஆட்கொண்ட கதை நமக்குத் தெரியும்.

இக்கதையினை நுணுகி பார்க்கும் இடத்து நமது நாட்டில் தொன்மையான காலத்திலேயே ஆவண மேலாண்மையில் கொண்டிருந்த அறிவு வெளிப்படும். அக்காலத்திலேயே அறமன்றம் என்கிற நீதி வழங்கும் அவை இருந்ததையும் அறியமுடிகிறது.

அதேபோன்று ஓலை ஆவணங்கள் படி எடுக்கப்படுவது, அவற்றின் நகல் ஆவணங்களின் பயன்பாடு ஆகியவை குறித்த பதிவுகளும் இக்கதையில் இடம் பெறுகின்றன. மேலும் ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பும் அக்காலகட்டத்தில் அமைந்திருந்ததையும் அங்கு ஓலை ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப் பட்டுருப்பதனையும் அறியமுடிகிறது. இவ்விலக்கிய ஆதாரம் ஆவண மேலாண்மையில் நமது முன்னோர்கள் சிறந்திருந்ததனை எடுத்துரைக்கிறது எனலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *