குறளின் கதிர்களாய்…(490)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(490)
ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
–திருக்குறள் – 228 (ஈகை)
புதுக் கவிதையில்…
இல்லாதவர்க்கு
இருப்பவர்கள் ஈவதால்
இன்பம் பெருகும்
இரப்பவர்க்கும் கொடுப்பவர்க்கும்..
பிறர்க்குக் கொடுக்காமல்
பொருளைச் சேர்த்துவைத்துப்
பின்னர் அதை
இழந்துவிடும் கொடியவர்கள்
ஈவதால் பெறும்
இந்ந இன்பத்தை
அறியமாட்டார்களோ…!
குறும்பாவில்…
சேர்த்த பொருளைப் பிறர்க்குக்
கொடுக்காமல் வைத்திருந்து இழந்திடும் கொடியோர்
ஈவதின் இன்பத்தை அறியாரோ…!
மரபுக் கவிதையில்…
பொருளே யில்லா இரப்போர்க்குப்
பொருளைக் கொடுத்துப் பெறுமின்பம்
இருப்பைக் கொடுத்தோன் வாங்கியவன்
இருவர் தமக்கும் கிடைத்திடுமே,
இருக்கும் பொருளை ஈயாமல்
இருட்டில் தமக்காய்ச் சேர்த்திழக்கும்
இருண்ட மனத்துக் கொடியோரும்
இந்த இன்பம் அறியாரோ…!
லிமரைக்கூ…
ஈயாக் குணத்துச் சிறியார்
பொருளைச் சேர்த்தே இழப்பர், இல்லார்க்கு
ஈதலின் இன்பம் அறியார்…!
கிராமிய பாணியில்…
குடுக்கணும் குடுக்கணும்
இருக்கிற பொருளக் குடுக்கணும்,
இல்லண்ணு வந்து கேக்கிறவங்களுக்கு
இருக்கிற பொருளக் குடுக்கணும்..
தனக்கிட்ட இருக்கிற பொருள
இல்லாதவங்களுக்குக் குடுக்கயில
குடுக்கிறவன் வாங்கிறவன் ரெண்டுபேருக்கும்
இன்பம் கெடைக்கும்..
அடுத்தவனுக்குக் குடுக்காம
அழிஞ்சிபோகிற செல்வத்த
சேத்து வைக்கிற கொடுமக்காரனுக்கு
அடுத்தவருக்குக் குடுக்கிறதில உள்ள
அந்த இன்பம் தெரியாதா..
அதால
குடுக்கணும் குடுக்கணும்
இருக்கிற பொருளக் குடுக்கணும்,
இல்லண்ணு வந்து கேக்கிறவங்களுக்கு
இருக்கிற பொருளக் குடுக்கணும்…!