பேராசிரியர் தெ. முருகசாமி வழங்கிய ‘தொல்காப்பியம் ஓர் அறிமுகம்’ உரை

0

தொல்காப்பியம் ஓர் அறிமுகம்

பேராசிரியர் தெ. முருகசாமி
மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி

(குறிப்பு: பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. 08.02.2016 அன்று புதுச்சேரியின் “உலகத் தொல்காப்பிய மன்றம்” கிளையின் சார்பாக, “தொல்காப்பியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் “தொல்காப்பியத் தொடர்பொழிவு” நிகழ்ச்சிக்காக ஆற்றிய உரையின் சுருக்கம். மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறப்போகும் சொற்பொழிவுகளின் வரிசையில் முதல் பொழிவு இது. கொடுக்கப்பட்டுள்ள உரையின் சாரம் காணொளி மூலம் பெறப்பட்டது)

பேராசிரியர் தெ. முருகசாமி

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் என்று கூறுவது போல, தொல்காப்பியனை உலகினுக்கே தந்தது தமிழ். உலகினுக்கே தந்த என்று குறிப்பது தமிழின் சிறப்பு. ஞாலம் அளந்த மேன்மைத் தமிழில் ‘உலகினுக்கே தந்த’ என்ற அடைமொழியைக் கொடுப்பது, உலகம் சார்ந்த அடைமொழி ஒன்றைக் கொடுத்துப் பெருமைப்படுத்துவது தமிழ் மொழியில் காணப்படும் சிறப்பு.

தொல்காப்பியம் எழுத்தின் முடிபு நூல். எழுத்தின் முடிபானது நூல் என்பதைக் காட்டும் நோக்கில் முதல் நூற்பாவை எழுத்தில் துவங்கி, நூலே என்று தனது இறுதி நூற்பாவை முடிக்கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியர் வெறும் இலக்கண நூலாசிரியர் மட்டுமன்று, அவர் இலக்கண ஆசிரியர் என்ற நோக்கில் கண்டதால் தொல்காப்பியம் தரும் இலக்கிய, தத்துவ, அறிவியல் பற்றிய கூற்றுகள் மதிக்கப்படாமல் போனது. தொல்காப்பியம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல், திருக்குறள் போல பரப்பப்பட வேண்டிய ஒரு நூல் செந்நூல் தொல்காப்பியம். தமிழரின் தொன்மையைக் காப்பது என்ற பொருள் கொண்டது தொல்காப்பியம். தமிழர் பண்பாட்டின் தொன்மையைக் காப்பது தொல்காப்பியம்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறுவது. உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது. எழுத்துக்களால் ஆனது சொல். அந்தச் சொற்களுக்கான பொருள் மட்டுமல்ல, வாழ்வியல் இலக்கணம் வகுத்துக் காட்டிய பொருள் இலக்கணத்தைக் கொண்டு, வாழ்வியல் மரபை, ஒழுக்கத்தைக் காக்கும் முறையில் தொல்காப்பியம் என்ற பெயர் அமைந்தது.

ஒலி என்பது வரிவடிவ எழுத்தாகக் குறிக்கப்படுகிறது (phonological component of language), எழுத்துக்களின் கூட்டு சொல்லாக அமைந்தது (semantic component of language), சொற்களில் கூட்டு தொடர்கள் (syntactic component of language). தனித்தன்மையுடன் தொடரின் பொருளைக் காட்டுவதன் மூலம் மொழியை உயர்த்திக் காட்டுகிறது தொல்காப்பியம். தொல்காப்பியர் முதலிலேயே பெயர்ச்சொல், வினைச்சொல் என்று தொடங்கவில்லை. சொல்லதிகாரத்தின் ஐந்தாவது இயலைத்தான் பெயரியல் ஆக அமைத்துள்ளார். மொழியியல் அறிஞர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் தொல்காப்பியத்தில் கிளவியாக்கம்தான் முதலில் வரையறுக்கப்பட்டுள்ளது. மொழியின் வளர்ச்சி சொல்லாக இல்லாமல், சொற்கூட்டமாக, தொடராக அமைவது மொழிக்கு இன்றியமையாதது. இது தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரால் உணரப்பட்டுள்ளது என்ற உண்மை தொல்காப்பியத்தில் தெரிகிறது. வரையறைகள் மூலம் மொழியின் பழமையை பாதுகாக்கும் தன்மை கொண்டது தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் வளர்ச்சியில் பங்கேற்கும் நூல்களுக்கும் இலக்கணம் காட்டப்படுகிறது.

மொழிபெயர்ப்பினால் மொழி வளரும் என்ற கருத்தை முன் வைத்தது தமிழே, மொழி இன்னொரு எல்லையைத் தொடும் பொழுது மொழியின் வளரும் தன்மை நிலைக்கும். தமிழை மொழிபெயர்த்தலும், தமிழுக்கு மொழிபெயர்த்தலும் மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. அதை மறந்து தமிழர் தளர்ச்சியுற்றதால் வங்கத்தின் தாகூர் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய நோபல் பரிசை வெல்லும் வாய்ப்பு கிட்டியது. தமிழர் அதில் தளர்ந்ததால் பாரதிக்கு அவ்வாய்ப்பு கிட்டவில்லை. தமிழை மொழி பெயர்க்க முனைந்த ஜி.யு. போப் நாலடிகளிலும், இரண்டடிகளிலும் வெண்பாக்களின் மூலம் பாடலில் உலகை அடக்கும் சிறப்பை, வாழ்வியலை அடக்கும் சிறப்பை வியந்து பாராட்டியுள்ளார். கடவுளை சிறப்பித்துக் கூறும் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் போது தமிழின் சிறப்பினை வியந்தார். தமிழின் சிறப்புகளை உலகிற்குக் கொண்டு செல்ல இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் தேவை. இதனை முன்னரே உணர்ந்து சொன்னது தொல்காப்பியம்.

தொல்காப்பியம் காட்டும் கருத்துகளை தங்கள் நூல் முழுமையையும் பயன்படுத்தியவர்கள் வள்ளுவரும் கம்பரும். தொல்காப்பியர் எழுத்தின் வரிவடிவையும் காண்பிக்கிறார். உச்சரிப்புக்கும் இலக்கணம் உச்சரிக்கும் பாங்கை உணர்ந்து இலக்கணம் வகுக்கிறார். எழுத்துகள் சேரும் பாங்கினை எந்த எழுத்துடன் சேரும் சேராது என்றும் இலக்கணம் வகுக்கிறார்.

கிளவியாக்கம் என்பது சொல் ஆக்கம் பெறுவதை. வளர்வதைக் காட்டுவது. சொற்கள் எவ்வாறு ஆக்கம் பெறும் என்பதை எப்படி வளரும் என்பதைக் காட்ட, சொற்கள் தகுதியால் வளர்வதைக் காட்டலாம். ‘நெருப்பால் சுடு’, ‘நீரால் நனை’ என்பன சொற்கள் தகுதியால் வளர்வதைக் குறிக்கும்.
தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரை நிலை இலவே.

மற்றொரு சொல்லின் அன்மை நிலையாலும் அமைந்து பொருள் காட்டும் தன்மை
தன்மை சுட்டலும் உரித்து என மொழிப
அன்மைக் கிளவி வேறு இடத்தான.
போன்ற இலக்கணங்கள் தொல்காப்பியரால் காட்டப்படுகிறது.

சொல் தொடர்ச்சிதான் மொழிக்கு இன்றியமையாது என்று கண்டறிந்தவர் தொல்காப்பியர். விளி மரபு – அன்மை விளி சேய்மை விளி போன்ற விளிக்கும் நிலைகளில் சொற்கள் எவ்வாறு அமையும் எனச் சொல்லதிகாரத்தில் விளிமரபு காட்டப் படுகிறது.

வாழ்க்கையே ஒரு இலக்கணம் என்பதைப் பொருளதிகாரத்தில் வகுத்தவர் தொல்காப்பியர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறும் பொழுது,
வாழ்க்கைக்குப் பொருள் (wealth) தேவை
வாழ்வும் பொருளுடையதாக(meaningful life) இருக்க வேண்டும் என்பார்.
அந்தக் கோணத்தில் சிந்தித்தவர்கள் தமிழர்கள். அந்தச் சிந்தனைக்கு தலைப்பாகை கட்டியவர் தொல்காப்பியர். வாழ்வு பொருளுடன் அமைய வாழ்வியல் அமைத்தார். மனிதன் விலங்கினப் பண்புகளைத் தவிர்த்து, அவற்றில் இருந்து வேறுபட்டு, எவ்வாறு வாழவேண்டும் என்ற மரபைக் கட்டமைத்துக் காட்டுகிறது பொருளதிகாரம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதைப் பதிவு செய்கிறது, வரையறுக்கிறது, அதைக் காக்கிறது தொல்காப்பியம். இதனைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தொல்காப்பியத்தை ஆழ்ந்து கற்காதவர்கள்.

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை.
காலம், இடம், செயல் சேர்ந்தது இயக்கம், அது ஓர் இலக்கியக் கொள்கை. முதற்பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என்கிறது தொல்காப்பியம்.

இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்வியலை வரையறை செய்வது, வாழ்வியல் வகுப்பது பொருளதிகாரம். “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்ற தொல்காப்பியம் இன்பத்திற்கும் வரையறை காட்டியது. பழந்தமிழர் எல்லோரும் பரத்தையர் தொடர்பு கொண்டிருந்ததாகக் காட்ட வருவதல்ல தொல்காப்பியம். ஒன்பது இயலைக் கொண்ட தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் முதலில் வருவது அக வாழ்வை வரையறுக்கும் ‘அகத்திணையியல்’

கற்பு வாழ்க்கை வாழும் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து மேற்கொள்ளும் பிரிவுகள் ஓதல், காவல், தூது, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என ஆறு வகையாகக் காட்டப்பட்டாலும், அகத்திணையியலில் ஐந்து பிரிவுகள் மட்டுமே குறிக்கப்படுகிறது. பரத்தையர் பிரிவோ, குறிப்போ அகத்திணையியலில் இல்லை. ஆனால் இந்த ஆறு பிரிவுகளும் பின்னர் பொருளியலில் காட்டப்படுகிறது. பரத்தையர் பிரிவைப் பற்றி பொருளியலில் குறிப்பிடும் தொல்காப்பியர் அகத்திணையில் அதனைக் குறிப்பிடவில்லை. அகத்திணையில் அவர் குறிப்பிடாததன் மூலம் அகத்திணை வாழ்க்கையின் அடிப்படை ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பது காட்டப்படுகிறது. தலைவன் கூற்று என்பதில், பரத்தையில் பிரிந்து மீண்டு பேசுதல் காணப்படுகிறது. ஆனால் ‘அகத்திணையியல்’ பரத்தையருடன் கொண்ட வாழ்வு பற்றி சொல்லவில்லை.

பொருள் தேட செல்லும் பொழுது தலைவனின் எட்டு வகை மனத்தடுமாற்றம் காட்டப்படுகிறது. களவியலில் ஒத்த கிழவனும் கிழத்தியும் பத்து ஒத்த பண்புகள் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், பொருத்தமில்லாத குணங்களாக 12 குணங்கள் காட்டப்படுகிறது. அதில் பன்னிரண்டாவதாக வாழ்க்கைத்துணையை பிறிதொருவருடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்பதை ஒப்புமை கூடாது என்றும் தொல்காப்பியம் சொல்கிறது. எனவே எடுத்துக்காட்டாகக் கொடுக்கும்பொழுது தடம் மாறிய வாழ்க்கையை எடுத்துக்காட்டாகச் சொல்லக் கூடாது.

வாழ்க்கை என்பதும் ஒரு இலக்கணம், அதன் சாரம் ஒழுக்கம். ஒரு மொழி என்பது தனது எல்லையையும் கடந்து தாண்டுகிற பொழுதுதான் வாழ்வியல் மொழியாக ஆக்கமும் ஊக்கமும் பெற்று வளர்ந்து வாழ்க்கைக்கு உரிய மொழியாகிறது. அது வாழ்க்கைக்கும் இலக்கணமாகிறது. வாழ்க்கையின் மொழி அதன் எல்லையைத் தாண்ட வேண்டும் அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. தொல்காப்பியத்தைப் புனித நூல் என்ற புதிய நோக்கினை கொள்ள வேண்டும். திருக்குறளுக்குச் சூட்டும் அத்தனை மகுடமும் தொல்காப்பியத்திலும் உள்ளது. அதன் சிறப்பினை உணர்ந்து இலக்கணநூல் என்ற நோக்கினைத் தவிர்த்து அது காட்டும் வாழ்வியல் கோணத்தை அறிந்து கொள்ளவும் தேவை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.