பிருந்தாவனத்தில் ராசலீலை ………  

 க. பாலசுப்பிரமணியன்

 

யமுனை நதிக்கரையோரம் இன்று

யதுகுல மன்னனைக் கண்டேன்!!

 

கதம்ப மரத்தில் கால்நீட்டி வீற்றிருந்தான்

காரிகையர் சேலைகள் கடத்தியிருந்தான் !

 

கற்பனை உலகினில்தன்னை மறந்திருந்தான்

காதலுக்குப் பொருள்தேடிக் கண்ணயர்ந்தான் !

 

தோழிகள் அணிசேர்த்து ராதை குறையிட்டாள்

கோபாலனோ குறுஞ்சிரிப்பில் குழலூதி மகிழ்ந்திட்டான் !!

 

நந்தவனத்தில் அவன் கால்சுவடுகள்,

நர்த்தனத்தில் நாலாயிரம் கீதங்கள்  பாடும்!!

 

நாரணன் கைகோர்த்துக் கோபியர் ஆடும்

நாட்டியத்தைப் பார்க்க அவனியெல்லாம் ஏங்கும்!!

 

காரிருளில் பிறந்த கார்மேகத்தான்

கதிரவன் முகம்மறையக் காத்திருந்தான்!!

 

மேலங்கி காற்றினிலே உயர மெதுவாக ராதையங்கே அசைய

மின்னோளியாய் கண்ணனும் அவளோடு சுழல

 

மேலுலகும் கீழுலகும் கண்சிமிட்டி நிற்க

முன்னசைந்து பின்னசைந்து மோகமின்றி ஆடுகின்றார் !

 

கம்சனை அழித்த கால்கள் இங்கே

காதல் நாட்டியம் ஆடுதம்மா!

 

கருநாகன் காளிங்கனை அழித்த களிப்பினிலே

கால்கள் இங்கே களைப்பின்றி ஆடுதம்மா   !!

 

காசினியே கைதட்டித் தாளம் போட

கலையாத அழகோடு கண்ணன் இங்கே ஆடுகின்றான்!

 

கோலாட்சி செய்யும் மன்னனிங்கே

கோலாட்டம் செய்வதன் மாயையென்ன!

 

கோதையர்தம் உள்ளங்கவர்ந்து

ராசத்திலே பாசத்தை வடிப்பதென்ன!

 

ராதையுடன் காதல் போதையிலே

காமமில்லாக் காவியம் படைப்பதென்ன!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க