இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (183)

0

– சக்தி சக்திதாசன்.

docs

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.

கடந்த ஆண்டு அதாவது 2015 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக் காலநிலை மிகவும் மாறுபட்டு 5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டிய நேரத்தில் 17 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. எங்கே விட்டுப் போன குளிரைத் தப்ப விட்டு விடுவோமோ எனும் ஏக்கத்தில் காலதேவதை இந்த வாரம் கொஞ்சம் தன் குளிரின் கடுமையைக் காட்டத் தொடங்கி விட்டாள்.

கணினியின் முன்னால் இருந்து கொண்டு பனிபடர்ந்த சாரளத்தினூடாகக் கலங்கலாகத் தெரியும் வெளியுலகை நோட்டம் விட்டவாறு உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். ஒரு நாட்டின் முதுகெலும்பு அந்நாட்டின் சுகாதாரச் சேவையாகும். அச்சுகாதாரச் சேவையின் அஸ்திவாரமே அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகிய முன்னிலை சேவையாளர்களே ! இங்கிலாந்தைப் போன்ற வளர்ச்சியடைந்த நாட்டிலே மக்களின் வாழ்க்கைக் காலம் நீண்டு கொண்டு செல்கிறது. இது இங்கிலாந்துக்கு மட்டுமல்ல முழு உலகிற்கும் பொருந்தும்.

1900ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஒரு சராசரி ஆணின் வாழ்வின் காலம் 47 வருடங்கள் எனவும் சராசரி பெண்ணின் வாழ்வின் காலம் 50 எனவும் அந்நாள் அளவாகக் கணிக்கப் பட்டிருந்தது. அதுவே இன்றைய காலகட்டத்தில் ஒரு சராசரி ஆணின் வாழ்வுக் காலம் 79 வயது எனவும், பெண்ணின் வாழ்வுக் காலம் 83 வயது எனவும் கூறப்படுகிறது. இவ்வாழ்க்கைக் கால நீட்சியின் காரணங்கள் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், சுகாதாரச் திணைக்களத்தின் அதீத முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர உயர்வு என்பதே பொதுக் கருத்தாக உள்ளது.

இது சாதாரண மனிதருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயமே. ஆனாலும், அரசாங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகிறது. ஒவ்வொரு மனிதரும் வாழும் காலம் நீடிக்க, நீடிக்க அம்மனிதரின் இவ்வுலக வாழ்விற்கான செலவினங்கள் அரசாங்கத்தின் தலையில் அல்லவா விழுகிறது ! அதுவும் இங்கிலாந்தைப் போன்று தேசிய சுகாதார சேவையில் அனைத்து வைத்தியமும் சகலருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி இலவசமாக வழங்கப்படுவதினால் அதற்குரிய நிதி ஒதுக்கீடு அவசியமாகிறது.

அதனால் தற்போதைய கன்சர்வேடிவ் கட்சி அரசு தேசிய சுகாதாரச் சேவையில் எந்த அளவிற்கு தமது செலவுகளைக் கட்டுப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முனைகிறார்கள். அந்நடவடிக்கையின் போது இதுவரை தாம் கைவைக்கத் தயங்கிய டாக்டர்கள் மீது கை வைத்து விட்டார்கள் போங்கள் . . .

அதி முக்கிய சேவைகளான போலீஸ், இராணுவம் ஆகியவை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நாட்டின் வைத்தியர்களும் முக்கியமானவர்களே ! ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. போலீஸ், இராணுவம் ஆகியோர் வேலைநிறுத்தம் செய்ய முடியாது எனும் சட்டம் நடைமுறையிலிருப்பது போல் வைத்தியர்களுக்கு ஓர் சட்டம் இல்லை. ஆனாலும் எழுதாச் சட்டம் போல வைத்தியர்கள் வேலைநிறுத்தம் செய்வது என்பது இதுவரை அதாவது 2015 வரைக்கு முன்னால் ஒரேயொரு தடவை தான் நடந்ததாக நினைவு.

டாக்டர்களின் அடிப்படை வேலை ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து அவர்களது ஊதியத்தில் சில மாற்றங்களைச் செய்ய சுகாதார அமைச்சர் முடிவு செய்ததன் பிரகாரம் ஆரம்பித்தது சிக்கல். டாக்டர்களுக்கான யூனியன் இவ்வொப்பந்த மாற்றத்தை முற்றாக எதிர்த்தது, தம்முடன் எவ்விதமான கலந்தாலோசனையும் இன்று தன்னிச்சையாக அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது எனவும், இது தமது ஆரம்பக்கால டாக்டர்களின் ஊதியத்தில் பாரிய மாற்றங்களைச் செய்வதோடு அவர்கள் பணிபுரியும் நேரத்திலும் பாதகமான முறையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்றும் அவர்கள் கோஷமெழுப்பினார்கள்.

அரசாங்கமோ பணிவதாக இல்லை. விட்டார்களா டாக்டர்கள் ? இல்லையே பொறுத்தது போதும், பொங்கியெழுவோம் வாருங்கள் என்று யூனியன் வாக்கெடுப்புக்கு விட்டபோது, இவ்வொப்பந்த மாற்றத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்வதற்கு ஆதரவாக 90 விழுக்காடுகளுக்கும் அதிகமான அளவில் டாக்டர்கள் வாக்களித்தார்கள். முடிவாகக் கடந்த வருட இறுதிகளில் ஆரம்பித்து நேற்று மூன்றாவது தடவையாக டாக்டர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். இவ்வேலைநிறுத்தம் அவசர சிகிச்சையைப் பாதிக்காத வகையில் தாம் இதை ஒழுங்கு செய்துள்ளதாகவும், தமது காரணங்களை விளக்கி மக்களிடம் ஆதரவு கோரினார்கள் டாக்டர்கள்.

இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடியத் தன்னிச்சையாக இவ்வொப்பந்த மாற்றத்தை அரசாங்கம் அமல்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்பது போலத் தென்படுகிறது. இம்முடிவை அரசு இன்றோ அல்லது நாளையோ எடுக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. அரசு தரப்பிலிருந்து அவர்களது அடுத்த நடவடிக்கை பற்றிய எந்த விதமான தகவல்களும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. கருத்துகளின்படி தன்னிச்சையாக ஒப்பந்த மாற்றம் அமுல் படுத்தப்படுமானால் தமது வேலைநிறுத்தங்களும் தொடரும் என டாக்டர்களுக்கான யூனியன் எச்சரித்துள்ளது.

தற்போது இரு தரப்பினர்களுக்கு இடையிலுமான முறுகல் நிலவரம் இதுதான், சனிக்கிழமை சாதாரண பணிநாளாக்கப் படவேண்டும் என்பது அரசாங்கத்தரப்பிலான வாதம். ஆனால், டாக்டர்களுக்கான யூனியனோ சனிக்கிழமை பணிபுரிந்தால் அதற்காக மேலதிகமான ஊதியம் வழங்கப்படும் தற்போதைய முறை மாற்றப்படக்கூடாது என்கிறது. இம்மாற்றத்திற்கு ஈடாக டாக்டர்களுக்கு 11% ஊதிய உயர்வு வழங்குவோம் என்று அரசாங்கமும், எமக்கு 5% ஊதிய உயர்வு போதும் ஆனால் சனிக்கிழமை பணியில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் யூனியனும் தமது எல்லைக்கோடுகளை வகுத்துக் கொண்டு அதைவிட்டு வெளிவரமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.

இருவரையும் எல்லைக்கோட்டினைக் கடந்து ஒரு இடைவழியில் சந்திக்க வைக்க முயற்சி எடுக்கும் அமைப்பு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையில் அகப்பட்டு தமது நேற்றுத் திட்டமிடப்பட்ட ஆபரேஷன் ரத்து செய்யப்பட்ட சுமார் 3000 பேஷண்டுகள் மற்றொரு திகதியை எதிர்நோக்கிக் கொண்டு எங்கே தமக்குத்தரப்படும் அடுத்த தேதியில் மற்றொரு வேலைநிறுத்தம் வந்து விடுமோ என்றஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். வேலைநிறுத்தம் வெற்றியீட்டுவது என்றால் அதற்குப் பொதுமக்கள் ஆதரவு தேவை. இப்போது பொதுமக்கள் ஆதரவு டாக்டர்கள் பக்கம் இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியாது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

டாக்டர்கள் மனித உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவர்கள். சுமார் ஆறுவருட காலம் பல்கலைக்கழகத்தில் பயின்று அதன் பின்னால் தொடர்ந்து பல பயிற்சிகளில் தம்மை ஈடுபடுத்தி தாம் பெற்ற அறிவு அனைத்தையும் கொண்டு தம்மை நாடிவரும் மக்களின் பிணியைத் தீர்க்கும் அரும்பணி ஆற்றுவோர்கள் டாக்டர்கள். அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை வழங்க அரசு முன்வருமா ? அதைவிட்டு தன்னிச்சையாக ஒப்பந்த மாற்றத்தை டாக்டர்கள் மீது திணித்து விரக்தியில் இந்நாட்டு டாக்டர்கள் வேறுநாடுகளைத் தஞ்சம் அடைந்து விடுவார்களா? எனும் கேள்வி பல விற்பன்னர்கள் மத்தியில் ஊசலாடிக் கொண்டுள்ளது.

காலத்தின் பதிலுக்காய் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

படம் உதவி:

http://static.standard.co.uk/s3fs-public/styles/story_large/public/thumbnails/image/2015/12/01/07/docs.jpg

www.standard.co.uk

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *