நிற்கிறார் நிலைத்து என்றும் !

0

 எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

சமயத்தின் சாறாய்நின்று சரித்திரம் படைத்த வள்ளல்
இமயத்தின் உயரமாகி இகத்துளோர் மதிக்க நின்றார்
சமயத்தை மட்டுமின்றி சமூகத்தை மனதிற் கொண்டு
சன்மார்க்கம் உணர்த்திநின்ற சங்கரர் தாழ்கள் போற்றி !

மாசறு மனத்தனாகி மாண்புறு செயல்கள் ஆற்றி
பூசைகள் தாமுமாற்றி பூதலம் சிறக்கச் செய்தார்
வாசனை பரப்பிநிற்கும் மறுவற்ற மலராய் நின்ற
ஈசனின் தோற்றமிக்க எந்தையின் நாமம் வாழ்க !

தெய்வத்தின் குரலைத்தந்து தீமைகள் அகன்றே போக
வையத்தில் வாழ்ந்துநின்ற மாமணி அவரே ஆவர்
சொல்லிலே சுவைகள் சேர்த்து சுருதியின் கருத்தும்சேர்த்து
நல்லதைச் சொல்லிச் சென்ற நாயகன் நாமம்வாழ்க !

நீண்டதோர் காலம்வாழ்ந்தார் நிமலனை மனதிற் கொண்டார்
பூண்டநல் விரதத்தாலே புவியிலே புனிதர் ஆனார்
ஆண்டவன் அவரேயென்று அனைவரும் தொழுது ஏற்ற
அருங்குணங் கொண்டுநின்ற அவர்நாமம் என்றும் வாழ்க !

இல்லறம் துறந்தயெந்தை ஏகினார் இறை தொண்டாற்ற
நல்லறம் ஆற்றி நிற்க நயமுடன் பலதைச் சொன்னார்
சொல்லறம் காத்து நிற்க தூய்மையைய மனதில் கொண்ட
தொல்லறம் மிக்க எங்கள் தூயவர் நாமம் வாழ்க !

ஊரெலாம் எந்தை சென்றார் உபதேசம் ஆற்றிநின்றார்
பாரெலாம் பண்பு ஓங்கப் பாதங்கள் பதியச்சென்றார்
வாரங்கள் மாதங்களாக மக்களின் இடத்தே சென்று
வேதங்கள் சாரம்தன்னை விளக்கிய வள்ளல் வாழ்க !

ஆற்றிய உரைகள் யாவும் அனைத்துமே வேதமாகும்
சாற்றிய மேற்கோள் யாவும் தத்துவக் குவியலாகும்
சேற்றிலே கிடந்த மக்கள் செழுமையாய் வாழவெண்ணி
நாற்றென நின்ற ஆசான் நாமத்தைப் போற்றிநிற்போம் !

ஆசியநாட்டில் தோன்றி அனைவரும் போற்ற நின்றார்
பேசிய வார்த்தை எல்லாம் பெரும்பயன் பெற்றதாகும்
காசினி உள்ளார்மீது கருணையைப் பொழிந்த வள்ளல்
ஆசியை வேண்டிப் பல்லோர் அவரடிபணிந்தே நின்றார் !

புத்தராம் யேசுகாந்தி புனிதராம் நபிகள் தோன்றி
தத்துவம் உரைத்த நாட்டில் சங்கரர் தோன்றிநின்றார்
அத்தனை பேர்க்கும் மேலாய் அவர்பணி ஓங்கிற்றென்று
நித்தமும் நினைப்பதாலே நிற்கிறார் நிலைத்து என்றும் !

எளிமையைச் சொந்தமாக்கி இனிமையை மனதில் தேக்கி
தனிமையில் இறையைநாடித் தவநிலை கொண்ட வள்ளல்
அழிவுடை எண்ணம்போக அறிவினை ஊட்டி எங்கும்
நிறைவுடை மனத்தைநாட நின்றவர் நாமம் வாழ்க !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *