பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12650584_953119718075561_2009024006_n
112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

இந்த வாரப்போட்டியின் நடுவராக கவிஞர் மதுமிதா அவர்கள் தொடருவார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (50)

 1. சிறகற்ற பட்டாம் பூச்சி 

  ஒரு செங்கல் சுமப்பவளாக 
  இருக்கலாம்…. 
  ஒரு யாருமற்ற தேவதை
  குழந்தையோடு  
  அனாதையாகி இருக்கலாம்..
  எவனாவது காதல் சொல்லி 
  வயிறு நிரப்பி இருக்கலாம்…
  மானம் போன பிறகு
  நகரம் நரகமே ஆனாலும்
  சாலைவாசியாய் மாறி இருக்கலாம்…
  உடல் விற்பவளாய் விரல்கள்
  மட்டும்…… கயிறோடு 
  பிணைத்திருக்கலாம்…
  பசி மட்டுமே பீறிட்டுக் 
  கிடக்கும் இந்த கண்களுக்கு 
  அவள் தேடும் வயிறு
  கயிறுகளால இறுக கட்டப் 
  பட்டிருக்கலாம்…
  ஒரு கனவற்ற காட்டுக்குள்
  கயிறு கொண்டு 
  அவள் அடைத்தே 
  வைத்திருக்கலாம்…
  இந்த பட்டாம்பூச்சியையும் 
  இந்த உலகம் பியித்து 
  எறிந்துவிடுமோ என்பது 
  அவளின் தத்துவமாக கூட 
  இருக்கலாம்..

  கவிஜி 

 2. கட்டு…

  கல்யாணமெனும்
  கால்கட்டு போட்டபின்னே
  கைக்கு எட்டியது குழந்தை..

  பிள்ளை வயிறு காயாதிருக்க,
  வாயைக் கட்டிய 
  வயிற்றைக் கட்டிய உழைப்பு
  பெற்றோருக்கு..

  வாழ்வைக் கட்டிய வறுமையிலும்
  வளர்க்கின்றனர் பிள்ளையை,
  வறுமையைக் காட்டாமலே..

  வாலைக் காட்டுகிறது அது
  இவர்களை
  வேலைசெய்ய விடாமலே..

  வறுமைக்கட்டை அவிழ்க்கமுடியாமல்
  பாசக்கட்டை மறைத்து
  பெற்றோர் போட்டதுதான்
  இந்தப்
  பாசக் கயிறு…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. இடை விலங்கு.
   
  செல்வந்தர் பிள்ளைகளை மக்கள் கூட்டத்தில்
  செல்வாக்காய் தோற்பட்டியில் இணைத்துக் கையில்
  நாகரீகமாய் பிணைப்பார்  நளினமான செயல்
  நாசுக்கான பூட்டாக விலங்கு கையில்
  கைக்குழந்தையானால் ஏணை கட்டி யருகில்
  மைவிழி கரைய இணைவார் பணியில்.
  நடமாடும் பிள்ளையை என்ன செய்வார்!
  வடம் கொண்டு இடை பிணைத்தார்.
   
  தடமின்றிப் போகாது கண்காணிப்பில் பிள்ளையது
  முடமாகாது வாழ்விற்கு வேதனம் தேடுவது.
  கடப்பாட்டாளர் ஏழைகளின் எளிமை வழி.
  நடமாடல், விளையாடலுடனேதும் கடிக்கவும் வழி.
  பாசத்தின் பிணைப்பு திருஷ்டிப் பொட்டில்
  பேச வழியற்ற பேந்தும் விழியில்.
  ஆசுடை தாக்கங்கள் பிள்ளையெதிர் காலத்திலே
  மாசுடை சமூகப் பிழையாலும் இந்நிலையே!
   
  வரிகள் வேதா. இலங்காதிலகம்
  டென்மார்க்.
  13-2-2016.

 4. கலிகாலம்

  சுட்டிப்பெண்ணே உன்
  சுட்டித்தனத்திற்குப் பயந்துதான்
  கட்டிப்போட்டிருக்கிறாள் அன்னை 
  கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைதான்
  கட்டளைகள் செலுத்தமுடியும்
  இந்த நிகழ்வை பார்க்கும்போது
  அந்த யசோதா  வீதியிலுள்ளவீடுகளில்
  வெண்ணை திருடிய  மாயக்
  கண்ணனை உரலில் கட்டிப்போட்டதுதான்
  நினைவுக்குவருகிறது  ..
  தாய்  கண்முன்னே காவல்இருக்கும் வரை
  பெண்ணுக்கு பாதுகாப்பு 
  மனிதனின் காமம்
  மரணகுழி வெட்டும் சோகம்
  மலராத மொட்டுகளைக் கூட
  மதிகெட்டு கசக்கக் கூடாதென்றே
  அழுத்தும் பணியிலும்
  துரத்தும் கடமையிலும்
  கண்முன்னேயே கட்டிப்போட்டிருக்கிறாள்
  என்ன செய்வது கலிகாலம்
  பெண் பெயரில் இருப்பதால் 
  நதிகள் கூட பாழ்படுத்தப்ப்டும் நிலையில்
    நீயெங்கே நான் எங்கே?

Leave a Reply

Your email address will not be published.