பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்
தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல்
நோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியா மெனல்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல்.
பொருள் விளக்கம்:
(காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற மனநிலையைக் கொண்டவர்களான) பெற்ற தாயும் தந்தையும் கூட பெருமையுடன் கூறவழியற்ற பண்புகளின் இருப்பிடமானவர்,
தானே தன்னைப் புகழ்ந்து பொய்யுரைத்துப் பேசிக் கொண்டிருப்பார் என்றால், பிறரும் அவர் மொழியினை நம்பி அவர்மேல் புகழுரைகளைக் கூறிக்கொண்டிருப்பது எந்தத் துன்பத்தையும் விளைவிக்காது. ஆயினும், அது அடுப்பின் அருகில் சோம்பலுடன் முடங்கிக்கிடக்கும் நாயொன்றினை வீரம் நிறைந்த புலி எனப் பாராட்டும் (நகைப்பிற்குரிய செயலாக அமைந்துவிடும்).
பழமொழி சொல்லும் பாடம்: தற்புகழ்ச்சி கொண்டவரை அவர் மகிழும் வண்ணம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பது முறையற்ற புகழ்ச்சியின் வகைப்படும். சிறியோர்களது பண்பு என்றும் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பது என்பதைச் சுட்டுகிறார் வள்ளுவர்,
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள்: 978)
செருக்கின்றி யாவருடனும் பணிவன்புடன் பழகுவது பண்பில் சிறந்த பெரியோர்களின் குணம், சிறுமைக்குணம் படைத்த பண்பற்றோரே ஆணவத்துடன் தற்புகழ்ச்சியாகத் தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.
அத்தகையோரே விரும்பிக் கேட்டாலும் அவர்களுடன் பயனற்றவற்றைப் பேசத் தேவையில்லை எனக் குறிப்பிடும் வள்ளுவர்,
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். (குறள்: 697)
ஒருவரிடம் உரையாடும்பொழுது பயன்தருபவற்றை மட்டுமே பேசவேண்டும். அவரே விரும்பிக் கேட்டாலும் பயன்தராதா உரைகளைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்கிறார்.