பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

 

பழமொழி: சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்

மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் கென்கொலோ?
மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
மொய்கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?-
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
கை உண்டும், கூறுவர் மெய்.

பொருள் விளக்கம்:
ஒருவருக்கொருவர் கொண்ட பகையினால் தோன்றிய போரில், எதிரி வழங்கும் பொய்யான உறுதிமொழியில் மயங்கி, பொருளாசை கொண்டு எதிரியுடன் இணைந்து இரண்டகம் செய்பவரை என்னவென்பதோ? அழகிய மைதீட்டிய கண்களையும் அணிகலன்களையும் கொண்டவரே; சான்றோர் (எனப்படுபவர் தனது) வாழ்வாதாரமே அடுத்தவரை நம்பி இருந்தாலும்கூட அவருக்காகச் சார்புநிலையினை மேற்கொள்ளாது நடுநிலை வழுவாது உண்மை மட்டுமே உரைப்பர். ‘அறைபோய்த் திரிபவர்’ என்பது கையூட்டு பெற்று எதிரணியில் சேர்ந்து தீமைக்கு உடன் போவாரைக் குறிக்கிறது.

பழமொழி சொல்லும் பாடம்: சான்றோர் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையிலும் அவர்களுக்காகச் சார்புநிலை கொள்ளாது, நடுநிலை தவறாது மெய்யுரைப்பர். நடுநிலை மாறாத சான்றோர் சிறப்பினைக் கூறுமிடத்து வள்ளுவர்,

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 115)

ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையில் இயல்பாக இருப்பினும், எந்த நிலையிலும் மனதில் நடுநிலை மாறாது செயல்படுவது சான்றோருக்கு அழகு என்கிறார். மேலும்,

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

எப்பக்கமும் சாராது, சமநிலை கொண்ட துலாக்கோல் போல நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகு என்றும் அறிவுறுத்துகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.