-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தின் உரிமையாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், அவரின் புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி!

marriage ritual

 

 

 

 

 

 

 

 

 

 

’இல்லறமல்லது நல்லறமில்லை’ என்பது முதுமொழி. ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் வாய்மொழி. இவ்வினிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது இருமனங்கள் இணையும் திருமணம் எனும் மங்கல நிகழ்வு.

’உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவையோடு’ மிக எளிமையாய்த் தமிழர் திருமணம் நிகழ்ந்ததோர் பொற்காலம்! அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வதுவைச் சடங்குகளை உள்ளடக்கியதாய் அது விரிவடைந்தது பிற்காலம்!

திருமணம் என்பது இலட்சக்கணக்கான பொருட்செலவில் நிகழும் ஆடம்பரச் சடங்காய், வரதட்சணை எனும் பெயரில் பெண்ணை விலைபேசும் வியாபாரமாய் மாறிவிட்டிருப்பது தற்காலம்! இந்நிலை மாறி, திருமணம் காதலின் அடிப்படையில், எளிமையும், இனிமையும் நிறைந்ததாய் மாறும் காலம் எக்காலம்?

***

இவ்வாரக் கவிதைப்போட்டியை அணிசெய்திருக்கும் மணியான கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் நேரமிது!

மறக்கமுடியாத இனிய நிகழ்வுகளை உள்ளடக்கிய திருமணச் சடங்குகளை அழகிய சொல்மலர்களெடுத்து விளக்கியிருக்கின்றார் திரு. க. கமலகண்ணன். 

அக்னியைச் சுற்றி
அம்மி மிதித்து
அருந்ததியைப் பார்த்து
அனைத்து உறவுகளும்
அருகிலே இணைந்திருக்க
அருமையான தருணத்தில்
அட்சதையைக் கரங்களால்
அனைவரும் தூவ இனி
அன்பு மனைவி இவள் என்று
அருகில் அமர்ந்து மங்கள தாலியை
அணிவிக்க மறக்க முடியாத நினைவுகளை
அத்துணை சுலபத்தில் மறக்க முடியுமா
அந்த அம்மி காத்திருக்கிறது
அழகிய மணமகளின் கால் மிதிக்க
அக்னி அம்மி குத்துவிளக்கு மரக்காலில் நெல்
அனைத்துடன் ஒளிஓவியக் கருவிகளும்
அற்புத நிமிடங்களைப் பதிவு செய்ய
அன்புடன் இணைந்து கொண்டது இப்போது
அளவில்லா ஆனந்தம் எப்போதும்
அரிய நினைவுகளை நினைவுகூர

***

சமையல் உபகரணமாயிருந்த அம்மி, சடங்கு உபகரணமாகிக் கரணம் (திருமணம்) முடிந்ததும் மூலையில் முடங்கிக் கண்ணீர் வடிக்கின்றது என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

சமையல் உபகரணம்
சடங்கு உபகரணமாகி,
வேலை முடிந்ததும்
மூலையில் வைக்கப்படுகிறது..

அம்மி மிதித்தவர்களும்
அங்கே வேடிக்கை பார்த்தவர்களும்,
அகன்றுவிட்டனர்
அதை
அம்போ என விட்டுவிட்டு..

மெல்லியலார் கைகளால்
மிளகரைத்த காலத்தையும்,
மின் உபகரணங்கள் வரவால்
மறக்கப்பட்டு
புறந்தள்ளப்பட்ட கதையையும்
எண்ணிக்
கண்ணீர் வடித்துக் காத்திருக்கிறது
அடுத்த
கல்யாணத்திற்காக…!

***

’அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சம்பிரதாயமெல்லாம் பொருள்பொதிந்தவையே; வெறும் பொழுதுபோக்கல்ல’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றச் 
சம்பிர தாயச் சடங்கினைக்  – நம்முன்னோர்  
உண்டாக்கி வைத்ததெலாம் ஒப்புக்கு அல்லவே 
கண்ணுற்றால் அர்த்தங்கள் நூறு. 

***

’வல்லமைமிகு வட்டெழுத்தே இல்லறம் எனப் போற்றுவர் பண்பாட்டுக் காவலர்; அந்நல்லறத்தை உணராத அறிவிலிகளோ அதனை நீர்மேல் எழுத்தெனச் சாற்றுவர்’ என்கிறார் திருமிகு. மலர்விழி மங்கையர்க்கரசி.

இரட்டைநாயனமாய் எங்கும்
இணைந்த இசைச்சங்கமமே
குடும்பகீதம் என்றே உணர்த்திநிற்பன
இரட்டைக் குத்துவிளக்குகளே!
தொல்காப்பியன் சொன்ன
மெய்ப்பாடெட்டையும் அன்புநீர்பெய்து
அருஞ்சுவைதுவையலாய் நிகழ்வுகள்
வழங்கி நீடூழிவாழ்வதே நல்லறஇல்லறமே
ஈதுணர்த்தும் அம்மிக்கல் குழவி.
நிறைநாழி நெல்நிறைத்தல்
பறைசாற்றிப் பாரம்பரியம்போற்றி
விதைநெல்லாய் வாழ்ந்துசிறக்கவே!
அடியிரண்டு இணைநிற்கும்பாதங்கள்
ஆளுக்கொன்றாய் அறுத்தோடி விலகாது
அருகருகே அன்பாலிணைத்த இருகோடுகளே!
இப்போது அறிவிலிகள்
அரற்றுவர் தண்ணீரில்எழுத்தெனவே 
எப்போதும் பண்பாட்டுக்காவலர்
போற்றுவர் வல்லமைமிகு வட்டெழுத்தேயது!

*** 

படத்தில் காணக்கிடைக்கும் மங்கலப்பொருள்கள் ’இல்லறத்தில் இல்லாததொன்றில்லை’ என்பதையே குறிப்பால் உணர்த்துகின்றன என்பது திரு. மதிபாலனின் கருத்து.

துன்பத்தை தூளாய் ஆக்கி 
      துயரத்தை அரைக்கும் அம்மி 
இன்பத்தை எடுத்துக் காட்ட 
       இதம்தரும் மல்லி கைப்பூ
அன்பென்னும் ஒளியை வீச 
       அழகான விளக்கி ரண்டு 
என்னதான் இங்கே இல்லை 
        இருவரும் சேர்ந்து வாழ !

***

திருமணவாழ்வு, அம்மியில் அரைபடும் அவல வாழ்வாயில்லாமல் செம்மையாய்ச் சீராய் அமைதலே நலம்; ஆதலால் நீக்கிடுக தேவையற்ற சுயநலம்” என விளம்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

சிந்திய அறுகரிசி சிதறிய பூக்களுமாயிது
எந்த வகையிலோ மனக்கோல முடிவிது.
பந்தங்கள் நிற்பது சீதனப் பொருட்களின்
பக்கமாயும் இருக்கலாம் என்றும் கொள்கிறேன்.
அம்மியில் அரைபடும் வாழ்வாக பலரது
செம்மையாம் திருமண வாழ்வு அமைகிறது.
அம்மையப்பன் போல பத்திரமாக நடுவிலது
அமைவாகும் புகைப்படக்கருவியேன் புரண்டு கிடக்கிறது!

குளப்பத்தின் பின்னரான ஒரு ஓய்வா!
அளப்பரிய புயலுக்குப் பின்னான அமைதியா!
விளக்கங்கள் அம்மி, அருந்ததி, விளக்கிற்கெனவோ
வளமாகப் பலவுண்டு, வழக்கிலிவையெங்கே போகிறதோ!
அலைந்த ஆதிவாழ்வு அமரிக்கையாய் தாலிக்கட்டுக்குள்ளானது.
அந்த நிலைமாறி ஆதி நிலைக்கின்றிது
தலைகீழாகிறது தடுப்பாரெவரோ! வழி எதுவோ!
விலையற்ற கலாச்சாரம் பேணிக் காக்கப்படவேண்டும்!

***

ஆணும் பெண்ணும் இல்வாழ்வில் இணையப் பாலமாய் விளங்கும் ’ஆயிரங்காலத்துப் பயிரான’ திருமணத்தில் நிகழ்த்தப்பெறும் சடங்குகளின் உட்பொருளை நுட்பமாய்த் தன் கவிதையில் நுவலுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன்.      

எதிர்கால ஒழுக்கத்திற்கு
அக்னி சாட்சி
படியைத்தாண்டமாட்டேன் என்பதே
அம்மி மிதித்தல்
நிரந்தர கற்பு நட்சத்திரமாக மின்ன
அருந்ததி பார்த்தல்
பாலோடுசேர்ந்தபழம்போல் சுவைபெற
பால் பழம் சாப்பிடல்
பூ மணம் போல் புகழ் பரப்புவோம்என
பூமணம் இடுவது
ஒரு முடிச்சு கணவனுக்கு
இரண்டாவது முடிச்சு
தாய் தந்தையருக்கு
மூன்றாவது முடிச்சு
தெய்வத்துக்கு அடங்கி போக
மூன்று முடிச்சு
பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும்அது
காப்பு கட்டல்
இதன் அர்த்தம் புரிந்து
ஆணும் பெண்ணும்
இணைந்து வாழ்தலே நல்ல இல்லறம்
வருவது ஒருமுறை
அருமை புரிந்து வாழ்வது நடை முறை

***

வாழ்க்கையெனும் பெருங்கடலை ’நம்பிக்கை’ எனும் துடுப்பின் உதவிகொண்டு மணமகனும் மணமகளும் கடக்கவேண்டும் என நல்லுரை பகர்கின்றார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

அன்றே அய்யன் திருவள்ளுவர் 
மனத்தை மலராக உவமையாக்கினார்
இரு மனங்களும் சேருவது திருமணம்
மணமகன் உயிராகவும் , அச்சாணியாகவும்
மணமகள் உடலாகவும், சக்கராமாகவும்
வாழ்க்கை என்ற இல்லறக் கடலை
நம்பிக்கை என்ற துடுப்புடன் கடக்கட்டும்
தங்கம் தற்சமயத்தில் பலரக்கும் எட்டாதொன்று
பூவோ அனைவருக்கும் எட்டுமொன்று
அம்மியை மிதக்கிறமோ , இல்லையோ
மம்மியை (தன் அம்மாவை) மதிக்க  வேண்டும்
அருந்ததியை பார்க்கிறமோ , இல்லையோ
அன்பு, அடக்கம், கருணை, கடமை
ஆணவமின்மை, பொறுமை, கோபமின்மை
என்ற நற்குணங்குணங்கள் இருப்பவர்களாக
இருத்தல் அவசியம்…

***

சிந்தனைக்கு விருந்தாய் நல்ல கவிதைகளைப் படைத்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

***

இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருப்பது யார் என்பதை அடுத்து அறிந்துவருவோம்!

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
என்பது தெய்வ(ப்புலவரின்) வாக்கு. இன்றோ பல திருமணங்கள் அன்பும் பண்புமின்றிச் சந்தேகப் புயலிலும் வரதட்சணைச் சூறாவளியிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி வருவதை நாளுக்குநாள் நீதிமன்றங்களில் நீண்டுநிற்கும் மணவிலக்கு வழக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன! அப்படியானால் அம்மியும் அருந்ததியும் மணவிழாவில் இடம்பிடிப்பதன் நோக்கந்தான் என்ன? மனிதர்களின் கல்மனத்தையும், மின்னிமறையும் நட்சத்திர இயல்பையும் உணர்த்தத்தானோ? என வேதனையோடு இன்றைய நடப்பைப் பேசும் ஒரு கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!

எத்தனை சாட்சிகள்
இருந்தால் என்ன
ஆயிரங் காலத்துப்பயிர்
சந்தேகப் புயலிலும்
வரதட்சணை சுனாமியிலும்
பொருந்தா மனப் புழுதியிலும்
அகந்தைபிடித்தாட்டும் பனிப்பொழிவிலும்
சின்னாபின்னப்பட்டுப் போகிறதே

அம்மி மிதித்தல்
அவ்வப்போது மனம் கல்லாதல்,
அருந்ததி பார்த்தல்
மின்னி மறையும நட்சத்திரமாய்த்
தொலைந்து போதல்,

குத்துவிளக்கேற்றி வைத்து
அடியிலிருக்கும்
இருளையே மனதில் நிறைத்தல்,

மூன்று முடிச்சு
முடிந்தால் கழுத்தை இறுக்கும்,
பெண்ணிற்கோ
அவசியப்படாத அடையாளமாய்

எல்லாம் மங்கலமே
சிதறு தேங்காயாய்
வாழ்க்கையைப் பிரித்து மேய்ந்து
முகநூல்களிலும், இணையங்களிலும்
பேருக்கு வாய்க்கும்
பொருந்தா நட்பின்
சந்தர்ப்பவாதங்களினாலும், காமத்தாலும்
பிரிவதற்கென்றே
குடும்ப
வழக்கு மன்றங்களில்
அலைந்து கொண்டிருப்போர்க்கு
இவை யாவும்
அஃறிணைப் பொருட்களே
 

’மனப்பொருத்தமில்லா மணவாழ்வு, (நறு)மணமில்லா வருத்தமிகு வாழ்வே!’ என்பதை உணர்த்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

***

தன் மணவாழ்வின் மங்கல நிகழ்வுகளை மணம்வீசும் மலரும் நினைவுகளாய் மீட்டிப்பார்க்கும் மங்கை இவள்!

மஞ்சள் குங்குமங் கலந்தே
நெஞ்சக் குடிலினுள் நீ
குடி புகுந்த வேளையதை
சூடி விட்ட மல்லிகையும்
கூடி நின்ற ஆன்றோரின்
தேடி வந்த அட்சதையும்
வாழ்க என்ற வாழ்த்துகளும்
சூழ்ந்து வந்த சுற்றமும்
அம்மி மிதிக்கையிலே
அம் மெட்டி நீ சூட்டும்
அழகிய நினைவுகளும்
ஒழுக்கத்தில் அருந்ததியை
முழுவதுமாய் கொண்டிரு
என்றுன் கை பிடித்து
வான் ஒளிரும் நட்சத்திரமொன்றை
பகலவனின் பகலொளியில்
அகத்தினிலே வேண்டியதும்
அக்கினியின் சாட்சியத்தில்
இக் கன்னியின் கழுத்தில்
மாங்கல்யம் சூட்டியதும்
மங்காது என்னுள்ளே இன்று
மீண்டும் இனிமையுடன்
காணும் மணவிழாவில்
தேனாய்த் தித்தித்தே
மனதை நிறைக்கிறது

’நினைத்தாலே இனிக்கும்’ தன் திருமண நாளை மங்கையொருத்தியின் வார்த்தைகளாய்த் தேர்ந்தசொற்களில் விவரித்திருக்கும் திருமிகு. புனிதா கணேசனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *