க. பாலசுப்பிரமணியன்

 

அந்த நாள் ஞாபகம் வந்ததே!

 education11

தரையில் ஒரு  பாயை விரித்து  அதன் மேல் ஒரு போர்வையை விரித்து, ஒரு பழைய புடவையையும் விரித்து அந்த மெதுவான படுக்கையில் ஒரு சிறிய தலையணை வைத்து பாட்டி தன் படுக்கையை தயாரித்த உடன் ஓடிச்சென்று அதில் படுத்துக்கொண்டு “பாட்டி, எனக்கு ஒரு கதை சொல்லு”  என்ற இனிய காலம் … இன்றும் நினைவில் …..

“ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்  – என்று அவள் அந்தக் கதையை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கண்ணயர்ந்து,  மீண்டும் அடுத்த நாள் அதே நேரத்தில் “ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம் …” என்று அது தொடர்கதையாக மாற ……

கதை சொல்லுதலும் கதை கேட்பதுவும் ஒரு இனிய  கலை

இளம் சிறார்களுக்குக் கதைகள் சொல்லுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது அவர்களுடைய மன நலனை வளர்க்க, சிறப்பிக்க மற்றும் அதற்கு உயிரூட்டத் தேவையான நல்ல உரம்.

கல்வி ஆராய்ச்சியாளர்கள் கற்றலில் கதைகளின் முக்கியத்துவத்தை மிகச் சிறப்பாகக் கூறியிருக்கின்றனர்.

 • கதைகள் குழந்தைகளின் ஆர்வத்தை வளர்ப்பதற்கு அடிகோலாக அமைகின்றது.
 • சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்றன.
 • நன்னெறிகளை வளர்க்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.
 • கற்பனை வளத்தை செழிப்பாக்குகின்றன.
 • இலக்கிய,சரித்திர நிகழ்வுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
 • மனித உறவுகள் மற்றும் செயல்களையும் புரிந்து கொள்ளவும் ஆராய்ந்து பார்க்கவும் உதவுகின்றன.
 • இயற்கை வளம், விலங்குகள் பறவைகள் ஆகியவற்றின் வாழ்கைமுறைகளையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள உதவுகின்றன

சிறு குழந்தைகளுக்குக்  கதைகள்  சொல்லுவதே ஒரு நுணுக்கமான திறன் வாய்ந்த கலை. இதற்கு தனியான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

சொல்லுபவருடைய சொல் வளம், குரல் வளம், உடல் மொழி, பாவனைகள், முகத் தோற்றங்கள் ஆகியவை கதைகளுக்கு வலுவையும் உணர்வுகளையும் கொடுக்கின்றன. அவை குழந்தைகளுடைய ஆர்வம், கற்பனை மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவைகளைத் தூண்டுகின்றன. பல நேரங்களில் கதைகளைக் கேட்கும் குழந்தைகளுடைய முக பாவங்களும் உடல் மொழியும் சொல்லுபவருடைய பாவனைகளையும் மற்றும் உடல்மொழியையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும்.

சிந்தனைத் திறத்தை (Thinking Skills ) வளர்ப்பதற்கு கதைகள் மிகவும் துணையாக இருக்கின்றன. தெனாலி ராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள் , விக்ரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதை ராமன் கதைகள்  என பலவிதமான கதைகள் Lateral Thinking , analytical thinking, critical thinking, Creative thinking என்று தற்காலத்தில் வகுத்துச் சொல்லப்படும் சிந்தனைத் திறன்களை வளப்படுத்த உதவுகின்றன.

பல நேரங்களில் கதைகளைக் கேட்கும் குழந்தைகள் அந்தக் கதைகளின் கதாநாயகர்களாகவே மாறிவிடுகின்றனர். கதைகளைக் கேட்டபின் அந்த உணர்வுகள் அதிக நேரம் அவர்கள் மனதில் தங்கி இரவில் தூக்கத்திலும் அவர்களை பாதிப்பது மனநல நிபுணர்களால் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தூக்கத்தில் பேசுதல், பிதற்றுதல், பயப்படுதல், சிரித்தல், அலறுதல், சிறுநீர் கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் அன்று கேட்கப்பட்ட கதைகளின் பாதிப்பாக வெளிப்படுகின்றன. சில நேரங்களில் காடுகளின் நடுவில் தொலைந்துபோவது போன்ற உணர்வுகள், பேய் , பூதம் போன்ற ஒரு மாய மன உருவங்களைப் படைத்து பயப்படுதல் ஆகியவை மிகச் சாதரணமாக நடக்கக் கூடிய செயல்கள். ஆகவே குழந்தைகளுக்கு எந்த மாதிரியான கதைகள் சொல்லவேண்டும், எந்த நேரத்தில் சொல்ல வேண்டும், அவை என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனதில் கொள்ளுதல்  அவசியம்.

தற்காலத்தில் அனேகக் கதைகள் சித்திர வடிவில் புத்தகங்களாக அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன. பல நேரங்களில் அந்தப் புத்தகங்களில் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் உண்மைக்கு மாறுபட்டதாகவும் கேலிச்சித்திரங்களாகவும் அமைந்து தவறான கருத்துகளையும் உருவகங்களையும் உண்டாக்குவதற்கு வாய்ப்பை அளிக்கின்றன. ஆகவே குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்கள் வாங்கும் பொழுது பெற்றோர்கள் அவைகளின் தரத்தை ஆய்ந்து வாங்குதல் அவசியம்.

கதைகள் கற்றலின் ஒரு முக்கியமான அங்கம்.  .. மேலும் இதைப் பற்றி அறிவோம்.

3 thoughts on “கற்றல் ஒரு ஆற்றல் – 19

 1. மிகவும் பயனுள்ள தொடர்…
  மீ.வி

 2. கதைகள் நமது சிந்தனைத்திறனை வளரும் என்ற கருத்து நூற்றுக்கு நூறு சரி. கீழ்கண்ட திரைப்பட பாடல் வரிகள் எனது மனதில் நினைவிற்கு வரிகிறது.

  பாப்பா பாப்பா கதை கேளு
  காக்கா நரியும் கதை கேளு
  தாத்தா பாட்டி சொன்ன கதை
  அம்மா அப்பா கேட்ட கதை

  ஊருக்கு வெளியே கடையிருக்கு
  கடையில வெங்காய வடையிருக்கு
  கடையில வடைய திருடிக்கிச்சாம்
  காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம்

  காக்கா மூக்கில வடையிருக்க
  குள்ள நரியுமே பாத்திடுச்சாம்
  லேசா வடையை வாங்கிடவே
  நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம்

  காக்கா பாட்டு பாடச்சொல்லி
  குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம்
  வாய திறந்து காக்காபாட
  வடையும் கீழே விழுந்திடுச்சாம்

  விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம்
  வாயில போட்டுத் தின்னுடிச்சாம்

  பாப்பா பாப்பா கதை கேளு
  காக்கா நரியும்
  கதை கேளு
  தாத்தா பாட்டி சொன்ன கதை
  அம்மா அப்பா கேட்ட கதை
  . ஐயா க. பாலசுப்ரமணியனுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

 3. அன்புடையீர் 

  அன்புடையீர் 

  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 

  அன்பன் 
  க.பாலசுப்ரமணியன் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க