வாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் மதிப்புரை

0

— இன்னம்பூரான்.

 

jk2

வாழும் கலை: மரணமில்லாத ஜே.கே. தத்துவங்கள்

பி.எஸ்.ஆர். ராவ். (2007/2013) சென்னை; நர்மதா பதிப்பகம்
புத்தக விமர்சனம்: இன்னம்பூரான்

கைரேகைகளைப் போல அவரவரது வாழ்க்கையின் நடை, தனது அழியா வரிகளைப் பதித்து விடுகிறது. நாம் எஞ்சிய வாழ்க்கையின் போது அவற்றை அழிக்கமுடியாது என்றாலும், வருகை புரியும் ரேகைகளின் ஆளுமை பிற்கால வாழ்வியலை நிர்ணயிக்கும். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ( ஜே.கே. ) மே 11, 1895 அன்று மதனப்பள்ளியில் ஜனித்தார். ஆசாரசீலர்களான ஒரு வளநாடு தெலுங்கு பிராமணக்குடும்பம் என்று பி.எஸ். ஆர். ஆர். குறிப்பிட்டதில் ஒரு நுட்பம் காண்கிறேன். ‘எங்கிருந்தோ வந்தான்…’ என்ற பாரதி வாக்குப்படி, மதனப்பள்ளி கட்டுப்பெட்டிக் குடும்பத்து பையன், தந்தையின் அலுவல் பொருட்டு சென்னையில் வந்திருந்து, பிரம்மஞ்ஞான சபையில் [The Theosophical Society, of which I became a member,decades later.] ‘முத்துக்குளித்து’ அன்னி பெசண்ட் அம்மையாரால் கடவுளின் அவதாரம் என்று பிரகடனம் செய்யப்பட்டவனானான். சர்ச்சைகள் கிளம்பி அடங்கின. தனது அபிமான புத்திரனாக, இவரை அம்மையார் அறிவித்தவுடன், ஜே.கே உலகுக்கே குரு என்ற கருத்து, பிரம்மஞ்ஞான சபையின் தாரக மந்திரம் ஆயிற்று. மனிதர்களில் அவரொரு மாணிக்கம் (ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) என்று தான் அன்னி பெசண்ட் கூறி வந்தார். அந்தக் கருத்து நடைமுறைக்கு வந்திருந்தால், அவர் மிகவும் போற்றப்பட்டிருப்பார்; வணங்கப் பட்டிருப்பார்; மடாதிபதியாக மேலாண்மை பெற்றிருக்கலாம். ஒன்று நிச்சயம். இன்றளவில் சுவடு ஒன்றும் இல்லாமல் முழுமையாக மறக்கப்பட்டிருப்பார்.

ஹாலந்தை சேர்ந்த ஓமன் நகரில் ஆகஸ்ட் 3, 1929 அன்று அந்தக்கூட்டத்தின் நக்ஷத்ர ஸ்தாபனத்தின் தலைவர் என்ற தகுதியின் படி தலைமை உரை ஆற்றிய ஜே.கே. அந்த ஸ்தாபனத்தைக் கலைத்து விட்டார். பிரம்மஞான சபையிலிருந்தும் விலகி விட்டார்.

அந்தணக்குல ஜனனம் ஜனன ரேகை;
பிரம்மஞான சபை பருவ ரேகை;
அவதார பிரகடனம் அபிமான ரேகை;
தன்னை தனித்து அமைத்துக்கொண்டது ஆத்மரேகை.

[“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்யத் தியானம் உதவுகிறது.” ~ ஜே.கே.]

அது தான் நிர்ணயரேகையாக அமைந்தது, இன்றளவும் நம்மை சுய விசாரணை செய்ய உந்துகிறது.

முன்னும் பின்னும் தெரியாதவற்றை விமர்சனம் செய்ய திறந்த மனதின் விகாசம் பெரிதும் உதவும். அண்டை வீட்டு பி.எஸ். ஆர். ராவ் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஜே.கே.யின் சிந்தனையின் தூய பிரதிபலிப்பு. ஒரு வருடத்துக்கு மேல் எனக்கு நெருங்கிய நண்பர். கருத்து வேறுபாடு அபரிமிதம் என்றாலும் சிந்தனை பரிமாற்றங்கள் எம் இருவரின் வாழும் கலைக்கு அர்ப்பணம். அதனால் இந்தப் புத்தக விமர்சனம் எனக்கு மெத்தக் கடினமாயிற்று. அதனுள் ஒரு நுட்பம். அது யாதெனில், திறந்த மனதின் விகாசத்தை நான் தேடி அலையும் போது, ஜே.கே. அவர்கள் கூறுவதை உன்னித்துக் கேட்கமுடிகிறது. முன்னும் பின்னும் தெரியாதவை கட்டியம் கூறுகின்றன. பீடிகை முற்றிற்று.

“இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ ஞானம்.”

“தன்னை அறிந்து இன்பமுற விழைவோருக்கு ஒரு பரிசுப்பதிப்பு.”

என்ற சொற்றொடர்கள் நூலின் முகப்பை அலங்கரிக்கின்றன. இவை என்னை மிகவும் அலைக்கழித்த வரிகள். சுவாமி விவேகானந்தர், Bertrand Russell, Aldous Huxley, Jean Paul Sartre, Søren Aabye Kierkegaard போன்ற சிந்தனையாளர்கள் சிறு வயதிலேயே என் மனதை ஆக்கிரமித்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் ஜே.கே. அவர்களை அறிய நேர்ந்ததே நல்லதொரு வாய்ப்பு. சிலந்தி வலை போல் உமிழ்ந்து பின்னப்பட்ட என் சிந்தனை வலை, தட்டி உதற வேண்டிய ஒட்டடையாகப் போகாமல் இருப்பதற்கு, அந்த அறிமுகம் பெரிதும் உதவியது. இல்லாவிடின், இந்த விமர்சனம் எழுதுவது சாத்தியமில்லை.

மானிடராகப் பிறப்பு எய்தியவர்கள் அன்றாடம் சந்திக்கும் கருத்துலகம்

~ உண்மை, ஒழுங்கு, அன்பு, எளிமை, சுதந்திரம் என்ற வரிசையில் தொடங்கி,

~ அறிந்து கொள்வது, ஆழ்ந்து கேட்பது, தனித்துச் செயல்படுவது போன்ற செயல்பாடுகளை விவரித்து,

~ அகம்பாவம், முரண்பாடுகள், இம்சை, பயம், பிரச்சினை, யுத்தம் போன்ற தீய தன்மைகளையும்,

~ கட்டுப்படுத்தும் அதிகாரம், ஜீவிதம், கல்வி, உளவியல் புரட்சி, மனித உறவுகள் போன்ற அன்றாட நடைமுறைகளையும்,

~ பிம்பங்கள், எண்ணங்கள், கல்வி, சமயம் போன்ற தலைப்புகள் மூலம் வாழ்வியல் தத்துவங்களையும்,

இந்த நூலின் 41 பகுதிகள் எடுத்துரைக்கும். அவற்றின் அமரிக்கையான தன்மையும், அடுக்கி வைத்த வரிசையும், கலையார்வத்துடன் நன்முத்துக்களைப் பதித்த ஆபரணங்களைப் போன்ற சொல்லலங்காரமும் போற்றத்தக்கவைதான். இந்த ஆபரணத்தோற்றம், திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்குத் தென்பட்டிருக்காது. தள்ளி நின்று விமர்சனம் செய்பவர் கண்ணில்தான் படும்.

நூலாசிரியர் தன் முன்னுரையில்,

“ஜே.கே.யின் நூல்களையும் சொற்பொழிவுகளையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நிறைய பேர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவருடைய சிந்தனைகளை சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி, நடைமுறையில் இருந்து வரும் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கிறேன். இது மொழி பெயர்ப்பு அல்ல. இந்த நூலைப் படிப்பவர்கள் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள்.”

என்றது நிதர்சனமாகத் தெரிகிறது.

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”.

“நாம் தேர்ந்து எடுக்கும் ஜீவிதம் உன்னதமான, விசாலமான, பயனுள்ள, சிறந்த குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்… உலக அமைதியை நிலை நாட்டுவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். அராஜகம், கலவரம், யுத்தம் போன்றவற்றை உருவாக்காதபடி நம் ஜீவிதம் அமைய வேண்டும்… வானம், காற்று, நீர், மலை, கடல், மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், செடி, கொடிகள் போன்ற அனைத்துடனும் நாம் நல்ல ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்…. இன்று மனிதன் வாழும் ஜீவிதம் வேதனை நிறைந்ததாகவும், சுவையற்றதாகவும், சலிப்பு நிறைந்ததாகவும் இருந்து வருகிறது…. மகிழ்ச்சியும் இன்பமும் தரும் ஜீவிதத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்….. மதம், கடவுள்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை சம்பந்தப்பட்ட ஜீவிதங்கள் நல்ல ஜீவிதங்களாக இருக்க முடியாது. அவை அனைத்தும் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து… மனித வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக மாற்றி வருகின்றன….. ஜே.கே. சொன்ன உளவியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதின் மூலம்தான் உலகில் இருந்து வரும் கெட்டவை அனைத்தையும் அகற்ற முடியும்… உங்களுடைய எதிர்பார்ப்புகளைப் பொறுத்துத்தான் உங்கள் ஜீவிதங்கள் அமையும்… நன்கு பராமரிக்கப்பட்ட பழச்செடி நிறைய ருசியான பழங்களைத் தருவது போன்று நன்கு பராமரிக்கப்பட்ட ஜீவிதமும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தரும்.”
[நூல்: பக்கங்கள்: 194 -210].

ஆசிரியர் எளிய முறையில் எழுதியதை, இந்த 33வது உட்பொதிவு ஆன ஜீவிதத்தின் சாராம்சம் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு உட்பொதிவும் அவ்வாறே அமைந்து, ஜே.கே.யின் தத்துவத் திறவுகோலாக இயங்குகின்றன.

தியானம் என்ற 39வது உட்பொதிவு ஒரு அமைதியான புரட்சி.

“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்ய தியானம் உதவுகிறது… தியானத்திற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அது அவன் முழு வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கவேண்டும்… தியானம் என்பது முழுமையான கவனம்தான்… எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது தியானம் அல்ல… ஏகாந்தமான நிலையில் மௌனம் என்ற அழகான மலர் வளரும். அன்பு ஆறாக உருவெடுத்து ஓடும். அப்போது மனவருத்தங்கள் முரண்பாடுகள் போன்ற எதுவும் இருக்காது.”
[நூல்: பக்கங்கள் 286 -311]

ஜே.கே.யின் சிந்தனைகள், கேள்வி-பதில் என்ற உட்பொதிவுகள் இந்த நூலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன. They are remarkable exercises in filling up the blanks. ஜே.கே. தன்னுடைய சிந்தனைகளுக்கு ஏகபோகம் கொண்டாடியதும் இல்லை. அவற்றிற்கு ஈடு, இணையில்லை என்று சொந்தம் கொண்டாடியதும் இல்லை. அவர் ஒரு சிந்தனை மார்க்கம் வகுத்தார். பயணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை. அது போதும்.

இலக்கிய / தத்துவ / சிந்தனை உலகில், புத்தக விமரிசனங்கள் நீண்டதாகவே அமையும். நூலின் உள்ளடக்கத்தைக் கூறுவதும், ஆசிரியரின் அணுகு முறையை அலசுவதுதான் முதலிடம் பெறும். விமர்சகரின் கருத்துக்கள் எல்லாம் இடம் பெறுவதில்லை… ஜே.கே.’எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர்’ என்று தி இந்து இதழில் ஐந்து வருடங்கள் முன்னால் திரு. அரவிந்தன் எழுதியதும், ஜே.கே. நம்மையே நம் வினாக்களுக்கு விடை அளிக்க வைக்கும் அனுபவமும் நினைவில் இருப்பதால், நான் ஒப்பீடு ஆய்வுகளில் இறங்கவில்லை.

சிந்தனைகள் பயணிக்கும் விதம் பற்றி சில வரிகள். வல்லமை இதழின் பன்முகம் அறிவோம். நூல்களை மதிப்பீடு செய்வது பற்றி ஒரு கருத்து பரிமாற்றம். இந்த நூலை மதிப்பீடு செய்ய சொல்லி ஒரு பரிந்துரை. அது நிறைவேற்றப்படுகிறது. வல்லமை இதழுக்கும், பரிந்துரை செய்த நண்பர்கள் அண்ணா கண்ணனுக்கும், தேமொழிக்கும், நூலாசிரியர் திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/5915156.jpg

இன்னம்பூரான்
மார்ச் 6, 2016

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *