— கே.ரவி.

கானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா! பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாநாயகி!

தானே வெடித்துச் சிதறிய ஒற்றைப் புள்ளியும் அவள்தான். அதிலிருந்து பொலபொலவென்று பிரிந்து பரவும், பரவிக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச சக்தியும் அவள்தான். “ஊடலும் கூடலும் கோவலர்க் களித்து” என்று இளங்கோ சொன்னது போல் ஊடலும், கூடலும் பாவலர்க்களிக்கும் மாதவிப் பொன்மயிலாளள் அவள்தான். கூடல் மாநகரையே தீக்கிரையாக்கிய கண்ணகியைப் போல், மனக்காட்டை எரிக்கும் அக்கினிக் குஞ்சும் அவள்தான்.
அவளை ஆராதிக்கவே இந்தத் தொடர்.

‘அதெல்லாம் சரி, கவிதை எழுதுவதில் என் பங்கு என்ன என்று தெளிவாகச் சொல்லுவே’ என்று எரிச்சலுடன் கேட்கிறான் புத்தி சிகாமணி.

சொல்கிறேன். எழுதும் போது அடங்கியிருக்கும் நீ, எழுதி முடித்தபின் போடும் ஆட்டம் இருக்கிறதே அது பேயாட்டம் அப்பா! கவிஞன், அவன் மனம் போன போக்கில் ஏதேதோ எழுதிவிட, அதை வைத்துக் கொண்டு நீ செய்யும் வியாக்கியானம் இருக்கிறதே, அது தலைசுற்ற வைப்பது!

சிகாமணி கேட்கிறான்: ‘ஏம்பா, நீ கூட போன பகுதியில் கானல், கோணல் என்று என்னென்ன வியாக்கியானம் செய்தாய், இப்போது என்னைக் குறை சொல்கிறாயே!’

நானா செய்தேன், இல்லை. அது, கவிதை தானே தனக்குச் செய்து கொள்ளும் அலங்காரம். எந்த அனுபவக் களத்தில் அது ஊற்றெடுத்து வந்ததோ, அதன் ஆபரணங்களை அது அணிந்து கொண்டுதான் வரும். எழுதும் கவிஞனுக்குப் புலப்படாத அந்த நுட்பங்கள் படிக்கும் ரசிகனுக்குப் புலப்படத்தான் செய்யும்.

‘நானும் அதைத்தானே செய்கிறேன்’ என்று சீறுகிறான் சிகாமணி.

இல்லை, ரசிகனின் பார்வைக்கு அணிகள் புலப்படலாம். ஆனால், ரசிகனே அணிகள் செய்து அவளுக்கு மாட்டிவிடக் கூடாது. புரிகிறதா?

என்ன புரிந்ததோ போ என்று சிகாமணி அலுத்துக் கொள்கிறான்.

vairamuthuஎப்படி ஒரு கவிதை தானே அணிகள் அணிந்து வருகிறது என்பதற்குத் தற்கால எடுத்துக் காட்டு ஒன்று சொல்கிறேன். கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. தோழன் என்ற தமிழ்ச்சொல் இருக்க அவர் ஏன் சினேகிதனே என்று எழுதினார் என்ற கேள்வி ஒரு மேடையில் எழுந்த போது, நான் பதில் சொன்னேன்: அந்தப் பாடலை முதலில் சரியாகப் படிக்க வேண்டும். அதில் “சினேகிதனே” என்று அவர் எழுதவில்லை. “ஸ்னேகிதனே” என்றுதான் எழுதியிருக்கிறார்.

“ஸ்னேகிதனே, ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே”

இதுதான் அந்தப் பாட்டின் முதல் வரி. இதைத் ‘தோழனே ரகசியத் தோழனே’ என்று பாடிப் பாருங்கள். ஜீவனே இருக்காது. ‘ஸ்’ என்ற உச்சரிப்புத்தான் இந்தக் கவிதையின் உயிர்நாடி. ரகசியத்தின் குறியீடு ‘உஸ்’ தானே! ரகசியத் தோழமையை ஒலிக்குறிப்பாலேயே உணர்த்தும் உச்சரிப்பு அது. ரகசியமாகக் காதுக்குள் யாரோ பாடுவது போன்ற அனுபவத்தைத் தரவல்ல உச்சரிப்பு அது. எப்படி அந்தக் கவிதை தன் அனுபவக் களத்தில் இருந்தே தன் அணிகலனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டது பார்த்தாயா, சிகாமணி, உன் உதவி இல்லாமலேயே!

இன்னொரு கவிதை, சற்றே பழைய கவிதை:

murugaசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே

என்னய்யா இது வள்ளலாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதா என்ன? ஆறு வதனங்கள், பன்னிரு தோள்கள், இரண்டு தாள்கள், ஒரு வேல், மயில்வாகனம், கோழிக்கொடி, தணிகாசலம், ஆக மொத்தம் 24 விஷயங்களைச் சொல்லிவிட்டு, இவ்வளவும் தம் ‘கண்ணுற்றது’ என்று ஒருமையில் சொல்லி விட்டாரே!
vallalpic1இந்தப் பாடலின் அனுபவக் களம் என்ன தெரியுமா? கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன? இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொருத்தம்! இதை ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ‘ஸிந்தடிக் யூனிட்டி’ (Synthetic Unity) என்று சொல்ல வேண்டும். அதாவது, ஒன்றிய நிலை அல்லது ஒருமை நிலை.

நான் ஏதோ கதையளப்பதாகக் கருத வேண்டாம் தம்பி! ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா? அவன் சொன்னது இதுதான். நாம் ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்க்கும் போது, சிவப்பு நிறம், மென்மையான தோல், குளுமையான சுவை, உருண்டையான வடிவம் என்றெல்லாம் அதன் பண்புகளைத் தனித்தனியாக நுகர்ந்து, அவற்றைப் பிறகு ஒன்றிணைத்து ஆப்பிள் என்ற ஒரு பொருளை அறிவில் உருவகப் படுத்திக் கொள்கிறோமா, இல்லை, ஆப்பிள் என்ற ஒரு பழத்தைப் புலன்களால் பலவாறு நுகர்ந்து, அதன் பண்புகள் இன்னின்னவை என்று பகுத்துத் தெளிகிறோமா என்பதுதான் அவன் கேட்ட கேள்வி.

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் ஒரு விதமான சூனிய வாதம் எழுந்து, பரவி, ஆதிக்கம் செய்தது. அது என்ன வாதம்? நாம் புலன்களால் நுகரும் பண்புகள் தவிர்த்துப் பொருண்மை என ஒன்றுமே இல்லை, அதாவது, சிவப்பு, மென்மை, குளுமை, உருண்டை ஆகிய பண்புகளைத் தவிர ஆப்பிள் என்ற ஒரு பொருளை நாம் நேரடியாக நுகர்வதே இல்லை, எனவே பொருண்மை என்பதே இல்லை. இதுதான், பார்க்லீ, ஹ்யூம் ஆகிய பிரிட்டிஷ் சிந்தனையாளர்கள் உலவ விட்ட சூனிய வாதம். அது ஒரு பெரிய அறிவியற் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த போதுதான் கன்ட் மேற்சொன்னவாறு கேள்வி கேட்டு அந்தச் சூனிய வாதத்தை எதிர் கொண்டான் என்பது மெய்யியல் வரலாறு.

வள்ளற் பெருமானின் கவிதையில் வந்த ஒருமை-பன்மை மயக்கம் எவ்வளவு பெரிய தத்துவக் குழப்பத்துக்கு விடையாகித் தெளிவு சேர்த்தது! ஆனால், சமீபத்தில், என் இனிய நண்பர், நல்ல கவிஞர் ஒருவர் எழுதிய பாடல் தேசிய விருது பெற்றது. அது கருத்து ரீதியாக மிக நல்ல பாடல்தான். ஆனால், அதன் தொடக்க வரியில் உள்ள ஒருமை-பன்மைக் குழப்பத்தை யாராலும் தீர்க்க முடியாது.

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே”

இதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிப் பார்க்கலாமே:

EVERY FLOWERS TELLS!

என்ன சொல்லி இதை அமைதி செய்வது!

நான் அந்தக் கவிஞரின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. இதற்கு ஒரு நல்ல சமாதானம் அவரோ, வேறு யாரோ சொல்லிவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எனக்கு அந்தச் சமாதானம் தோன்றாமற் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். உரைநடைக்கும், செய்யுளுக்கும் வடிவ வேற்றுமை உண்டு. ஆனால் உரைநடைக்கும், கவிதைக்கும் வடிவத்தில் மட்டுமா வேற்றுமை காண்பது? உரைநடையில் சொல்ல முடிவதைக் கவிதையில் சொல்வது தேவையற்றதோ என்று தோன்றுகிறது. படிப்பவருடைய சிந்தனையை நோக்கித் தொடுக்கப்படும் வாக்கியங்கள் உரைநடையில் அமைவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுதான் நேரடியான அறிவுத் தொடர்புச் சாதனம். ஆனால் எதை உரைநடையில் சொல்ல முடியவில்லையோ அதைச் சொல்ல முற்படுவதே கவிதை என்று ஒரு தீர்மானம் போட்டுவிடலாமா?

என்னப்பா சட்டசபையா நடத்துகிறோம், தீர்மானம் போடுவதற்கு? நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார்? அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா? இல்லை அது சாத்தியமா? எதை உரைநடையில் சொல்ல முடியாது? “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும்? அதைப் புரிந்து கொள்ளத் தேவையே இல்லை; உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான் தன் நூலுக்கே, “மின்னல் உறங்கும் போது” என்ற அருமையான ஒரு கவிதைத் தலைப்பைத் தந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அது புரிந்து கொள்வதற்காக இல்லை, ரசிப்பதற்காக.

கவிஞர் மருதகாசியின் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா

பாரதியின் குயில் பாட்டில் வரும் அமர வரிகள்:

மின்னற் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்
வந்து பரவுதல் போல் ……

இதை உரை நடையில் எழுதி யாருக்கு என்ன புரிய வைக்க முடியும்! கவிதையின் சமாச்சாரமே வேறு சாமி!

மேலே சொல்லப்பட்ட வள்ளலார் பாட்டில் ஒன்றை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம். “அருள் கார்கொண்ட தணிகாசலமும்” என்று சொல்கிறாரே! அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலை. புறக் கண்களுக்குப் புலனாகும் தணிகை மலை கார்மேகங்கள் சூழ்ந்த மலைதான். ஆனால் அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலையாக முருகப் பெருமானே இருப்பது புறக் கண்களுக்குப் புலப்படாது. கவிஞன் எந்தக் கண்களால் தரிசனம் பெறுகிறான் என்பதை இந்தப் பாடல் எப்படித் தெளிவாக்குகிறது பார்த்தாயா தம்பி!

“என்கவிதை எந்நாளும் பயன்படாது” என்ற என் கவிதையை முன்பே முழுசாகத் தந்து விட்டேன். அதில் வரும் ஒரு புலம்பல் வரி இப்போது கொஞ்சம் புரியத் தொடங்குகிறதோ?

தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை

ஆனால் அந்தத் தறியில் தான் எத்தனை வண்ண வண்ண ஆடைகள் நெய்து கொள்கிறோம்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன் – 51

  1. ‘ஸ்நேகிதனே ‘ சொல்லின் ரகசியம் புரிந்தது . அதே போல் திரு வள்ளலார் கண்ணாடியில் பார்த்த முருகன் பற்றிய விவரங்களும் அருமையாக இருந்தது . பல விஷயங்கள் உங்கள் பல கட்டுரைகளிலிருந்தும் நான் கற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *