நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியா (இனி இந்தியா என்று சொல்வதைத் தவிர்த்து பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எப்போது அரசிடமிருந்து ஆணை பிறக்கப் போகிறதோ?) சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் முடிந்துவிட்டன. காந்திஜி படுகொலை செய்யப்பட்டு 67 ஆண்டுகள் முடியப் போகின்றன. ஆர். எஸ். எஸ். காரர்கள் சதிசெய்து அவரைத் தங்கள் வன்முறையால் இந்திய அரசியலிலிருந்து விலக்கிவிட்டனர். ஆனாலும் காங்கிரஸ்காரர்களாவது அவர் பிறந்த நாளன்று அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உலகின் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் காந்திஜியின் அஹிம்ஸை வழிகளைப் பற்றியும் காந்திஜியின் கொள்கைகளைப் பற்றியும் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் எத்தனை பல்கலைக்கழகங்களில் காந்திஜி பற்றிய ஆராச்சி நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு பள்ளியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மாணவன் ஒருவன், ‘இறந்தவர்களானாலும் சரி. உயிரோடு இருப்பவர்களானாலும் சரி, யாரோடு உணவருந்த விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டபோது எதிர்பாராத இந்தக் கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் ‘காந்திஜியோடு’ என்றார். உலகின் பல பெரிய தலைவர்களோ பெரிய விஞ்ஞானிகளோ அவர் நினைவுக்கு வரவில்லை. காந்திஜிக்கு மிகவும் பின்னால் வந்தவர் – காந்திஜி இறந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் – காந்திஜியை நினைவில் வைத்திருந்தார்.
காந்திஜியை நம்மில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். காந்திஜியைக் கொன்ற ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து வந்திருக்கும் மோதி இன்னொரு வகையாக நம் மனதிலிருந்து காந்திஜியின் நினைவை அழிக்க முயற்சி செய்கிறார். காந்திஜியை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ தெரியாது; ஆனால் அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாள் விடுமுறை நாள் என்று மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘அக்டோபர் இரண்டா? அன்று காந்திஜி பிறந்த நாளுக்கு விடுமுறை’ என்று எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். அன்றாவது அவருடைய பெயர் எல்லோர் வாயிலும் இருக்கும். விடுமுறை என்பதற்காக அந்த ஒரு நாளில் காந்திஜி பெயரை உச்சரிக்கும் பழக்கத்தையும் மறக்கடிக்கும் ஒரு கைங்கரியத்தை இப்போது மோதி மேற்கொண்டிருக்கிறார். அன்றைய தினத்தை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். அன்று விடுமுறை இல்லாதது மட்டுமல்ல; அன்று காந்திஜி பெயரை உச்சரிக்கும் தேவையையும் இல்லாமல் ஆக்கியிருக்கிறார்.
காந்திஜி போதித்த உள்ளத் தூய்மையை முதலில் பின்பற்றினால் இந்தியாவின் புறத் தூய்மை தானாகவே வருமே!
அதே மாதிரிதான் நேருஜியின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதையும் இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்கச் சொல்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் நேருஜியின் பங்கையும் அதன் பிறகு சுதந்திர இந்தியாவை நடத்திச் சென்று அவர் இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக வைத்திருந்ததையும் வேகமாக மறக்கச் செய்யும் கைங்கரியங்களில் மோதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அடுத்து வருவது வல்லபாய் பட்டேல். இன்றைய இந்தியாவை இன்றைய உருவில் ஒருங்கிணைத்ததே பட்டேல்தான் என்று இந்தியர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? காலண்டர் தயாரிப்பவர்கள் மட்டும் எல்லோர் பிறந்த நாளையும் பட்டியலிடும்போது அவர் பிறந்த நாளையும் குறிப்பிடுகிறார்கள். நாள்காட்டியில் அன்றைய தேதிக்குரிய தாளைக் கிழிக்கும்போது ‘இன்று பட்டேலின் பிறந்த நாளா?’ என்று நினைவுபடுத்திக்கொள்கிறோம். தினசரி காலண்டர் இப்போது எத்தனை பேரிடம் இருக்கிறது?
பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் பல்கலைக்கழகங்கள் நிறுவியாயிற்று, இனி அவர்களுடைய போதனைகளை எளிதாக மறந்துவிடலாம் என்று நினைக்கிறோம். ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் பாரதிதாசன். தலைநிமிர்ந்து நிற்கும்படியாகவா நாம் காரியங்கள் செய்துகொண்டிருக்கிறோம்? ஒரு பிரியாணிப் பொட்டலத்திற்கும் நூறு ரூபாய்க்கும் கூலிக்கு மாரடிக்க நாம் தயாராக இருக்கும்போது எப்படித் தலை நிமிர்ந்து நிற்க முடியும்? தமிழினம் எவ்வளவு அறிவீனமாகிவிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஓம் ஓபாமா’ என்ற திரைப்படத்தைப் பாருங்கள். கட்சித் தலைமையிலிருந்து போன்கால் வரவும் கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய செல்போனைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, எதிரே இல்லாத தலைமைக்கு முன்னே சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பின் தொலைபேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார். என்னே நம் சுய மரியாதை! அது திரைக்கதை என்றால் உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்தவுடன் இன்றைய தமிழக முதல்வர் (தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் பிரதிநிதி) முன்னவரின் காலில் விழுந்து வணங்குகிறார். என்னே நம் பக்குத்தறிவுப் பாதை பயணித்த கதை!
மதத்தின் பெயரால் ஜனங்களை முட்டாளடித்து அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களின் செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றிய புரிதலே சரியாக இல்லாதபோது அவரை மறப்பது மிகவும் எளிது. ஊழலில் ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை, குற்றம் சாட்டப்பட்டவர் கேட்ட வாய்தாக்களை எல்லாம் கொடுத்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் அவரைத் தண்டித்தபோது 193 பேர் அந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சியில் இறந்திருக்கிறார்கள், அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் (139 பேர் மாரடைப்பால் இறந்தவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது). இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்குப் பெரியாரின் ‘போலிப் பகுத்தறிவு இயக்கம்’ காரணம் என்று சொல்லுமளவுக்கு பெரியாரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் செல்ல நாம் என்றுமே தயாராக இல்லாதபோது இப்போது மட்டும் நினைவில் வைத்திருப்போமா என்ன?
காமராஜ் இறந்தபோது அவர் தலைமாட்டில் 160 ரூபாய் மட்டும் இருந்ததாம். லஞ்சம் வாங்குவது, சொத்து சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத காமராஜ், கக்கன் போன்ற எளியவர்கள் வாழ்ந்த தமிழகமா இப்போது கணக்கில் அடங்காத அளவு சொத்து சேர்க்கும் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது? வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்தின் அளவை மதிப்பிட்டோமானால் அதில் எத்தனை பூஜ்யங்கள் இருக்கின்றன என்பதை எண்ணி மாளாது என்றார் எங்கள் நண்பரின் தந்தை ஒருவர். இதற்கு நேர்மாறாக இறக்கும்போது 160 ரூபாய் வைத்திருந்த காமராஜரின் எளிமையையும் அவரையும் சேர்த்து மறந்துவிட்டோம்.
எளிமைக்கும் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் அடையாளமாக விளங்கிய தலைவர்களை நாம் மறந்துகொண்டே போக, சொத்துச் சேர்ப்பதையும் மக்களை முட்டாளடிப்பதையும் தங்கள் சாதனைகளாகக் கொண்ட தலைவர்கள் காளான்கள் போல் முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். வளர்க ஊழல் புரிவோர் ஆட்சி! வாழ்க தமிழகம்!!
பி.கு. இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


Leave a Reply