சீதையின் சீற்றம்!

ஒரு அரிசோனன்

எனக்கு அலுத்துப்போய் விட்டது.  கோபம் கோபமாக வருகிறது! 

 12

 இப்பொழுது எங்கு பார்த்தாலும், “சீதைக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது.  அவள் அடிமைபோல நடத்தப் பட்டாள்!  கற்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவளுக்குக் காலம் முழுதும் கண்ணீரே பரிசாகக் கிடைத்து!  இப்படிப்பட்ட அநீதி இழைத்தவனை, கொடுமைக்காரனை, அவதார புருஷன் என்றும், நேர்மையின் மறு உருவம் என்றும், அறநெறியாளன் என்றும் எப்படிப் போற்றமுடியும்? 

“மனைவியை மதிக்கத் தெரியாதவனை மகேசன் எ+னப் புகழலாமா?  ஒருமுறை தீயில் புகுந்து மீண்டவளை மீண்டும் எவனோ சொன்னான் என்று கானகம் அனுப்பிய கல்நெஞ்சனல்லவா இவள் கணவன்!  அப்படியாவது அவளைக் கானகத்தில் நிம்மதியாக இருக்கவிட்டனா?  மீண்டும் உன் கற்பை நிருபித்துக் காட்டு என்று சொல்லி, அவளை மனம் உடையச் செய்து, உயிர் துறக்கச் செய்துவிட்டானே!”  என்று எனக்குப் பரிந்து பேசுவதாகத் தங்களையே எனக்கு வழக்காடுவோராகச் செய்து கொள்வோர் சிலர்.

இன்னும் சிலரோ, மனம் போனபோக்கில் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். 

“என்னடா இது, சீதை கற்பில் சிறந்தவள் என்று நாமே ஒப்புக்கொள்கிறோமே, அப்படிப்பட்ட கற்புக்கரசி தனது கணவனை மற்றவர் தூற்றுவதைத் தாங்குவாளா?” என்று கணநேரமும் கருத்தில் கொள்வதில்லை.

கணவன் தன்மீது அவதூறு சொல்வது தவறு என்று தட்டிக்கேட்டுத் தீக்கடவுளுக்கே சவால் விட்டவள், தன் கணவன் மீது எப்பழியும் விழக்கூடாது என்று இவ்வுலகுக்குக் காட்டுவதே பெரிது, தனது உயிர் கூடத் துச்சமே என்று எண்ணிய பெண்குலப் பெருவிளக்கு, அவளது கணவரைக் கண்டவர் பழிப்பதை விரும்புவாளா என்று ஏன் அவர்களால் எண்ணிப்பார்க்கத் தொன்றவில்லை?

எப்படி இருந்தாலும், நீங்கள் அனைவரும் என் அன்பான குழந்தைகளே ஆவீர்கள்!  தந்தை ஒழுக்கம் கற்பிக்கிறார் அன்று அவர்களுக்குத் தோன்றாது, தன்னைத் தண்டிக்கிறார், எனவே அவர் இரக்கமற்றவர் என்றே நினைப்பார்கள்!  தாயைத் தந்தை கடிந்து கொண்டால், அவரை அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வரும் அறியாக் குழந்தைகளாகத்தான் உங்களை எண்ணுகிறேன்.

எனவே, என்னை யாரும் அடிமை செய்யவில்லை, ஆதிக்கம் செய்யவில்லை, செய்யவும் இயலாது, என் கருத்து என்ன என்று ஒரு தாயாக உங்களுக்கு விளக்கக் கடமைப்பட்டு உள்ளேன்!

என் கண்ணினும் இனிய செல்வங்களே! கேளுங்கள்…

…அதற்கு முன்னர், அறிவியலில் வல்ல குழந்தைகளுக்கு விஞ்ஞான விளக்கமும், ஆன்மீகத் துறையில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஆன்மிகம் மூலமாகவும், பெண்மை ஆண்மையைவிட எவ்வளவு உயர்த்து, பெண்கள் இல்லாமல் ஆண்களே இல்லை,  ஆண்மையே இல்லை, இந்த உலகம், இயற்கை, படைப்பு எதுவுமே எல்லை என்பதையும் விளக்கிவிடுகிறேன்.

மனிதர்களிடம் இருபத்திரண்டு பண்பு காரணித் தொகுப்புகளும் (genes), இரண்டு இனக்கீற்றுகளும் (choromosomes)  இருந்த போதிலும், மனிதக் கரு இரண்டு இனக்கீற்றுகள் மூலம் உருவாகிறது, அது ஆணின் ஒன்றும், பெண்ணின் ஒன்றும் இணைந்து உருவாவது என்பதைத் விஞ்ஞானம் அறிந்த குழந்தைகளுக்கு நான் விளக்கவேண்டியதில்லை. பெண் கரு இரண்டு x இனக்கீற்றுகளின் இணைப்பினாலும், ஆண் கரு ஒரு  x, ஒரு y இனக்கீற்றுகளின் இணைப்பினாலும் உருப்பெறுகின்றன என்பதும் நீங்கள் அறிந்ததே!

பெண் x  இனக்கீற்றை மட்டுமே உண்டுபண்ணுகிறாள், ஆண் x மற்றும் y இனக்கீற்றை உண்டுபண்ணுகிறான்.  இதில் y இனக்கீற்று x இனக்கீற்றை விடச் சிறியது என்றும் என்னுடைய விஞ்ஞானக் குழந்தைகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

x இனக்கீற்று 1098  மரபணுக்களையும், y இனக்கீற்று 26 மரபணுக்களையும் உள்ளடக்கியதில் இருந்து, பெண்ணை உருவாக்கும் x இனக்கீற்றின் உயர்வை உள்ளலாமே! [1]

பெண்மையே பெரிது என்று அறிவியலிலிருந்து அறிந்துகொள்ளலாமே!

இதுமட்டுமா!  ஆண் உள்ளர்ந்த ஆற்றல் (potential energy) உடையவன் என்றால், பெண் இயங்காற்றல் (kinetic energy) உடையவள்.  இதைதான் சிவம் என்றும், சக்தி என்றும் ஆன்மீகக் குழந்தைகள் இயம்புகிறார்கள்.  சிவத்திடம் எதையும் படைக்கும், காக்கும், அழிக்கும், மறைக்கும், அருளும் உள்ளார்ந்த ஆற்றல் இருந்தாலும், அதை உணரும் ஆற்றல் இல்லை.  சிவத்திடம் உணரும் ஆற்றலை (ego) உண்டுபண்ணி, அவனைத் அவன் தொழில்களை ஆற்றவைப்பவள் உமையம்மையான, பென்மையின் வடிவமாகிய சக்தியே என்று ஆதி சங்கரர்  இயம்பி உள்ளாரே! [2]

சக்தியுடன் இணைந்த பின்னரே சிவம் ஆக்கும் திறனைப் பெறுகிறது;  அந்த இணைப்பின்றி சிவம் அசையக்கூட இயலாது.”

என்றல்லவா அழுத்தம் திருத்தமாகப் பெண்மையைப் போற்றிப் புகழந்து உள்ளார்! [3]

எனவேதானே, நாவுக்கு அரசரான அப்பர் பெருமானும் தாயை முதலில் வைத்து, சிவபெருமானை, “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே!” என்று போற்றுகிறார்.  “வேயுறு தோளி பங்கன்” என்று காழிப்பிள்ளையாரும் அப்பனின் உடலில் பாதியை அம்மை தனதாக்கியதை உணர்ந்து ஓதுகிறார்!

பெண்மையைப் போற்றி, ஆண்கள் பெண்ணடிமை செய்வதாகக் கூறும் என் குழந்தைகளும், பழமையே சிறந்தது என்று ஆண்களை மேலாகப் பேசும் என் செல்வங்களும் ஒரு வடமொழி சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்.

பித்ருர் ரக்ஷதி பாலாப்யே, பர்த்ருர் ரக்ஷதி கெளமாரே |

புத்ரோர் ரக்ஷதி வ்ருத்தாப்யே, ந ஸ்திரீ ஸ்வாதந்த்ரமர்ஹதி  ||

தந்தை சிறுவயதில் காப்பாற்றுகிறார், கணவர் குமரிபருவத்தில் காப்பாற்றுகிறார்,

பிள்ளை வயோதிகத்தில் காப்பாற்றுகிறான், பெண் தானாக இருக்கத் தகுதி பெறுவதில்லை.

சரியாக, உள்ளார்ந்து பார்த்தால், பெண்களாகிய நாங்கள் ஆண்களை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துவிட்டோம் என்பது இந்த சுலோகத்தில் இருந்து புரியும்.  பெண்களுக்குத் தொண்டு செய்வதே ஆண்களின் கடமை என்று சொல்லாமல் சொல்லுகிறது அல்லவா இந்தக் குறட்பா!  அதுதானே ஆண்களின் “கால்கட்டு” என்று வழங்கப்படுகிறது.  ஒருவரைக் காப்பாற்றவேண்டும் என்றால், காப்பாற்றுபவர் தனது சுதந்திரத்தையும்தானே இழக்கிறார்!

ஆக, தந்தை, கணவன், மகன் இவர்கள் மூவரின் தானியங்கும் தகுதியையும் ஒரு பெண் கைப்பற்றி விடுகிறாள் என்பதுதானே இந்த சுலோகத்தின் தொடர்ப் பயன், இயல் விளைவு, பின்விளைவு எல்லாம்!

எனவே, ஆண்களைத் தனது பிறப்பிலிருந்தே தனது ஆதிக்கத்தில் வைத்துவிடும் பெண்ணினத்தை ஆண்களால் அடிமை செய்துவிட இயலுமா?  நாணல் மாதிரி வளைந்து கொடுத்து வெள்ளத்திலும் நிலைத்துவிடும் பண்பு கொண்டவர் பெண்கள் – எதிர்த்து நின்று வீழ்பவர்கள் ஆண்கள்!  இது அவரவர் இயல்பு!  வளைந்து கொடுப்பதால் பெண்கள் வலிமை அற்றவர்கள் அல்ல.  வரட்டுப் பிடிவாதத்துடன் நிமிர்ந்து நிற்பதால் ஆண்கள் வலிமையிர் சிறந்தவரும் அல்ல.

தத்துவம் போதும் என்று தோன்றி விட்டதல்லவா! எனவே,  என்னைப்பற்றிச் சொல்லப் போகிறேன்…

…என் கணவர் இராமன் மனிதத் தாயான கோசலையின் வயிற்றில்தான் பிறந்தார்.  எனவே, அவர் பிறப்பு இயற்கைப் பிறப்பு.  ஆனால் என்னை அரசமுனியான ஜனகர் பிள்ளைவரம் வேண்டி நிலத்தை உழுதபோது நான் நிலத்திற்கு அடியில் கிடைத்தேன். [4]  எனவே, நான் மனிதக் குழந்தையாகத் தோன்றினாலும், மனிதப் பிறப்பு அல்ல, தெய்வப் பிறப்பு.  எக்குழந்தையால் மண்ணுக்கடியில் பலகாலம் புதைத்து இருக்க இயலும்?  அறிவுகொண்டு ஆலோசனை செய்யும் என் கண்மணிகளே, சிந்தித்துப் பாருங்கள்.

நான் பிறப்பிலேயே உயர்ந்தவள்.  என்னால் மண்ணுக்கடியில் இருக்க இயலுமானால், என் திறன் எப்படிப்பட்ட உயர்வுள்ளதாக இருக்கவேண்டும்!  ஆகவே, பிறப்பிலேயே அதிக வலிமை படைத்தவளாகத்தான் பிறந்தேன்.

என் மிகைப்பட்ட வலிமை விரைவிலேயே வெளிப்பட்டது.

சிவபெருமானின் வில் இருந்த பெட்டியை ஐயாயிரம் வலிமை மிக்க வீரர்கள் இழுத்து வரவேண்டி இருந்தது! [5]  அப்படிப்பட்ட வில்லை என்னவர் இராமன் நின்று, எடுத்து, நிறுத்தி, நாண் ஏற்றித்தானே உடைத்தார்!  அதற்கு இரு கைகளும்தானே வேண்டி இருந்தது!  என்னைவிட எட்டு வயது பெரிய என்னவருக்கு இரண்டு கைகள் தேவைப்பட்டது.  ஆனால் பூப்பந்து விளையாடிய சிறுமியான நானோ, பந்து சிவபெருமானின் வில் இருந்த பேழைக்கடியில் சென்றபோது, குனிந்து அமர்ந்து, என் ஒரு கையினாலேயே வில் இருந்த பேழையை உயர்த்திப் பந்தை எடுத்தேன்.

இப்போது சொல்லுங்கள், யாருக்கு வலிமை அதிகம்?  எனக்கா, என்னவருக்கா?  ஐயாயிரம் வீர்களுக்கு இல்லாத வலிமை என்னவருக்கு இருந்தது.  அவரைக் காட்டிலும் அதிக வலிமை எனக்கு இருந்தது.  இதை அறியாதவரா என்னவர் இராமன்!  அவரைவிட வலிமை உள்ள என்னை அடிமை செய்ய அவரால் இயலாது என்று அவருக்குத் தெரியாதா, என் கண்மணிகளே!

“என்னருமைத் தாயான சீதையே!  அப்படியானால், அவர் சொன்னதை எல்லாம் நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள்?  ஏன் இராவணனை உங்களைச் சிறைப் பிடித்து எடுத்துச் செல்ல விட்டர்கள்? உங்கள் கணவரது அவதூறான சொற்களை ஏன் பொறுத்துக்கொண்டீர்கள்? நாங்களாக இருந்தால் இப்படிப்பட்ட ஒரு கணவரை விட்டு நீங்கி இருப்போமே!

“தீக்குளித்து உங்கள் தூய்மையத் துலங்கச் செய்த பின்னரும், உளவாளிகள் உரைத்த சொல்லுக்காக, கருவுற்றிந்த உங்களை இரக்கமின்றிக் காட்டுக்கு அனுப்பினாரே உங்கள் கணவர்!  பின்னர் தங்களை முனிவர் வால்மிகியின் ஆசிரமத்தில் கண்டும், மீண்டும் அப்பழுக்கற்றவள் என்று சான்று காட்டச் சொல்லித் தங்களை இவ்வுலகிலிருந்தே நீங்கச் செய்தாரே!  அப்படிக் கருணை என்பதே கடுகளவும் இல்லாதவராக உங்களவர் இருந்தும் தாங்கள் ஒரு உணர்ச்சியற்ற பதுமையைப் போலத்தானே இருந்து விட்டீர்கள்! பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?” என்றுதானே கேட்கிறீர்கள்!

ஏன் என்று விளக்குகிறேன்.

“நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், இலக்குவனையோ, பரதனையோ, சுக்கிரீவனையோ, இன்னும் மனதில் தொன்றுபவருடன் நீ செல்லலாம்.” என்று என்னவர் சுட்டுப் பொசுக்கும் சொற்களால் என் இதயத்தை பிளக்க முற்பட்டபோது, நான் கலங்கி நின்றேனா!

“ஒரு இழிந்தவன், ஒரு இழிந்தவளுடன் பேசுவதுபோல, சொல்லத்தகாத சொற்களை ஏன் சொல்லுகின்றீர்?” என்று எதிர்த் தாக்குதல்லவா தொடுத்தேன்! [6]

यथा मे हृदयं नित्यं नापसर्पति राघवात् |

तथा लोकस्य साक्षी मां सर्वतः पातु पावकः ||[7]  ६-११६-२५

யதா மே ஹ்ருதயம் நித்யம் ந அபஸர்ப்பதி ராகவாது |

ததா லோகஸ்ய ஸாக்ஷீ மாம் ஸர்வத: பாது பாவக: || 6-116-25

நெருப்புக் கடவுளான அக்னியே! உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், கோபம் கொண்டு (என்னைச்) சுட்டு எரிப்பாயாக!

என்று சவால் விட்டுத்தானே தீப் புகுந்தேன்!  அடிமை செய்யப்பட்டவளாக இருந்தால் அச்சப்பட்டு நடுங்கி இருந்திருக்க மாட்டேனா!

அதுமட்டுமா!

பொசுக்கும் செந்நாக்குகளை உடைய தீக்கடவுளே எனது கற்புக் கனலைத் தாங்கமுடியாது திணறி, என்னை வெளிக்கொணர்ந்து, என்னவரிடம் எனக்காக மன்றாடுகிறான்.  படைக்கும் கடவுளான பிரம்மன் முதல் முக்கண்ணன் வரை அனைவரும் என் பெருமையையே பேசுகிறார்கள் என்றால் அவர்களும் என்னைப் போற்றி, என் பெருமையை அறிந்துகொள்ளும் வண்ணம் என்னவருக்கு அறிவுரை கூறினார்கள் என்றுதானே பொருள்!

கம்பநாட்டாரும்,

அங்கி யான் என்னை இவ் அன்னை கற்பு எனும்

பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்

இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்

சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய். [8] – 9.3983

என்று என் கற்பைப் போற்றுகிறார்.

சுடுசொல் சொன்ன என்னவரை விட்டு நான் என் நீங்கவில்லை?  அப்படி நீங்கி இருந்தால் அவர் சொன்னது உண்மை என்று நான் ஒப்புக்கொண்டதாகத்தானே ஆகும்!

“இராமனின் சுடுசொல் தாங்காமல் சீதை நீங்கியதுதான் சரி!” என்றா உலகம் கூறும்?

“சீதை குற்றம் இழைத்தவள்.  எனவே, இராமனின் சொல்லில் இருக்கும் உண்மையைத் தாங்க மாட்டாமல் ஓடி விட்டாள்!” என்றுதானே என்னைத் தூற்றி இருக்கும்!  கற்புக்கரசி சீதை என்று புகழ்பவர்களே, இராமன் பெண்ணடிமை செய்தான் என்று எனக்குப் பரிந்துகொண்டு வருபவர்களே இன்று என்மீது வசை பாடி இருப்பார்கள்!

இராவணனை அழிக்கவேண்டும் என்று அவதாரம் எடுத்தவர் என்னவர்.  அதை நான் செய்துவிட்டால் அவருக்கு என்ன பெருமை!  அவர் அவதாரம் எடுத்தது வீணாகி அல்லவா போயிருக்கும்!  எனவே நான் இராவணன் என்னைக் கவர்ந்து செல்ல அனுமதித்தேன்! எரிக்கடவுளே என் கற்புத் தீயைத் தாங்க இயலாதபோது, அரக்கன் இராவணனைச் சுட்டுப் பொசுக்க என்னால் இயலாதா?

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அன்னையே!  இராமர் தங்களைத் தீப்புகும் நிலைமைக்குத் தள்ளியது என்ன நீதி?” என்றுதானே கேட்கிறீர்கள்!

அன்புள்ள ஒரு கணவன் என்ற முறையில் அவர் அதைச் சொல்லி இருந்தால் அது தவறுதான்.  அப்படி அவர் சொல்ல நேர்ந்ததற்குத்தான் என்னிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

त्वया तु नरशार्दूल क्रोधमेवानुवर्तता |

लघुनेव मनुष्येण स्त्रीत्वमेव पुरस्कृतम् || [9]  ६-११६-१४

த்வயா து நரஸா’ர்தூல க்ரோதமேவ அனுவர்த்ததா |

லகுனேவ மனுஷ்யேண ஸ்த்ரீத்வமேவ புரஸ்க்ருதம் || 6-116-14

மாந்தரில் புலிக்கு நிகரானவரே!  வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது. – 6.116.14

என்னவரை வலிமையற்றவர் என்றும், ஆண்மையைக் கைக்கொள்ளாது பெண்மையைக் கைக்கொண்டு, சினம் காட்டுகிறீர்கள் என்று சாடினேன்.  என் உரிமையை அப்படித்தான் நிலை நாட்டினேன்.

இருப்பினும், அவர் ஒரு மன்னவர்.  மன்னவரின் மானம் காக்க நடத்தப்படும் போரில் பல்லாயிரக் கணக்கானவர்கள் மடிகிறார்கள்.  அந்தப் போர்வீரர்கள் தங்களது தனிப்பட்ட பகைக்காவா எதிரிப் போர்வீரனை வீழ்த்துகிறார்கள்!  இல்லையே!  மன்னனுக்காகத்தானே!

ஆகவே, ஒரு மன்னனுக்கு மனைவியைவிட மக்களே பெரிது!  மக்களின் மதிப்பே பெரிது. எனவே மன்னனை ஒரு மனைவியின் கணவனாக மட்டும் அளவிடக்கூடாது, என் குழந்தைகளே!

“அரசியைக் கவர்ந்து சென்ற அரக்கனை அரசர் அழித்தது சரியே!  ஆயினும், மாற்றான் ஒருவன் மனையில் மாதக்கணக்கில் இருந்தவளை நமது மன்னர் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?” என்றுதான் மக்கள் முழங்குவார்கள் என்பதை என்னவர் அறிவார்.

அவருக்காக உயிரையும் உவப்புடன் கொடுக்கும் மக்கள், தன் மீது பழி சொல்லக்கூடாது என்பதில் அரசனுக்கு ஆர்வம் இருக்கவேண்டும்;  எனவே அரசி தன் தூய்மையை துலங்கவைக்கவேண்டும் என்பது அவர் மனதில் உயர்ந்து ஓங்கி இருந்தது.

மக்களுக்காகத்தான் மகேசன்.  அவனுக்காக மக்களல்ல என்ற நெறியை உணர்ந்து அதன்படி நடந்துகொண்டவர் என்னவர்.  அவரைப் போற்றாமல் நான் எப்படித் தூற்றுவேன், அல்லது மற்றோரை – அவர்கள் என் மக்கட்செல்வங்களாக இருந்தாலும் – எப்படித் தூற்றவிடுவேன்?

மீண்டும் ஒரு ஒற்றன் கொண்டுவந்த தகவலைக் கேட்டு ஏன் என்னைக் காதுக்கு அனுப்பினார்?

ஒரு சிறு தீப்பொறி ஒரு பெரிய காட்டையே கொளுத்திவிடும்.  எனவே, அது பெரிதாவதற்குள் அதை அணைத்துவிட வேண்டும்.  இன்று ஒருவன்தானே பேசுகிறான் என்று வாளாவிருந்தால், சில நாள்களில் பலர் பேசுவார்கள்.  “சீதை தீப்புகுந்ததை நாம் நேரிலா பார்த்தோம்!  ஏதோ கண்கட்டி வித்தை செய்து, அப்படி ஒரு செய்தியை உண்டாக்கி விட்டார்கள்!” என்று புறம் பேசத் துவங்குவார்கள்.  காது, கண், மூக்கு வைத்து அவர்களே ஒரு கதையையும் உண்டாக்கி விடுவார்கள்.

அதனாலேயே அவர் மீண்டும் என்னைக் காட்டுக்கு அனுப்பினார்.

“உங்களைத்தானே காட்டுக்கு அனுப்பினார்!  தான் சுகவாசியாகத்தானே இருந்தார்!  அவரும் பதவியைத் துறந்து உங்களுடன் கானகம் ஏகி இருக்கலாமே!” என்று நீங்கள் கேட்கும் வினாவுக்கு இதுவே எனது விளக்கம்:

அவர் அப்படிச் செய்திருந்தால், “அவருக்காக ஆயிரக்கணக்கானவர் இராவணனை எதிர்த்துப் போர் புரிந்தோமே!  கடலில் பாலம் சமைத்தோமே!  இது வீண்தானா?  விழலுக்கு இறைத்த நீர்தானா?” என்று தூற்றி இருக்க மாட்டார்களா?

அவர் காலடியே சுவர்க்கம் என்று தன்னையே அவருக்காகக் கொடுத்த அனுமனே அவரை விட்டல்லவா நீங்கி இருப்பான்!  அவருக்காகப பதினான்கு ஆண்டுகள் தந்து, தனது அரச போகத்தையும், இல்லாளையும் துறந்து, தமையனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் அவரை உயர்வாக மதித்திருப்பானா?

என் அருமைச் செல்வங்களே!  அறிவில் சிறந்த என் கண்மணிகளே!  சிந்தித்துப் பாருங்கள்!  அரசன் என்று ஆகிவிட்டால் தனது நலத்தைவிட மக்களிடம் நற்பெயர் வாங்குவதே தலையாயதாகி விடுகிறது.

என்னவரும் சுகபோகம் அனுபவிக்கவில்லை.  என் நினைவிலேயே ஏங்கினார்.  அந்நிலையில் அது ஒன்றைத்தானே அரசரான அவரால் செய்ய இயலும்?  நினைத்திருந்தால் வேறு மனைவியரைக் கைக்கொண்டு இருந்திருக்கலாம்.  அதை அன்றைய நெறியும் அரசர்களுக்கு அனுமதித்தது.  அவர் அதைச் செய்யவில்லையே!  என்மேல் இருந்த காதலால்தானே அதைச் செய்தார்!  காதலனை நினைத்து ஏங்கும் கன்னியரைப் பற்றி நிறையக் காவியங்கள் புனைவதைப் படித்திருப்பீர்கள்.  காதல் மனைவியே நினைத்துக் கற்புடன் இருந்த கணவர் என்னவர்தானே!

கடைசியில், நான் என் உயிர் துறந்தேன், என்னவர் மீண்டும் என்னைத் தூயவள் என்று நிரூபிக்கும் நிலைமைக்குத் தள்ளினார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

முனிவர் வால்மீகி என் செல்வங்களாகிய லவனும், குசனும் அரியணை ஏறி, ரகு வம்சத்தின் மேன்மையைத் தொடர வேண்டும் என்று விரும்பினார்.  என்னவர் என்னை மீண்டும் அப்படியே எப்படி ஏற்பார்?  ஆண்டுகள் கடந்தால் அநியாயப் பழி நீங்கி விடுமா?  மீண்டும் தோண்டி எடுத்துப் பழி போடமாட்டர்களா?

எனவேதான் என்னவர் அமைதி காத்தார்.

எனக்கும் அலுத்து விட்டது.  அவரும் அமைதி பெறவேண்டும், நானும் மீண்டும், மீண்டும் வீண்பழியிலிருந்து விலகவேண்டும் என்று தோன்றி விட்டது.  ஆகவே, நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த நில அன்னையிடமே சரணடைந்தேன்.

“என் நில அன்னையே!  நான் உண்மையிலேயே என் கணவருக்கு கற்புடைய மனைவியாக விளங்கி இருந்தால், உன் சீதையை இந்த வாழ்வுச் சுமையிலிருந்து விடுவித்துவிடு!” [10]

என்று கோரினேன்.  அவளும் என்னை அன்புடன் அழைத்துச் சென்றாள்.

நான் தற்கொலை செய்துகொண்டேன் என்று நீங்கள் பலர், பல மொழிகளிலும் எழுதி வருகிறீர்கள்.  உங்களை ஒன்று கேட்கிறேன், என் செல்வங்களே!  தீயினாலேயே தீண்ட இயலாத நான் மலையிலிருந்து வீழ்ந்தால்தான் இறந்துவிடுவேனா, அல்லது நான் விரும்பாமல் பூமி பிளந்துதான் என்னைக் கொண்டுபோக இயலுமா?  நன்கு சிந்தியுங்கள். மண்ணில் தோன்றிய மாபெரும் பிறப்பு என்னுடையாது.  நானே என் அன்னையான மண்ணைச் சரணடைந்தேன்.

இலங்கையில் தீயில் புகும் முன்னர் நான் வாழவேண்டும் என்று விரும்பினேன்.  எனவே என் கற்புக்கனல் தீக்கடவுளைச் சுட்டுப் பொசுக்கியது.  அவனும் என்னைத் திரும்ப என்னவரிடம் ஒப்படைத்தான்.  மீண்டும் பழி சொல்லி என்னைக் கானகத்திற்கு அனுப்பச் செய்த, என் அருமையை அறியாத மாந்தர்கள் நடுவில் நான் வாழ விரும்பவில்லை.  என் இரு கண்ணின் மணிகளை என்னவரிடம்  இணைத்துவிட்டு, என் அன்னையின் மடியில் தஞ்சம் புகுந்தேன்.  அவ்வளவே!…

என் மனதில் உள்ளதை என் செல்வங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்டதும் என் சீற்றம் தணிந்து விட்டது.  என் குழந்தைகளான நீங்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

 

************************************************

[1]  Chromosomes:  Definitions and Structure, by Jessie Szalay, Live Science, February 19, 2013

[2]  ஆதி சங்கரர் அருளிய சௌந்தரிய லகரி:  சுலோகங்கள் 1 – 41

[3]  சௌந்தரிய லகரி, முதல் சுலோகத்தின் தமிழாக்கம்

[4]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 66 – சுலோகங்கள் 13-16

[5]  வால்மீகி இராமாயணம் – பாலகாண்டம் –  சர்க்கம் 67 – சுலோகங்கள் 3 & 4

[6]  வால்மீகி இராமாயணம் – உயுத்த காண்டம், சர்க்கம் 116, சுலோகம் 5

[7]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 25

[8]  கம்பராமாயணம் – மீட்சி படலம், செய்யுள் 3983

[9]  வால்மீகி இராமாயணம் – உயுத்தகாண்டம் –  சர்க்கம் 116 – சுலோகம் 14

[10]  வால்மீகி இராமாயணம் – உத்தரகாண்டம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “சீதையின் சீற்றம்!

  1. முயன்று சிறப்பாக எழுதப்பட்ட பதிவு. அறிவியல், ஆன்மீகம், இளமைப் பருவத்தில் ஒரு விரலால் வில் தூக்கியது என்ற வாழ்வியல் வழி பெண்ணின் வலிமை சுட்டப்பட்டுள்ளது சிறப்பு. திரு அரிசோனனுக்கு வாழ்த்துக்கள்.

  2. very nice . I neve thought this angle, it could be the actual reason. Very well done.
    Good language skills

  3. நண்பர் அரிசோனன்,

    ////ஆகவே, ஒரு மன்னனுக்கு மனைவியைவிட மக்களே பெரிது!  மக்களின் மதிப்பே பெரிது. எனவே மன்னனை ஒரு மனைவியின் கணவனாக மட்டும் அளவிடக்கூடாது, என் குழந்தைகளே!

    “அரசியைக் கவர்ந்து சென்ற அரக்கனை அரசர் அழித்தது சரியே!  ஆயினும், மாற்றான் ஒருவன் மனையில் மாதக்கணக்கில் இருந்தவளை நமது மன்னர் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?” என்றுதான் மக்கள் முழங்குவார்கள் என்பதை என்னவர் அறிவார்.////

    ///அவருக்காக உயிரையும் உவப்புடன் கொடுக்கும் மக்கள், தன் மீது பழி சொல்லக் கூடாது என்பதில் அரசனுக்கு ஆர்வம் இருக்கவேண்டும்;  எனவே அரசி தன் தூய்மையை துலங்க வைக்க வேண்டும் என்பது அவர் மனதில் உயர்ந்து ஓங்கி இருந்தது.////

    ///சிந்தித்துப் பாருங்கள்!  அரசன் என்று ஆகிவிட்டால் தனது நலத்தைவிட மக்களிடம் நற்பெயர் வாங்குவதே தலையாயதாகி விடுகிறது.////

    ////கடைசியில், நான் (ஏன்) உயிர் துறந்தேன், என்னவர் மீண்டும் என்னைத் தூயவள் என்று நிரூபிக்கும் நிலைமைக்குத் தள்ளினார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.////

    ////என் நில அன்னையே!  நான் உண்மையிலேயே என் கணவருக்கு கற்புடைய மனைவியாக விளங்கி இருந்தால், உன் சீதையை இந்த வாழ்வுச் சுமையிலிருந்து விடுவித்துவிடு!” [10]  என்று கோரினேன்.  அவளும் என்னை அன்புடன் அழைத்துச் சென்றாள். 

    நான் தற்கொலை செய்து கொண்டேன் என்று நீங்கள் பலர், பல மொழிகளிலும் எழுதி வருகிறீர்கள்.  /////

    /////உங்களை ஒன்று கேட்கிறேன்,  தீயினாலேயே தீண்ட இயலாத நான் மலையி லிருந்து வீழ்ந்தால்தான் இறந்து விடுவேனா, அல்லது நான் விரும்பாமல் பூமி பிளந்துதான் என்னைக் கொண்டுபோக இயலுமா?  நன்கு சிந்தியுங்கள். மண்ணில் தோன்றிய மாபெரும் பிறப்பு என்னுடையது.  நானே என் அன்னையான மண்ணைச் சரணடைந்தேன்./////

    கடைசிப் பத்தி வால்மீகி இராமாயணமோ அல்லது கம்ப இராமாயணமோ அல்ல !!!  இது அரிசோனன் இரங்கல் இராமாயணம். யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மனைவியை இரண்டாம் தரமாய்க் கீழாக  நடத்திய ஆணாதிக்க இராமனை அவதார நாயகனாக ஒப்பனை செய்ய எழுதிய பாராயணம்.

    மக்கள் கோரிக்கையே மகேசன் கோரிக்கையா ?  இராமனின் ராம ராஜியத்தில் சீதை மக்களில் ஒருத்தி இல்லையா ?  ஆம்  அவள் ஓர் அற்பப் பிறவியாய் நடத்தப் பட்டாள்.  உணர்வில், உள்ளத்தில், செயலில் அப்படித்தான் அவளை இராமன் நடத்தினான்.

    சீதை மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளக் கணவன் இராமனே முழுக்க முழுக்கக் காரணம்.  பூமி பிளந்து பூகம்பத்தில் அவள் மட்டும் செத்தாள் என்பது புராணப் புனை கதை.  

    சீதை மரிக்கக் காரணமான இராமனும் இறுதியில் மனம் நொந்து ஆற்றில் மூழ்கித் தன்னுயிரைப் போக்கிக் கொண்டான்.  அவதார நாயகனுக்கு எமராஜா வேறொரு வழியைக் காட்ட வில்லையா ???

    சி. ஜெயபாரதன்.

    http://jayabarathan.wordpress.com/seethayanam/

  4. மதிப்பிற்கு உரிய ஜெயபாரதன் அவர்களே,

    //சீதை மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளக் கணவன் இராமனே முழுக்க முழுக்கக் காரணம். பூமி பிளந்து பூகம்பத்தில் அவள் மட்டும் செத்தாள் என்பது புராணப் புனை கதை. //
    //கடைசிப் பத்தி வால்மீகி இராமாயணமோ அல்லது கம்ப இராமாயணமோ அல்ல !!! இது அரிசோனன் இரங்கல் இராமாயணம். யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.//

    அல்ல. கம்பன் உத்திர காண்டமே எழுதவில்லை. அரிசோனன் இரங்கல் இராமாயணமும் இயற்றவில்லை. வால்மீகி இராமாயணத்தில் சீதை வேண்டியபின்னர் பூமித்தாய் வந்து அவளை அரியாசனத்தில் அமர்த்திவைத்துக் கொண்டுசென்றதாக எழுதப்பட்டு இருக்கிறது.

    சீதை சொல்கிறாள்:
    யதாஹம் ராகவாதன்யம் மனசாபி ந சிந்தயே |
    ததா மே மாதவி தேவீ பிபரம் தாதுமர்ஹதி ||
    — வால்மீகி ராமாயணம், உத்திர காண்டம், 79-14

    “எப்பொழுது நான் இராமனைத் தவிர வேறு எவரையும் என் மனதில் நினைக்கவில்லையோ, அப்பொழுது இப்புவி பிளந்து நான் அவள் உள்ளே செல்லத் தகுந்தவள் ஆகிறேன். ”

    ததா சபந்த்யாம் வைதேஹ்யாம் ப்ராதுராசீத்ததத்புதம் |
    பூதலாதுத்திதம் திவ்யம் சிம்ஹாசனமனுத்தமம் ||
    — வால்மீகி இராமாயணம், உத்திர காண்டம், 79-17

    “இவ்வாறு சீதை சூளுரைக்கவும், புவி பிளந்து, அதன் உள்ளிருந்து மிகவும் சிறந்த, உயர்ந்த அரியணை வெளியே கிளம்பி வந்தது.”

    ஆக, வால்மீகி இராமாயணமே, சீதை கேட்டு, புவி பிளந்து அரியணை வந்ததாகவும், அதில் அமர்ந்து பூமிக்குள் சீதை சென்றதாகவும் கூறுகிறது.

    தாங்கள் சீதை தீக்குளித்தது புராணம் (பழங்கதை) என்று தள்ளிவிட வில்லை. அப்பொழுது இதைமட்டும் எப்படித் தள்ளிவிட முடியும்?

    இராமாயணமே கட்டுக்கதை என்று தாங்கள் தள்ளி விட்டால், நாம் கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்கலாம். அப்படி விவாதித்தாலும், நான் இதே மருமொழியைத்தான் எழுத வேண்டி இருக்கும்.

    //சீதை மரிக்கக் காரணமான இராமனும் இறுதியில் மனம் நொந்து ஆற்றில் மூழ்கித் தன்னுயிரைப் போக்கிக் கொண்டான். அவதார நாயகனுக்கு எமராஜா வேறொரு வழியைக் காட்ட வில்லையா ???//

    இதுபற்றி நாம் முன்னேமேயே விவாதித்திருக்கிறோம்.

    வடக்கிருந்து உயிர்துறப்பதைப்போலத்தான். இது தற்கொலை அல்ல. கவ்வை சைவ ஆதினத்துத் தலைவரான சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி தனக்கு குணப்படுத்தமுடியாத பெருங்குடல் புற்றுநோய் இருக்கிறது என்று அறிந்தவுடன், இந்து சமயத்தில் இம்மாதிரி சமயத்தில் உயிர்த்தியாகம் செய்ய வழி உண்டு என்று நிருபித்து — ஹவாய் மாநில அரசு அனுமதியுடன் உண்ணாவிரதம் இருந்து சிவபதவி அடைந்தார். இம்மாதிர் உயிரைத் துறப்பதைத் தற்கொலை என்று குறிப்பிடுவது சரியல்ல.

    வடக்கிருந்து உயிர்துறப்பது பற்றி ஏற்கனேவே மின்தமிழில் ஒரு இழை வந்ததையும் தாங்கள் படித்திருக்கலாம். எனவே தற்கொலை என்று ….. படுத்திப் பேசுவானேன்?

    இராமனைப்பற்றித் தங்கள் புரிதல் வேறு, என் புரிதல் வேறு. தாங்கள் அவனை மனிதனாகப் பார்க்கிறீர்கள். நான் மன்னனாகப் பார்க்கிறேன். அதுவே மாறுபாடு. மற்றப்படி, சீதையைத் தாங்கள் சாதரண மனிதியாகப் பார்க்கிறீர்கள், நான் அரசியாகப் பார்க்கிறேன். அதனால் அவள் இன்னல்களை ஏற்கொள்ள வேண்டிவந்தது. சீதை இப்படித் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா என்றால், அது அவள் பிறப்பின் விதி, என்ன செய்வது? சீதைக்காக நாம் கண்ணீர் வடிப்போம். அதுதான் நம் இருவராலும் செய்ய இயலும். இதில் நாம் இருவரும் ஒரே நோக்குடன்தான் இருக்கிறோம்.

  5. http://jayabarathan.wordpress.com/seethayanam/

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். 

    வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

    இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமா யணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார்.

    கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார்.

    உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. 

    வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

    சி. ஜெயபாரதன்

    ++++++++++++++

  6. நண்பர் அரிசோனன்,

    /////உங்களை ஒன்று கேட்கிறேன்,  தீயினாலேயே தீண்ட இயலாத நான் மலையி லிருந்து வீழ்ந்தால்தான் இறந்து விடுவேனா, அல்லது நான் விரும்பாமல் பூமி பிளந்துதான் என்னைக் கொண்டுபோக இயலுமா?  நன்கு சிந்தியுங்கள். மண்ணில் தோன்றிய மாபெரும் பிறப்பு என்னுடையது.  நானே என் அன்னையான மண்ணைச் சரணடைந்தேன்./////

    இது அரிசோனன் இராமாயணம் இல்லையா ?  இப்படி வால்மீகி வரிக்கு வரி இது மாதிரி எழுதியுள்ளாரா ?

    சி. ஜெயபாரதன்

  7. நண்பர் ஜெயபாரதன்,

    //இது அரிசோனன் இராமாயணம் இல்லையா ?//

    இல்லை ஐயா.

    // இப்படி வால்மீகி வரிக்கு வரி இது மாதிரி எழுதியுள்ளாரா ?//

    ஆமாம் ஐயா!  வால்மீகி இராமாயணத்தில், உத்தர காண்டத்தில், 97ம் சர்க்கத்தில், 14-20 சுலோகங்களில் சீதை சொல்வதும், பூமி பிளந்து, அரியணை வந்து, அதில் அமர்ந்து, சீதை புவிக்குள் செல்வது விவரிக்கப்பட்டுள்ளது.  அதையே நானும் பகிர்ந்துள்ளேன்.

    முதல் மறுமொழியில் ஒன்பதும், எழும் பிறழ்ந்து, தவறாக 79ம் சர்க்கம் என்று தட்டெழுத்தில் தவறாகப் பதிவு ஏற்பட்டுவிட்டது.  பிழை பொறுக்கவும்.

  8. /////உங்களை ஒன்று கேட்கிறேன்,  தீயினாலேயே தீண்ட இயலாத நான் மலையி லிருந்து வீழ்ந்தால்தான் இறந்து விடுவேனா, அல்லது நான் விரும்பாமல் பூமி பிளந்துதான் என்னைக் கொண்டுபோக இயலுமா?  நன்கு சிந்தியுங்கள். மண்ணில் தோன்றிய மாபெரும் பிறப்பு என்னுடையது.//
    இது இராமாயணத்து நிகழ்ச்சிகளை வைத்து நான் எழுதியது.

      //நானே என் அன்னையான மண்ணைச் சரணடைந்தேன்.//

    இது சீதையின் வேண்டுகோளுக்கு ஏற்ப, புவி பிளந்து , நில அன்னை தனது இரு கரங்களாலும், சீதையை அரியணையில் அமரவைத்து, நிலத்திற்குள் கொண்டு சென்றாள் என்று வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைப் படித்து எழுதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.