Author: ஒருஅரிசோனன்

  • மாணிக்கவாசகரின் பக்தி

    ஒரு அரிசோனன்

     

    Image result for சைவ குரவர்

    சைவக் குருமார் நால்வரின் பக்தி நோக்கு:

    சிவபெருமானின்மீது சைவக் குருமார் நால்வரும் நான்குவிதமாகப் பக்திசெலுத்தினார்கள்.  சிவபெருமானைத் தந்தையாக எண்ணிய திருஞானசம்பந்தர் அவ்விதமாகவே அவர் இயற்றிய தேனினுமினிய தேவாரப் பாக்களில் தன்னுடைய பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினார்.  பெரும்பாலான பாடல்களில் சிவபெருமானையும், உமையவளையும் தனது தாய்தந்தையராகவே ஏத்தி உயர்த்துகிறார்.  தந்தையால் குளக்கரையில் தனித்துவிடப்பட்டு, ஏங்கியழுதபோது, உலகத்தாய் பார்வதி கருணைகொண்டு அவருக்கு ஞானப்பாலைப் புகட்டியது அவரைச் செல்லப் பிள்ளையாக்கியதுடன் காழிப்பிள்ளையார் என்ற சிறப்புப் பட்டத்தையும் தேடித்தந்தது போலும்!

    சுந்தரமூர்த்தி நாயனாரோ சிவபிரானைத் தமது தோழனாகவே கருதினார்.  அந்தத் தோழமையே எம்பெருமானைப் பித்தா என்று அழைக்கவும், பரவை நாச்சியாருக்கு தன்னுடைய காதலை எடுத்துச்சொல்ல ஒரு தூதுவனாகவும் அனுப்பவும் வைத்தது. எனவே, அவர் தம்பிரான் தோழர்[1] என்ற தனிச் சிறப்பையும் பெற்றார்.  மேலும், அவரது தேவாரப் பாக்கள் அவர் சிவபிரானின்மீது எடுத்துக்கொண்டிருக்கும் உரிமையை உள்ளங்கனி நெல்லிக்காயாக்குகின்றன.

    நீலகண்டப் பெருமானின் பணியாளராகவே பக்திசெலுத்தினார், நாவுகரசரான அப்பர் பெருமான்.  பெருமான் தரிசனத்திற்கு வரும் அடியார்களின் கால்களின் குத்தாமலிருக்கவேண்டும் என்று கோவில் பிரகாரங்களில் இருக்கும் முட்களைக் களைய எப்பொழுதும் தன் கையில் உழவாரத்தை ஏந்தி உழவாரப் பணிசெய்து சிறந்தவர் அவர்[2].  இந்த மனப்பாங்கு அவருடைய மிகவும் புகழ்பெற்ற, “தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பதே,”[3] என்னும் வரிகள் எம்பெருமானிடம் எப்படிப்பட்ட பக்திநிலையைக் கொண்டிருந்தார் என்று காட்டுகிறது.

    இருப்பினும், திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது.  அன்பிற்சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.  சிவபுராணத்தில், நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே[4],” என்பது தம்மைத் தாழ்த்திக்கொண்ட மனப்பாங்கையும், சிவபெருமான் தாயைவிடக் கருணைகொண்டு அருளி ஆட்கொண்டார் என்றும் தெளிவுபடுத்துகிறார். அதுவே, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,” என்று அவர் ஈசனைத் துதிப்பதிலிருந்து தெரிகிறது.

    இவண், நாம் மாணிக்கவாசகரின் பக்திப் பெருக்கையும், அவர் நமக்குத் தெரிவிக்கும் அறிவுரையையும் அறிந்துகொள்ள முயல்வோம்.

    சிவனின் கருணையைப் பெறும் வழி:

    தினந்தோறும் கடவுளர்பால் நாம் பக்திப்பாடல்கள் பலவற்றை முணுமுணுக்கிறோம்.  இப்படிச் செய்வது நமக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருமா?  வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா? சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன? மாணிக்கவாசகர் அதற்கான வழியைக் காட்டுகிறார்:

    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்

    பல்லோருமேத்தப் பணிந்து[5].        — சிவபுராணம்: 93-95

    சிவபுராணத்தில் அவர் செப்பிச்சென்ற மூன்று வரிகளும் இறைவனைத் துதிப்பதைப் பற்றிய நமது பல குருட்டுநம்பிக்கைகளை அடியோடு புரட்டிப் போட்டுவிடுகின்றன.  கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதனால் பயனேதுமில்லை என்பதே அவரது கருத்து.  ஒரு டேப் ரிகார்டரோ, ஐபாடோ, டாப்லெட்டோ, சி.டி. பிளேயரோ நம்மைவிடச் சிற்ப்பாக துதிப்பாடல்களைப் பிழையேதுமின்றிப் பல்லாயிரம்முறை சொல்லும் திறன்படைத்தவை. பொருளறியாமல் சொல்லும் அவற்றிற்குக் கிடைக்காத முக்தியா, பிழையுடன் பொருளறியாது சொல்லும் நமக்குக் கிட்டிவிடும்?

     எப்படிப்பட்ட பாடல்களாலும், சுலோகங்களாலும், வேதமந்திரங்களாலும் நாம் சிவபெருமானைத் துதித்துப் புகழ்ந்தாலும், அவற்றின் பொருளை — அவை என்ன சொல்லுகின்றன என்பதின் அர்த்தத்தை — அவை சொல்லும் இறையுணர்வை — அறிந்து உணருவதுதான் சிவலோகம் செல்லச் சிறந்த வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார்.  எப்பொழுது நாம் நமது துதிப்பாடல்களின் பொருளையும், அதனுள்ளிலிருக்கும் இறை உணர்வையும் அறிந்து மெழுகாய் உருகிநிற்கிறோமோ, அப்பொழுதே நமது துதி ஈசனைச் சென்றடைந்து அவனது கருணையை நம்பால் திருப்பிவிடுகின்றது என்று அறிவிக்கிறார்.

    எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியாக இருந்தால் அவரால் இப்படி வழிகாட்டமுடியும்!

    அவரின் அறிவியல் திறன்:

    எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது.  சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம்.  ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம்.  பள்ளிகளில் கற்பிக்கப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி

    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்

    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்[6]                        சிவபுராணம்– 26-31

    Image result for டார்வின்

    உயிரினங்கள் மனிதராவதுவரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார்.  ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார்.  அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம்வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது.  இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்?

    மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

    அளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி

    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

    இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

    சிறியவாகப் பெரியோன்; — 1-6

    இந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக [எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை] விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே  நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம்.  பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

    maxresdefault

    சிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார்.  அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம்.  நாம் புகழ்ந்துரைக்கும் மேலைநாட்டோர் உலகம் தட்டையானது, அதை யாராவது எதிர்த்துப் பேசினால், கம்பத்தில் கட்டிக் கொளுத்துவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அனைத்து உலகங்களும், விண்மீன்களும் உருண்டையானவை, அவை எண்ணிலடங்கா என்று எதற்கும் கவலைப்படாது மணிவாசகர் எயிற்றியிருப்பதைக் கண்ணுறும்போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

    அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம்.  ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.

    யானை முதலா எறும்பு ஈறாய

    ஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்

    மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)

    ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்

    ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

    இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

    ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

    ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்

    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

    தக்க தசமதி தாயொடு தான்படும்

    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்                                 போற்றித் திருவகலல்11-25

    மிகப்பெரிய யானையாக இருந்தாலும், மிகச்சிறிய எறும்பாக இருந்தாலும், குறையில்லாத கருப்பையில்தான் கரு வளரமுடியும்;  அப்படி வளரத் துவங்கினாலும் அக்கரு கருப்பையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிருமிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தால்தான் முழுவளர்ச்சி அடையமுடியும். இதை முதலில் சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் மனிதத்தாயின் வயிற்றிலிருக்கும் கருப்பையில் எந்த அளவுக்குக் கரு வளர்க்கிறது, அது எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், வேதனைகளையும் சந்திக்கிறது என்பதை மாதவாரியாகப் பட்டியலிடுகிறார்:

    தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விநது சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது.  அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும்.  அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின்போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும்.  மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து தப்பவேண்டும்.  நாங்காம் மாதம் கூரிருட்டில் நிலைகுலையாது இருக்கவேண்டும்.  ஐந்தாம் மாதம் கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் நீரில் முழுகாமல் பிழைக்கவேண்டும்.  ஆறாம் மாதம் தாங்கமுடியாத உறுத்தலுக்கும் எரிச்சலுக்கும் பலியாகாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும்.   ஏழாம் மாதம் கனத்தால் கீழிறங்கும் தாயில் வயிற்றிலிருந்து நழுவிவிழாமல் தப்பவேண்டும்.  எட்டாம் மாதத்தில் எப்பொழுதும் கருப்பை தன்னைச் சுற்றி அழுத்தும் வலியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துவிடாமலிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்கவேண்டும்.  பத்தாம் மாதத்தில் பிரசவத்தில் வெளிவரும்போது தாயுடன் வேதனைப் பெருங்கடலில் நீந்தி வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இறப்பாய்யும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்.

    மனிதக் கருவுக்கு ஏற்படும் இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் மாணிக்கவாசகர் விவரிக்கும்போது — பிரசவத்தில் ஒரு தாய்படும் வேதனையை, வலியை அறிந்து போற்றும் நாம், ஒரு கருவும் எப்படிப்பட்ட வேதனையும், கண்டங்களையும், வலியையும் பொறுத்து வெளிவருகிறது என்பதை அறியாமல்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அச்சிசுவின் பெருமையை உணர்கிறோம்.

    ஒரு சிசு தனது வேதனைகளை எடுத்துச் சொல்ல இயலாததால் பத்து மாதங்களும் அது தாயின் வயிற்றில் சுகமாக வாழ்கிறது என்று நாம் எண்ணக்கூடாது என்பதை மாணிக்கவாசகரின் மருத்துவ அறிவு தெளிவுபடுத்துகிறது. மேலே கொடுத்துள்ள இந்த விளக்கம் மருத்துவர்கள் அறிந்ததே.  மணிவாசகர் ஒப்பிலாச் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் என்று நாம் எண்ணக்கூடாது என்பது அவரது பாடல்களில் தெரிகின்றது.

    கவி வன்மை:

    திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதையமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை.  அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.

    அவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளத்தை உருக்கி, நம் அகந்தையையும் அழிக்கின்றன.  இதனாலேயே, ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற அடைமொழியும் உருவாயிற்று போலும்!

    பலமுறை தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று தாழ்த்திக்கொள்கிறார், திருவாதவூரார்.  இப்படிப்பட்ட தன்னடக்கமே நமது இதயத்தைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.

    சிவபுராணத்தில் அவர் சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பழமைத் தன்மையையும், பெருமைகளையும், குணநலங்களையும் தமிழில் வேதமாக ஓதி உணர்த்துகிறார்.

    கீர்த்தித் திரு அகவலில் தமிழ்நாட்டிலிருக்கும் பல சிவத்தலங்களை எண்ணிக்கையிட்டு, அவற்றின் தலபுராணச் சுருக்கத்தையும் கொடுத்து, தமது வாழ்க்கையைப்பற்றியும் சிறிய விவரிப்பைத் தருகிறார்.  அச்சமயம் சிவபெருமானின் மகிமையை உயர்த்தவும் தவறாமலிருப்பதே அவரது சிறப்பு.  இந்தச் செய்யுள் தொகுப்பில் தமது வழிதவறிய நடத்தையையும், சிவபெருமான் கருணையையுடன் மௌனகுருவாகத் தன்னைத் தடுத்தாட்கொண்ட சீர்மையையும் செப்புகிறார்.

    திருவண்டப் பகுதியில் சிவபெருமானின் பெருஞ்சிறப்பையும், அவர் நாமிருக்கும் மாபெரும் அண்டத்தைவிடப் பெரியவர் என்ற பேருண்மையையும் முன்னுக்குக் கொணர்கிறார்.

    மரகதத் திருவுருவமாக ஆடுங்கோலத்தில் கோவிலில் குடிகொண்டிருக்கும் உத்தரகோசமங்கை மூதூரின் மன்னனான சிவபெருமானிடம் தன் உலகப்பற்றுகள் அனைத்தையும் நீக்கித் தன்னை அவன் திருவடியில் சேர்த்துக்கொள்ளும்படி அழுது முறையிடுகிறார், தமது நீத்தல் விண்ணப்பம் செய்யுள் கோர்வையில்.

    மார்கழி மாதந்தோறும் காலையில் பாடும் இருபது திருவெம்பாவைப் பாடல்களை நோக்குவோம்.  தூங்கும் தமது தோழியரை எழுப்பி, நீராடி, தமக்கு வாய்க்கும் கணவர் எப்படியிருக்கவேண்டும், தாம் எப்படிப்பட்டவருடன் பழகவேண்டும், எப்படிப்பட்ட குணநலன்கள் தமக்கு இருக்கவேண்டும் என்று சொல்வதைக் கவின் நயத்துடன் உரைத்து, தாம் தொழப்போகும் சிவபெருமானின் அருமைபெருமைகளைப் புகழும் இளம்பெண்டிராகவே அக்கவிதைகளில் மாறிவிடுகிறார்.

    இதே கவிதை லயத்திலேயே – என்றுமே இமைமூடாத முக்கண்ணனின் சிறப்பைப் பாடி, அவனைத் துயில்நீக்கமுயலும் தாயாகவே திருப்பள்ளியைழுச்சியில் மாறுகிறார்.  கோவிலில் அவனது காலைத் தரிசனத்திற்காக்கக் காத்திருக்கும் அடியார்களைப்பற்றியும், அவர்களின் கோலத்தையும், இயற்கையின் எழிலைப்பற்றியும் பாடிப் பரவசமடைந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.

    நாம் அவரது கவித்திறனைப் பற்றி எழுத ஒரு பெரிய புத்தகமே போதாது.

    ஒவ்வொரு இந்துவும், அவரது தாய்மொழி எதுவாக இருப்பினும், மாணிக்கவாசகரின் மணிமணியான சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கும் திருவாசகத்தின் சில பாடல்களையாவது கற்று, அவற்றின் உட்பொருளை அறிந்துணர்ந்து, இறையுணர்வைப்பெற்று, சிவபெருமானைத் துதிக்கவேண்டும்.  இந்துவல்லாத மற்ற தமிழரும், அவரது கவிதைச் சுவைக்காகவாவது உள்ளமுருக்கும் திருவாசகத்தைப் படித்தறியவேண்டும்.

    தென்னாடுடைய சிவனே போற்றி1 எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!! போற்றி, போற்றி!!!!

    ***

    நூல் உதவி:

    1. திருவாசகம் – மூலமும் உரையும், கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகம், 1997
    2. திருவாசகம் – மூலமும் உரையும், சுவாமி சித்பவானந்தா, ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

    [1]    Sundarar:  http://www.skandagurunatha.org/deities/siva/nayanars/63.asp

    [2]   Thirunavukkarasar Darisanam:  https://www.dharisanam.com/pages/thirunavukkarasar-appar

    [3]   அப்பர் தேவாரம்.

    [4]   மாணிக்கவாசகரின் திருவாசகம்:  சிவபுராணம் வரிகள்: 60-61

    [5]   Ebid. வரிகள்: 93-95

    [6]   Ebid. வரிகள்:26-31

    Share
  • திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

    ஆங்கிலம்ஸர் கந்தையா வைத்தியநாதன்[1] — தமிழாக்கம்ஒரு அரிசோனன்

     மொழிபெயர்ப்பாளனின் குறிப்பு:  இலங்கையின் ஐந்து பழமையான ஐந்து சிவன் கோவில்களில் திருக்கேதீஸ்வரம் கோவிலும் ஒன்று.  இது மன்னாருக்கு அருகாமையில் இலங்கை தலைநிலப்பரப்பில் இருக்கிறது.  இக்கோவில் போர்ச்சுகீசியர்களால் பதினாறாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டுஇருபதாம் நூற்றாண்டில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது.  இப்பொழுதுஇந்திய அரசின் நிதியுதவியுடனும்தமிழ்ச் சிற்பிகளின் கைவண்ணத்துடனும் மீண்டும் பெரிதாகக் கட்டப்பட்டுவருகிறதுகடந்த ஜனவரி மாதம், 2017ல் நான் நேரில் அங்குசென்று புதுப்பிக்கும் பணியைக் கண்டு வந்தேன்.  இக்கட்டுரையின் ஆங்கில மூலம்திருக்கேதீஸ்வர்ம் கோவில் புணர்நிர்மாணச் சங்கத்தால் 2003ல் மற்ற கட்டுரைகளுடன் திருக்கேதீஸ்வரம் கட்டுரைகள் [Thiruketheeswaram Papers] என்னும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும்மொழிபெயர்க்கும்போதுமொழிபெயர்ப்பாளர் தனது நடையில் மொழிபெயர்த்து எழுதுவது மூலத்தின் தனித்தன்மையை வெளிக்கொணராதுபோகும்.  அதைக் கருத்தில்கொண்டுஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்துமூல ஆசிரியர் எவ்வாறு சொல்லியுள்ளாரோஅதன்   தன்மை குன்றாதுநீட்டவோகுறைக்கவோ செய்யாதுதமிழ் இலக்கணத்திற்குத் தகுந்தவாறு சொற்றொடர்களை அமைத்துள்ளேன்.  அதன்மூலம் மூலக்கட்டுரையாளரின் நடையும்அவரது கருத்துகளும், உணர்ச்சிகளும் அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொணரப்பட்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்.

    இக்கட்டுரை திருக்கேதீஸ்வர ஆலயத்திருப்பணி சபையின் அனுமதியுடன் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது

    ***

    மொகஞ்சதாரோஹாரப்பாவில் நமக்குக் கிடைத்த வைளிப்பாடுகளின்  கபிடிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால்செம்புக்காலத்திற்கோ[bronzeage], அதற்கும் முன்னதாகவோ வரலாறு உள்ளது சைவசமயம்.  எனவேஅதை உலகத்தின் மிகப் பழமையான வாழும் சமயம் என்றே எண்ணவைக்கிறது

    — ஸர் ஜான் மார்ஷல்

    சிவபெருமானை ஒப்புயர்வற்றவரென்றும், முழுமையானவரென்றும் வழிபடுதல் மிகவும் பரவியுள்ள பழமையான சமயங்களில் தொன்மையானதாகும்.  அது படைப்பு துவங்கியதிலிருந்தே இருக்கிறது என்று மரபு பறைசாற்றுகிறது.  இமயம் தோன்றி ஆன்மீக மரபின் சின்னமாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே — மிகப்பெரிய இந்திய-ஆப்பிரிக்கக் கண்டம் பிரிவதற்குமுன்னரே — இலங்கை அதன் ஒருபகுதியாக இருந்தபோதே அங்கு சிவவழிபாடு துவங்கிவிட்டது.

    பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிவபெருமானை மகாதேவராக, ஆதிசைவத்தின் ஒரு பெரிய கடவுளாக வழிபட்டதாகவே — சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளியிலும், ஜார்ஜ் ஃபெப்ரி மற்றவர்கள் மால்ட்டா, மடகாஸ்கர் மற்றும் கிரீட்டிலும் கண்ட புதைபொருள் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று முகமுள்ள கடவுள் முத்திரைகளும் — மும்மூர்த்திக் குறிக்கோள் — பிற்காலப் பிரம்மா, விஷ்ணு, சிவன் பதிப்புருவாக இருக்கக்கூடும்.  பொது ஆண்டுகளுக்கு மூவாயிரம் ஆண்டு முன்னதான மூன்றுமுக சிவபெருமானும் ஒருமுகக் கடவுளின் முந்தைய முத்திரைகளவு முக்கியமானதாகவே இருக்கலாம்.

    சைவக் குருமாரான திருஞானசம்பந்தரும்[2], சுந்தரமூர்த்தி நாயனாரும்[3] திருக்கேதீஸ்வரத்திலுள்ள பெருமானைப் புகழ்ந்து பாடும்போது, பெரிய, சிறந்த துறைமுகமான — மகாவம்சத்தில் மாதிட்டை என்றழைக்கப்படும் — மாந்தோட்டத்தை எண்ணிலடங்காத மரக்கலங்களின் புகலிடம் என்றும், அங்கு மாடமாளிகைகள் நிறைந்திருந்ததாகவும், பூம்பொழில்கள், பழத்தோட்டங்கள், வயல்கல் சூழ்ந்திருந்ததென்றும் வர்ணித்திருக்கின்றனர்.

    மாந்தோட்டத் துறைமுகம் பாலாவி ஆற்றுமுகத்தில் இருந்தது. மலையளவு அலைகள் எழுந்தும் விழுந்தும் ஆர்ப்பரித்தன. ஆற்றின் தென்கரையில் அலைவாய்க்குரடுகளும் [piers] கிடங்குகளும் அமைந்திருந்தன.  இப்பொழுது அக்கிராமம் வங்காலை [வங்கக் கலங்கள் கலக்குமிடம்] என்றழைக்கப்படுகிறது.  வடகரையில் திருக்கேதீஸ்வரம் கோவிலும், அரசுக்கட்டிடங்களும், மாளிகைகளும் இருந்தன.  இது மாளிகைத்திடல் என்று இப்பொழுது அழைக்கபடுகிறது.  பபமொடை [அர்ச்சகர்களுக்கான இடம்], கோவில் குளம் என்றும் கிராமங்கள் உள்ளன. திருக்கேதீஸ்வரம் கோவில் வங்காலையிலிருந்து நான்குமைல் தொலைவிலுள்ளது.  இதிலிருந்து பாலாவி ஆற்றின் முகத்துவாரம் அந்நாளில் எவ்வளவு பெரிதாக இருந்ததென்றும், அதன் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

    எகிப்து, மெசபடோமியா, பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியாக கடல்வழி வணிகம் அக்காலத்தில் நடந்துவந்தது. அந்நாட்டார் தென்மேற்குப் பருவமழைக்குப் பயந்தனர்.  அதன் சீற்றத்திலிருந்து மாந்தோட்டத் துறைமுகம் புகலிடமளித்தது. அதற்குக் காரணம் தெற்கிலுள்ள மன்னார் தீவும், ராமர் அணையும்தான்.  அக்காலத்தில் மன்னார் தீவுக்கும், இலங்கை நிலத்திற்கும் இடையுள்ள நீர்ப்பரப்பு இருபருவமழைகளால் ஏற்படும் கடல் நீரோட்டத்தால் மணல்தட்டாமல், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.

    கப்பல்கள் செல்லுமளவுக்கு ஆழமான மன்னார் கடற்கால் எப்படி சதுப்புநிலமானது, மிகச்சிறந்த மாந்தோட்டத்துறைமுகம் மணல்மேடுற்றது, அலைமோதிய பாலாவியாறு எப்படி ஒரு சிறுவாய்க்காலானது, அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதி தரிசுநிலமானது என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.

    பாலாவி ஒரு வளமிக்க ஆறாக இருந்தபோது, மல்வத்து ஓயாவின் நீர்ப்பெருக்கும், மற்ற இயற்கையான நீரோட்டங்களும் அதில்தான் கலந்தன.  காலப்போக்கில் மல்வத்து ஓயா தனது போக்கைத் தெற்குநோக்கி மதவாச்சிப் பக்கம் திருப்பியது. இது மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தைப்பற்றி ஆய்வுசெய்த ஒரு ரஷ்யப் பேராசிரியரின் கருத்தும் ஆகும்.  மல்வத்து ஓயாவை ஜயன்ட்ஸ் டாங்கைவிட்டு [Giants Tank] மன்னாருக்குப் பலமைல்கள் தொலைவிலுள்ள அருவியாற்றுக்குத் திருப்பியது ஜீவநதியான பாலாவியாற்றை மழைகாலத்தில்மட்டும் நீர்ப்பெருக்குள்ள மணற்படுகையாக ஆக்கியது. அகலமான பாலாவியின் கழிமுகம் மணல்மேடாகுவது விரைவாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மன்னார் தீவுக்குச் செல்ல அமைக்கப்பட்ட சாலைப்பாலமும், ரயில்வே பாலமும் கடல் நீரோட்டத்தை முழுவதும் நிறுத்திவிட்டன.  மாந்தோட்டத்திற்குப் பதிலாகத் தலைமன்னார் இந்தியாவுக்கு அருகாமையான துறைமுகமாக உருப்பெற்றது. பராக்கிரமபாகுவின் காலத்தில் துவங்கி, போர்ச்சுகீசியரின் வருகையும் மாந்தோட்டத் துறைமுகத்தின் சிறப்புகுன்றி, வடக்கிலிருக்கும் கேட்ஸ் துறைமுகம் சிறப்புப்பெற்றது.

    மாந்தோட்டத்தின் பொற்காலத்தில் பதினொன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமன்றி, தென்னிந்திய கடல்வணிகர்கள் தங்கள் சரக்குகளை மேற்கேயும், சீனாவுக்கு கொண்டுசெல்லும்போது இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகவும் விளங்கியது.

    அவ்வமயம் இந்தியாவில் இராமேஸ்வரம் கோவிலுக்கு நிகரான சிறப்புடன் திருக்கேதீஸ்வரம் கோவில் விளங்கியது.  ஆனால் அது இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் படைகளின் வழியைவிட இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்துவரும் இராணுவத்தின் வழியில் அதிகமாகவே இருந்தது.  அதனால் திருக்கேதீஸ்வரம் உள்ளான அளவுக்கு அதன் தோழமைக்கோவிலான இராமேஸ்வரம் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தது.

    திருக்கேதீஸ்வரத்தின் செழிப்பு வன்னித் தமிழர்களின் ஏற்றத்தாழ்வின்போது அதிகமாகவும், இந்தியத் தீபகற்கத்தின் ஏற்றத்தாழ்வின்போது மறைமுகமாவும் ஏற்றத்தாழ்வடைந்தது.

    சோழர்கள் பொலனருவையிலிருந்து இலங்கையில் ஆட்சிபுரிந்தபோது மாந்தோட்டமும், திருக்கேதீஸ்வரமும் தாற்காலிகமாக அவற்றின் புகழின் உச்சக்கட்டத்தை அடைந்தன. அது ராஜராஜேச்சுரம் என்றுகூட அழைக்கப்பட்டது. அரசியல்நிலை மாறியவுடன் அப்புகழ் உடனேயே மங்கிக் குன்றியது.

    முதலாம் சுந்தரபாண்டியனின் காலத்தில் [பொ.ஆ. 1251-80] அரசச்சலுகைபெற்ற திருக்கேதீஸ்வரம் கோவில் பாண்டியச் சிற்பக்கலையின்படி புதுப்பித்துக் கட்டப்பட்டது[4]. அதற்குச் சான்றுகள் தற்பொழுது கோவிலருகிலுள்ள கற்களின்வாயிலாகவும் கிடைக்கின்றன.

    சடையவர்மன் வீரபாண்டியனின் குடுமியாமலைக் கல்வெட்டுகள் அவன் இலங்கை மன்னனை வென்று திறைபெற்றதாகவும், கோணமலை[திரிகோணமலை]யில் பாண்டியரின் இரட்டைமீன் சின்னத்தைப் பொறித்ததாகவும் கூறுகின்றன.  கடற்படையில் வலிமையுள்ள பாண்டியனான அவன் திருகோணமலைக்குக் கடல்வழியாகச் சென்றிருந்தாலொழிய திருக்கேதீஸ்வரமும் அப்பொழுது அரசனின் கவனத்தைப் பெற்றிருக்கலாம்.

    போர்ச்சுகீசியர்கள் பொ.ஆ 1540ல் இலங்கையின் வடக்குக் கடற்கரைப்பக்கம் வந்தபோது திருக்கேதீஸ்வரம் ஒரு பெரிய இந்துசமய வழிபாட்டுத்தலமாகவே இருந்தது.[5]

    எமர்சன் டெனந்ட் [Emerson Tennent] கொடுத்துள்ள விவரிப்பைக் காண்போம்:

    போர்ச்சுகீசியர் நெடுங்காலமாக யாழ்ப்பாணத்தை அடையவிரும்பினாலும்அது செழிப்பான தெற்கிலிருக்கும் அவர்களது குடியிருப்பின் பாதுகாப்புக்காக அல்லஅவர்களது கடல்வணிகத்திற்காகவே.  அப்படியிருந்தும் 1617ல்தான் மலபார் அரசபரம்பரையைப் பதவிநீக்கம்செய்துஅதைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர்அதுவரை அவர்களது அரசியலுக்கு மசியாத அப்பகுதிஅப்பொழுது மதமாற்று நடவடிக்கைக்கு உற்சாகமளிக்கும் வாய்ப்பை அளித்தது

    1544ல் அவர்களின் முதல் படையெடுக்கும் முயற்சி தக்காணத்தின் தென்கடற்கரைப் பகுதிகளிலுள்ள இந்துக் கோவில்களைச் சூறையாடப் பொருத்தமாக அமைந்தது. [யாழ்ப்பாண]தீபகற்பத்தின் அரசரை அழைத்துபோர்ச்சுகலுக்குத் திறைசெலுத்தும் நாடாக ஆகாவிட்டால் [போர்ச்சுகலின்கொள்ளைக்காரக் கடற்படைத் தாக்குதலை எதிர்நோக்கவேண்டும் என்ற எச்சரிக்கை இடப்பட்டது.  அரசர் முன்னதைத் தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு நாலாயிரம் டக்கெட்டுகள் திறைசெலுத்த ஒப்புக்கொண்டார்.  அந்த ஆண்டிலேயே செயின்ட் ஃபிரான்சிஸ் சேவியரின் கட்டளைப்படி ரோமன் கத்தோலிக்க மதப்பிரசாரகர்களால் ஏராளமானவர் மன்னாரில் மதமாற்றம் செய்தனர்யாழ்ப்பாணப்பட்டினத்தின் அரசர் சமயமாற்றத்தை

    வேரறுக்கவேண்டி புதிதாக மதம்மாறிய அறுநூறுபேருக்கு மரணதண்டனை கொடுத்தார்.  ஆயினும்இந்தத் துன்மார்க்கம் அவரது அரண்மனையையே அடைந்தது.  அவரது மூத்தமகன் மதம் மாறினான்.  எனவேஅதன் விளைவாகஅவனுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.  அவரது இரண்டாம் மகன் தந்தையின் தாளாத சினத்திலிருந்து தப்பிக்க கோவாவுக்கு ஓடினான்.

    இந்தக் கடுமையான நடவடிக்கைளுக்கு எதிராக மெதுவாகபாதுகாப்பாக,  ஆனால் தீவிரமாகப் பழிவாங்குமாறு மூன்றாம் போப் ஜான் [போர்ச்சுகலின்இந்திய வைஸ்ராயுக்கு உத்தரவிட்டார்.  உடனேமன்னாரில் கிறித்தவர்களின்மீது அடக்குமுறை அடுத்தடுத்து நிகழ்வதாகவும்கோவாவுக்கு ஓடிவந்த அண்ணனின் அரசுரிமையை யாழ்ப்பாண அரசர் பறித்துக்கொண்டதாகவும் உள்ள இரண்டு முறையீடுகளின்படி நடவடிக்கையெடுக்கவேண்டிஇந்திய வைஸ்ராய் டான் கான்ஸ்டன்டீன் தெ பிரகான்சா [Don Constantine de Braganza] யாழ்ப்பாணத்திற்கு எதிராக மற்றொரு கடற்படையை 1560ல் அனுப்பினார்தெ கோட்டோ [De Couto] தனது இந்திய வரலாற்றின் எழுபதாவது பத்தாண்டில் இந்த புனிதப்போரைப்பற்றி பகட்டான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்

    வைஸ்ராயுடன் கப்பலில் பயணித்த கொச்சி பிஷப் தரையிறங்கியவுடன் ஒரு  வழிபாட்டிடத்தை நிறுவிநகரின்மீது தாக்குதலைத் துவங்குவதற்காகப் படையெடுத்துவந்த இராணுவத்தின் முன்னிலையில் தொழுகைநடத்திபோரில்   விழுவோருக்கு முழுமையான சலுகைகளையும்சிலுவைக்காக உயிர்துறப்போருக்கு முழுபாவமன்னிப்பும் வழங்கினார்

    தாக்குதல் வெற்றியடைந்தாலும் முடிவு மோசமாக இருந்தது.  பல பிரபுக்கள்   எதிரிகளின் பீரங்கிகளால் கொல்லப்பட்டனர்.   நகரம் வீழ்ந்தது, அரண்மனை எரிக்கப்பட்டது. அரசரும், அவரைச் சேர்ந்தவரும் வெற்றிகொண்டோருடன் உடன்படிக்கை செய்துகொள்ளவைக்கப்பட்டனர்.  கண்டியிலிருந்தும், கோட்டாவிலிருந்தும் ஆறாம் புவனேகாவின் மருமகனும், தர்மபாலாவின் தந்தையுமான திரிபுல பந்தாவால் கொண்டுவரப்பட்ட பொக்கிஷத்தின் மறைவிடத்தைத் தெரிவிக்கவேன்டுமென்றும், அதற்கும் மேலாக, எண்பதாயிரம் குருசேடோ பணமும் தரவேண்டுமென்றும், மன்னார் தீவை போர்ச்சுகீசியருக்கு விட்டுத்தரவண்டுமென்பதும் என்பதே அந்த உடன்படிக்கை.  உடனே மன்னார் தீவு ஆக்கிரமிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

    சிங்கள அரசர்களுக்கு உதவியாக போர்ச்சுகீசியருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக யாழ்ப்பாண அரசரைத் தண்டிக்கவேண்டி, 1591லும், 1604லும்கோவாவிலிருந்து புதிய படையெடுப்புகள் மேற்கொள்ளப்பப்பட்டன.  ஆனால்ஒவ்வொரு தடவையும் பயமுறுத்தல் அபாயத்தைத் தடுக்க வலிமையற்றவர் தானாகச் சரணடைந்தனர்ஆயினும்ஏற்கனவே யாழ்ப்பாணப் பகுதியைப் போர்ச்சுகலின்கீழ் கொண்டுவரும் திட்டமிருந்தாலும்அதை நிறைவேற்றத் தகுந்த தருணத்திற்காக அச்செயல் ஒத்திப்போடப்பட்டுவந்தது.

    “1617ல் கான்ஸ்டன்டைன் தெ சா நொரனாவின் [Constantine de Saa Norana] தலைமையில் ஒரு படை யாழ்ப்பாணத்தை முன்புசொல்லப்பட்ட ஒருமுகப்பட்ட காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கிக் கைப்பற்றியது.  அரசர் கைதுசெய்யப்பட்டு கோவாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டார்மலபார் இளவரசர்களில் கடைசியான அவரது மருமான் அவரது அரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டி ஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டில் சேர்ந்தார்.  அவரது சொத்துரிமை போர்ச்சுகலின் ஆட்சிப்பகுதியாக முறைப்படி இணைக்கப்பட்டது.

    எமர்சன் டெனன்ட்டால் தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்படாதிருந்தாலும், இந்த வரலாற்றுச் சூறாவழிச் சுழல் நிகழ்ச்சிகளான போர்ச்சுகீசியரியன் காலத்தில் திருக்கேதீஸ்வரம் ஒரு முக்கியமான பங்கை வகித்தது.

    தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர்.  சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.

    மன்னார்த்தீவு மக்களின் சமயமாற்றம் துவங்குவதற்குமுன்னரே திருக்கேதீஸ்வரம் கோவிலின் சூறையாடல் நிகழ்ந்துமுடிந்தது.  அதைப் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களே மன்னார் கோட்டையைக் கட்டப் பின்னர் உறுதுணையாகவிருந்தன.  இதைப் பழிவாங்க யாழ்ப்பாண மன்னர் எடுத்துக்கொண்ட வலுக்குறைந்த முயற்சிகளே படுகொலையாக பூதக்கண்ணாடிகொண்டு காட்டப்பட்டன.

    இதில் நாம் கருத்தில்கொள்ளவேண்டியது என்னவென்றால், திருக்கேதீஸ்வரத்தின் வீழ்ச்சியுடன் இலங்கையின் தமிழ் அரசுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு, தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.

    [திரிகோணமலையில் குடிகொண்டுள்ள] கோணேஸ்வரரின் பக்தனான இலங்கேஸ்வரன் இராவணனும் அவனது மாமனார் மயனும் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையான கோவிலைக் கட்டினார்கள் என்பது மரபு. இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பிச்செல்லும் வழியில் இராமேஸ்வரத்தில் சிவனுக்குக் கோவில்கட்டி வழிபட்ட இராமர், திருக்கேதீஸ்வரத்திலும் சிவபெருமானை வழிபட்டதாகப் புகழப்படுகிறது.

    மகாபாரதத்தின் நாயகனும், கிருஷ்ணனின் உறவினனும், சீடனுமான அருச்சுனன் தெற்கே தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது திருக்கேதீஸ்வரத்திற்கும் வருகைதந்தான் என்பது ஐதிகம்.  இந்த யாத்திரையின்போதுதான் அவன் மாந்தோட்டத்தையடுத்த பகுதியை ஆண்டுவந்த நாக இளவரசியான அல்லி அரசாணியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.  மன்னார்த்தீவை அடுத்து இலங்கை நிலப்பரப்பில் காணப்படும் இடிபாடுகள் அல்லியின் கோட்டையென்று குறிப்பிடப்படுகின்றன.

    பொது ஆண்டுகளுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பவுத்த இலக்கியங்கள் இவ்விடத்தை மஹாதித்த என்கின்றன. மரபையொட்டிச் சில கற்றறிவாளர் குறிப்பிடுவதைப்போல இராமர், அகத்தியர், அருச்சுனன் ஆகியோர் மாந்தோட்டத் துறைமுகத்தின்மூலம் கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தார்களென்றால், இளவரசன் விஜயனும்[6] அதேவழியில்தான் வந்திருக்கவேண்டும்.  அப்படியிருந்தால், விஜயனோடு வந்த உபதீசன் என்ற அந்தணப் பூசாரி வழிபாடு நடத்திய அங்கிருந்த சிவன்கோவில் திருக்கேதீஸ்வரத்தைத்தவிர வேறெதுவாகவும் இருக்கமுடியாது.

    யாழ்ப்பாணத்து டச்சு கவர்னருக்காக 1736ல் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் புலவரால் தயாரான [எழுதப்பட்ட] வரலாற்று மரபுகளின் பதிவான யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது:

    பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த    திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.

    ஒன்பது-பத்தாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மக்கள் குடியிருந்த பகுதிகளில் தமிழர்களின் மேலாண்மையை விவரிக்கும் ராஜ ரத்தினாகர என்ற சிங்கள நூல், சைவசமய முதல்வர்களின் காலத்திய மாந்தோட்டச் செழிப்பை ஒட்டியதாகவே உள்ளது.

    திருக்கேதீஸ்வரம் கோவிலை மீட்டெடுக்கும் [புணருத்தாரணம்] பணியின் முதல் முயற்சி மாபெரும் இந்துசமயச் சீர்திருத்தவாதியான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரால் செய்யப்பட்டது. ஆயினும், அக்காலத்துச் சைவர்களின் அக்கறையின்மையாலும், கிறிஸ்தவர்களின் எதிர்ப்பாலும் அவரது முயற்சி உடனே வெற்றியை எதிர்கொள்ளவில்லை.

    அவர் காலமடைந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருக்கேதீஸ்வரம் கோவிலின் தொன்மைப் புகழைப்பற்றி நிலையான பதிவைத் தனது அலுவலக அறிக்கையில் எழுதியிருந்த ஸர் வில்லியம் ட்வைமனால் 13, டிசம்பர் 1893ல் யாழ்ப்பாணச் சைவர்களால், யாழ்ப்பாணக் கச்சேரியில் [அரசு அலுவலகம்] நடத்திய ஏலத்தில், நாற்பது ஏக்கர் காட்டுநிலம் யாழ்ப்பாணச் சைவர்களால் வாங்கப்பட்டபோது அவரது கனவு நிறைவேறியது.

    எந்தவொரு புதுப்பிக்கும் வேலையும் செய்யப்படும்முன்பு இந்தப் பண்டைய கோவில் இருந்த நிலத்தின் நிலைபற்றிய பதிவு நவம்பர் 7, 1887ல் திருக்கேதீஸ்வரம்மஹாதிட்டமாதோட்டம் அல்லது மாந்தொட்டை[7], என்ற தலைப்பில் டபில்யூ. ஜே. பொவாக்கே [W. J. Boake] சமர்ப்பித்த கட்டுரையிலிருந்து திரட்டிக்கொள்ளலாம்.

    செதுக்கப்பட்ட சிலைகளின் சில துண்டுகள்உடைந்த ஓடுகள்செங்கல்கள்மட்பாண்டச் சில்லுகள் தவிர வேறெதுவும் இப்புராதன நகரின் நிலப்பகுதிக்குமேல் காணப்படவில்லை.  இந்நிலம் மட்டுமீறிப் பெரிதாக வளர்ந்தஅடர்த்தி குறைந்ததாழ்ந்த காடாகிவிட்டிருக்கிறதுசில தனக்காபவொப்பா மரங்கள்தாம் பெரிதாக வளர்ந்துள்ளன.  பழைய தெருக்கள் இருந்ததற்கான அடையாளமும்இரண்டுமூன்று கிணறுகளும் காணப்படுகின்றன.  அங்கிருந்த குன்றின் மையத்திற்குப் பக்கத்தில் ஏதோ ஒரு இடத்திலிருந்த எந்தவொரு செங்கல்கட்டிடத்தின் அடித்தளத்தின்மேல் நகரின் பெரும்பகுதி நின்றது என்று நம்பினேனோஅவை அரண்மனை என்று குறிப்பிடப்பட்டன; கோவிலின் வாசல் கிணற்றுக்கு அருகாமையில் இருந்ததென்று சொல்லப்பட்டது.

    [கட்டுரை சமர்ப்பித்தபோது] கூட்டத்திற்கு வந்திருந்த பி. இராமநாதன் [பிற்காலத்தில் ஸர் பொன்னம்பலம்] இந்த அறிக்கையின் ஒருபகுதிக்கு மறுப்பு தெரிவித்ததுடன், இவ்விடத்தின் இந்துசமய நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஒரு கருத்தையும் சேர்த்தார்.  மேலும், பழைய கட்டிடங்களின் இடம் உலகியல் சார்ந்த [secular] நகரின் பகுதியல்லவென்றும், கோவிலின் உடமையென்றும், அந்தப் பகுதியின் மக்கள் கோவிலின் அதிகாரிகள், பக்தர்கள், பணியாளர்கள் என்றும் சொன்னார்.  அப்பகுதியின் ஒரு குறிப்பிடத்தக்க தனித்தன்மை —  பொவாக்கேவும், முந்தைய பிரித்தானியப் பார்வையாளர்களும் கவனிக்கத்தவறியவை, கோட்டையென்று சொல்லப்பட்டதைச் சுற்றியிருந்த இரட்டை அகழிகள் — வெளித்தடுப்பு அரணாகக் கடல்நீரையும், உட்பாதுகாப்பாக நன்நீரையும் உள்ளடக்கி, செல்வச்செழிப்பான கோவிலின் உடமைகளுக்கு வலுவான பாதுகாப்பாக அமைந்தன என்று இப்பொழுது தெளிவாகிறது.

    கோவில்நிலத்திலிருந்த சோழர்கிணறு, போர்ச்சுகீசியர் காலத்துக்குமுன் வழிபாட்டிலிருந்த சிவலிங்கம், உட்கார்ந்திருக்கும் நந்தி, அப்போது மண்மூடியிருந்த கோவில் அடித்தளத்தின் அருகிலுள்ள பிள்ளையார் திருவுருவங்கள் வாய்ப்பளித்த தடயங்களிலிருந்து தரைமட்டமாக்கப்பட்ட தலைமைக் கோவிலின் மூலமனை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    இலங்கை இந்துக்களின் வேண்டுதலின்படி காசியிலிருந்து புகழ்பெற்ற சிவலிங்கம் ஒன்று திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே தற்பொழுது ஆதிமூலமாக வழிபடப்பட்டுவருவதாகவும் இராமேஸ்வரத்திலுள்ள பதிவுகள் சான்றாக உள்ளன.

    பண்டைய [கோவில் இருந்த] மிகச்சரியான நிலத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டு, 1903, ஜூன் 28ம் தேதியில் பிராணப்பிரதிஷ்டை [உயிரூட்டல்] செய்யப்பட்டது[8].

    தற்போதைய சுவாமி மற்றும் அம்பாளின் சன்னதிகள் முதல் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மன்னாரில் பணியாற்றிய இந்துப் பொது அலுவலர்களின் [public servants] தூண்டுதலால் மிகவும் பகட்டான அளவில் கட்டப்பட்டன. அவைகளும் காலப்போக்கில் சிதிலமடைந்தன.  அக்டோபர் 19, 1948ல் இந்துக்களால் கொழும்பில் ஒரு கூட்டத்தில் துவக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் கோவில் மறுநிர்மாணிப்புச் சங்கத்தின் [Thiruketheeswaram Temple Restoration Society] ஆதரவின்கீழ் புதுப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 1952ல் குடமுழுக்கும் [கும்பாபிஷேகம்] செய்விக்கப்பட்டது.

    இது தற்போதைக்கு மையச்சன்னதிகளில் பூசைகளும், வழிபாடுகளும் தடையின்றித் தொடர உதவும்போது, ஒன்பது பிரகார சன்னதிகள், ராஜகோபுரம், திருமதில், மற்ற பக்கமண்டபங்களின் புதுப்பிப்புப்பணிகள் நடந்தன.

    தென்னிந்தியாவில் கிட்டும் மிகச்சிறந்த சமய, [ஆகம]சிலைக்கலை வல்லுனர்களின் திறமையால் புதுக்கோவிலின் வரைபடமும், நில அமைப்புத் திட்டமும் மரபுசார்ந்த வழியில் உருவாக்கப்பட்டன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்குச் சுற்றுக்கட்டில் ஒரு உத்சவ மண்டபம் [வசந்த மண்டபம்] உடனிருக்கும், வெளிச்சுவற்றால் சூழப்பட்ட மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் இருக்கும்.  மாபெரும் பக்தர்திரளுக்கு இடங்கொடுக்கும்வகையில் வெளிச்சுவருக்கு வெளியே சுற்றிலும் அகலமான பகுதியில் இரதவீதி அமைந்திருக்கும்.  அதைச் சுற்றியுள்ள நிலங்களில் குறுக்குநெடுக்கான வீதிகள் பூங்காக்கள், பொழில்கள், தோப்புகள், மடங்கள், சத்திரங்கள், அர்ச்சகர், அடியார்கள், கோவில் பணியாளர்களுக்கான வீடுகள் இவற்றுக்கு ஏற்பாடளிக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    திட்ட அமைப்பில் குருகுலம், சமய மேற்படிப்புக்கான கல்லூரி, சாதுக்களுக்கான ஓய்விடம் இவற்றிற்கும் திட்த்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  குருகுலம் ஏற்கனவே உருவாகியிருக்கிறது.  கோவிலுக்குச் செல்லும் வழியில் அநாதை இல்லத்திற்கான இடவசதியுடன் மகளிர் நல்வாழ்வு மையம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது.

    நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

    இந்தக் கும்பாபிஷேகத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தி விநாயகர், சுப்பிரமணியர், நந்தீஸ்வரர் இவர்கள் உட்பிரகாரத்திலுள்ள தத்தம் சன்னதிகளில் நிறுவப்பட்டனர்.நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கைமீது ஐரோப்பியப் படையெடுப்புகளால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்துசமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட்கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது.

    ‘ஈ’ என்னும் இசைத்தொனிக்கு துல்லியமாச் சுரம்கூட்டிய, தூய தாமிரம்-காரீயக் கலப்பு உலோகத்தில் லண்டனில் நன்கு அறியப்பட்ட வார்ப்பகத்தில் வார்த்த, நான்கடி விட்டமுள்ள கோவில்மணி ஒன்று ஏற்கனவே கடல்வழியாகத் திருக்கேதீஸ்வர்த்திற்கு வந்துகொண்டிருக்கிறது.  அதன் எடை ஒரு டன், மூன்று குவார்ட்டர்கள், ஐம்பதுக்கு, ஐம்பதுக்கு ஐம்பது அங்குல வடிவமைந்தது.  அதன் மொத்த எடை இரண்டு டன் ஆகிறது.  தகுந்த மணிக்கூண்டும் கட்டப்பட்டுவருகிறது.

    1960ன் திருவெம்பாவுக்காக கடல்மட்டத்திற்கு எழுபத்தைந்தடி உயரத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் பலமைல்கள் வட்டாரத்திலிருக்கும் இந்துக்களை திருப்பள்ளியெழுச்சி பாடித்தொழுவதற்காக அழைத்தெழுப்யும் என நம்பப்படுகிறது.

    பத்துவருட இருப்பை நிறைவேற்றிய திருக்கேதீஸ்வரம் கோவில் புனரமைப்புச் சங்கம் அதிகமாகச்  என்பதை கோவிலுக்கு வருகைதந்தால்மட்டுமே ஒரு இந்து அடியாரால் உணரவியலும்.  யாத்திரிகர்களின் வசதிக்குத் தேவையானதை நிறைவேற்றும் பல மடங்களுக்கும், கோவிலின் வாயிற்படிக்கு நேராக வருவதற்கு நல்ல வண்டிவரக்கூடிய தார்ரோடும் உள்ளது. பாலாவி ஆற்றில் புனித நீராடுவதற்காக சிமிண்ட் படிகளுல்ல குளிக்கும் துறையும், அருகாமையில் மற்ற நோக்கத்திற்காக குழாய்த் தண்ணீர் வசதியும் உள்ளன.  அடியார்களின் அனைத்து அன்றாடத் தேவைகளை எதிர்கொள்ள மின்வசதி, தொலைபேசி இணைப்புள்ள துணை அஞ்சல் அலுவலகம், கடைகள், மன்னாரிலிருந்து அடிக்கடி பஸ் சேவை உள்ளன.

    அவரது சமயத்தின், பண்பாட்டின், மொழியின், இந்நாட்டில் நிலைத்துநிற்கும் சின்னமான திருக்கேதீஸ்வரத்திற்குத் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வருகைதருவது இலங்கையிலுள்ள ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமையாகும்.

    தொண்டர் நாள்தொறுந் துதிசெய் அருள்செய்கே தீச்சர மதுதானே!

    ***

    இக்கட்டுரை பிரதிலிபி வலையத்தில் ஆங்கில-தமிழ் மொழியாக்கப் போட்டியில் வெளிவந்திருக்கிறது.

    ***

    [1] இக்கட்டுரை சிலோன் பல்கலைக் கழகத்தில் இந்து சமயப் பகுதிக்காக எழுதப்பட்டது.

    [2]  பண்டு நால்வருக் கறமுறைத் தருளிப்பல் லுலகினி லுயிர்வாழ்க்கை

    கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்

    வண்டு பண் செயு மாமலர் போழில்மஞ்ஞை நட்முடு மாதோட்டந்

    தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தேச்சர் மதுதானே.

    — திருஞானசம்பந்தர்

    [3]  மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி

    மாவின்கனி தூங்கும்பொழின் மாதோட்டநன் நகரிற்

    பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்

    தேவன்னெனை யாள்வான்றிருக் கேதீசரத் தானே.

    — சுந்தரமூர்த்தி நாயனார்

    [4] சிதம்பரம் கோவில் கல்வெட்டுகளும் இதைத் தெரிவிக்கின்றன.

    [5] பொது ஆண்டு 1505ல் லொரென்சா த அல்மெய்டா [Lorenza de Almeyda] காலி[Galle]க்கு வந்தார்.  ஜூடாசின் மூன்றாவது வைஸ்ராயான லோப்பெஸ்  சுவாரெஸ் [Lopez Suarez] 1517ல் கொழும்புக்குப் படையெடுத்து வந்தார்.  லோப்பே தே பிரிட்டோ [Lope de Brito] 1520ல் மன்னாருக்கு அருகிலுள்ள அர்ரிபூ முத்துக்குளிக்கும் கரைக்கு வந்தார்.

    [6] பவுத்தநூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் விஜயனை இலங்கையின் முதல் அரசனாகக் குறிப்பிடுகின்றன.

    [7] Royal Asiatic Society Journal, Volume No. 35

    [8] திருவிழா விபரங்களுக்கு அத்தேதிய “யாழ்ப்பாண இந்து இசைப்பெட்டி”ச்  [Jaffna Hindu Organ] செய்தித்தாளைப் பார்க்கவும்.

    Share
  • கையாலாகாதவனாகிப்போனேன்! – 2

    ஒரு அரிசோனன்

    2.  மூக்குக்கண்ணாடி

     எனக்கு ஒன்பது வயதிலேயே கிட்டப்பார்வை வந்துவிட்டதால் மூக்குக்கண்ணாடி போடநேர்ந்தது. வகுப்பில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவது முதல் பெஞ்ச்சில் உட்கார்ந்தும் மங்கலாகத் தெரிந்ததால், பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து எழுத்த்துவங்கினேன்.  அவன் முதலில் அதை அனுமதித்தபோதிலும், தேர்வுகளில் என்னைப் பார்த்து அவன் எழுத நான் அனுமதிக்காததால், அதற்குமேல் எனக்கும் அனுமதி மறுத்துவிட்டான்.  தேர்வுவேறு, மற்றசமயம்வேறு என்று நான் பலவாறு எடுத்துரைத்தும் அவன் காதில் அந்த நியாயம் ஏற்வில்லை.

    அதுவும் நல்லதற்கே என்று பின்னால்தான் தெரிந்தது.  இல்லாவிட்டால் அதிகமான கிட்டப்பார்வை மிகவும் மோசமாகியிருக்கும்.

    அனுமதி மறுக்கப்பட்டதால், வேறுவழியின்றி, முதல்பெஞ்சிலிருந்து இறங்கித் தரையில் அமர்ந்து கரும்பலகையைப் பார்த்து எழுதத் துவங்கியபோதுதான் ஆசிரியர் என்னவென்று விசாரித்தார்.

    “அவன் பொட்டைக்கண்ணு சார்; அவனுக்குக் கண்ணு சரியாகத் தெரியாது!” என்று எனக்கு அனுமதிமறுத்த மாணவன் ஒரு பெரிய உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்து அறிவிப்பதுபோல — ஆசிரியருக்கு மட்டுமன்றி, வகுப்பிற்கும் உரத்தகுரலில் அறிவித்தான்.

    அன்றிலிருந்து சில ஆண்டுகள் ’பொட்டைக்கண்ணன்’ என்ற பட்டப்பெயர், நான் மூக்குக்கண்ணாடி அணிந்து சரியான பார்வையைப் பெற்றும்கூட என்னைத் தொடர்ந்துவந்தது.

    என் தாய்வழிப்பாட்டனாரை நன்கறிந்த எனது ஆசிரியர் என் கண்களைப்பற்றிய உண்மையைத்[!] தெரிவித்ததும், மதுரைக்கு அழைத்துச்சென்று — ஏனெனில் காரைக்குடியில் அப்பொழுது சிறந்த கண்மருத்துவர் இல்லை– கண்களைச் சோதித்துக் கண்ணாடி வாங்கித்தந்தார்கள்.

    கண்ணாடியைத் தேவையின்றிக் கழட்டக்கூடாது என்ற மருத்துவரின் பரிந்துரை என் நெஞ்சில் ஆழமாக்ப் பதிந்திருந்ததால், எனது மூக்குக்கண்ணாடி ஒருவகையில் எனக்குக் கவசகுண்டலமாகிவிட்டதென்றால் மிகையில்லை.

    வகுப்பிலேயே கண்ணாடியணிந்த மாணவன் நான் ஒருவன் என்பதால், நான் பலவிதச் சோதனைகளுக்குள்ளாக நேர்ந்தது. உடன்பயிலும் நண்பர்கள் என் பார்வையைச் சோதிக்கவேண்டி, கண்ணாடியுடனும், அது இல்லாமலும், அவர்கள் சுட்டும் கைவிரல்கள் எத்தனை என்ற பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டேன். அலுத்துவிட்டபடியால் அவற்றை மறுத்த எனக்கு, ‘சோடாபுட்டி’, ‘கோலிசோடா,’ ‘நாலுகண்ணன்’ போன்ற கௌரவப்பட்டங்களும் தாராளமாக வழங்கப்பட்டன.

    கண்ணாடியைக் கழட்டக்கூடாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியிருந்தது.  அதனால் விளையாட்டு பிரியடுகளில் பாடப்புத்தகத்தைப் படித்துப் பொழுதுபோக்கியதால், தேர்வில் மதிப்பெண்கள் உயர்ந்தன என்பது ஒரு நல்ல பக்கவிளைவு.

    இப்படியிருக்கையில் சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் எனது ஒன்றுவிட்ட மாமனின் திருமணம் நடந்ததால், மூன்று நாள்கள் அங்கு செல்லவேண்டிவந்தது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. யாரும் என்னைப் பட்டப்பெயர் சொல்லி அழைக்கமாட்டார்களென்ற மகிழ்வுடன், என் வயதொத்த எனது உறவுச் சிறார்களையும் சத்திக்கலாமென்ற மகிழ்வும் சேர்ந்துகொண்டது.

    முதல் நாளே திருமண நிகழ்ச்சிகள் ‘போர’டித்துவிட்டன.  கைக்கெட்டும் கூந்தல்பனை இலைகளைக் கிழித்து ஊதல் செய்து விளையாடுவதும், அதில் விமானம் செய்து மகிழ்வதற்கும், எங்கள் மாமா அதட்டல்போட்டு முற்றுவைத்தார்.  அத்தோடுநில்லாமல், எங்கள் கையிலிருந்த ஊதலையும், விமாங்களையும் பறித்துக் கிழித்தும் எறிந்துவிட்டார்.  பெரியவராயிற்றே!  எதிர்த்துப்பேசவியலாத ஒரு கையாலாகாத்தனம்.  அதுமட்டுமல்ல, எதிர்த்துப்பேசினால் கன்னத்தில் அறைவிழும், அதைத் தவிர்க்கவேண்டும் என்ற புத்திசாலித்தனமும்கூட…

    எனவே, என்னசெய்யலாம் என்று அலைந்து திரிந்துகொண்டிருந்த நானும், என் மாமன் மகனும் திருமணமண்டபத்திற்கு அருகாமையில், சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையோரத்தில் இருக்கும் சுமைதாங்கியில் ஏறி அமர்ந்து, இரண்டுபக்கமும் செல்லும் பஸ்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.

    அப்பொழுது ஒரு மூதாட்டியும், என் வயதொத்த ஒரு சிறுவனும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் அங்குவந்து நின்றனர்.

    எங்களைப் பார்த்த அச்சிறுவன் விடுவிடென்று சுமைதாங்கியில் ஏறி, என்னருகில் அமர்ந்துகொண்டான்.

    “எலே, முனிசாமி, பார்த்துடா;  கண்ணுதெரியாமக் காலைவச்சு விளுந்துடாதடா.” என்று கரிசனத்துடன் கூறினாள்.

    எனக்குத் திக்கென்றது.  என்னருகில் அமர்ந்த சிறுவனை ஏற இறங்கப் பார்த்தேன்.

    வழியவழிய எண்ணெய்தடவி வாரப்பட்ட சுருட்டைமயிர்; அதிகப்படியான எண்ணெய் நெற்றியில் இறங்கி புருவத்தைத் தொட்டு நின்றதோடுமட்டுமல்லாமல், அவன் பூசியிருந்த திருநீற்றையும் கருப்பாக்கியிருந்தது.  பெரிய கண்கள்; வெள்ளைவெளேரென்ற விழியின் நடுவில் பளிச்சிடும் கருவிழி…

    இவனுக்கா கண் தெரியவில்லை?!

    முனுசாமி என் கண்ணாடியைக் கூர்ந்து கவனித்தான்.

    அவன் மட்டுமல்ல, அந்த மூதாட்டியும் கவனித்தாள் என்பது இருவரும் ஒரே சமயத்தில், “ஏன் தம்பி, உனக்கு அதுக்குள்ள வெள்ளெழுத்து வந்துடுச்சா?  கண்ணாடி போட்டிருக்கியே?” இருவரும் கேட்ட கேள்வியிலிருந்து தெரிந்தது.

    சிறிது தயங்கிய நான், ‘வெள்ளெழுத்து இல்லை.  தூரத்திலே இருக்கறது மங்கலாத் தெரியும், அதனாலே கண்ணாடி போட்டிருக்கேன்,” என்று பதில் சொன்னேன்.

    ஏதோவொரு அதிசயத்தைக் கண்டதுபோல என் கண்ணாடியையே உற்றுநோக்கினான், முனுசாமி.

    “எனக்கும் தூரத்தில இருக்கறது மங்கலாத்தான் தெரியுது.  இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா நல்லாக் கண்ணு தெரியுமா?”

    முனுசாமியின் குரலில் ஏக்கம், நம்பிக்கை, வியப்பு கலந்திருந்தன.

    “ஆமாம், தெரியும்,” என்று சுருக்கமாகப் பதிலளித்தேன் நான்.  பள்ளி நண்பர்களின் ஏச்சுக்கும், எள்ளலுக்கும் பாத்திரமாகிவந்தபடியால், எனது கிட்டப்பார்வையைப்பற்றி அதிகம் பேசவிரும்புவதில்லை நான்.

    சிறிதுநேரம் ஒன்றுமே பேசாமல் முனுசாமி தன்னுடன் வந்த மூதாட்டியையும், என் கண்ணாடியையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.

    மிகவும் தணிந்த குரலில், “எனக்கு கண்ணு நல்லாத் தெரிஞ்சா எப்படி இருக்குமிண்டே தெரியாது.  உன்னோட கண்ணாடிய ஒரு நிமிசம் போட்டுப் பாக்கலாமா?” என்று கேட்டான்.

    எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

    என்னையும் அறியாமல் என் கைகள் கண்ணாடியைக் கழட்டச் சென்றன.

    “வேண்டாம்.  கண்ணாடியைக் கழட்டக்கூடாதுன்னு வீட்டிலே சொல்லியிருக்காங்க இல்லையா?  எனக்கே நீ ஒருதடவைகூட..” என்று எச்சரித்த எனது மாமன்மகனையும் பொருட்படுத்தாது என் கண்ணாடியை முனுசாமியிடம் நீட்டினேன்.  என்னையுமறியாமல் அவன் எனக்கு மிகவும் நெருங்கிவந்துவிட்டதைப்போன்ற ஒரு நேச உணர்வு..

    ஏதோவொரு மாயக்கண்ணாடியை வாங்குவதுபோன்ற எதிர்பார்ப்புடன், மிகவும் கவனமாக என்னிடமிருந்து மூக்குக்கண்ணாடியை வாங்கி, மெல்ல அதை அணிந்துகொண்டான் முனுசாமி.

    அவன் தலை நாலாபக்கமும் சுழன்றது.

    வாயெல்லாம் பல்லாக அவன் முகம் மலர்ந்தது.

    “ஆயா, கண்ணு நல்லாத் தெரியுது ஆயா!  ஒம் மூஞ்சிலே இவ்வளோ சுருக்கம் இருக்குன்னு இப்பத்தான் பாக்குறேன்.”  இதுவரை கண்டிராத மூதாட்டியின் முதுமையைக் கண்டதில் அவனுக்கு அவ்வளவு பரவசம்!

    “கோயில் கோவரத்திலே எத்தன பொம்மைக இருக்கு, ஆயா!  இதுவர அதுக இருக்குன்னுகூட எனக்குத் தெரியல.  இது மாயக்கண்ணாடிதான், ஆயா!”

    அவனது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது.

    “வேறென்ன தெரியுது?  கண்ணாடி இல்லாம எனக்கு இப்ப கோபுர பொம்மைகள் தெரியலே!”  என்று என் நிலைமையை அவர்களுக்கு அறிவித்து மகிழ்ந்தேன்.  என் இயலாமையை வெளியிடுவதில், அதைத் தயக்கமில்லாமல் பகிர்ந்துகொள்வதில் – அதைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஜீவனிடம் பகிர்ந்துகொள்வதில் கிடைத்த அந்த நிம்மதி, அந்த மகிழ்ச்சியை எண்ணும்போது இப்பொழுதும் இனிக்கிறது.

    “நெசமாவா சொல்லுறே, முனுசாமி?  இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கிட்டா, ஒனக்குக் கண்ணு நல்லாத் தெரியுதா?!”

    மூதாட்டி பெரிய சொத்து கிடைத்துவிட்டமாதிரி மகிழ்ந்தாள்.

    சிறிது நேரம் கழித்து, “முனுசாமி, இந்தத் தம்பிகிட்டே கண்ணாடியத் திருப்பிக் கொடுத்துடு.” என்று கட்டளை பிறக்கவே, மனமேயில்லாமல் என்னிடம் கண்ணாடியைத் திருப்பிக் கொடுத்தான் முனுசாமி.

    “இப்ப பழையபடியே ஆயிடுச்சு, ஆயா.  ஒம் முகத்துலே இருக்கற சுருக்கமும் தெரியல், கோயில் கோவரத்திலெ இருக்கற பொம்மகளும் தெரியலே.  எல்லாம் மாயமா மறஞ்சுபோச்சு.  இது மாயக்கண்ணாடிதான், ஆயா!  எனக்கு இந்தமாதிரி ஒரு கண்ணாடிய வாங்கிக் கொடு, ஆயா!”

    முனுசாமியின் குரலில் ஏக்கம் இருந்தது.

    “தம்பி, கொஞ்சம் கீளே எறங்கி வாரியா!” என்று என்னை அழைத்தாள் மூதாட்டி.

    மூவரும் சுமைதாங்கியைவிட்டுக் கீழிறங்கினோம்.

    three-kids

    “என்ன ஆயா?”  முனுசாமியின் ஆயா எனக்கும் ஆயா ஆகிவிட்டிருந்தாள்.

    “தம்பி, நீ இந்த ஊரா?”

    “இல்லை, ஆயா.  காரைக்குடி.”

    “இந்தப்பக்கம் எப்பிடி?”

    “எங்க சின்னமாமாவுக்குக் கல்யாணம்.  அதோ அந்த மண்டபத்திலதான் நடக்குது.  அதுக்குத்தான் நாங்க வந்தோம்.  என் பெரியமாமா மகனையும் அந்த ‘நாமி’ல் சேர்த்துக்கொண்டேன்.”

    “நாங்க நாலுகோட்டையிலேந்து வந்திருக்கோம்.”

    இது முனுசாமி.  நாலுகோட்டைக்குச் சோழபுரத்திலிருந்து சில மைல்கள் செல்லவேண்டும்.  எனது தந்தைவழிப்பாட்டியின் ஊர் அது என்று பின்னர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    “ஏந்தம்பி, இந்தக் கண்ணாடியைக் காரக்குடிலே வாங்கினியா?”

    “இல்லே, ஆயா.  மதுரைலே வாங்கினது.”

    “சிவசங்கை [சிவகங்கை] வரிச்சியூர் வளியா, பஸ் அங்கு போகுமிண்டு கேள்விப்பட்டிருக்கிறேன்.  மருதை போனதேயில்லை.” மூதாட்டி ஒரு ஏக்கத்துடன் இயம்பினாள்.

    “நான் சிவசங்கை போனதே இல்லை. நாலுகோட்டைவிட்டா, சோளவரம் — சோளவரம் விட்டா, நாலுகோட்டை.  அவ்வளவுதான்.”  முனுசாமி யாரும் கேட்காமலேயே அறிவித்தான்.

    “மருதையில எந்தக் கடயில தம்பி கண்ணாடிய வாங்கினே?”

    “முதல்ல கண்டாக்டர்கிட்ட கண்ணைச் சோதனைசெய்யனும்.  அதுக்கப்பறம் அவர் எப்படிப்பட்ட கண்ணாடிபோடனும்னு ஒரு சீட்டிலே எழுதிக்கொடுப்பார்.  அதை வாங்கிக்கிட்டுப்போயி, மூக்குக்கண்ணாடிக் கடையிலே கொடுத்து, கண்ணாடி வாங்கணும், ஆயா,” என்று நான் சொன்னதும், மூதாட்டியின் முகம் தொங்கிவிட்டது.

    “இதெல்லாம் நான் எப்பிடிச் செய்யமுடியும் தம்பி?  ஒரே ஒரு தபா நான் சிவசங்கை போயிருக்கேன்.  அவ்வளவுதான். அதுவும், பஸ்சிலே அடிபட்டுச் செத்த இவன் அப்பன், ஆயி பொணத்த எரிச்சுட்டுவர காஞ்சிரங்காடு வரைக்கும்தான்.  நானாவது, இவனைக் கூட்டிக்கிட்டு மருதை போகறதாவது..?”

    ஆற்றாமையில் அலுத்துக்கொண்டாள் அந்த மூதாட்டி.

    “ஆயா, இந்தக் கண்ணாடிதான் எனக்கு நல்லாத் தெரியுதே!  இத்த நம்ம வாங்கிக்கிட்டா, இந்தத்தம்பி வேற கண்ணாடி வாங்கிக்கலாமில்லே!”

    ஒரு எதிர்ப்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும், மூதாட்டியைக் கேட்டான் முனுசாமி.

    “நீபாட்டு கேட்டுப்புட்டேடா, நாம் எத்தைக் கொடுத்து தம்பிகிட்டே கண்ணாடியைக் கெக்குறது?”

    “அதுதான் நம்மகிட்ட இந்த ஆட்டுக்குட்டி இருக்குதுல்ல, ஆயா.  இத்தக் கொடுத்துட்டாப் போகுது…”

    இழுத்தான் முனுசாமி.

    “நீ சொல்லறது நல்லா இருக்குடா.  இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு.  இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக?  கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும்.  அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று பதிலுக்கு இழுத்தாள் மூதாட்டி.

    “சாயபுகிட்ட பணத்த வாங்கி இவுக கையிலே கொடுத்துட்டு, கண்ணாடிய வாங்கிக்கலாமில்ல..”  நப்பாசை விடவில்லை முனுச்சாமிக்கு.

    நான் எனது கண்ணாடியைக் கொடுக்கச் சம்மதித்துவிட்டதுபோலவும், அதை எப்படி பைசல்செய்வது என்பதுதான் பிரச்சினை என்பதுபோல இருந்தது அவர்கள் பேச்சு.

    என் மாமன்மகன் இப்பேச்சை இரசிக்கவில்லை என்பதுபோல, “வாடா, போகலாம்.  நம்மைத் தேடுவாங்க.’’ என்று என் கையைப்பற்றி இழுத்தான்.

    எனக்கோ இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை ஏற்பட்டது.  பாவம், முனுசாமி, நான் என் கண்ணாடியைத் தராவிட்டால் பார்வை இல்லாமலல்லவா கஷ்டப்படுவான்?  காலாகாலத்தில் கண்ணாடி போடாவிட்டால் பார்வை மோசமாகும் என்றல்லவா டாக்டர்வேறு சொல்லியிருந்தார்.  அதனால்தானே எனக்கு உடனே கண்ணாடி போட்டார்கள்!  நானாவது வேறு கண்ணாடி வாங்கிக்கொள்ளலாம்.  சீட்டு இருக்கிறது.  ஆனால், முனுசாமி…?

    என் நண்பர்கள் என்னைச் செய்த பழிப்புச்சொற்கள் அனைத்தும் என் காதில் தாமாகவே ஒலித்தன.  பாவம், முனுசாமியை மற்றவர்கள் எப்ப்டிப் பழிக்கிறார்களோ?

    இதற்குள் எனது பெரியமாமா ஒரு பக்கத்திலிருந்தும், லுங்கியும் தொப்பியும் அணிந்த ஒரு சாயபு இன்னொரு பக்கத்திலிருந்தும் வந்துசேர்ந்தார்கள்.

    “சாயபு, இந்த ஆட்டுக்குட்டிக்கான பணத்தத் தர்றீகளா, இந்தத் தம்பிக்குக் குடுக்கணும்..” முனுசாமியின் குரலில் அவசரம் இருந்தது.

    சாயபுவோ புரியாமல் விழித்தவாறு மூதாட்டியைப் பார்த்தார்.

    “என்னடா விவகாரம்?  இவங்க உனக்கு எதுக்குப் பணம் தரேன்னு சொல்லறாங்க?” என் மாமாவின் குரலில் அதட்டல் இருந்தது.

    “வாங்க ஐயா.” என்று என் மாமாவை வாயெல்லாம் பல்லாக வரவேற்ற முனுசாமி, “தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன்.  அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல.  சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிகப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறன்.” என்று உற்சாகமாக் என் மாமாவுக்கு விளக்கினான்.

    என் மாமாவின் புருவங்கள் உயர்ந்தன.

    “என்னடா இது?  கல்யாணத்துக்கு வந்தோம், தின்னோம், போனோம்னு இருக்காமக் கண்ணாடிய விக்கறேன்னு இது என்னடா கூத்து?  கண்ணாடியக் கொடுத்துட்டு நீ என்னடா கம்பை ஊணிக்கிண்டா போகப்போறே?”

    என் மாமா என்னைப் பார்த்துக் கத்தினார்.  அவருக்குக் கோபம்வந்தால் என்ன பேசுகிறோம், யார் மனம் புண்படுகிறது என்றே பார்க்கமாட்டார்.

    அவர் சொற்கள் என்னைச் சுட்டன. என் மனம் முனுசாமிக்காக உருகியது.  அவரை எதிர்த்துப்பேசத் திராணியின்றி நின்றேன்.

    சாயபு என் மாமாவைச் சமாதானப்படுத்தும்விதமாகப் பேசினார்.

    “நீங்க அமைதியா இருங்க, ஐயா.  இந்தக் கிளவி எனக்குப் பணம் தரணும்.  அதுக்குத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொடுத்து கடனைத்தீர்க்க வந்திருக்கு.  நல்ல , மானஸ்தமான பொம்பளைங்க ஐயா இது.  ஆனா அதிர்ஷ்டம்கெட்டது.  போன வருசம்தான் இதோட புள்ளையும், மருமகளும் சிவேங்கைச் சந்தைக்குப் போறபோது அவங்க மாட்டுவண்டிமேல பஸ்மோதி செத்துப்போனாங்க.  அப்ப வாங்கின கடன்.  மாசாமாசம் கொஞ்சம்கொஞ்சமா கடனைத் தீர்த்துக்கிட்டு வருது.   கடைசித் தவணையாத்தான் இந்த ஆட்டுக்குட்டியக் கொண்டுவந்திருக்கு.  என் மகளுக்கு நிக்கா வச்சுருக்கோம்.  அதுக்கு கறிபோட்டு விருந்து வைக்கணுமில்ல.  அதுதான்.  சரிங்க, வர்றேன்.”

    ஆட்டுக்குட்டியை இழுத்துக்கொண்டு சென்றார் அந்த சாயபு.

    முனுசாமியின் கண்பார்வையின் தீர்வையும் அவர் இழுத்துக்கொண்டு செல்லவதுபோலடத்தான் எனக்குப் பட்டது.  தான் பலியாகப் போவதை அறியாமல், அவர் பையிலிருந்து வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் முருங்கைக் கீரையைத் தின்றுகொண்டே அவர் பின்னால் சென்றது ஆட்டுக்குட்டி.

    நானும் அந்த ஆட்டுக்குட்டியைப்போல, முனுசாமியைத் திரும்பித்திரும்பிப் பார்த்துவாறே  என் கையாலாகாத்தனத்தை நொந்துகொண்டு என் மாமாவைத் தொடர்ந்து சென்றேன்.

    முனுசாமிக்கு என்னவாயிற்று, அவன் கிட்டப்பார்வைக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டானா, அல்லது பார்வை மிகவும் மோசமாகித் தவிக்கிறானா என்ற எண்ணம் அவ்வப்போது என்னுள் எழுங்கால் — அவனுக்கு எந்த உதவியும் செய்யாதுபோன என் கையாலாத்தனத்தை எண்ணியெண்ணி  என் நெஞ்சு கனத்து வலிக்கிறது.

    [கையாலாகாத்தனம் தொடரும்]

    மறுபகிர்வு நன்றி: தாரகை இணைய இதழ்

    Share
  • கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

    ஒரு அரிசோனன்

    வாயில்லா ஜீவன்

    நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பலதடவை கையாலாகாதவர்களாகி நின்றிருக்கிறோம்அந்தசில நிகழ்வுகள்நம் அடிமனத்தில் ஆழமாகப் புதைந்துபோனாலும், அவ்வப்போதுதிரும்பத்திரும்ப மேலெழுந்துவந்து நம்முள் ஒரு ஏக்கத்தை, நமது கையாலாகாத்தனத்தை நமக்குஉணர்த்தி, குற்ற உணர்வை அதிகமாக்கி நிற்கத்தான் செய்கின்றனஅப்படி அவை நமது கையாலாகாத்தனத்தை உணர்த்தும்போது, நமக்குள் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதையும், மீண்டும் நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா, கையாலாகாதவர்களாகிப்போகாமல் ஏதாவது செய்திருக்கமாட்டோமா என்றும் தோன்றும்சிறிது சிந்தித்தவுடன், நம்மால் அந்தச் சந்தர்ப்பத்தில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்க இயலும், ஏனெனில் வேறுவிதமாக நடந்துகொள்ளும் வலிமையோ, திறமையோ நம்மிடம் இருக்கவில்லை என்றும் நம்மைநாமே சமாதானம் செய்துகொள்வோம்.  இருப்பினும், அந்நிகழ்ச்சிகள் கொதிக்கும் நீரிலிருந்து கிளம்பும் குமிழிகளாக வருவதை நம்மால் தடுக்க இயலாது.

    என் வாழ்வில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை — என்னைக் கையாலாகாதவனாக ஆக்கிபச்சாதாபமடையவைத்திருக்கும் உண்மை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கும் அப்படி ஏதாவது நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தால் என்னைப்போல உங்களையும் பச்சாதாபப்படவைத்த, குற்ற உணர்வில் புழுங்கவைத்த அந்நிகழ்வுகள் மனிதவாழ்வின்இயற்கை என்றெண்ணி அமைதிகொள்ளுங்கள்

    … அம்மாதிரியான முதல் நிகழ்வு என் ஆறாம்வயதில் நிகழ்ந்தது.

    சைக்கிள் ரிம்மை ஒரு குச்சியால் தட்டிக்கொண்டு, உதடுகளிலிருந்து காற்றை வெளியேற்றி, கார் ஓடுவதுபோன்ற ஒரு சத்தத்தை உண்டாக்கியதாகக் கற்பனைசெய்துகொண்டு, சிலமுறை பார்த்து மயங்கிப்போன ‘ப்ளிமத் சேவாய்’ காரை ஓட்டும் பெருமையுடன், வீதியை வலம்வந்துகொண்டிருந்தேன் – கழுதைகூட பொதிசுமக்க மறுக்கும் புடைபுடைக்கும் வெய்யிலில்.

    என் கவனத்தைக் கவர்ந்தது நடுவீதியில் படுத்துக்கிடந்த அந்த மாடு.

    அது தனியாகப் படுத்திருந்தால், ஒருகணம்கூட அதற்குமேல் அந்த மாட்டைப் பார்த்திருக்கமாட்டேன். எனது ப்ளிமத் சேவாயை [அதுதான் என் சைக்கிள் ரிம்மை] ஓட்டிக்கொண்டு அந்த வாயில்லா ஜீவனைக் கடந்துசென்றிருப்பேன்.

    அந்த ‘வாயில்லா ஜீவன்’ கழுத்தில் கட்டப்பட்ட நுகத்தடியுடன், நுகத்தடி இணைக்கப்பட்ட வண்டியுடன் படுத்திருந்தது. அதன் அருகில் அதன் தோழனான இன்னொரு ‘வாயில்லா ஜீவன்’ கடனேயென்று நின்றுகொண்டிருந்தது.

    “சனியனே, எந்திரு.  நீ இப்பிடி சண்டித்தனம்செஞ்சா, சந்தைக்கு நான் எப்படிப் போகுறதிங்குறேன்?” என்று அந்த மாட்டை மாட்டடி அடித்துக்கொண்டிருந்தார் வண்டியோட்டி. அவரது கவலை அவருக்கு.

    வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் சுமை வைக்கோல் ஏற்றிவரும் இக்கால லாரிகளில் நிரம்பிவழிவதுபோல – ஆனால், சுமை வைக்கோல்போர் அல்ல – நிரம்பிவழிந்திருந்தது.

    நான்கு மாடுகளால்கூட அந்த வண்டியை இழுக்கமுடியாமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, இவ்வளவுதூரம் அந்த வண்டியை அந்த மாடுகள் இரண்டும் எப்படி இழுத்துவந்தன என்பதைப் பார்த்தால் வியப்பாகவே இருந்தது.

    வண்டியோட்டி அடித்தது போதாதென்று, மாட்டைப் பலமாக உதைத்து, அதன் வாலைத்தூக்கி, அதற்குக்கீழே இருக்கும் மென்மையான பாகத்தில் தார்க்குச்சியின் ஆணியால் இரண்டு – மூன்று முறை முழுபலத்துடன், நாக்கைத் துருத்திக்கொண்டு, ஆவேசத்துடன் குத்தினார்.

    அந்த இடங்களிலிருந்து செந்நிறக் குருதி கசிந்தது.

    என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை.  முறுக்குமீசையுடன், சிறிது சிவந்த கண்களுடன், தெற்றுப்பற்களுடன் ஐயனார்போல அமர்ந்திருந்த வண்டியோட்டியைப் பார்த்தால் எனக்குப்  பயமாகத்தான் இருந்தது.

    என்னையுமறியாமல் என் சைக்கிள் ரிம் கையைவிட்டு நழுவித் தரையில் விழுந்தது. செயலற்று நின்றேன்.

    “மாட்டை அடிக்காதீங்க ஐயா,” என்று கதறவேண்டும்போல இருந்தது.  பயத்தில் உதடுகள் ஒட்டிக்கொண்டதால் குரல் எழவில்லை.

    துயருறும் அந்த வாயில்லா ஜீவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆறுதல்சொல்ல என் உள்ளம் துடித்தது.

    ஆயினும், நான் செயலற்று நின்றேன்.

    அதன் கண்ணிலிருந்து கரியதாக நீர்பெருகித் தரையில் சொட்டியது. அப்படியும் இலேசாக அசைந்துகொடுத்ததே தவிர, அந்த மாடு எழுந்திருக்கவில்லை.  என்ன அலுப்போ, களைப்போ, அயர்ச்சியோ அதற்கு!

    உள்ளங்காலில் முள்குத்தினால் நம்மால் பொறுக்கவியலாது.  மென்மையான பின்பாகத்தில் இரத்தம்கசியக் குத்தப்பட்டும், துடிக்காமல் வெறுமனே அசைகிறதே அந்த வாயில்லா ஜீவன்?

    அது பொறுமையா, அல்லது, இப்படி அடியையும், உதையையும், குத்தலையும் தாங்கியதால் ஏற்பட்ட மரப்பா?

    அந்த மாட்டின், தாய், தந்தை, அக்கா இவற்றுடன் அந்த மாட்டைச் சம்பந்தப்படுத்திக் கண்டகண்ட கெட்டவார்த்தைகளால் திட்டியவாறே கீழே குதித்தார், வண்டியோட்டி.

    என்னைப் பார்த்தவுடன், “தம்பி, இங்கே உனக்கென்ன வேலை?  போ, போ!” என்று கடும்சொற்களால் அதட்டிவிட்டு, தொண்டையைச் செருமிக்கொண்டு, குனிந்து அந்த வாயில்லா ஜீவனின் இருகண்களிலும் வாயில் குதப்பிக்கொண்டிருந்த செக்கச்செவேலென்ற புகையிலைச் சாற்றை உமிழ்ந்தார்.

    என் கண்கள் இரண்டும் எரிந்தன.

    இதயத்தை யாரோ கசக்கிப்பிழிவதுபோல இருந்தது.  மூச்சுத் திணறியது.  அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன்.

    மாடு எழுந்தது.  தார்க்குச்சியால் அதைக் குத்தியவாறு விரட்டினார் வண்டியோட்டி.

    மாடு தள்ளாடியவாறே அடியெடுத்து வைத்தது.  வண்டி மெல்ல நகர்ந்தது.

    பிழியப்பிழிய அழுதேன் நான் – என் கையாலாகாத்தனத்தை எண்ணி.

    கிங்காங்கைப் புரட்டிப்போடும் தாராசிங்காக நான் இல்லையே என்றெண்ணி.

    இன்றும், எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் இந்நிகழ்வே என் கண்முன் வந்துநிற்கிறது.  என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    ஒருசில சமயம் நான் என்னை அந்த வாயில்லா ஜீவனைப்போல உணர்ந்து, அதுபட்ட வேதனையை அனுபவிக்கிறைன்.

    இது என் கையாலாகாத்தனத்திற்கு இறைவன் தொடர்ந்து அளித்துவரும் தண்டனையா?

     [கையாலாகாத்தனம் தொடரும்]

    மறுபகிர்வு நன்றி:  தாரகை இணைய இதழ்

    Share
  • அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம்

    ஒரு அரிசோனன்

     utsava-ganesha-2பிள்ளையார் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.  இந்நன்நாளைக் கணேச சதுர்த்தி, விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.  இந்தியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை அமெரிக்காவிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

    அப்படியிருக்கையில் முழுமுதற் கடவுளாக ஆனைமுகன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அது கொண்டாடப்படாமலிருக்குமா என்ன!  ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா பிரம்மோத்சவ

    மாகப் பதினோரு நாள்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கொண்டாடப்படுவதுபோல இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.

     

    . இவ்வாண்டும் இத்திருநாளைக் கொண்டாட ஒருமாதம் முன்னதாகவே ஏற்பாடுகள் துவங்கின. ஆலயத்தைச் சேர்ந்த பல தன்னார்வத் தொண்டர்கள் கூடி விழாவை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டம்தீட்டத் துவங்கினர்.

    பிரம்மோத்சவத்தைச் சீரும்சிறப்புமாக நடத்தவேண்டி, சமயக்குழு, உணவுக்குழு, நிதிக்குழு, செயற்குழு, பெண்டிர்குழு, தொடர்பியல்குழு என்று பல குழுக்கள் பிரிக்கப்பட்டு, அவற்றின் தலைவர்கள் இர்ண்டுமாதங்கள் முன்பிருந்தே வாராவாரம் கூடி, தத்தம் குழுக்களின் நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொண்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகளின் நிலைமைபற்றியும், உடனடித் தேவைகளைப் பற்றியும் கலந்துரையாடினார்கள்.  இவ்வுரையாடலில் கோவில் அர்ச்சகர்களும் கலந்துகொண்டு, ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.  தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் இந்த மூன்று மொழிகளிலும் பிரம்மோத்சவத்தின் சிறப்புபற்றி ஒவ்வொரு அர்ச்சகரும் விவரிக்கும் விழியங்கள் பதிவுசெய்யப்பட்டு, கோவிலின் முகநூலிலும், இணையதளத்திலும் வலையேற்றப்பட்டன.

    பிள்ளையார் என்றால் குழந்தைகளுக்குக் குஷிதானே!  அவர்களில்லாமல் பிள்ளையார் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடுவது?

    எனவே, “என் கணேசனைச் செய்வேன்” [Make my Ganesha] என்ற ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.  கோவில் தலைமைச் சிற்பி சண்முகநாதன் பிள்ளையார் செய்வதற்கென்று பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் திருவுருவத்துடன் சில திருவுருவங்களின் அச்சுகளைத் தயாரித்தார்.

    gc 12a.jpgகோவில் தன்னார்வலர்கள் ஃபீனிக்ஸ் பெருநகரில் பலவிடங்களில் கணேசனைச் செய்வோம் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு அழைத்துவந்தார்கள்.  குழந்தைகள் சிற்பிகளின் மேற்பார்வை/உதவியுடன் ஆனைமுகன் திருவுருவத்தைச் செய்தார்கள்.  பிள்ளையார் சதுர்த்தியன்று திருவுருவத்தை பாலகணபதி பூசைக்கோ, அல்லது விஸ்ர்ஜன நாளன்று நீரில் கரைக்கவோ கொணரும்படி பரிந்துரைக்கப்பட்டார்கள்.

    கிட்டத்தட்ட 1500 குழந்தைகள் ஆனைமுகனின் திருவுருவத்தை அன்புடன், ஆவலுடன், ஆசையுடன் செய்தார்கள்.

    gc15a.jpg
    காய்கறி அலங்கார மாலைகள்!

    ஒவ்வொரு ஆண்டும், ஆனைமுகனுக்கு விதம்விதமாக சிறப்பான அலங்காரம்செய்வது கோவில் வழக்கமாகும்.  அதைத்தொடர்ந்து, இம்முறை ஆனைமுகனுக்கு ஷாகாம்பரி [காய்கறி] அலங்காரம் செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.  அதற்காக நீண்ட நீலக்கத்தரிக்காய், வெண்டைக்காய், சிவப்பு/வெள்ளை உருளைக்கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பெருமுள்ளங்கி, உருண்டை த்தக்காளி, நீண்ட ரொமானோ தக்காளி, பூசணிக்காய், தர்பூசணிப் பழம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, அருகம்புல், வாழைப்பழம், ஆப்பிள், வாழைக்காய் முதலிய காய்கறிகளும், பழங்களும் வாங்கப்பட்டன.

    இவை பிள்ளையாரப்பனின் மீது ஏற்றப்பட்டு எடை அதிகமாகிவிடக்கூடாது என்பதால், அவற்றின் எடையைத் தாங்குவதற்காக தனித்து ஆதரவுக்கட்டுமானமும் செய்யப்பட்டது.

    மாலைகள் கடவுளர்களுக்காக ரோஜாப்பூ மாலைகளும், கதம்பச் சரங்களும் தமிழ்நாட்டிலிருந்து காய்ந்த பனி [dry ice] சுற்றிப் பாதுகாப்புடன் தருவிக்கப்பட்டன.  இதுமட்டுமன்றி, இக்காலத்தில் மல்லிகை, அலரி, செம்பருத்திபோன்ற மலர்கள் பூத்துக்குலுங்கும் என்பதால், பல அன்பர்கள் தங்கள்வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்களை உதிரியாகவும், மாலைகளாகவும் கொணர்ந்துசேர்த்தார்கள். இன்னும்பலர், கடைகளில் ஜவந்தி, ட்யூலிப், காரனேஷன்போன்ற மலர்க்கொத்துகளை ஆனைமுகனுக்கு அர்ப்பணிக்க ஆவலுடன் எடுத்துவந்தனர்.

    பிரம்மோத்சவத்திற்கு முதல்நாளே தேவையான பொருள்கள் எடுத்து அடுக்கிவைக்கப்பட்டன.  கலசங்களுக்காக மேடை அமைக்கப்பட்டது.  வேள்விக்கான பொருள்கள் சரிபார்த்து எடுத்துவைக்கப்பட்டன.

    தெர்மோகோலில் செய்யப்பட்டு, ஆண்டுக்கொருதடவை வலம்வரும் விஸ்வரூப கணபதி, அவருடைய இருப்பிடத்திலிருந்து யாகசாலை மேடைக்கு வந்துசேர்ந்து அலங்கரிக்கப்பட்டார்.  அலங்காரவிளக்குகள் பொருத்தப்பட்டன.  அதிகப்படி மக்கள் அமர்ந்து ஹோமத்தைக் கண்ணுருவதற்காகக் கூடாரமொன்று எழுப்பப்பட்டது.

    அன்னலட்சுமி ஹாலில் வரும் பக்தகோடிகளுக்கு அமுதளிப்பதற்காக, தொண்டர்குழாம் காய்கறிகளை நறுக்கிவைக்கத் துவங்கினர்.   தினத்தலைவர்கள் ஒன்றுகூடி, என்னென்ன படைத்து வழங்குவது என்று தீர்மானித்தனர்.

    செப்டம்பர் மூன்றாம் தேதியன்று பிரம்மோத்சவம் துவங்கியது.  அன்றையதினம், கிட்டத்தட்ட முந்நூறு பக்தர்கள் வருகை தந்தனர்.

    shakhambari ganesha.jpg
    காய்கறி அலங்காரம்

    அந்திக்கால பூசைமுடிந்தவுடன், அர்ச்சகர் ஜெயந்தீஸ்வர பட்டர் சமயத்தொண்டர்கள் உதவியுடன் ஆனைமுகனுக்கு காய்கறி, கனி, இலை அலங்காரத்தைத் துவங்கினார்.  அது இரவு பதினோறு மணிவரை நடந்து, அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு மீண்டும் ஆரம்பமாகி நிறைவுபெற்றது.  எந்தெந்தக் காயை, கனியை, இலையை எங்குவைத்தால் அழகுகூடும் என்று மனதிலேயே கணித்து, அதைக் கச்சிதமாக நிறைவேற்றியது, அர்ச்சகர் ஜெயந்தீஸ்வரனின் திறமைக்குச் சான்றாகவே இருந்தது.

    kalasa sthapanam.jpgபிள்ளையார் சதுர்த்தி நாளன்று [செப்டெம்பர் 4, ஞாயிறு] ஆலயத்து அர்ச்சகர் ஜெயந்தீஸ்வர பட்டர் தலைமையில் மற்ற இருவரும் சேர்ந்து கலசஸ்தாபன[குட நிறுவுதல்]த்தைச் செய்தபின்னர், அர்ச்சகர் அனில்குமார் சர்மா யாகசாலையில் மூலமந்திர வேள்வி[ஹோமம்]யைத் துவங்கினார்.  அவருக்கு அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலுவும், மற்ற சமயத் தொண்டர்களும் உதவி செய்தனர்.

    https://www.facebook.com/MahaGanapati/videos/1167966499890357/

     

     

    பஞ்சலோகத்தாலான உத்சவப் பிள்ளையாருக்குப் பலதிரவிய [அரிசி மாவு, மஞ்சள்பொடி, தேன், பால், தயிர், பழச்சாறு, பன்னீர், இளநீர், திருநீறு, சந்தனம்] அபிஷேகம் நடத்தப்பட்டது.  அச்சமயம் அதர்வ கணேச சீர்ஷமும், இதர வேதங்களும் ஓதப்பட்டன.  அபிஷேகத்திற்காக வந்த பால் வீணாகக்கூடாது என்பதால், அதுமட்டும் தனியாக சுத்தமான பாத்திரத்தில் சேகரித்து, ஆலய சமையலறைக்கு அனுப்பப்பட்டது.

    அலங்காரம் நடக்கும்போது, தேவாரம், திருவாசகம், ஔவையாரின் பிள்ளையார் அகவல் ஆகிய தீந்தமிழ்த் தோத்திரங்கள் ஓதப்பட்டன.  ஆனைமுகன்மீது பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன.

    அலங்கரிக்கப்பட்ட ஆனைமுகன் நான்முகன் ஓட்டுவதுபோன்று வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.  கிட்டத்தட்ட மூவாயிரம் எண்ணிக்கைகொண்ட அடியார்கள்கூட்டம் அலைமோதியது.  அடியார்கள் ஒன்றுகூடி தேரை ஆலயத்தைச்சுற்றி ஊர்வலமாக இழுத்துவந்தனர்.

    procession.jpg
    பிள்ளையார் பவனி

    “ஜெய் கணேசா!  கணபதி பாப்பா மோரியா!  கணேச சரணம், சரணம் கணேசா!” போன்ற கோஷங்கள் விண்ணே அதிருமாறு எழுந்தன.  உச்சியைப் பிளக்கும் அரிசோனா வெய்யிலையும் பொருட்படுத்தாது, அடியார்கள் ஆண், பெண், குழந்தை, முதியவர், இளையவர் பேதமில்லாது ஆனந்தக்கூத்தாடியவாறே, தேருக்கு முன்னாலும் பின்னாலும், சுற்றியும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

    வெய்யிலின் கொடுமையைத் தணிக்கவேண்டி ஆலயத்தொண்டர் குழாம் அனைவருக்கும் குடிதண்ணீர் போத்தல்களையும், நீர்மோரையும் வழங்கியவண்ணம் இருந்தனர்.  கோவிலின் நூற்றுக்கணக்கான கார்நிறுத்துமிடங்கள் போதாமல், தெருவோரத்தில் இருபுறமும் கார்களை வரிசையாக நிறுத்த, ஆலயத் தொண்டர்கள் ஆங்காங்கேநின்று போக்குவரத்தைக் கட்டுக்குள் வைத்தனர்.

    பிள்ளையாரும், பக்தர்கள் இழுத்துவந்த தேர் ஊர்வலத்தை ஏற்று, அருள் பாலித்து, ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தார்.

    bala ganapathi puja.jpg
    பாலகணபதி பூசை

    அனைவருக்கும், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.  அன்னலட்சுமி ஹாலில் அறுசுவை உண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி, இரவு உணவு இவற்றுக்கும் குறைவில்லை.

    மாலை ஆனைமுகன் திருவுருவத்தைக் களிமண்ணில் செய்த சிறார்கள் தங்கள் பெற்றோருடன்  பாலகணபதி பூசையில் கலந்துகொண்டனர்.  அர்ச்சகர் அனில்குமார் சர்மா சொல்லித்தரத்தர, சிறார்கள் தாங்கள் செய்த திருவுருவத்திற்கு மலர்களாலும், அட்சதையாலும், பூசைசெய்த அழகு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

    அதேசமயம், அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலு உத்சவப் பிள்ளையாருக்குப் பூசை செய்தார்.

    IMG-20160909-WA0008.jpg
    கணேசரைக் கரைக்கும் நீர்த்தொட்டி

    மறுநாள் திங்கட்கிழமை தொழிலாளர்தின விடுமுறை என்பதால் பிள்ளையார் சதுர்த்திக்கு வரமுடியாத அன்பர்களும், மீண்டும் ஆனைமுகனின் ஆழகைப் பருகி, அருள்வெள்ளத்தில் நீந்தித் திளைக்கவிரும்பியவர்களுமாக ஆயிரத்து நானூறு அடியார்கள் ஆலயத்திற்கு வந்தனர்.

    செப்டம்பர் 11, ஞாயிறன்று, விசர்ஜன் [கணபதியைக் கரைத்தல்] நடைபெற்றது.  இதற்காக நான்கடி உயரமும் பதினாறடி விட்டமும் உள்ள பெரிய பிளாஸ்டிக் நீச்சல் குளத்தில் நீர் நிரப்பப்பட்டது.

    இது ஆடிப்பாடி மகிழும் தினமாக அனுசரிக்கப்பட்டது.  ஆனைமுகனின்மீது அனைத்து மொழிகளிலுமுள்ள பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

    VR ganapathi.jpg
    பேருருவப் பிள்ளையார் [விஸ்வரூப கணப்தி]

    பேருருவப் பிள்ளையாருக்கு [விஸ்வரூப கணபதி] மலர்மாலை சூட்டி அலங்காரம்செய்யப்பட்டது.  ஏனெனில் ஆண்டுக்கொருமுறை அவர் பவனிவரும் தினமாயிற்றே அன்று!

    எட்டடிக்கும் அதிகமான உயரமுள்ள அவரை ஊர்வலமாகக் கொண்டுசெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன!  இருப்பினும், அதற்குச் சளைத்தவர்களா அவரது அடியார்கள்!

    அவர் பவனிவருவதற்கென்றே சிறப்பாக ஒரு டிரைய்லர் [trailer] அலங்கரிக்கப்பட்டு, அதை இழுத்துச் செல்ல ஒரு ஊர்தியும் தயாராகியது. அனைவரும் ஆடிப்பாடிக்களிக்கும் தினம் அதுவென்பதால், அப்படியொரு ஏற்பாடு!

    பேருருவப் பிள்ளையாரை அலங்கரித்த டிரெய்லரில் தலைமைச்சிற்பி சண்முகநாதனின் மேற்பார்வை, வழிநடத்தலுடன் பலபக்தர்கள் உற்சாகத்துடன் எழுந்தருளச்செய்தார்கள்.  ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்?  நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது.

    Heramba Ganesha. 1jpg.jpg
    ஹேரம்ப கணபதி அலங்காரம்

    ஊர்வலம் நிறைவேறியதும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார்.  அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்பட்ட புனிதக்கலசநீர் தொட்டியில் கலக்கப்பட்டவுடன், பிள்ளைகள் செய்த பிள்ளையாரின் திருவுருவங்கள் தொட்டிநீரில் விடப்பட்டன.

    ஹேரம்ப கணபதியாக சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆனைமுகனுக்கு அருச்சனை, ஆராதனை முடிந்தவுடன், வந்திருந்த ஆயிரத்தெண்ணூறு அடியவருக்கும் அமுதுவழங்கப்பட்டது.  மாலையில் கலாசிருஷ்டி பிரிவினர் சார்பில் ஆடலும் பாடலும் நடைபெற்றன.

    kalasa procession 1.jpg
    இறுதி நீராட்டு கலச ஊர்வலம்

    அடுத்த செவ்வாயன்று [செப்டம்பர் 13] வேள்விக்குப்பிறகு, முதலில் சிவபெருமானின் புனித நீராட்டலைத் தொடந்து, கோவிலுக்குள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனிதநீர்க்கலசநீராலும், பாலாலும் ஆனைமுகனுக்கு பிரம்மோத்சவ இறுதிமுழுக்கும் அலங்காரமும்  செய்யப்பட்டது.

    பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம் நிறைவுபெற்றது.  நூற்றுக்கும் மேலான இறைத்தொண்டர்களீன் உழைப்பு இனிது நிறைவேறி, ஆனைமுகனின் அருளைப் பெற்றது!

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்

    கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்

    துங்கக் கரிமுகத்துத் தூமணியே

    சங்கத் தமிழ்மூன்றும் நீ எனக்குத் தா.

    — ஔவையார்

    ஐந்து கரத்தனை யானை முகத்தனை

    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

    நந்தி மகத்தனை ஞானக் கொழுந்தினைப்

    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

         — திருமூலர்

    ***   ***   ***

    Share
  • தேவிதரிசனம்

    ஒரு அரிசோனன்

    என் கண்ணைப் பறித்தன அந்த பளபளக்கும் வான்நீலத் தாவணியும், கருநீலப் பட்டுப்பாவாடையும்.  அவற்றை அணிந்துவந்த அழகுதேவதை என் கண்களையும், கருத்தையும் தன்பால் கட்டிக் கவர்ந்திழுத்தாள்.  உடனே, என் கால்கள் தாமாகவே நின்றுபோயின.

    “டேய், கண்ணா, ஏண்டா சடன் பிரேக் போடறே?  இப்பவே பந்தி ஃபுல் ஆகறமாதிரி இருக்கு.  நீபாட்டு பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னா, சாப்பாட்டுக்கு ரெண்டாம் பந்திக்குக் காத்திருக்கவேண்டியதுதான்!” என்று என்னை இழுத்தான் என் வயதொத்த என் சின்னமாமன் ராஜு.

    “நீ போய் உக்கார்ந்து, எனக்கும் உன்பக்கத்துலே இடம் போட்டுடேண்டா, ராஜு!” என்று அவனை அனுப்பமுயன்றேன்.  ஒரே வயதொத்தவர்கள் என்பதால் ‘வாடா, போடா,’தான்;  மாமன், மருகன் என்ற பேதம் மறைந்து நட்பு நிறைந்துநின்றதே அதற்குக் காரணம்.

    “இங்கெ என்ன வெட்டிமுறிக்கற வேலை உனக்கு இருக்கு, கல்யாணச் சாப்பாட்டை ஒருகை பார்க்கறதைவிட?  சரி, இடம்போட்டுத் தொலைக்கறேன்.  நீ உன்னோட வெட்டிமுறிக்கற வேலையை முடிச்சுட்டே வந்துதொலை!” என்று பலவிதமான, எழுதக்கூடாத வார்த்தைகளால் என்னை அர்ச்சனை செய்து, எனக்கு ஆசிவழங்கியவாறே செல்லத்துவங்கியவனை மறுகணமே பின்தொடர்ந்தேன், “ராஜூ,  நில்லுடா, நானும் வரேன்,” என்றவாறே.

    என் நீலத்தேரும் பந்தியைநோக்கி நகர ஆரம்பித்ததே அதற்குக் காரணம்.

    அந்தத் தேர் அசைந்து அசைந்து செல்வதைப் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது, சில நாள்கள்முன்பு தமிழாசிரியர் நடத்திய கவிதைகளின் வரிகள்தான்!

    “இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க, வட்டில் சுமந்து மருங்கசைய…”

    அத்துடன், அம்பிகாபதி படத்தில் வந்த,

    “சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
    துற்றே அசையக் குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
    நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே!”

    என்ற பாடலையும் என் உதடுகள் தானாகவே முணுமுணுத்தன.

    என்னைத் திரும்பிப்பார்த்த என் மாமன் ராஜு, “உனக்கு அரணைப் புத்திடா, கண்ணா!  சித்தம்போக்கு சிவன்போக்குடா உனக்கு!  ஒழுங்கா சாப்பிட வந்துதொலை!  சமையல் வாசனை மூக்கைத் துளைக்குது.  வெங்காய சாம்பார் மணம் என்னை அப்பிடியே தூக்குது!” என்று உண்ணவிருக்கும் திருமணவிருந்தையே எண்ணி மகிழ்ந்தவாறே முன்சென்றான்.

    எனது பாடல் அவன் காதுகளில் விழவேயில்லை.  பசியினால் அவனது காதுகள் அடைத்துப்போயினவா, அல்லது, “வயிற்றுக் குணவு இல்லாதபோது செவிக்கும் சிறிது ஈயப்படும்” என்ற அவனது சித்தாந்தமா என்று நானறியேன்.

    அந்த நீலத்தேரின் நடையழகை, துவளும் இடையழமை இரசித்தவாறே நடந்தேன்.

    அழகு, அழகு கொள்ளையழகு.  மனதிற்குள்ளும், உடலுக்குள்ளும் ஏதோ ஓர் இனம்புரியாத கிளர்ச்சி.  அவள் நடக்க நடக்க, நெளிந்தாடும் பாம்பையொத்த குஞ்சலம் வைத்த பின்னல் என்னைக் கட்டியிழுதத்தைச் சொல்லவா, பக்கவாட்டில் அசையும் பின்னழகில் நான் கிறங்கி அதற்கேற்ப என் தலையை என்னையும் அறியாமல் ஆட்டி மகிழ்ந்ததைச் சொல்லவா, அலையலையாக வளைந்திருந்த கருங்குழலில் என் இரும்பு மனம் பழுக்கச் சிவந்து வளைந்ததைச் சொல்லவா?  என் மனம் என்னை விட்டுவிட்டு அவளுடன் நடைபயின்றது.

    கருங்குழலி என்பது ஆகுபெயர் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை” என்று தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் நினைக்காமலே என் நினைவுக்கு வந்து, இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டான அழகி இவள் என்ற எண்ணத்தை என் மனதில் இழையோடவிட்டது.

    அப்பொழுது எதிர்பாராவண்ணம் திரும்பிய நீலத்தேர் தன் முத்துப்பற்கள் தெரிய புன்னகை செய்தாள்.  நான் அங்கேயே ஏன் மயங்கிவிழவில்லை என்று எனக்கே தெரியவில்லை.

    நடுவில் சீரான, நேர்கோடான வகிடு, அதிலிருந்து இருபுறமும் வளைந்துவளைந்து செல்லும் கரிய கேசம் காதுகளைப் பாதி மூடியவண்ணம் பின்சென்று மறைந்தது.  மணிபதித்த நெற்றிச்சுட்டி, காதில் குண்டலங்கள் அவள் திரும்பியதால் ஆடிய ஆட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை.  அந்த ஆட்டத்தில் நான் அக்குண்டலங்களோடு ஊஞ்சலாடினேன்.

    சாயமே இல்லாமல் இலேசாகச் சிவந்திருந்த உதடுகளில் உள்ள ஈரப்பசையில் என் உள்ளம் அட்டையாக ஒட்டிக்கொண்டது.  இயற்கையாகவே சிவந்திருக்கும் உதடுகளை முதன்முறையாக அப்பொழுதுதான் பார்த்தேன்.  அதுவரை – உதடுகள் கடவுளால் உருவாக்கப்பட்டதற்குக் காரணம் – மண்டையோடுமாதிரி நமது பற்கள் மாதிரி வெளியே தெரியாமலிருக்கவும், பேசுவதற்காகவும், உண்ணுவதற்காகவும், நமது வாயைத் திறக்கவும், மூடவும் — அதற்குமேல் அவற்றைப்பற்றி சிந்திக்கவும் தேவையில்லாத உறுப்புகள் அவை என்பதைத்தவிர வேறெந்த எண்ணமும், என்னைப்பொருத்தவரை என் மனதில் தோன்றியதில்லை.

    ஆனால், முகத்திற்கு அழகுசேர்க்கும் — கண்களுக்கு இணையான — அவள் கண்களைப்பற்றி அடுத்தபடி சொல்லுகிறேன் – உள்ளத்தைக் கவ்வியிழுக்கும் உறுப்பு என்ற எண்ணம் முதன்முறையாக என்னிடம் எழுந்தது.

    அவள் என்னைப் பார்த்துத்தான் புன்னைகை செய்கிறாள், உடனே அவளருகில் செல்வோம் என்ற எனது ஆர்வத்திற்கு அணைபோட்டேன்.  அடுத்தகணம் அப்புன்னைகை எனக்கல்ல, என்னைத்தாண்டி ஓடி அவளருகில் சென்று அவள் தோளில் உரிமையுடன் கையைப்போட்டுக்கொண்ட அவளது தோழிக்குத்தான் என்றறிந்ததும், என் உற்சாகம் ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது.

    உடனே என்னையும் அறியாமல் ஒருவிதமான பொறாமை உணர்வும் தோன்றுவதை என்னால் தடுக்கமுடியவில்லை.

    “சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை,” என்று எப்பொழுதும் என்னை உயர்த்திப்பேசும் என் பாட்டியின் சொற்கள் என்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், பெண்ணாகப் பிறந்திருந்தால், அந்த நீலத்தேரின் அருகில் சென்று பேசியிருக்கலாமே, அதிலும், அவளின் தோழியாகப் பிறந்திருந்தால், அவளின் தோளில் உரிமையாகக் கையைப்போட்டு, அவளுடன் சென்றிருக்கலாமே என்ற பொறாமைகலந்த நப்பாசை ஒருகணநேரம் என்னுள் தோன்றுவதையும் என்னால் தடுக்க இயலவில்லை.

    “இங்கே உட்காரலாமாடா, கண்ணா?  இங்கேதான் முதல்ல பரிமாறுவாங்க.  எதுவும் விட்டுப்போகாம கிடைக்கும். என்ன, சரியா நான் சொல்றது?” என்று தனது உணவுப்பந்தி நுணுக்கத்தை எடுத்துக்காட்ட முயன்றான் என் மாமன் ராஜு.

    “இருடா ராஜு, இங்கே வேண்டாம்.” என்று என்னையும் அறியாமல் என்னிடமிருந்து பதில் வந்ததும், என்னை வியப்புடன் பார்த்தான் ராஜு.

    “என்னடா ஆச்சு கண்ணா, உனக்கு?  பித்துப் பிடிச்சுடுச்சா?  இந்த இடத்துக்கு என்ன குறைச்சலாம்? கொஞ்சநேரமா உன் போக்கு சரியாவே இல்லே!” என்று தன் அதிருப்தியைக் தெரிவித்துக்கொண்டான்.

    “அங்கே வாடா, போகலாம்,” என்று நீலத்தேர் — வேண்டாம், நீலக்குயில் என்று சொல்லலாமே இனிமேல் – அவள் உட்கார்ந்த இடத்தைநோக்கி விரைந்தேன்.  அவளும், அவள் தோழியும் அமர்ந்த இடத்திற்கு எதிரில் அமர்ந்தேன், அங்கு அமரமுற்பட்ட ஒரு முதியவரை முந்தித் தள்ளிக்கொண்டு.

    “ஏண்டாப்பா தம்பி, நான்தான் இங்கே உட்கார வரேன்னு பார்த்தும், சினிமாக் கொட்டகைக்கு டிக்கெட் வாங்கப்போறவன்மாதிரி இடிச்சுதள்ளிண்டு உட்காரறியே?” என்று முதியவர் கேட்டது என் காதில் விழவேயில்லை.  அந்த நீலக்குயில்தான் என்னில் நிறைந்திருந்தாள்.

    “வரவர இந்தக்காலப் பசங்களுக்கு மரியாதை மட்டு எதுவும் இல்லாமப்போச்சு!” என்று குறைப்பட்டுக்கொண்டவாறே நகர்ந்தார் அம்முதியவர்.

    என்னை என் நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சி தேவியின் தரிசனத்திலிருந்து தடுத்தது ஓருருவம்.  அதை என் இடதுகையால் விலக்க முற்பட்டேன்.

    பட்டென்று என்முதுகில் ஒரு அடி விழுந்தது.  நிமிர்ந்துபார்த்தேன்.  என் மாமன் ராஜு.

    “உன்னை நம்பி வந்தால் நீ சுப்பிரமணியசாமி மயில்வாகனத்தில் உக்கார்ந்தமாதிரி இங்கேவந்து உக்காந்திருக்கே!  எங்கேயும் இடமில்லே, நகருடா கொஞ்சம்,” என்றபடி என்னை தம் பிடித்து நகர்த்தி, தானும் என்னருகில் அமர்ந்தான்.  அதையும் நான் உணரவேயில்லை. என் மனதைக் கவர்ந்த தேவியின் தரிசனத்தில் மீண்டும் ஆழ்ந்தேன்.

    அவள் தன் தோழியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.  எதையோ சொல்லிவிட்டு, மறுதலிப்பதுபோலத் தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.  உதட்டைச் சுழித்துக்கொண்டாள்.  அப்பொழுது அவள் காதில் சுழன்றாடிய குண்டலங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன், நான் அவளது குண்டலங்களாக இல்லாதுபோனேனே என்று.

    அவளது கண்கள் – ஆகா, பால்கிண்ணத்தில் நீந்தும் கருவண்டுகளாக அவளது கருவிழிகள் இங்குமங்கும் அலைந்தன.  ஒருதரம் பார்த்தாலேபோதும், உடனே பார்த்தவரைத் தன்னிடம் ஈர்த்துக்கொண்டுவிடும் அகண்ட கருவிழிகள்! அவ்விழிகளைப் பார்த்து அக்கடைக்கண் அமுதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணச்செய்யும் கருணைததும்பும் விழிகள்.

    அப்படிப்பட்ட அவ்விழிகள், அவளையே அள்ளிப்பருகிக்கொண்டிருக்கும் என்மேல் வந்து ஒருகணம் நிலைத்தன.  அதில் ஒரு சிறுபகுதிநேரம் என் கண்களுடன் கலந்தன.  அப்பொழுது அக்கண்களில் தெரிந்தது நாணமா, அன்பா, பாசமா, எதிர்பாரா திடுக்கிட்ட உணர்வா – அந்த அரைக்கண நேரம் எனக்கு ஆயிரம் யுகங்களாக — அசையாமல் நின்றுவிட்ட காலத்தின் இறுதியாகவே என்னால் உணரப்பட்டது.  அந்த அரைக்கணம் என்வாழ்விலேயே மறக்க இயலாத அரைக்கணம்; என் நினைவைவிட்டே அகலாத அரைக்கணம்; என்றென்றும் என்னைவிட்டு நீங்காத அரைக்கணம்; என் துன்பம், இன்பம், கோபம், தாபம், மகிழ்வு, இகழ்வு இவையனைத்தையும் மறக்கடித்துப் பேரின்பத்தில் ஆழ்த்தி முழுகடிக்கும் அரைக்கணம்.

    அவளது இதழ்கள் பிரிந்து மலர்ந்தன.  உடனே நாணத்தில் அவள் தலைகவிழ்ந்தாள்.

    நான் இன்பவெள்ளத்தில் திளைத்துத் திக்குமுக்காடினேன்.

    சுர்ரென்று புறங்கையில் சூடுவைத்ததைப் போன்ற உணர்வு என்னை துன்பக்கரையில் கொண்டுசேர்த்தது.

    “ஏண்டா, கண்ணா!  இலையைக் கவனிக்காமல் என்ன பார்வை, இங்குமங்கும்?  இப்பவே, மனசை அலையவிட்டால், நீ எங்கே படிச்சு உருப்படறது?  கொதிக்கற சாம்பாரைக் கையில் ஊத்தினாலும் திரும்பாம என்ன பார்வை?  இலையைக் கவனிடா!  உன்னை வைத்து பாப்பா [என் அம்மா] எத்தனையோ மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறாள், அதை மண்கோட்டையாக்கிவிடாதே!” என்று எரிந்துவிழுந்தார். என் மூத்த மாமா முத்துராமலிங்கம்.  உறவினர் திருமணம் என்பதால், பரிமாறும் பொறுப்பையும் தானாக இழுத்துப் போட்டுக்கொண்டவர், தன்னைமறந்த என் நிலைமையைக் கவனித்திருக்கிறார்.

    திடுக்கிட்டு சுய உணர்வுக்கு வந்தேன்.  என் இனிய கனவை – பேரின்ப அனுபவத்தை –வித்தியாசமான என் முதல் உணர்வை – ஒருபெண்ணிடம் லயித்த எனது முதன்முதல் கன்னிக்காதல் உணர்வைக் கலைத்துவிட்ட பெரியமாமா அடுத்த இலைக்குமுன் அமர்ந்திருந்த என் சின்னமாமன் ராஜுவுக்கு பரிவுடன் சாம்பாரிலிருந்து காய்கறித்துண்டங்களை எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தார்.

    அதற்குமேல் எனக்கு உணவில் கவனம் செல்லவில்லை.  எழுந்துவிட்டேன்.

    அப்பொழுது அவள் என்னைப் பார்த்த பார்வை —  ஏன் எழுந்தாய் என்பது போலும் இருந்தது, இல்லாமலும் இருந்தது.  அந்த ஒருகணத்தில் “நானிருக்கப் பயமேன்?” என்று அருள்புரியும் தேவியின் கடைக்கண் பார்வையைபோலவும் இருந்தது.

    “ஏண்டா கண்ணா, எழுந்திட்டே?” என்று வினவிய என் சின்னமாமனிடம், “பசி தீந்து போயிட்டதுடா, ராஜு.  இனிமே எதுவும் வேணும்னு தோணலே!”  என்று என் நீலத்தேரை, நீலக்குயிலை, நீலாயதாட்சித் தேவியைத் திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.

    உள்ளம் கனத்தது.  அவளைத் திரும்பிப்பார்க்க என்மனதில் திராணியில்லை.  அவளது உருவம் என் நெஞ்சில் கற்சிற்பமாக காலம்காலத்திற்கும் அழியாதவண்ணம் செதுக்கப்பட்டதைமட்டுமே என்னால் உணரமுடிந்தது.  அவளை என் இறுதிமூச்சு உள்ளவரை மறக்கமுடியாது என்பதும் தெரிந்தது.  அதுவொரு சுகமான அனுபவமாகவும், என்னைப்பொருத்தமட்டில் ஒருகணத்தில் உலகையே புறட்டிப்போடவைத்த புத்துணர்ச்சியாகவும் இருந்தது.

    காதல் பக்தியாகப் பரவசமெடுத்தது.

    ஆண்டுகள் பல கழிந்துவிட்டன.  எத்தனையோ அழகிகளைக் கண்டுவிட்டேன்.  அவர்களின் முகம் என் நினைவில் இருப்பதில்லை.  அந்த நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சியின் – அவள் பெயர்கூட எனக்குத் தெரியாது — அதற்குப்பிறகு அவளை என்வாழ்வில் நான் சந்திக்கவும் இல்லை.  ஆயினும், ஒருசில நிமிடங்களே பார்த்த அவளது முகம், அவளது  திருவுருவம் காதல் ஓவியமாக, காதல்தெய்வமாக, அருள்பாலிக்கும் தேவியாக என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  அவளைப் பார்த்த நிகழ்வு என்னைப்பொருத்தவரையில் ஒரு தேவிதரிசனமாகவே நெஞ்சில் குடியிருக்கிறது — அவள் என்னுள், என் உயிரில், என் உணர்வில் ஒன்றிவிட்டாள்.  அவளைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எப்போதும் தோன்றியதே இல்லை.  ஏனெனில், என்னைப் பார்த்துப் புன்னகைசெய்த அரைக்கணத்தில் — என் கண்ணோடு கலந்த அந்த அரைக்கணத்தில் என்னுடன் ஒன்றாகிவிட்டாள்.

    என்னுடன், என்னுள்ளே இருப்பவளை நான் ஏன் வேறு இடத்தில் தேடவேண்டும்?

    நான் மனம்தளரும்போதெல்லாம் அவள் என்னுள் இருந்து என்னைத் தேற்றுகிறாள்.  என் மனவலிமை குன்றி நான் தடுமாறும் சமயத்தில் ஊன்றுகோலாக உருவெடுக்கிறாள்.  என்றுமே நான் தனிமையை உணராதவண்ணம் என் வாழ்க்கைத்தோழியாக வடிவெடுக்கிறாள்.  என் தாய் இறந்தவுடன் எனது தாயாகவேமாறி என்றும் தாயன்பு செலுத்துகிறாள்.

    சுருங்கச் சொன்னால் அவள் எனக்கு ஒரு தெய்வமாகவே தென்படுகிறாள்.

    அவள் எங்கு இருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை.  அரைக்கணத்தில் என்னுள் ஒரு நிறைவை நிலைநிறுத்திய அவள் சென்றவிடமெல்லாம் சிறப்பித்துவருவாள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    என் காதல்தெய்வத்திற்கு, என் தேவிக்கு என் வணக்கங்கள்!

    ***   ***   ***

    Share
  • தமிழ்[தாய்]மொழிக் கல்வி

    ஒரு அரிசோனன்

    mother child

    ஒரு குழந்தை தன் தாயின் கருப்பையிலிருக்கும்போதே தன் தாயிடமிருந்து மொழியைக் கற்கத் துவங்குகிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது[1].  முதலில் அழுவதையெ மொழியாகக் கொண்டிருக்கும் அம்மகவு, (more…)

    Share
  • இயற்கை அன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!!

    ஒரு அரிசோனன்

    tearddrops

    இயற்கையன்னையே!  போதுமம்மா உன் கண்ணீர்!

    தாங்கமுடியவில்லை சென்னையால்!

    நாங்கள் செய்தோம் பலதவறுகள்!

    அடைத்தோம் உன் ஊற்றுக்கண்களை!

    கட்டினோம் அதில் எங்கள் மண்கோட்டைகளை!

    கட்டினோம் மனக்கோட்டைகள் கோடிகோடி!

    உன் கண்ணீர்தான் பெருக்கெடுத்ததே எங்கள் நிலைகண்டு!

    நிறுத்தம்மா உன் கண்ணீரை!  போதுமம்மா உன்னழுகை!

    தாங்கமாட்டோம் நாங்கள் இனியுன் வேதனையை!

    திருந்துகிறோம், திருந்துகிறோமம்மா மதலைகள் நாங்கள்!

    வேண்டாமிவ் வழுகை உனக்கும்தான் இனிமேலும்,

    ஆனந்தக் கண்ணீரே போதுமம்மா எங்களுக்கு,

    அழிக்காதே எங்களைப்  பெருக்கிடுமிக் கண்ணீரால்!

    ***   ***   ***

    Share
  • செவ்வாயில் நீரோட்டம்!

    ஒரு அரிசோனன்

    உவர்நீர்க்கொடுகள்-செவ்வாய்செவ்வாய்-ஆய்வு விண்கலம் அனுப்பி, நாசா[NASA], ஜே.பி.எல்[JPL], யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா இணைந்து அசோசியேடட் பிரஸ் மூலமாக வெளியிடப்பட்ட, தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில் காணப்பட்ட கருமையான கோடுகள் உவர்நீர் ஓட்டத்தினால் ஏற்பட்ட தடங்களே என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

    பதினான்கு கோடிமைல்கள் தொலைவிலுள்ள செவ்வாய்க்கோளின் கடுங்குளிரால் உறைந்துபோன தரையில் இப்பொழுது தண்ணீர் நிறைகிறது.  அந்த கிரகத்தில் உவர்நீர் ஓடுவதற்கான வலுவான சான்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். செவ்வாயில் உயிரினங்கள் இருக்கலாமோ என்று ஆராய்ந்தறிய இது ஒரு முக்கியமான அடிப்படையாக அமைகிறது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட நேச்சர் ஜியோசயின்ஸ்[Nature Geoscience] என்னும் விஞ்ஞான இதழில் லுஜென்ர ஓஜ்ஹாவும், மேரிபெத் வில்ஹெல்மும், “நமக்குத்தெரிந்த உயிரினங்கள் வாழத் தண்ணீர் மிகவும் தேவையான ஒன்று.  செவ்வாயில் நீர் இருப்பதனால் வானுயிரியல், கனிம, நீரியல் விளைவுகள் ஏற்படுத்தும்;  எதிர்கால மனித ஆய்வுப் பயணங்களின் நிலமை மாறுதல் ஏற்படவும் வழிவகுக்கும்,” என்று எழுதியுள்ளார்கள்.

    மாபெரும் அறிவிப்பாக நாசாவினால் முழங்கப்படும் இது முற்றிலும் புதிதல்ல.  ஏனெனில் செவ்வாயில் தண்ணீரைப் பற்றிய ஆராய்ச்சி பல்லாண்டுகளாக விஞ்ஞானிகளின் கவனத்தைப் ஈர்த்திருக்கிறது.  பனி எரிமலைகளின் கண்டுபிடிப்பும் இவ்வாறே அவர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

    தொன்மையான் ஆற்றுப்படுகைகளில் உள்ள தடங்கள் மூலம் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் நிறைந்திருக்கலாம் என்று வானுயிர் வல்லுனர்கள் ஊகித்துவந்திருக்கிறார்கள்.  நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேறும் சகதியுமான, பழமையான பெருங்கடல்கள் அங்கு இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    உவர்நீர்க்கொடுகள்-செவ்வாய் 2செவ்வாயில் மேற்பரப்பில் வளைந்து நெளிந்து காணப்படும் அமைப்புகள் அங்கு மிகமிகப் பழங்காலத்தில், நெடுங்காலமாகத் தண்ணீர் ஓடியிருக்கலாம் என்பதையே ஊகிக்கவைக்கிறது.  குறைந்தபட்சம் பாக்டீரியா, இன்னும் எளிமையான உயிரினங்கள் வாழும் அளவுக்குத் தண்ணீர் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    தண்ணீர் ஏதோ ஒரு வடிவத்தில் செவ்வாயில் இன்னும் இருக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளில் தெளிவாகியது.  அது அதிக அளவில், நிலத்தில் பனிப்படிமங்களாகவோ, துருவங்களுக்கருகே பெரிய பனிக்கட்டி ஆறாகவோ [glacier], விண்கல் பள்ளங்களிலும், மலை இடுக்குகளிலும் பெரிய பனிக்கட்டிப் பாளங்களாகவோ இருக்கலாம் என்றே எண்ணப்பட்டது.  உயிரனமில்லாத, ஒன்றுமே நடக்காத, வரண்டதொரு கோள் செவ்வாய் என்று இதுகாறும் நினைக்கப்பட்டுவந்த முன்னுதாரணம், “செவ்வாய் இன்னும் நீரினால் மாற்றியமைக்கப்பட்டுவரும் ஓர் உலகமே,” என்ற மாற்றத்தை அடைந்தததற்குக் காரணம், அங்கு தண்ணீர் இருக்கிறது என்ற அறிவே.

    செவ்வாயில் உயிர் தோன்றியிருந்தால், அது இன்னும் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற கருத்தை செவ்வாய் ஆய்வுத் திட்டப் பகுப்பாய்வுக் குழு [Mars Exploration Program Analysis Group] முன்வைக்கிறது.

    இரண்டாண்டுகளுக்கு முன்னர், 2013ல் நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற விஞ்ஞானப் பத்திர்கையில் வெளிவந்த கட்டுரையில் செவ்வாயின் நில வடிவமைப்பு கோள்நடுக்கோட்டின் அருகில் வியப்புக்கும் அதிகமான அளவு உவர்நீர் இருக்கிறது என்ற கருத்தை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். செப்டெம்பர், 2015ல் விடப்பட்ட அறிக்கையும் அதையே உறுதிசெய்கிறது.

    நாசா தலைமையகத்தில் நடந்த ஒரு செய்திக் கருத்தரங்கில், அதன் கோள் அறிவியல் இயக்குனர் [director of planetary science] ஜிம் கிரீன், “கடந்த காலத்தில் நாம் நினைத்துவந்ததைப்போல செவ்வாய் ஒரு வரண்ட கோள் அல்ல,” என்றார்.

    இதற்குமுன்னர் செவ்வாயில் நீரோட்டம் இருக்கிறது என்பது சூழ்நிலைச் சான்றாகவே {based on circumstancial evidence}வரையறுக்கப்பட்டது.

    புதிதாகக் கிடைத்த நிலவடிமைப்பை நிறப்பிறிகைத் தரவுகள்மூலம் ஆராய்ந்து, செவ்வாயில் நீருள்ள உப்புகள் இருப்பதைக் கண்டார்கள்.  இது பருவகால நீரோட்டமாகவிருக்கலாமென்று எண்ணவைத்தது.

    கடந்த அறிக்கையில், “நிறப்பிரிவு உள்வாங்குமுறையுடன் மிகவும் ஒத்துப்போகும் — எங்களால் கண்டுபிடிக்கப்பட  நீருள்ள உப்புகள் — மக்னீசியம் பெர்குளோரேட், மக்னீசியம் குளோரேட், சோடியம் பெர்குளோரெட் ஆகும்,” என்ற விஞ்ஞானிகள், “செவ்வாயில் காணப்படும் சாய்வுகொடுகள், அங்கு ஒரேகாலத்தில் நடக்கும் நீரோட்டத்தின் விளைவே என்பதை எங்களுடைய கண்டுபிடிப்புகள் உறுதிசெய்கின்றன,” என்றும் எழுதியுள்ளார்கள்.

    அங்கு காணப்படுவது உவர்நீர், நல்நீர் அல்ல என்று நம்பப்படுவதும் ஒரு உற்சாகத்தைத் தரும் ஒன்றேயாகும்.  அந்த உவர்நீர் உயிரினம் இருக்கக் கிட்டத்தட்ட துணையாகும் என்றே சுட்டுகிறது.

    “இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாயின் இந்த தன்னிகரில்லாத பகுதியில் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளவேண்டியதும் மேலும் வானஉயிரினவியல் இயல்பாய்வு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது,” என்று அந்த அறிக்கை சொல்லுகிறது.

    எனவே, இக்கண்டுபிடிப்பு செவ்வாயைப் பற்றிய பெரிய கேள்வி ஒன்றுக்கு விடையளித்தாலும், மற்றபல கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.

    ஒருகாலத்தில் செவ்வாயில் மேகங்கள், பனிப்போர்வையால் மூடப்பட்ட மலைத்தொடர்கள், நல்நீர் ஏரிகள்  இவற்றுடன் ஒரு பெருங்கடலும் இருந்தது.  அத்தனை தண்ணீரும் செவ்வாயின் காற்றுமண்டலம் மெலிந்தவுடன் காலம் செல்லச்செல்ல சிதறடிக்கப்பட்டது.  அது ஏன் நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் பலவிதமான விளக்கம் அளித்துவருகிறார்கள்.

    அங்கிருக்கும் உவர்நீரில் எந்த அளவு உப்பு இருக்கிறது, அது எவ்வளவு குளிர்ந்ததாக இருக்கிறது என்று ஆராயவும், அத்தண்ணீர் செவ்வாயின் உயிரினங்களை மட்டும் வாழவைக்கிறதா என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அங்கு பயணிக்கும் மனிதர்களுக்கு ஒரு நீராதாரமாக அமையுமா என்றும் உறுதிசெய்யவும் விரும்புகிறார்கள்.

    ஜான் மேசி கிரன்ஸ்ஃபெல்டு என்ற இயற்பியல்துறை வல்லுநர் [physicist] சமீபத்தில் நடந்த  செய்தியாளர் கருத்தரங்கில் இவ்வாறு கூறினார்: “பூமியிலிருந்து வேறொரு இடத்திலுள்ள இன்னும் இருந்துவருகின்ற இயற்பியல் வளமுள்ள இருப்பிடமாகவே செவ்வாய் தோன்றுகிறது.  அங்கு அதற்கான வளங்கள் உள்ளன.”

    ***

    கட்டுரை/படங்கள் உதவி:

    Water in Mars, by Adiranne La France, The Atlantic Magazine, September 28, 2015

    http://www.msn.com/en-us/news/technology/water-is-flowing-on-mars/ar-AAeSOCo?ocid=spartandhp

    Share
  • வினோதமான விமானம், ‘பெலுகா’!

    பென் முஸ்தபா, யுஎஸ்ஏ டுடே, ஜூலை17, 2015

    தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்

    beluga 1பிலாக்னக், பிரான்ஸ் —  அந்த விமானம் அனைவரின் தலையையும் திரும்ப வைக்கிறது.  அதைப்பார்த்தால் பெலுகா என்ற வகையான திமிங்கிலததைப்போல உள்ள அதைப் பார்த்தவுடனேயே, விமான ஆர்வலர்கள் ‘அதன் பட்டப்பெயரான ‘பெலுகா’ என்று தெரிந்துகொள்கிறார்கள்.  எது எப்படியிருந்தாலும் உலகத்திலேயே மிகவும் வினோதமான விமானம் அது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

    அதற்கு இருபது வயது ஆகிறது.

    பெலுகா என்று அதைச் செல்லமாக அழைத்தாலும்,, அதற்குக் கொடுத்த பெயர் ஏர்பஸ் ஏ300-600எஸ்டி என்பதுதான்.  199௦ வாக்கில் சூப்பர் கப்பி என்ற பெயருள்ள வேறொரு சரக்கு விமானத்திற்குப் பதிலாக இவ்விமானம் பயன்படுத்தப்பட்டபோது இதை சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்று அழைத்தார்கள்.beluga 6

    நாள்கள் செல்லச்செல்ல, திமிங்கிலத்தை ஒத்திருக்கும் அதை [A300-600ST] விமானக்கம்பெனி சூட்டிய பெயரால் அழைக்காமல், திமிங்கில வகையான ‘பெலுகா’ என்றே அழைக்க ஆரம்பித்தார்கள்.

    beluga 5விமானங்கள் தயாரிக்கும் ஏர்பஸ் நிறுவனம் இந்த விமானத்தை விமானங்களையும், பெரிய பாகங்களையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்ல உபயோகப்படுத்துகிறது.

    விமானங்களின் மிகப்பெரிய பாகங்களை அவை உற்பத்தி செய்யப்படும் இடங்களிலிருந்து ஒன்றிணைக்கப்படும் இடங்களுக்குக் கொண்டுசெல்ல ஐரோப்பிய விமான நிறுவனம் ஏர்பஸ்ஸுக்கு இவ்விமானம் உதவுகிறது.

    beluga 4

    அகலமான A340 விமானத்தின் இறக்கைகளைத் தன்னுள் வைத்துக் கொண்டுசெல்ல வல்லது பெலுகா.  ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய அகலமான விமானம் A350ன் குழாய் உடல் முழுவதையும் விழுங்கிக் கபளீகரம் செய்துவிட்டு, வேறொரு இடத்தில் துப்பவள்ளது இவ்விமானம் என்றால் இது எவ்வளவு பெரியது என்று நாம் உணர்ந்துகொள்ளலாம்.

    இவ்வளவு பெரிய ராட்சதப் பாகங்களை வேறெந்த விமானங்களாலும் கொண்டு செல்ல இயலாது.  ஏர்பஸ் நிறுவனம் தனது சரக்கு போக்குவரத்து கிளை நிறுவனம் மூலம் பெலுகாவை மற்ற நிருவனகளும் உபயோகித்துக்கொள்ள வாடகைக்கு விடுகிறது.beluga 2

    A300 விமானத்தின் மேல் பாகத்தை வெட்டி எறிந்துவிட்டு, குமிழிபோன்ற பெரிய மேல்பாகத்தை வெட்டப்பட்ட விமானத்தின் கீழ்ப்பகுதியுடன் இணைத்து பெலுகா வடிவமைக்கப்பட்டது.  தற்பொழுது A300 விமானங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

    பெலுகா தனது இருபதாவது பிறந்தநாளை 2௦14ல் கொண்டாடியது.  இவ்வளவு பெரிய பெலுகாவிற்கு பீமன்போல ஒரு தம்பியை உண்டாக்க ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.  எப்படி என்கிறீர்களா?

    ஊகித்து விட்டீர்களா!

    dreamlift 2dreamlif 3

    உங்கள் ஊகம் சரிதான்!  A300ஐவிடப் பெரிதான A330 விமானத்தை வெட்டி ஒட்டி, 2௦19வாக்கில் பெலுகா எக்ஸ்எல்— என்ற விமானத்தைச் செய்யப்போகிறார்களாம்!

    ஏர்பஸ் இவ்வளவு செய்யும்பொது அதன் போட்டி நிறுவனமான் போயிங் சும்மா இருக்குமா?  போயிங்கும் இம்மாதிரி வேலைக்கென —  ராட்சத பாகங்களைக் கொண்டுசெல்வதற்கென 747 ஜம்போ விமானத்தை மாற்றி ஒரு விமானம் வடிவமைத்துள்ளது.  அவ்விமானம் போயிங்கின் 787 டிரீம்லைனர் விமானத்தின் பாகங்களைத் தூக்கிச் செல்ல உதவியது.  எனவே, அவ்விமானத்திற்கு “டிரீம்லிஃப்டர்”, அதாவது “கனவுதூக்கி” என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்துள்ளது.

    ***

    Share
  • மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் — 4

    ஒரு அரிசோனன்

    நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்;  எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும்.  மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.  குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட.  மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!

    அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!

    அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…

    mu10

    ஸ்வப்னஸ்தா2னஸ்தைஜஸ உகாரோ த்3விதீயா மாத்ரோத்கர்ஷாது34யத்வாத்3வோத்கர்ஷதி ஹ வை ஞானஸந்ததிம் ஸமானஸ்ச ப4வதி நாஸ்யாப்3ரஹ்மவித்குலே ப4வதி ய ஏவம் வேத3||                                                          —  10

    கனவு நிலையில் இருக்கும் தைஜஸன் இரண்டாம் ஒலியான [எழுத்தான] ‘உ’காரமாக உயர்ந்த நிலையிலும், இடைநிலையிலுமே இருக்கிறான்.  யார் இவ்வாறு அறிகிறானோ அவன் ஞான வழிமரபை உயர்த்துகிறான்.  சமமானவனாகவும் ஆகிறான்.   அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார்.        – 10

     பதவுரை: ஸ்வப்னஸ்தான: கனவுநிலையில் இருக்கும்; தைஜஸ:தைஜஸன்; த்விதீயா மாத்ரா – இரண்டாம் ஒலியான [எழுத்தான];  உகார: – உகாரமாக [அ என்னும் ஒலியாக]; உத்கர்ஷாது – உயர்ந்தவனாகவும்; உபயத்வாது ஹ வை  – இடையில் இருப்பவனாக்கவுமே இருக்கிறான்; ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஞான சந்ததிம் – ஞானவழி மரபை; உத்கர்ஷதி – உயர்த்துகிறான்; ஸமான: ’ச – சமமானவனாகவும்; 4வதி –  ஆகிறான்;  அஸ்ய குலே – அவனது வழித்தோன்றல்களில்; அ ப்ரஹ்மவித் – பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் ; 4வதி –  இருப்பதில்லை..

    விளக்கம்:  இரண்டாம் ஒலியான ‘உ’காரமானது உயர்ந்தவனும்,, இடைப்பட்டவனுமான ஆத்மனின் இரண்டாம் பகுதியான தைஜஸன் என்று உபநிஷத் உரைக்கிறது.

    அத்துடன் இவ்வுண்மையை உணர்ந்து அறிபவன் ஞானவழி மரபை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, அனைவருக்கும் சமமானவன், என்றும் சொல்கிறது.

    சமமானவர் என்றால் யார் என்று பார்ப்போம்.

    சமம் என்றால் உயரத்திலா, எடையிலா, நிறத்திலா, அறிவிலா, திறமையிலா, செல்வத்திலா, மற்ற  எதில் சமம்?

    ஆத்மனே பரம்பொருள் என்றும், இருந்தது, இருப்பது, இருக்கப்போவது எல்லாமே ஓங்காரம்தான், ஓங்காரமே பரம்பொருள் என்றால் ஆத்மனின் பகுதிகளும் சமமாகத்தானே இருக்கவேண்டும்!  அதுமட்டுமா? வெளியுலகில் அறிந்த அனைத்தும் கனவுநிலையில் நுண்ணறிவாகத்தானே புலப்படுகின்றன!  அந்த ஒளிமயமான எண்ணப் பதிவுகளில் அனைத்தும் சமமே!  எல்லா அறிவுகளும் அங்கு ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பதிகின்றன.  கனவுலகமே ஒரு ஒளிமயமான நூலகம்.அங்கு எல்லா அறிவுகளும் உள்ளன.  அறிவின் முன்னர் அனைத்தும் சமமே.  ஏழை-பணக்காரன், ஆண்-பெண், பலசாலி-வலிமையற்றவன் என்ற வேறுபாடே கிடையாது.இவர்கள் அனைவரின் அறிவும் அங்கு நிறைந்துள்ளது.  நினைவுகளின் முன்பு அனைவரும் சமமே.  இந்த அறிவின் கருவூலமான தைஜஸன் அனைத்துக்கும் சமமானவன்.

    ஞானவழி மரபை உயர்த்துபவன் என்றால்…

    சந்ததி என்றால் ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் என்றுதானே பொருள், ஞானசந்ததி என்றால் அறிவுள்ள குழந்தைகள் என்றுதானே புரிந்துகொள்ளவேண்டும், ஞானவழி மரபு என்ற புதுப் பொருள் கொடுத்தால் எப்படி என்று கேள்வி எழலாம்.

    teacher and studentsஒருவர் தன்னிடம் இருக்கும் அறிவை இன்னொருவருக்குப் புகட்டினால் புகட்டுபவர் புகடப்படுபவருக்குத் தந்தை ஆகிறார்.  எனவேதான் ஆசானைத் தந்தை என்றும் சொல்லப்படுகிறது.

    இதெல்லாம் பத்தாம்பசலித்தனம், ஆசானாவது, தந்தையாவாது, இதெல்லாம் பேத்தல், அறிவுக்கு ஒவ்வாதது என்றுதான் இன்றைய அறிவியல் வாதிக்கும்.  நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.  கல்விக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்துகிறோம்;  அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு நமக்கு கல்வி கற்பிக்கிறார்கள்.  அதற்காக அவர்களை நமது பெற்றோருக்கு இணையாகக் கருதமுடியுமா என்றுதான் கேள்வி வரும்.

    இந்தக் கேள்வியெல்லாம் நான் காசு கொடுக்கிறேன், எனக்குக் கல்வி போதிக்கப்படுகிறது;  எனவே, எனக்குக் கல்வி கற்பிப்பவர்கள் எனது வேலைக்காரர்கள் என்ற மனநிலையால் ஏற்படும் மயக்கமேயன்றி வேறொன்றுமில்லை. எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் கல்வி தானாக வந்துவிடாது. ஆசான், மாணவர் இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அக்கறையோடு செயல்பட்டால்தான் அது கல்வியாகும்.  அதனால்தான் கல்விக்கூடத்தை ஊட்டி வளர்க்கும் அன்னை [Alma-mater] என்றழைக்கும் பழக்கம் இருக்கிறது.  கல்விக்கூடத்தை அன்னை என்றால், கற்பிப்பவர்கள் தந்தையாகவும், தாயாகவும்தானே ஆகமுடியும்.

    அதனால்தான் இங்கு சந்ததி என்பதற்கு மரபு என்ற பொருள் பகரப்படுகிறது.  ஆத்மனின் அறிவின் கருவூலம் என்று அறிபவர் அனைவரையும் சமமாகத்தான் கருதுவார் அறிவை, ஞானத்தை அனைவருக்கும் சமமாக வழங்குவார்; ஞானவழி மரபை உயர்நிலைக்குக் கொண்டுவருவார்.  அதுவே இந்தச் சொற்றொடர் மூலம் விளங்குகிறது.

     அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார் என்று பதவுரை தருகிறீர்களே, குலம் என்றுதானே போட்டிருக்கிறது, குலம் என்றால் சாதிதானே, இந்த உபநிஷத்து மறைமுகமாக சாதி உணர்வைத்தானே வளர்க்கிறது, அதை மறைக்க வழித்தோன்றல் என்று பொருள் கொடுத்து அதை மறைக்கலாமா என்று ஒரு கேள்வியும் எழலாம்.

    அதற்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.mother and child

    தாய்க்குலம் என்று சொல்கிறோமே, அப்படியென்றால் தாய் என்பது ஒரு சாதியா, இல்லையே!  பெண்கள் அனைவரும் தாய் ஆகிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஒருமைப்படுத்தி, தாய்க்குலம் என்று வழங்கப்படுகிறது.  அதுபோலத்தான் ஒரே மாதிரியானவர்களைக் குலம் என்று சொல்லப்படுகிறது.

    இங்கும் அதேமாதிரியான கருத்துடன்தான் குலம் என்று கூறப்படுகிறது.

    மெய்ஞானத்தால் பரம்பொருளை அறிய இயலும் என்னும்போது, அப்படிப்பட்ட அறிவை, ஞானத்தைக் கற்பிப்பவர்கள் அந்த அறிவை வாழையடி வாழையாகத் தனது சீடர்களுக்குக் கற்பிக்கிறார்கள.  எனவே அந்த மெய்ஞானத்தை அறிபவர்களின் குமுகம், கூட்டம், குழு, வழித்தோன்றல்கள் [வழிவழியாக மெய்ஞானத்தைக் கற்பவர்கள்] பரம்பொருளின் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள் என்று உபநிஷத்து உரைக்கிறது…

    இங்கு ஆதி சங்கரரின் விளக்கத்தையும் அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இரண்டாம் எழுத்தான ‘உ’காரத்திற்கும், தைஜஸனுக்கும் என்ன ஒற்றுமை?  ஒரு பொதுவான சிறப்பியல்பாக உயர்வைச் சொல்லலாம்.  ‘உ’ என்ற ஒலி ‘அ’வைவிடச் உயர்ந்தது[1].  அதைப்போலவே தைஜஸன் வைஸ்வாநரனைவிட உயர்ந்தவன்[2].  இன்னொரு பொதுவான சிறப்பியல்பாகச் சொல்லக் கூடியது – ‘உ’, ‘அ’வுக்கும், ‘ம்’க்கும் இடையில் இருக்கிறது;  அதுபோல, தைஜஸனும், வைஸ்வாநரனுக்கும், ப்ராக்ஞனுக்கும் இடையில் இருக்கிறான். 

    இப்பொழுது இந்த அறிவின் [ஞானத்தின்] விளைவு, பயன் விளக்கப்படுகிறது.  அறிவு – ‘உ’காரத்தை இனம் கண்டுகொண்டதனால் ஏற்படும் அறிவு – எப்பொழுதுமே அதிகமாகிறது.  அதாவது, அவனது அறியும் திறன் மிகவும் அதிகமாகிறது.  இவ்வறிவு பெற்றவன் அனைவராலும் அவ்வாறே [அறிவாளி என்றே] அறியப்படுகிறான் அவனது நண்பர்களைப் போல அவனது எதிரிகளும் அவனைக்கண்டு [அவனது அறிவைக்கண்டு] பொறாமைப் படுவதில்லை. மேலும், இவனது மரபில் [இவனிடம் அறிவைப் பெற்றவர்கள்] பரம்பொருளை அறியாதவராக இருக்கமாட்டார்கள்.

    [1] ‘அ’ என்னும் ஒலி முதலில் வருவதால் அது அனைத்து ஒலிகளைக் காட்டிலும் உயர்ந்ததானாலும், ‘அ’வுக்குப் பின்னால் வருவதால் ‘உ’ உயர்ந்தது என்று மறைமுகமாக எண்ண வாய்ப்பிருக்கிறது.

    [2] விஸ்வாநரன் தூலப் பொருள்களையே [ஐம்புலன்களால் உள்ளி உணர்வதையே] விரும்புவதாலும், அவனது அறிவு தூலப் பொருள்களையே நம்பி இருப்பதாலும், நுண்ணுணர்வு மூலம் அனைத்தையும் அறியும் தைஜஸன் விஸ்வாநரனைவிட உயர்வாக அறியப்படுகிறான்.

    mu11

    ஸுஷுப்தஸ்தா2ன: பராக்ஞோ மகாரஸ்த்ருதீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இதஹும் ஸர்வமபீதிஸ்ச ப4வதி ய ஏவம் வேத3 ||                                                            —  11

    அளப்பதினாலும், ஒன்றியதாலும், ஆழ்உறக்க நிலையினான  அறிவாளி [ப்ராக்ஞன்] உண்மையில் ‘மூன்றாம் ஒலி[எழுத்து]யான ம’காரமே [‘ம்’ என்ற ஒலியே]. எவன் இவ்வாறு அறிகிறானோ [அவன்] இவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு தன்னுள் ஒடுங்குகிறான்.                                                                                                                                     – 11

    பதவுரை: ஸுஷுப்தஸ்தான: ஆழ்உறக்கநிலையில் இருக்கும்; ப்ராக்ஞ:பிராக்ஞன் [அறிவாளி]; மிதே: அபி – அளப்பதினாலும்; அபீதே: வா – உள்ளே ஒடுங்குவதலுமே த்ருதீயா மாத்ரா – மூன்றாம் ஒலியான [எழுத்தான];  மகார: – ‘ம’காரமே [ம் என்னும் ஒலியே]: ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; இதஹும் சர்வம் – இவை எல்லாவற்றையுமே; அபீதி: ச – உள்ஒடுங்குபவனாகவும் பவதி – ஆகிறான்; மினோதி ஹ வா  – நிச்சயமாக உள் அளப்பவனாகவும் [ஆகிறான்].

    விளக்கம்:  நாம் எதிர்பார்த்தபடி மூன்றாம் ஒலியான ‘ம்’ ஆத்மனின் மூன்றாவது பகுதியான பிராக்ஞன் என்று உபநிஷத்தின் பதினொன்றாவது சொற்றொடர் செப்புகிறது.  முந்தைய சொற்றொடர்களைப் போலவே, பிராக்ஞனுக்கும் இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறது – அளப்பவன், உள்ளே ஒடுங்குபவன் அல்லது ஒன்றுபவன்.

    அளப்பவன் என்றால் எதை அளக்கிறான்?  எங்கு ஒன்றுகிறான்?

    ஆழ்உறக்க நிலையில் உள்ளே இறையுடன் ஒன்றுகிறான் என்றான் ஒருவகையில் ஒப்புக்கொள்ளலாம்.  ஆனால் எண்ணங்களின் குவியல்களாக இருக்கும் பிராக்ஞன் எதை அளக்கிறான்?

    ஆதி சங்கரர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.sankaracharya

    ஒரு பயிர் வளரும்போது அது பலவிதமாக அளக்கப்படுகிறது.  முதலில் விதையாக இருக்கும் அது, தூவப்பட்ட இடத்தில் முளைவிட்டு நிலத்தைவிட்டு வெளிக்கிளம்புகிறது.  பிறகு நாற்றாக இருக்கும்போது அது இருக்கும் இடத்தைவிட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு சரியான இடைவெளிவிட்டு, நன்கு வளரும்படி நடப்படுகிறது.  அப்படி நடப்பட்ட பயிர் நன்கு வளர்ந்து, பூத்துக் கதிர்விடுகிறது.  இவை அனைத்தையும் குடியானவன் கவனித்து, பயிரின் வளர்ச்சியை அளந்து, அதற்கு நீர்பாய்ச்சுகிறான். அவன் ஆதிக்கமாகவும் நீர் பாய்ச்சுவதில்லை, குறைத்தும் விடுவதில்லை.  சரியான அளவுக்கே நீர் பாய்ச்சுகிறான்.  நாற்றைப் பிடுங்கி நடும் முன்னரும், அது சரியான அளவுக்கு வரந்திருக்கிறதா என்று அளவிட்டபின்னே அதைச் செய்கிறான்.

    கதிர் முற்றியபின்னரும், அது அறுவடை செய்யத்தக்க நிலையை அடைந்துவிட்டதா என்று அளந்தபின்னரே அதை மேற்கொள்கிறான்.farmer

    அதைப்போலவே வைஸ்வாநரனும், தைஜஸனும் அவர்களது பரிணாம வளர்ச்சியின்போதும், உள்ஒடுங்கி, ஆழ்உறக்கத்தில் ஒன்றி பிராக்ஞனாக பரிணாம மாற்றமடையும்போதும் பிராக்ஞநால் அளக்கப்படுகிறார்கள்.

    அதேமாதிரி ஓம் என்னும் சொல்லில் உள்ள அகாரமும், உகாரமும் ஒன்றி ஓகாரமாகி ‘ம்’முடன் ஒன்றுவதையே இச் சொற்றொடர் குறிக்கிறது.  மீண்டும் ஓங்காரத்தை ஒலிக்க, மகாரத்திலிருந்தான் – ‘’ம்’ என்னும் ஒலி நின்றபின்னரே, அகாரமும், உகாரமும் வெளிக்கிளம்புகின்றன.

    இன்னொருவிதமாக விளக்கினால், விழித்திருக்கும்போது ஆத்மனாகிய நாம் வெளியுலகிலிருந்து பெரும் அத்துணை உணர்வுகளும், அறிவுகளும், கனவுறக்க நிலையில் அதே ஆத்மனாகிய நாம் காணும் ஒளிமயமயமான நுண்ணுணர்வுகளும், தோற்றமற மறைந்து, ஆழ்உறக்க நிலையில் இருக்கும் ஆத்மனாகிய நம்மிடம் ஒடுங்கிவிடகின்றன —  மீண்டும் நாம் நனவு, கனவு நிலைக்குத் திரும்பும் வரையும்.

    எனவே பிராக்ஞன் வைஸ்வாநரன், தைஜஸன் இவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், அறிவுகள் இவையெல்லாம் வைக்கப்படும் ஒரு கொள்கலமாக ஆழ்உறக்கநிலையில் இருக்கும் பிராக்ஞன் ஆகிறான்.

    அதாவது வைஸ்வாநரனும், தைஜஸனும் ஆழ்உறக்க நிலையில் பிராக்ஞனுடன் ஒன்றி விடுகிறார்கள் —  ஒடுங்கிவிடுகிரார்கள் – ஒன்றாக ஆகிவிடுகிறார்கள்…merging atmans

    இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்குகிறது என்றால் என்ன, ஓங்காரத்தின் ஒவ்வொரு ஒலியையும் அறிந்தவர் இப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்று உபநிஷத்து சொல்கிறதே,  ஒலியை ஆத்மனின் ஒவ்வொரு பகுதி என்று அறிவதா, புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதே என்ற கேள்வி பிறக்கிறது.

    இதற்கு பதிலாகச் சொல்லபடுவதுதான் தியானம் [meditation].

    ஒரு மந்திரம் என்பது மனதிற்குள் சொல்லப்படுவது.

    ஓம் என்பது ஒரு மந்திரம்.  இந்த மந்திரத்தை மனதில் சொல்லும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் பொது – ‘அ’ என்ற ஒலியிலோ, ‘உ’ என்ற ஒலியிலோ, ‘ம்’ என்ற ஒலியிலோ மனதை ஒருநிலைப்படுத்தித் தியானிக்கும்போது, தியானிப்பவர்கள், அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் ஒலிக்குத் தகுந்தாவாறு வைஸ்வாநரனையோ, தைஜஸநியோ, பிராக்ஞனையோ உணருகிறார்கள்/ஒன்றுகிரார்கள்/அறிகிறார்கள். அப்படி நடக்கும்போது தன்னுள் இருக்கும் ஆத்மனை அறிகிறார்கள்

    அந்தந்த ஆத்மனின் பிரிவுக்குள்ள குணங்கள் அனைத்தும் கைவரப்பெறுகிறார்கள்.

    அதுசரி, ஏன் வைஸ்வாநரன் தைஜஸனுடன் ஒன்றவேண்டும், அப்படி ஒன்றியபின், தைஜஸன் ஏன் பிராக்ஞனுடன் ஒன்றவேண்டும்?  இவர்கள் ஆத்மனின் மூன்று பிரிவுகள் தானே, ஏன் ஒவ்வொன்றாக ஒன்றுகிரார்கள் என்ற நியாயமான கேள்வியும் நம்முள் எழுகிறது.

    உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்;  அதை நான்காகப் பிரித்து, வெவேறு நிறங்களுடைய கண்ணாடிப் பாத்திரங்களில் ஊற்றிவைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.  பாலின் நிறம் அது ஊற்றிவைக்கப்படும் கண்ணாடிப் பாத்திரத்தின் நிறமாகத்தானே தெரியும்?

    முதல் பாத்திரம் மஞ்சள் நிறம் – அதனுள் இருக்கும் பால் [ஆத்மனின் பிரிவாகிய வைஸ்வாநரன் – நமது வெளிஅறிவால் உணரக்கூடிய அண்டம்]

    இரண்டாம் நீல நிறப் பாத்திரத்தில் இருக்கும் பால் தைஜஸன் – அண்ட மனம்.

    மூன்றாவது சிவப்புப் பாத்திரத்தில் பிராக்ஞன் இருக்கிறது.  அதுதான் குணமுள்ள ஈஸ்வரன் [சகுணப் பிரம்மம்]  ஈஸ்வரனே அனைத்தின் தோற்றமாகவும், அதன் முடிவாகவும் இருக்கிறான்.  அவனே விழிப்புநிலையில் நாம் ஐம்புலன்களாலும் உணரும் அண்டங்களையும், கனவுநிலையில் காணும் உணர்வுகளையும், காட்சிகளையும், ஆழ் உறக்க நிலையில் ஒன்றுமில்லா நிலைக்கும் ஒன்று சேர்க்கிறான்.  நனவும், கனவும் ஒன்றுமில்லா நிலையில் [ஆழ்உறக்க நிலையில்] ஒன்றிவிடுகின்றன.

    water in colored utensilsமுதலில் மஞ்சள் நிறமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பகுதி வைஸ்வாநரன் என்று வைத்துகொண்டு, அந்தப் பாத்திரத்தில் இருக்கும் பாலை, நீல நிறத்தில் இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பாலில் [தைஜஸன்] சேர்த்தால் பால் நீலமும், மஞ்சளும் சேர்ந்த பச்சை நிறமாகத் தெரியாது, நீல நிறமாத்தான் தெரியும். இப்பொழுது இரண்டும் இணைந்தாலும் ஒரே நிறமாகத்தானே நமக்குத் தோன்றுகிறது!

    இப்படிச் சேர்த்த பாலை முன்பு இருந்ததுபோல மீண்டும் பிரிக்க முடியுமா?  இரண்டறக் கலந்ததுவிட்டபின் அவற்றை தனித்தனியாக எப்படிப் பிரித்தெடுக்கமுடியும்?  தண்ணீரும், எண்ணையும் என்றால் – மணலும் சர்க்கரையும் என்றால் முடியும்.  ஏனென்றால் அவை தனித்தனியான பொருள்கள்.  ஆத்மன் தனித்தனி அல்லவே!  ஒன்றாக இருந்த ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒன்றுசேர்த்தபின், முதலில் இருக்கும் பிரிவுக்கு எப்படிக் கொண்டுசெல்ல இயலும்?

    அடுத்தபடியாக நீலப் பாத்திரத்தில் இருக்கும் பாலை [இரண்டறக் கலந்த வைஸ்வாநரன் + தைஜஸன்] சிவப்புப் பாத்திரத்தில் இருக்கும் பாலுடன் [பிராக்ஞன்] ஊற்றினால், பால் கலவை ஊதா நிறமாகத் தெரியாது.  சிவப்பாகத்தான் தெரியும். ஒன்றிய பால் பிராக்ஞன்தான்.  இக்கலவையையும் பழையபடி பிரிக்க இயலாது.

    இதற்கடுத்த நிலைதான் துரிய நிலை.  ஓங்காரத்தின் இறுதி விளக்கம்.

     mu12

    அமாத்ரஸ்சதுர்த்தோ2 அவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஸ’ம: சி’வோஅத்3வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விஸ’த்யாத்மநாத்மானம் ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ||                     –  12

    செயல் ஒன்றுமில்லாத, ஒலியற்றவனுமான, நான்காமவன் [துரியன்] அண்டத்தைத் முடிவுறச்செய்பவன், மங்கலமானவன், இருமையற்றவன், இப்படிப்பட்ட ஓங்காரம் ஆத்மன்தான்.  எவன் இப்படி அறிகிறானோ, அவன் தானாகவே தன்னுள் [ஆத்மனுள்] ஒன்றுகிறான்.                                                                                                                                                – 12

    பதவுரை: அவ்வியவஹார்ய: செயல்களற்றவன்; மிதே அமாத்ர: ச – ஒலி இல்லாமல் இருப்பதாலும்; சதுர்த்த2::நான்காமவன் [துரியன் ஆகிறான்]; பிரபஞ்ச உபச’ம: – அண்டத்தை [அனைத்து நிகழ்வையும்] முடிவுறச் செய்பவன்;  சி’வ: – ‘மங்கலமானவன்; அத்3வைத:: – இருமையற்றவன்;  ஏவம் ஓங்கார: – இப்படிப்பட்ட ஓங்காரம்; ஆத்ம: ஏவ – ஆத்மனே; ய: – எவன்; ஏவம் வேத3இவ்வாறு அறிகிறானோ; ஆத்மனா  – தன்னால் [தானாகவே]; ஆத்மானம் – தன்னை [தன்னுள் இருக்கும் ஆத்மனுடன்]]; ஸம்விஸ’தி – ஒன்றுகிறான்.

    விளக்கம்:  இந்த சொற்றொடரில் பரம்பொருளுடன் ஒன்றுவது எப்படி என்று சொல்லப்படுகிறது.  அத்துடன் மட்டுமல்ல, ‘ஓம்’ என்ற சொல் மூன்று ஒலிகளால் ஆனது மட்டுமல்ல, நான்காவதாக ஒலியற்ற நிலைமையும் ஓங்காரத்திற்கு இருக்கிறது, அதுவே ஆத்மனின் ‘துரிய’ நிலை என்றும் எடுத்துரைக்கிறது.

    paramaathamaஅந்நிலையில் ஆத்மன் செயல் எதுவும் ஆற்றுவதில்லை.  அந்நிலையில் – ஆத்மனின் செயலற்ற நிலையில் – அண்டமே —  நனவில் திடப்போருளாகக் காணப்படும், கனவுநிலையில் ஒளிமயமான உணர்வுகளாகத் தோன்றும், ஆழ்உறக்க நிலையில் எண்ணங்களின் குவியலாக உருவமற்று இருக்கும் – அந்த அண்டமே முடிந்துபோகிறது.  ஈஸ்வரன் என்று அழைக்கப்படும்  காரிய, காரணங்கள் உள்ள பரம்பொருள், சிவமாக, மங்கலமான ஒன்றாக, தான் வேறு, மற்ற உயிர்கள் – ஜீவாத்மாக்கள் வேறு என்ற மாயத்தோற்றம் இல்லாது – இருமையில்லாது ஒன்றாகி நிற்கிறான்/நிற்கிறாள்/நிற்கிறது.

    முதலீட்டியம் / ஒருமை
    முதலீட்டியம் / ஒருமை

    இதையே அறிவியல் ஒருமை, முதலீட்டியம் [singularity] என்று சொல்லுகிறதோ என்னவோ!  பெருவெடிப்பு நிகழ்ந்து அண்டம் உருவாகும் தருணத்தில் அவ்வண்டமே ஒரு முதலீட்டியமாக/ஒருமையாக – இனம் பிரித்து அறியாதவண்ணம் ஒன்றாக இருந்தது என்று பொதுச் சார்பியல் [ஜெனரல் ரிலேட்டிவிட்டி] கூறுகிறது[1] துரியன் இருமையற்றவன் என்றால் அவனை ஒரு முதலீட்டியம்/ஒருமையானவன் [singularity] என்று சொல்வதில் பிழை இருக்கிறதா என்ன?

    அது மட்டுமல்ல, பால்வழி மண்டலங்கள் [galaxies] உருவாகக் காரணமான கரும் துளைகள் [black holes] உள்ளே முதலீட்டியம் உள்ளது என்றும் அறிவியல் ஆராய்ந்து உரைக்கிறது.[1]

    எதுவும் உருவாகாமல் ஒன்றி இருந்த ஒன்று, இருமை இல்லாமல் இருந்த ஒன்று — பால்வழி மண்டலங்கள், மற்றும் பெரும்வெடிப்பு தோன்றி அண்டமே உருவாக வழிவகுத்தது என்று — அறிவியலே சொல்லும்போது, அந்த முதலீடியமே பரம்பொருள், ஆத்மன் என்று பொருள்கொள்வதில் தவறென்ன!

    இந்த வழியிலேயே தொடர்ந்தால் —

    1. இங்கு நாம் காணும் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு முதலீட்டியத்திலிருந்துதான் –பெருவெடிப்பின் மூலம் தோன்றின.
    2. அப்படித் தோன்றியவை அனைத்தும் அந்த முதலீட்டியத்தில்தான் இருந்தன.
    3. உயிரும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும்.
    4. நாம் கண்ட, காணும் அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
    5. இவ்வண்டத்தில் நாம் காணும் சக்தி அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
    6. இவ்வண்டம் தோன்றுமுன்னே முதலீட்டியம்தான் இருந்தது. எனவே அந்த முதலீட்டியத்தினுள்தான் அண்டமே ஒடுங்கி இருந்த்திருக்கவேண்டும்.
    7. இந்த அண்டம் தோன்றும் முன்னர் முதலீட்டியம் செயலற்றே இருந்திருக்கவேண்டும்.
    8. எனவே இந்த முதலீட்டியத்தையே — ஆத்மனின் நான்காம் பகுதியான — வைஸ்வாநாரன், தைஜஸன், பிராக்ஞன் இவற்றை உள்ளடக்கிய – ஓங்காரத்தின் நான்காவது ஒலியற்ற ஒன்றாக – துரியனாக அறியலாமே.

    நாம் வெளியில் இருந்து, நனவுலகிலோ, கனவுலகிலோ, ஆழ்உறக்க நிலையிலோ, துரிய நிலையை எய்த இயலுமா?

    இயலவே இயலாது!

    ஏனெனில், வெளியில் இருந்து நோகும்போது இருமைதான் இருக்கும், ஒருமை இருக்காது.  எனவே, அந்த ஒருமையான பரம்பொருளினபால் சித்தத்தைச் செலுத்தி ஒன்றி, நிர்விகல்ப சமாதி நிலையை அடையும்போதுதான், அப்பரம்பொருளுடன் நாம் ஒன்ற இயலும்.

    ‘அ’விலிருந்து ‘உ’’வுக்கும், ‘ம்’க்கும் வருவோம்.

    ஆதி சங்கரர் என்ன சொல்கிறார், துரியனைப் பற்றி?

    அவர் பரம்பொருளையே இரண்டுவிதமாகப் பிரிக்கிறார், சகுணப் பிரம்மம், நிர்குணப் பிரம்மம் என்று.

    இந்த சகுணப் பிரம்மமே —  குணங்களுடன் கூடிய ஈஸ்வரனே – இவ்வண்டத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்.  அவரை [சகுண பிரம்மத்தை] அறிய, கௌடபாதரின் காரிகையில் (விளக்கம்) உள்ள சுலோகத்தின் 26ம் சுலோகத்தின் முதல் வரிப்படி மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் என்கிறார்.

    அந்த முதல் வரி எது?

    ப்ரணவோ ஹ்யபரம் [ப்ரணவ: ஹி அபரம்] ப்ரஹ்ம ப்ரணவஸ்’ச பர: ஸ்ம்ருத:  |

    ஓங்காரமோ எனில் மற்றொரு பிரம்மமே!  ஓங்காரமும் பரப்பிரம்மமாகவே எண்ணப்படுகிறது.

    கூர்ந்து கவனித்தால் மற்றொரு பிரம்மம், அப்படியே எண்ணப்படுகிறது என்று சொல்லப்படுவதைக் காணலாம். மற்றொரு பிரம்மம் என்பதுதான் சகுணப்பிரம்மம் [பரம்பொருள்/ஈஸ்வரன்].  பரம்பொருளை முதலில் அறிய விரும்புபவர்கள் —  அதாவது, முதல் முயற்சி எடுப்பவர்கள் —  ஓங்காரத்தைப் பரம்பொருளாக [ஈசனாக] எண்ணித் தியானிக்கவேண்டும் என்று சொல்வது புரியும்.

    தியானம் செய்யப் புகுபவர்கள் — அனைத்தையும் வெளியுலகின் வாயிலாக அறிபவர்கள் – அம்மாதிரித்தான் தியானம் செய்ய – மனதை ஒருநிலைப்படுத்த இயலும்.  எனவேதான் அகர, உகர், மகரமாக, ஒலியாக நிற்கும் ஈசனை, பரம்பொருளை, ஓங்காரத்தை தியானம் செய்யவேண்டும்.  இது கைகூடினால் ‘சகுண சமாதி’ நிலை கிட்டும்.  இந்நிலையை அடைந்தவர்கள் மீண்டும் கார, காரியம் உள்ள இவ்வண்டத்திற்குத் திரும்பி வருவார்கள்.

    அதன்பின் ஒலியற்ற ஓங்காரமான துரியனை, நிர்குணப் பிரம்மத்தின்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.

    இப்பொழுது இரண்டாம் வரிக்குச் செல்லுவோம்.

    அபூர்வோஅனந்தரோஅபா3ஹ்யோஅனபர: ப்ரணவோஅவ்யய:  ||

    முன்தோற்றமற்றதும், முடிவற்றதும், வெளியில் இல்லாததும், தனித்தன்மை வாய்ந்ததுமான ஓங்காரம் மாற்றமில்லாதது.

    முன்தோற்றமற்றது என்றால் என்ன?  இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை.

    தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.  நமது வெளியுல உணர்வுப்படி நோக்கினால் —  ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்?  அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா?  முடியாதே!  அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது.  அது எப்பொழுதும் இருக்கிறது.

    இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா!  எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

    அது வெளியிலும் இல்லை என்றால் என்ன?  எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்!  எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

    அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை.  அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது.  அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

    தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

    அப்படி தோற்றமும் இல்லாமல், முடிவும் இல்லாமல், வெளியிலும் இல்லாத, தனித்தன்மை வாய்ந்த அது மாற்றமின்றித்தான் இருக்கும்.  அங்கு காரணமும் இல்லை, காரியமும் இல்லை.  ஒரே அமைதிதான்.  படைப்பும் இல்லை, காப்பும் இல்லை, அழிப்பும் இல்லை, மறைப்பும் இல்லை, அருளும் இல்லை. எல்லாம் ஓய்ந்துபோன நிலையில் எதுவுமில்லாமல் “சிவனே” என்றிருக்கும் நிலை.

    அந்த நிலையில் இருக்கும் – ஒலியற்ற ஓங்காரமாக இருக்கும் இறைவன்/வி ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அதுவுமல்ல.  ஏனெனில் அதை வெளியில் இருக்கும் எதுவும் பார்க்கமுடியாது, அளவிடமுடியாது – ஏனென்றால் அந்த அமைதியான நிலையில் வெளியில்தான் எதுவுமே இல்லையே!

    இப்படிப்பட்ட பரம்பொருளை அடைய, அதுவேறல்ல, நான் வேறல்ல என்று உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பரம்பொருளாகவே ஆக, ஒலியற்ற ஓங்காரத்தை தியானம் செய்து மனத்தை ஒருநிலைப்படுத்தவேண்டும்.

    இப்படித் தன்னுள் இருக்கும் பரம்பொருளுடன் ஒன்றுவதே நிர்விகல்ப [வேறுபாடற்ற/பிரித்தறியாத] சமாதி நிலை. இந்நிலையை அடைந்தோருக்கு இவ்வுலகமில்லை, பிறப்பு இறப்பு என்னும் காரிய, காரணம் இல்லை. ஆணவம், கர்ம வினைகள், மாயையினால் கட்டப்படாது — அவை நீங்கி — தான், தனது, எனது, மற்றவை, என்ற எண்ணம் இல்லாமல் — பிறித்தறியாமல் — எல்லாமே ஒன்று என்று இருமையற்ற நிலையில், ஒருமையாகி — ஒலியற்ற ஓங்காரத்துடன், பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து ஒன்றிய அவர்கள் — பரம்பொருளாகவே ஆகிவிடுகிறார்கள் [நிர்விகல்ப சமாதி அடைந்து விடுகிறார்கள்]!  பேரின்பநிலையை எய்துகிறார்கள்.

    நிர்விகல்ப சமாதி
    நிர்விகல்ப சமாதி

    thuriyan

    இத்துடன் எனது மாண்டூக்கிய உபநிஷத்தின் எளிய விளக்கம் நிறைவு பெறுகிறது.  இராமனுக்கு கடலின் மேல் பாலமமைக்க ஒரு அணில் தனது முன்னங்கால்களால் ஒரு சிறுகல்லை உருட்டிப்போட்டதுபோல என்னால் இயன்றதை எழுதியுள்ளேன்.  நான் எழுதியதில் தவறு இருந்தால், பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் என் தவறைத் திருத்திக்கொள்வேன்.

    அமைதி மந்திரம்:sankaara and students

    எந்த ஒரு உபநிஷத்துவிற்கும் துவக்கத்தில் ஒரு அமைதி மந்திரம் [சாந்தி ஸ்லோகம்] உண்டு.  எதையும் கற்பதற்குமுன் ஆசிரியரும், மாணவர்களும் அமைதியுடன் இருந்து கற்பிக்க/கற்கவேண்டும் என்பது அதன் காரணமாகும்.  இந்த உபநிஷத்துவுக்கான அமைதி மந்திரத்தை முதலில் எழுதாததற்கு ஒரு காரணம் உண்டு.  இங்கு நான் கற்பிப்பவனும் அல்லன்.  இதைப்படிப்பவர்கள் எனது மாணவர்களும் அல்லர்.

    எனவே, முதலில் சொல்லவேண்டிய அமைதி மந்திரத்தைக் முடிவில் கொடுத்து முடிக்கிறேன்.

    mu santhi

    4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தே3வா: | ப4த்3ரம் பஸ்’யேமாக்ஷபி4ர்யஜத்ரா: | ஸ்த்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாஹும்ஸஸ்தநூபி4:  வ்யசே’ம தேவஹிதம் யதா3யு: | ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்34ஸ்ரவா: |  ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்’வவேதா3:  |  ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: | ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து | ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

    தேவர்களே [தெய்வங்களே]!  காதுகளால் நல்லதையே கேட்போமாக.  போற்றுதலுக்கு உரியவர்களே, கண்களால் நல்லதையே பார்ப்போமாக.  உறுதியான புலன்களுடன் [திட அறிவுடன்] நுணுக்கமாக [உங்களைப்] புகழ்ந்து, எவ்வளவு ஆயுள் இறைவனால் கொடுக்கப்பட்டதோ [அதை] அனுபவிப்போமாக.  நிகரற்ற புகழுள்ள இந்திரனே எங்களுக்கு [கல்வி கற்பதில்] வெற்றி [உண்டாகட்டும்]!  அனைத்தையும் அறிந்த ஆதவனே, எங்களுக்கு வெற்றி!   தடையின்றிச் செல்லும் [பறக்கும்] கருடனே, எங்களுக்கு வெற்றி!  பிரஹஸ்பதியே, எங்களுக்கு வெற்றி!  ஓம்1  அமைதி! அமைதி!! அமைதி!!!

    [நிறைவு பெறுகிறது]

    [1] Curiel, Erik & Peter Bokulich. “Singularities and Black Holes”Stanford Encyclopedia of Philosophy. Center for the Study of Language and Information, Stanford University. Retrieved 26 December 2012.

    Share
  • ஆயுதமேந்திய ‘தம்பிகள்’: ‘மெட்ராஸ் ஸாப்பர்’கள்

    ஆங்கில மூலம்:  கே.ஆர்.ஏ. நரசய்யா, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூன் 8, 2015

    தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்

    நன்றி:  தாரகை இணையதளம்  http://wp.me/P4Uvka-s4  

    மெட்ராஸ் ஸாப்பர்ஸ் -  தம்பிகள்

    மெட்ராஸ் ஸாப்பர்ஸ் – தம்பிகள்

    அவர்கள் ஒத்துழைப்புக்கான கூட்டம்தானே — போரிடாதவர்க்கு ஆயுதங்கள் ஒரு கேடா என்று பிரிட்டிஷார் முதலில் எண்ணியிருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல மெட்ராஸ் ஸாப்பர்கள் என்ற – இந்திய ராணுவத்தின் முந்தைய பொறியியல் குழு —  பல போர்களைச் சந்தித்தார்கள்.

    1947ல், இந்திய விடுதலை கிடைத்த கையுடன், மெட்ராஸ் ஸாப்பர்கள் ஜம்முவில் நடந்த போரில் கலந்துகொள்ள நேர்ந்தது.  அதில் பெரும்பாலானோர் கடுங்குளிரைக் காணாத தென்னிந்தியர்களே!  இருப்பினும், பனியையும், எலும்பைத் தாக்கும் குளிரையும் பொருட்படுத்தாது, ராணுவம் முன்னேறிச் செல்வதற்காக, அடைத்துக் கிடந்த சாலைகளைச் சீர்படுத்தினார்கள்.  இந்தப் பணியில் ஸாப்பர்களின் ஒரு பிரிவே தங்கள் இன்னுயிரை இழக்கவேண்டியிருந்தது.  ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது, இந்தக் குழு மீண்டும் “ஆபரேஷன் போலோ”வில் [ராணுவ நடவடிக்கை] களம் கண்டார்கள்.

    Displaying

    மெட்ராஸ் ஸாப்பர்கள் தமிழில் “தம்பிகள்” என்று அழைக்கப்பட்டார்கள்.  அவர்களின் குழுப் பாடல், “வெற்றி, வெற்றி, எதிலும் வெற்றி, தம்பி!” என்று துவங்குகிறது.

    ஃபிரெடெரிக் ராபர்ட்ஸ்

    அவர்களின் திறமை மிகவும் பிரபலம் ஆனதால் சென்னை இராணுவத்தின் தலைவரான ஃபிரடெரிக் ராபர்ட்ஸ்1883ல், “படையைக் களத்திற்கு அனுப்பிவைக்கும்படி எப்பொழுதெல்லாம் இந்தியாவுக்கு அழைப்பு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ராணியாரின் ஸாப்பர்களும் [மெட்ராஸ் ஸாப்பர்கள்] மைனர்[Miners]களும் [கண்ணிவெடி அகற்றுவோர்] கட்டாயம் களம் இறங்குவார்கள்.  எங்கெல்லாம் மெட்ராஸ் ஸாப்பர்கள் செல்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் தங்கள் புகழை நிலைநிறுத்தி, [சென்னை] ராஜதானிக்கும் பெருமை சேர்க்கிறார்கள்…”

    பிரிட்டிஷ் ராணுவம் தனிச்சிறப்பு வாய்ந்த வீரமிக்க செயல்களைச் செய்தவர்களைக் கௌரவிக்க ஆரம்பித்தபோது, முதன்முதலாகச் சிறப்பிக்கப்பட்டவர் மெட்ராஸ் ஸாப்பர்களைச் சேர்ந்த ஹவில்தார் சொக்கலிங்கம்தான்.  அவர் 1834ல் குடகில் நடந்த கர்நாடகப் போரில் அவர் காட்டிய வீரத்திற்காக அக்கௌரவம் வழங்கப்பட்டது.  அம்மாதிரி வழங்கப்படும் சிறப்புப் பதக்கங்களே “சொக்கலிங்கம் பதக்கம்” என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டதுதான் அதன் தனிச் சிறப்பாகும்.

    Displaying

    பின்னால் அக்குழுவுக்கு அரசியார் விக்டோரியாவின் ஸாப்பர்கள் [சுருக்கமாக “க்வீன்ஸாப்ஸ்”] என்று பெயரிடப்பட்டது.  அக்குழுவினர் தங்கள் சாதி, சமய வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒன்றாகவே உண்டு, உழைத்துப் பணி செய்தனர்.  செல்லுமிடமெல்லாம் அவர்களது “தம்பி” பாட்டைப் பாடினர்.

    ஒருமுறை அவர்களைப் பார்வையிடும் ஒரு மேலதிகாரி ஒரு தம்பியையைப் பார்த்து அவனது சாதி என்ன என்று கேட்டபோது, அவன் நெஞ்சை நிமிர்த்தி “ஸாப்பர் சாதி, ஐயா!” என்று பதிலளித்த உண்மை ஆவணங்களில் பதிவாகியுள்ளது

    Image result for madras sappers

    அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள்: பாலங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், மறைகுழிகள் தோண்டுதல் ஆவன.  அவர்களது “ஸாப்பர்கள்” என்ற பெயரே “ஸாப்” என்ற ஒருவித மறைகுழியின் பெயராகும்.  இராணுவம் முன்னேறுவதற்காக வேலிகளை அகற்றுவது இன்னுமொரு முக்கியமான வேலை.

    பங்களூர் டார்ப்பிடோ வைத்து வேலியைத் தகர்த்தல்

    முதல் உலகப் போரின்பொது, ஒரு வேலியைத் தகர்த்தெடுக்க தம்பிகள் மேஜர் ஆர்.எல். மக்க்ளிண்டாக்கின் உதவியுடன் செய்த குழாய் வெடிகுண்டு பங்களூர் டார்பிடோ என்று அழைக்கப்பட்டது.

    பங்களூர் டார்ப்பிடோ

    முள்கம்பி வேலிகளை விரைவில் தகர்த்துச் செல்ல இந்த பங்களூர் டார்பிடோ போர்க்கள முன்னணியில் உள்ள வீரர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என்றும், அதன் பல முன்னேற்றங்கள் இன்றும் உபயோகப்படுத்தப் படுகின்றன என்றும், கார்டன் எல். ராட்மன் தனது “த பிக் புக் ஆஃப் கன் ட்ரிவியா” [துப்பாக்கித் துணுக்குகளின் பெரும் புத்தகம்] என்ற புத்தகத்தில் பதிந்துள்ளார்.

    மூன்று மீட்டர்கள் தள்ளி நின்று பங்களூர் டார்பிடோவை ஒரு வெடிக்கச் செய்ய முடியும்.  அதன் தற்கால மாற்றுபட்ட வடிவம் ஐக்கிய அரசு நாட்டில் [இங்கிலாந்து] அதனது இரானுவத்திற்காகத் தயாரிக்கப்படுகிறது.  அது சமீபத்தில் இராணுவக் குப்பைகளைத் தகர்க்க உபயோகப்படுத்தப்பட்டது.  முதல் உலகப் போரில் முள்கம்பி வேலிகளைத் தூரத்தில் இருந்து தகர்க்க பங்களூர் டார்பிடோ குண்டுகள் உதவின.  பிற்காலத்தில் அந்தப் போர்க்கருவியின் அளவு முறைமைப்படுத்தப்பட்டது.

    Inline image 2
    மெட்ராஸ் ஸாப்பர்களின் சின்னம்

    மெட்ராஸ் ஸாப்பர்களின் மேற்கோள் உரை [motto] “ஸர்வத்ர” [எங்கும்] என்ற வடமொழிச் சொல் ராயல் எஞ்சினீயர்களின் “யுபீக்” என்ற லத்தின் சொல்லின் மொழிபெயர்ப்பே.  பணியாற்றும், மற்றும் ஓய்வுபெற்ற “தம்பி ஸாப்பர்கள்” ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் அவர்கள் குடும்பத்துடன் இராணுவ பொறியியல் கல்லூரியில்[College of Military Engineering – CME] ஒன்றுகூடுகிறார்கள்.

    Displaying
    ராயல் என்ஜினீயர்களின் சின்னம்

    அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில், “முடிவில்லாத வீரம், துணிவு நிரம்பிய நிகழ்ச்சிகள் தம்பிகள் சிறந்த போர்வீரர்கள் என்னும் அடைமொழியை உறுதி செய்கிறது!” என்று CMEயின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் எஸ். சென்குப்தா தம்பிகளின் தோழமைப் பண்பைப் புகழ்ந்து பாராட்டினார்.

    மெட்ராஸ் ஸாப்பர் அசோசியேஷன் 1947ல் இக்குழுவுக்குப் பிரியாவிடை கொடுத்த பிரிட்டிஷ் ஆஃபீசர்களால் துவங்கப்பட்டது.அப்பொழுதான் ஒவ்வொரு ஆண்டிலும் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி இக்குழுவின் உயர்வு நாளாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.

    —  இக்கட்டுரை ஆசிரியர் KRA நரசய்யா, 1881ல் வெளியிடப்பட்ட  “த ஹிஸ்டரி ஆஃப் மெட்ராஸ் எஞ்சினீர்ஸ் அண்ட் பயனீயர்ஸ், ஃப்ரம் 1743 டு பிரசன்ட் டைம்” என்ற புத்தகத்திற்காக மேஜர் ஹென்றி மெரிடித் வைபார்ட் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறார்.

    டி.பி. இராமச்சந்திரன் எழுதிய “பேரரசின் முதல் வீரர்கள்” [Empire’s First Soldiers] என்ற புத்தகம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மெட்ராஸ் ஸாப்பர்கள் கலந்துகொண்ட போர்களைப் பற்றி முழு விவரங்களும் கொடுக்கிறது. 

    ***

    Share
  • மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 3

    ஒரு அரிசோனன்

     … ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.

    அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை.  அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.

    அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.  உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா?  ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா?  அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.  இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…

     mu 7

      — 7

    நாந்த:ப்ரக்ஞம் ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் நோப4யத:ப்ரக்ஞம் ந ப்ரக்ஞானக4னம் ந ப்ரக்ஞம் நாப்ரக்ஞம் |

    அத்3ருஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணமசிந்த்யமவ்யபதே3ஸ்யமேகாத்மப்ரத்யயஸாரம் பிரபன்ஜோபஸ’மம் ஸா’ந்தம் சிவமத்3வைதம் சதுர்த்த2ம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விக்ஞேய: || 

                                                                                                          —  7

    உள்ளறிவு உள்ளவனும் அல்ல, வெளியறிவு உள்ளவனும் அல்ல, இடைப்பட்ட அறிவுள்ளவும் அல்ல, அறிவுக்குவியலானவனும் அல்ல, விழிப்புணர்வுடையவனும் அல்ல, விழிப்புணர்வு இல்லாதவனுமல்லன். 

    காணமுடியாதவன், செயல்களுக்கு அடங்காதவன், பிடிக்கமுடியாதவன், ஊகித்தறியமுடியாதவன், நினைத்துப்பார்க்க இயலாதவன், விளக்கமுடியாதவன், ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன்,  அண்டமே அடங்கும் தன்மையன், அமைதியானவன், மங்களமானவன், இருமையற்றவன், நான்காவதாகக் கருதப் படுபவன், அவனே ஆத்மன், அவனே அறியத் தகுந்தவன்.

                                    –7

    பதவுரை: சதுர்த்த2ம் – நான்காம் பகுதியான [துரீயன்]; நாந்த:ப்ரக்ஞம் – உள்ளுணர்வு அற்றவன்; ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் – வெளி உணர்வு அற்றவன்;  நோப4யத:ப்ரக்ஞம் – இடைப்பட்ட நிலை உணர்வுகளும் இல்லாதவன்; ந ப்ரக்ஞானக4னம் – அறிவுக் குவியில்களும் அல்லன்; ந ப்ரக்ஞம் –  அறிபவனு அல்லன்; ந அப்ரக்ஞம் – அறியாதவனும் அல்லன்.

    அத்3ருஷ்டம் – காண முடியாதவன்;  அவ்யவஹார்யம் – வெளிச் செயல்களால் [அறிபவன்] அல்லன்;  அக்ராஹ்யம் – பிடியில் அடங்காத[வண்ணம் நழுவிச் செல்ப]வன்;  அலக்ஷணம் – ஊகித்து அறியமுடியாத[அளவுக்கு உயர்ந்திருப்ப]வன்; அசிந்த்யம் – நினைத்துப்பார்க்க முடியாதவன்;   அவ்யபதே3ஸ்யம் – [சொற்களால்] விளக்க முடியாதவன்; ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம் –   ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன் பிரபஞ்ச உபஸ’மம் – அண்டத்தையே [தன்னுள் அடக்கி] ஒடுக்குபவன்;  ஸா’ந்தம் – அமைதியே உருவானவன்;  சிவம் – மங்களமானவன்; அத்3வைதம் – இருமை நிலையற்றவன் [என்று]; ஸ ஆத்மா – அந்த ஆத்மன்;  மந்யந்தே – கருதப்படுகிறான்; ஸ விக்ஞேய: – அவன் அறியத் தகுந்தவன்.  

    விளக்கம்என்ன இப்படிக் குழப்பம் செய்யப்படுகிறது? முன்னால் ஆத்மனின் மூன்று பகுதிகள் என்று சொல்லி —  வெளி உணர்வு, உள்ளுணர்வு, எல்லாம் அறிந்தவன் என்று சொல்லிக்கொண்டே வந்து – இப்பொழுது அதுவுமில்லை, இதுவுமில்லை, அறிவாளி, அதுவும் அல்ல, நினைத்துப் பார்க்க இயலாதவன் காணமுடியாதவன் என்றும் சொல்லி — முன்சொல்லிய மூன்று பகுதிகளும் இல்லாத பகுதியே நான்காம் பகுதி என்று குழப்பினால் —  நாங்கள் என்ன, எப்படிப் புரிந்து கொள்வது என்பதுதான் அனைவரின் மனதிலும் எழும்பும் கேள்வி.  அது நியாயமானதுகூட.

    ஆதி சங்கரரும் இதே கேள்வியை எழுப்பியே விளக்கத்தையும் அளிக்கிறார்  அதை என் புரிதலின்படி பகர்கிறேன்…

    … இருட்டான இடம்.  நாம் நடந்து செல்லும்போது எதோ ஒன்று சுருண்டு படுத்திருக்கிறது. இது இலேசாகவும் ஆடுகிறது.  உடனே நாம் அதிர்ந்து போகிறோம்.  இவ்வளவு பெரிய பாம்பு நமது வழியில் சுருண்டு படுத்துக்கிடப்பதோடு மட்டுமல்லாது தலையையும் இளசாக ஆட்டுகிறதே!

    நா உலர்கிறது, மதி மயங்குகிறது, அச்சம் நம்மைச் சூழ்கிறது.  “பாம்பு! பாம்பு!” என்று பதறுகிறோம்.

    நம் அருகில் உள்ள ஒருவர், “இல்லை, இல்லை! அது ஒரு மாலை!  நீங்கள் தலை என்று நினைப்பது மாலையின் கீழ்ப்பகுதியில் உள்ள பூப்பந்து!” என்கிறார்.

    இதற்கிடையில், “பாம்பா!  எங்கு?” என்றபடி வருகிறாள் ஒரு மூதாட்டி.  அவள் கையில் ஒரு விளக்கு இருக்கிறது.

    old lady with lamp

    “பா.. பா..  பாட்டி!  அதோ!” என்று பாம்பு இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறோம்.

    இலேசாக வீசும் காற்றில் விளக்கின் சுடர் அணைந்து போகாதவாறு பிடித்துக்கொண்டிருந்த கையை எடுக்கிறாள் மூதாட்டி.  அங்கே இருப்பது..

    … நம்மையும் அறியாமல் நம் உதடுகள் பிரிந்து சிரிப்பு வெலிவருகிறது.  அங்கு இருப்பது பாம்பல்ல!  சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு.  பாம்பின் தலையென்று நாம் நினைத்து கயிற்றில் போடப்பட்டிருந்த முடிச்சு.  முடிச்சு உள்ள அந்த நுனி காற்றில் ஆடவே, அதை பாம்பு தலையை ஆட்டுகிறது என்று தவறாக எடையிட்டிருக்கிறோம், நாம்!

    ஆக, மூதாட்டியின் விளக்கு ஒளி இல்லாவிட்டால், அது பாம்பாகத்தானே நம் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கும்!

    கயிற்றைப் பாம்பாக நினைத்தது நமது வெளி அறிவு.  மூதாட்டியின் விளக்கின் ஒளி என்ற ஞானம் நம் மன இருட்டை அகற்றியவுடன் உண்மை தெரிகிறது.

    எனவே, பாம்பும், மாலையும்  கயிறும் ஒன்றுதான்.  அதைப் பாம்பாகவும், மாலையாகவும், கயிறாகவும் பார்ப்பது நமது பார்வையின் கோணங்களே!  இன்னும் கூர்ந்து கவனித்தால், அங்கு சிதறிக்கிடக்கும் தேங்காய் நார்களால் பின்னப்பட்டதே அந்தக் கயிறு என்றும் அறிவோம்.  அப்படியானால் தேங்காய் நாரும், கயிறும் ஒரே பொருளின் இரண்டு தோற்றங்கள்தானே!

    அதைத்தான் வேதமும், “தத்துவம் அஸி! அதாவது, அது நீயாக இருக்கிறாய்!” என்று எடுத்துரைக்கிறது.

    துரீயன் நான்காம் பகுதியில் சொல்லப்படும்படி இல்லாவிட்டால், வேதங்கள் சொல்வதெல்லாம் [தத்வமஸ்ஸி] என்பது பொருளற்றதாக அல்லவா ஆகிவிடும்!

    கயிறு பாம்பாகவும், முடிச்சு தலையாகவும், காற்றில் அது ஆடுவது பாம்பின் அசைவுபோலத் தோற்றமளிப்பதும், அதுவே இன்னொருவர் கண்ணுக்கு மாலையாகத் தோன்றுவதும் அவரவர் அறிவுக்குத் தகுந்த மயக்கம்தானே!

    அதுபோலத்தான் ஆத்மனும் விழிப்பு, கனவு, ஆழ்உறக்க நிலைக்குத் தகுந்தவாறு தோற்றத்தைத் தருகிறான்.

    பாட்டியின் விளக்கு ஒளி இருவிதப்பட்ட தோற்றங்கள் [பாம்பு, மாலை] தானாக அழிந்தொழிந்துபோவது போல, துரீய நிலையில் ஆத்மனின் மற்ற மூன்று தோற்றங்களும் தானாகவே மறைந்துபோகின்றன.  துரீய நிலையில் [அந்நிலையை அடைந்தவுடன்] வேறெந்த அறிவோ, முயற்சியோ தேவைப்படுவதில்லை —  ஏனெனில் அனைத்தும் தெளிவாகி விடுகிறது.

    இத் துரீய நிலை பற்றி அடுத்துக் காண்போம்…

     … இருப்பினும் ஐயம் எழுகிறது.

    “பாம்பு, மாலை, கயிறு, தேங்காய் நார் எல்லாம் ஒன்றே என்று சொல்லிவிடலாம்;  ஆயினும் ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அறிந்த எல்லாம் மறைந்து போகின்றனவே!  அப்படியென்றால் ஆழ் உறக்கநிலைக்கான ப்ராக்ஞனைப் பற்றி  ஒன்றும் சொல்லவில்லையே!  ஆழ்உறக்கநிலையை யார் அறிவார்?” என்ற கேள்வி வைக்கப்படுகிறது.

    இல்லவே இல்லை என்கிறார் ஆதி சங்கரர்.  எப்படி?  ஒரு சிறிய உதாரணத்துடன் விளக்குவோம்.

    தொலைகாட்சி அலறிக்கொண்டிருக்கிறது.  குழந்தைகள் விளையாட்டில் ஒருவரோடொருவர் அடித்துக்கொண்டு உரக்க ஒலி எழுப்புகிறார்கள்.  வீட்டில் இருப்பவர்கள் உரக்கப் பேசிக்கொண்டிறிருக்கிறார்கள்.

    இதை எவற்றையும் பொருட்படுத்தாது கனவற்ற ஆழ்உறக்க நிலையில்  ஒருவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி பேரிரைச்சலில் சோஃபாவில் உறங்குகிறாரே, படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்கட்டும் என்று கரிசனத்துடன் எழுப்புகிறாள் அவரது மனைவி.

    “இந்த இரைச்சலில் எப்படி உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது?  படுக்கையில் போய்ப் படுங்கள்!” என்று அன்புடன் கடிந்துகொள்கிறாள்.

    “நான் அசந்து, ஆனந்தமாகத் தூங்கிவிட்டேன்.  இகலோகமோ, பரலோகமோ, எதுவுமே எனக்குத் தெரியவில்லை.” என்று பதில் வருகிறது.

    தன்னுணர்வு இல்லாவிட்டால் —  தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாமலும், உறங்கும்போது தான் என்ற உணர்வு இல்லாமல் இருந்தும் —  ஆழ்ந்து தூங்கினோம் என்று எப்படி உணரமுடியும்?  அந்தத் தன்னுணர்வு – ஆத்மனின் மூன்றாம் பகுதியான ப்ராக்ஞன்தானே – அந்த “ஆழ்ந்து உறங்கினேன்” என்ற முடிவை, ஒரு சாட்சியாக இருந்து கூறமுடியும்!

    ஆனால் நான்காம் பகுதியான துரியனை அப்படி உணர முடியாது.  அங்கு நான் என்ற உணர்வே இல்லை.  அதனால்தான் அவர் காண முடியாதவன், எண்ணங்களால், நாம் வெளியுலகில் கண்டு அறிந்து, செயல்களால் உணர்ந்து அறியமுடியாதவன் [அவ்வியவஹார்யம்], வாதங்கள் மூலமோ, கல்வி மூலமோ அறிய இயலாதவன்.  அதே ஆத்மன்தான் விழித்திருக்கும்போது வைச்வாநரனாகவும், கனவுலகில் ஒளிபொருந்திய தைஜஸனாகவும், ஆழ் உறக்கத்தில் எண்ணக்குவியலான, அனைத்தையும் அறிந்த ப்ராக்ஞனாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட துரீயனாக [ஒரே பரம்பொருளின் – பரமாத்வாவின் — பிரம்மனின் {பிரம்மா அல்ல} — பொழிப்பாக, கருத்துரையாக, சாரமாக இருக்கிறான் [ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம்].  இது மறை கூறும், “அஹம் ஏவ ப்ரஹ்மன்; ப்ரஹ்ம ப்ராஹ்மைவ அஹமஸ்மி [நானே பரம்பொருள்; பரம்பொருளுக்கும் பரம்பொருளாக நான் இருக்கிறேன்]” கூற்றை உறுதி செய்கிறது.

    எல்லாவிதமான பண்புகளும், குணங்களும், கற்பிதங்களும், ஆத்மனின் மூன்று நிலைகளும், அவற்றின் “உணர்வுகளின் நிலைப்பாடுகளும்” துரீய நிலையில் மறுக்கப்படுவதால், துரீயனிடம் புலன்களால் உணரத்தக்க அனைத்தும் முடிவுறுகின்றன.  அதைத்தான் நிர்குணப் பிரம்மம் என்று ஆன்றோர் சொல்கிறார்கள்.

    இந்நிலை அமைதியானது [சாந்தம்], இந்நிலை மங்கலமானது [சிவம்],

    இந்நிலை உண்டு, இல்லை,  இடைப்பட்டது என்ற நிலைகள் எதுவும் இல்லாததால் “இரண்டற்றது [அத்துவைதம்] என்று பகரப்படுகிறது.

    அதனாலேயே இந்நிலை நான்காம் நிலை [துரீய, சதுர்த்த] என்று அறியப்படுகிறது. இந்நிலை மற்ற மூன்று தோற்ற {தோற்றம் அளிக்கும்] நிலைகளிலிருந்து தனித்தன்மை வாய்ந்தது.  இதுவே ஆத்மன் [பரமாத்மா]!

    இப்படிப்பட்ட ஆத்மனை, பரம்பொருளை, பிரம்மனை அறியவேண்டும் என்று நிறைவு செய்கிறது.

    அடுத்து என்ன?

    mu 8

    — 8

    சேஅயமாத்மாஅத்4யக்ஷரமோங்காரோ அதி4மாத்ரம் பாதா3 மாத்ரா மாத்ராஸ்’ச பாதா3 அகார உகாரோ மகார இதி ||                                                                                            

      8

    அந்த ஆத்மனே ஒரு அழிவற்றதே [சொல்லே] ஓங்காரம், அதன் மூலப்பொருளே [தனித்தனி எழுத்துக்களே] கால்கள்;  அகாரம் உகாரம் மகாரமேன்னும் எழுத்துக்களே கால்கள்.            

    8

    பதவுரை: அயம் இந்த[இப்படிப்பட்ட]; ஸ: – அவன்; ஆத்மா – ஆத்மன்;  அத்4யக்ஷரம் – மேற்சொன்ன அழிவற்ற [சொல்லான]; அதி4மாத்ரம் – மேற்சொன்ன எழுத்துக்களான; ஓங்காரம் – ஓம் என்னும் ஒலி; மாத்ரா பாதா3: – எழுத்துக்களே பாதங்கள்;  அகார உகார மகார இதி – அ, உ, ம் என்னும் ஒலிகளான ; மாத்ராஸ்’ச – எழுத்துக்களும் ; பாதா:3 –  கால்கள்.

    விளக்கம்இப்பொழுது ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கும் ஆத்மனுக்கும் உள்ள தொடர்பு சுட்டப்படுகிறது.  நான்கு பகுதிகளாகத் தோன்றும், பிரிக்கவே முடியாத {அத்துவைதமான], ஆத்மாவே ஓங்காரம், அது அ, உ, ம என்ற மூன்று எழுத்துகளை உடையது.  இந்த எழுத்துக்களே அதன் கால்கள்.  என்று முடிக்கிறது.

    அதாவது ஓம் எனப்படும், அ, உ, ம் அடங்கிய சொல்லே ஆத்மன், அதுவே பரம்பொருள் என்று ஓங்காரத்தின் நிலைப்பாட்டையும், அது என்ன என்பதையும் சுருக்கமாகச் சொல்கிறது.  ஓம் எந்த எழுத்துக்களைத் தனது கால்களாகக் கொண்டிருக்கிறது என்றும் காட்டுகிறது…

    … ஓம் என்னும் இந்தப் பிரணவ மந்திரத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்பதைக் கண்ணுறுவோம். 

    ஓம் என்னும் இந்த மந்திரமே மற்றபிற மந்திரங்களுக்கு மூலமாகும்.  இதுதான் எதற்கும் தோற்றுவாய்.  இதை வடமொழியில் பீ3ஜ[விதை] மந்திரம் என்று சொல்வார்கள்.  இது வேதங்களாயினும், தந்திரங்களாயினும் சரி, அனைத்துக்கும் மூலமானது.

    ஆன்மீகத்திற்கு வருமுன் அறிவியல்கொண்டு ஓம் ஏன் அனைத்துக்கும் மூலமாக அமைகிறது என்று எண்ணிப்பார்ப்போம்.

    ‘அ’ என்ற ஒலியை எழுப்புவதற்கு நமது வயிற்றிலிருந்து எழும் ‘உதானன்’ என்னும் காற்று, கழுத்தை அடைந்தவுடன் வாய் மெல்லத் திறக்கிறது.  உதானனான காற்று சிறிது வெளியேறியவுடன் ‘அ’ என்ற ஒலி பிறக்கிறது.  அதுவே முதல் ஒலி.  அதைத்தான் மாண்டூக்கிய உபநிஷத்து ஓங்காரத்தின் முதல் கால் என்று இயம்புகிறது.

    முயற்சியுள் அஆ அங்காப் புடைய – (நன்னூல்: பா 76)

    அடுத்தபடியாக ‘உ’ என்ற ஒலியை உன்னிப்பாகக் கவனிப்போம். அதற்கும் வயிற்றிலிருந்து வரும் காற்று உதடுகள் குவிந்து வாய் வழியாக வெளியேறுவதனால் அவ்வொலி பிறக்கிறது.

    உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே   (நன்னூல்: பா 78)

    ‘ம்’ என்ற ஒலி எழும்போது வாய் திறப்பதில்லை;  மாறாக மூடிக்கொள்கிறது.  தலையில் ஒருவித அதிர்வு உண்டாகிறது.  அது ஒங்காரத்தின்  மூன்றாவது கால் ஆகிறது.

    மீ கீழிதழுறப் பம்மப் பிறக்கும்   (நன்னூல்: பா 81)

    அகர முதல எழுத்தெல்லாம்’ என்னும் குறள் கூறுவதுபோல எந்த ஒரு மொழியை எடுத்துக் கொண்டாலும், அதனை ஒலிக்கும் முதல் முயற்சிக்கு நமது உயிர்க்காற்றான உதானன் நமது வயிற்றிலிருந்து வெளியேறி, திறந்த வாயின் மூலம் வெளிவருவதாலே ‘அ’ பிறக்கிறது.  ‘அ’ வுக்கும் ‘உ’வுக்கும், ‘ம்’மிற்கும் இடைப்பட்ட ஒலிகளே எந்த ஒரு மொழியின் ஒலிகளாக இருக்க இயலும்.

    ‘ம்’ என்று வாயை மூடியபின் ஒலிகள் இல்லை. ஒலிகள் இல்லையேல் மொழிகள் இல்லை.  மொழிகள் இல்லையேல் கருத்துப் பரிமாற்றம் இல்லை.  கருத்துப் பரிமாற்றம் இல்லையேல் எந்தச் செயல்பாடும் இல்லை.

    இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கு மட்டுமல்ல, இவ்வண்டத்தில் இயங்கும் எதற்கும் பொதுவானதே.  இயந்திரங்கள் இயங்கும்போது எழும் ஒலி, சக்கரங்கள் சுழலும்போது எழும் ‘ம்’ என்ற பேரொலி,  எப்படிப்பட்ட மொழியில் இருந்து பேசினாலும் தூரத்தில் இருந்து கேட்கும்போது இரைச்சலாகக் காதில் விழும் ஒலி ‘ம்’ ஆகத்தான் இருக்கும்.

    புயற்காற்று சுழற்றி அடிக்கும்போது நாம் கேட்கும் ‘உய்’ என்ற ஒளியின் முதலெழுத்து ‘உ’.

    தனிமையில் அமர்ந்து நாம் நம்மைச் சுற்றிக் கேட்கும் ஒலி ஓங்காரத்தின் முடிவாகவே இருக்கும்.

    அதற்கும் மேலே சென்று உள்ளினால், ஓம் என்பது ஒரு ஒலியோ, மொழிகளின் சுருக்கமான வடிவமோ, எல்லா மந்திரங்களிக்கும் மூலமோ மட்டும் அல்ல, இதற்கும் மேலான ஒன்று.  அது தனித்து நிற்பது, தானாக இருப்பது, அது இயலுலக அண்டத்தின் அதிர்வாகும் [cosmic vibration].

    நாம் எதையும், எவற்றையும், அனைத்தையும் பெயரிட்டே அழைக்கிறோம். இறைவனுக்கும் பலவிதமான பெயர்களைச் சூட்டியே துதித்து வழிபடுகிறோம்.

    அதுபோலவே ஓம் என்னும் சொல்லும், இறைவனின் பெயரைப்போலவே, இறைவனை விளக்குகிறது. அதன் தனித் தன்மையால் இறைவனை ஆழ்ந்து நினைக்க, தியானம் செய்ய சக்திகொடுக்கிறது.

    உபநிஷத்தின் முதலில் ‘ஓம்’தான் எல்லாம் — அதுவே ஆனது, ஆக்குவது, ஆகப்போவது எல்லாமே, –முக்காலத்தையும் கடந்தது — ஓம்தான் இறைவன் [பரம்பொருள், பிரம்மம்] என்று சொல்லப்பட்ட்டது. எனவே ஓம் பரம்பொருளின் பெயர் என்று அறியப்பட்டது.

    பின்னர் பரம்பொருளான இறைவனே ஆத்மன் என்றுரைத்து, ஆத்மன் நான்கு பகுதிகளாக இருக்கிறான் என்றும், அவை என்னென்னவென்றும் விளக்கப்பட்டது.  ஓம்தான் ஆத்மன் என்று பொருள்கொண்டதால்,  ஆத்மனைப் பற்றிய விளக்கம் தரப்பட்டது.

    இப்பொழுது ஓம் என்பதைச் சொல்லாக எடுத்துக் கொண்டு அந்தச் சொல்லின் வடிவம் எந்த எழுத்துக்களால் ஆகியது எனக் காட்டப்பட்டது.

    மிகவும் உள்ளி அறியும் உண்மைகளை — ஒன்றன்மேல் ஒன்றாக மூடிமறைக்கும் புலனறிவாலும் நனவு, கனவு, ஆழ்உறக்க நிலைகளால் ஏற்படும் மயக்கத்தாலும் உள்ள இயலாது என்ற காரணத்தாலேயே ஓம் என்று அழிவற்ற ஒன்றை மட்டுமே யாவுங்கடந்த மெய்மையின் வடிவமாக உள்ளவேண்டும் என்று உரைக்கப்படுகிறது…

     mu 9

    —  9

     ஜாக்ரிதஸ்தா2னோ வைஸ்’வாநரோஅகார: ப்ரத2மா மாத்ரா ஆப்தேராதி3மத்வாத்3வாப்வாப்னோதி ஹ வை ஸர்வான் காமானாதி3ஸ்ச ப4வதி ய ஏவம் வேத ||                                              

      —  9

     [எங்கும்] நிறைந்திருப்பதாலும், முதலிலிருப்பதாலும், விழித்திருக்கும் நிலையிலுள்ள வைஸ்வாநரனே முதலெழுத்தான [ஒலியான] அகாரமாகிறான்.    எவன் இதை அறிகிறானோ அவன் எல்லா விருப்பங்களையும் அடைந்து, முதன்மையானவன் ஆகிறான்.                                    

      – 9

     பதவுரை: ஆப்தே: [எங்கும்] நிறைந்திருப்பதாலும்;; ஆதிமத்வாது3முதன்மையாக இருப்பதாலும்; ப்ரதமா மாத்ரா – முதல் ஒலியான [எழுத்தான];  அகார: – ஆகாரமாக [அ என்னும் ஒலியாக]; ஜாக்ரிதஸ்தா2ன; – விழிப்பு நிலையிலிருக்கும்; வைஸ்வாநர:  – ஓவைஸ்வாநரன் [ஆகிறான்]; ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஸர்வானு காமானு – அனைத்து விருப்பங்களையும்; ஹ வை ஆப்நோதி – நிச்சயம் அடைகிறான்; ஆதி3ஸ்’ச – முதன்மையானவனும்; 4வதி –  ஆகிறான்..

    விளக்கம்ஓம் என்னும் மந்திரத்தின் முதல் ஒலியான ‘அ’வுக்கும் ஆத்மனின் முதல் பகுதிக்கும் உள்ள தொடர்பு இங்கு சொல்லப்படுகிறது.  உபநிஷத்தின் மூன்றாவது சொற்றொடரில் ஆத்மனின் முதல் பகுதியான – விழித்திருக்கும் — அதாவது நனவு நிலையில் செயல்படும் வைஸ்வாநரனே ‘அ’ என்னும் ஒலி என்று தெரிவிக்கப்படுகிறது.

    எதனால்?

    ‘அ’காரம் ஓமின் முதல் எழுத்து.  வைஸ்வாநரன் ஆத்மனின் முதல் பகுதி.avaisvanaaran

    அதுசரி, முதல் எழுத்து, முதல் பகுதி என்பதெல்லாம் சரிதான்.  இதைத்தவிர வேறென்ன விளக்கம் எனற கேள்வி நமது மனத்தில் எழுகிறது.

    உடனே அதற்கு விடை கொடுக்கப்படுகிறது:

    எங்கும் நிறைந்திருப்பதாலும் என்பதே அது.

    அது எப்படி?

    நாம் [ஆத்மன்] விழித்திருக்கும்போது எங்கும் நிறைந்திருக்கும் இவ்வண்டம் நமக்குப் புலப்படுகிறது.  எல்லா அறிவுகளும் நமது ஐம்பொறிகளாலும் [கண், காதும், மூக்கு, வாய், தொடும் உணர்வைத்தரும் உடற்பகுதி], ஐம்புலன்களாலும் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்] நமக்கு வந்து சேருகின்றன.  தனி மனிதராக நம்மால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ள இயலாவிட்டாலும், அண்டத்தில் இங்கேங்கெனாதாடி எங்கும் பரவி இருக்கும் திட, திரவ காற்றுப் பொருள்களாக இருக்கும் அனைத்தையும், பலகோடி, நூறுகோடி உயிரினங்களாக இருந்து அறிந்து கொள்கிறோம்.

    மேலும், ஒலியே அறிவு.  அந்த ஒலி மொழியாகப் பரிணமிக்கிறது.  மொழி தோன்றுவதற்குக் காரணமாக நாம் வாயைத் திறக்கும்போது முதலில் கிளம்பும் ஒலி ‘அ’ தான்.  அதுதான் முதல் உயிர் ஒலி, முதல் உயிரெழுத்து.  அதைத்தான் வள்ளுவர் பெருமான் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று திருக்குறளைத் துவங்குகிறார்.

    sivasakthi

    காளிதாசனும் “சொல்லும் பொருளும்போல இணைந்திருப்பவர்கள் [வாக3ர்த்தா2விவ சம்ப்ருக்த்தௌ]” என்று இறைவனையும், இறைவியையும் வணங்கித் தனது ரகுவம்ச மகாகாவியத்தைத் துவங்குகிறான்.

    இப்படிச் சொன்னவுடனேயே இதை எவன் அறிகிறானோ, அவன் எல்லா விருப்பங்களையும், முதன்மை நிலையையும் அடைகிறான் என்றும் உபநிஷத்து சொல்கிறதே, இப்பொழுது நாம் அகாரம்தான் வைஸ்வாநரன் என்று அறிந்துகொண்டோமே.  நமது விருப்பங்கள் நிறைவேறுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

    இப்படிக் கேட்பதும், “நிலத்தை தோண்டினால் தண்ணீர் கிடைக்கும், அதை அறிபவனுக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்!”.என்று எழுதியிருப்பதைப் படித்துவிட்டு, “எங்கே செல்வம்?” என்று கேட்பதைப் போலத்தான்.

    குழப்பமாக இருக்கிறதா?  இதில் குழப்பம் எதுவும் இல்லை.

    நிலத்தைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும்.  எனவே, முதலில் எங்கு தோண்டினால் தண்ணீர் நிறையக் கிடைக்கும் என்று அறியவேண்டும்.  அதற்குப் பிறகு தோண்டுவது எப்படி, அதற்கு என்ன கருவிகள் தேவை, எவ்வளவு ஆழம் தோண்டவேண்டும், தோண்டியபிறகு கிடைக்கும் தண்ணீரை எப்படி வெளிக்கொணர்வது, அதை எப்படிச் சேமிப்பது, அதனால் எவற்றை விளைவிக்கலாம் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

    அதன் பிறகும் தண்ணீரின் இதர பல பயன்களை அறிந்து அதற்கேற்பப் பயன் படுத்தினால், பயிர்கள் விளையும், விடுகளைக் கட்டத் தண்ணீர் பயன்படும், நாம் உணவு சமைக்கத் தண்ணீர் உதவும் என்று பலப்பல விஷயங்களைத் தெரிந்து அதன்படி செயல்படுத்தினால் எல்லாச் செல்வங்களையும் அடையலாம்.

    அதைப்போலத்தான், அகரத்தை அறிபவன் அனைத்து விருப்பங்களையும் அடையலாம் எனபது.

    நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்;  எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும்.  மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.  குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட.  மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!

    அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!

    அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…

    ***

    Share
  • மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் – 2

    ஒரு அரிசோனன்

    ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

    அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

    இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்…

    MMU 4

    ஸ்வப்னஸ்தா4னோ அந்தப்ப்ரக்ஞ: ஸப்தாங்க ஏகோநவிம்சதிமுக2: ப்ரவிவிக்தபு4க் தைஜஸோ த்3விதீய: பாத3:                                                                                                           — 4

     கனவுநிலையில் உள்ளறிவானவன், ஏழுறுப்புகளும், பத்தொன்பது வாய்களுமுள்ளவனும்.  நுட்பப்பொருள்களை விரும்பும் தைஜஸன் இரண்டாம் பகுதியாகிறான்.                          — 4

    பதவுரை: தைஜஸ: – தைஜஸன் [என்ற]; த்3விதீய: பாத3: –  இரண்டாம் பகுதியானவன்; ஸ்வப்னஸ்தான: – கனவில் நிலைபெற்றவன்; அந்த: ப்ரக்ஞ: – உள்ளுணர்வானவன்; ஸப்தாங்க: – ஏழு உறுப்புகளால் ஆனவன்; ஏகோநவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் படைத்தவன்; ப்ரவிவிக்தபு4க் – நுண்ணுணர்வால் அறியப்படும் பொருள்களை அனுபவிப்பவன்.

    விளக்கம்:  ஆத்மனின் இரண்டாம் பகுதிக்கு தைஜஸன், அதாவது ஒளிமயமானவன் என்ற பெயர் இடப்பட்டுள்ளது. ஏன் என்னும் கேள்வி எழுமுன்னரே அவன் உள்ளுணர்வானவன் என்று விடையும் கொடுக்கப்படுகிறது

    Vaiswanaran

    விழித்துக்கொண்டிருக்கும்போது நாம் வெளி உறுப்புக்களான கண், காது, மூக்கு போன்றவாய்களால் பார்த்து, கேட்டு, நுகர்ந்து அறிகிறோம் —  நமக்குள் இருக்கும் ஆத்மன் அறிகிறான்.  உறங்கும்போது, வெளியுறுப்புக்கள் வேலை செய்வதில்லை.  வெளியுறுப்புக்கள் மூலம் அறிந்துகொண்ட விஷயங்கள் நுண்ணறிவாகக் கனவுலகில் காணப்படுகின்றன.

    எனவே, கனவுலகில் ஆத்மன் அனுபவிப்பது எல்லாமே நுண்ணறிவால்தான்.

    உதாரணமாக, கனவில் ஒருவன் பயணிக்கலாம்.  ஒரு வினாடிக்குள் அவன் உலகத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குச் சென்றுவிடலாம்.  நனவுலகில் கற்பனையாக இருக்கும் அது, கனவுகில் ஒரு நிஜம்போலத் தோற்றமளிக்கிறது.

    நனவுலகில் வெளி உறுப்புகள் மூலம் உள்ளப்படும் அனைத்தும் கனவுலகில் நுண்ணுர்வாக உள்ளப்படுகின்றன.  ஆயினும் உடல் எந்த மாற்றத்திற்கோ உட்படுவதில்லை.  கனவில் நம்மை ஒரு மிருகம் கடித்துக் குதறலாம், ஆனால் உடலில் எந்த வலியும் ஏற்படுவதில்லை.  வெளியுலகில் நடக்கும் அனைத்தையும் ஆத்மன் கனவுலகிலும் அனுபவிக்க இயலுவதால், நனவுலகில் சொல்லப்பட்ட அத்தனை உறுப்புகளும், வாய்களும் தைஜஸனுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    கனவில் காண்பது அனைத்தும் மனத்திலாயே காணப்படுகிறது, கேட்கப்படுகிறது, உணரப்படுகிறது.  அவை வெளி உலகத்தின் பதிவுகளே!

    தைஜஸன் —  அதாவது, ஒளிமயமானவன் என்று ஏன் அழைக்கப்படுகிறான்?

    அவன் சாட்சியாக அனைத்தையும் அறிதல் திடப்பொருள்களாக அல்ல – ஒளிரும் வடிவங்களாகவே.  வைஸ்வாநரன் வெளியில் காணும் திடப்பொருள்களால் அறிந்தால், தைஜஸன் எண்ணங்களாகவும், பதிவுகளாகவுமே அறிகிறான்.

    ஆதலால் அவனது அனுபவங்கள் நுட்பமாக, சூட்சுமமாகவே இருக்கின்றன.

    ஆத்மனின் மற்ற இரண்டு நிலைகள் என்ன?  அவன் எப்படி அறிகிறான்?  எப்படி உணர்கிறான், எதை, எப்படி அனுபவிக்கிறான்?

    அதை அடுத்த சுலோகம் சொல்கிறது…

    MMU 5

    யத்ர ஸுப்தோ ந கஞ்சன காமம் காம்யதே ந கஞ்சன ஸ்வபனம் பஸ்யதி  தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தா2ன ஏகீபூ4த: ப்ரக்ஞானக4ன ஏவாநந்த3மயோ ஹ்யானன்த3பு4க் சேதோமுக2: ப்ராக்ஞஸ்த்ரீதீய: பாத3:                                                                                                     — 5

    எங்கு தன்னறிவில்லாதவன் [உறங்குபவன்] ஒரு விருப்பத்தையும் விரும்புவதில்லையோ, ஒரு கனவையும் காண்பதில்லையோ, அது ஆழ்ந்த உறக்கநிலை [சுஷுப்தி ஆகிறது].  ஆழ்உறக்கநிலையில் [இருக்கும் ஆத்மன்] ஒன்றாகவே ஆனவனாகவும், அறிவின் குவியலாகவும், ஆனந்தமே உருவாகவும், ஆனந்தத்தை அனுபவிப்பவனாகவும், அறிவே முகமாவும் [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக], அறிவாளியாகவும் மூன்றாம் பகுதியாகவும் இருக்கிறான்.                                                               — 5

    பதவுரை: யத்ர – எங்கு;  ஸுப்த:[ஆழ்ந்து உறங்கும்] தன் நினைவு இல்லாதவன்;  காமம் கஞ்சன ந காமயதே – ஆசைப்படு[ம் பொருள்களில்]தலில் சிறிதும் விருப்பபடுவதில்லையோ;  ஸ்வபனம் கஞ்சன ந பஸ்யதி – கனவுகள் சிறிதும் காண்பதில்லையோ;  தது – அது;  ஸுஷுப்தம் – ஆழ்உறக்கநிலை [ஸுஷுப்தம் ஆகிறது];  ப்ராக்ஞ: – அறிவாளியான [ஆத்மன்];  ஸுஷுப்தஸ்தா2ன – ஆழ்உறக்கநிலையில்;  ஏகீபூ4த: – ஒன்றாகவே [எதிலிருந்தும் வேறுபடாமல்] இருக்கிறான்;  ப்ரக்ஞானக4ன ஏவ; – [அனைத்து] அறிவின் குவியலாகவே;  ஆநந்த3மய: ஹி – ஆனந்தத்தின் உருவமாகவே;  ஆனன்த3பு4க் – மகிழ்ச்சியைத் துய்ப்பவனாக;: சேதோமுக2: – அறிவையையே முகமாகவும்கொண்டு [கனவுக்கும் நினைவுக்கும் பாலமாக/கதவாக]; த்ரீதீய பாத3 மூன்றாம் பகுதியாகிறான்.

    விளக்கம்:  இந்தச் செய்யுளில் ஆழ்உறக்கநிலை, அல்லது ஸுஷுப்தி விவரிக்கப்படுகிறது.  மனிதன் உறங்கும்போது இருவிதமான உறக்கநிலைகளில் இருக்கிறானென்று அறிவியல் சொல்லுகிறது. கனவுகளுடன் கூடிய உறக்கத்தை REM (Rapid Eye Movement) sleep என்றும், கனவுகளில்லா உறக்கத்தை NREM (Non-Rapid Eye Movement) sleep என்றும் உறக்க வல்லுனர்கள் பிரித்திருக்கிறார்கள்.

    மேலும், கனவில்லா உறக்கத்தில் எண்ணங்கள், நினைவுகள் இருக்கின்றன, ஆனால் அவை சிதறல்களாக இருக்கின்றன என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இதையே மாண்டூக்ய உபநிஷத்து அறிவின் குவியல் என்று குறிப்பிடுகிறது.

    அதுமட்டுமா, ஆழ்ந்த உறக்கத்தில் உடல் தன்னை பண்டை நிலைமைக்குத் திரும்பக்கொணர்கிறது என்றும் அறிவியல் கூறுகிறது.  கட்டற்ற மகிழ்ச்சி நிலையில் இருக்கும்போது உடல்நலம் தேறுகிறது என்பதை நாம் அறிவோம்.  ஆகவே, ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருக்கும்பொது உடல் அன்றாடம் ஏற்படும் தேய்மானத்தைச் சரிசெய்கிறது.

    இன்னும் ஒன்று —  ஆழ்உறக்க நிலையிலிருக்கும்போது ஆணவம் [ego] மறைகிறது.  அங்கு ஐம்புலன்களின், ஐயுறுப்புகளின் தொடர்பும் தாற்காலிகமாக விட்டுபோகிறது.  அங்கு நாம் மறைந்துவிடுகிறோம் — நமது பெயர், நமது உள்ளறிவு, நமது விருப்புவெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு ஏழை செல்வந்தர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, — இவை எல்லாமே மறைந்துதான்போய்விடுகின்றன.  அப்படிப்பட்ட நிலையில் ஏகீபூ4த”மாக, ஒன்றிப்போன நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை.

    நமது துயர்கள், இடுக்கண்கள், தேவையற்ற பூசல்கள் நாம் விழித்திருக்கும்போதும், கனவுகாணும்போதும்தானே உண்டாகின்றன!  தூங்குபவருக்கு அது ஏது!

    அந்தநிலையில் நாம் துய்ப்பது ஆனந்த – மட்டற்ற மகிழ்ச்சி நிலைதானே!

    dreamless sleep

    ஆத்மனின் மூன்றாம் பகுதி சேதோமுகன் என்றும் சொல்லப்படுகிறது. ஆத்மனின் இப்பகுதியை நம் மனத்தின் விழிப்புநிலை — விழித்திருக்கும்போது நாம் பெறும் பட்டறிவாகத் தோன்றும் அனுபவங்கள் – இவைதான் விழிப்புக்கும் கனவுநிலைக்கும் இடையே உள்ள கதவு என்றும் அறியலாம்.

    மேலும் இந்நிலையில் இருக்கும் ஆத்மனை ஏன் சிறந்த அறிவாளி என்று கூறவேண்டும்?

    விழித்திருக்கும் நிலையிலும், கனவுலகில் இருக்கும் நிலையிலும் ஆத்மனின் அறிவு மாறுபாட்டை உடையதாகவே இருக்கிறது.  அதாவது விருப்பு-வெறுப்புகள், பகை, நட்பு, உறவுகள், சமயம், சாதி, மொழி, நாடு, ஏழை-செல்வந்தர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற நினைப்பு, வலிந்தவர், மெலிந்தவர் என்ற இறுமாப்பு, ஆண், பெண் என்ற உணர்வு, இவை எல்லாமே இருக்கின்றன.

    ஸுஷுப்தி [ஆழ்உறக்க] நிலையில் இருக்கும்போது இந்த அறிவுக்கு எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை.  எல்லாமே ஒன்றுதான். ஆக அறிவு அறிவாகவே, மாறுபாடுகள் இன்றி, வெளிஉலக அனுபவங்களால் ஏற்பட கலப்பு இல்லாமல் தூய அறிவாகவே உள்ளது. இப்படி இருக்கும் ஆத்மனை அறிவாளி என்றே மாண்டூக்ய உபநிஷத்து அறிவிக்கிறது.

    இப்படி ஆழ்உறக்க நிலையில் இருக்கும் இந்த ஆத்மன் யார்?

    அடுத்த செய்யுளில் விளக்கம் கிடைக்கிறது…

     MU 6

    ஏஷ ஸர்வேஸ்வர: ஏஷ ஸர்வக்ஞ எஷோஅந்தர்யாம்யேஷ யோனி: ஸர்வஸ்ய பிரப4வாப்யயௌ ஹி பூ4தானாம்.                                                                                               — 6

    இவர் எல்லாவற்றிற்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் இவர் உள்ளில் இருப்பவர், உண்டானது, உண்டானவைக்கும், அழிபவைக்கும்   இவரே மூலத்தானம் – 6

    பதவுரை: ஏஷ – இவரே;  ஸர்வேஸ்வர:அனைத்துக்கும் இறைவன்;  ஏஷ – இவரே;  ஸர்வக்ஞ: – அனைத்தும் அறிந்தவர்;  ஏஷ – இவரே;  அந்தர்யாமி – உள்ளே இருந்து இயக்குபவர்;  ஏஷ – இவரே;  ஸர்வஸ்ய யோனி: – அனைத்துக்கும் உற்பத்தித்தானம்;  பூ4தானாம் – உயிரினங்களுக்கேல்லாமே பிரபவ அப்யயௌ ஹி – தோற்றமும் முடிவுமாகவே [இருக்கிறார்].

    விளக்கம்:  ஆழ்உறக்கநிலையில் இருக்கும் ஆத்மனின் சிறப்பியல்புகள் இச்செய்யுளில் விளக்கப்படுகின்றன.  இவர் அனைத்துக்கும் இறைவன், இவர் அனைத்தையும் அறிந்தவர், அனைத்துக்கும் பிறப்பிடமாக இருக்கிறார், அதுபட்டுமன்றி, அனைத்துயிர்களின் தோற்றமும், முடிவுமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும் ஆத்மன் — அசைவின்றி, , தூய அறிவாக, எண்ணங்களின் குவியலாக இருக்கும் ஆத்மன், மேற்சொன்ன தொழில்களை எப்படிச் செய்ய இயலும் என்ற கேள்வி பிறப்பது நியாயம்தானே!

    நமக்குத் தெரிந்தவரை, ஜீவாத்மாவும் – உயிர்களுக்குள், உடலுக்குள் இருந்து நம்மை ஆட்டிவைக்கும் ஆத்மா என்று நம்மால் உணரப்படும் ஒன்றும் — இறைவனும் [பரமாத்வாவும்] வெவ்வேறு என்றே எண்ணுகிறோம்.  இந்த உபநிஷத்தைப் பொறுத்தவரை யாவும் ஒன்றே!  ஒரே சத்தியமான ஒன்றேதான் இறைவன்.  அந்த இறைவனின் ஒரு பகுதியே ஆத்மன்.  அந்த ஆத்மனின் ஒரு பகுதியே —  மூன்றாம் நிலையில் இருக்கும் ப்ராக்ஞனே பரம்பொருளான இறைவனின் ஒரு பகுதி என்று மாண்டூக்ய உபநிஷத்து உரைக்கிறது. ஏனெனில் அனைத்துமே பரம்பொருள் என்று இரண்டாம் செய்யுளில் சொல்லப்பட்டது.

    அப்படியானால், உயிர்கள் [ஜீவாத்மா] அனைத்துமே இறைவனிடமிருந்து பிரித்தறிய இயலாதவை ஆகின்றன

    அது எப்படி இயலும்?

    கடலில் இருக்கும் நீரில் ஒரு திவளையைத் தனியாகப் பிரித்தேடுத்தாலும், அதைக்கூறுபோட்டு ஒரு நீரணுவாகப் பிரித்தாலும், அது அக்கடலின் ஒரு பகுதியே!

    எனவே, மாபெரும் கடலை இறைவன் என்றால், அக்கடலான இறைவனின் [பரம்பொருள் – பரப்பிரம்மம்] பிரிவுகளே ஹிரண்யகர்ப்பன் என்று அழைக்கப்படும் கனவு நிலையில் இருக்கும் அத்மனின் ஒரு பகுதியும், விராட் என்று சொல்லப்படும் நனவு நிலையில் இயங்கும் ஆத்மனின் ஒரு கூறும் ஆவார்கள்.

    இந்த ஈசனே அனைத்துக்கும் முதன்மையானவன்.  இவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறான்.  இவன் அறியாததொன்றும் இல்லை;  இவன் எல்லா உணர்வும்களையும் கடந்து —  இருமை நிலைகளைக் கடந்து [இன்பம்-துன்பம்; மகிழ்வு-துயரம்; இனிமை-கடுமை] ஆனந்தநிலையில் லயித்திருக்கிறான்.

    இதிலிருந்து  நாம் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.  இறையறிவு பொருள்களை அறிவதால் ஏற்படுவதல்ல;  உணர்ந்து அறிவதால் ஏற்படுவதல்ல;  எந்தவொரு அறிவும், உணர்வும் அனைத்தறிவு ஆகாது.

    நாம் வெளியுலகில் இருக்கும் எதை அறிந்து உணர்ந்தாலும், அவற்றின் தன்மையை அறிந்துகொண்டாலும், அவற்றின் மீது எப்பொழுதும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டைச் செலுத்த இயலாது.

    “அறிவு சக்தி” என்று சொல்லப்பட்டாலும், அது சக்தி ஆகாது.   வெளி அறிவு – நமது ஐம்புலன்களினாலும் அறியப்படும் அறிவு —  நமது ஐயுணர்வுகளினாலும் அறியப்படும் அறிவு முழுச் சக்தியையும் நமக்கு வழங்குவதே இல்லை.

    உயிர்கள் விழித்திருக்கும் நிலையில் இருக்கும்போது அதன் அறிவு ஐம்புலன்களினால் கிடைக்கும் ஒன்றே!  இறைவனின் அறிவு உள்ளுணர்வாகும்.   எனவேதான் அவர் கடவுள் —  உள்ளத்தைக் கடந்தவர் என்று உள்ளப்படுகிறார்.

    இறைவனிடமிருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன;  அவனுல்லேதான் அனைத்தும் அடங்குகின்றன.

    அவனின் சக்தியில் ஒருசிறு பங்கே நமக்குக் கிடைக்கிறது.  அதைத்தான் நாம் நனவுலகிலும், கனவுலகிலும் கையாளுகிறோம்.

    ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.

    அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை.  அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.

    அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.  உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா?  ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா?  அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.  இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…

    [வளரும்]

    Share
  • மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 1

    ஒரு அரிசோனன்

     எனது சில சொற்கள்:  வல்லமையில் வெளியான “கம்பனும், வால்மீகியும்” ஒப்பீட்டுக் கட்டுரைகள் இன்னும் சில கதைகளுடன் புத்தகமாக வெளியானவுடன், பல தடவைகள் ஜெயபாரதன் உள்பட எனது நண்பர்கள்  தமிழில் கீதை, மற்றும் உபநிஷத்துகளைப் பற்றி  புதியபார்வையில் என்னை எழுதச் சொல்லிவருகிறார்கள்.

    ஆதி சங்கரர் விரிவுரை எழுதிய உபநிஷத்துகளுக்கு எந்தவொரு விளக்கம் நான் எழுதப்புகுந்தாலும் அது அளவுகடந்த, வடிகட்டிய முட்டாள்தனமேயன்றி வேறொன்றுமில்லை.  எனவே நான் அவர்களின் அன்புக்கட்டளையைத் தட்டிகழித்துக்கொண்டே வந்தேன்.

    பிறகு என் மனதும் அதையே சொல்லத் துவங்கியபோது ஒரு நப்பாசை எனக்குள்ளேயே தலைதூக்கியது.

    உடனே, “அட முட்டாளே!  என்ன செயல் செய்யத் துணிகிறாய்?  உனக்கு என்ன அறிவு இருக்கிறது என்று, ஆழம் தெரியாமல் காலைவிடப்பார்க்கிறாய்!” என்று என் உள்ளறிவு என்னை எச்சரித்தது.

    “நீ எதையும் எழுத ஆரம்பித்தால், உன்னைவிட அறிவுமிக்கவர்கள், உன்னுடைய அறிவின்மையைச் சுட்டிக்காட்டி, உன்னை நார்நாராகக் கிழித்துத் துவைத்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்!’  என்றும் பயமுறுத்தியது.

    இருப்பினும், எனது உள்ளறிவின் எச்சரிக்கையையும், அச்சுறுத்தலையும்மீறி, எழுதத்துணிந்தேன்.  அதற்க்குக் காரணம்…

    உபநிஷத்துகளுக்கு இதுவரை நான் பார்த்த விளக்கங்கள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழில் ஒரு சிலவே இருக்கின்றன.  எனவே, ஆதி சங்கரரின் விளக்கவுரை, சுவாமி கம்பீரானந்தா, சுவாமி நிகிலானந்தா, சுவாமி சின்மயானந்தா, சுவாமி கிருஷ்ணானந்தா இவர்களின் விளக்கத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்ததை எழுதப்போகிறேன்.

    தமிழில் உபநிஷத்துகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவலே என்னைத்தூண்டுகிறது.

    வடமொழியில் எழுதிய செய்யுள்களுக்கு எனது சிற்றறிவைக்கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பு, பதவுரை எழுதி, ஆச்சரியாரிகளின் விளக்கவுரைகளின் கலவையைக் கலந்து எனது சக்திக்கு இயன்றவரை எளிதாக இயம்பியிருக்கிறேன்.

    சில சொற்கள் என்பது பல சொற்களாகப் பல்கிப் பெருகிவிட்டன.  இத்துடன் அதை நிறுத்திக்கொண்டு, உபநிஷத்துக்கு வருகிறேன்.

    படிக்கும் முறைதமிழில் வடமொழி ஒலிப்புகள் இல்லை என்பதால் 2,3,4 என்ற எண்களை மேற்குறியாகக் கொடுத்திருக்கிறேன்.  தேவநாகரி தெரியாதவர்களும் ஒலிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றே நம்புகிறேன்.

     உபநிஷத்தைப்பற்றி:  எல்லா உபநிஷத்துகளிலும் மிகவும் சிறியதான இந்த உபநிஷத்து அதர்வ வேதத்தில் உள்ளது.  மாண்டூகர் என்ற முனிவரால் கேட்கப்பட்டு எழுதப்பட்ட இதில் மொத்தம் பன்னிரண்டு சொற்றொடர்களே உள்ளன.  இது ஓம் என்ற பிரணவ மந்திரம், பிரம்மம் [பரம்பொருள்], ஆத்மா, ஆத்மாவின் [மனிதனின்] நான்கு நிலைகள்[உள்ளுணர்வுகள்], இவற்றைப்பற்றி ஒரு சூத்திரமாக [formula] ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் சொல்கிறது.  இந்த உபநிஷத்தே அத்துவைத தத்துவத்தின் அடிப்படையாக அமைகிறது.  பிரம்மமும் [பரம்பொருளும்] ஆத்மாவும் ஒன்றே என்று நிறுவுகிறது.

    ஆகையால், ஆதிசங்கரரின் பரமகுருவான கௌடபாதர் இதற்கு விளக்கவுரை [காரிகை] எழுதியிருக்கிறார். இந்துசமயத்தின் ஒரு பெரும்பிரிவான அத்துவைத தத்துவத்தை நிலைநிறுத்த ஆதிசங்கரரின் மனத்தில் கருவாகப் பரிணமித்தது இந்த உபநிஷத்தும், கௌடபாதரின் காரிகையும்தான்.

    மேலே தொடர்வோமா…

    MU1

     ஒமித்யேதத3க்ஷரமித3ஹும் ஸர்வம் தஸ்யோபவ்யாக்2யானம்

    பூ4தம் ப4வத்3ப4விஷ்யதி3தி ஸர்வமோங்கார ஏவ

    யச்சான்யது த்ரகாலாதீதம் தத3ப்யோங்கார ஏவ                                                     — 1

     

    ஒமெனுமிந்த அழியாததே இவை எல்லாம்.  அதன் விளக்கமாவதிது.

    ஆனது, ஆகியிருப்பது, ஆகப்போவதென்ற எல்லாமே ஓங்காரம்தான்.

    இவையன்றி முக்காலங்களைக் கடந்தததுவும் ஓங்காரமே.                                       — 1

     பதவுரை:  ஒமிதி – ஓம் என்ற; ஏத3து – இந்தஒரு; அக்ஷரம் – அழிவற்ற ஒன்று [சொல்]; இத3ம் ஸர்வம் – இது எல்லாம்.

    தஸ்ய – அதன்; உபவ்யாக்2யானம் – விளக்கமாவது;  பூ4தம் – ஆனது;  ப4வது3 – ஆகிவருவது; ப4விஷ்யது3 – ஆகப்போவது;  இதி ஸர்வம் – இது எல்லாம்; ஓங்கார ஏவ – ஓங்காரம்தான்.

    த்ரிகாலாதீதம் – [இறந்த, நிகழ், எதிர்] மூன்று காலங்களைக் கடந்த [அப்பாற்பட்ட];   யச்சான்யது – மற்ற எதுவாகிலும்;  தது3 அபி ஓங்கார ஏவ – அதுவும் ஓங்காரம்தான்.

     விளக்கம்இந்த முதல் சொற்றொடரில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் விளக்கப்படுகிறது. எழுத்தையும், சொல்லையும், பேச்சையும் வடமொழியில் அக்ஷரம் என்று சொல்கிறார்கள்.  ஷரம் என்றால் அழிவது என்று பொருள்.  எனவே, அக்ஷரம் என்றால் அழியாதது என்றே பொருள்கொள்ளவேண்டும். ஏன்?  மனிதன் அழியலாம், ஆனால் அவனது சொல் அழிவதில்லை;  பெரியோர் சொல்லிவைத்த சொற்கள் இன்றும் அழியாமல் நம் நினைவில் நிற்கின்றன.  ஒரு மொழி அழிந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்கள் அழிவதில்லை.  ஆகையால் சொல் என்பது அக்ஷரம், அதாவது அழிவற்றது என்று ஆகிறது.

    எனவே ஓம் எனும் அழிவற்ற இது என்று மாண்டூக்ய உபநிஷத்து துவங்குகிறது.

    இது எல்லாமே என்றால், நம்மால் அறிய முடியும், முடியாத எல்லாமே என்று விளக்கமாகிறது.  இது எல்லாமே ஓம் தான் என்று சொன்னபிறகு அதன் பொருளை விவரிக்கிறது.

    ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது எல்லாமே ஓங்காரம்தான் என்று அழுத்திச் சொல்கிறது.  பெரும் வெடிப்பு [Big Bang} நிகழ்ந்தபின் இந்த அண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவாளிகள்.  அப்படித் தோன்றிய அண்டம், பெரும் மாறுதலை அடந்த்துகொண்டிருக்கும் அண்டம், இனி மாறப்போகும் அண்டம் எல்லாமே ஓங்காரம்தான் என்கிறது.  மேலும் விளக்க, நம்மால் காண முடிவது மட்டும் அல்ல, காண இயலாத, உணர இயலாத மூன்று காலத்திலும் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் மற்றவை எல்லாமே ஓங்காரம்தான் என்னும்போது…

    ஒரு சொல்லானது எல்லாமாக எப்படி இருக்க இயலும் என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.  அப்படியானால், அந்தச் சொல்லான ஓம் என்ன என்று அறிய ஆவல் கூடுமல்லவா?  அதற்கு விளக்கம் அடுத்த சொற்றொடரில் பிறக்கிறது.

    அதற்குமுன் முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த என்ற குறிப்பீட்டைப் பார்ப்போம்.

    நமக்கு மிகவும் அருகில் உள்ள நட்சத்திரம் [விண்மீன்] பிராக்சிமா சென்டாரி [Proxima Centauri]  நமது பூமியிலிருந்து நாலேகால் ஒளிஆண்டு தூரத்தில் இருக்கிறது.  அதை நாம் பார்க்கும் பொது, நாலேகால் ஆண்டுகளுக்குமுன் அது இருப்பதைத்தான் இன்று நாம் காண்கிறோம்.

    எனவே நாம் காண்பது இறந்தகாலத்தைத்தான்.

    அதைப்போல மிகவும் தள்ளி இருக்கும் மற்ற விண்வெளி மண்டலங்கள் இன்னும் பல நூறு/ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன.  எனவே அவற்றை நமது தொலைநோக்கிகள் [telescopes] காணும்போது.  அவ்வளவு பழைய காலத்தில் இருக்கும் ஒன்றையே நாம் காண்கிறோம்.  மேலும் கருந்துளைகளில் [black-holes] காலமே வளைக்கப்பட்டுவிடுகிறது என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    இந்தக் கூற்று, முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த ஒன்று நிகழக்கூடும், நிகழுகிறது என்பதுதானே!

    இதை நமது முனிவர்கள் கேட்டுணர்ந்து இருப்பதை வானியல் உறுதிசெய்கிறது.

    ஓம் என்ற அழிவற்ற ஒன்றின் விளக்கம் தொடர்கிறது.

    mu 2

    ஸர்வஹும் ஹ்யேதது3 ப்ரஹ்மாயமாத்மா ப்ரஹ்மா

    ஸோஅயமாத்மா சதுஷ்யாது                                                                           — 2

     எல்லாமே அந்தப் பரம்பொருள்தான். இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்.

    இந்த ஆத்மன்[மா] நான்காக பகுதிகளாக இருக்கிறான்.                                            — 2

     பதவுரை:   ஏதது ஸர்வம் – இம்மாதிரியான எல்லாம்;   ப்ரஹ்ம ஹி – பிரம்மம்[பரம்பொருள்]தான்;  அயம் ஆத்மா ப்ரஹ்ம – இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்;   ஸ அயம் ஆத்மா – இந்த ஆத்மா என்பவனும்;  சதுஷ்யாது –  நான்கு [கால்] பகுதிகளாக இருக்கிறான்.

    விளக்கம்:  இங்கு ஆத்மாவுக்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பும் அத்துடன் ஒங்காரத்திற்கும் உள்ள தொடர்பும் கொண்டுவரப்படுகிறது.

    முதல் செய்யுளில் ஓங்காரம்தான் இங்கு இருப்பது, இருந்தது, இருக்கப்போவது எல்லாம் என்றும், ஓங்காரம் முக்காலத்திற்கும் அப்பாற்பட்டது என்றும் கூறப்பட்டது.  இப்பொழுது இதெல்லாம், அதாவது ஓம் குறிக்கும் எல்லாமே பரம்பொருள், பிரம்மமே என்றுரைக்கப்பட்டது.

    இந்த ஒரு சொற்றோடரைக் கவனிப்போம். ஓம் என்பது காலவட்டத்திற்குள் உட்பட்டது, அதற்கு அப்பாற்பட்டதும் என்று சொல்லிவிட்டு, அவை எல்லாம் பரம்பொருளே [பிரம்மமே] என்றால், இங்கு நாம் காணும், கண்ட, காணப்போகும், மற்றும் காலச்சக்கரத்திற்கு அப்பாற்பட்ட — அதாவது நமது அறிவுக்கு, புலனுக்குக் கட்டுப்படாத, கண்டறிய இயலாத எல்லாமே பரம்பொருள் என்று உறுதி செய்யப்படுகிறது.

    அடுத்தபடியாக, பரம்பொருளே ஆத்மா என்று இணைப்பு கொடுக்கப்படுகிறது.

    இப்படிச் சொன்னவுடன் நம் மனதில் எழும் கேள்வி என்னவாக இருக்கும்?

    ஓம்தான் எல்லாம் என்றும் சொல்லி, அதுவே பரம்பொருள் என்றும் சொல்லி, அதுதான் ஆத்மா என்றால், அந்த ஆத்மா என்பது என்ன என்பதாகத்தானே இருக்கும்?

    இந்த ஆத்மா என்ற ஒன்று நம் உடலுக்குள் இருக்கிறது, அதுதான் நாம் என்று உணருகிறோம்.  இந்த ஆத்மாவைப் பற்றி பலவிதமான விளக்கங்களும், பலராலும் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இருந்தும் ஆத்மா என்றால் என்ன என்பது ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது.

    இந்த ஆத்மா நமது உடலுக்குள் இருக்கிறது என்றால் அது என்ன செய்கிறது, அதன் இயல்புகள் என்ன என்று அறியும் ஆவல் பிறக்கிறது.

    இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல, ஆத்மா நான்கு பகுதிகளாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

    நான்கு பகுதிகள் என்றால் நான்கு கால் பகுதிகள் என்றுதானே பொருள்?

    இந்த ஆத்மா என்று சுட்டப்படுகிறதே, அப்படியென்றால் இது, இந்த ஆத்மா நான்கு கால்கள் உள்ள ஒரு மிருகத்தைப்போன்றதா —  அல்லாது போனால், இரண்டுகால்களும் இரண்டு கைகளும் உள்ள மனிதனைப் போன்றதா — அல்லது ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதுபோல நான்கு பக்கங்கள் உள்ள கனசதுரமா என்றும் குழப்பம் ஏற்படுகிறது.

    “இந்த நான்கு பகுதிகளை எப்படி அறிந்துகொள்வது?” என்று மேலும் குழம்புகிறோம்.

    அந்தக் குழப்பத்தை நீக்குவதுபோல ஆத்மாவின் நான்கு பகுதிகளுக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

    ***

     MU 3

    ஜாக்ரிதஸ்தா2னோ ப3ஹிஷ்பிரக்ஞ: ஸப்தாங்க ஏகோனநவிம்சதிமுக2: ஸ்தூ2லபு4க்3வைஸ்வாநர: ப்ரத2ம: பாத3:                                                                                            — 3

     விழித்திருக்கும் நிலையில் வெளியறிவானவன், ஏழுறுப்புகளும் பத்தொன்பது வாய்களுமுள்ளவன்,  தெளிவாகப் புரிவதைச் சுகிக்கும் வைஸ்வாநரன்முதல் பகுதியாவான்.                           — 2

     பதவுரை:  வைஸ்வாநர: வைஸ்வாநரன்;  ஜாக்3ரிதஸ்தா2னோ – விழித்திருக்கும் நிலையில்; ப3ஹிஷ்பிரக்ஞ: –  வெளி[யில் நடக்கும் விஷயங்களை]அறிவுடைய; சப்தாங்க: – ஏழு உறுப்புகள் உள்ளவன்; ஏகோனவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் உள்ளவன், ஸ்தூ2லபு4க்3 – திடப்பொருள்களை அனுபவிப்பவன்; ப்ரத2ம: பாத3: – முதல் பகுதியாகிறான்.

     விளக்கம்:  இச்சொற்றொடர் ஆத்மனின் முதல் பகுதியைக் குறிப்பிடுகிறது.  எல்லாச் சமயங்களிலும் நம் உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை இயக்குவது ஆத்மா [self, soul] என்று உலகச் சமயங்கள் கூறுகின்றன.  நாம் விழித்திருக்கும் நிலை நம்மை இயக்கம் அந்த ஆத்மாவின் முதல் நிலை என்று பகரப்படுகிறது.

    அந்த முதல்நிலைக்கு வைஸ்வாநரன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ – இவ்வண்டமான – நரன் – மனிதன். அதாவது விஸ்வ+நரன் தெய்வீக சக்தி உள்ள மனிதன் [human].  இப்பெயர் தனி மனிதனுக்குக் கொடுக்கப்படவில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மொத்த அறிவையும் ஒரு மனிதனிடம் கொடுத்திருப்பதாக உருவகப்படுத்தப் படுகிறது.  [The Supreme Spirit or Intellect when located in a supposed collective aggregate of gross bodies]

    பரம்பொருளே ஆத்மன் என்று சொல்லிவிட்டு, அந்த ஆத்மனுக்கு நான்கு பகுதிகள் என்று சொல்லி, அந்த ஆத்மன் விழித்திருக்கும் நிலையில் வெளிஅறிவுடன் இயங்குகிறான் என்றால் – அவனுடைய புரிதல் வெளியுலகத்தில் இருக்கிறது என்று பொருள்.  அதுதான் அவனுடைய இயக்க நிலை என்றால் — அது நம் அனைவருக்கும் பொருந்துகிறது.  நமக்கு மட்டுமல்ல, நமக்குத் தெரிந்த அனைத்து உயிரினங்களுக்கும்

    நாம் வெளியுலகில் நடப்பதை வைத்துக்கொண்டுதான், நமக்கு வெளியில் நடப்பதின் மூலம்தான் நமது அறிவைப் பெறுகிறோம்.  அதை எப்படிப் பெறுகிறோம்?  அந்த விஸ்வாநரன் எப்படிப் பெறுகிறான்?

    அவனுக்கு ஏழு உறுப்புகளும், பத்தொன்பது வாய்களும் உள்ளன என்று கொடுக்கப்பட்டிருப்பதால் அவை என்னவாக இருக்க முடியும், அவை எப்படி வெளி அறிவைப் பெற உதவி செய்கின்றன என்பதை நோக்குவோம்.

    முதலில் ஏழு உறுப்புகள் எதுவாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

    விண்ணே அவனது தலை, சூரியன் கண், காற்றே உயிர்மூச்சு, வெற்றிடமே நடுப்பகுதி, தண்ணீரே அவனது சிறுநீரகம், நிலமே அவனது கால்கள், வேள்விக்கான நெருப்பே [அஹவனிய அக்னி –  கிருஷ்ண யஜுர்வேதம்] அவனது வாய் என்று சொல்லப்படுகிறது.

    இப்பொழுது 19 வாய்கள் எவை என்று நோக்கினால் அவை, நமது ஐம்புலன்கள் [கண், காது, மூக்கு, நாக்கு, தொடுஉணர்ச்சி உறுப்புகள்] — ஐந்து உணர்வுகள் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவை, தொடுதல் ஆகியவை] — ஐந்து உயிர் காற்றுகள் [பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்;  இந்து ஐந்து வகைக் காற்றுகளும் நம் உடலில் சக்தியை நிலை நிறுத்துகின்றன.] – மனம், அறிவு, ஆணவம், உணர்ச்சிகள் ஆகியவை.

    இவற்றை ஏன் வாய் என்று சொல்கிறார்கள்?

    இவைதான் உயிரினங்களின் அனுபவங்களின் –  பட்டறிவின் நுழைவாயில்கள்.  இவைகளின் மூலம்தான் உயிரினங்கள் தங்களது வெளி அனுபவத்தைப் பெறுகின்றன.

    மேலே சொல்லப்பட்ட உறுப்புகளும், வாய்களும் வெளி உலகத்தையே பார்ப்பதால், அவற்றையே அனுபவிப்பதால், ஆதமனின் அப்பகுதி வைஸ்வாநரன் என்று அழிக்கப்படுகிறது.

    நம்மை எடுத்துக்கொண்டாலே, நாம் உள்ளாக எதையும் உணர்வதில்லை.  நமக்குத் தெரியும், நாம் பகுத்தறியும் எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதே.  நமது ஐம்புலங்களாலும், ஐந்து உணர்வுகளாலுமே கிடைக்கின்றன. நமக்குத் தெளிவாகப் புரிவதை மட்டுமே நம்மால் அனுபவிக்க முடிகிறது.

    உடனே, நமது அறிவு ஒரு கேள்வியை எழுப்புகிறது:

    “ஆத்மன்தான் பிரம்மம் என்றால், அவன்தான் ஓங்காரம் என்றால், விண் [சுவர்க்கம்], சூரியன், பூமி, தண்ணீர், இன்னும் மற்றவை எல்லாம் தலை, உள்ளுறுப்புகள் என்று ஏன் சொல்லப்படுகின்றன?”

    விடையை அடுத்த பதிவில் காண்போம்…

    இப்படி விளக்குவது பொருத்தமற்ற ஒன்று என்று எண்ணவேண்டியதில்லை.  புலன்களால் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய அண்டத்தையும், கடவுளர்களின் இருப்பிடத்தையும் ஆத்மனை தெய்வீகமாக உருவகப்படுத்தும் ஒரு பகுதியாக [விராட்] என்று குறிப்பிடுவது இருமை என்ற நிலையை நீக்கி எல்லாம் ஒன்றே என்று பின்னால் நிறுவுவதற்கு அடிகோலுகிறது.

    இப்படி உரைப்பது —  ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

    அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

    இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்.

    ***

    Share