அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம்
ஒரு அரிசோனன்
பிள்ளையார் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இந்நன்நாளைக் கணேச சதுர்த்தி, விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை அமெரிக்காவிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
அப்படியிருக்கையில் முழுமுதற் கடவுளாக ஆனைமுகன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அது கொண்டாடப்படாமலிருக்குமா என்ன! ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா பிரம்மோத்சவ
மாகப் பதினோரு நாள்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கொண்டாடப்படுவதுபோல இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.
. இவ்வாண்டும் இத்திருநாளைக் கொண்டாட ஒருமாதம் முன்னதாகவே ஏற்பாடுகள் துவங்கின. ஆலயத்தைச் சேர்ந்த பல தன்னார்வத் தொண்டர்கள் கூடி விழாவை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டம்தீட்டத் துவங்கினர்.
பிரம்மோத்சவத்தைச் சீரும்சிறப்புமாக நடத்தவேண்டி, சமயக்குழு, உணவுக்குழு, நிதிக்குழு, செயற்குழு, பெண்டிர்குழு, தொடர்பியல்குழு என்று பல குழுக்கள் பிரிக்கப்பட்டு, அவற்றின் தலைவர்கள் இர்ண்டுமாதங்கள் முன்பிருந்தே வாராவாரம் கூடி, தத்தம் குழுக்களின் நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொண்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகளின் நிலைமைபற்றியும், உடனடித் தேவைகளைப் பற்றியும் கலந்துரையாடினார்கள். இவ்வுரையாடலில் கோவில் அர்ச்சகர்களும் கலந்துகொண்டு, ஆலோசனைகளையும் வழங்கினார்கள். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் இந்த மூன்று மொழிகளிலும் பிரம்மோத்சவத்தின் சிறப்புபற்றி ஒவ்வொரு அர்ச்சகரும் விவரிக்கும் விழியங்கள் பதிவுசெய்யப்பட்டு, கோவிலின் முகநூலிலும், இணையதளத்திலும் வலையேற்றப்பட்டன.
பிள்ளையார் என்றால் குழந்தைகளுக்குக் குஷிதானே! அவர்களில்லாமல் பிள்ளையார் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடுவது?
எனவே, “என் கணேசனைச் செய்வேன்” [Make my Ganesha] என்ற ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. கோவில் தலைமைச் சிற்பி சண்முகநாதன் பிள்ளையார் செய்வதற்கென்று பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் திருவுருவத்துடன் சில திருவுருவங்களின் அச்சுகளைத் தயாரித்தார்.
கோவில் தன்னார்வலர்கள் ஃபீனிக்ஸ் பெருநகரில் பலவிடங்களில் “கணேசனைச் செய்வோம்” நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு அழைத்துவந்தார்கள். குழந்தைகள் சிற்பிகளின் மேற்பார்வை/உதவியுடன் ஆனைமுகன் திருவுருவத்தைச் செய்தார்கள். பிள்ளையார் சதுர்த்தியன்று திருவுருவத்தை பாலகணபதி பூசைக்கோ, அல்லது விஸ்ர்ஜன நாளன்று நீரில் கரைக்கவோ கொணரும்படி பரிந்துரைக்கப்பட்டார்கள்.
கிட்டத்தட்ட 1500 குழந்தைகள் ஆனைமுகனின் திருவுருவத்தை அன்புடன், ஆவலுடன், ஆசையுடன் செய்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், ஆனைமுகனுக்கு விதம்விதமாக சிறப்பான அலங்காரம்செய்வது கோவில் வழக்கமாகும். அதைத்தொடர்ந்து, இம்முறை ஆனைமுகனுக்கு ஷாகாம்பரி [காய்கறி] அலங்காரம் செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்காக நீண்ட நீலக்கத்தரிக்காய், வெண்டைக்காய், சிவப்பு/வெள்ளை உருளைக்கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பெருமுள்ளங்கி, உருண்டை த்தக்காளி, நீண்ட ரொமானோ தக்காளி, பூசணிக்காய், தர்பூசணிப் பழம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, அருகம்புல், வாழைப்பழம், ஆப்பிள், வாழைக்காய் முதலிய காய்கறிகளும், பழங்களும் வாங்கப்பட்டன.
இவை பிள்ளையாரப்பனின் மீது ஏற்றப்பட்டு எடை அதிகமாகிவிடக்கூடாது என்பதால், அவற்றின் எடையைத் தாங்குவதற்காக தனித்து ஆதரவுக்கட்டுமானமும் செய்யப்பட்டது.
மாலைகள் கடவுளர்களுக்காக ரோஜாப்பூ மாலைகளும், கதம்பச் சரங்களும் தமிழ்நாட்டிலிருந்து காய்ந்த பனி [dry ice] சுற்றிப் பாதுகாப்புடன் தருவிக்கப்பட்டன. இதுமட்டுமன்றி, இக்காலத்தில் மல்லிகை, அலரி, செம்பருத்திபோன்ற மலர்கள் பூத்துக்குலுங்கும் என்பதால், பல அன்பர்கள் தங்கள்வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்களை உதிரியாகவும், மாலைகளாகவும் கொணர்ந்துசேர்த்தார்கள். இன்னும்பலர், கடைகளில் ஜவந்தி, ட்யூலிப், காரனேஷன்போன்ற மலர்க்கொத்துகளை ஆனைமுகனுக்கு அர்ப்பணிக்க ஆவலுடன் எடுத்துவந்தனர்.
பிரம்மோத்சவத்திற்கு முதல்நாளே தேவையான பொருள்கள் எடுத்து அடுக்கிவைக்கப்பட்டன. கலசங்களுக்காக மேடை அமைக்கப்பட்டது. வேள்விக்கான பொருள்கள் சரிபார்த்து எடுத்துவைக்கப்பட்டன.
தெர்மோகோலில் செய்யப்பட்டு, ஆண்டுக்கொருதடவை வலம்வரும் விஸ்வரூப கணபதி, அவருடைய இருப்பிடத்திலிருந்து யாகசாலை மேடைக்கு வந்துசேர்ந்து அலங்கரிக்கப்பட்டார். அலங்காரவிளக்குகள் பொருத்தப்பட்டன. அதிகப்படி மக்கள் அமர்ந்து ஹோமத்தைக் கண்ணுருவதற்காகக் கூடாரமொன்று எழுப்பப்பட்டது.
அன்னலட்சுமி ஹாலில் வரும் பக்தகோடிகளுக்கு அமுதளிப்பதற்காக, தொண்டர்குழாம் காய்கறிகளை நறுக்கிவைக்கத் துவங்கினர். தினத்தலைவர்கள் ஒன்றுகூடி, என்னென்ன படைத்து வழங்குவது என்று தீர்மானித்தனர்.
செப்டம்பர் மூன்றாம் தேதியன்று பிரம்மோத்சவம் துவங்கியது. அன்றையதினம், கிட்டத்தட்ட முந்நூறு பக்தர்கள் வருகை தந்தனர்.

அந்திக்கால பூசைமுடிந்தவுடன், அர்ச்சகர் ஜெயந்தீஸ்வர பட்டர் சமயத்தொண்டர்கள் உதவியுடன் ஆனைமுகனுக்கு காய்கறி, கனி, இலை அலங்காரத்தைத் துவங்கினார். அது இரவு பதினோறு மணிவரை நடந்து, அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு மீண்டும் ஆரம்பமாகி நிறைவுபெற்றது. எந்தெந்தக் காயை, கனியை, இலையை எங்குவைத்தால் அழகுகூடும் என்று மனதிலேயே கணித்து, அதைக் கச்சிதமாக நிறைவேற்றியது, அர்ச்சகர் ஜெயந்தீஸ்வரனின் திறமைக்குச் சான்றாகவே இருந்தது.
பிள்ளையார் சதுர்த்தி நாளன்று [செப்டெம்பர் 4, ஞாயிறு] ஆலயத்து அர்ச்சகர் ஜெயந்தீஸ்வர பட்டர் தலைமையில் மற்ற இருவரும் சேர்ந்து கலசஸ்தாபன[குட நிறுவுதல்]த்தைச் செய்தபின்னர், அர்ச்சகர் அனில்குமார் சர்மா யாகசாலையில் மூலமந்திர வேள்வி[ஹோமம்]யைத் துவங்கினார். அவருக்கு அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலுவும், மற்ற சமயத் தொண்டர்களும் உதவி செய்தனர்.
பஞ்சலோகத்தாலான உத்சவப் பிள்ளையாருக்குப் பலதிரவிய [அரிசி மாவு, மஞ்சள்பொடி, தேன், பால், தயிர், பழச்சாறு, பன்னீர், இளநீர், திருநீறு, சந்தனம்] அபிஷேகம் நடத்தப்பட்டது. அச்சமயம் அதர்வ கணேச சீர்ஷமும், இதர வேதங்களும் ஓதப்பட்டன. அபிஷேகத்திற்காக வந்த பால் வீணாகக்கூடாது என்பதால், அதுமட்டும் தனியாக சுத்தமான பாத்திரத்தில் சேகரித்து, ஆலய சமையலறைக்கு அனுப்பப்பட்டது.
அலங்காரம் நடக்கும்போது, தேவாரம், திருவாசகம், ஔவையாரின் பிள்ளையார் அகவல் ஆகிய தீந்தமிழ்த் தோத்திரங்கள் ஓதப்பட்டன. ஆனைமுகன்மீது பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன.
அலங்கரிக்கப்பட்ட ஆனைமுகன் நான்முகன் ஓட்டுவதுபோன்று வடிவமைக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். கிட்டத்தட்ட மூவாயிரம் எண்ணிக்கைகொண்ட அடியார்கள்கூட்டம் அலைமோதியது. அடியார்கள் ஒன்றுகூடி தேரை ஆலயத்தைச்சுற்றி ஊர்வலமாக இழுத்துவந்தனர்.

“ஜெய் கணேசா! கணபதி பாப்பா மோரியா! கணேச சரணம், சரணம் கணேசா!” போன்ற கோஷங்கள் விண்ணே அதிருமாறு எழுந்தன. உச்சியைப் பிளக்கும் அரிசோனா வெய்யிலையும் பொருட்படுத்தாது, அடியார்கள் ஆண், பெண், குழந்தை, முதியவர், இளையவர் பேதமில்லாது ஆனந்தக்கூத்தாடியவாறே, தேருக்கு முன்னாலும் பின்னாலும், சுற்றியும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
வெய்யிலின் கொடுமையைத் தணிக்கவேண்டி ஆலயத்தொண்டர் குழாம் அனைவருக்கும் குடிதண்ணீர் போத்தல்களையும், நீர்மோரையும் வழங்கியவண்ணம் இருந்தனர். கோவிலின் நூற்றுக்கணக்கான கார்நிறுத்துமிடங்கள் போதாமல், தெருவோரத்தில் இருபுறமும் கார்களை வரிசையாக நிறுத்த, ஆலயத் தொண்டர்கள் ஆங்காங்கேநின்று போக்குவரத்தைக் கட்டுக்குள் வைத்தனர்.
பிள்ளையாரும், பக்தர்கள் இழுத்துவந்த தேர் ஊர்வலத்தை ஏற்று, அருள் பாலித்து, ஆலயத்திற்குள் வந்து சேர்ந்தார்.

அனைவருக்கும், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. அன்னலட்சுமி ஹாலில் அறுசுவை உண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி, இரவு உணவு இவற்றுக்கும் குறைவில்லை.
மாலை ஆனைமுகன் திருவுருவத்தைக் களிமண்ணில் செய்த சிறார்கள் தங்கள் பெற்றோருடன் பாலகணபதி பூசையில் கலந்துகொண்டனர். அர்ச்சகர் அனில்குமார் சர்மா சொல்லித்தரத்தர, சிறார்கள் தாங்கள் செய்த திருவுருவத்திற்கு மலர்களாலும், அட்சதையாலும், பூசைசெய்த அழகு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
அதேசமயம், அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலு உத்சவப் பிள்ளையாருக்குப் பூசை செய்தார்.

மறுநாள் திங்கட்கிழமை தொழிலாளர்தின விடுமுறை என்பதால் பிள்ளையார் சதுர்த்திக்கு வரமுடியாத அன்பர்களும், மீண்டும் ஆனைமுகனின் ஆழகைப் பருகி, அருள்வெள்ளத்தில் நீந்தித் திளைக்கவிரும்பியவர்களுமாக ஆயிரத்து நானூறு அடியார்கள் ஆலயத்திற்கு வந்தனர்.
செப்டம்பர் 11, ஞாயிறன்று, விசர்ஜன் [கணபதியைக் கரைத்தல்] நடைபெற்றது. இதற்காக நான்கடி உயரமும் பதினாறடி விட்டமும் உள்ள பெரிய பிளாஸ்டிக் நீச்சல் குளத்தில் நீர் நிரப்பப்பட்டது.
இது ஆடிப்பாடி மகிழும் தினமாக அனுசரிக்கப்பட்டது. ஆனைமுகனின்மீது அனைத்து மொழிகளிலுமுள்ள பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

பேருருவப் பிள்ளையாருக்கு [விஸ்வரூப கணபதி] மலர்மாலை சூட்டி அலங்காரம்செய்யப்பட்டது. ஏனெனில் ஆண்டுக்கொருமுறை அவர் பவனிவரும் தினமாயிற்றே அன்று!
எட்டடிக்கும் அதிகமான உயரமுள்ள அவரை ஊர்வலமாகக் கொண்டுசெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன! இருப்பினும், அதற்குச் சளைத்தவர்களா அவரது அடியார்கள்!
அவர் பவனிவருவதற்கென்றே சிறப்பாக ஒரு டிரைய்லர் [trailer] அலங்கரிக்கப்பட்டு, அதை இழுத்துச் செல்ல ஒரு ஊர்தியும் தயாராகியது. அனைவரும் ஆடிப்பாடிக்களிக்கும் தினம் அதுவென்பதால், அப்படியொரு ஏற்பாடு!
பேருருவப் பிள்ளையாரை அலங்கரித்த டிரெய்லரில் தலைமைச்சிற்பி சண்முகநாதனின் மேற்பார்வை, வழிநடத்தலுடன் பலபக்தர்கள் உற்சாகத்துடன் எழுந்தருளச்செய்தார்கள். ஊர்திக்குமுன்னே பலர் முழக்கமிட்டபடி ஆனந்தக்கூத் தாடியவாறே முன்செல்ல, “ஊர்தியைப் பார்த்தவாறு நாம் ஏன் செல்லவேண்டும்? நமது ஆடும் அடியார்களின் ஆட்டத்தை இரசிப்போம்,” என்பதுபோல, பேருருவப் பிள்ளையார் செல்லும் திசையை நோக்காது, தன்னைத் தொடர்பவர்களைக் கண்ணுற்றவாறே அமர்ந்திருந்தது தனிச்சிறப்பாக அமைந்தது.

ஊர்வலம் நிறைவேறியதும், பேருருவப் பிள்ளையார் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றார். அவரை மீண்டும் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும் என்பதால், அன்றுமட்டும், தன்னிடத்தில் அடியார்கள் தன்னைக் காணட்டும் என்பதுபோல அவரது இல்லம் அன்றுமட்டும் திறந்துவைக்கப்பட்டது.
ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்பட்ட புனிதக்கலசநீர் தொட்டியில் கலக்கப்பட்டவுடன், பிள்ளைகள் செய்த பிள்ளையாரின் திருவுருவங்கள் தொட்டிநீரில் விடப்பட்டன.
ஹேரம்ப கணபதியாக சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆனைமுகனுக்கு அருச்சனை, ஆராதனை முடிந்தவுடன், வந்திருந்த ஆயிரத்தெண்ணூறு அடியவருக்கும் அமுதுவழங்கப்பட்டது. மாலையில் கலாசிருஷ்டி பிரிவினர் சார்பில் ஆடலும் பாடலும் நடைபெற்றன.

அடுத்த செவ்வாயன்று [செப்டம்பர் 13] வேள்விக்குப்பிறகு, முதலில் சிவபெருமானின் புனித நீராட்டலைத் தொடந்து, கோவிலுக்குள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனிதநீர்க்கலசநீராலும், பாலாலும் ஆனைமுகனுக்கு பிரம்மோத்சவ இறுதிமுழுக்கும் அலங்காரமும் செய்யப்பட்டது.
பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம் நிறைவுபெற்றது. நூற்றுக்கும் மேலான இறைத்தொண்டர்களீன் உழைப்பு இனிது நிறைவேறி, ஆனைமுகனின் அருளைப் பெற்றது!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே
சங்கத் தமிழ்மூன்றும் நீ எனக்குத் தா.
— ஔவையார்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகத்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
— திருமூலர்
*** *** ***
தடபுடலாக விழா நடந்தது பற்றி பாரட்டுகள். சிறார்கள் பிடிக்கும் பிள்ளையார் அழகானவர். நல்ல் ஐடியா,அது.
ஆனாம்! ‘இவை பிள்ளையாரப்பனின் மீது ஏற்றப்பட்டு எடை அதிகமாகிவிடக்கூடாது என்பதால், அவற்றின் எடையைத் தாங்குவதற்காக தனித்து ஆதரவுக்கட்டுமானமும் செய்யப்பட்டது’ ஓ! அதானே பாத்தேன்!
உலகத்தார் உனைத் துதித்தார்தம்,
உற்றவினை உடன் அகலுமே
மதயானைக் கொத்தவனே
மத்தளவயிறை உடையவனே
வாரி உண்ணும் வாரண முகத்தோனே
ஆணவத்தை அடக்க அப்பனுடைத் தேரின்
அச்சை முறித்தவனே!. .
அண்டம் முழுதும் பிரம்மமென உணர்த்த
அருந்ததி விருந்தோம்பல் செய்த மோதகத்தை உண்ட
பார்வதியின் மகனே
பார்புகழும் முதல்வனே
போற்றி!. . . .போற்றி
அரிசோனாவில்
அருள்புரியும் ஆனைமுகத்தோனை
அறிமுகம் செய்வித்த
அரிசோனனுக்கு வணக்கம்.