Month: September 2016

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    DHAIRYA LAKSHMI….!
    ————————————-

    kesav

    ’’வரிசங்கு, வீச்சாழி, வாள்கே டயம்,பாசம்
    வரஅபயம், வாரிசம் வீற்றெண் -கரத்தாள்,
    வறுமை சிவப்பணிந்த வீர(தைர்ய லஷ்மி) இலக்குமியை
    பெருமையாய் சென்று பணி’’….

    எட்டு லஷ்மிகளுக்கும் சேர்த்து….
    ———————————————————

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….

    மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்….!
    ———————————————————————–

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….கிரேசி மோகன்….!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (211)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    patience
    அன்பான வணக்கங்கள் இதோ அடுத்தவாரத்தில். மனிதராகப் பிறந்த நாமெல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் எனும் உணர்ச்சியினால் தாக்கப்படுவது தவிர்க்கப்படமுடியாதது. ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் , யாருக்கு எதிராக, எதனால் உருவாகிறது என்பதன் அடிப்படையில் அதனைக் கட்டுப்படுத்தும் வல்லமை எம் அனைவருக்குள்ளும் மறைந்துள்ளது.

    மறைந்த என் தந்தை எனக்கு அடிக்கடி கூறும் வாசகம் ஒன்று, “ கோபத்தில் வேதனை , பொறுமையில் சாதனை ! “ என்பதுவே அது.

    கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று சொல்வார்கள். ஆமாம் ! மனதினைக் கோபம் என்னும் உணர்வு கவ்விக் கொள்ளுவதற்கு எம்மிடம் அனுமதி கோருவதில்லை. ஆனால் அந்தக் கோபம் கிளப்பி விடும் உணர்வலைகளைச் சமாளிக்க, அவற்றின் விளைவுகளை மட்டுப்படுத்த எமக்குத் தேவையான பொறுமையை எம்மிடம் ஏற்படுத்த நாம் அதீத முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது.

    பல வாசகர்களின் மனதில் இந்நிமிடம் எழும் கேள்வி என் காதுகளில் மெளன ஒலிகளாக காற்றலைகளின் மூலம் வந்து விழுகிறது.

    ” என்னட? இவன் பாட்டுக்கு கோபிக்காதே ! பொறுமையாக இரு என்று சொல்கிறானே ! எமக்கு நடந்த விடயங்களை இவன் அனுபவித்திருக்கிறானா? அப்புறம் என்ன பெரிசா பொறுமையைப் பற்றிப் பேசுறானே “ என்ற உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது.

    பொறுமையைக் கடைப்பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் எனக்கு நன்றாகப் புரிகிறது. எத்தனையோ சமயங்களில் நான் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் கைவிட்ட நிகழ்வுகள் உண்டு. இத்தகைய சிக்கல்களுக்குள் நானும் உழல்பவன் என்னும் ஒரே ஒரு காரணத்தினால்தான் இக்கருத்துப் பகிர்தலை ஆரம்பித்தேன்.

    பொறுத்துக் கொண்டிருக்கும் போது எம்மீது தான் அனைத்துப் பாரங்களும், வாழ்வின் சுமைகளும் விழுவது போலும், பொறுமையை எள்ளளவும் கடைப்பிடிக்காமல் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்பவர்கள் தாம் நினைத்ததை நடத்திக் கொண்டு செல்வது போலும் தோன்றுவது வழக்கம்.

    வாழ்க்கையில் நாம் நினைத்ததை நடத்துவதற்காகவே வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக பாடுப்பட்டு உழைக்கிறோம் பின்னே எதற்காக பொறுமையின் பெயரால் நாம் அனுபவிக்க நினைக்கும் செயல்களை விட்டுக் கொடுக்க வேண்டும்? இதனால் சாதிப்பது என்ன ?

    இந்தக் கேள்விகள் மனதில் சாதாரணமாக எழுவது இயற்கையே !

    உண்மைதான் வாழ்க்கையில் நாம் நினைப்பது சரியோ, தவறோ அதை நாம் நினைத்தவகையில் நிகழ்த்திக் கொண்டு போவதே வாழ்க்கையின் நோக்கம் எனக் கருதினால் அப்படிப்பட்டவர்கள் எதையோ சாதிப்பது போலத்தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மையா? அத்தகையவைகளைத்தான் நாம் சாதனை என்கிறோமா?

    கோபம் என்னும் அந்த உணர்வு எம்மனதின் வீரியத்தை அப்படியே உறிஞ்சி விடுகிறது. கோபம் என்னும் அந்தக் குறுகிய உணர்ச்சி பொங்கி வெளியாகியவுடன் எமது மனங்களில் தோன்றும் வெறுமையின் வெப்பம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

    கோபத்தின் ஆரம்பமே விரக்தியாகும். எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அளவெடுத்தால் விரக்தியை மிக விரைவாக உண்டு பண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் சுற்றி வியாபித்திருப்பதை உணரலாம்.

    உதாரணத்திற்கு ஒரு உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்று அமர்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எம்மை உட்காரவைக்க அந்த வெயிட்டர் எடுக்கும் நேரம், எமது உணவுகளுக்கான ஆர்டரை எடுக்க வரும் பணியாளரின் தாமதமான வருகை, அதன் பின்பு அவர்களின் செய்கையில் இருக்கும் தளர்வு, அருகிலிருப்போரின் உரையாடலின் தொனி இவையனைத்தையுமே எமக்கு விரக்தி உண்டு பண்ணக்கூடிய காரணிகளாகக் கொள்ளலாம்.

    அதே போல சூப்பர் மார்க்கட்டிற்கு போகிறோம் என்று வையுங்கள், நாம் மிகவும் அவதானமாக தேவையான பண்டங்களை மட்டும் தெரிவு செய்து கொண்டு விரைவாக பணம் செலுத்துமிடத்திதிற்கு வருகிறோம், அங்கே வரிசையில் நிற்கும் போது எமக்கு முன்னாலிருப்பவர் தமது முறை வரும் போதுதான் தான் வாங்க வந்து மறந்து போன பண்டத்தின் நினைவு வந்தவராக இதோ வந்து விடுகிறேன் என்று ஓடுகிறார் எம்மை ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க வைக்கிறார்.

    சரி அதுதான் முடிந்தது என்று கவுண்டருக்கு வந்தால் அதிலே உட்கார்ந்திருக்கும் பெண் மிகவும் ஆறுதலாக ஒவ்வொரு பொருளாக மேலும் கீழும் பார்த்து அதை ஸ்கெனரில் ஸ்கேன் செய்கிறாள்.

    நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்று ஓடி வந்த நமக்கு என்ன நிகழ்கிறது? விரக்தி பொங்குகிறது, இரத்தம் ஜிவு, ஜிவுவென்று சூடேறுகிறது. ஆனாலும் பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டிய நிலைமை.

    சரி இதே நிலைமைகளைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அதே உணவகத்தில் நாம் நடக்கும் நிகழ்வுகளை ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெயிட்டரின் இடத்தில் எம்மை உட்கார்த்தி நாம் எப்படி இருந்திருப்போம் என்று ஒரு கற்பனை உலகை உருவாக்கிப் பார்த்துக் கொள்வோம் என்று வையுங்கள். எமக்கு நேரம் போவதே தெரியாது.

    விரக்தி என்னும் மனப்பான்மையே அருகில் கூட எட்டிப்பார்க்காது.

    அதேபோல அந்த சூப்பர் மார்க்கெட் நிலையில் கூட அனைத்தையும் எம்மை மீறி நடக்கும் செயல்கள் நாம் ஆத்திரப்படுவதால் எதுவும் நடந்து விடாது என்று மனதைச் சாந்தப்படுத்தப் பழகிக் கொண்டால் உள்ளம் அமைதி கொள்ளப் பழகிவிடும்.

    கோபம் என்னும் கோலம் கொண்டுவிட்டால் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க முடியாது. வார்த்தைகள் வாயிலிருந்து விழுந்து விட்டால் பின்னே அள்ளியெடுத்து உள்ளே திணித்துக் கொள்ள முடியாது.

    கோபம் கொள்வதினால் எம்மையே நாம் தாக்கிக் கொள்கிறோம், எமது சக்தியையே நாம் விரயம் செய்து கொள்கிறோம். நாம் சொல்ல வந்ததை அதைச் செவிமடுப்பவர் புரிந்து கொள்ள முடியாத வகை செய்து விடுகிறோம்.

    கோபம் எமது புத்தியையே மழுங்கடித்து விடுகிறது. எதையும் யதார்த்தமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

    கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. அராஜகச் செயல்களுக்கு நியாயம் கற்பித்து விடுகிறது.

    ஆனால் பொறுமையோ எம்மை மேம்பட்ட மனிதராக்கி விடுகிறது. மனதினை மென்மை என்னும் போர்வையால் மூடிவிடுகிறது. எம்மையிட்டு நாமே பெருமை கொள்ள வைக்கிறது.

    பொறுமையால் அடைந்த வெற்றிக்கு இருக்கும் மதிப்பே தனியானது ஏனென்றால் அது தானென்னும் மமதையின் அடிப்படையில் வந்ததாக இருக்காது.

    பொறுமையின் உதாரணங்களை எடுத்துக்கொண்டால் தாய்மை, பூமி, கருணை என இணையில்லாத பல தனிப்பண்புகளின் தரிப்பிடமாக இருப்பதைக் காணலாம்.

    பொறுமையின் உச்சகட்டமே பூமியாகும். ஆத்திரத்தாலும், அவசரத்தாலும் தன்னை இழக்கும் மனிதரா இல்லை பொறுமையையே தன் ஆயுதமாகக் கொண்டிருக்கும் பூமி மாதாவா வாழ்க்கையில் வெற்றியடைவார்கள்? இந்தக் கேள்வியின் விடை அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

    கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலொன்று,

    “ மண்ணின் மீது மனிதனுக்காசை
    மனிதன் மீது மண்ணுக்காசை
    மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது ” என்று வரும்.

    எத்தனை உண்மையான வரிகள்.

    நிச்சயமான, உண்மையான வாக்கியம் ” கோபத்தில் வேதனை ! பொறுமையில் சாதனை ! “

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • பாரத மக்களின் மகத்தான ஆதரவு!

    பவள சங்கரி

    தலையங்கம்

    பிரதமர் மோதி அவர்களின் நிதானமான உறுதியான, தீர்க்கமான முடிவுகளும், தெளிவான சிந்தனைகளும் நம் நாட்டை வல்லரசாக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் சீரிய திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தில் இந்தியா தலை நிமிர்ந்துள்ளதும் கண்கூடு. வானியலிலும் விண்ணை நோக்கி நமது பெருமை செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்புத் துறை, வாணிகம், இந்தியாவின் பாதுகாப்பு என ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் பெருமைகொள்ளத்தக்க வகையில் நம் பிரதமரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில், இந்திய பொருளாதாரம் உறுதியான நிலையில் இருக்கும்வகையில் இறக்குமதிக்குரிய பொருட்களுக்கு பரிவர்த்தனையாக உரூபாயை கொடுப்பது என்று உறுதியான முடிவு எடுத்திருப்பதும், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள் போன்ற இராணுவ பயன்பாட்டிற்கானவைகள் இந்தியாவிலேயேதான் தயாரிக்கப்படவேண்டும் என்று கொள்கை முடிவெடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்திருப்பதும், தொழில் துறையில், சீனாவிற்கு அடுத்தபடியாக வளர்ச்சியடைந்திருப்பதற்கும் இதன் மூலம் பல இலட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதும் நமது பிரதமர் மோதி அவர்களின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள். இத்தனைக்கும் மேலாக இதுவரை ஊழல் தொடர்பான எந்தவிதமான செய்திகளும் வெளிவரவில்லையென்பதும் பாராட்டிற்குரிய செயல்.

    பாகிஸ்தான், காஷ்மீருக்குள் அத்துமீறி உள்நுழைந்து நமது 16 இராணுவ வீரர்களைக் கொன்ற மோசமானதொரு சூழலை நமது பிரதமர் எவ்விதமாகக் கையாளப்போகிறார் என்று ஒவ்வொரு குடிமகனும் கவலையுடன் இருந்தபோது, படிப்படியாக அண்டை நாடுகளின் ஆதரவைப்பெற்று பாகிஸ்தானை தனிமைப்படுத்தி பொருளாதாரம், நீர்வளம் அனைத்திலும் இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குள் நமது இராணுவத்தை அனுப்பி அங்கிருந்த ஏழு தீவிரவாதிகளின் தளங்களைத் தகர்த்து, சுமாராக நாற்பது தீவிரவாதிகளை அழித்துள்ளனர். நமது பிரதமர் மோதி அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு 130 கோடி மக்களும் அவர்பின் உள்ளனர் என்பதே நிதர்சனம். இனி எடுக்கக்கூடிய இராணுவ நடவடிக்கைகளின் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்ள தொடர்பை முற்றிலுமாக அழித்து நமது நாட்டின் எல்லைப்பகுதிகள் முழுவதும் அமைதியாக இருக்கும் வகையில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதே மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    வெல்க பாரதம்!

    Share
  • மலராக்க முனைந்திடுவோம்!

    -எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    முள்ளிருக்கும் செடியினிலே
    முகிழ்த்துவரும் ரோஜாவோ
    முள்பற்றிக் கவலையின்றி
    முறுவலுடன் பூத்துநிற்கும்!
    சொல்கொண்டு குத்துவதை
    மெள்ளவே ஒதுக்கிவிடின்
    சுமையெம்மைத் தாக்காது
    சுகம்பற்றி நினைத்திடலாம்!

    காந்திமகான் மார்பினிலே
    காலாலே உதைத்தவர்க்குக்          roses-and-thorns
    காலணியைத் தான்செய்து
    காந்திமகான் பரிசளித்தார்
    வாங்கிநின்ற வெள்ளையரோ
    மனதார உருகிநின்று
    காந்தியது பொறுமைகண்டு
    கண்திறந்து நின்றனரே!

    தொழுநோய்க்குத் தொண்டுசெய்ய
    துணிவுகொண்ட  தூயவராம்
    பழுதில்லாத் துறவறத்தைப்
    பாரினிலே பெற்றவராம்
    அன்னையாம் திரேசாவை
    அவமதித்த ஆட்களையே
    அரவணைத்த காரணத்தால்
    அவருயர்ந்தார் அவனிதனில்!

    சிலுவைதனில் அறைந்தார்கள்
    சித்ரவதை செய்தார்கள்
    பலவகையில் வசைவுகளைப்
    பகர்ந்துமே நின்றார்கள்
    அவையெல்லாம் தாங்கியவர்
    ஆண்டவரே மன்னியென
    அன்புடனே வேண்டியதால்
    அவர்வணங்கும் பேறுபெற்றார்!

    கல்லிலே கட்டிக்
    கடலிலே போட்டார்கள்
    கொல்லுதற்கு நஞ்சுதனை
    அஞ்சாமல் கொடுத்தார்கள்
    எல்லையில்லாக் கொடுமைசெய்தும்
    எதையுமவர் தாங்கிநின்று
    நல்லபடி சொல்லிநின்றார்
    நமசிவாய எனும்நாமம்!

    அவமானம் அசிங்கம்
    அத்தனையும் தாங்கியவர்
    அகிலமதில் இமயமாய்
    ஆகியே இருக்கின்றார்
    பொறுத்தவரே நிறைவடைவார்
    பொங்கினார் பொசுங்கிடுவார்
    வெறுத்தொதுக்கு வெறுப்பேற்றின்
    விரையமே வந்துநிற்கும்!

    வாழ்க்கையிலே முட்களாய்
    பலவந்து குத்திடினும்
    வாழவேண்டும் எனநினைத்தால்
    முட்கள்கூட  மலராகும்
    மலர்ந்துவிடச் செய்வதற்கு
    வழிவகுக்கும் மனம்வேண்டும்
    வழியில்வரும் முட்களையும்
    மலராக்க முனைந்திடுவோம்!

     

     

    Share
  • ”உந்து தமிழ் கந்தன் களிப்பு”….!

    கிரேசி மோகன்

    ————————————————————

    images-2

    மனத்துள்ளான் பூச தினத்துள்ளான் வள்ளி
    வனத்துள்ளான் சூரன்மேல் வைத்த -சினத்துள்ளான்
    அண்ட கனத்துள்ளான் ஆதி கணத்துள்ளான்
    விண்ட ஷணத்துள்ளான் வேல்….(37)

    ஆனைக்(கு) இளையானை ஆனைக் களியானை
    ஆணை அமரர்க்(கு) அளிக்கின்ற -ஆணை
    வணங்கி எழுவானை வள்ளிகல் யாணம்
    இணங்கிய யானை அணைப்பு….(38)

    அய்யம் தகளியா ஐந்துபுலன் நெய்யாக
    பொய்யாம் விளக்கேற்றப் போந்தேனே -அய்யா
    விளக்குமாறு என்னை விலக்கிடாது உன்னை
    விளக்குமாறு வெண்பாவில் வா….(39)

    சுட்ட பழமா! சுடாத பழமாவென்(று)
    இட்டனை அவ்வைக்(கு) இடையூறு -கொட்டினை
    நாவல் பழத்தை நமுட்டு விஷமமாய்
    சேவல் கொடியோய் சிரித்து….(40)

    வீசும்வெண் சாமரம் பேசும் தமிழுனக்கு
    ஆசு கவியாகி ஆறுதிவ்ய -தேசமும்
    கூடி அருண கிரியாகி சந்தத்தில்
    பாடிக் களிக்கலாம் போது….(41)

    வயதுமிக சேர்ந்தும், வயோதிகம் நேர்ந்தும்
    தயவை எதிர்பார்த்து தாழ்ந்தும் -அயர்வில்
    கரணங்கள் ஓய்ந்தும் கலங்காது கந்தன்
    சரணங்கள் பற்ற செழிப்பு….(42)….கிரேசி மோகன்….!

    Share
  • அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்

    நிர்மலா ராகவன்

    “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)! கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது சங்கீதாவுக்கு.

    சிறகு முளைக்குமுன் பறக்க ஆசைப்பட்டு, கூட்டிலிருந்து தரையில் விழுந்து, பூனை வாயில் மாட்டிக்கொள்ளும் பறவைக் குஞ்சுபோல்தான் இவளும்!

    இவளுடைய நல்ல காலம், உடலெல்லாம் குருதியாக, நிலைகுலைந்த ஒற்றை ஆடையுடன் இலக்கின்றி தெருவில் ஓடிக்கொண்டிருந்தவளை காவல் துறையினர் பார்க்க நேரிட்டது.

    பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அவ்விடம் கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்தது. பெரிய வளாகத்துக்குப் பொருத்தமில்லாத சிறு வீடு. ஆனால், தனி வீடு.

    வாசலில் பெரிய மரம் ஒன்றின்கீழ் பிள்ளையார் வீற்றிருந்தார். மூன்றடி உயரத்தில் கம்பீரமான, கருங்கல் பிள்ளையார். இப்பெண்கள் திருந்தி, நல்வாழ்வு வாழவென அவரவர் மதப்படி பூசை நடத்துகிறார்கள்.

    “எங்கப்பா ரொம்ப மட்டம்! அம்மா — அதைவிட!” தானே தெரிவித்தாள் காளி, தான் சீரழிந்ததை நியாயப்படுத்துவதுபோல்.

    கற்பு வன்முறையில் சூறையாடப்பட்டிருந்த பெண்கள் திக்பிரமையாக நிற்பார்கள், அல்லது ஒரேயடியாக அழுது புலம்புவார்கள் என்றெல்லாம்தான் சங்கீதா படித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண்ணோ, தனக்கு நடந்தது சாதாரணமாக எல்லாரும் அனுபவிப்பதுதான் என்ற தோரணையில் அல்லவா பேசுகிறாள்!

    “நான் இப்படித்தான் போவேன்னு எனக்குப் பன்னண்டு வயசிலேயே தெரியும்,” என்று தொடர்ந்தாள் காளி. “ஒருக்கா பக்கத்து வீட்டிலே எங்கம்மாவையும், அந்த வீட்டு ஆம்பளையையும் பாயில ஒண்ணா பாத்தேனா? அப்பவே தோணிப்போச்சு, இந்தமாதிரி அம்மாவுக்குப் பொறந்த நாம்பளும் கெட்டுத்தான் போவோம்னு!”

    `சேற்றில் செந்தாமரை பூப்பதில்லையா?’ என்று இவளிடம் காலங்கடந்து கேட்டு என்ன பயன்! பெருமூச்சை அடக்கிக்கொண்டு, அவள் சொல்லிக்கொண்டே போனதைக் கேட்கத் தயாரானாள் சங்கீதா.

    “எங்கப்பா வெஷம் கலந்த சம்சுத் தண்ணியைக் குடிச்சுட்டு, உசிரை விட்டாரு. `சனியன் விட்டுச்சு’ன்னு, தெகிரியமா அம்மா அநியாயம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதைப் பொறுக்கமுடியாம, பக்கத்து வீட்டு சொர்ணாக்கா அவங்க சோத்துக் கையை அதோ, இங்க வெட்டிட்டாங்க!” முழங்கைக்குக் கீழே காட்டினாள்.

    சங்கீதா மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டாள். இவ்வளவு பயங்கரமான நிகழ்வுகளை இந்தப் பெண்ணால் எப்படி உணர்ச்சியற்ற குரலில் சொல்ல முடிகிறது? ஒரு வேளை, இந்தச் சின்ன வயதுக்குள் அளவுக்கு மீறிய துன்பத்தை அனுபவித்ததால், உணர்வுகள் மரத்துப்போய்விட்டனவோ!

    மரத்தடி பிள்ளையாருக்கு ஆராதனையாகக் காட்டப்படும் கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொள்வதற்குப் பதில், அதை அவசரமாக எடுத்து, வாயில் போட்டுக்கொள்வாளாமே காளி!

    `அது ஒரு வித போதை! இவளுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கிறது!’ என்றாள் மிஸ்.யியோ.

    அப்பழக்கத்தால்தான் எதையும் அசாதாரணமாக ஏற்க முடிகிறதோ இவளால்?
    கதை நாராசமாக இருந்தது. ஆனால், வித்தியாசமான ஒன்றைக் கேட்கத்தானே இத்தனை பிரயாசைப்பட்டு, விசேட அனுமதி வாங்கி இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம்!

    “அப்புறம்?” என்று ஊக்கினாள்.

    “கை போனதும், அம்மா செஞ்சுக்கிட்டிருந்த தோட்ட (ரப்பர் எஸ்டேட்) வேலையும் போயிடுச்சு. எங்க மாமா வந்து, எங்க ரெண்டு பேத்தையும் டவுனுக்குக் கூட்டிட்டு வந்துட்டாரு!”

    அடுத்து, அவள் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்ததைப்பற்றிச் சொல்லும்போது, காளியின் முகத்தில் சிறிது பிரகாசம் தோன்றியதைக் கவனித்தாள் சங்கீதா.

    அந்த வயதில் தான் எந்தக் கவலையும் இல்லாது, பள்ளிக்கூடம், நீச்சல், சினிமா, பாட்டு கிளாஸ் என்று உல்லாசமாக வாழ்வைக் கழித்தது நினைவில் எழுகையில், சிறிது குற்ற உணர்வுகூட ஏற்பட்டது.

    ஓர் ஆன்மா இவ்வுலகில் பிறக்குமுன், தான் சேரவேண்டிய அன்னையைத் தேடுமாம். அதனால்தான், இயற்கையிலேயே

    பெற்றோரின் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள் சில குழந்தைகள்.

    காளியின் ஆன்மா எதற்காக இப்படிப்பட்ட பெற்றோரைத் தெரிவு செய்தது? மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டும் என்ற ஆசை ஒன்றே பிரதானமாக இருக்க, எதுவுமே யோசிக்காது, கிடைத்த கருவுக்குள் அவசரமாகப் புகுந்துகொள்ளும் கோடானுகோடி உயிர்களுள் அவளுடையதும் ஒன்றோ?

    சற்றுமுன் மலர்ந்திருந்த காளியின் முகம் மீண்டும் வாடியது. “அம்மாவும் மாமாவும் எப்பவும் என்னை ஏசிக்கிட்டே இருப்பாங்க. வேலை முடிஞ்சதும், நான் பஸ் பிடிச்சு, வீட்டுக்கு வரணும். அன்னாடம், மாமா வாசல்லேயே நின்னுக்கிட்டு, `எவனோடடி கும்மாளம் போட்டுட்டு வர்றே?’ன்னு கத்துவாரு!” குரல் விம்மியது.

    “நீ எல்லாரோடேயும் கலகலப்பா பழகுவியா?” நாமும் ஏதாவது கேட்டால்தானே இவள் தொடர்ந்து பேசுவாள் என்று ஏதோ கேட்டுவைத்தாள் சங்கீதா.

    “ஊகும், எனக்கு ரொம்ப பயம்! யார்கூடவும் பேசமாட்டேன்!”

    “பின்னே.. ஏன் ஒங்க மாமா அப்படி..?”

    “அதான் எனக்கும் தெரியல. வீட்டுக்கு ஏன் வர்றோம்னு இருக்கும்”.

    `அந்த மாமாப்பயலுக்கு இந்த அறியாப் பெண்மீது ஒரு கண்ணாக இருக்குமோ?’ என்று சங்கீதாவின் எண்ணம் ஓடிற்று.

    “எங்கேயாவது ஓடிப் போயிடலாம்னு பாத்தா, அதுக்கும் பயம்! அப்பதான் ஆன்ட்டியைப் பாத்தேன்!” காளியின் முகத்தில் ஒரு சிறு ஒளிக்கீறல்.

    `ஐயோ!’ என்றது சங்கீதாவின் உட்குரல்.

    “தினமும் பஸ் ஸ்டாப்புக்கு வருவாங்க. என்மேல ரொம்ப இஷ்டம் அவங்களுக்கு. ரிப்பன், மணிமாலை எல்லாம் வாங்கிக் குடுப்பாங்க!”

    அவள் கூறாமலேயே மேலே என்ன நடந்திருக்கும் என்று சங்கீதாவால் ஊகிக்க முடிந்தது. முன்பின் தெரியாதவள் ஒரு பருவப்பெண்மீது பரிவு காட்டுவது — தனக்கே இரையாகப்போகும் ஆட்டுக்கு இரை போடும் கரிசனம்தான்.

    “ஆன்ட்டிக்கு என் வயசில ஒரு பொம்பளைப்புள்ள இருந்து, செத்துப்போச்சாம். அதான் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ஆசை ஆசையா பேசுவாங்க. என்னைப் பாக்கிறப்போ எல்லாம், `எங்க வீட்டுக்கே வந்துடேன்’னு கூப்பிடுவாங்க. அம்மாகிட்டேயும், மாமாகிட்டேயும் ஏச்சுப்பேச்சு கேக்கறதுக்கு, இந்த ஆன்ட்டிகூடப் போனா, நல்லாயிருக்கும்னு தோணிச்சு. ஒரு நாள், வேலைக்குப் போகாம, அவங்ககூடப் போயிட்டேன்!” காளி சிரித்தாள், அபூர்வமாக. “ஆன்ட்டி வீட்டில நல்லா இருந்திச்சு”.
    சங்கீதா மௌனமாக இருந்தாள். இந்தப் பெண்ணா வாயே திறக்காது என்றாள் இல்லத்தலைவி?!

    “பேப்பர்ல என்னோட போட்டோ போட்டு, `காணும்’னு விளம்பரம் குடுத்தாங்க எங்க வீட்டில. ஆன்ட்டிதான் காட்டினாங்க. `என்னை அங்க அனுப்பிடாதீங்க, ஆன்ட்டி’ன்னு அழுதேன். நான் இல்லாம, அம்மாவுக்கும், மாமாவுக்கும் ஏச ஆள் கிடைக்கலபோல!”என்று வெறுப்பைக் கொட்டியவள், “ஆன்ட்டி வீட்டில ஏதாவது சாப்பிடக் குடுத்துக்கிட்டே இருப்பாங்க,” என்றாள், முகமலர்ச்சியுடன்.

    `அதில்தான் போதை மருந்து கலந்திருப்பார்களோ?’

    “எப்பவும் யாராச்சும் என்கூடவே..!”

    தப்பித்துப் போகாமலிருக்க காவல்! இதுகூடப் புரியாமல், இந்த அப்பாவிப்பெண் சந்தோஷப்படுகிறாள்!

    அடைத்துக்கொண்ட குரலைக் கனைத்துச் சரிசெய்ய முயன்று, தோல்வியுற்றவளாக, “எப்படி இங்கே வந்தே?” என்று கேட்டாள் சங்கீதா.

    “நாலுபேர் ஒத்தர் மாத்தி ஒத்தரா என்மேல விழுந்தாங்களா..?”

    “ஆன்ட்டி வீட்டிலேயா?”

    “இல்ல. அங்க நெறைய்..ய மரங்க இருந்திச்சு,” என்றுதான் காளிக்குச் சொல்லத் தெரிந்தது. “நானும் அந்த தடியன்களோட சண்டை போட்டுப் பாத்தேன். முடியல. கத்த பயம். ஒருத்தன் கத்தியைக் காட்டிக்கிட்டு நின்னான்!” பயத்தில் இப்போதும் அவள் உடல் நடுங்கியது. “அப்புறமா, கைலியை எம்மேல தூக்கிப் போட்டுட்டு அவங்க ஓடிட்டாங்க. நானும் ஒரு பெரிய தெருவில ஓடினேன். போலீஸ் என்னைப் பிடிச்சு, சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. நான் சொல்லல”. தான் மறக்க முயல்வதையே எல்லாரும் ஏனோ கேட்கிறார்களே என்ற பரிதவிப்பு அவளுடைய பேச்சின் வேகத்தில் தெரிந்தது.

    மூச்சுவிடாமல் பேசிவிட்டு, சற்று நிறுத்தினாள். “ஆன்ட்டிதான் இங்க வந்து என்னைப் பாக்கறாங்க!”

    “இங்கேயும் வர்றாங்களா!”

    அவளடைந்த அதிர்ச்சி புரியாது, காளி உற்சாகமாகத் தலையாட்டினாள். “கேட்டுக்குள்ளே யாரையும் விடமாட்டாங்க. அதனால, நான் ஆசுபத்திரிக்கு காடியில போறப்போ, அவங்க தெருவுக்கு அந்தப் பக்கம் நின்னுக்கிட்டு கையாட்டுவாங்க!”

    ஒருவர் மனந்திறந்து பேசும்போது அவரது போக்கிற்கே விட்டுவிட வேண்டும், நம் விருப்பு வெறுப்பை அவர்மீது திணிக்கக்கூடாது என்ற மனோதத்துவ நியதியை தாற்காலிகமாக மறந்தாள் சங்கீதா. “அவங்களை நம்பிப் போனதால, நீ பட்டதெல்லாம் போதாதா? இன்னும் என்ன, ஆன்ட்டி?” என்று படபடத்தாள். “அங்கே ஏன் போறே?”

    “வேற எங்கே போறது! அவங்களுக்கு எம்மேல ரொம்ப இஷ்டம்!” மீண்டும் அதையே சொன்னாள்.

    “ஐயோ, வேணாம்மா!” தன்னை மறந்து கத்தினாள் சங்கீதா. “ஒங்கம்மாகிட்ட போ!”

    “அங்க எதுக்குப் போறது? அம்மாவுக்கு ஏசத்தான் தெரியும்!” என்று ஆங்காரமாகச் சொன்னவளின் குரல் தழதழத்தது. “இனிமே என்னை யார் கட்டிக்குவாங்க? இந்த ஒடம்பு இருக்கிறவரைக்கும் ஆன்ட்டிக்கு ஒழைச்சுப் போட்டுட்டுப் போறேன்!” தான் செய்யபோவது என்ன தொழில் என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது வேதனையாக இருந்தது சங்கீதாவுக்கு.

    “ஒன் பிள்ளை?”

    “அந்தச் சனியனை யார்கிட்டயோ குடுத்துட்டாங்க!”

    அந்த இல்லத்தின் வெளியே காரைச் செலுத்திக்கொண்டு போகையில், சங்கீதாவின் மனம் கனத்திருந்தது.

    தன் முதல் பிரசவம் ஆகுமுன்னரே எவ்வளவு எதிர்பார்ப்புடன் தானும், கணவரும் குழந்தைக்கு வேண்டிய தொட்டில், சட்டைகள் என்று பார்த்துப் பார்த்து வாங்கினோம்!
    காளி ஏன் இப்படி?

    தாய்ப்பாசம் தெரியாது வளர்ந்திருந்ததால், தன் குழந்தைமீது அன்பு சுரக்கவில்லையோ?

    அல்லது, அதற்கு உயிர் கொடுத்த, முகம் தெரியாத காமுகன்மேல் கொண்ட வெறுப்பு அவளை இப்படிப் பேசவைக்கிறதோ என்று யோசித்தாள் சங்கீதா.

    தான் உருவான சூழ்நிலையில் அன்போ, இன்பமோ இல்லாது பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியோடு வளருமோ?

    பெற்ற தாய்க்கே வேண்டாதவனாக, தன்மேலேயே வெறுப்புகொண்டு..! இன்னொரு கர்ணனா?

    பிறந்தது பெண்ணாக இருந்தால், காளி செய்ததுபோல், தான் வழிதவறிப் போவதை நியாயப்படுத்துமோ?

    பிறப்பின் அதிர்ச்சியை, பரம்பரைக் குணத்தை, வளர்ப்பால் மாற்றி அமைக்க முடியுமா?

    ஓயாத எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்பட்டவளாக, இரண்டு தவறான திருப்பங்களுக்குப்பின் சங்கீதா வீடு திரும்பினாள்.

    தோட்டத்தைக் கொத்திக்கொண்டிருந்த கணவர், அவளை வரவேற்கும் விதமாக, “தீபாவளி இதழுக்குக் கேட்டிருக்காங்கன்னு யாரையோ பேட்டி எடுக்கப் போனியே! கதை கிடைச்சுதா?”என்று கேட்டார்.

    காளியின் கதையைச் சீரணிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் என்று தோன்ற, அசுவாரசியமாகச் சூள் கொட்டிவிட்டு, உள்ளே போனாள் சங்கீதா.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”விருந்தா வனத்தோன் வரைந்தான் டயரி,
    கருந்தா மரைக்கண்ணன் கொஞ்சி:, -விருந்தாக,
    தாயினும்சா லப்பரிந் தூட்டும் வடபத்ர
    சாயியைக்கண்(டு) ஆயி(தாய்ப் பசு) சிலிர்ப்பு”….கீரேசி மோகன்…!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
    கஜேந்திரர் கத்த கருட -விஜயேந்த்ரர்,
    அந்தநாள் ஆதிமூலம், இந்தநாள் கீதைமூலம்,
    வந்தனன் நந்தன் வளர்ப்பு’’….கிரேசி மோகன்….!
    Share
  • ”உந்து தமிழ் கந்தன் களிப்பு’’….!

    கிரேசி மோகன்

    ——————————————————

    images-2

    சிலம்பும் சிலம்பணி செவ்வேள் கழலும்
    புலம்பும்புள் சேவலும் போகக் -கிளம்பத்
    தயாராக நிற்கும் தணிகைவேல் நீல
    மயூரமும் எண்ண முருகு….(25)

    மலையளவு குற்றமும் மங்கிடும், பொங்கும்
    அலையுலவு செந்தூர் அழகன் -சிலையுருவை
    எண்ணித் துதிப்போர்க்கு ஏத்திப் புகழ்வோர்க்கு
    நுண்ணிய நூலாய் நலிந்து….(26)

    கதிராய் வெளிப்பட்டு கார்த்திகை மாதர்
    உதிர முலைப்பாலை உண்டு -அதிரும்
    அயில்வேலை அன்னை அளித்திட வாங்கும்
    துயில்வோன் மருகன் துணை….(27)

    சொந்தம் எனக்குநீ பந்தம் எனக்குநீ
    தந்தை எனக்குநீ தாயாராய் -வந்தருள்
    பாலிக்க வேண்டும் பராசக்தி பாலனே
    காளிக்கை வேலனே காப்பு….(28)

    எண்ஜாண் உடம்புக்கும் ஏகாக்ர சிந்தைக்கும்
    பஞ்சா மிருதமும், பண்ணிரெண்டு -கண்ஜாடைக்
    காதலும் போதுமே, ஆதலால் கந்தனின்
    மீதுலாவு நெஞ்சே முனைந்து….(29)

    சந்தமிகு செந்தமிழில் கந்தரனு பூதியை
    தந்த அருணகிரி தான்போலே -உந்தன்
    திருப்பதிகள் சென்று திருப்புகழ் பாடும்
    விருப்பதை நேர்நிறை வேற்று….(30)….கிரேசி மோகன்….!

    அய்யோ எனக்கிளை குய்யோ முறையிடாது
    அய்யோ மணாளர் அணுகும்முன் -மெய்யோடும்
    தேகான்ம பாவத்தை தாண்டி நிலைபெற
    வாகா னவழிசொல்ல வா….(31)

    புரியும் தொழிலெனக்கு பொல்லாத சூரன்
    சரியும் படிவேல் செலுத்தும் -அரியின்
    சகோதரி மைந்தனின், சங்கரன் சேயின்
    மகோதரன் தம்பியின்த மிழ்….(32)

    முதற்பொருளை ஈசன் நுதற்பொருளை வள்ளிக்(கு)
    இதப்பொருளை சந்த இசைக்குப் -பதப்பொருளை
    மாறா ஸ்திதப்பொருளை மாரன் கதைப்பொருளை
    வீரம் விதைப்பொருளை வாழ்த்து….(33)

    பொய்பேசா வாக்கும் புறங்கூறா வார்த்தையும்
    கைகூசா காரியமும் கொள்வோர்கள் -தைபூசத்
    தானருளால் நற்கதியும் தேயா துருவனைப்போல்
    வானுருளும் மீனாகு வர்….(34)

    உதித்ததது தீயாய் உருமாற்றம் சேயாய்
    பதித்ததது பொய்கையில் பாதம் -துதித்த
    நதித்தலை ஈசர்க்(கு) உதிர்த்ததது ஓமை
    விதித்ததை மாற்றுமது வேல்….(35)

    வம்பை விலைகொடுத்து சம்பு விடம்வாங்கி
    தெம்பிழந்து மன்மதன் தீய்ந்ததோர் -சம்பவத்தில்
    திண்டாடும் தேவர்க்காய் உண்டான பிள்ளையை
    கொண்டாடக் கைகளைக் கூப்பு….(36)….கிரேசி மோகன்….!

    Share
  • என்னெதிரே வா உடனே!

    இசைக்கவி ரமணன்

     

    கண்ணிருந் தென்னபயன்? நீ
    காட்டவில்லை உன்வடிவை, நீ
    பெண்பிறந் தென்னபயன்? என்
    பேதைமையைத் தீர்க்கவில்லை
    மண்ணிருந் தென்னபயன்? இன்னும்
    மண்டியிட வில்லைவிண்
    எண்ணரிய பேரழகே!
    என்னெதிரே வா உடனே!

    உன்னருகே நானிருந்தால், அடி
    உனக்குமொரு துணையிருக்கும்
    என்னருகே நீயிருந்தால், அடி
    என்றென்றும் தமிழிருக்கும்
    வன்னங்கள் களைந்தாலோ, அடி
    வானுண்மை புரிந்துவிடும்
    இன்னுமென்ன தயங்குகிறாய்
    என்னெதிரே வா உடனே!

    வில்லாலே உயிர்கொல்வார்
    வீரத்தால் நிலம்கொள்வார்
    பல்கலையால் புகழ்கொள்வார்
    பணக்காரர் பொருள்கொள்வார்
    சொல்லாலே உயிர்தரவே
    சுடராக வடிவெடுத்தேன்
    எல்லோரும் பார்த்திடவே
    என்னெதிரே வா உடனே!

    இசையோடு தமிழ்க்கவிதை
    இதனோடே என்வாழ்க்கை
    வசையோடு பலமனிதர்
    வாழாமற் சாகின்றார்
    நசையின்றி எல்லோரும்
    நலம்வாழப் பாடுகிறேன்
    எசைப் பாட்டு நீ பாட
    என்னெதிரே வா உடனே!

    உள்ளத்தே மிகத்தெளிவாய்
    உலகத்தே மின்னல்களாய்
    வெள்ளத்தே மிகத்துள்ளி
    வெள்ளிவெட்டும் கெண்டைகளாய்
    கள்ளமு கம்காட்டிக்
    கண்சிமிட்டும் மாகாளி!
    எள்ளியது போதுமடி
    என்னெதிரே வா உடனே!

     

    Share
  • ’குமார சம்பவம்’’….!

    கிரேசி மோகன்

    ——————————————

     

    முன்னை எனையழைக்க மாற்றுப் பெயர்கூற
    கண்ணை மகரந்தம் கூசிட -உன்னை
    மேகலையால் கட்டிமலர் முண்டகத்தால் மொத்தியது
    ஆகலையால் அற்றதோ அன்பு….(207)

    ரதிநீ மனதில் ரமிக்கிறாய் என்று
    பதிநீ புகன்றது பொய்யே -அதுவே
    நிஜமானால் நிற்பேனா நெற்குதிராய் அந்தோ
    எஜமான்தன் அஸ்திக்(கு) எதிர்….(208)

    மறுவுலகு ஏகிடும் மன்மதா உந்தன்
    அருகிருக்க நானும் அடைவேன் -வெறுவுலகு
    ஆதலால் பூதலம் ஆனதுன் சாதலால்
    காதலுன் கைரேகைக் கோடு….(209)

    போதிரவு போர்த்திடும் போதிலே காதலியை
    மோதிடும் மேக முழக்கத்தால் -காதலன்
    காத்துக் கிடக்குமிடம் கூட்டிக் கலங்காது
    சேர்த்துவிட யாரினி சொல்….(210)

    கெண்டை விழிசிவந்து வண்டாய் சுழன்றிட
    விண்டுரைக்கும் பேச்சில் விரகமுற -பெண்டிர்க்கு
    கள்ளால் வரும்மதம் காமன்நீ இன்றி
    பொல்லா குடிகாரன் பேச்சு….(211)

    அங்கம் எரித்ததனால் ஆனாய் சரித்திரமாய்
    தங்கும் மதிவிண் தரித்திரனாய்த் -தொங்குகிறான்
    துக்கம் அனுஷ்டித்த தேய்பிறைதன் தன்மையை
    வெக்கமுடன் விட்டான் வளர்ந்து….(212)….கிரேசி மோகன்….!

    Share
  • சிறகை விரித்திடு !

    பி.  தமிழ்முகில் 

     

    சிறகை விரித்திடு

    சித்திரப் பெண்ணே !

    உலகிற்கே பொதுவான

    வானம் – அது உன்னையும்

    ஏந்திக் கொள்ள

    எந்நாளும் தயாரே !

    அடிமைத் தளைகளை

    உடைத்தெறிந்து

    உன்னதமாய் உலகை

    வலம் வா !

    அடக்கமும் அமைதியும்

    உன்னுள் இருக்கட்டும் !

    வீரமும் விவேகமும்

    விழிப்புடனே இருக்கட்டும் !

    அச்சமும் நாணமும்

    கொண்டிருந்த காலம்

    மலையேறட்டும் !

    தைரியமும் தெளிவும்

    எப்போதும் உனக்கு

    துணையாகட்டும் !

    ரவுத்திரம் பழகு !

    வேதனை சோதனை என

    அனைத்தும் உன்

    சாதனைக்கு அடித்தளமாகட்டும் !

    துணிந்து முன்னேறு –

    உலகமே காத்திருக்கிறது

    உனக்காய் !

    Share
  • வெறுத்துவிடல் முறையாமோ?!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    jaya

    கறுப்பென்றால் வெறுக்கின்றார்
    காறியும் உமிழ்கின்றார்
    கறுத்தநிறம் கொண்டோரை
    வெறித்தனமாய்த் தாக்குகிறார்
    நிலத்திலுள்ள கறுப்பரெல்லாம்
    நிமிர்ந்துநிற்கும் நிலைபார்த்து
    வெறுத்தவரே வியக்கின்றார்
    விருப்பமின்றிப் பார்க்கின்றார்!

    காந்தியைக் கறுப்பரென்று
    காலாலே மிதித்தார்கள்
    கருணையின்றி அவர்வாழ்வில்
    கஷ்டம்பல கொடுத்தார்கள்
    சாந்திதனை வேண்டியவர்
    சாப்பிடவே மறுத்ததனால்
    கறுப்பரெனப் பார்த்தவரே
    கதிகலங்கிப் போனார்கள்!

    கறுப்பினத்தை விலங்கெனவே
    கண்டுநின்ற கூட்டத்தார்
    கனவுகாணா வகையினிலே
    கறுப்பரே தலைமையானார்
    வெறுத்தொதுக்கி நின்றவினம்
    பொறுத்தொதுங்கிப் போகாமல்
    வீரமுடன் எழுந்ததனால்
    வெற்றிகொண்டே  நிற்கிறதே!

    வான்கறுக்கா நின்றுவிடின்
    மழைவருதல் இல்லையன்றோ?
    இரவுவரவில்லை என்றால்
    பகலுக்கே அர்த்தமுண்டோ?
    கறுப்புநிற ரத்தமதைக்
    கண்டுவிடல் சாத்தியமா?
    கறுப்பதனை வெறுப்பதற்குக்
    காரணம்தான் விளங்கவில்லை!

    கறுப்பதனை வெறுப்போர்கள்
    கறுப்புமுடி வருவதற்கு
    காசுபல செலவழித்துக்
    காணுகிறார் இன்பமதில்!
    கறுப்புடுப்புப் போடுகிறார்
    கறுப்புக்கார் வாங்குகிறார்
    கறுப்புநிறப் பொருள்வாங்கி
    காணுகிறார் மனமகிழ்வை!

    வெள்ளைநிற முள்ளவரே
    வெள்ளைமுடி வெறுக்கின்றார்
    விதம்விதமாய்ச் சாயத்தை
    விலைகொடுத்தே வாங்குகிறார்
    அள்ளியள்ளி அதைப்பூசி
    ஆனந்தம் காணுகிறார்
    அவர்வெறுத்த கறுப்புதனை
    அவரேற்றே  மகிழுகிறார்!

    வெள்ளையினக் கூட்டத்தை
    வென்றுநின்ற மாமனிதர்
    நெல்சனாம் மண்டேலா
    நெஞ்சுரத்தைப் பார்த்துவிட்டு
    கறுப்புநிற ரோஜாவாய்க்
    கருத்தினிலே கொண்டதனால்
    பொறுப்புமிகு பதவிபெற்றார்
    கறுப்புநிறப் பெருமகனும்!

    வெள்ளைநிற முடையோரின்
    விருப்பமெலாம் மாறிடினும்
    வெள்ளையரை விரட்டிவிட்டோர்
    வேறுருவம் கொண்டுவிட்டார்
    கள்ளமனம் அவரிடத்தில்
    மெள்ளவுருக் கொண்டதனால்
    கறுப்புதனை அவருமிப்போ
    வெறுப்புடனே நோக்குகிறார்!

    வெள்ளையாய்ப் பிள்ளைபெற
    விதம்விதமாய் உண்ணுகிறார்
    வெள்ளையாய்ப் பெண்தேடி
    விரைந்தோடி அலைகின்றார்
    உள்ளமதை வெள்ளையாய்
    உருவாக்க மறுக்கின்றார்!
    கள்ளமனம் எல்லாமே
    கறுப்பாக இருக்கிறதே!

    சாமியிருக்கும் கருவறையும்
    சரியான கறுப்புத்தான்
    சாமிசிலை அத்தனையும்
    சரியான கறுப்புத்தான்
    தாயினது கருவறையும்
    சரியான கறுப்புத்தான்
    கறுப்பதனை குறையெனவே
    வெறுத்துவிடல் முறையாமோ!

     

    Share
  • கண்டிடுவோம் தமிழ்ப்பணியை!

    -மகாதேவ ஜெயராமசர்மா  – மெல்பேண், அவுஸ்திரேலியா

    பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன்
    சிறப்புடனே தமிழ் கற்றுத் தேறிநின்றார்
    உவப்புடனே தமிழ்தன்னை உளத்தில் ஏற்றி
    ஓயாமல் தமிழ்சிறக்க உழைப்பை  ஈந்தார்
    களைப்பின்றிப் பலநூல்கள் கருத்தாய்த் தந்தார்
    கற்றவரும் மற்றவரும் விரும்பி யேற்றார்
    தனித்தமிழே உயிராக எண்ணி நின்றார்
    தன்பெயரைத் தனித்தமிழாய் ஆக்கிக் கொண்டார்!

    மறைமலையார் பெயர்கேட்கின் மகிழ்ந்திடுவாள் maraimalaiatikalதமிழன்னை
    குறையில்லாத் தமிழ்வளரக் குதித்திட்டார் களமதனில்
    சிரமீது தமிழ்வைத்தார் சிந்தையெலாம் தமிழ்நிறைத்தார்
    பலமொழிகள் தமிழ்மீது படையெடுக்கத் தடையானார்
    தமிழ்மொழியின் தூய்மையது தனித்துவமாய் இருப்பதற்குத்
    தனித்தமிழே தேவையெனத் தலைநிமிர்ந்து அவருரைத்தார்
    அமுதான தமிழ்மொழியில் அன்னியத்தை அகற்றவெனத்
    தனியான இயக்கம்கண்டார் தமிழான அடிகளாரும்!

    பன்மொழிகள் அறிவிருந்தும் பசுந்தமிழைப் பற்றிநின்றார்
    சொன்னயமும் பொருணயமும் சுவையாக எழுதிநின்றார்
    நன்னயமாய்ப் பலவற்றை நாளுமே கொடுத்துநின்றார்
    நாட்டிலுள்ளார் நற்றமிழை நாடிநிற்ற வழிசமைத்தார்
    சங்கத்தமிழ் பின்னாலே தமிழ்குறையைக் கண்டறிந்தார்
    சங்கத்தமிழ் தூய்மையினைத் தமிழ்பெறுதல் வேண்டுமென்றார்
    இங்கிதமாய் யாவருக்கும் எடுத்துரைத்தார் தனித்தமிழை
    இதனாலே மறைமலையார் இருக்கின்றார் தமிழுலகில்!

    தமிழ்நாட்டில் இப்பொழுது தமிழைநாம் தேடுகிறோம்
    தமிழ்பிறந்த மண்ணிலிப்போ தமிழ்தயங்கி வருகிறது
    அமுதான தமிழ்மொழியில் அன்னியமே செறிந்திருக்கு
    அதைஅணைத்து நிற்பதிலே அகமகிழ்ந்து நிற்கின்றார்
    நல்லதமிழ் பேசிவிட்டால்  நாகரிகம் குலையுதென்பார்
    தொல்லைத் தமிழ்பேச்சினையே சுவையெனவே எண்ணுகிறார்
    நல்லதமிழ் நாடிநின்ற நம்மடிகள் இருந்திருப்பின்
    எல்லையிலாத் துன்பமதை ஏற்றிருப்பார் உள்ளமதில்!

    அடிகளார் செய்தபணி அன்னைத் தமிழ்ப்பணியே
    அதைமனதில் கொள்ளாமல் அனைவருமே இருக்கின்றோம்
    ஆங்கிலத்தைக் கற்றிடுவோம் அனைத்துமொழி கற்றிடுவோம்
    ஆனாலும் அருந்தமிழை அகமதிலே இருத்திவைப்போம்
    பாங்கான இலக்கியங்கள் பசுந்தமிழில் இருக்கிறது
    பாருங்கள் எனும்பாங்கில் பலசொன்னார் மறைமலையார்
    தூயதமிழ் எழுதிடுவோம் துடிப்புடனே பேசிடுவோம்
    வாருங்கள் தனித்தமிழை வளர்த்திடுவோம் எனவழைத்தார்!

    மறைமலையார் தமிழ்ப்பணியை மறந்துவிடல் முறையன்று
    மாமொழியாம் தமிழதனை மணிமகுடம் ஏற்றிநிற்போம்
    தமிழ்வளர்ச்சிப் பாதையிலே தடைவந்தால் தகர்த்தெறிவோம்
    தமிழ்வாழ உழைத்துநின்ற தமிழடிகள் மனம்மகிழ்வார்
    அடிகளார் எடுத்தபணி ஆல்போன்று பெருக்கமுற்றால்
    அன்னைத் தமிழ்மொழியும் அதியுயர்வு அடையுமன்றோ?
    ஆதலால் யாவருமே அடிகளார் எண்ணமதைக்
    காதலுடன் மனமிருத்திக் கண்டிடுவோம் தமிழ்ப்பணியை!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”வாட்ஸ் -அப் விடுதூது, வாத்ஸல்ய பார்த்தர்க்கு,
    மாட்ஸப் முகமணைத்து, மாலோல -(காட்ஸ் -அப்பாய்)GODS -UPபாய்,(விண்சார்ந்த கடவுள்)
    பூமிக்கு வந்த புருஷோத் தமபால
    சாமிக்கு கீதைரா சி”….கிரேசி மோகன்….!

    Share