கிரேசி மோகன்

——————————————————

images-2

சிலம்பும் சிலம்பணி செவ்வேள் கழலும்
புலம்பும்புள் சேவலும் போகக் -கிளம்பத்
தயாராக நிற்கும் தணிகைவேல் நீல
மயூரமும் எண்ண முருகு….(25)

மலையளவு குற்றமும் மங்கிடும், பொங்கும்
அலையுலவு செந்தூர் அழகன் -சிலையுருவை
எண்ணித் துதிப்போர்க்கு ஏத்திப் புகழ்வோர்க்கு
நுண்ணிய நூலாய் நலிந்து….(26)

கதிராய் வெளிப்பட்டு கார்த்திகை மாதர்
உதிர முலைப்பாலை உண்டு -அதிரும்
அயில்வேலை அன்னை அளித்திட வாங்கும்
துயில்வோன் மருகன் துணை….(27)

சொந்தம் எனக்குநீ பந்தம் எனக்குநீ
தந்தை எனக்குநீ தாயாராய் -வந்தருள்
பாலிக்க வேண்டும் பராசக்தி பாலனே
காளிக்கை வேலனே காப்பு….(28)

எண்ஜாண் உடம்புக்கும் ஏகாக்ர சிந்தைக்கும்
பஞ்சா மிருதமும், பண்ணிரெண்டு -கண்ஜாடைக்
காதலும் போதுமே, ஆதலால் கந்தனின்
மீதுலாவு நெஞ்சே முனைந்து….(29)

சந்தமிகு செந்தமிழில் கந்தரனு பூதியை
தந்த அருணகிரி தான்போலே -உந்தன்
திருப்பதிகள் சென்று திருப்புகழ் பாடும்
விருப்பதை நேர்நிறை வேற்று….(30)….கிரேசி மோகன்….!

அய்யோ எனக்கிளை குய்யோ முறையிடாது
அய்யோ மணாளர் அணுகும்முன் -மெய்யோடும்
தேகான்ம பாவத்தை தாண்டி நிலைபெற
வாகா னவழிசொல்ல வா….(31)

புரியும் தொழிலெனக்கு பொல்லாத சூரன்
சரியும் படிவேல் செலுத்தும் -அரியின்
சகோதரி மைந்தனின், சங்கரன் சேயின்
மகோதரன் தம்பியின்த மிழ்….(32)

முதற்பொருளை ஈசன் நுதற்பொருளை வள்ளிக்(கு)
இதப்பொருளை சந்த இசைக்குப் -பதப்பொருளை
மாறா ஸ்திதப்பொருளை மாரன் கதைப்பொருளை
வீரம் விதைப்பொருளை வாழ்த்து….(33)

பொய்பேசா வாக்கும் புறங்கூறா வார்த்தையும்
கைகூசா காரியமும் கொள்வோர்கள் -தைபூசத்
தானருளால் நற்கதியும் தேயா துருவனைப்போல்
வானுருளும் மீனாகு வர்….(34)

உதித்ததது தீயாய் உருமாற்றம் சேயாய்
பதித்ததது பொய்கையில் பாதம் -துதித்த
நதித்தலை ஈசர்க்(கு) உதிர்த்ததது ஓமை
விதித்ததை மாற்றுமது வேல்….(35)

வம்பை விலைகொடுத்து சம்பு விடம்வாங்கி
தெம்பிழந்து மன்மதன் தீய்ந்ததோர் -சம்பவத்தில்
திண்டாடும் தேவர்க்காய் உண்டான பிள்ளையை
கொண்டாடக் கைகளைக் கூப்பு….(36)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *