என்னெதிரே வா உடனே!
இசைக்கவி ரமணன்
கண்ணிருந் தென்னபயன்? நீ
காட்டவில்லை உன்வடிவை, நீ
பெண்பிறந் தென்னபயன்? என்
பேதைமையைத் தீர்க்கவில்லை
மண்ணிருந் தென்னபயன்? இன்னும்
மண்டியிட வில்லைவிண்
எண்ணரிய பேரழகே!
என்னெதிரே வா உடனே!
உன்னருகே நானிருந்தால், அடி
உனக்குமொரு துணையிருக்கும்
என்னருகே நீயிருந்தால், அடி
என்றென்றும் தமிழிருக்கும்
வன்னங்கள் களைந்தாலோ, அடி
வானுண்மை புரிந்துவிடும்
இன்னுமென்ன தயங்குகிறாய்
என்னெதிரே வா உடனே!
வில்லாலே உயிர்கொல்வார்
வீரத்தால் நிலம்கொள்வார்
பல்கலையால் புகழ்கொள்வார்
பணக்காரர் பொருள்கொள்வார்
சொல்லாலே உயிர்தரவே
சுடராக வடிவெடுத்தேன்
எல்லோரும் பார்த்திடவே
என்னெதிரே வா உடனே!
இசையோடு தமிழ்க்கவிதை
இதனோடே என்வாழ்க்கை
வசையோடு பலமனிதர்
வாழாமற் சாகின்றார்
நசையின்றி எல்லோரும்
நலம்வாழப் பாடுகிறேன்
எசைப் பாட்டு நீ பாட
என்னெதிரே வா உடனே!
உள்ளத்தே மிகத்தெளிவாய்
உலகத்தே மின்னல்களாய்
வெள்ளத்தே மிகத்துள்ளி
வெள்ளிவெட்டும் கெண்டைகளாய்
கள்ளமு கம்காட்டிக்
கண்சிமிட்டும் மாகாளி!
எள்ளியது போதுமடி
என்னெதிரே வா உடனே!