-மகாதேவ ஜெயராமசர்மா  – மெல்பேண், அவுஸ்திரேலியா

பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன்
சிறப்புடனே தமிழ் கற்றுத் தேறிநின்றார்
உவப்புடனே தமிழ்தன்னை உளத்தில் ஏற்றி
ஓயாமல் தமிழ்சிறக்க உழைப்பை  ஈந்தார்
களைப்பின்றிப் பலநூல்கள் கருத்தாய்த் தந்தார்
கற்றவரும் மற்றவரும் விரும்பி யேற்றார்
தனித்தமிழே உயிராக எண்ணி நின்றார்
தன்பெயரைத் தனித்தமிழாய் ஆக்கிக் கொண்டார்!

மறைமலையார் பெயர்கேட்கின் மகிழ்ந்திடுவாள் maraimalaiatikalதமிழன்னை
குறையில்லாத் தமிழ்வளரக் குதித்திட்டார் களமதனில்
சிரமீது தமிழ்வைத்தார் சிந்தையெலாம் தமிழ்நிறைத்தார்
பலமொழிகள் தமிழ்மீது படையெடுக்கத் தடையானார்
தமிழ்மொழியின் தூய்மையது தனித்துவமாய் இருப்பதற்குத்
தனித்தமிழே தேவையெனத் தலைநிமிர்ந்து அவருரைத்தார்
அமுதான தமிழ்மொழியில் அன்னியத்தை அகற்றவெனத்
தனியான இயக்கம்கண்டார் தமிழான அடிகளாரும்!

பன்மொழிகள் அறிவிருந்தும் பசுந்தமிழைப் பற்றிநின்றார்
சொன்னயமும் பொருணயமும் சுவையாக எழுதிநின்றார்
நன்னயமாய்ப் பலவற்றை நாளுமே கொடுத்துநின்றார்
நாட்டிலுள்ளார் நற்றமிழை நாடிநிற்ற வழிசமைத்தார்
சங்கத்தமிழ் பின்னாலே தமிழ்குறையைக் கண்டறிந்தார்
சங்கத்தமிழ் தூய்மையினைத் தமிழ்பெறுதல் வேண்டுமென்றார்
இங்கிதமாய் யாவருக்கும் எடுத்துரைத்தார் தனித்தமிழை
இதனாலே மறைமலையார் இருக்கின்றார் தமிழுலகில்!

தமிழ்நாட்டில் இப்பொழுது தமிழைநாம் தேடுகிறோம்
தமிழ்பிறந்த மண்ணிலிப்போ தமிழ்தயங்கி வருகிறது
அமுதான தமிழ்மொழியில் அன்னியமே செறிந்திருக்கு
அதைஅணைத்து நிற்பதிலே அகமகிழ்ந்து நிற்கின்றார்
நல்லதமிழ் பேசிவிட்டால்  நாகரிகம் குலையுதென்பார்
தொல்லைத் தமிழ்பேச்சினையே சுவையெனவே எண்ணுகிறார்
நல்லதமிழ் நாடிநின்ற நம்மடிகள் இருந்திருப்பின்
எல்லையிலாத் துன்பமதை ஏற்றிருப்பார் உள்ளமதில்!

அடிகளார் செய்தபணி அன்னைத் தமிழ்ப்பணியே
அதைமனதில் கொள்ளாமல் அனைவருமே இருக்கின்றோம்
ஆங்கிலத்தைக் கற்றிடுவோம் அனைத்துமொழி கற்றிடுவோம்
ஆனாலும் அருந்தமிழை அகமதிலே இருத்திவைப்போம்
பாங்கான இலக்கியங்கள் பசுந்தமிழில் இருக்கிறது
பாருங்கள் எனும்பாங்கில் பலசொன்னார் மறைமலையார்
தூயதமிழ் எழுதிடுவோம் துடிப்புடனே பேசிடுவோம்
வாருங்கள் தனித்தமிழை வளர்த்திடுவோம் எனவழைத்தார்!

மறைமலையார் தமிழ்ப்பணியை மறந்துவிடல் முறையன்று
மாமொழியாம் தமிழதனை மணிமகுடம் ஏற்றிநிற்போம்
தமிழ்வளர்ச்சிப் பாதையிலே தடைவந்தால் தகர்த்தெறிவோம்
தமிழ்வாழ உழைத்துநின்ற தமிழடிகள் மனம்மகிழ்வார்
அடிகளார் எடுத்தபணி ஆல்போன்று பெருக்கமுற்றால்
அன்னைத் தமிழ்மொழியும் அதியுயர்வு அடையுமன்றோ?
ஆதலால் யாவருமே அடிகளார் எண்ணமதைக்
காதலுடன் மனமிருத்திக் கண்டிடுவோம் தமிழ்ப்பணியை!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *