-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

jaya

கறுப்பென்றால் வெறுக்கின்றார்
காறியும் உமிழ்கின்றார்
கறுத்தநிறம் கொண்டோரை
வெறித்தனமாய்த் தாக்குகிறார்
நிலத்திலுள்ள கறுப்பரெல்லாம்
நிமிர்ந்துநிற்கும் நிலைபார்த்து
வெறுத்தவரே வியக்கின்றார்
விருப்பமின்றிப் பார்க்கின்றார்!

காந்தியைக் கறுப்பரென்று
காலாலே மிதித்தார்கள்
கருணையின்றி அவர்வாழ்வில்
கஷ்டம்பல கொடுத்தார்கள்
சாந்திதனை வேண்டியவர்
சாப்பிடவே மறுத்ததனால்
கறுப்பரெனப் பார்த்தவரே
கதிகலங்கிப் போனார்கள்!

கறுப்பினத்தை விலங்கெனவே
கண்டுநின்ற கூட்டத்தார்
கனவுகாணா வகையினிலே
கறுப்பரே தலைமையானார்
வெறுத்தொதுக்கி நின்றவினம்
பொறுத்தொதுங்கிப் போகாமல்
வீரமுடன் எழுந்ததனால்
வெற்றிகொண்டே  நிற்கிறதே!

வான்கறுக்கா நின்றுவிடின்
மழைவருதல் இல்லையன்றோ?
இரவுவரவில்லை என்றால்
பகலுக்கே அர்த்தமுண்டோ?
கறுப்புநிற ரத்தமதைக்
கண்டுவிடல் சாத்தியமா?
கறுப்பதனை வெறுப்பதற்குக்
காரணம்தான் விளங்கவில்லை!

கறுப்பதனை வெறுப்போர்கள்
கறுப்புமுடி வருவதற்கு
காசுபல செலவழித்துக்
காணுகிறார் இன்பமதில்!
கறுப்புடுப்புப் போடுகிறார்
கறுப்புக்கார் வாங்குகிறார்
கறுப்புநிறப் பொருள்வாங்கி
காணுகிறார் மனமகிழ்வை!

வெள்ளைநிற முள்ளவரே
வெள்ளைமுடி வெறுக்கின்றார்
விதம்விதமாய்ச் சாயத்தை
விலைகொடுத்தே வாங்குகிறார்
அள்ளியள்ளி அதைப்பூசி
ஆனந்தம் காணுகிறார்
அவர்வெறுத்த கறுப்புதனை
அவரேற்றே  மகிழுகிறார்!

வெள்ளையினக் கூட்டத்தை
வென்றுநின்ற மாமனிதர்
நெல்சனாம் மண்டேலா
நெஞ்சுரத்தைப் பார்த்துவிட்டு
கறுப்புநிற ரோஜாவாய்க்
கருத்தினிலே கொண்டதனால்
பொறுப்புமிகு பதவிபெற்றார்
கறுப்புநிறப் பெருமகனும்!

வெள்ளைநிற முடையோரின்
விருப்பமெலாம் மாறிடினும்
வெள்ளையரை விரட்டிவிட்டோர்
வேறுருவம் கொண்டுவிட்டார்
கள்ளமனம் அவரிடத்தில்
மெள்ளவுருக் கொண்டதனால்
கறுப்புதனை அவருமிப்போ
வெறுப்புடனே நோக்குகிறார்!

வெள்ளையாய்ப் பிள்ளைபெற
விதம்விதமாய் உண்ணுகிறார்
வெள்ளையாய்ப் பெண்தேடி
விரைந்தோடி அலைகின்றார்
உள்ளமதை வெள்ளையாய்
உருவாக்க மறுக்கின்றார்!
கள்ளமனம் எல்லாமே
கறுப்பாக இருக்கிறதே!

சாமியிருக்கும் கருவறையும்
சரியான கறுப்புத்தான்
சாமிசிலை அத்தனையும்
சரியான கறுப்புத்தான்
தாயினது கருவறையும்
சரியான கறுப்புத்தான்
கறுப்பதனை குறையெனவே
வெறுத்துவிடல் முறையாமோ!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *