-எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

முள்ளிருக்கும் செடியினிலே
முகிழ்த்துவரும் ரோஜாவோ
முள்பற்றிக் கவலையின்றி
முறுவலுடன் பூத்துநிற்கும்!
சொல்கொண்டு குத்துவதை
மெள்ளவே ஒதுக்கிவிடின்
சுமையெம்மைத் தாக்காது
சுகம்பற்றி நினைத்திடலாம்!

காந்திமகான் மார்பினிலே
காலாலே உதைத்தவர்க்குக்          roses-and-thorns
காலணியைத் தான்செய்து
காந்திமகான் பரிசளித்தார்
வாங்கிநின்ற வெள்ளையரோ
மனதார உருகிநின்று
காந்தியது பொறுமைகண்டு
கண்திறந்து நின்றனரே!

தொழுநோய்க்குத் தொண்டுசெய்ய
துணிவுகொண்ட  தூயவராம்
பழுதில்லாத் துறவறத்தைப்
பாரினிலே பெற்றவராம்
அன்னையாம் திரேசாவை
அவமதித்த ஆட்களையே
அரவணைத்த காரணத்தால்
அவருயர்ந்தார் அவனிதனில்!

சிலுவைதனில் அறைந்தார்கள்
சித்ரவதை செய்தார்கள்
பலவகையில் வசைவுகளைப்
பகர்ந்துமே நின்றார்கள்
அவையெல்லாம் தாங்கியவர்
ஆண்டவரே மன்னியென
அன்புடனே வேண்டியதால்
அவர்வணங்கும் பேறுபெற்றார்!

கல்லிலே கட்டிக்
கடலிலே போட்டார்கள்
கொல்லுதற்கு நஞ்சுதனை
அஞ்சாமல் கொடுத்தார்கள்
எல்லையில்லாக் கொடுமைசெய்தும்
எதையுமவர் தாங்கிநின்று
நல்லபடி சொல்லிநின்றார்
நமசிவாய எனும்நாமம்!

அவமானம் அசிங்கம்
அத்தனையும் தாங்கியவர்
அகிலமதில் இமயமாய்
ஆகியே இருக்கின்றார்
பொறுத்தவரே நிறைவடைவார்
பொங்கினார் பொசுங்கிடுவார்
வெறுத்தொதுக்கு வெறுப்பேற்றின்
விரையமே வந்துநிற்கும்!

வாழ்க்கையிலே முட்களாய்
பலவந்து குத்திடினும்
வாழவேண்டும் எனநினைத்தால்
முட்கள்கூட  மலராகும்
மலர்ந்துவிடச் செய்வதற்கு
வழிவகுக்கும் மனம்வேண்டும்
வழியில்வரும் முட்களையும்
மலராக்க முனைந்திடுவோம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.