இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (211)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

patience
அன்பான வணக்கங்கள் இதோ அடுத்தவாரத்தில். மனிதராகப் பிறந்த நாமெல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் எனும் உணர்ச்சியினால் தாக்கப்படுவது தவிர்க்கப்படமுடியாதது. ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் , யாருக்கு எதிராக, எதனால் உருவாகிறது என்பதன் அடிப்படையில் அதனைக் கட்டுப்படுத்தும் வல்லமை எம் அனைவருக்குள்ளும் மறைந்துள்ளது.

மறைந்த என் தந்தை எனக்கு அடிக்கடி கூறும் வாசகம் ஒன்று, “ கோபத்தில் வேதனை , பொறுமையில் சாதனை ! “ என்பதுவே அது.

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று சொல்வார்கள். ஆமாம் ! மனதினைக் கோபம் என்னும் உணர்வு கவ்விக் கொள்ளுவதற்கு எம்மிடம் அனுமதி கோருவதில்லை. ஆனால் அந்தக் கோபம் கிளப்பி விடும் உணர்வலைகளைச் சமாளிக்க, அவற்றின் விளைவுகளை மட்டுப்படுத்த எமக்குத் தேவையான பொறுமையை எம்மிடம் ஏற்படுத்த நாம் அதீத முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது.

பல வாசகர்களின் மனதில் இந்நிமிடம் எழும் கேள்வி என் காதுகளில் மெளன ஒலிகளாக காற்றலைகளின் மூலம் வந்து விழுகிறது.

” என்னட? இவன் பாட்டுக்கு கோபிக்காதே ! பொறுமையாக இரு என்று சொல்கிறானே ! எமக்கு நடந்த விடயங்களை இவன் அனுபவித்திருக்கிறானா? அப்புறம் என்ன பெரிசா பொறுமையைப் பற்றிப் பேசுறானே “ என்ற உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது.

பொறுமையைக் கடைப்பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் எனக்கு நன்றாகப் புரிகிறது. எத்தனையோ சமயங்களில் நான் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் கைவிட்ட நிகழ்வுகள் உண்டு. இத்தகைய சிக்கல்களுக்குள் நானும் உழல்பவன் என்னும் ஒரே ஒரு காரணத்தினால்தான் இக்கருத்துப் பகிர்தலை ஆரம்பித்தேன்.

பொறுத்துக் கொண்டிருக்கும் போது எம்மீது தான் அனைத்துப் பாரங்களும், வாழ்வின் சுமைகளும் விழுவது போலும், பொறுமையை எள்ளளவும் கடைப்பிடிக்காமல் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்பவர்கள் தாம் நினைத்ததை நடத்திக் கொண்டு செல்வது போலும் தோன்றுவது வழக்கம்.

வாழ்க்கையில் நாம் நினைத்ததை நடத்துவதற்காகவே வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக பாடுப்பட்டு உழைக்கிறோம் பின்னே எதற்காக பொறுமையின் பெயரால் நாம் அனுபவிக்க நினைக்கும் செயல்களை விட்டுக் கொடுக்க வேண்டும்? இதனால் சாதிப்பது என்ன ?

இந்தக் கேள்விகள் மனதில் சாதாரணமாக எழுவது இயற்கையே !

உண்மைதான் வாழ்க்கையில் நாம் நினைப்பது சரியோ, தவறோ அதை நாம் நினைத்தவகையில் நிகழ்த்திக் கொண்டு போவதே வாழ்க்கையின் நோக்கம் எனக் கருதினால் அப்படிப்பட்டவர்கள் எதையோ சாதிப்பது போலத்தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மையா? அத்தகையவைகளைத்தான் நாம் சாதனை என்கிறோமா?

கோபம் என்னும் அந்த உணர்வு எம்மனதின் வீரியத்தை அப்படியே உறிஞ்சி விடுகிறது. கோபம் என்னும் அந்தக் குறுகிய உணர்ச்சி பொங்கி வெளியாகியவுடன் எமது மனங்களில் தோன்றும் வெறுமையின் வெப்பம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

கோபத்தின் ஆரம்பமே விரக்தியாகும். எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அளவெடுத்தால் விரக்தியை மிக விரைவாக உண்டு பண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் சுற்றி வியாபித்திருப்பதை உணரலாம்.

உதாரணத்திற்கு ஒரு உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்று அமர்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எம்மை உட்காரவைக்க அந்த வெயிட்டர் எடுக்கும் நேரம், எமது உணவுகளுக்கான ஆர்டரை எடுக்க வரும் பணியாளரின் தாமதமான வருகை, அதன் பின்பு அவர்களின் செய்கையில் இருக்கும் தளர்வு, அருகிலிருப்போரின் உரையாடலின் தொனி இவையனைத்தையுமே எமக்கு விரக்தி உண்டு பண்ணக்கூடிய காரணிகளாகக் கொள்ளலாம்.

அதே போல சூப்பர் மார்க்கட்டிற்கு போகிறோம் என்று வையுங்கள், நாம் மிகவும் அவதானமாக தேவையான பண்டங்களை மட்டும் தெரிவு செய்து கொண்டு விரைவாக பணம் செலுத்துமிடத்திதிற்கு வருகிறோம், அங்கே வரிசையில் நிற்கும் போது எமக்கு முன்னாலிருப்பவர் தமது முறை வரும் போதுதான் தான் வாங்க வந்து மறந்து போன பண்டத்தின் நினைவு வந்தவராக இதோ வந்து விடுகிறேன் என்று ஓடுகிறார் எம்மை ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க வைக்கிறார்.

சரி அதுதான் முடிந்தது என்று கவுண்டருக்கு வந்தால் அதிலே உட்கார்ந்திருக்கும் பெண் மிகவும் ஆறுதலாக ஒவ்வொரு பொருளாக மேலும் கீழும் பார்த்து அதை ஸ்கெனரில் ஸ்கேன் செய்கிறாள்.

நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்று ஓடி வந்த நமக்கு என்ன நிகழ்கிறது? விரக்தி பொங்குகிறது, இரத்தம் ஜிவு, ஜிவுவென்று சூடேறுகிறது. ஆனாலும் பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டிய நிலைமை.

சரி இதே நிலைமைகளைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

அதே உணவகத்தில் நாம் நடக்கும் நிகழ்வுகளை ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெயிட்டரின் இடத்தில் எம்மை உட்கார்த்தி நாம் எப்படி இருந்திருப்போம் என்று ஒரு கற்பனை உலகை உருவாக்கிப் பார்த்துக் கொள்வோம் என்று வையுங்கள். எமக்கு நேரம் போவதே தெரியாது.

விரக்தி என்னும் மனப்பான்மையே அருகில் கூட எட்டிப்பார்க்காது.

அதேபோல அந்த சூப்பர் மார்க்கெட் நிலையில் கூட அனைத்தையும் எம்மை மீறி நடக்கும் செயல்கள் நாம் ஆத்திரப்படுவதால் எதுவும் நடந்து விடாது என்று மனதைச் சாந்தப்படுத்தப் பழகிக் கொண்டால் உள்ளம் அமைதி கொள்ளப் பழகிவிடும்.

கோபம் என்னும் கோலம் கொண்டுவிட்டால் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க முடியாது. வார்த்தைகள் வாயிலிருந்து விழுந்து விட்டால் பின்னே அள்ளியெடுத்து உள்ளே திணித்துக் கொள்ள முடியாது.

கோபம் கொள்வதினால் எம்மையே நாம் தாக்கிக் கொள்கிறோம், எமது சக்தியையே நாம் விரயம் செய்து கொள்கிறோம். நாம் சொல்ல வந்ததை அதைச் செவிமடுப்பவர் புரிந்து கொள்ள முடியாத வகை செய்து விடுகிறோம்.

கோபம் எமது புத்தியையே மழுங்கடித்து விடுகிறது. எதையும் யதார்த்தமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. அராஜகச் செயல்களுக்கு நியாயம் கற்பித்து விடுகிறது.

ஆனால் பொறுமையோ எம்மை மேம்பட்ட மனிதராக்கி விடுகிறது. மனதினை மென்மை என்னும் போர்வையால் மூடிவிடுகிறது. எம்மையிட்டு நாமே பெருமை கொள்ள வைக்கிறது.

பொறுமையால் அடைந்த வெற்றிக்கு இருக்கும் மதிப்பே தனியானது ஏனென்றால் அது தானென்னும் மமதையின் அடிப்படையில் வந்ததாக இருக்காது.

பொறுமையின் உதாரணங்களை எடுத்துக்கொண்டால் தாய்மை, பூமி, கருணை என இணையில்லாத பல தனிப்பண்புகளின் தரிப்பிடமாக இருப்பதைக் காணலாம்.

பொறுமையின் உச்சகட்டமே பூமியாகும். ஆத்திரத்தாலும், அவசரத்தாலும் தன்னை இழக்கும் மனிதரா இல்லை பொறுமையையே தன் ஆயுதமாகக் கொண்டிருக்கும் பூமி மாதாவா வாழ்க்கையில் வெற்றியடைவார்கள்? இந்தக் கேள்வியின் விடை அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலொன்று,

“ மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது ” என்று வரும்.

எத்தனை உண்மையான வரிகள்.

நிச்சயமான, உண்மையான வாக்கியம் ” கோபத்தில் வேதனை ! பொறுமையில் சாதனை ! “

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *